உலகத்திலேயே நிலநடுக்கம், சுனாமி (ஆழிப்பேரலை)களை எதிர்கொள்ளும் தொழில்நுட்பம், சக்திகளை அதிகம் பெற்றிருக்கும் ஜப்பானில்தான் மார்ச் 11, 2011 அன்று பயங்கர நிலநடுக்கம், அதன் தொடர் விளைவாக ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்கு ஜப்பானில் பூக்குஷிமா (Fukushima), ஒனஹாவா (Onagawa) அணுஉலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாகக் கதிர்வீச்சு அணு உலைகளிலிருந்து வெடித்துக் கிளம்பி, நீர் நிலம், காற்று, பால், கீரை மற்றும் தாவரங்கள், மாமிசம் ஆகியவற்றை பாதித்ததன் விளைவாக அணு உலையைச் சுற்றியுள்ள 20 கி.மீக்கு உட்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இப்படியாக அந்த இடமே வாழத் தகுதியற்ற இடமாக மாற்றப்பட்டுள்ளது. சுனாமியால் பாதித்த இடங்களில் கூட மக்கள் திரும்பப் போக முடியும், வீடுகட்ட முடியும், தொழில் நடத்த முடியும், பயிர் செய்ய முடியும், பயிர் செய்த உணவு பொருட்களை உண்ண முடியும். ஆனால் அணு உலைகளுக்கு அருகிலுள்ள பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கூறியவை எதையுமே செய்ய முடியாது. அவ்வளவு கொடூரமானவை அணு உலையிலிருந்து வெளியாகும் அணுக்கதிர்களின் விளைவுகள். மேலும் அணு உலையிலிருந்து வெளியான கதிர்வீச்சால் 240 கி.மீ. தொலைவிலுள்ள ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் கூட குடிநீரில் அயோடின் 131 அதிகம் இருப்பதன் காரணமாக குழாய்களில் இருந்து வரும் குடிநீரைக் குடிக்க வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அணு உலைகளிலிருந்து வெடித்துக் கிளம்பிய கதிர்வீச்சு கண்டம் தாண்டி 8600 கி.மீ. தொலைவிலுள்ள அமெரிக்கா வரை சென்று பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க சுற்றுச் சூழல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில்கூட பாலில் சிறு அளவு கதிரியக்கம் உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அமெரிக்க அரசு மட்டும்தான் அணு உலைகளால் பாதிக்கப்பட்ட ஐந்து பெரு நகரங்களில் இருந்து வரும் உணவுப் பொருட்களுக்குத் தடை விதித்துள்ளது.

ஜப்பானில் நடந்த விபத்து இயற்கைப் பேரழிவு மட்டும்தானா? அல்லது மக்கள் நலன் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக கடைபிடிக்கப்படவில்லையா?

விபத்துக்குள்ளான ஜப்பானிய அணுஉலைகள் General Electricals வடிவமைத்து உருவாக்கப்பட்ட அமெரிக்க அணு உலைகள் ஆகும் (இந்தியாவில் முதன்முதலில் நிறுவப்பட்ட தாராபூர் அணுமின் நிலையங்களும், அதே குழுமத்தால்தான் வழங்கப்பட்டது மனதில் கொள்ள வேண்டிய விஷயம்). அமெரிக்க அரசின் அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் 1992ம் ஆண்டு ஜப்பானிய அணு உலைகளிலுள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும், அக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படவில்லை. சுனாமி தாக்கம் ஏற்பட்ட 10 நாட்களுக்கு முன்னர் கூட பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கண்டறியப்படவில்லை. ஆக அரசு, அணுசக்தி பாதுகாப்பு வாரியம், மக்கள் நலனைப் பொறுத்தமட்டில் ஒரு மெத்தனப் போக்கையே கடைபிடித்துள்ளது என கூறலாம். மேலும் 2007ஆம் ஆண்டு ஜப்பானில் கசவசாஹி கரீவா என்னுமிடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள அணு உலையில் தீ விபத்து ஏற்பட்டு அதன் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் அரசே செய்த ஆய்வில் அந்த அணுஉலை நிலநடுக்கம் ஏற்பட்ட வாய்ப்புள்ள பகுதியின் மேலேயே கட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட அணு உலைகளை இயக்கும் நிறுவனமாக Tepco (Tokyo Electrical Power Compant) அதன் கடந்த கால வரலாற்றில் அணு உலை பாதுகாப்பு குறித்தான விஷயங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் மறைத்ததும் தெரியவந்துள்ளது. ஆக தெரிந்தே பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. அரசு, அணுசக்தி நிறுவனங்கள் இலாப நோக்கில் செயல்படும் வியாபார நிறுவனங்கள், அரசியல் சக்திகள்... இவைகளுக்குள் நிலவும் கூட்டணி சக்தியே அணுஉலை பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதற்கான காரணமாக பரவலாகப் பேசப்படுகிறது. ஆக இலாப நோக்கில் செயல்படும் அணுசக்தி பெருங்குழுமங்கள் மட்டுமே அணு உலைகள் தொடர்பான பாதுகாப்பு அம்சங்களைத் தீர்மானிக்கும் போது இத்தகைய சம்பவங்கள் தொடரத்தான் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

