ஜப்பான் ஃபுகுஷிமா அணு உலை விபத்தைத் தொடர்ந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி விழும் என்று தோன்றவில்லை. மார்ச் 27ந் தேதி அங்குள்ள ஓர் உலையில் இருந்து கசிந்த தண்ணீர் மாதிரியைப் பரிசோதித்த ஜப்பானிய அதிகாரிகள், அது மிக அதிக அளவு கதிரியக்கத்துடன் இருந்தது என்றும், ஒரு சில மணி நேரங்களிலேயே இது மோசமாகப் பாதிக்கக் கூடும் என்றும் கூறினார்கள். அங்கிருந்து வெளியேறிய சீசியம் 137, ஐயோடின் 131 ஆகிய இரண்டு கதிரியக்க நியூக்ளைடுகளும் மனித உடல்நலனுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த விடயங்கள், 1986இல் நடைபெற்ற செர்னோபில் அணுஉலை விபத்தைவிட இது மோசமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

செர்னோபில் விபத்து நிகழ்ந்த பிறகான இந்த கால் நூற்றாண்டு காலத்தில் "பேரழிவு விபத்துகள் என்பவை கடந்த காலமாகிவிட்ட ஒன்று" என்ற பசப்பு வார்த்தைகளை அணுஉலை நிறுவனங்கள் திரும்பத்திரும்பக் கூறி வந்தன. ஆனால் ஃபுகுஷிமாவில் நிகழ்ந்த மோசமான விபத்தால் அந்நிறுவனங்களின் போலியான வாக்குறுதிகள் வெட்டவெளிச்சமாகிவிட்டன. ஆனால் இந்தியாவில் அணுசக்திக்காக வாதாடுபவர்கள், ஃபுகுஷிமா அணுஉலை விபத்து என்பது ஒரு சிறிய விலகல்தான், பெரிய விஷயமல்ல என்பது போல் சித்திரிக்க முயற்சிக்கிறார்கள்.

இவை போன்ற பேரழிவு விபத்துகள் இந்திய அணு உலைகளில் நிகழ வாய்ப்பில்லை என்று இந்திய அணுசக்தித் துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர். கதிரியக்கம் வெளியாவதற்கு முன்பாக பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகள் உள்ளதாகவும், அந்த தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்துமே பொய்த்துப் போகாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்த அமைப்புகள் தாங்களாகவே செயலிழக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் ஏதாவது ஒரு நிகழ்வு தொடர்ச்சியான, அடுத்தடுத்த செயலிழப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஃபுகுஷிமாவில் முதல் கட்ட, பதிலி மின் விநியோகத்தை ஆழிப் பேரலை சிதைத்துவிட்டது. மின் கட்டுப்பாட்டு பகுதியின் அடித்தளத்துக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. 1993ஆம் ஆண்டில் நரோரா அணு மின் உலையில் ஏற்பட்ட தீவிபத்து மின்சாரத்தை தடை செய்து, குளிர்ச்சியூட்டும் அமைப்புகளை நிறுத்தியது. இதுபோன்ற நிலையில், தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்று மதிப்பிடுவது கடினம்.

இன்னும் சிலரோ அடிப்படையையே தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். அமெரிக்க இந்திய வர்த்தகக் கவுன்சிலின் தலைவரான ரான் சோமர்ஸ், "நல்ல வேளையாக இந்தியா தற்போது புதிய தொழில்நுட்பத்தின் கீழ் இயங்கும் அணுஉலை திட்டத்தை தொடங்கியிருக்கிறது. இதன் கீழ் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது, அணுஉலைகள் தானாகவே செயல்பாட்டை நிறுத்திவிடும்" என்று கூறியிருக்கிறார். அமெரிக்க அணுஉலை நிறுவனங்களை ஊக்குவிப்பதில் சோமர்ஸ§க்கு உள்ள ஆர்வம் தெளிவாகத் தெரிகிறது. அதன் காரணமாக அவர் குழம்பியிருக்கிறார் என்பதும் தெரிகிறது. அவர் கூறுவதைப் போலவே ஃபுகுஷிமா அணு உலைகளும் நிலநடுக்கத்துக்குப் பின் தாங்களாகவே செயல்பாட்டை நிறுத்திவிட்டன. ஆனால் அதேநேரம் ஒரு அணுஉலை செயல்பாட்டை நிறுத்திவிட்டதாலேயே, எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறிவிட்டு, அதை இயக்குபவர்கள் வீட்டுக்குப் போய்விட முடியாது.

