ஈழத்தமிழர்களே, ஈழ ஆதரவாளர்களே...

இவ்வெளியீடு இரண்டு சிறு பகுதிகளாக பிரித்து வெளியிடப்பட்டுள்ளது. முதல் பகுதி பொதுசனவாக்கெடுப்பு தொடர்புடைய சில கருத்துக்களை கேள்வி - பதில் முறையில் விளக்கி வந்துள்ளது. இரண்டாவது பகுதி பொதுவாக்கெடுப்பு ஈழ விடுதலைக்கான அரசியல் பாதை என்ற எமது முந்தைய வெளியீட்டின் மீது தமிழ் ஈழ ஆதரவு முன்னணியினர் முன் வைத்துள்ள - பொதுவாக்கெடுப்பு ஈழப்போராட்டத்தை காயடிக்கும் சந்தர்ப்பவாதக் கோரிக்கை என்ற வெளியீட்டின் - விமர்சனங்களுக்கு எமது விளக்கங்களை அளித்து வந்துள்ளது. மேற்கூறிய இரு வெளியீட்டையும், வாசிக்காதவர்கள் கூட புரிந்து கொள்ளும் விதத்திலே இரண்டாவது பகுதி வெளி வர கவனம் செய்யப்பட்டுள்ளது. எனவே இவ்வெளியீடு பொதுசனவாக்கெடுப்பிற்கான விளக்கங்களையும், (பொதுவாக்கெடுப்பு எனும் வார்த்தை வாசகர்களின் கூடுதல் புரிதலுக்காக பொதுசனவாக்கெடுப்பு என அதே பொருளுடன் மாற்றப்படுகிறது) அது குறித்த ஆரோக்கியமான விவாதங்களையும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

பொதுசனவாக்கெடுப்பு - சில கேள்வி பதில்கள்

1. பொதுசனவாக்கெடுப்பு - ஈழப் பிரிவினையை கைவிடுவதாகுமா?

பொதுசனவாக்கெடுப்பு என்பது ஈழமக்களிடம் ஈழப்பிரிவினையா? ஒன்றுபட்ட இலங்கையா? என்று ஒரு வாக்கெடுப்பு நடத்தி, அவர்களின் அரசியல் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் அரசியல் உரிமையாகும். பொதுசனவாக்கெடுப்பு நடத்தப்பட்டால், ஈழ மக்கள் பிரிவினைக்கே வாக்களிப்பார்கள். அந்த வகையில் ஈழத்திற்கான சாத்தியப்பாட்டையே பொதுசனவாக்கெடுப்பு முழுமையாக உள்ளடக்கி உள்ளது என்பது தர்க்கப்பூர்வமாகும். பிறகு எப்படி ஈழத்தைக் கைவிடுவதாக பொதுசனவாக்கெடுப்பு இருக்க முடியும்?

மேலும், பிரிவினை கோருபவர்களே உலகமெங்கும் பொதுசனவாக்கெடுப்பை கோருகிறார்கள். எனவே பொதுசனவாக்கெடுப்பு எங்குமே பிரிவினையின் ஆயுதமே தவிர, பிரிவினையைக் கைவிடுபவர்களின், மறுப்பவர்களின் ஆயுதமாக இருக்க முடியாது.

2. பொதுசனவாக்கெடுப்பு - ஈழத்திற்கான மாற்றா?

மாற்று இல்லை. ஏனெனில் ஈழம் என்பது இலக்கு, பொதுசனவாக்கெடுப்பு என்பது வழிமுறை, ஒரு இலக்கிற்குப் பதிலாக அந்த இடத்தில் இன்னொரு இலக்கு வைக்கப்பட முடியும். ஒரு வழிமுறைக்குப் பதிலாக அதன் இடத்தில் இன்னொரு வழிமுறை வைக்கப்பட முடியும். ஆனால் ஒரு இலக்குக்குரிய இடத்தில் எந்தவொரு வழிமுறையும் மாற்றாக வைக்கப்பட முடியாது. எனவே பொதுசனவாக்கெடுப்பு என்ற வழிமுறை, ஈழம் என்ற இலக்கிற்கு மாற்றாக வைக்கப்பட முடியாது. எனவே பொதுசனவாக்கெடுப்பு என்பது ஈழத்திற்கான மாற்று இல்லை, ஈழத்திற்கான வழிமுறை.

3. தனி ஈழக் கோரிக்கைக்கும், பொதுசனவாக்கெடுப்பு கோரிக்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

ஈழம் என்பது இலக்கு. பொதுசனவாக்கெடுப்பு என்பது வழிமுறை. இவ்விரண்டுக்கும் இடையிலான வேறுபாடு என்பது ஒரு இலக்கிற்கும், அதன் வழிமுறைக்கும் இடையிலான வேறுபாடு ஆகும். இலக்கையே (ஈழம்) கோரிக்கையாக வைக்கும்போது அக்கோரிக்கையில் இலக்கு வெளிப்படையாக இருக்கும். அதற்கான வழிமுறையை கோரிக்கையாக வைக்கும் பொழுது (பொதுசனவாக்கெடுப்பு) இலக்கு அதன் உள்ளீடாக இருக்கும். இலக்கும், வழிமுறையும் என்பது ஊரும், பாதையும் போன்றது. இலக்கிற்கும், அதன் வழிமுறைக்கும் உள்ள வேறுபாடு என்பது ஒன்றை ஒன்று நிராகரிக்கும் முரண்பாடுகள் அல்ல. எந்தவொரு இலக்கும், வழிமுறையும் முரண்பாடாக இருந்தால் அவை, 'இலக்கும், வழிமுறையும்' என்ற உறவுடையதல்ல.