தொலைதூர நாட்டில் ஓர் அணு விபத்து நடந்தால் அதனால் வெளியாகும் கதிர்வீச்சு நமது நாட்டை குறிப்பாகத் தமிழகத்தை வந்தடையுமா? அதன் காரணமாக சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா? என்பதே முக்கியமான கேள்வி! மேலும் நமது நாட்டில் / தமிழகத்தில் முன் உதாரணங்கள் ஏதேனும் இருக்கிறதா? 1986ல் ரஷ்யாவில் செர்னோபில் விபத்து நடந்து பல கொடிய விளைவுகளை அந்நாட்டில் மட்டுமல்லாது, தொலைதூர நாடுகளிலும் கூட பாதிப்பை ஏற்படுத்தியது, மனதில் கொள்வது நல்லது. செர்னோபில் விபத்து நடந்து இரு வாரங்களுக்குப் பின் கல்பாக்க அணு விஞ்ஞானிகள் காற்றிலும், ஆட்டு தைராய்டிலும் அயோடின் 131 எனும் வாயுக்கழிவினை அளந்து பார்க்கையில் அது முந்தைய அளவைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அணுக்கதிர் வீச்சின் தாக்கம் 3 6 மாதம் வரை நீடித்தது என அரசு தரப்புச் செய்திகளே தெளிவாக உள்ளன. மேலும் மும்பையில் செர்னோபில் விபத்திற்குப் பின் மே மாதம் காற்றில், மணலில் சீசியம் 137 எனும் கதிர்வீச்சுத் தன்மையுள்ள வேதிப்பொருளை அளந்து பார்க்கையில் காற்றில் அது அதிகபட்சமாக 4 மி.லி பெக்கரேல் / மீ எனும் அளவிலும் மணலில் விபத்திற்கு முன் 37 பெக்கரேல் / மீ2 என்ற அளவிலும் விபத்திற்குப் பின் அது 72 பெக்கரேல் / மீ2 (இரு மடங்காக) இருந்தது அணுசக்தி விஞ்ஞானிகளின் ஆய்வின் முடிவில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. கல்பாக்கத்திலும், மும்பையிலும் அப்போதே இந்தக் கதிர்வீச்சின் காரணமாக சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டிருக்கின்றதா? என அறிய எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனையான விசயம். சென்னைக்கும், செர்னோபில்லுக்கும் இடையே உளள தூரம் ஏறக்குறைய 6200 கி.மீ. ஆகும்.

இப்போதும் ஜப்பான் அணு உலை விபத்திற்குப் பின் 8600/ கி.மீ. தொலைவிலுள்ள அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தின் தலைநகரமான சேக்ரோமெண்டோ எனுமிடத்தில் கதிர்வீச்சு பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. உதாரணமாக அயோடின் 131ஐ எடுத்துக் கொண்டால் காற்றில் அதன் அளவு 165 மிலி பெக்கரேல் / மீ3 என இருந்தது. அதேபோன்று அமெரிக்கத் தலைநகரமான வாஷிங்டனில் கூட கதிர் வீச்சின் பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் கனடாவிலும், ஸ்காட்லாந்திலும், சைனாவிலும், தென்கொரியாவிலும் கதிர்வீச்சு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவிலும் குடிநீரில் அயோடின் 131 அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட இருமடங்கு ஆக இருந்ததால் குழாய் மூலமாக பெறும் குடிநீரை யாரும் குடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜப்பானுக்கும் தமிழ்நாட்டில் உள்ள சென்னைக்கும் இடையே உள்ள தூரம் வெறும் 6600 கி.மீ. மட்டுமே! 8600 கி.மீ. தொலைவில் பாதிப்பு இருக்கும் போது 6600 கி.மீ. தொலைவிலுள்ள சென்னையில் அதன் பாதிப்பு தெரிய வாய்ப்பு இருக்கும்போது அறிவியல் ரீதியாக கதிர்வீச்சை அளந்து பார்த்து பாதிப்பில்லை எனக் கூறுவதற்குப் பதிலாக காற்றின் திசை, அமெரிக்க நாடுகளின் பக்கம் இருப்பதாக கூறி இங்கே முறையாக அளந்து பார்க்காமல் பாதிப்பு ஏதும் இந்திய மக்களுக்கு வராது எனக் கூறுவது அறிவியல்தானா?

ஜப்பானிய அரசு குடிநீரிலும் உணவுப் பொருட்களிலும் கதிர்வீச்சின் பாதிப்பு இருப்பதை ஒப்புக் கொண்டாலும் அதன் அளவு குறைவாக இருப்பதால் சுகாதார சீர்கேடுகள் வராது எனக்கூறுவது சரிதானா? உணவுப் பொருட்களால் கதிர்வீச்சு பாதிப்பு ஏதும் வராது என இருந்தால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நகரங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்கா ஏன் தடை விதிக்க வேண்டும்?

இந்தியாவில் ஏன் ஜப்பானிலிருந்து வரும் உணவுப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை? டோக்கியோவிலுள்ள குடிநீர் அயோடின் 131ன் பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது எனக் கூறினாலும். பின்னர் ஏன் குழாய் வழியான குடிநீரை குடிக்க கூடாது என சொல்ல வேண்டும்? ஆக கதிர்வீச்சு பாதிப்பு என்பது கண்டம்தாண்டி, (இந்திய சுகாதாரத்துறை கதிர்வீச்சின் அச்சம் காரணமாக ஜப்பானிலிருந்து வரும் உணவுப் பொருட்களுக்கு 3 மாதம் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது) நாடுதாண்டி, பாதிப்பை ஏற்படுத்த முடியும் என இருந்தும் இந்தியாவில் / தமிழ்நாட்டில் முறையான அறிவியல் ஆய்வுகள் நடத்தப்படாதது எதனால்?

ஜப்பான் அனுபவத்திலிருந்து நாம் என்ன பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் எனப் புரிந்து கொள்வதற்கு முன் கதிர்வீச்சு மனித உடம்பில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தான சில அடிப்படை கருத்துகளை தெரிந்து கொள்வது நல்லது! அவை

1. கதிர்வீச்சைப் பொறுத்த வரை பாதுகாப்பான அளவு என ஒன்று இல்லவே இல்லை என்பதுதான் அணுசக்தி குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளும் உலகளாவிய அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

2. 2005ஆம் ஆண்டு ஜனவரியில் X கதிர்கள், காமா கதிர்கள், நியூட்ரான்கள் புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என அதிகாரப்பூர்வமாக அறிவியல் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

3. Xரே எடுப்பதால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு ஒரு அணுகுண்டு போட்டால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பை விட அதிகம் என்பதே வியக்கத்தகு அறிவியல் உண்மையாகும். இதற்கான காரணத்தை இப்போது சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம். உடம்பில் செல் ஒன்றில் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருப்பது கண்ணுக்குப் புலப்படாத மிகச்சிறு அளவில் மூலக்கூற்றில் (DNA) இரு இடங்களில் ஏற்படும் மாற்றமே! அணுகுண்டினால் ஏற்படும் பெரும் கதிர்வீச்சு உடலில் (செல்களில்) பெரும்பாதிப்புகளை ஏற்படுத்துவதால் உடம்பால் அது உணரப்பட்டு அச்செல்லை உடம்பு அழித்து வருகிறது. இதை அபாப்டோசிஸ் (Apoptosis) என அழைப்பர். செல் அழிந்து விடுவதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு தவிர்க்கப்படுகிறது.

