தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாநில குழு உருவாக்கப்பட்டது. முன்னணியின் தலைவராக பி.சம்பத், பொதுச்செயலாளராக கே.சமூவேல்ராஜ், பொருளாளராக ஆர்.ஜெயராமன் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர். வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.கண்ணன், மாணவர் சங்கத்தின் ராஜ்மோகன் ஆகியோர் துணை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில:

தலித்துகளுக்கு நிலம், பட்டா கோரியும், தொகுப்பு வீடு பராமரிப்பு வலியுறுத்தியும்:

தலித் மக்களுக்கு நிலம் என்பது அடிப்படை சீவாதாரக் கோரிக்கையாகும். இது பொருளியல் சார்ந்த கோரிக்கை மட்டுமின்றி சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான நம்பிக்கையையும், தற்சார்பை யும் உருவாக்க வல்லதாகும். இந்தியாவில் மொத்த விவசாயத் தொழிலாளர்களில் 77 சதவீதமானவர்கள் தலித்துகளேயாவர். 85 சதவீதமான விவசாயத் தொழிலாளர்கள் நிலமற்றவர்களாக அல்லது மிகச்சிறு அளவிலான நிலவுடமை கொண்டவர்களாகவே உள்ளனர். மீதம் 15 சதவீதத்தில் பாதிப் பேர் விவசாயமற்ற உடலுழைப்பைத் தருபவர் களேயாவர். இதில் கட்டுமானம், சாலையமைத்தல், துப்புரவுத்தொழில் ஆகியவற்றில் ஈடுபடுகிற பெருமளவிலான தலித்துகள் அடங்குவர். 1972ல் நிலச்சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்ட போது 20.23 லட்சம் ஏக்கர் நிலமற்றவர்களுக்கு விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் பத்தில் ஒரு பங்கு கூட கையகப்படுத்தப்படவில்லை.

அதுபோல தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான, சாகுபடிக்கு லாயக்கான தரிசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் சுமார், 50 லட்சம் ஏக்கர் உள்ளன. இந்த நிலங்களை பன்னாட்டு, உள்நாட்டு பெரும் தொழி லகங்களுக்கு கல்லூரிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்களுக்கு ஒரு நிறுவனத்திற்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆண்டுக்கு, ஹெக்டேருக்கு ரூ.3000 என சொற்ப குத்தகைக்கு வழங்கியுள்ள தமிழ்நாடு அரசு தாழ்த்தப்பட்ட நிலமற்ற ஏழை மக்களுக்கு சாகுபடிக்கு நபருக்கு 2 ஏக்கர், குடிமனை பட்டா வீட்டுக்கு 5 சென்ட் வழங்க மறுப்பது கண்டனத்துக்குரியதாகும்.

நகர்ப்புறங்களில் பல்லாண்டுகாலமாக வாழ்ந்து வரும் மக்கள் பட்டா இன்றி வெளியேற்றப்படு கிறார்கள். வேரோடு மரம் சாய்வது போல் அம் மக்கள் கட்டாய இடமாற்றத்திற்கு ஆளாக்கப்படு கிறார்கள். தலித்துகளின் தொகுப்பு வீடுகள் முறை யாகப் பராமரிக்கப்படுவதில்லை. தொகுப்பு வீடு களுக்கான நிதி ஒதுக்கீடு, இடவசதி போது மானதாக இல்லை. எனவே, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு நிலம், பட்டா, தொகுப்பு வீடு பராமரிப்பு ஆகிய தலித் வாழ்வுரிமைப் பிரச்சனைகளில் உடனடித்தீர்வு காண தமிழக அரசை வலியுறுத்துவதோடு, உழைப்பாளி மக்களைத் திரட்டிப் போராடுவ தெனவும் தீர்மானிக்கிறது.

ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள் தரம் உயர்த்தப்பட வேண்டும்:

தமிழகத்தில் செயல்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக ஊராட்சி ஒன்றிய பள்ளிகளின் கட்டிடங்களை சீர்படுத்தும் சிறப்புத்திட்டம் அறிவிக்கப்பட்டு வருடந்தோறும் ரூ.80 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது.

அதேபோல் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் 20102011ல் அமுல்படுத்தப்படுகிறது. இதன்படி 1000 பள்ளிகள் அரசு, ஒன்றிய, நலத்துறை நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. முதற்கட்டமாக 20092010 கல்வி ஆண்டில் 200 பள்ளிகள் என்று சொல்லி 2010 மே மாதத்தில் உத்தரவு வெளியிடப்பட்டுள் ளது. இதில் ஒரு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி (திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம்) மட்டுமே தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 20 சதவீதம் எஸ்.சி., எஸ்.டி., என்று சொன்னாலும் 40 பள்ளிகள் மாநி லம் முழுவதும் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி கள் தரம் உயர்த்தப்பட வேண்டும். ஆனால் தமிழக அரசு செய்யவில்லை.

கல்வித்துறையில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை தீண்டாமைப்போக்கில் அரசு கடைப் பிடிக்கிறது என்பதே உண்மையாகும். தமிழ்நாட்டில் 100 சதவீதம் அரசு நிதி உதவி யுடன் செயல்படும் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர், அரசு அலுவலர் பணியிடங்களில் எஸ்.சி., எஸ்.டி., இட ஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நந்தன் நடந்து போன பாதையை மக்களுக்குத் திறந்து விடு!

சிதம்பரம் நடராசர் ஆலையத்தின் தெற்கு ரத வீதியின் பக்கம் உள்ள கோயிலின் பிரதான நுழை வாயிலை மறித்துக் கற்சுவர் எழுப்பித் தில்லைவாழ் அந்தணர்கள் அடைத்து வைத்துள்ளனர். நடராசப் பெருமானை வழிபட நந்தன் அந்த வழியாகச் சென்றதால் அப்பாதை தீட்டுப்பட்டதாகக் கூறியே அத்தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டது. மருதூரி லிருந்து வழிபடவந்த நந்தனை வழிமறித்து எரித்துப் படுகொலை செய்த வன்செயலின் தொடர்ச்சியாகப் பலநூறு ஆண்டுகளாக இத்தீண்டாமைச் சுவர் நிற்கிறது.

உழைப்பாளி மக்களின் உதிரமும் வியர்வையும் குழைத்துக் கட்டப்பட்ட அக்கோயில் இந்து அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்கு இன்று வந்து விட்ட பின்னும் அத்தீண்டாமைச் சுவர் நீடிப்பது இத்தேசத்தின் ஜனநாயகத்திற்கும் சட்டங்களுக்கும் விடப்படும் சவாலாகும். ஏற்கனவே நம் தாய்த் தமிழைத் தீண்ட மறுத்த இந்த ஆலயம் நந்தன் போன பாதையையும் மறித்து நிற்பது அவமானத் தின் உச்சமாகும்.

எனவே ஒருமாத காலத்திற்குள் அரசு அத்தீண் டாமைச் சுவரை இடித்து நந்தன் நடந்த பாதையில் நம் மக்களும் நடை போட வழிகோல வேண்டு மென இம்மாநாடு வற்புறுத்திக் கோருகிறது. தமிழக அரசு இப்பிரச்சனையில் அக்கறையற்று மெத்தன மாக இருந்தால் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி அத்தீண்டாமைச் சுவரை இடித்துத் தகர்க் கும் என இம்மாநாடு பிரகடனம் செய்கிறது.

Pin It