நாம் நலமாக வாழ அடிப்படைத் தேவையான ஆரோக்கியமான சுற்றுச்சூழல் நம் கைகளைவிட்டு நழுவிக் கொண்டிருக்கிறது. நமது ஊர்கள் பயங்கரமான நோய்களின் பிறப்பிடமாக உள்ளன. நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்கள் பிரதிநிதிகளும் நமது அரசுகளும் மக்களை கைகழுவிட்டன. அதைப் பற்றி பேசுவது தவிர, தனிநபர்களான நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க என்ன செய்யலாம்? எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வரலாம்? அது ஒரு பெரும் பாலம் கட்ட சிறிய அணிற்பிள்ளை வாலில் ஒட்டிவந்த மண்ணாக இருந்தாலும் சரி, ஒரு செடி பிழைத்திருக்க தண்ணீர் ஊற்றுவதானாலும் சரி, பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதானாலும் சரி... உலகைக் காப்பாற்ற மேற்கொள்ளப்படும் சின்னச்சின்ன முயற்சிகளும்கூட முக்கியமானவையே.

படுத்தும் பிளாஸ்டிக்

ஓராண்டில் 10,000 கோடி பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே மறுசுழற்சி செய்யப்படுகிறது. மக்கள்தொகை அதிகமாகவும், அரசு கட்டுப்பாடுகள் குறைவாகவும் இருக்கும் நமது நாட்டில் மறுசுழற்சி கிட்டத்தட்ட நடைபெறவேயில்லை. உயிர் முதன்முதலில் தோன்றிய கடலில்தான் இவற்றில் பெரும்பாலானவை சென்று சேருகின்றன. பூமிப்பந்தின் வடக்கில் உள்ள ஆர்டிக் பனிப்பிரதேசம் வரை பிளாஸ்டிக் பைகள் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றன.

இப்படி மிதக்கும்போது நச்சுத்தன்மையுள்ள சிறிய பாலிமராக இவை மாற்றமடைகின்றன. பின்னர் கடல் உயிரினங்களின் உடலுக்குள் புகுந்து உணவுச்சங்கிலி மூலமாக, அந்த பிளாஸ்டிக் பைகளை தூக்கிப் போட்ட நம்மையே வந்தடைகின்றன. பிளாஸ்டிக்கின் இந்த நச்சு சுழற்சியைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் அதை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டாலே, மீண்டும் அது நம்மை நச்சாக வந்தடைவதைத் தவிர்க்கலாம்.

பொருட்களை வாங்க நீங்கள் துணிப்பையை பயன்படுத்தினால், வாரத்துக்கு குறைந்தபட்சம் 6 பைகள், ஆண்டுக்கு 288 பைகள், வாழ்நாளில் கிட்டத்தட்ட 25,000 பிளாஸ்டிக் பைகள் வாங்குவதையும் தவிர்க்க முடியும். நம் நாட்டில் பத்து பேரில் ஒருவர் இப்படிச் செய்தால் எத்தனை பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க முடியும் என்று கணக்கிட்டுப் பாருங்கள்.

கச்சா எண்ணெயில் இருந்தே பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. எனவே, இலவசமாக வழங்கப்படும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடைவிதித்தாலேயே பல பேரல் கச்சா எண்ணெய் செலவைக் குறைக்கலாம். நீங்கள் ஒருவர் மட்டுமே உங்கள் வாழ்நாளில் குறைந்தபட்சம் 30,000 பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்க முடியும் என்றால், "நீங்கள் நன்றாக வாழ வேண்டும்" என்று உலகம் உங்களை வாழ்த்தாதா என்ன?

எங்கே போகிறோம்?

சாலையில் இறங்கி செல்லும் போதெல்லாம், ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்திருக்கிறோமோ என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் போக்குவரத்து நெரிசலில் எத்தனை மணி நேரத்தை நாம் வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தீர்களா? கார் வாங்குவது முன்னேற்றம் என்று தவறாக நம்புகிறோம். பேருந்து, ரயில் மூலம் செல்வதால் எவ்வளவு நேரத்தையும், அலைச்சலையும், பதற்றத்தையும் குறைக்க முடிகிறது, வாழ்க்கையை சுகமாக அனுபவித்து வாழ முடிகிறது என்று சிந்தித்துப் பார்த்தோமா?

2020ல் நம் நாடு வல்லரசாக வேண்டும் என்று கனவு காண்கிறோம். ஆனால் நமது பேருந்துகளும், ரயில்களும், சாலைகளும் எத்தனை நூற்றாண்டுகள் பின்தங்கி இருக்கின்றன பார்த்தீர்களா. வல்லரசு நாட்டில் பொதுப் போக்குவரத்து வசதிகளும் உலகத் தரத்துக்கு இருக்க வேண்டும், இல்லையா? அப்பொழுதுதான் நமது நேரமும் மிச்சமாகும், தூய்மையான காற்று கிடைப்பதால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

நதி எங்கே?