4. பொருத்தமற்ற வழிமுறை என்ற வகையில் பொதுசனவாக்கெடுப்பு ஈழத்தைக் கைவிடுவதாகாதா?

முற்றிலும் பொருத்தமற்ற வழிமுறையை நாம் இலக்குடன் தொடர்பற்றது என விமர்சிக்க முடியும். பொதுசனவாக்கெடுப்பு ஈழப்பிரிவினைக்கு முற்றிலும் பொருத்தமற்ற வழிமுறை என்று விமர்சிக்க முடியுமா? முடியாது. ஏனெனில் இது வரலாற்றை மறுப்பதாகும். பொதுசனவாக்கெடுப்பு பல்வேறு நாடுகளில் பிரிவினையை நிகழ்த்தியிருக்கிறது என்பது வரலாற்று உண்மை. உண்மை இப்படியிருக்கையில் ஈழத்திற்கான பொதுசனவாக்கெடுப்பு இலக்குடன் (தனி ஈழப் பிரிவினையுடன்) தொடர்பற்றது என்றோ, அதனை கைவிடுவது என்றோ, ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்றோ யார்தான் கூறமுடியும்?

5. பொதுசனவாக்கெடுப்பு ஆயுதப்போராட்டத்தை கைவிடுவதாகாதா?

நிச்சயமாக ஆகாது. பொதுசனவாக்கெடுப்பை முன்வைத்தால் ஆயுதப் போராட்டமே நடத்த கூடாது என்றோ, ஆயுதப் போராட்டம் நடத்தும் போது பொதுசனவாக்கெடுப்பு கோரக் கூடாது என்றோ ஒரு நிபந்தனையும் இல்லை. பொதுசனவாக்கெடுப்பு என்பது கோரிக்கை. ஆயுதப் போராட்டம் என்பது போராட்ட வடிவம். இவையிரண்டும் ஒன்றுக்கொன்று மாற்றானது அல்ல. பொதுசனவாக்கெடுப்பு கோரி ஆயுதம் தாங்காத அரசியல் போராட்டம் நடத்தலாம், அந்த அரசியலை தாங்கிய ஆயுத போராட்டமும் நடத்தலாம். இரண்டும் சேர்ந்தும் நடத்தலாம். அதேபோல் ஆயுத போராட்டம் என்ற வடிவத்தை ஈழத்தை அங்கீகரிக்க கோரியும் நடத்தலாம். பொதுசனவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் நடத்தலாம். அல்லது 'ஈழத்தை அங்கீகரி' இல்லையெனில் 'பொதுசனவாக்கெடுப்பு நடத்து' என்று இரண்டையும் இணைத்து கோரியும் நடத்தலாம். எனவே பொதுசனவாக்கெடுப்பு கோரிக்கை ஆயுதப் போராட்டத்தை நடத்துவது அல்லது நிறுத்துவது என்று எதையும் தீர்மானிக்கக் கூடியதல்ல.

6. பொதுசனவாக்கெடுப்பா? ஆயுதப்போராட்டமா? எது முற்போக்கானது?

ஒரு கோரிக்கை முற்போக்கானதா? அல்லது பிற்போக்கானதா? என்பது அது எம்மாதிரியான போராட்ட வடிவங்களை மேற்கொள்கிறது என்பதால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது அக்கோரிக்கையின் அரசியல் உள்ளடக்கத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. அதுபோல் ஒரு ஆயுதந்தாங்குதல் நடவடிக்கை, ஆயுதம் தாங்குவாதாலேயே அது முற்போக்கானது என தீர்மானிக்கப்படுவதில்லை. அது முற்போக்கானதா? அல்லது பிற்போக்கானதா? என்பதும் அதன் அரசியல் உள்ளடக்கத்தால் தான் தீர்மானிக்கப்படுகிறது.

ஈழத்தில் புலிகளின் ஆயுதப் போராட்டங்களை முற்போக்கானது என்று கூறும் எவரும், தந்தை செல்வாவின் (ஆயுதம் ஏந்தா) போராட்டங்களை பிற்போக்கானது என்று விமர்சிப்பதில்லை.

7. பொதுசனவாக்கெடுப்பு கோரிக்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இருக்குமா?

ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பெயரில் எல்லா ஏகாதிபத்தியங்களையும் எதிர்ப்பது நமது நோக்கமல்ல. அது அவசியமுமில்லை. சாத்தியமுமில்லை. ஈழப்பிரிவினையை எதிர்க்கும் ஏகாதிபத்திய நாடுகளை, கூடவே ஏகாதிபத்தியமல்லாத நாடுகளையும் கூட எதிர்த்துப் போராடுவதுதான் நமது கொள்கையாக இருக்கமுடியும். பொதுசனவாக்கெடுப்பு முறையில் ஈழம் அமைந்தால் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு ஈழமாக இருக்காது என்றும் அதே நேரம் தனிஈழத்தை அங்கீகரி கோரிக்கை மூலம் ஈழம் அமைந்தால் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு ஈழமாக அமைய முடியுமென்றும் ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது.

