ம்யூனிஸ்ட் கட்சிகள் வித்தியாசமான பல அரசியல் களங்களை வெற்றிகரமாகச் சந்தித்திருக்கின்றன. ஆனால், தமிழகத்தைப்போல விசித்திரமான களத்தினை அவை சந்திப்பதுமில்லை; அத்தகைய களத்தினை உருவாக்குவதுமில்லை. உருகி, உருகி விசித்திரமான அரசியல் களத்தை உருவாக்குவதில் தமிழகத் தோழர்களுக்கு இணையாக வேறு யாரும் இருக்க முடியாது.

பாரதிய ஜனதாவும் வேண்டாம்; காங்கிரசும் வேண்டாம் என்பது கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு. நியாயமான முடிவுதான். மதவெறி சக்தியான பா.ஜ.கவும், அரசியல் சூழலுக்கேற்ப வளைந்து அமீபா தோற்றமெடுக்கும் காங்கிரசும் பன்னாட்டு முதலாளிகளின் பண்ணை அடிமைகளாய் ஆட்சி செய்ததையும் - செய்வதையும் தோழர்களால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? அதனால் இரண்டு கட்சிகளிடமிருந்தும் சமமான இடைவெளியில் விலகி நிற்கிறோம் என்று அறிவித்தார்கள். அந்த இரண்டு கட்சிகளுடன் கைகோர்த்திருக்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அதனுடனும் இதே இடைவெளிதான் என்பது தோழர்களின் நிலைப்பாடு.

jayalalitha_ab_bharathan_prakash

விலக்கப்படவேண்டியவர்கள் யார் என்பதில் அவர்களின் அளவுகோல் இது என்றால், சேர்த்துக்கொள்ளப்படுபவர்களுக்கு தகுதிகள் என்ன?

மூச்... அது பற்றியெல்லாம் பேசக்கூடாது. பேசினால், உழைக்கும் மக்களின் எதிரி. ஏகாதிபத்தியவாதி. அமெரிக்காவின் கைக்கூலி.

தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் கம்யூனிஸ்ட்டுகள் இருக்கிறார்களா இல்லையா என்பது கடவுள் இருக்கிறாரா என்பதற்கு இணையான விவாதப்பொருள். தோழர்களைப் பொறுத்தவரை, தேர்தல் வரும்போது மட்டுமே கூட்டணி. அதுவும்கூட தொகுதி உடன்பாடுதான். மற்ற நேரங்களில் உடன்பாடா, முரண்பாடா என்று அவர்களுக்கே தெரியாது. தேர்தல் நேரத்திலாவது உடன்பாடு என்பது முழுமையானதா என்றால் அதற்கும் பதில் தேடுவது கடினம். முழு உடன்பாடு என்பதுபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.கவின் தோளோடு தோள் நிற்கும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரைகுறை உடன்பாட்டோடு தனி மேடையில் அ.தி.மு.க.வை ஆதரிக்கும். ஏன் அத்தனை தயக்கத்துடனும் சிரமத்துடனும் ஆதரிக்க வேண்டும்?

ஜெயலலிதா என்ன காரல் மார்க்ஸின் பேத்தியா? கொடநாடு எஸ்டேட்டுக்கு அங்கே உழைக்கிற தொழிலாளர்களே பங்குதாரர்கள் எனப் பொதுவுடைமையாக்கிவிட்டாரா? குறைந்தபட்சம், சி.பி.எம் கட்சியினரால் கமிஷன் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சிறுதாவூர் நிலத்தையாவது அதற்குரியவர்களான தலித் மக்களுக்கு திருப்பிக் கொடுத்துவிட்டாரா? காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள தி.மு.க அரசு மீது தோழர்கள் என்னென்ன குற்றச்சாட்டுகள் சுமத்துகிறார்களோ, அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் அக்காதான் ஜெயலலிதா. அரசு ஊழியர்கள், மக்கள் நலப்பணியாளர்கள், சாலைப்பணியாளர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் என எந்த உழைக்கும் வர்க்கத்திற்காக கம்யூனிஸ்ட்டுகள் இயக்கம் நடத்துகிறார்களோ அவர்கள் அத்தனைபேரும் ஜெயலலிதா ஆட்சியில் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதை மனசாட்சியுள்ள தோழர்களால் ஒருபோதும் மறக்க முடியாது. ஆனாலும், தனிமேடை போட்டாவது ஆதரித்தே தீருவோம் என்பதுதான் அவர்களின் முற்போக்கு பாதை.