அணு உலையின் ஆதாரப் பகுதியில் உள்ள அணு எரிபொருள் மிக மோசமான வகையில் கதிரியக்கம் கொண்டது. அணுஉலை செயல்பாட்டை நிறுத்திய பிறகும் தொடர்ச்சியாக வெப்பத்தை வெளியிட்டுக் கொண்டேதான் இருக்கும். அதிலிருந்து வெப்பத்தை அகற்றாவிட்டால், எரிபொருள் வெப்பமடைந்து, அணுஉலை உருகக்கூடும். ஃபுகுஷிமாவில் ஏற்பட்டது இந்தப் பிரச்சினைதான். அங்குள்ள பலஅடுக்கு குளிர்ச்சியூட்டும் அமைப்புகள் ஏதோ ஒரு காரணத்தால் செயலிழந்தன.

ஆனால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தவறான விஷயங்களை முன்னிறுத்தி பேசி வருகின்றனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், "இது போன்ற ஒரு விபத்து இந்தியாவில் நடக்க சாத்தியமே இல்லை" என்றார். ஃபுகுஷிமாவில் ஏற்பட்டது போல் இல்ல£விட்டாலும் இந்திய அணு சக்தி கமிஷனின் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கிடங்குகளில் எந்த வகையான விபத்து நடக்கவும் வாய்ப்புள்ளது. ஃபுகுஷிமாவில் குளிர்ச்சியூட்டுவதற்கான தண்ணீர் கிடைக்காததால், அணு எரிபொருள் வெப்பமடைய ஆரம்பித்தது. வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, எரிபொருளைச் சுற்றியுள்ள ஸிர்கோனிய உறை தண்ணீருடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை உருவாக்கும். ஹைட்ரஜன் எளிதில் எரியக்கூடியது. அது ஜப்பானில் இருந்தாலும் சரி, ஜெய்தாபூரில் இருந்தாலும் சரி, எங்கே இருந்தாலும் இதுதான் நிகழும்.

எளிமையான அதேநேரம் தர்மசங்கடமான ஓர் உண்மையை மறைக்க அரசு தொடர்ச்சியாக முயற்சிக்கிறது. அது இந்தியாவிலுள்ள எந்த அணுஉலையிலும் மோசமான விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதுதான் அது. அரிதாகவே நடக்கும் என்றாலும், நமது அணுஉலைகளில் விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நமது அணுசக்தித் துறை முன்வைக்கும் பாதுகாப்பு முறைகளை நம்ப முடியாததன் காரணமாகவும், இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் காரணமாக மிகப் பெரிய அளவு அணுஉலைகள் விரிவாக்கப்படும் என்பதாலும் இப்படி நம்ப வேண்டியிருக்கிறது. விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின்படி பார்த்தால் 2008இல் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்த பிரச்சினையில் மத்திய அரசு தப்பிக்குமா என்ற நிலை வந்தபோது, முறைகேடான வகையில்தான் இந்த அரசு ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது. கடந்த ஆண்டில் இந்திய குடிமக்களின் உரிமைகளை சர்வதேச அணு தொழில் நிறுவனங்களுக்கு அடகு வைப்பது போல, அணு விபத்துகளுக்கு போதுமான இழப்பீடு கோர முடியாத வகையில் அணு இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஒரு நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதையும் வீணடித்தது.

"அணுசக்தி எனும் சொகுசு வசதியை இந்தியா துறக்க முடியாது" என்று இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் செயலாற்றிய முக்கிய பிரதிநிதியான ஆஷ்லே டெல்லிஸ் கூறியிருந்தார். அணுசக்தியின் விலை அதிகம், அது மிக மோசமானது, மேலும் இந்திய ஜனநாயகத்தை பாதிக்கக் கூடும் என்பதையும் இத்துடன் சேர்த்துக் கொண்டால் (காசு கொடுத்து எம்.பிகளை வாங்கியது அல்லது ஜெய்தாபூரில் உருவான மிகப்பெரிய மக்கள் எதிர்ப்புக்கு எதிராக அரசு அடக்குமுறையை கையாண்டதை பார்க்கும்போது), அந்தக் கூற்று ஒரு வகையில் சரி. அணுசக்தியை விரிவாக்கும் செயல்பாட்டை இந்தியா ஏற்க முடியாது என்பதே அது.

- சுவ்ரத் ராஜு - எம்.வி.ரமணா

(கட்டுரையாளர்கள் இருவரும் இயற்பியலாளர்கள், அணு எதிர்ப்பு, அமைதிக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள். மொழிபெயர்ப்பு : ஆதி. நன்றி: டவுன் டு எர்த்)

Pin It