“தேசம் களவாடப்படுகிறது” என்று ஆட்த்தெழுந்த தேசப்பற்று மிக்க இளம் கூட்டம் வெள்ளையனை வெளிறேற்றி சுதந்திர சுவாசத்தை நமக்கு பெற்றுத்தந்தது. ஆனால், இன்றோ நம் விடுதலை வீரர்களின் கனவுகளையெல்லாம் காலில் போட்டு நசுக்கி நம்மையெல்லாம் அமெரிக்காவிடம் விலைபேசி விற்றுக் கொண்டிருக்கிறது மன்மோகன் அரசு.

மண்டியிட்டுகாலில் விழுந்து குரங்காட்டியின் கையிலிருக்கும் குரங்குபோல் அமெரிக்காவின் வார்த்தைகளுக்கிணங்க பல்டியடிக்கும் பிரதமர் மன்மோகனுக்கும் அவர் தலைமையிலான காங்கிர அரசுக்கும் எப்போதுதான் புத்தி வருமோ? தேசத்தின் பாதுகாப்பையே கேள்விக் குரியாக்கிய 2008 மும்பை தாக்குதலை நாம் மறந்திருக்க முடியாது. இந்த தாக்குதலுக்கு முலையாக இருந்து செயல்பட்டவனாக கருதப்படும் டேவிட் ஹெட்லி தற்போது அமெரிக்க காவல் துறையின் வசம் உள்ளான். இவனை விசாரிக்க இன்று வரை அமெரிக்க அரசு இந்தியாவுக்கு ஒப்புதல் வழங்கவில்லை.

இதே மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப்பை விசாரிக்க இந்திய அரசு அமெரிக்க உளவு நிறுவனமான எப்.டி.ஐ க்கு அனுமதி வழங்கியது. ஆனால், அதேவேளையில் அமெரிக்க அரசோ ஹெட்லியை விசாரிக்க இந்திய அரசுக்கு அனுமதி மறுத்துள்ளது.

அமெரிக்க துணைச் செயலாளர் ராபர்ட் பிளாகே இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் ஹெட்லியை அமெரிக்கா வந்து விசாரிக்கலாம் என்றார். அடுத்த ஓரிரு நாளில் அமெரிக்க தூதர் திமோதி ஜே ரோமர் இதை மறுக்கிறார். இன்னும் இதுகுறித்து முடிவெடுக்கப்படவில்லை என்கிறார்.

1997இல் அமெரிக்காவில் ஹெராயின் போதை பொருளை கடத்தும் சதி திட்டத்தில்  ஹெட்லி ஈடுபட்டதன்காரணமாக அவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்க போதை மருந்து கட்டுப்பாட்டு அமைப்புடன் அவர் ஒத்துழைக்க சம்மதித்தவுடன் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் எப்.பி.ஐ ஆல் தொடர்ந்து கண்காணிக்கபட்டு வந்துள்ளார். ஹெட்லியின் இந்திய வருகை உளவு பிரிவுக்கு தெரியாது.

இதுதான் அமெரிக்க உளவுத்துறை இந்தியாவுக்கு அளித்துவரும் ஒத்துழைப்பு மற்றும் உளவுத் துறை ரகசியங்களை பகிர்ந்துகொள்ளும் லட்சனம்.

இது ஏதோ இந்தியாவுக்கு அமெரிக்காவிடம் இருந்து கிடைக்கும் முதல் அனுபவமல்ல. பல விவகாரங்களில் இத்தகைய நடைமுறை தொடர் கதையாகத்தான் இருக்கிறது.

இடதுசாரிகளின் ஆதரவோடு செயல்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெளியுறவுக் கொள்கைகளுக்கும் தற்போது அது செயல்படுத்தும் வெளியுறவுக் கொள் கைக்கும் பல்வேறு வேறுபாடுகளைகாணமுடியும். கடிவாளம் இல்லாத குதிரையாக தேசத்தைகாவு கொடுக்கும் பாதையை நோக்கியே அது பயணித்து கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு மன்மோகன் சிங்கின் அமெரிக்க பயணத்தின் விளைவாக பாதுகாப்புத் துறையில் கூட 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்க இந்த அரசு திட்டமிடுகிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தங்களின் ஆயுத தளவாடங்களை இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளின் தலையில் திணிப்பதற்கே வழிவகுக்கும்.

இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டுக்கு பிறகு இந்தியாவுக்கு பல்வேறு நிர்ப்பந்தங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அணுசக்தி பொறுப்பு மசோதாவை இதன் தொடர்ச்சியாகவே பார்க்கவேண்டும்.

அமெரிக்க அணுசக்தி நிறுவனங்கள் நம் நாட்டில் அமைக்கும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டுத் தொகை வெறும் ரூ. 2142 கோடி என்று இம் மசோதா தீர்மானிக்கிறது. அதிலும் ரூ. 500 கோடி மட்டுமே அந்நிய நிறுவனம் வழங்குமாம் மீதியை நம் வரி பணத்தை கொண்டு ஈடுகட்டுவார்களாம்.

நம்காதில் பூ சுற்றும் இம்மசோதா இடதுசாரிகளின் கடுமையான எதிர்பால் தற்போதுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் உள்ளது. எனினும் மத்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கை தேசத்தை பாதுகாப்பற்ற சூழலுக்கே இட்டுச் செல்கிறது.

உலக புரட்சியாளர் சேகுவேரா சொன்னது போல் உங்கள் முன் மண்டியிட்டு வாழ்வதை விட. நிமிர்ந்து நின்று சாவதே மேல் என்ற வாக்கினை நெஞ்சில் ஏந்தி உலக ஏகாதிபத்தியத் துக்கு எதிரான மக்கள் இயக்கத்தை முன்னெடுப்பதுகாலத்தின் தேவை.

-ஆசிரியர் குழு

Pin It