4. அணுசக்தி துறையிலேயே மிகவும் முக்கியப் பிரச்சனை என்னவெனில் அதில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை எப்படி பாதுகாப்பது என்பதுதான். இதற்கான தொழில்நுட்பம் கூட இன்னமும் முழுமையாக கண்டறியப்படவில்லை. மேலும் கதிர்வீச்சின் பாதிப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்?

உதாரணமாக புளூட்டோனியம் 239ஐ எடுத்துக் கொள்வோம். இது தனது கதிர்வீச்சை பாதியாக குறைத்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம் 24,000 வருடங்கள். அயோடின் 129ஐ எடுத்துக் கொள்வோம். 1990களிலேயே தாராபூர் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள கடல் தாவரங்களில் இதன் அளவு 740 மடங்கு அதிகம் இருந்தது அரசு விஞ்ஞானிகளாலேயே தெரியவந்தது. கல்பாக்கத்தில் என்னவெனில் கடல்வாழ் தாவரங்களில் இதை அளப்பதே இல்லை!

இந்த அயோடின் 129தனது கதிர்வீச்சைப் பாதியாக குறைக்க எடுத்துக் கொள்ளும் காலம் 17 மில்லியன் வருடங்கள் ஆகும். ஆக நாம் நமது சந்ததியினருக்கு இத்தகைய கொடூரமான அழிவுப் பொருட்களை விட்டுத்தான் செல்ல வேண்டுமா? நமது சந்ததியினர் வரும் காலத்தில் அக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டால் நமது மூதாதையர்கள் எத்தகைய பேரழிவை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர் என காறி உமிழமாட்டார்களா?

5. கதிர்வீச்சால் ஏற்படும் உடம்பு பாதிப்பு முற்றிலுமாகக் கண்டறியப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினால் அதற்குப் பதில் இல்லை என்றேதான் கூற முடியும். உதாரணமாக By Stander Effect. By Stander Effect என்றால் உடம்பில் கதிர்வீச்சுப் பாதையில் நேரடியாக படாத உறுப்புகளிலும் பாதிப்பு வருவதுதான். கதிர்வீச்சுப் பாதையிலுள்ள செல்களிலே ஏற்படும் வேதிமாற்றம் தூர உறுப்புகளின் செயல்பாட்டை பாதிப்பதால்தான் இது சாத்தியமாகிறது. இது சமீப காலத்தில்தான் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற புதிய கதிர் வீச்சு பாதிப்புகள் பின்னர் கண்டறியப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜப்பான் விபத்து நமக்கு உணர்த்துவது என்ன?

ஜப்பானில் ஏற்பட்ட விபத்திற்குக் காரணமாக இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன.

வடிவமைக்கப்பட்ட, எதிர்பார்த்த அளவைவிட கூடுதலான அளவில் (ஜப்பானின் அணுஉலைகள் நிலநடுக்கத்தால் ஏற்படும் பாதிப்பை ரிக்டர் அளவுகளில் 8.5 வரை தாங்கும் சக்தி கொண்டவை ஆனால் இந்த முறை வந்த நிலநடுக்கமோ ரிக்டர் அளவுகோலில் 9க்கும் மேலாக) நிலநடுக்கம் பதிவானதால் அணு உலைகளால் அதன் தாக்கும் திறனை எதிர்கொள்ள முடியாமல் முடங்கிப் போய் செயல் இழந்தன.

அணுஉலையின் வடிவமைப்பிலேயே கோளாறுகள் / குறைபாடுகள் ஏதேனும் இருந்ததா? அப்படி இருந்தாலும் இந்த விபத்து நடந்திருக்க முடியும். இது குறித்தான முறையான புள்ளி விவரங்கள் இன்னமும் வெளிவராமல் தான் உள்ளன. ஆக அணுசக்தி துறை என்றாலே எவ்வளவு தூரம் செய்திகள் மறைக்கப்படுகின்றன. அதன் காரணமாக எத்தகையப் பேரழிவுகளை மனித குலம் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. இதைப் போக்க என்ன செய்ய வேண்டுமென மக்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது!

2004ஆம் ஆண்டு தமிழகத்து கல்பாக்கம் அணுஉலையில் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகள்

அரசு தரப்பில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் கல்பாக்கம் அணு உலையின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் சில தினங்களுக்குப் பிறகு மீண்டும் பணி துவங்கப்பட்டது என்றும், கதிரியக்கப் பாதிப்புகள் ஏதும் நிகழவில்லை என்றும்தான் அரசு தரப்பின் வாதம் முன் வைக்கப்படுகிறது. இது உண்மையா? சுனாமிக்குப் பிறகு கல்பாக்க கடற்கரை மணலில் நான் செய்த ஆய்வில் கதிர்வீச்சு அதிகமிருப்பது தெரியவந்தது. அதற்கு காரணமாக புளூட்டோனியம் 239 இருக்கலாம் என சந்தேகிக்கும் வாய்ப்பும் உள்ளது. திரு.கண்ணன், கல்பாக்கம் சுற்றுச்சூழல் ஆய்வகத்தின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். அவர் 31.12.2009 அன்று நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் நிர்வாகம் தனக்கு பல வகையில் சுதந்திரம் கொடுத்திருந்தாலும் சுற்றுச்சூழலிலுள்ள ஆல்ஃபா மற்றும் புளூட்டோனியக் கதிர்வீச்சைப் பொறுத்த மட்டிலும் நிரந்தர, தற்காலிக பணியாளர்கள் உள்வாங்கிய ஆல்ஃபா, புளூட்டோனிய அளவைப் பொறுத்த மட்டிலும் சுதந்திரம் தராமலிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது எனக் கூறியதாக தகவல் வெளியானதால், இச்செய்தியை மையப்படுத்தி துண்டறிக்கைகள் கல்பாக்க பகுதியில் ஒட்டப்பட்டாலும் அதற்கு நிர்வாகத்திடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