இரண்டு கோரிக்கைகளுமே ஐ.நாவிடம் தான் வைக்கப்படுகிறது. இரண்டுமே உலகமக்களின் ஆதரவைத் திரட்டி ஏகாதிபத்திய நாடுகளை ஏற்கவைக்காமல் அல்லது அவற்றின் ஆதரவைப் பெறாமல் நடைபெற முடியாது. இப்படியிருக்கையில் பொதுசனவாக்கெடுப்பு முறையில் அமையும் ஈழம் மட்டும் ஏகாதிபத்திய ஆதரவு ஈழமென்றும், நேரடியாக அங்கீகரிக்கப்படும் ஈழம் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஈழம் என்றும் எப்படிப் பிரிக்க முடியும்?

கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், பொதுசனவாக்கெடுப்பு முறையை விட நேரடியாக ஈழம் அங்கீகரிக்கப்படுவதில்தான் கூடுதலான ஏகாதிபத்திய நலன்கள் உள்ளடங்கிவரும். பிறகு எப்படி 'தனிஈழத்தை அங்கீகரி' கோரிக்கையில் தான் ஏகாதிபத்திய எதிர்ப்பு அடங்கியிருக்கும் என்று கூறுவது? ஈழவிடுதலையை பொருத்தவரை தமிழீழம் நேரடியாக அங்கீகரிக்கப்பட்டாலும் சம்மதமே, பொதுசனவாக்கெடுப்பு முறையில் அமைந்தாலும் சம்மதமே என்றுதான் இருக்க முடியும். பொதுசனவாக்கெடுப்பு முறையில் அமைந்தால் அதில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இல்லை. எனவே அதை ஏற்க மாட்டோம் என்பது என்ன வகையான ஈழ ஆதரவு?

8. ஏகாதிபத்திய எதிர்ப்பு இல்லாதது இன விடுதலையாகுமா?

ஈழ விடுதலை என்பது சிங்களரிடமிருந்து அரசியல் விடுதலை பெறுவது என்பதே. ஆனால் இது தவறு என்றும், ஏகாதிபத்தியங்களிடமிருந்து அரசியல், பொருளாதார விடுதலை பெறுவதே உண்மையான இன விடுதலை என்றும் கூறப்படுகிறது. இது ஏகாதிபத்திய எதிர்ப்பை விடுதலைக்கான உள்ளடக்கமாகக் கூறி, உண்மையான ஈழ விடுதலைக்கான உள்ளடக்கத்தை (சிங்களத்திடமிருந்து அரசியல் விடுதலை) மறுக்கிறது அல்லது முக்கியத்துவமற்றதாக்குகிறது.

ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பது தம்மை ஒடுக்கும் ஆதிக்க தேசிய இனத்திற்கு எதிரான போராட்டம் தான். ஒட்டு மொத்த உலக ஏகாதிபத்தியங்கள் அனைத்தையும் எதிர்க்கும் போராட்டமல்ல. அப்படி ஒரு போராட்டம் இராணுவரீதியிலும் சாத்தியமில்லை, அரசியல் ரீதியிலும் சாத்தியமில்லை. இப்படி சாத்தியமற்ற 'முற்போக்கான' கற்பனை விடுதலையை விட சிங்களத்திடமிருந்து அரசியல் விடுதலை எனும் எதார்த்த விடுதலை தான் நிஜமாகக் கூடியது. மேலும் மேலும் நாடுகள் பிரிவதால் ஏகாதிபத்தியங்களின் மொத்த சுரண்டலின் அளவு குறையப்போவதில்லை. சுரண்டல் அளவு என்பது ஒரே நாட்டிற்குரியதாகயிருந்து வந்தது, இரு நாட்டிற்குரியதாக பிரிந்து விடும். ஒரே நாடாக சுரண்டியவர்கள் இருநாடாக சுரண்டுவார்கள் அவ்வளவு தான். எனவே நாடுகள் பிரிவது ஏகாதிபத்தியங்களுக்கு சுரண்டலின் அளவில் இழப்பை ஏற்படுத்துவதில்லை.

ஒரு குறிப்பிட்ட பிரிவினை, குறிப்பிட்ட ஏகாதிபத்தியங்களுக்கு சாதகமாக இருந்தால் அவை ஆதரிக்கும். அதே பிரிவினை குறிப்பிட்ட ஏகாதிபத்தியங்களுக்கு பாதகமாக இருந்தால் எதிர்க்கும். எனவே தேசிய விடுதலைப் போராட்டம் என்றாலே அதை எல்லா ஏகாதிபத்தியங்களும் எதிர்க்கும் என்ற பொருளும் இல்லை. அப்போராட்டமும் எல்லா ஏகாதிபத்தியங்களையும் எதிர்க்கும் என்ற பொருளும் இல்லை. ஒரு இன விடுதலைப் போராட்டம் ஏகாதிபத்திய உலகிற்கு எதிரான போராட்டத்தால் வளர்ச்சி பெற்று வருவதல்ல. மாறாக தனது இன ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான போராட்டத்தால் தான் வளர்ச்சி பெற்று வருகிறது.

