உங்களுடைய குடும்பப் பின்னனி பற்றி சொல்லுங்கள்?

அம்மா ஒரு சமூக வளர்ச்சித் துறையில் பணியாற்றினார். அப்பாவும் சமூக ஆர்வலர்தான். ஆனால் புள்ளியியல் துறையில் பணிபுரிந்தார். இரண்டு பேருமே ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். அதனால் எளிமையாக வாழ்ந்தோம். இப்பொழுதும் அப்படித்தான் வாழ்கிறேன். எனக்கு இரண்டு மகன்கள். இரண்டு பேரையும் நான் அப்படித்தான் வளர்க்கிறேன்.

நீங்கள் வளர்ந்து வரும்போது உங்கள் எதிர்காலம் குறித்த என்ன கற்பனை செய்து வைத்திருந்தீர்கள்?

என்னைச் சுற்றி புத்தகங்களுடனும் எளிமையாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என வீட்டில் பயந்தார்கள். ‘நான் யாருடைய குடும்பத்திற்கும் பொருந்தமாட்டேன்’ என நினைத்தேன். அப்பொழுதுதான் வசமாக மாட்டினார் உதயகுமார்.

உதயக்குமாருடன் உங்கள் முதல் சந்திப்பைப் பற்றி கூறுங்கள்?

 எங்கள் நண்பர் ஒருவர்தான் உங்களுக்குப் பொருத்தமானவர் ஒருவர் இருக்கிறார் என்று கூறி பெயரை மட்டும் அறிமுகப்படுத்தினார். அவர் அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார். ஒருநாள் நேரில் சந்திப்பதற்காக இருவரும் முயன்றோம். நான் வெள்ளைப் புடவை நீண்ட தலை முடியுடனும் இருப்பேன் என்று என்னுடைய அடையாளத்தை சொல்லி நான் அவருக்காக சாலையில் ஆட்டோவில் காத்துக் கொண்டிருந்தேன். அவரும் வெள்ளை சட்டை ஜீன்ஸ் பேண்ட்டுடன் வருவேன் என்று அடை யாளத்தை சொன்னார். அதிகம் பயத்துடன்தான் தெருவில் போகிற எல்லா வாகனத்தையும் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘அவர் சொன்ன அடையாளத்துடன் ஒருவர் நான்தான் உதயக் குமார்’ என்றால் ஓடிவிட வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவர் வரவில்லை. பிறகு என்னுடைய தோழி வீட்டுக்கு போய்விட்டேன். சிறிது நேரம் கழித்து அழைப்பு மணி அழைத்து கதவைத் திறந்து ‘என்ன வேண்டும் எனக் கேட்டேன். அவர் ‘மீரா யார்’ எனக் கேட்டார் ‘நான் தான்’ என்றவுடன் ‘நான் உதயக்குமார்’ என்றார். மிகவும் எளிமையாகவும் கருப்பாகவும் இருந்தார். 1987ல் அறிமுகம் ஆகி 1992ல் கல்யாணம் நடந்தது.

இளம் வயதிலேயே உதயகுமார் அணு உலை எதிர்ப்பாளராக இருந்தாரா?

1987லிலேயே ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று கையெழுத்து இயக்கம் நடத்தியிருக்கிறார். நான் கூட கையெழுத்து போட்டிருக்கிறேன். நண்பர் களிடையே பல துறைகளைப்பற்றி விவாதம் நடத்தும் ‘எறும்புகள்’ என்ற ஒரு இயக்கத்தை நடத்தினார். இளம் வயதிலேயே பல இயக் கங்களில் செயல்பட்டிருக்கிறார்.

அணு உலை எதிர்ப்புத் திட்டத்திற்கு என்ன விதமான செயல் திட்டம் வைத்திருந்தார்?

1987லே உலகில் உள்ள அணு உலைகளைப் பற்றி தெரிந்து கொண்டு அது தொடர்பாக பத்திரிக்கை களிலும் பொதுவிவாத மேடைகளிலும் அது பற்றி பேசினார். ’பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த அசுரனை சந்தித்து பூவுலகு இதழில் தொடர்ந்து எழுதினார். ‘ஃப்யூச்சர்’ வெளிநாட்டி தழிலும் எழுதினார்.