காங்கிரசுடன் தி.மு.க கைகோர்த்திருக்கும் நிலையில், பா.ஜ.கவிலிருந்து விலகியிருக்கும் அ.தி.மு.க.தானே எங்களுக்கான வாய்ப்பு என்பார்கள் தோழர்கள். ஜெயலலிதா தன் மனதளவில் என்றாவது பா.ஜ.கவிடமிருந்து விலகியிருந்திருக்கிறாரா? ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணியை உருவாக்கி, அப்துல்கலாமை இரண்டாம் முறையாக ஜனாதிபதியாக்குவது எனத் தீர்மானித்து அவர் மறுத்துவிட்ட நிலையில், மூன்றாவது அணியில் உள்ள மற்ற கட்சியினருக்கே தெரியாமல் தேர்தல் நாளில் பா.ஜ.க வேட்பாளர் பைரோன்சிங் ஷெகாவத்துக்கு வாக்களித்தவர்கள்தானே அ.தி.மு.கவினர்!

கரசேவையில் தொடங்கி சேதுசமுத்திரத் திட்டம் வரை ஜெயலலிதாவின் நிலைப்பாடும் பா.ஜ.கவின் நிலைப்பாடும் ஒன்றுதான். அதேநேரத்தில் காங்கிரசுடனான கூட்டணிக் கதவை சோனியா எப்போது திறப்பார் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக காத்துக்கிடப்பவரும் ஜெயலலிதாதான். ஆனாலும், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்து தமிழகத்தில் மார்க்சியம் பூப்பதற்கு ஜெயலலிதாவுடனான கூட்டணி வேண்டும் என்று சித்தாந்த விளக்கம் கொடுப்பார்கள் தோழர்கள்.

அந்த விளக்கத்தை கேட்டு கிறுகிறுத்துப் போவதைவிட அவர்கள் அ.தி.மு.க பக்கமே இருந்துவிட்டுப் போகட்டும் என விட்டுத்தொலைக்கலாம். இல்லையென்றால், புதிய ஆபத்தை விதைப்பதற்கு அவர்கள் ஆயத்தமாகிவிடுவார்கள். அது என்னவென்றால், விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வுடன் கூட்டணி என்பதுதான். அதுவும், அ.தி.மு.க. - கம்யூனிஸ்ட்டுகள் - தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய அகண்ட கூட்டணி. இப்படியொரு கூட்டணி அமைந்தால் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்திவிடலாம் என்பது தோழர்களின் கணக்கு. தேர்தல் நேரத்தில் இந்தக் கணக்கு கைகொடுக்கவும் கூடும். ஆனால், இப்படியொரு கூட்டணி என்பது தி.மு.க. - காங்கிரசுக்கு மட்டுமா எதிரானது? தமிழகத்தின் அரசியல் வளர்ச்சிக்கே எதிரானது என்பதை தத்துவார்த்தம் பேசும் தோழர்கள் அறியமாட்டார்களா என்ன? ஆனாலும், நம் தோழர்கள் இத்தகைய ஒரு கூட்டணிக்கான முயற்சிகளில் முழு முனைப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

vijaykanth_230ஜெயலலிதாவுடன் விஜயகாந்த்தை கூட்டணிக்கு கொண்டு வருவது, இல்லையென்றாலும் விஜயகாந்த்துடன் கைகோர்த்து தேர்தலை சந்திப்பது என்ற ரீதியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வகுத்திருக்கும் தேர்தல் வியூகமானது முற்போக்கின் உச்சம். நாடாளுமன்றத் தேர்தலின்போதே சி.பி.எம். கட்சியினர் நள்ளிரவில் விஜயகாந்தை தேடிச் சென்று கூட்டணிக்கு கை நீட்டினார்கள். “நான்தான் கூட்டணிக்குத் தலைவர். அதற்கு ஒப்புக்கொண்டால் அடுத்த விஷயத்தைப் பேசலாம்” என்று கறாராக விஜயகாந்த் பேச, மின்அதிர்வு ஏற்பட்டதுபோல வெடுக்கெனக் கையை உதறிக்கொண்டு வெளியே வந்தார்கள் தோழர்கள். அதன்பிறகும், இந்த முயற்சி முடிந்துவிடவில்லை.

அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளுடன் தே.மு.தி.கவையும் இணைத்து மக்கள் இயக்கம் கட்டப் போகிறோம் என்றார் சி.பி.எம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். சி.பி.ஐ.யின் தா.பாண்டியன் மட்டும் சும்மா இருப்பாரா? பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து நாடுதழுவிய அளவில் நடைபெறும் போராட்டத்தில் தே.மு.தி.க.வும் பங்குபெற அழைக்கிறோம். பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தார். விஜயகாந்த்தோ, தான் நடித்து இயக்கும் விருதகிரி படத்திற்கான படப்பிடிப்பில் காட்டிய கவனத்தில் கடுகளவுகூட விலை உயர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தின் திசை நோக்கி காட்டவில்லை. மன்மோகன்சிங் அரசின் அநியாய விலையேற்றத்தை காங்கிரஸ் - தி.மு.க.வினர்கூட வெளிப்படையாக எதிர்க்க முடியாமல் பொருமிக் கொண்டிருக்கிறார்கள். ‘இன்றைய எதிர்க்கட்சி, நாளைய ஆளுங்கட்சி’ என்று ஊடகங்களால் ஊதப்படும் விஜயகாந்த்தோ மக்கள் பிரச்சினையைவிட ஷூட்டிங்கே முக்கியம் என இருந்துவிட்டார். போராட்டத்திற்கு ஆதரவா, எதிர்ப்பா என்பதைக்கூட கடைசிவரை சொல்லாத தமிழகத்தின் ஒரே அரசியல் தலைவர் விஜயகாந்த்தான். இதுதான் கம்யூனிஸ்ட்டுகளைக் கவர்ந்திருக்கிறதோ!

விஜயகாந்த்தின் போராட்ட முறைகள் விசித்திரமானவை. என் கட்சிக்காரர்களை தெருவில் இறக்கி போராடவிடமாட்டேன் என்று கட்சி ஆரம்பித்தபோது சொன்னவர் அவர். ஆனால், தன்னுடைய கல்யாண மண்டபம், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் வசதியாக - சாலை மேம்பாட்டிற்காக இடிக்கப்படுகிறது என்றதும் அதனைப் பாதுகாக்கச் சொல்லி தொண்டர்களை களத்தில் இறக்கிப் போராடச்செய்து இடிபட்ட மண்டபத்திற்கான நட்ட ஈட்டுத் தொகையை வாங்கிக்கொண்டார். அதன்பிறகு மக்கள் பிரச்சினைக்காக அவரது மனைவி தலைமையில் ஒரு போராட்டம் நடந்தது. ஞாயிற்றுக்கிழமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த போராட்டம் அது. “ஆளில்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துறே.. உன் கடமையுணர்ச்சிக்கு அளவேயில்லையா?” என்ற விவேக் காமெடிபோல, அதிகாரிகளோ-ஊழியர்களோ-பொதுமக்களோ இல்லாமல் பூட்டிக்கிடந்த ஆட்சியர் அலுவலகம் முன்தான் அம்மணியும் அவரோடு அழைத்து வரப்பட்டவர்களும் சவுண்டு விட்டுக் கொண்டிருந்தார்கள். இதுதான் தே.மு.தி.க நடத்திய போராட்டங்களின் வீரவரலாறு.

சவுக்கடிக்கும் சாணிப்பால் சித்ரவதைக்கும் எதிராக விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டி அணி அமைத்து போராடி அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்தது கம்யூனிஸ்ட் இயக்கம். பஞ்சாலைத் தொழிலாளர்கள் - நெசவாளர்கள் - அரசு ஊழியர்கள் ஆகியோரின் உரிமைகளுக்காகவும் பஸ்கட்டண உயர்வு - கல்விக்கட்டணக் கொள்ளை போன்றவற்றை எதிர்த்து இன்றும் வீரியமிக்க போராட்டங்களை நடத்தும் தோழர்கள், ஞாயிற்றுக்கிழமையில் பொழுதுபோகவில்லையே என ஒரு போராட்டத்தை நடத்திய கட்சியின் தலைமையில் சோசலிசப் புரட்சியை உருவாக்கிட முடியும் என நம்புவதுதான் விசித்திரமாக இருக்கிறது.

கடவுளை நம்பியோர்கூட ஒரு சில கட்டங்களில் நம்பிக்கை இழப்பதுண்டு. கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் நம்பிக்கைகளிலிருந்து விலகுவதில்லை. புரட்சித்தலைவர் என்ற அடைமொழியைக் கொண்டதாலேயே எம்.ஜி.ஆர்.தான் தமிழகத்தில் பொதுவுடைமைப் புரட்சி செய்யப்போகிறார் என்று அவருக்கு பக்கபலமாக நின்றவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