9. பொதுசனவாக்கெடுப்பு - என்றைக்குமான கோரிக்கையா? இடைக்கால கோரிக்கையா?

இடைக்காலக் கோரிக்கை தான். பொதுசனவாக்கெடுப்பு என்பது ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் என்றென்றைக்குமான அரசியல் உரிமை. ஆனால் அது என்றென்றைக்குமான கோரிக்கையாக இருக்கவேண்டும் என்பதில்லை. உதாரணத்திற்கு இந்தியாவில் தமிழ் தேசிய இனத்திற்கு அரசியல் உரிமையாக அது என்றென்றைக்கும் இருந்து வருகிறது. ஆனால் கோரிக்கையாக என்றென்றைக்கும் இருந்து வரவில்லை. உரிய அரசியல் சூழலில் மட்டுமே இந்த உரிமை கோரிக்கையாக இயக்கம் பெறும். எனவே பொதுசனவாக்கெடுப்பு என்பது உரிமை என்ற வகையில் நிரந்தரமானதும், கோரிக்கை என்ற வகையில் இடைக்காலமானதும் ஆகும். பொதுசனவாக்கெடுப்பு கோருவதற்கான சூழல் ஏற்பட்டு விட்டாலே பொதுசனவாக்கெடுப்பு முறையில்தான் அந்த தேசிய இனம் பிரிவினை பெற்றாக வேண்டும் என்ற பொருள் இல்லை. பொதுசனவாக்கெடுப்போ இன்னபிற வழிமுறைகளோ, எது அதிக, பொருத்தப்பாட்டைக் கொண்டிருக்கிறதோ அந்த வழிமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கலாம்.

10. பொதுசனவாக்கெடுப்பு - ஈழப்போராட்டத்தை முதலிலிருந்து துவங்க செய்கிறதா?

முதலில் எந்த ஒரு போராட்டத்தையும் மீண்டும் முதலிலிருந்து துவங்க செய்ய முடியாது. ஏனெனில் எந்த ஒரு வரலாறும் மீண்டும் முதலிலிருந்து துவங்காது. 4ம் கட்ட ஈழப்போர் இராணுவ ரீதியில் தோல்வியில் முடிந்தாலும் சர்வதேச அரசியல் களத்தில் சில வெற்றிகளை பெற்றுள்ளது. சர்வதேச அரசியல் களத்தில் ஈழப்பிரச்சனையை முன்னெப்போதையும் விட தீவிரமாக இப்போர் கொண்டு சென்றுள்ளது. லட்சக் கணக்கில் புலம் பெயர் தமிழர்களை போராட்ட ஆற்றல்களாக இப்போர் வளர்த்துள்ளது. சர்வதேச சனநாயக உலகில் சிங்கள அரசை இனப்படுகொலை அரசாக இப்போர் பதிவு செய்ய வைத்துள்ளது.

இந்நிலையில் பொதுசனவாக்கெடுப்பு, ஈழத்தமிழர்களின், உலகத் தமிழர்களின், உலக சனநாயக ஆற்றல்களின் ஒற்றைக்குரலாக இருந்தால், அதை பரிசீலித்தே ஆக வேண்டிய கட்டாயத்தை சர்வதேச சமூகத்திற்கு இப்போர் ஏற்படுத்தி உள்ளது. பொதுசனவாக்கெடுப்பு கோரிக்கை இந்நிலையில் எப்படி முதலிலிருந்து ஈழப் போராட்டத்தை துவங்கச் சொல்வதாக இருக்க முடியும்?.

பகுதி -2 

'பொதுவாக்கெடுப்பு, ஈழப்போராட்டத்தை காயடிக்கும் சந்தர்ப்பவாதக் கோரிக்கை' என்ற வெளியீட்டின் மீதான விவாதங்கள் 

பொதுசனவாக்கெடுப்பு ஈழ விடுதலைக்கான ஒரு அரசியல் பாதை எனும் வெளியீடு (http://www.nerudal.com/nerudal.9346.html) பொதுசனவாக்கெடுப்பு ஒரு உலகப் போக்கு என்றும், ஈழத்திற்கும் அது பொருந்தும் என்றும் அதைக் கோரிக்கையாக வைக்கும் போது, அது ஒரு பெரும் மக்கள் இயக்கமாக வளர முடியும் என்றும் கூறி இருந்தது. இன்றைய நிலையில், சர்வதேச அளவில் ஈழ மறுப்பு பெரும்பான்மையாகவும், ஈழ ஆதரவு சிறுபான்மையாகவும் உள்ளது. இந்த அரசியல் பிரிவுகளை பொதுசனவாக்கெடுப்பை ஏற்கும் பெரும்பான்மையாகவும் மறுக்கும் சிறுபான்மையாகவும், பொதுசனவாக்கெடுப்பு கோரிக்கையால் மாற்ற முடியும் என்று கூறி இருந்தது.

• ஈழத்தை ஆதரிக்காதவர்களைக் கூட பொதுசனவாக்கெடுப்பை ஏற்க வைக்க முடியும்.

