சிட்டு

நமது சுற்றுச்சூழல் எவ்வளவு மோசமாக சீர்கெட்டிருக்கிறது என்பதையும், நம்மைச் சார்ந்து வாழ்ந்த எளிய உயிரினங்கள் எப்படி திடீரென்று மறைந்தன என்பது பற்றியும் புரிந்துகொள்ள முயற்சிக்கும் உணர்வுப்பூர்வமான ஆவணப்படம்தான் "சிட்டு". தேசியப் பறவை மயில் பற்றி ஏற்கெனவே படம் எடுத்த கோவை சதாசிவம் இயக்கியது.

தொடர்புக்கு: 99650 75221

என் பெயர் பாலாறு

தமிழகத்தின் வடபகுதியில் ஓடிய பாலாறின் வளம் பற்றி அதன் பெயரே பறைசாற்றும். அரசியல்வாதிகள், ஆலை முதலாளிகள் உள்ளிட்டோரின் மணற்கொள்ளை, தோலாலைக் கழிவு, சுற்றுச்சூழல் சீரழிவால் பாரம்பரியம் மிக்க இந்த ஆறு எப்படி சீரழிந்தது என்பதை அழுந்திருத்தமாகச் சொல்லும் ஆவணப்படம். "பூவுலகு" ஆசிரியர் குழு உறுப்பினர் ஆர்.ஆர். சீனிவாசன் இயக்கியது.

தாகம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை காட்சி ரீதியாவும், கதையாகவும் சிறப்பாகச் சொல்ல முடியும் என்பதைக் காட்டிய குறும்படம் "தாகம்". சுற்றுச்சூழல் சீரழிவு, அதன் எதிர்கால விளைவுகளாக நாம் எதை எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை சொல்கிறது. இந்தப் படத்தை இயக்கியவர் பேருந்து நடத்துநர் "மரங்களின் காவலர்" யோகநாதன்.

ஒவ்வொரு சொட்டும்

சுற்றுச்சூழல் எழுத்தாளரான வைகைச் செல்வி தண்ணீரின் முக்கியத்துவத்தை காட்சி ரீதியாகச் சொல்ல மேற்கொண்ட குறிப்பிடத்தக்க முயற்சி "ஒவ்வொரு சொட்டும்". நம் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமான தண்ணீர் படும் பாட்டை விளக்கியுள்ளது.

தொடர்புக்கு: 98401 16488, 94440 01637

நெய்தல்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் "கடற்கரை மேலாண்மை, மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா" மீனவர்களை அழித்து, மீன்பிடித் தொழிலை பெருமுதலாளிகளின் வசம் ஒப்படைப்பதற்கு அரசு இடும் திட்டம் என்பதை மீனவர்களின் குரல் மூலமாகவே வெளிப்படுத்தியுள்ளது "நெய்தல்". ஏற்கெனவே குறிப்பிடத்தக்க ஆவணப்படங்களை இயக்கியுள்ள ம. செந்தமிழன் இயக்கியது.

 

Pin It