மேலும் பத்திரிக்கை மூலமாக இதே கேள்வியை நிர்வாகத்திற்கு அனுப்பியிருந்தும் அதற்கும் பதிலேதுமில்லை. இதுதான் அறிவியலா? இங்கே ஒரு செய்தியை குறிப்பிட வேண்டும். பாண்டிச்சேரியைச் சேர்ந்த காரைக்கால் பகுதியிலுள்ள நான்கு மீனவக் குப்பங்களின் கடற்கரை மணலில் கதிர்வீச்சின் பாதிப்பு சுனாமிக்குப் பிறகு அதிகம் இருப்பதையும், அக்குப்பங்களில் சுனாமிக்குப் பிறகு புற்றுநோய், பிறவி ஊனம், குழந்தை இறந்தே பிறத்தல், கருக்கலைப்பு அதிகமிருப்பதையும் ஒப்புக் கொண்ட பாண்டிச்சேரி அரசு, கதிர்வீச்சால் தான் இப்பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா எனக் கண்டறியப்பட வேண்டும் எனக் கூறியது நினைவில் கொள்ள வேண்டும். மருத்துவ புத்தகங்கள் கதிர்வீச்சின் காரணமாக மேற்கூறியவை அனைத்தும் நிகழ வாய்ப்புள்ளது என்றுதான் சொல்கிறது என்பதையும் சேர்த்தே நினைவில் கொள்வது நல்லது.

மேலும் துண்டறிக்கை வாயிலாக, பத்திரிக்கை மூலமாக கல்பாக்க கடற்கரை மணலிலுள்ள ஆல்ஃபா, கதிர்வீச்சு, புளூட்டோனியத்தின் அளவு, கடல்வாழ் தாவரங்களிலுள்ள அயோடின் 129ன் அளவு, இவற்றை கலெக்டர், பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள், துறை சாராத விஞ்ஞானிகள் முன்னிலையில் அளந்து காட்டத் தயாரா? என்ற கேள்விக்கு நிர்வாகம் பதிலேதும் கூறாமலிருப்பது எதனால்?

கல்பாக்க அறிவியலின் கதை

கல்பாக்க அணுமின் சக்தி, நிர்வாகம் அறிவியல் ரீதியாக நடந்து கொள்ளவில்லை என்பதற்கான உதாரணங்களைப் பார்ப்போம்.!

கல்பாக்கம் சுற்றுப்புற கிராமங்களில் பிறவி ஊனம், (கை, கால்களில் ஆறுவிரல் பிரச்சனை) அதிகமிருக்கலாம்; அதற்கு கதிர்வீச்சு காரணமாக இருக்கலாம் என நான் கூறியபோது நிர்வாகத்தினர் மறைமுகமான பேச்சுவார்த்தைக்கு என்னை அழைத்தனர். அச்சமயம் அறிவியல் ரீதியான கருத்துக்களை அவர்கள் ஏற்பதாகவும் அதற்கு தகுந்த விளக்கம் அளிப்பதாகவும் உறுதியளித்த அவர்கள் நான் அறிவியலற்ற கருத்துக்களை எனது விளம்பரத்திற்காகவும் தேவையற்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த எத்தனித்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்பதையும் தெரிவித்தனர். அப்போது நான் அவர்களிடம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டேன். நான் பாதிப்பு ஏதேனும் இருக்கலாம் எனக்கூறும்போது அது அறிவியல் ரீதியானதா, புள்ளி விவர அடிப்படையில் முக்கியம் வாய்ந்ததா? என்றெல்லாம் கேள்வி கேட்கும் நீங்கள் கல்பாக்க அணு உலை கதிர்வீச்சு காரணமாக பணியாளர்களுக்கும், சுற்றுப்புற மக்களுக்கும் பாதிப்பில்லை எனக்கூறுவதற்கு என்ன வகையான அறிவியல் ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டீர்கள்? அதன் புள்ளி விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு முன் வைத்தீர்களா? எனக் கேள்வி எழுப்பியபோது அதற்கு எந்தவொரு முறையான பதிலையும் நிர்வாகம் தரவில்லை என்பது வேதனையான விசயம்.

2003ல் வெளிவந்த என் முதல் ஆய்வில் பணியாளர்கள் + குடும்பத்தினர் மத்தியில் மல்டிபில் மயலோமா (Multiple Myeloma) எனும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் இறப்பு விகிதம் அறிவியல் ரீதியாகவும், புள்ளி விவர அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததாலும் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி, பத்திரிக்கை செய்தியாகவும் அது வெளிவந்தது. அதில் மூன்று பேர் (இரண்டு ஆண்கள், ஒரு பெண்) ஒன்றரை வருட காலத்திற்குள் இறந்திருப்பது புள்ளி விவர அடிப்படையில் அதிகம் இருந்ததால் அதற்கு நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர்களும் அதற்கு அதிகாரபூர்வமான பதிலை வெளியிட்டனர். பதிலில் அவர்கள் முன் வைத்த வாதம் தான் அறிவியல் ரீதியாக முழுமையாக அமையவில்லை என்பதுதான் வேடிக்கையான விஷயம். அவர்களின் பதில் பணியாளர்கள் உள்வாங்கிய கதிர்வீச்சின் அளவு அணுசக்தி ஒழுங்கு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட குறைவாக இருந்தது என்பது மட்டுமே! அவர்களின் பதில் அறிவியல் ரீதியாக இருந்திருந்தால் அவர்கள் என்ன சொல்லியிருக்க வேண்டும்?

1. இறந்த மூவரும் மல்டிபில் மயலோமா வியாதியால் இறக்கவில்லை எனக் கூறாமல் விட்டதிலிருந்து புள்ளி விவரத்தை அவர்கள் மறுக்கவில்லை என்பது தெளிவாகிறது.

2. மருத்துவ ஏடுகள் அந்நோய்க்கும், அணுஉலை கதிர் வீச்சிற்கும் தொடர்பில்லை என்றுதான் கூறுகிறது என்றல்லவா பதிலளித்திருக்க வேண்டும் நான் மருத்துவ ஏடுகள் அந்நோய்க்கும் கதிர் வீச்சிற்கும் தொடர்பு உள்ளதை தெளிவாக குறிப்பிட்டதை அவர்களால் மறுக்க முடியவில்லையே!

3. புள்ளிவிவர அடிப்படையில் இது முக்கியம் வாய்ந்ததாக இல்லை என்பதையும் கூற முடியாமல் போனது எதனால்?