கூடங்குளப் போராட்டத்தில் பெண்களின் முன்னெடுப்புப் பற்றி என்ன நினைகிறீர்கள்?

தன்னிச்சையாக பெண்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைத்து விடுகிறார்கள். அதனால் எப்பொழுதும் பெண் என்பவள் இரண்டாம வளாக நடத்தப்படுகிறாள். அந்த மக்கள் அங்கே படிக்கவில்லை. ஆனால் கல்கத்தா போன்ற மொழி தெரியாத ஊருக்கெல்லாம் போய் அங்கே உள்ளவர்களிடம் பேசிவிட்டு வந்திருக்கிறார்கள். ஈகோ இல்லாத அந்த மக்கள் மணியடிக்காம லேயே அங்கு வந்து, கூட்டத்தில் பங்குகொள் கிறார்கள். மிகவும் ஆச்சரியமானவர்கள். இவர் களை யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

நீங்கள் நடத்தும் பள்ளிக்கு பின்னால் இருக்கும் சித்தாந்தம் என்ன?

தேர்வை நோக்கிய மனப்பாட கல்வியாக இருக்கக் கூடாது. உலகில் உள்ள அனைத்தையும் எதிர் கொள்கிற பக்குவத்தைக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆங்கிலம் ஆங்கிலம் என இல்லாமல் தமிழ்-ஆங்கிலம் என கற்றுக் கொடுக்கிறோம்.

கூடங்குளப் பிரச்சனையை ஒட்டி உங்கள் பள்ளிக்கு சில குழந்தைகளை பெற்றோர்கள் படிக்க அனுப்பவில்லை. அந்த குழந்தைகள் திரும்பி வர வாய்ப்பிருக்கிறதா?

இந்தக் குழந்தைகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அருமையான குழந்தைகள். என்னை விட்டுப் போக மாட்டேன் என்று அவர்கள் அம்மாக்களிடம் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் சில பேர் அவன் போராட்டத்திற்கு ‘பணம் வாங்கிட்டு பள்ளிக்கூடம் நடத்துகிறான்’ என்று கூறி அவர்கள் குழந்தைகளின் பள்ளிச் சான்றிதழை வாங்கிக்கொண்டு போனார்கள். சில பேர் ‘இவ பெண் தானே பள்ளியை மூடிட்டு ஓடிடுவான்னு’ நினைத்தார்கள். கடினமான இந்தக் காலகட்டத்திலும் பள்ளியை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். எதிர்நீச்சல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கூடங்குள மக்கள் மீதான போலீஸ் தடியடியின்போது நீங்கள் உதயகுமாரை தொடர்புகொள்ள முடிந்ததா? உங்கள் மனநிலை என்ன?

சிறிது நேரம் தொடர்புகொள்ள முடியாமல் இருந்தது. அப்பா கைதாவார் என்றவுடன் பெரிய பையன் அழத்தொடங்கினான். சின்னவன் ‘அப்பா இனிமேல் வர மாட்டாரா’ எனக் கேட்டான். கைதாகாமல் இருக்க வேண்டும் என நினைத்தேன். கைதானால் சித்திரவதை செய்து பயமுறுத்து வார்கள். கைது, சித்திரவதை அடுத்த தலைமுறை போராட்டங்களை முன்னெடுக்காமல் செய்யும் யுக்திதான். ஒரு போராட்டத்தில் எந்த வித பாதிப்பில்லாமல் கிடைக்கும் வெற்றிதான் அடுத்த தலைமுறையை போராடத் தூண்டும்.

ஒரு சிறு வன்முறை கூட நடக்காமல் 500 நாளைக் கடந்து எப்படி இந்தப் போராட்டம் தொடர்கிறது?

