வேலை என்றால் வருமானம் உற்பத்தி, அங்கீகாரம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட சமூக அலகாக இருந்தாலும் கூட தமிழகத்தில் உலகமய கொள்கையை அமலாக்கிவரும் அரசு இவைகளைப் பற்றி கொஞ்சமும் கவலைப் ட்டதாக தெரியவில்லை. தமிழகத்தில் அரசுப் பணிகளில் புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுப்பதில்லை என்பது மட்டுமல்ல, வயதானவர்களை அத்துகூலி முறையில் நியமனம் செய்ய அரசானை 170ஐ போட்டுள்ளது. 

யாரும் கோரிக்கை வைக்காமல் தானே கோரிக்கைகளை உருவாக்கி, தனது மனசாட்சியைக் கேட்டு செயல்படும்’’ தமிழக முதல்வர், ஓய்வு பெற்றவ்ர்களின் தன்மானத்தை விலைபேசும் வகையில் சும்மாதான வீட்டுல கிடக்க, கெடக்கிற கூலிக்கு வந்து வேலை செய்’’ என அத்துக்கூலிகளாக மீண்டும் அவர்களை ஒப்பந்த அடிப்படையில் அரசு பணிகளில் பணிநியமனம் செய்திட உத்திரவு இட்டுள்ளார். ஒக்காந்து யோசிப்பாங்களோ’’ என்று வடிவேலு சொல்வது உண்மைதான் போலும்.

தமிழ்நாட்டில் ஒப்படை செய்யப்பட்ட பணியிடங்களில் 2 லட்சத்து 80 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அரசுக்குத் தேவையான ஆட்களை தேர்ந்தெடுக்கும் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் காலிப்பணியிடங்கள் ஏராளமாக இருந்தது. அதனை நிரப்ப வேண்டும் என்பதற்காக ஓய்வூதியர்கள் 170 பேர்களுக்கு தொகுப்பு ஊதியம் நிர்ணயித்து அரசு நியமித்தது. கடந்த டிசம்பர் மாதம் அரசு உதவி பெரும் கள்ளர் சீர் மரபினர் பள்ளிக்கு 280 ஆசியர்களை நியமனம் செய்தபோது அதில் 90 சதத்தினர் 55 வயதை கடந்தவர்களாக இருந்தனர்.

அதுமட்டுமல்ல, பல துறைகளில் ஒரு மாதத்தில் ஓய்வு பெறுகிறவர்களுக்கும், பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதற்கு முன்பு இப்படி ஒரு உத்தரவை, வேலை தேடி காத்திருக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் உத்தரவை யாரும் பிறப்பித்ததில்லை.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்தவர்கள் டிசம்பர் 2008 வரை 55,11,542 பேர் ஆகும். அது தற்போது கிட்டதட்ட 62 லட்சம் என்ற அளவில் உள்ளது. இதில் 90 சதம் பேர் எந்தவித வாய்ப்பும் இல்லாமல் இருக்கின்றர். இந்த இளைஞர்கள் பள்ளி, கல்லுரிகளில் தங்கள் படிப்பை முடித்து விட்டு வேலை கிடைக்காமல் வேலை வாய்ப்பகங்களில் பதிந்துவிட்டு காத்திருக்கிறார்கள். மேற்கண்ட கூற்றுப்படி இவர்கள் வேலை செய்யத் தகுதியற்றவர்கள் என்பதுதான் தமிழக அரசின் கூற்று. தனது மாநில இளைஞர்களை இப்படி கேவலப்படுத்தும் அரசு இந்தியாவில் வேறு எங்காவது இருக்கிறதா என்பது கேள்விக்குரியது.

