‘தேசபக்தர்’கள் வைத்திருக்கும் அளவுகோல்கள் அதிசயமாக அளவிடுகின்றன. வெள்ளையரின் ராணுவத்தில் சம்பளத்திற்கு வேலை  பார்த்து, மாட்டுக் கொழுப்புச் சர்ச்சையை முன்னெடுத்த மங்கள்பாண்டே சுதந்திரப் போராட்ட வீரர். வெள்ளையருக்கு எதிராகப் போர் புரிந்து மரணம் அடைந்த திப்புசுல்தான், தேசத் துரோகி. ஏன்?

tippusultanமங்கள்பாண்டே, பிறப்பால் இந்து. திப்பு, ஒரு முஸ்லிம். இதுதான் அவர்களின் அளவீடு. திப்புசுல்தானின் 265வது பிறந்தநாள் விழாவைக் கர்நாடக அரசு கொண்டாடியபோது, அங்கே கலவரம் உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் திப்பு விழா கொண்டாட மாநிலக் காவல்துறை அனுமதி மறுக்கிறது. நாட்டை ஆளும் பா.ஜ.கவும் அதன் பரிவாரங்களும் திப்புவைத் தேசத்துரோகி என்கின்றன. ராமகோபாலனாக இருந்தாலும் ஹெச்.ராஜாவாக இருந்தாலும் அதையேதான் தமிழகத்தில் வழிமொழிகிறார்கள். கன்னடப் படத்தயாரிப்பாளர் அசோக் கெனி, நடிகர் ரஜினிகாந்த்தை நடிக்க வைத்து திப்பு சுல்தான் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்க விரும்புவதாகத் தெரிவித்தபோது, இங்கே எதிர்ப்புக் குரல் வெளிப்பட்டது.

திப்புசுல்தான் இந்துக்களைத் துன்புறுத்தினார் என்றும், தன் ஆட்சியில் கீழ் இருந்த மக்களை முஸ்லிம்களாக மாற்றினார் என்றும், பிரிட்டிஷாருக்கு எதிராக அவர் நடத்திய போர் என்பது சுதந்திரப்போராட்டமல்ல, தனது நாட்டைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகம்தான் என்றும் பா.ஜ.க பரிவாரத்தினர் விளக்கங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள்.

மைசூரை ஆண்ட ஹைதர்அலியின் மகனான திப்புசுல்தான் (1750&-99) பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைப் படிக்கும்போது இந்து மதத்தினருடன் அவர் நட்புப் பாராட்டிய நிகழ்வுகளும் இருக்கின்றன. இந்து மன்னர்களின் கீழ் இருந்த ராஜ்ஜியங்கள் மீது படையெடுத்துக் கைப்பற்றிய நிகழ்வுகளும் இருக்கின்றன. சிருங்கேரி சாரதா மடத்திற்குச் சொந்தமான இந்துக் கோவிலை இந்து மன்னர்களான மராட்டியர்கள் 1791ல் கைப்பற்றிக் கொள்ளையடிக்க முனைந்தபோது, அதனைக் காப்பாற்றியவர் திப்பு என்கிறது வரலாறு. 

தனது தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இருந்த கோவிலைப்  பராமரித்ததையும் காண முடிகிறது. திப்புவை இந்து மதவிரோதி என்பவர்களோ மலபார்-கொச்சின் மீது படையெடுத்தபோது அங்கிருந்த இந்துக்களை விரட்டினார், முஸ்லிம்களாக மாற்றினார், இந்துகோவில்களை சிதைத்தார் என்கிறார்கள். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள்கூட திப்பு படையினரால்தான் கொங்கு மண்டலத்திலிருந்து கேரளாவுக்கு விரட்டப்பட்டார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

வாள்முனையில் விளைந்த ராஜ்ஜியங்கள் எல்லாவற்றிலும் வலுத்தவனின் மதமே அந்தந்தக் காலத்தில் நிலைபெற்றிருந்ததை வரலாற்றின் நெடுகிலும் காண முடியும். எண்ணாயிரம் சமணர்களைக் கழுமுனையில் ஏற்றியதும் இந்த மண்ணில் ஆட்சி செய்த வாள்முனைதான். வைணவத்தை ஒடுக்கிச் சைவத்தை நிலைநாட்டவும் தமிழ்நிலத்தில் வாள்முனை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உழைப்பவர்கள் வெளியேற்றப்பட்டு அவர்களின் நிலங்கள் சதுர்வேதி மங்கலங்களாக மாறியதும் வாள்முனையில் ஆண்டவர்களின் வரலாற்றுக் காலத்தில்தான்.

மன்னராட்சிக் காலத்தின் ‘நீதி’யை சீர்தூக்கிப் பார்த்தால் எந்த அரசனும் மிஞ்ச மாட்டான். சந்திரகுப்தனுக்கும் ராஜராஜசோழனுக்கும்கூட இந்த அளவுகோல் பொருந்தும். ஆனால், திப்புவை மட்டும் இலக்காக்கி அவனைத் தேசத்துரோகியாக்கப் பார்க்கிறது பா.ஜ.க பரிவாரம். வெள்ளையரை எதிர்த்த இந்திய அரசர்கள் பலரின் சொந்தக் குடிமக்கள் என்ன நிலையில இருந்தார்கள் என்பது ஆய்வுக்குரியது. ஆட்சியதிகாரத்தில் யார் இருந்திருந்தாலும் மக்களை ஆட்சி செய்தது, மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் பிரித்து வைத்த வர்ணாசிரமம்தான். மீண்டும் அதே ஆட்சியே நீடிக்க வேண்டும் எனத் திட்டமிடுகிறார்கள் இந்தியாவின் இன்றைய ஆட்சியாளர்கள்.

ஒரே மதம்-அது இந்து மதம். ஒரே மொழி- அது சமஸ்கிருதம். ஒரே சட்டம்- அது வருணாசிரமம். இதைத்தவிர்த்த  மற்ற அனைத்தையும் வேரறுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கோட்சேக்களைக் கொண்டாடுகிறார்கள். காந்தி, பெரியார், அம்பேத்கர் எனத் தொடங்கி இன்று திப்பு வரை எதிர்க்கிறார்கள். இந்துத்வத்தின் வெளிப்படையான முகம் மத்திய அரசு என்றால், அதன் மறைமுகம் தமிழகத்தை இன்று ஆளும் அரசு. அதனால்தான், திப்பு விழாவுக்கு இங்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. வரலாற்றின் பக்கங்களை அதிகாரத்தால் கிழித்தெறிய முடியாது. அதிகாரங்களைத்தான் வரலாறு கிழித்துத் தள்ளியிருக்கிறது

Pin It