• சிங்கள அரசின் ஆதரவாளர்களைக் கூட நிர்பந்திக்க முடியும் அல்லது தனிமைப் படுத்த முடியும்.

• உரிமை தளத்திலே சிங்கள அரசையும், விடுதலைப் புலிகளையும் ஒரு சேர விமர்சனம் செய்பவர்களைக் கூட அதே உரிமைத் தளத்தில் நின்று பொதுசனவாக்கெடுப்பை ஏற்க நிர்பந்திக்க முடியும்.

இப்படி பலநிலை ஆற்றல்களையும், ஈழ நோக்கத்திற்கு ஆதரவாக அணி திரட்டி பெரும் மக்கள் இயக்கத்தை கட்ட பொதுசனவாக்கெடுப்பு கோரிக்கை ஒரு அரசியல் தந்திரமாக இருக்க முடியும் எனக்கூறி இருந்தது. இதுவே அவ்வெளியீட்டின் உள்ளடக்கம்.

தமிழ் ஈழ ஆதரவு முன்னணியினரே!

உங்கள் விமர்சன வெளியீட்டில் இந்த உள்ளடக்கத்தின் மீது நேரடியாக எவ்வித விமர்சனத்தையும் நீங்கள் வைக்கவில்லை. ஆயுதப்போராட்டத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பையும் மையப்படுத்தி பொதுசனவாக்கெடுப்பு மீதான உங்கள் கடும் மறுப்பை முன் வைத்து இருக்கிறீர்கள்.

இவ்வெளியீட்டின் முதற் பகுதியில் உங்கள் விமர்சனம் தொடர்பான விசயங்கள் பொதுவான கேள்வி பதில் முறையில் தரப்பட்டுள்ளது. எனினும் பொதுசனவாக்கெடுப்பு குறித்த உங்களது அநேக இடதுதீவிர அணுகுமுறைகளுக்கு வினையாற்றுவதே இப்பகுதியின் நோக்கம்.

உங்கள் வெளியீட்டிலேயே அதிமுக்கியம் எனக்கருதி அல்லது சாரம் எனக்கருதி அல்லது இரத்தினச்சுருக்கம் எனக் கருதி பின் அட்டையில் இருபத்திகளை வெளியீட்டிருக்கிறீர்கள். எனவே நமது விவாதத்தை அதன் மீதே மையப்படுத்தி கொள்வோம். அவ்விருபத்திகளையும் அப்படியே கீழே தருகிறோம்.

ஈழ மக்கள் தனித் தமிழ் ஈழக் கோரிக்கையையும், ஆயுதப் போராட்டத்தையும் விட்டுவிட்டு, 'பொதுவாக்கெடுப்பு நடத்து' என அமைதியாகப் போராட வேண்டும் எனச் சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனமானது! இது ஈழத்தமிழர்களுக்கு தோல்வி மனப்பான்மையை ஊட்டி, அவர்களை மழுங்கடிக்கும் வேலையாகும். ஈழவிடுதலை போராட்டத்தை 60 ஆண்டுகளுக்குப் பின்னுக்கு இழுத்து, 'மறுபடியும் முதலிலிருந்து துவங்கச்' சொல்வதாகும்.

ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் நலன்களின் பொருட்டே தனிநாடுகளை உருவாக்குகின்றன. இப்படி அடிமை-தனிநாடான ஒரு தேசிய இனத்தை அவ்வினம் 'இனவிடுதலை' பெற்றுவிட்டதாகக் கூறுவது ஏமாற்று வேலை. மாறாக, ஒரு தேசிய இனம் 'சுயமான அரசியல், சுயமான பொருளாதாரம், சுயமான பண்பாடு' ஆகியவற்றை அமைத்துக்கொள்வது தான் இனவிடுதலை ஆகும்.

1.பொதுசனவாக்கெடுப்பு-அமைதியான முறை என்று விமர்சனம் செய்கிறீர்கள்.

பொதுசனவாக்கெடுப்பை விமர்சிப்பதற்கு அது அமைதியான முறை என்பதும் ஒரு காரணமா? உங்கள் விமர்சனம் வினோதமானது, மனித இயல்பில் அமைதிதான் விரும்பத்தக்கது. அமைதியின்மை விரும்பத்தகாதது. உங்கள் விருப்பம் இயற்கைக்கு மாறானது. ஆயுதப்போராட்டம் என்ற சமூக அமைதியின்மை கூட நாம் விரும்பி ஏற்ற அமைதியின்மை அல்ல, நம் மீது திணிக்கப்பட்ட ஒரு அமைதியின்மை தான்.

2.பொதுசனவாக்கெடுப்பு-எதிரிகளுக்கு அடங்கிப்போவது என்கிறீர்கள்.

ஆயுதப்போராட்டம் என்பது அடங்காதது, மற்றதெல்லாம் அடங்கிப்போவது என்று இதற்கு நீங்கள் அளவுகோல் வைத்திருக்க வேண்டும். இந்த கருத்து நமது இலக்கிற்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்கிறதா? இல்லை. மாறாக இது இலக்கிலிருந்து விலகி, நமக்கும் எதிரிகளுக்கும் இடையிலான தன்னை முன்னிறுத்தும் (ஈகோவிற்கான) போராட்டத்திற்கு வழிவகுக்கிறது. சரி! ஆயுதப் போராட்டத்திலும் கூட பின்வாங்கும் போர்தந்திரம் ஒன்று உள்ளதே, அதற்கும் நீங்கள் வைத்திருக்கும் பெயர் என்ன 'எதிரிக்கு அடங்கிப்போவதா?"