கேப்டலிசம் + கம்யூனிசம் + சோஷலிசம் = அண்ணாயிசம் என்று இதுவரை பொழிப்புரை - பதவுரை- தெளிவுரை எதுவுமே எழுத முடியாத சித்தாந்தத்தை தந்த எம்.ஜி.ஆருக்கும் அவரது கட்சிக்கும் நற்சான்று பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தருவதுபோல செயல்பட்டு 1977லிலும் 1980லும் அ.தி.மு.க ஆட்சி அமைய துணை நின்றவர்கள் தோழர்கள். அந்த அண்ணாயிசக் குழப்பம் இன்று அம்மாயிச ஆபத்தாக மாறிவிட்ட நிலையிலும் அ.தி.மு.க மீது நம்பிக்கை வைத்து ஒரே மேடையிலோ, தனி மேடையிலோ ஆதரித்தே தீருவோம் என்று ஒற்றைக்காலில் நிற்கும் தோழர்கள், தங்களின் புதிய முற்போக்குப் பாதையாக கேப்டலிசத்தை எதிர்ப்பதற்கு கேப்டனிசமே சரியானது என்ற முடிவுக்கும் வரலாம். அவர்களின் நம்பிக்கை அப்படிப்பட்டது.

 சில வேளைகளில், மூடநம்பிக்கையை விடவும் ஆபத்தானதாக அமைந்துவிடுகிறது முற்போக்காளர்களின் நம்பிக்கை.

- கோவி.லெனின் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

18 comments

18
புரச்சி
போலி கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்த ஜெயலலிதாவுக்கு எதிரான ஆதாரங்களை அவர்களது வெளியீடுகளிலிருந்தே எடுக்கலாம். இதோ ஒரு ஆதாரம்:

//இன்றைக்கு காங்கிரஸை எதிரி என்று சொல்லும் இவர்கள் இதே வாயால் நேற்று அதிமுகவை எதிரி என்று சொன்னார்கள். அதுவும் எப்படிப்பட்ட எதிரி என்பதை அந்த சமயத்தில் அவர்கள் வெளியிட்டிருந்த சிறு கையேட்டில் காணக் கிடைக்கிறது:

"மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற தமிழகத்தை ஆளும் செல்வி ஜெயலலிதா அம்மையார் இன்று சங் பரிவாரங்களின் ஊதுகுழலாக மாறியுள்ளார்"

"இனப் படுகொலைக்கு பின்னரும் நரேந்திர மோடி முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஒரே முதல்வர் செல்வி ஜெயலலிதாவாகும்"

"இது பிஜேபிக்கும், அதிமுகவுக்கும் இடையே உள்ள உறவை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்தது"