மீனவ மக்கள் கடல், மீன் என இயற்கையுடன் வாழ்பவர்கள். அதீத அன்பும் கோபமும்தான் அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரிந்தது வாழ்வு, சாவு மட்டும்தான். இதற்கிடையே அவர்களுக்கு எந்த வேறுபாடும் கிடையாது. கடலில் மீன் கிடைக்கவில்லை என்றால் கூட பார்த்துக் கொள்ளலாம் என மனநிறைவடை வார்கள். உதயகுமாரின் எதிர்பார்ப்பற்ற அன்பைப் புரிந்து கொண்டார்கள். உதயகுமார் யோகா, காந்திய வழி என அமைதியை விரும்புபவர். அதனாலேயே அவர் அனைவரையும் அதையே பின்பற்ற வைத்தார். அதனாலேயே இத்தனை நாட்களாகப் போராட்டத்தைக் கொண்டு சொல்ல முடிந்தது. எல்லோரையும் விவாதப் பொருளாக மாற்ற முடிந்தது.

கூடங்குளப் பிரச்சனை சம்பந்தமாக நாடார் களும் மீனவர்களும் பிளவுபட்டிருப்பதாக ஆரம்பத்தில் செய்தி வந்ததே. இப்போதைய நிலைமை என்ன?

எல்லோரும் ஒற்றுமையுடன்தான் இருக்கிறார்கள். சிலர் இதுகுறித்த புரிதலின்றி இருந்தார்கள். பின்பு தான் அவர்களுக்கு உண்மை புரிந்தது. இப்பொழுது அனைவரும் இணைந்து போராடு கிறார்கள். கூடங்குளம் மருத்துவமனையில் ஒரு முறை குழந்தையுடன் இருந்த பெண்ணிடம் கேட்டேன். உங்கள் ஊரில் அணு உலை வருகிறதே என்றேன். அதற்கு அவர் “நாங்கள் நாடார், எங்களை ஒன்றும் செய்யாது” என்றார்.

‘அணு உலைக்கு நாடார், மீனவர் தெரியாதும்மா!” என்றேன். அவர்கள் வாழ்வை அழிப்பதற்கு எப்படி எல்லாம் மூளைச் சலவை செய்திருக் கிறார்கள். பின்பு என்னுடன் அவர்கள் நன்றாகப் பழக ஆரம்பித்தார்கள். பின்புதான் கூடங்குள அணு உலை குறித்து முழு உண்மைகளையும் அவர்களுக்குப் புரிய வைத்தேன்.

அணு உலை வேண்டாம் என்பது நம் எல்லோருடைய எண்ணம்.இன்றைய சூழ்நிலையைப் பார்க்கும்பொழுது அணு உலை செயல்படும் சூழல் நிலவுகிறதே?

கட்டாயம் நூறு சதவீதம் அணு உலை மூடப்படும். ஒட்டு மொத்த தமிழகமும் சேர்ந்து கூடங்குளத்தை மூடவைக்கும் என்று நான் நம்புகிறேன். அதற்காகத்தான் போராட்டம் இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டது என நினைக்கிறேன். ஏன், நாம் சூரிய ஒளி கொண்டு மின்சாரம் தயாரிக்கக் கூடாது? உலகம் முழுவதும் இது சாத்தியப்பட்டிருக்கிறது. நீர், காற்று, சூரிய ஒளி மட்டும் தான் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள். எனவே மாற்றத்தை எதிர்பார்ப்போம்.

உங்கள் வீட்டிற்கு வருகிற சட்டப் பிரச்சனை களை எப்படி எதிர் கொள்கிறீர்கள்?

போலீஸ்காரர்கள் பல நாட்கள் தொடர்ந்து வந்து வந்து விசாரித்தார்கள். முதலில் பிரச்சனைகளைப் பற்றி பயந்தேன். மக்களுடைய பாதுகாப்பும் அன்பும் அவருக்கு இருப்பதால் இப்போது பயம் இல்லை. ‘நாம் போராட்டத்தில் வெற்றி பெறுவோம் கவலைப்பட வேண்டாம்’ என அவர் நம்பிக்கை கொடுத்தார். அந்த நம்பிக்கைதான் எங்களுக்கு எப்போதும் இருக்கிறது.

சந்திப்பு: குட்டி ரேவதி

உதவி: தோழர் முகிலன், கவிஞர் ஜி.எஸ். தயாளன், கவிஞர் என்.டி. ராஜ்குமார், பத்திரிகையாளர் ரோஸ்ஆன்ட்ரோ

Pin It