4. அமெரிக்கா, ஜப்பான் போன்ற மேலைநாடுகளில் அந்நோயால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கும், மக்களுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க தனி சட்டமே இருக்கிறது. இதிலிருந்தே அந்நோய்க்கு கதிர்வீச்சு ஒரு முக்கிய காரணம் தான் என்பது தெளிவாகிறதல்லவா? அதைப்பற்றி ஏன் ஒரு வார்த்தைகூட கூறவில்லை!

5. பணியாளர்கள் உள்வாங்கிய உள் கதிர்வீச்சின் அளவை (Internal Contamination) ஏன் தெரியப்படுத்தவில்லை? என்பதற்கு பதிலேதும் இல்லையே!

6. மேலும் பணியாளர்கள் உள்வாங்கிய வெளிக்கதிர் வீச்சின் அளவை நான் அளந்து பார்க்க வாய்ப்பு அளிக்கப்படுமா? என்பதற்கும் பதில் ஏதும் இல்லை.

7. இறுதியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊழியர்கள் எத்தனை நேர் மல்டிபில் மயலோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் / இறந்துள்ளனர் என்ற கேள்விக்குப் பதில் கூறாமலிருந்தது எதனால்? இதுதான் அறிவியலா?

2008ல் என் ஆய்வில் சுற்றுப்புற மீனவப் பெண்கள் மத்தியில் ஆட்டோ இம்யூன் தைராய்டு வியாதி புள்ளி விவர அடிப்படையில் அதிகமிருப்பதற்கும், 2010ல் நான் செய்த ஆய்வில் தைராய்டு புற்றுநோய் இறப்பு விகிதம் அணு உலையின் 5 கி.மீ. சுற்றளவிலுள்ள சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் புள்ளி விவர அடிப்படையில் அதிகம் இருப்பதை பத்திரிக்கை வாயிலாகவும், துண்டறிக்கைகள் மூலமாகவும் தெரியப்படுத்தியதற்கும், தெளிவான முறையான, அறிவியல் ரீதியான விளக்கம் ஏதும் இல்லையே ஏன்? மாறாக 5 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராமங்களில் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு அதிகம் இல்லை என ஒரு தொண்டு நிறுவனம் ஆய்வுக்குப் பின் தெரிவித்ததாகப் பத்திரிக்கைகளுக்கு பதில் கொடுத்த அணுசக்தி நிர்வாகம், அவ்வாய்வறிக்கையைப் பொதுமக்கள் பார்வைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் கொடுக்க மறுப்பது எதனால்? இதுதான் அறிவியலா? நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அழைத்த அழைப்பின் காரணமாக நானும், பத்திரிக்கையாளர் ஒருவரும் உள்ளே சென்று அணுசக்தி விஞ்ஞானிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது உனக்கு அணு உலைகளைப் பற்றி என்ன தெரியும், நீ ஒரு வெளியாள் என்றும் அவர்களுக்குத்தான் அங்கு நடப்பது பற்றி முழுமையாக தெரியும் என்றும் வாயுக் கழிவான அயோடின் 131ன் அளவு ஏறக்குறைய முழுமையாக வடிகட்டி விடுவதாகவும் அதன் காரணமாகச் சுற்றுப்புற மக்களிடத்து தைராய்டு நோய் பாதிப்பு குறித்தான ஆய்வு செய்ய அவசியமில்லை எனக் கூறினர். அதை மறுத்து சில கேள்விகளை நான் கேட்டேன்

1. அணுசக்தி கதிர்வீச்சில் பாதுகாப்பான அளவு என்று ஒன்று இல்லையென ஒப்புக் கொள்வீர்களா? எனக்கேட்டதற்கு “ஆம்” என்றே கூறினர். அடுத்து கல்பாக்க அணு உலைகளின் காரணமாக சுற்றுப்புறக்காற்றில் அயோடின் 131 கொஞ்சம் கூட இல்லையா? எனக் கேட்டதற்கு கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது எனப் பதிலளித்தனர். அப்படியெனில் தைராய்டு பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தானே செய்கின்றது என்பதுதானே உண்மை! ஆக பாதிப்பு உள்ளதா? இல்லையா? எனக் கண்டறிய ஒரு ஆய்வின் மூலம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்பதுதானே அறிவியல் ரீதியான உண்மை! ஆய்வு செய்ய தேவையில்லை என்பது அறிவியலுக்கு முரணானதல்லவா! என்பதற்கு எந்த பதிலும் இல்லை. ஆட்டோ இம்யூன் தைராய்டு வியாதிக்கும், தைராய்டு புற்று நோய்க்கும் அயோடின் 131 (இது அணு உலையிலிருந்து வெளியாகும் வாயுக்கழிவு) காரணம் தான் என்பதை மருத்துவ ஏடுகள் தெளிவாக குறிப்பிடுகின்றன.

2002ல் செல்வக்குமார் எனும் ஒப்பந்த பணியாளர் சூலை மாதத்தில் சென்னை அணுமின் நிலையம் 2ல் வேலை பார்த்தபோது முறையான விளக்கங்கள் கொடுக்கப்படாததால் (Cotress Spring) எனும் கதிர்வீச்சுப் பொருளைக் கையில் எடுத்ததால் அவர் கை வெந்துபோனது. அவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டதுடன் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டார். அதன் முடிவுகளைக் கடிதம் மூலம் எழுதிக் கேட்டதற்கு எந்த ஒரு பதிலும் நிர்வாகம் தரவில்லை. நான் அவருக்கு செய்த ஆய்வில் அவருடைய ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அணுசக்தி ஒழுங்கு கட்டுப் பாட்டு வாரியம் இந்நிகழ்வைச் சட்டப்படி பதிவு செய்திருக்க வேண்டுமென இருந்தும் அவர்கள் பதிவு செய்யாதது அதிர்ச்சியான விசயம்.

2003ல் கல்பாகக்ம் அணு மறு சுத்திகரிப்பு நிலையத்தில் (KARP) ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஆறு ஊழியர்கள் அதிகபட்ச கதிர்வீச்சுக்கு ஆளானார்கள் என நிர்வாகம் ஒத்துக் கொண்டாலும் அவர்களது இரத்தத்தை பரிசோதித்ததில் பாதிப்பு ஏதுமில்லை என நிர்வாகம் கூறியபோது எனக்கு அந்த முடிவில் சந்தேகம் இருக்கிறது. அதே ஆய்வினை அவர்களிடத்து செய்ய எனக்கு அனுமதியளிக்கப்படுமா? என்பதற்கு பதிலேதும் இல்லை. இதுதான் அறிவியலா?