(ஆதாரம்: இந்தியா: எந்த திசையில்? ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு கேட்க்கும் CPIயின் சிறு கையேடு)
http://poar-parai.blogspot.com/2008/12/cpi.html
//
R Kanthasamy
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த தோழர்கள் காலம் மட்டுமே உண்மை கம்யூனிச கட்சி காலம். தற்போது குட்டி முதலாளித்துவ சிந்தனையாளர்கள், அப்பர் மிடில் கிளாஸ் ஆசாமிகள், சிறு கந்து வட்டிக்காரர்கள், கேரியரிஸ்டுகள், தன்னங்காரவாதிகள், சாதிபித்தர்கள் போன்றவர்களும் உறுப்பினர்களாகக் கொண்ட கட்சியாகத்தான் திகழ்கிறது.. தப்பித் தவறி சில நல்ல தோழர்கள் இருந்தும் என்ன பயன்....? ஓரு கூடை பழத்தில சில அழுகல் பழம் என்ன வேலை செய்யுமோ அதுதானே நடக்கும் ...வேறு எப்படி இருக்கும்... அதற்குத் தலைமை தாங்கும் தலைவர்கள் ஒழுங்காக ’லெவி’ கட்டுகிறானா என்று பார்த்தால் போதும் என்றுதானே நினைப்பார்கள் ... நான் பல பூர்ஸ்வா கட்சித் தலைவருடன் விமானத்தில் பறக்க வேண்டும் ஓட்டலில் தங்க வேண்டும்.. நீ கொடுக்க வேண்டிய நன்கொடை லெவி கொடுத்துவிட்டு உன் வேலையைப் பார் என்றுதானே சொல்வார்கள்.. எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.. ஒன்றே ஒன்று கம்யனிஸ்ட் கட்சி என்ற பெயரை மட்டும் மாற்றித் தொலைக்கலாம்... நம்ம அம்மா ஆயிரம் மடங்கு பிஜேபியாக இருந்து கொண்டு தன் மேடையில் பெரியார் படத்தைப் போட்டுக் கொள்வதைப் போல........
புதூர் சிபி
தோழர் கோவி.லெனின், கம்யூனிஸ்ட்டுகள் மீது உள்ள அக்கறை காரணமாக இக்கட்டுரையை எழுதியிருந்தால் வரவேற்றிருக்கலாம்.ஆனால், தமிழகத்தில் திமுகவைக் காப்பாற்றும் நோக்கில், அடுத்து அவர்களது ஆட்சிக்கு எதிராக எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்துள்ளார். அதன் அடிப்படையிலேயே கட்டுரையையும் தீட்டியுள்ளார்.
//"மன்மோகன்சிங் அரசின் அநியாய விலையேற்றத்தை காங்கிரஸ் - தி.மு.க.வினர்கூட வெளிப்படையாக எதிர்க்க முடியாமல் பொருமிக் கொண்டிருக்கிறார்கள்."//
பெட்ரோலியப்பொருட்கள் விலை உயர்வுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் இடதுசாரிகள் போராட்டம் நடத்திய போது, விலை குறைக்க முடியாது என வீராப்போடு பேசியவர் தான் கருணாநிதி. தமிழகத்தில் திண்டுக்கல், சிதம்பரம், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கொலைவெறியோடு தாக்கிய திமுகவினர், எதிர்க்கமுடியாமல் பொருமிக்கொண்டிருக்கிறார்கள் என பில்டப் செய்கிறார்.
ஜெயலலிதா எப்போதும் மதச்சார்புள்ள கருத்தை வைத்துள்ளவர் என்பதை யாரும் மறக்க முடியாது. ஆனால், தந்தை பெரியாரின் வாரிசு எனக்கூறிக் கொள்ளும் முதல்வர் கருணாநிதி, சுத்த சுயம்பா என்ற கேள்வியையும் இக்கட்டுரையில் எழுதியிருந்தால் கட்டுரையாளரின் நேர்மையைப் பாராட்டியிருக்கலாம். பண்டாரம், பரதேசி என பேசிக்கொண்டே பாஜகவோடு தோளோடு தோள் நின்று மத்திய அரசில் பதவி சுகம் அனுபவித்த கட்சி தானே திமுக? கருணாநிதியின் நாக்கைத் துண்டிப்பேன் என மதவெறியன் கூறிய போது, அதற்கு எதிராக சினந்து எழாத திமுகவினர், விலைவாசியைக் குறைக்க வேண்டும் என போராடுபவர்களைக் குறி வைத்து தாக்குகிறார்கள். அவர்களோடு கம்யூனிஸ்டுகள் கூட்டணி சேர வேண்டும் என கோவி.லெனின் கூறவருகிறாரா?
விஜயகாந்த் தங்களுடைய கூட்டணிக்கு வரவேண்டும் என திமுக இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லையா? மத்திய ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் விஜயகாந்த் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அக்கூட்டணியில் உள்ள திமுகவை, கேப்டனிசம்+ கதரிசம்= அண்ணாயிசம் என விமர்சித்தாரா கட்டுரையாளர்?
கலைஞரின் தோளே மஞ்சளோ என நினைக்கும் வகையில் பகுத்தறிவில்(!) மூழ்கியுள்ள அவரின் நம்பிக்கை லெனினுக்கு முற்போக்கு நம்பிக்கையாகத் தெரிகிறது போலும்!
முற்போக்காளர்களின் முதுகில் ஏறி நின்று கடந்த ஆட்சியின் போது , கேட்ட பதவி கிடைக்காததால் கோபித்துக் கொண்டு கிளம்பிய கருணாநிதியின், முகவிலாசம் அனைவரும் அறிந்தததே. அது போலவே முற்போக்காளர்களின் முகவிலாசம் அவர்களுக்கு நன்றாகவேத் தெரியும்.
R Kanthasamy
அய்யா புதுர் சிபி.. இதுதான் அனைத்து வலது இடதுகள் அடிக்கடி கூறிக் கொள்வது... அய்யா உங்களிடன் சில நோய்க் கிருமிகள் இருக்கின்றது என்ற உடன்... யோவ் அவன் கிட்ட இல்லையா இவன் கிட்ட இல்லையா,.. என்ன மட்டும் சொல்லிறியே என்று பாய்ந்து பிடுங்குவது பல தோழர்கள் வழமையாக கொண்டுள்ளதைத்தான நீங்களும் செய்கிறீர்கள்.. இறுதியில் ’ இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்..’ கதை ஆவதில்தான் முடியும்... சரி கருணா பெரியார் பெயரை வைத்து ஏமாற்றுகிறார் நீங்கள் மார்க்ஸ் பெயரை வைத்தா...?
moses prabhu
excuse me mr.kanthasamy..... communistugaluku makkalai kaapattra vendum endra adipadaiyil than koottani vaikiraargal.... ne solvadhu pol sunalathukaaga alla.......kalathil erangi poraadubavargaluku theriyum ungala madhiri summa ezhudruvangaluku theriyaadhu....kootaniyin mukkiyathuvam.
SK
The left supported the UPA-I to keep the BJP out of power. The UPA-I had taken up some people welfare measure thanks to the left. When UPA-I decided to go for 123 agreement with the US the left withdrew the support and fighting against the nuclear liability bill, the UPA-II still wants to go ahead even after Bhopal judgment. Read the news paper who organize meetings and rallies and signature camping against the Bhopal judgment. Does ,the author of this article, Lenin expect the working class to over throw the bourgeois government with arms revolution? If so you can evaluate the conditions by 'Walking with the Comrades', please do. The Left(in electoral path) has understood that the parliamentary path is a tactical line. If Lenin wants to advice he can advice the bourgeois parties how to run the bourgeois government to Karuna or Manmohan . The left have their own line to over throw the bourgeois government. Write something about meter interest, corruption, murders and politicians-businessmen- bureaucrat nexus in corruption in Karunanidhi govt. How the DMK govt. took the by elections? Is it by explaining their people welfare measures? No Lenin, it's by money they won. When Telecom minister Raja has been bombarded by the left parties in his involvement in spectrum scam he says that he implemented the policies of the previous government if he's to implement the policies of the previous govt. then why he sits as the minister he can ask someone from the previous govt. to take up the ministry. The working class can't reconcile with the bourgeois class in the capitalist mode of production. India as a bigger middle class country has it's own challenge which will be dealt by the working class and the working class party appropriately you(Lenin) need NOT to worry until that the left will choose their electoral partners.
R Kanthasamy
////kalathil erangi poraadubavargaluku/////