தமிழக அரசு தேர்வாணையத்தில் மட்டும் காலிப்பணியிடங்கள் இருப்பதாக எண்ண வேண்டாம். அனைத்துத் துறைகளிலும் காலி பணியிடங்கள் உள்ளன. வேலை கிடைக்கும் என்று நினைத்து இளைஞர்கள் பதியும் வேலைவாய்ப்பு அலுவலகமே பிரச்சினையில் உள்ளது. தமிழகத்தில் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலங்களில் உள்ள மொத்த இடங்கள் 1115 ஆகும். இதில் கடந்த 2009 மார்ச் வரை 442 இடங்கள் காலியாக இருந்தது. 2009 டிசம்பரில் 46 பேரும், 2010 ஆண்டில் 56 பேரும், 2011 ஆண்டில் 44 பேரும் ஓய்வு பெறுகின்றனர். ஆக 2011ல் 558 இடங்கள் காலியாகும் அதாவது 60 சதம் இடம் காலியாகும். 

தமிழக அரசு தேர்வாணையமே பத்தாண்டுகளாக முடங்கிக் கிடந்து இப்போதுதான் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. எப்போது இங்கு காலியாக உள்ள இடங்களில் நிரந்தர ஊழியர்கள் வருவார்கள்?

அடுத்து இந்த அரசு பதவி ஏற்றது முதல் அனைத்து அரசுத்துறையிலும் 2 லட்சத்து என்பதாயிரம் காலியிடங்களுக்கு மேல் நிரப்பியுள்ளதாக முதல்வரும் துணை முதல்வரும் பேசி வருகின்றனர். இந்த வாதம் உண்மையா? அரசுத்துறையில் 2006 ஆம் அண்டு 12,531 பணியிடங்களும், 2007 ஆம் ஆண்டு 30,258 பணியிடங்களும், 2008 ஆம் ஆண்டு 26,748 பணியிடங்களும் ஆக 69,537 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டது. 2009 ஆம் ஆண்டு விபரம் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும் என்பதாயிரத்தைத் தாண்ட வாய்ப்பில்லை. இதே நேரத்தில் ஓய்வு பெற்றவர்களை கணக்கிட்டால் எவ்வுளவு குறைவான பணி நியமனம் நடைபெற்றுள்ளது எனத் தெரியும்.

கல்வி, மருத்துவம், ஊரகவளர்ச்சி, நெடுஞ்சாலை, வருவாய்துறை, நீதித்துறை, உள்ளாட்சி, சமூக நலம், வேளாண்துறை, பொது சுகாதாரம், வேலைவாய்ப்புத்துறை போன்றவற்றில் தற்காலிக முறையில் இணைக்கப்பட்டவர்கள்தான் அதிகம். ஆனால் இதே நேரத்தில் வேலைவாப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை பிரமிப்பு ஊட்டுவதாய் உள்ளது.  2006ல் 9,90,544 பேரும், 2007ல் 11,21,479 பேரும், 2008ல் 9,60,869 பேர் என 30,72,892 பேர் பதிவு செய்தனர்.

2009 டிசம்பர் மாதம் வரை வேலைவாய்ப்பு அலுவலங்களில் 50 சதம் பேர் பதிவு செய்து பத்தாண்டுகள் ஆகிறது. 1981 _ 82 ல் பதிந்தவர்களுக்குதான் தற்போது நேர்காணல் நடக்கிறது. அப்படி எனில் தற்போது பதிவு செய்தால் 28 வருடம் காத்திருக்க வேண்டும். அதாவது 43 வயதில் நேர்காணல். ஆனால் வேலைக்கான வயது வரம்பு பொது போட்டியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 35 வயதும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு 37 வயதும், தாழ்த்தப்பட்டோர்க்கு 40 வயது எனவும் உள்ளது. ஆக பணிமூப்பு அடையும் போது வயது இருக்காது, வயது இருக்கும் போது வேலை கிடைக்காது. உதாரணம் கடந்த 17 மாதங்களுக்கு முன் மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட கணக்கீட்டாளர் பணியிடங்களுக்கு வயது வரம்பு காரணத்தால் 1986க்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பதிவுதாரர்கள் புறம் தள்ளப்பட்டு 1986லிருந்துதான் நேர்காணல் அனுப்பப்பட்டது. இப்போதும் 10, +2 படித்தவர்களுக்கு அவர்கள் தகுதிக்கு ஏற்ப இளநிலை உதவியாளர் போல பத்தாயிரக்கணக்கில் காலி பணியிடங்கள் உள்ளது. ஆனால்...?