சரி என்னை விட்டு விடுங்கள்! பொக்ரான்2, அணுசக்தி பரிசோதனையின் முடிவுகள் குறித்து அணுசக்தி விஞ்ஞானிகள் மத்தியிலேயே கருத்து வேறுபாடு எழுந்தபோது (திரு.சிதம்பரம், திரு. ககோட்கர், திரு. அப்துல்கலாம், அச்சோதனை வெற்றி எனவும், திரு. சந்தானம், திரு.கோமிசேத்னா (பொக்ரான் 1 வெடிப்பிற்கு பின்னணியிலிருந்த மிக முக்கியமான மனிதர்) அச்சோதனை வெற்றி பெறவில்லை எனக்கூறிய நிலையில், புள்ளி விவரங்களை திரு.சந்தானம் அவர்களுக்கு அளிக்காமல் விட்டதுதான் அறிவியலா? ஆக அறிவியல் என்பது அரசியல் சக்திகளுக்கும் பெரும் குழு வியாபார சக்திகளுக்கும், ஏகாதிபத்திய சக்திகளுக்கும் கட்டுப்பட்டுதான் இருக்கும் என்ற நிலை தொடரும் வரை அணு உலை பாதுகாப்பு என்பதும் மக்கள் நலன் என்பதும் வெறும் பேச்சளவில் மட்டுமே இருக்கும் என்பதுதானே உண்மை!

மீண்டும் கல்பாக்கம், அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து

ஜப்பானில் நடந்த விபத்து அணுஉலையின் மையப்பகுதிக்கு ஒரு வேளை உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அணுஉலை இயக்கத்தை கட்டுப்படுத்திய பின்னரும் வெளியாகும் சூட்டினை குறைக்க இருக்கும் குளிர்விப்பான் வழிமுறைகள் பயங்கர நிலநடுக்கத்தாலும், சுனாமியாலும் செயல் இழந்து போனதால் விபத்து ஏற்பட்டு சுற்றுப்புறத்தையும், மக்களையும் பாதித்துள்ளது. கல்பாக்கத்திலும் அத்தகையதொரு விபத்து நடக்க வாய்ப்பு உள்ளதா? எனில் உள்ளது என்றே கூற வேண்டும். வேறுவிதமாக சொன்னால் கல்பாக்கம் அணு உலைகளில் அத்தகையதொரு பாதிப்பு நடக்க வாய்ப்பில்லையென அறுதியிட்டுக் கூற முடியுமா? கூற முடியாது. சென்னை அணுமின் நிலையங் களிலும் அணு உலைகளின் செயல்பாட்டை நிறுத்திய பின்னரும் வெளியாகும் சூட்டைத் தணிக்க தயார் நிலையிலுள்ள டீசல் ஜெனரேட்டர், அவசர நிலை பேட்டரிகள், வெப்பத்தை தணிக்க உதவும் ஃபயர்வாட்டர் சிங்க் (Fire water sink) இவையனைத்தும் கடல் நீரின் மட்டத்திலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள்தான் உள்ளது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். (ஜப்பானில் இதை விட அதிக தொலைவில்தான் அவை இருந்தன)

நிலநடுக்கமும் கல்பாக்கமும்

அடுத்தபடியாக கல்பாக்கம் அணுஉலைப் பகுதிக்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? அதன் காரணமாக பயங்கர சுனாமி தாக்குதலுக்கு அது ஆளாகாதா? அதன் காரணமாக குளிர்விக்கும் கருவிகளனைத்தும் பழுதடைய வாய்ப்பில்லையா? ஒன்றை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 2001¢வரை கல்பாக்கம் நிலநடுக்க பதிவேடுகளில் 2 என்ற அளவிலேயிருந்தது. பின்னர் முந்தைய பாதிப்பை விட பின்னர் அது அதிக பாதிப்புள்ளாகும் எண் 3க்குத் தள்ளப்பட்டுள்ளது. (மகாராஷ்டிரா மாநிலத்தில் அமையவிருக்கும் ஜெய்தாபூர் அணு உலைகள் எண் 4ல் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெய்தாபூர் அணுஉலை வடிவமைப்புகள் தீவிர நிலநடுக்கம், சுனாமி, தாக்குதலை கணக்கில் கொண்டு வடிவமைக்கப்படவில்லை என்பதை அணுசக்தி நிர்வாகமே ஒத்துக் கொள்கிறது. இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் நியூசிலாந்த் நாட்டில் கிறிஸ்ட் சர்ச் என்னுமிடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 65 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்க பதிவேடுகளில் அந்த இடத்தில் நிலநடுக்கம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென பதிவு செய்யப்பட்டிருந்தும் அங்கே அது நிகழ்ந்துள்ளது. இதை Blind Fault என அழைப்பர். கல்பாக்கம் பகுதியிலும் Blind Fault வர வாய்ப்பில்லையா? ஒரு வேளை வந்து நில நடுக்கத்தின் மையம் கல்பாக்கம் அணு உலைகளுக்கு அருகில் இருந்தால் கல்பாக்க அணு உலைகளுக்கு பாதிப்பு வராது எனக் கூற முடியுமா?