3.பொதுசனவாக்கெடுப்பு - ஈழப் போராட்டத்தை முதலிலிருந்து துவங்கச் சொல்வதாக உள்ளது என விமர்சனம் செய்கிறீர்கள்.

ஆனால் நீங்கள் ஈழத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என குறிப்பிடும் போது மீண்டும் அரசியல் போராட்டம் துவங்கி, அதை ஆயுதப்போராட்டத்தோடு இணைத்து ஈழத்தை அங்கீகரி என போராட வேண்டும் என வழிமுறை சொல்கிறீர்கள் (உங்கள் வெளியீடு பக்கம் 7 பத்தி -1) இது தானே 60 ஆண்டு காலமாக இன்று வரை ஒரு சுற்று நடந்து முடிந்திருப்பது. எனவே நீங்கள் கூறுவது தானே முதலிலிருந்து துவங்கச் சொல்வதாக உள்ளது?

4. எதிரி பலமானவன் நாம் பலவீனமானவர்கள் (பக்கம் 3 பத்தி -1) என்பது பலவீனமான சிந்தனை என்று எழுதுகிறீர்கள்.

பலம், பலவீனம் என்பது சிந்தனை சம்பந்தப்பட்டதல்ல. மதிப்பீடு சம்பந்தப்பட்டது. அரசியல் ரீதியாகவோ, இராணுவ ரீதியாகவோ மதிப்பிடும் போது யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் பலமாக இருக்கலாம் அல்லது பலவீனமாக இருக்கலாம். 'நாம் பலமானவர்கள்' என்பது ஒரு வரலாற்று மதிப்பீடு, அதை அரசியல் ரீதியிலும், இராணுவ ரீதியிலும் செயல்படுத்தினால் அது நம் அழிவிற்கே இட்டுச்செல்லும்.

5. பொதுசனவாக்கெடுப்பு கோரிக்கையல்ல; தனி ஈழக் கோரிக்கையே இந்தியாவை அச்சப்படுத்தும் என்று கூறி இருக்கிறீர்கள் (பக்கம் 11, 12)

இந்தியாவை எது அச்சப்படுத்தும் என ஈழக்கருத்தியல் களத்தில் யார் வாதிட்டார்கள்? நீங்களாகவே ஆர்வமாக முன் வந்து இந்தியாவை அச்சப்படுத்துவது எது என்றும், அதை செய்வது எப்படி என்றும் மூன்று பத்திகளில் விளக்கியிருக்கிறீர்கள். "ஆகவே நம்முடைய கடமை இந்திய அரசை அச்சுறுத்தும் வகையிலான போராட்டங்களை வளர்த்தெடுப்பதில் தான் உள்ளது". (பக்கம்-12-பத்தி-3) என முடித்திருக்கிறீர்கள். அரசை அச்சுறுத்துவதற்கான போராட்டங்கள் என்ற பார்வை, சரியான அரசியல், ஆயுதப்போராட்ட பார்வையிலிருந்து விலகி, பயங்கரவாத வழி முறைகளை நோக்கியதாகாதா?

6. பொதுசனவாக்கெடுப்பு நடத்த கோருவது அய்.நா. மீதான மாயை என்கிறீர்கள். (பக்கம் 8 பத்தி 3)

நீங்கள் 'தமிழீழத்தை அங்கீகரி' என்று யாரிடம் கோரிக்கை வைக்கிறீர்கள்? அய்.நாவிடம் தானே? பொதுசனவாக்கெடுப்பை விட 'தமிழீழத்தை அங்கீகரி' என்பது அய்.நா.விற்கு மிகப் பெரிய கோரிக்கை தானே! எனவே இது பொதுசனவாக்கெடுப்பை விட ஐ.நா.மீது மிகப்பெரிய மாயையை ஏற்படுத்தாதா?

7.பொதுசனவாக்கெடுப்பை ஏற்க மறுக்கும் எங்களைப்போன்ற ஈழ ஆதரவு சக்திகளும் உண்டு என்கிறீர்கள்.

கொள்கையளவிலேயே பொதுசனவாக்கெடுப்பை ஏற்க மறுப்பவர்கள் இராசபட்சே,இந்திய அரசு போன்ற ஈழ எதிரிகள் தான். அவர்களது கொள்கைகளை வேறு உள்ளடக்கத்தில் வைத்திருக்கும் உங்களை தவிர்த்து பொதுசனவாக்கெடுப்பை மறுக்கும் வேறு உண்மையான ஈழ ஆதரவு சக்திகளை காட்டமுடியுமா?

8.பொதுசனவாக்கெடுப்பு முறையில் பிரிந்தாலும் ஏகாதிபத்திய நலன்கள் என்கிறீர்கள்; கொசாவா முறையில் பிரிந்தாலும் ஏகாதிபத்திய நலன்கள் என்கிறீர்கள்.