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆரம்பம் முதல் தமிழகத்தில் வேலையில்லாக்கால நிவாரணம் கெட்டு கடுமையான தொடர் போராட்டங்களை நடத்தி உள்ளது. இதற்காக வாலிபர் அமைப்பை கேலி பேசிய முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் வேறு வழி இல்லாமல் வேலையில்லா கால நிவாரணத் தொகையை கொடுத்தார். ஆனால் அது மீண்டும் நிறுத்தப்பட்டது. மீண்டும் வாலிபர் சங்கம் போரடியது. 2006இல் கலைஞரை சந்தித்து வாலிபர் சங்கத் தலைவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதன் காரணமாக 01.10.2006 முதல் தமிழகத்தில் மீண்டும் வேலையில்லாகக் கால உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் அது முழுமையாக தகுதி உள்ள அனைவருக்கும் வழக்கப்படவில்லை என்பதே உண்மை.

2009 மார்ச் மாதம் வரை நிலை என்ன? பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களில் ரூபாய் 150 உதவிதொகை பெறுபவர்கள் 1,18,510 பேர். ஆனால் பதிந்தவர்கள் 20,21,708 பேர். பனிரெண்டாம் வகுப்புவரை படித்தவர்களில் ரூபாய் 200 உதவித் தொகை பெறுபவர்கள் 1,66,146 பேர். ஆனால் பதிந்தவர்கள் 10,09,195. கல்லூரி படித்தவர்களில் ரூபாய் 300 உதவி பெறுபவர்கள் 66,163. ஆனால் பதிந்தவர்கள் 3,12,070. மொத்தத்தில் பதிவு செய்தவர்களில் 20 லட்சம் பேருக்கு மேல் 10 ஆம் வகுப்பும், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் +2 வகுப்பும், மூன்று லட்சத்துக்கு மேற்பட்டோர் கல்லூரியும் படித்து பதிந்துள்ளனர். ஆக 33 லட்சத்து 43 ஆயிரம் பேரில் வெறும் 3 லட்சத்து 50 பேருக்குதான். உதவித் தொகை கிடைப்பது பத்து சதம்.

இந்த உதவித் தொகையும் மூன்றாண்டுகளுக்குத்தான் அதாவது வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை (அதற்குள் வேலைக் கிடைத்து விடும் என்பது தமிழகத்தில் மூட நம்பிக்கை). கடந்த 2009 செப்டம்பர் 30ம் தேதியுடன் 2 லட்சம் பேருக்கு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2009 டிசம்பர் மாதத்துடன் மேலும் ஒரு லட்சம் பேர் உதவிக் காலம் முடிந்துவிட்டது.

2010 ஆம் ஆண்டில் புதிய பயனாளிகள் இனிதான் தேர்வு செய்யப்படுவர். இதில் கூட குடும்ப வருமானம் மாதம் 2000 ரூபாய்க்குள் (4 பேர் வாழும் குடும்பத்துக்கு நாள் ஒன்றுக்கு 64 ரூபாய்க்குள் அனைத்து தேவையும் நிறைவேற வேண்டும்), அதாவது ஆண்டுக்கு 24 ஆயிரத்திற்குள் வருமானம் இருந்தால்தான் நீங்கள் ஏழை, உங்களுக்கு இந்தக் கருணை நிதி கிடைக்கும்.

வேலை வாய்ப்பு தமிழகத்தில் கிடைக்காதது மட்டுமல்ல, இருக்கின்ற தனியார் நிறுவனங்களில்கூட எந்தவித சமூகப் பாதுகாப்பும் இல்லாமல்தான் இளைஞர்கள் வேலைசெய்து வருகின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி, அரசிடம் பல கோடி ரூபாய்கள் சலுகைகளைப் பெற்று அடிமைகள்போல சங்கம் வைக்கும் உரிமைகூட இல்லாமல் வஞ்சிப்பதை எதிர்க்க இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

நம்புங்கள் இது மக்களாட்சி.

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

Pin It