OKOK.. Athaan Nooru Aandu kaalam kalathil irukiraargal....(indiyaavil katchi aarambithu 100 aandugal aayiru) avargal puratchi mudikka ini oru 10000 aandugal aagum... ungalai pol enakku porumai illai (ungalai pol - unnai pol illai).... manniyungal maha prabhooo
Edwin Prabhakaran
hello comrades! can you people condemn communist kerala government for not giving water in mullai periyaar river issue. please dont try to cheat people like karunaanidhi
nagasundaram
கோவி.லெனினை விட அதிகமாகவே ஜெயலலிதா, கருணாநிதி விஜயகாந்த் ஆகியோர் குறித்தும் அவர்களது அரசியலின் முரண்பாடுகள் வேடங்கள், முறைகேடுகள், மக்கள்விரோதச் செயல்பாடுகள் எல்லாம் குறித்து இடது சாரி கட்சிகளுக்கு நன்றாகத் தெரியும். கூரை தீப்பற்றி எரியும் போது சாக்கடை நீராக இருந்தாலும் வாரி இறைத்து தீயை அணைப்பது போலத்தான் இடது சாரிகள் இக்கட்சிகளுடன் தேர்தல் நேரத்தில் மட்டும் மேற்கொள்ளும் ,முரண்பாடுகளுக்கு இடையிலான சில பொருத்தப் பாடுகள் கருதி மேற்கொள்ளும் உடன்பாடுகள். இந்த அவஸ்தைகள் எல்லாம் இந்த பேப்பர் புர்ர்ர்ரர்ரட்சியாளர் களுக்கு ஒரு மண்ணும் புரியாது. ஒரு சமயம் புரிந்து கொண்டாலும் இந்த 'வோட்டுப் பொறுக்கிகளோடு கைகோர்த்துக் கொண்டு பன்றி தொழுவமான பாராளுமன்றத்திற்குப் போகும் இந்த இடதுசாரி கட்சிகளை லெப்ட்& ரைட் வாங்கி விட்டோம் "என்னும் பொய்யான அற்ப மகிழ்ச்சி அடைவீர்கள்.
உங்களால் ஆனது அவ்வளவுதான். கல் விட்டு எறிவதுதான் உங்கள் வேலை. கல்லையோ பூவையோ கையில் எடுத்துக் கொண்டு இருப்பதை விட ஓரடியாவது முன்னேற ,பயணம் மேற் கொள்வதுதான் இடதுசாரிகளின் கடமை. நாம் விரும்பாவிட்டாலும் நம்மை விட மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிற முதலாளித்துவ ,போலி ஜனநாயகக் கட்சிகளிடம் இருந்து "எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் " என்பது போல மக்கள் நலனுக்கான சில செயல்களாவது பலநூறு மக்கள் விரோதச் செயல்களுக்கு இடையில் நடைபெற்றிட வழி காண்பதுதான் இந்திய அரசியலில் சாத்தியமான அணுகு முறை. இந்த அணுகு முறை யை எதிர்த்து பேபர் புரர்ர்ர்ரட்சியை கனாக் கண்டு கொண்டு இடதுசாரி கட்சி களை எதிர்க்கும் நீங்கள்தான் மக்கள் நலனுக்கு எதிரானவர்கள். இடதுசாரித் தத்துவம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்துபவர்கள். சமுதத்தின் படிப்படியான முன்னேற்றத்தை தடுப்பவர்கள். இப்படி சண்டை போட்டுக்கொள்ளும் இடதுசாரி தத்துவத்தை விட முதலாளித்துவக் கட்சி களே மேல் என்று மக்கள் என்னத்தை திசை திருப்புபவர்கள் உங்களைப் போன்ற பேப்பர் புரர்ர்ர்ரட்டாளர் கள்தான் .
Edwin Prabhakaran
திருவாளர் நாகசுந்தரம் அவர்களே, முல்லை பெரியாற்றில் தண்ணீர் தராமல் இருப்பது தான் உங்கள் கட்சியின் marxism ஆ? இதை பற்றி உம்மால் என்ன விளக்கம் கூற முடியும்.
NAGASUNDARAM
நண்பர் எட்வின் அவர்களே! சும்மா திசைதிருப்பாதீர்கள் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழக மார்க்சிஸ்டுகள் யாரும் தமிழக நலனுக்கு விரோதமான நிலைப்பாடு எடுக்கவில்லை.எல்லா மாநிலங்களும் நதிநீர்,மாநில எல்லைப் பிரச்சனைகளில் மாநில உணர்வை ஊட்டி வளர்த்துள்ளன.அவற்றை நீதிமன்றத் தீர்ப்புகள்,மத்திய அரசின் நியாயமான தலையீடு மூலமே தீர்க்கமுடியும் அதை விட்டுவிட்டு இடதுசாரிகளின் மற்ற மக்கள் நலச் செயல் பாடுகளைஎல்லாம் மறைப்பதற்கான கேடயமாக அதைப் பயன்படுத்தாதீர்கள்.
ஐ.மனோகரன்
தமிழக மார்க்சிஸ்டுகள் யாரும் தமிழக நலனுக்கு விரோதமான நிலைபாடும் எடுக்கவில்லை
ஆதரவான நிலைபாடும் எடுக்கவில்லை. தொடர்ந்து கள்ள மௌனம் சாதித்து கொண்டு தான்
தமிழக மார்க்சிஸ்டுகள் இருகின்றனர்.
உச்ச நீதிமன்றம் தான் முல்லை பெரியாறு பிரச்சனயில் தெளிவான தீர்ப்பை கூறி விட்டதே, தேசிய கட்சி என்கிற போர்வையில் கட்சி தலைமை என்ன பங்காற்றியது?