இங்கே அணுசக்தி துறையில் உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற திரு.கோபாலகிருஷ்ணன் (முன்னாள் தலைவர் அணுசக்தி ஒழுங்கு கட்டுப்பாட்டு வாரியம்) அவர்களின் கருத்துக்களை பதிவு செய்வது மிக அவசியமாகிறது. அணுசக்தி நிர்வாகம், நிலநடுக்க பதிவுகள் ஆய்வுகளை, கணக்கில் கொள்ளும்போது தனக்கு சாதகமான ஆய்வுகளை மட்டுமே எடுத்துக் கொள்வதாகவும், பாதகமான ஆய்வுகளை விட்டு விடுவதாகவும் குறை கூறியுள்ளார். இங்கு அணுசக்தி ஒழுங்கு கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணுசக்திக் கழகத்தின் கீழ் செயல்பட வேண்டிய கட்டாயத்தால் அவர்கள் சொல்வதைத் தான் கேட்க வேண்டியுள்ளது. அமெரிக்காவில் உள்ளது போன்று அணுசக்தி ஒழுங்கு கட்டுப்பாட்டு வாரியம் தன்னிச்சையான, சுயேட்சையான சக்தியாக செயல்பட முடியாது போவதால் நிலநடுக்கப் புள்ளி விவரங்கள் குறித்தும் நிலநடுக்கத்தை தாங்கும் அணு உலையின் வடிவமைப்பைக் குறித்தும் சுயேட்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாமலிருப்பதை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும் இந்திய அரசானது தான் வகுத்த அணுசக்தி கொள்கைகளுக்கு மாறாக செயல்படுவது முற்றிலும் சரியல்ல! எனவும் கூறியுள்ளார். அதாவது அணு உலைகளை ஏன் நாம் இறக்குமதி செய்ய வேண்டும்? அதுவும் பரிசோதனை செய்து பாதுகாப்பு, செயல்திறன் உறுதிப்படுத்தப்படாத அணு உலைகளை வாங்க நாம் ஏன் முற்பட வேண்டும், நமது நாட்டிலிருக்கும் அணு உலைகளின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு மெகாவாட் தயாரிக்க ரூ.8 கோடி தான் செலவாகும். ஆனால் வெளிநாட்டு அணு உலைகள் மூலம் ஒரு மெகாவாட் தயாரிக்க ஆகும் செலவோ ரூ.20 கோடி. மேலும் விபத்து என வரும்போது நமது அணு உலைகளை எப்படி கையாள்வது என்ற அனுபவம் நமக்கு இருக்கும்.

ஆனால் வெளிநாட்டு அணுஉலைகளை கையாளும்போது விபத்தின் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முன்னனுபவம் ஏதும் இல்லாத நிலையில் நாம் முறையாகச் செயல்பட முடியாது போகும் வாய்ப்பே அதிகம்! மேலும் அணு உலைகள் குறித்து தீர்மானிப்பது, முடிவெடுப்பது யார் கையில் ஒப்படைக்க கூடாது என வரும்போது அரசுக்கு வேண்டப்பட்டவராகவோ முக்கிய அரசியல் கட்சிகளுக்கு வேண்டப்பட்டவராகவோ, வணிகத்துறையில் முடிவெடுக்கும் அமைப்புகளுக்கு நெருக்கமானவராகவோ இருக்க கூடாது என்றும், அணுசக்தி வல்லுனர்கள் மத்தியில் ஒழுக்கத்தில் தலைசிறந்து விளங்குபவர்கள் மட்டுமே அந்த பதவியில் இருக்க வேண்டும். அப்போதுதான் அணு உலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு மக்கள் நலன் மேம்படுத்தப்படுவது உறுதியாகும். ஆக கல்பாக்க நிலநடுக்க புள்ளி விவரங்கள் எங்கிருந்து சேகரிக்கப்பட்டன? சாதக பாதகங்கள் அனைத்தும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளதா? சுயேட்சையாக நேர்மையான அணுசக்தி கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் அது உறுதி செய்யப்பட்டதா? என்ற கேள்விகள் நிச்சயம் கேட்கப்பட வேண்டும்.

இனி கல்பாக்கத்தில் துவங்கப்பட உள்ள PFBR (Proto type Fast Breeder Reactor) பற்றி

இந்த வகை அணுஉலைகளில் குளிர்விப்பானாக Liquid Sodium (திரவ சோடியம்) பயன்படுத்தப்படுகிறது. பிரச்சனை என்னவெனில் திரவ சோடியம், காற்று, நீரின் தொடர்பிருந்தால் போதும், அது உடனே வெடித்து எரியும் இதை Sodim Fire என்பர். ஜப்பானில் Monju என்னுமிடத்தில் கல்பாக்கம் போன்ற அணு உலையில் நிலநடுக்கம் காரணமாக Sodium Fire ஏற்பட்டதால் 15 வருடங்களுக்கு மேலாக இன்னமும் திறக்கப்படாமல் தான் உள்ளது. ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் ஏகப்பட்ட சோடியம், பயர் விபத்துகள் நடந்துள்ளன. ஆக நிலநடுக்கத்தின் மையம் கல்பாக்க அணு உலைகளுக்கு அருகில் இருந்தால் PFBR அணு உலையின் குளிர்விக்கும் வழிமுறைகள் செயலிழக்க வாய்ப்பே இல்லையா? விடை தெளிவாக கூற முடியாது. ஜப்பானில் நடந்தது போன்று அரிதாக அத்தகையதொரு விபத்து இங்கு நடந்தால் சென்னை, பாண்டிச்சேரி, மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? ஆக கேள்விகளுக்கு விடை காண வேண்டிய தருணம் இது! ஆக பொறுப்புணர்வு, அக்கறையுடன் பதில் சொல்லும் கடமை, ஒளிவுமறைவற்றத் தன்மை, குடிமக்கள் சுயேட்சையாக கதிர் வீச்சுக் குறித்தான அறிவியல் ரீதியான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அவை தான் அணு உலையின் பாதுகாப்பையும், மக்கள் நலனையும் உறுதி செய்யும்!

சில முக்கிய குறிப்புகள்

வெளிநாட்டு அணுஉலைகளை வாங்கும்போது போட்டியின்றி தேர்ந்தெடுப்பது கூடாது. ஆனால் இந்திய அரசோ இதைக் கடைப்பிடிக்கவில்லை. இத்தகைய போக்கு மக்கள் நலனை புறந்தள்ளும் அரசு, முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள், பெரு வணிக குழுமங்கள், அதிகாரம் படைத்த வணிகத்துறையினர்... இவர்களின் கூட்டுச் சதிகளுக்கே, பல்வேறு ஊழல்களுக்கே வழிவகுக்கும்.

2008 செப்டம்பர் 10ல் இந்திய அரசு அமெரிக்க அரசுக்கு 10,000 மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான அணு உலைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் என்ற உத்தரவாதம் FAX மூலம் அனுப்பியதன் பின்னரே அமெரிக்காவிலும், பின்னர் இந்தியாவிலும், அணுசக்தி இழப்பீட்டுத் தொகை மசோதா ஆளும் கட்சி, எதிர் கட்சி ஆதரவுடன் இந்தியாவிற்கு அமலில் வந்தது. இம்மசோதாவில் இயற்கை இடர்பாடுகளால் அணு உலைகளில் விபத்து நடந்தால் இழப்பீட்டு தொகை ஏதும் வழங்க தேவையில்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நாம் இன்னமும் ஏற்கத்தான் போகிறோமா? சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமிது.