பிறகு எப்படித்தான் ஈழம் பிரிவது? ஈழம் தனது ஆயுத பலத்தால் உலக ஏகாதிபத்தியங்களை வென்று, இந்தியாவை வென்று, சிங்களரை வென்று பிரிய வேண்டும் என்கிறீர்களா? அதே ஆயுத பலத்தால் தனது எல்லைகளைக் காத்து ஏகாதிபத்தியங்களின் எல்லா அரசியல் பொருளாதார அழுத்தங்களையும் எதிர்த்து நின்று சுயமான அரசியல், சுயமான பொருளாதாரம், சுயமான பண்பாட்டை கட்டியமைத்து... இப்படி தமது ஆயுத பலத்தாலேயே எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்கிறீர்களா?

9.உங்கள் கருத்துக்களில் ஆயுதப் போராட்டத்தையே மையப்புள்ளியாக வைக்கிறீர்கள்.

பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளையும், கோட்பாடுகளையும், கருத்துக்களையும், அது ஆயுதப் போராட்டத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது அல்லது அருகிலிருக்கிறது என்பதையே அளவுகோல் வைத்து பார்க்கிறீர்கள். ஆனால் சமூக போராட்டத்தின் மையப்புள்ளி அரசியல் தான். ஆயுதப் போராட்டமே கூட அரசியலால் பிறந்து. அரசியலால் வளர்க்கப்பட்டு, அரசியலால் முடிவுக்கு வருவது தான். ஆயுதங்களுக்கே ஆயுதம் அரசியல் தான்.

10.உங்கள் வெளியீட்டில் சுயமான அரசியல், சுயமான பொருளாதாரம், சுயமான பண்பாடு கொண்ட தனிநாடு பற்றி பேசுகிறீர்கள்.

உலகில் இப்படியொரு நாட்டை நீங்கள் காட்ட முடியுமா? இப்படியொரு நாடு முதலாளித்துவ நாடா? சோசலிச நாடா? முதலாளித்துவ நாடு என்றால் இது சாத்தியமில்லை. ஏனெனில், "எந்த நாட்டையும் சுரண்டமாட்டேன். என் நாட்டையும் சுரண்ட அனுமதிக்கமாட்டேன்" என சத்தியப் பிரமாணம் செய்யும் முதலாளி வர்க்கம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை. எனவே இப்படியொரு சுயமான முதலாளித்துவ நாடு என்பது வெறும் கற்பனை.

இப்படி ஒரு நாடு சோலிச நாடு என்று கூறினீர்கள் என்றால், நீங்கள் ஈழ இன விடுதலையிலிருந்து ஒதுங்கி நின்று ஈழப்புரட்சியை பரிந்துரை செய்கிறீர்கள். அதையும் நேரடியாக சொல்லாமல் விமர்சனங்களுக்கு அஞ்சி, மறைமுகமாக பரிந்துரை செய்கிறீர்கள்.

11. பொதுசனவாக்கெடுப்பு தனி ஈழக் கோரிக்கையை கைவிடும் அயோக்கியத்தனம் என்று வன்சொல் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.

இது உலகம் முழுவதும் ஈழப் பிரச்சனைக்கு பொதுசனவாக்கெடுப்பு கோரும் மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் அனைவரையும் குறிப்பதாகும். பொதுசனவாக்கெடுப்பு முறையில் பிரிவினை பெற்ற மக்கள், அயோக்கித்தனமான வழிமுறையை கொண்டவர்கள் என குறிப்பிடுவதாகும். வரலாற்றிற்கும், போராடும் மக்களுக்கும், சனநாயக ஆற்றல்களுக்கும் மதிப்பளிப்பதற்காகவாவது 'அயோக்கியத்தனமானது' என்ற வன்சொல்லை பயன்படுத்தியதற்கு நீங்கள் வருத்தம் தெரிவிப்பது நல்லது.

12. பொதுசனவாக்கெடுப்பு என்பது ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு, அமைதியாக போராடச் சொல்லும் அயோக்கியத்தனம் என்று எழுதி இருக்கிறீர்கள். "மேலும் இந்த சந்தர்ப்பவாதிகள் பல மாதங்களாகவே (விடுதலைப்புலிகள் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போதிலிருந்தே) இந்த கோரிக்கைகளை முன் வைத்து வருகிறார்கள்". (பக்கம் 4 பத்தி -1) என்றும் கூறி இருக்கிறீர்கள். இதன் மூலம் ஆயுதப் போராட்டம் நடத்தும் போது பொதுசனவாக்கெடுப்பு கோரிக்கை கூடாது என்று புது இலக்கணம் வகுத்திருக்கிறீர்கள்.

அயோக்கியத்தனம் என்ற உங்களின் வன்சொல்லை நேரடியாக நீங்கள் விடுதலைப்புலிகள் மீது பிரயோகிப்பது தான் நேர்மையானது. அவர்கள் தான் ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போதே பொதுசனவாக்கெடுப்பை நடத்த கோரியிருந்தவர்கள், விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் 22.03.2009ல் சர்வதேச சமூகத்திடம் பொதுசனவாக்கெடுப்பை கோரியது அனைத்து ஈழ ஆதரவு இணையதளங்களிலும் வெளிவந்துள்ளது.