மக்களின் வாழ்வாதார பிரச்சனயில் தொடர்ந்து இரட்டை வேடம் போடுவதை தவிர்க்கவும்
moses prabhu
neengal solvathu muttrilum thavaru...N.Varadaarajan comrade appothae ucha needimantra theerpai kerla arasu amal padutha vendum endru koorinaar...
ucpisundar
It is the failure of the communist parties, in Tamilnadu as well as in India, in understanding and applying Marxism to the present situation, gave such bad oppinion about the communists. Firstly India is not one state, secondly it should have gone to the federal structure step by step, for that communists should have worked.Under this constitution the communist can not change the social system, as they wish.Instead of weakening the strength of the state, by de centralising the political power,they have strengthened the state structure by their movement and calls.More over after the 73,74,th amendment of the constitution even the communist ruled states are not ready to share power with the people or panchayets. Com.E.M.S. said " If at the level of centre-state relations the constitution gave us democracy, at the level of state-panchayet relations the constitution gave us bureaucracy." Did the communists tried to change it while they are in state power? Mahatma Gandhi well said," India's independence must begin at the bottom. Every village will be arepublic of panchayet having full powers. The greater the powers to the panchayets the better for the people." Did any Gandhian or communist followed their saying?
[email protected]
N.Varadaarajan comrade கூறிவிட்டதை தொடர்ந்து பிரச்னை முடிந்து விட்டது அப்படிதானே.
பாதிக்கபடுகிற மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை அல்லவே பாடு பட வேண்டும்.