ஜப்பானில் அணு உலை பாதிப்பின் காரணமாக 20 கி.மீ. சுற்றளவிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிரீன்பீஸ் செய்த ஆய்வில் விபத்து நடந்த அணு உலையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள கிராமத்தில் கதிர் வீச்சின் அளவு 10 மைக்ரோ சீவெட்/hour என இருப்பது கண்டறியப்பட்டது. அப்பகுதி மக்கள் அதன் காரணமாக சில தினங்களிலேயே சர்வதேச அணுசக்தி அறிவியல் குழுக்கள் பரிந்துரைத்த கதிர்வீச்சின் அளவை உள்வாங்கி விடுவர் என்பதன் காரணமாக ஜப்பானிய அரசு மக்கள் நலன் கருதி 40 கி.மீ. வரை உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளது. அரசு தலை சாய்க்குமா? இங்கே சுயேட்சையாக செயல்படும் கிரீன்பீஸ் போன்ற அமைப்பினரின் பங்கு எவ்வளவு தூரம் முக்கியம் வாய்ந்ததென மக்கள் உணர்ந்து செயல்படுவது நல்லது.

ஒரே இடத்தில் பொருளாதார நிதிநிலை காரணமாகவும், வசதி காரணமாகவும் அணு உலைகளை அதுவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெகாவாட் அளவில் உற்பத்தித் திறன் கொண்ட அணு உலைகளை அமைப்பது எவ்வளவு ஆபத்தானதாக முடியும் என்பதையும் உணர்ந்து அதைக் கேள்விக்குள்ளாக்குவது தேவையாகிறது. (உ.ம் ஜெய்தாபூர், கல்பாக்கம்)

பாடம் : இயற்கையை மதித்து நடப்பதுதான் மக்களுக்கு நல்லது, பாதுகாப்பானது.

 **** 

*தென்கொரிய நாட்டில் சமீபத்தில் மழை பெய்த போது அவ்வரசு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்தது. மழையின் காரணமாக கதிர்வீச்சு குழந்தைகளை பாதிக்கக்கூடும் என்பதாலேயே இந்த நடவடிக்கை. ஜப்பானிலிருந்து இந்தியாவிற்கு வரும் காற்றுப் பாதையில்தான் தென்கொரியா உள்ளதை மனதில் கொள்ள வேண்டும். அப்படியெனில் இந்தியாவிற்கும் காற்று வழி பாதிப்பு இருக்காதா?

*10.4.11 செய்தி, தீப்புகை அபாய எச்சரிக்கை காரணமாக கர்நாடகாவிலுள்ள கைப்கா 3ஆம் அணு உலை மூடப்பட்டது. பின்பு செய்த ஆய்வில் எந்த சிக்கலும் இல்லை என தெரியவந்துள்ளது. (திரு.குப்தா, இயக்குநர், கைய்கா அணுமின் நிலையம்) தீப்புகை அபாய எச்சரிக்கை பொய்யான எச்சரிக்கை என ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிட்டது. ‘பொய் எச்சரிக்கை’ எனில் ஏன் அணு உலையை மூட வேண்டும். ‘சிக்கல்’ ஏதும் இல்லையெனில் ‘தீப்புகை எச்சரிக்கை’ ஏன் ஒலிக்க வேண்டும்? அணு உலையை ஏன் மூட வேண்டும்? ஆக ஒளிவு மறைவற்ற தன்மை இவ்வளவு உலக விசயங்கள் நடந்த பின்னரும் அணுசக்தி நிர்வாகத்திற்கு இல்லை என்பதற்கான சமீப உதாரணம் இது. மக்கள் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயத்தை இது நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

*2.4.11 அன்று அணு உலை பிரச்சனை சிறியதுதான் என திரு.குப்தா ஒப்புக் கொண்டுள்ளார்.

*2004 சுனாமிக்கு பின் தமிழ்நாட்டில் கூடங்குளத்து அணுமின் நிர்வாக அதிகாரிகள் அணுஉலை கடல் மட்டத்திலிருந்து 5 மீட்டர் உயரத்தில் உள்ளதென தெரிவித்தனர். ஜப்பானில் ஏற்பட்ட பாதிப்பிற்கு பின் அது 10 மீட்டர் உயரத்தில் உள்ளதென கூறுகின்றனர். இதில் எது உண்மை என அறிய பொது மக்களுக்கோ, சுயேச்சையாக இங்கும் அறிவியலாளருக்கோ வாய்ப்பு மறுக்கப்படும் நிலையில் அணுசக்தி நிர்வாகத்தின் கூற்றை மக்கள் எப்படி நம்ப முடியும்?

* புகுஷிமா அணுஉலை விபத்து உலகிலே மிக மோசமான 1986ல் நிகழ்ந்த செர்னோபிள் விபத்துக்கு இணையாக உள்ளதென ஜப்பானிய அரசே அறிவித்ததிலிருந்து அணு உலைகளின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமான விசயம் என்பது சொல்லாமலே விளங்கும்.

 ****

சென்னை துறைமுகத்தில் ஜப்பானின் கதிர்வீச்சு கலந்த நீர்

புகுஷிமா விபத்தில் 55 மில்லியன் லிட்டர் கடல்நீர் அணு உலை விபத்திற்குப் பிறகு அதைக் குளிர்விக்க பயன்படுத்தப்பட்டது. மீண்டும் கடல்நீர் கடலில் விடப்பட்டது. ஜப்பானில் இருந்து வரும் கப்பல்கள் இக்கடல் நீரை கப்பலின் அடியில் கொண்டு வந்து சென்னை துறைமுகத்தில் கலந்துவிட்டதாக நடுவண் கடல் ஆய்வு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. (மே 22 2011 அருண் ஜனார்த்தனன்) மாதத்திற்கு நான்கு ஜப்பான் கப்பல்கள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனா மற்றும் ஐரோப்பிய துறைமுகங்களுக்கு ஜப்பானிய கப்பல்கள் வருவது குறித்து அபாயச் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்தியா இந்த அபாயத்தை வலியுறுத்தவில்லை. ஆனாலும் கோவாவிற்கு வந்த கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தொலைதூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கதிர்வீச்சு தண்ணீர் கலந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை.

Pin It