வல்லரசு நாடாக கனவு காணும் இந்தியாவின் ரத்த நாளங்கள் நதிகளே. உங்கள் ஊரில் ஓடிக் கொண்டிருக்கும் நதி கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைந்து சாவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை அன்றாடம் பார்க்க நேர்கிறதா. அது உங்கள் உடல்நலனுக்கு வேட்டு வைக்கும். நீங்கள் ஆரோக்கியமாக வாழ, உங்கள் நதி தூய்மையாக இருக்க வேண்டும். அதை ஒழுங்காகச் செய்யுமாறு உங்கள் சார்பாக நகராட்சி, சட்டப்பேரவை, மக்களவைக்குச் சென்ற பிரதிநிதிகளிடம் போராடுங்கள்.

ராஜஸ்தானில் உள்ள பாலி நகரில் ஓடும் பந்தி நதி நஞ்சை சுமந்து கொண்டு இருந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தீவிரமான போராட்டம் காரணமாக நாட்டிலேயே முதன்முறையாக பொதுமக்களுக்கான கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. நாமும் நமது நதிகளையும் சீரமைக்கப் போராடுவோம், குரல் கொடுப்போம்.

நம்மவர்கள்

நாம் வெள்ளைக்காரர்கள் போல காசை வாரி இறைப்பவர்கள் அல்ல. எண்ணி எண்ணிச் செலவழிப்பவர்கள். அப்படி செய்யும் செலவு, சிறிய அளவில் வியாபாரம் செய்யும் உள்ளூர் வியாபாரிகளின் வீட்டில் அடுப்பெரிய உதவலாமே. சூப்பர்மார்கெட்டுகளிலும், ஷாப்பிங் மாலிலும் பொருட்களை வாங்குவதால் சிறு வியாபாரிகளின் வாழ்க்கை அழிகிறது. நம்மைச் சுற்றி வாழும் உள்ளூர் வியாபாரிகள் வாழ ஆதரவு தருவோம்.

வெளிநாடுகளில் இருந்தும் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருந்தும் வரும் பழங்கள், காய்கறிகள், உணவுப் பண்டங்களால் எவ்வளவோ எரிசக்தி விரயம் ஆகிறது. ஒரு கூடை இறக்குமதி செய்யப்பட்ட உணவு என்பது, ஒரு குடும்பம் ஆறு மாதம் சமைப்பதற்குத் தேவையான எரிபொருளை வீணாக்குகிறது.

ஓராண்டில்

டிவியை ஸ்டாண்ட் பையில் வைப்பதால் 20 கிலோ கார்பன் வெளியாகிறது

ஸ்டீரியோவை ஸ்டாண்ட் பையில் வைப்பதால் 66 கிலோ கார்பன் வெளியாகிறது

டிவிடியை ஸ்டாண்ட் பையில் வைப்பதால் 44 கிலோ கார்பன் வெளியாகிறது

கணினியை ஸ்டாண்ட் பையில் வைப்பதால் 9 கிலோ கார்பன் வெளியாகிறது

தேவையற்ற விளக்குகளை எரிப்பதால் 370 கிலோ கார்பன் வெளியாகிறது

மொபைல் சார்ஜரை பிளக்கில் இருந்து கழட்டாமல் இருப்பதால் 10.5 கிலோ கார்பன் வெளியாகிறது

எதையும் ஸ்டாண்ட் பையில் வைக்காதீர்கள். எல்லா மின்இணைப்புகளையும் முழுமையாக நிறுத்துங்கள். மின்சாரத்தை சேமிப்பதால் புவிவெப்பமடைதலைக் குறைக்கலாம். ஒவ்வொரு சின்னச்சின்ன நடவடிக்கையும் பெருமளவு உதவும்.

யார் நல்லவர்?

உங்கள் நகராட்சி குப்பையை இஷ்டப்பட்டபடி அள்ளிச் செல்ல அனுமதிக்காமல், குப்பையை முறையாகப் பிரித்து வெளியேற்ற வலியுறுத்துங்கள். காகிதம், கண்ணாடி, இரும்பு-தகரம், பிளாஸ்டிக் போன்றவற்றை பிரித்து பழைய பேப்பர்காரரிடம் விற்பதன் மூலம் உங்கள் கைச்செலவுக்கு காசு கிடைக்கும். பழைய பேப்பர்காரரிடம் பேரம் பேசாதீர்கள், உங்கள் ஊர் எம்.எல்.ஏவைவிட அவர் நல்ல காரியம் செய்து கொண்டிருக்கிறார். ஊர் நாறிப் போகாமல் பார்த்துக் கொள்கிறார்.

தொகுப்பு: ஆதி (நன்றி: டவுன் டு எர்த் சுற்றுச்சூழல் இதழ்)

 

Pin It