அது தானே அரசியல் கட்சிகளின் தொழிலும் செயல் திட்டமும். உங்களது சக தோழர்கள் கேரளாவில் நியாயத்திற்கு புறம்பாக திறம்பட செயல் படும் போது உங்களால் நியாயத்திற்கு வலுவாக குரல் குடுக்க முடிய வில்லை ஏன்?

தேசிய கட்சிகள் என்று சொல்லிகொள்ளும் அனைத்து கட்சிகளும் நதி நீர் விடயத்தில் தமிழர்களின் முதுகை தான் குத்துகிறார்கள்.
ஐ.மனோகரன்
கருணாநிதி வரையாத கடிதமா.
ஜெயலலிதா நடத்தாத போராட்டமா.
அது அல்ல. தீர்வு கிடைத்திருக்கிறதா? அது தானே பாதிக்கபடுகிற மக்களுக்கு பயன் படும்.

இதை கேட்டால் நீதி மன்றம் இருக்கு என்கிறீர்கள்.
மத்திய அரசு இருக்கு என்கிறீர்கள். அப்படி பார்த்தால் மாநிலங்களில் உள்ள பிரச்னைகளுக்கு கூட நீதி மன்றம் இருக்கிறது காவல் நிலையங்கள் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மாநில அரசு இருக்கிறது.
எதற்கு ஆர்பாட்டம்?
புரச்சி
//கூரை தீப்பற்றி எரியும் போது சாக்கடை நீராக இருந்தாலும் வாரி இறைத்து தீயை அணைப்பது போலத்தான் இடது சாரிகள் இக்கட்சிகளுடன் தேர்தல் நேரத்தில் மட்டும் மேற்கொள்ளும் ,முரண்பாடுகளுக்கு இடையிலான சில பொருத்தப் பாடுகள் கருதி மேற்கொள்ளும் உடன்பாடுகள். இ//

இதுல கூரை, தீ, சாக்கடை என்று சில விசயங்களை தெரிவித்துள்ளார்.

சாக்கடை என்று எதைக் குறிப்பிடுகிறார் என்றால் திமுக, அதிமுக இரண்டுமே சாக்கடை அதில் எந்த சாக்கடை அப்போதைக்கு அவலைபிலோ அதை ஓற்றி தீ அணைப்போம் என்று.

உண்மையில் இந்திய ஜனநாயக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதற்கான அடிகொள்ளிகள், பெட்ரோல் எரிபொருளே திமுக, அதிமுகதான். போலிகள் சொல்கிறபடி சாக்கடை என்று திமுக, அதிமுகவினரை எடுத்துக் கொண்டால் இந்திய ஜனநாயக(??)த்திற்கு சம்பந்தமில்லாமல் அவர்கள் எங்கோ ஒரு ஓரத்தில் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை இங்கு. நாட்டைச் சீரழிக்கும் அடிகொள்ளிகளே அவர்கள்தான்.

போலிகள் சொல்வதை இப்படி வேண்டுமானால் புரிந்து கொள்ளலாம். எரியும் கூரைக்கு இன்னும் கொஞ்சம் தீ மூட்ட வசதியாக கிடைக்கிற கொள்ளியை எடுத்து செருகுகிறோம். இதுவே எங்களது புரட்சிகர ஜனநாயக கடமை என்று. நல்ல கடமை. தொடர்ந்து செய்யுங்கள்.
baappu
திமுக வுக்காக கொவி.லெனின் எழுதிய‌ கட்டுரைக்கு வக்காலத்து வாங்கி பொறுமையில்லா உடனடி புரட்சிக்காரர்களின் பதிவுகள் யதார்த்தத்தை மறுதலிப்பதாகவே உள்ளது. தமிழக திராவிட கட்சிகளுடனும் மற்ற முதலாளித்துவ, வகுப்புவாத, ஜாதிய கட்சிகளுடனும் இருக்கும் மக்களை இடதுசாரி அரசியலின்பால் வென்றெடுப்பதுவரை தற்காலிகமான அரசியல் கூட்டணிகள் அமைப்பதை தவிர வேறு வழியில்லை.

நதிநீர் பிரச்சனைகளுக்கு நீதிமன்றங்கள் கொடுக்கும் தீர்வுகளை அமுல்படுத்துவதுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியல் தீர்வையும் காண வேண்டும். மட்டுமல்ல அந்தந்த பகுதிகளின் அனைத்து வாய்ப்புகளையும் அறிவியல் முறைப்படி பயன்படுத்தி தண்ணீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.