செய்திவெளி வந்த சில இணைய தள பக்க முகவரிகள்:

http://www.nerudal.com/nerudal,2279.html

http://tamilwin.com/view.php?2b36PWQ4b343bl624dbPXoReb024dlNc4d3dWrC3e0dv5Km4ce02h5gA)2ccdph7r0e

ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போதே புலிகள் பொதுசனவாக்கெடுப்பை வைத்திருப்பதால் உங்கள் அயோக்கியத்தனம் எனும் விமர்சனம் பொதுசனவாக்கெடுப்பை ஆதரிக்கும் எங்களை விட அதைக்கோரிய புலிகளுக்கே கூடுதலாக பொருந்தும். விடுதலைப்புலிகள் தமது அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் மூலம் இக்கோரிக்கையை ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது வைக்கவில்லை, மாறாக போர் முடியும் தருவாயில் தான் வைத்தார்கள் என்று நீங்கள் கூறினால், முடியும் தருவாயிலே புலிகளுக்கு பொதுசனவாக்கெடுப்பு முக்கியத்துவம் ஆகிவிட்டது எனும் போது இப்போதைய 4ம் கட்ட ஈழப்போர் முடிந்த தருவாயில் அம்முக்கியவத்துவம் கூடுதலாகி விட்டது என்று தானே பொருள்?

ஆயுதப்போராட்டத்தில் 30 ஆண்டு கால அனுபவம் கொண்டவர்கள் புலிகள். இவ்விசயத்தில் அவர்களின் அணுகுமுறை (ஆயுதப்போராட்டத்தின் போது பொதுசனவாக்கெடுப்பு கோரியது) களத்தில் நிற்கும் ஒரு உறுதியான போராளிக் குழுவின் சூழலுக்கேற்ற அணுகுமுறை, இதை நீங்கள் கணக்கில் கொள்வதாக இருந்தால் உங்கள் வெளியீட்டின் கருத்து தவறு என சுயவிமர்சனம் ஏற்கவேண்டும்.

கோட்பாடு ரீதியாக நாங்கள் சரி என்று சொல்வீர்களாயின் (ஆயுதப் போராட்டத்தின் போது பொதுசனவாக்கெடுப்பு கூடாது என்ற) உங்கள் விமர்சனத்தை புலிகள் மீது முன் வைத்து உங்கள் கருத்து நேர்மையை காப்பாற்றி கொள்ள வேண்டும்.

தொகுப்பாக, உங்கள் வெளியீட்டில் இரண்டு முக்கிய விஷயங்கள் தெளிவின்றி உள்ளது.

1. தனிஈழப் போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா? இல்லையா?

2. விடுதலைப் புலிகளின் போராட்டத்தை அங்கீகரிக்கிறீர்களா? இல்லையா?

ஈழப் போராட்டம் குட்டி முதலாளியவர்க்கத் தலைமையிலான போராட்டம் என்பது உங்கள் வரையறை, மேலும் நீங்கள் இன விடுதலைப் போராட்டம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமே என்ற கொள்கையில் பற்றும் உறுதியும் கொண்டவர்கள். அதேநேரம் நீங்கள் குட்டி முதலாளியவர்க்க போராட்டம் முழு ஏகாதிபத்திய உலகிற்கு எதிரான போராட்டமாவதற்கான அடிப்படை கொண்டதாக இருக்காது எனவும் கருதுபவர்கள். இதனால் தானே உங்கள் வெளியீட்டில் புலிகளுக்கு கீழ்கண்டவாறு அறிவுரையும் சொல்லியிருக்கிறீர்கள்.

"ஈழப்போராளிகள் கூட ஏகாதிபத்தியங்கள் மீது வைத்திருக்கும் மாயைகளை விட்டொழிக்க வேண்டும். ஏகாதிபத்திய நாடுகள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களின் எதிரியாக கறாராக வரையறை செய்து கொண்டு செயல்பட வேண்டும்." (பக்கம் 15 பத்தி -2) அப்படியானால் உங்கள் வரையறைப்படி ஏகாதிபத்திய நாடுகள் அனைத்தையும் எதிரியாக கறாராக வரையறை செய்யாத ஈழத்தையும், புலிகளையும் நீங்கள் எப்படி ஆதரிக்க முடியும்? ஈழ விடுதலை குறித்தும், புலிகள் குறித்தும் நீங்கள் சொல்ல வருவது தான் என்ன?

1. ஏகாதிபத்திய நாடுகள் அனைத்தையும் எதிரியாக கறாராக வரையறுக்காமல் சிங்கள அரசை மட்டும் எதிரியாக வரையறை செய்திருக்கும் ஈழப்போராட்டத்தை எங்களால் முழுமனதோடு ஆதரிக்க முடியவில்லை என்கிறீர்களா?

2. ஏகாதிபத்திய நாடுகள் அனைத்தையும் எதிர்ப்பதில் உறுதியற்றது குட்டி முதலாளிய வர்க்கம் என்பதால் நாங்கள் புலிகளின் குட்டி முதலாளித்துவ போராட்டத்தை அங்கீகரிக்க மறுக்கிறோம் என்கிறீர்களா?

3. பொதுசனவாக்கெடுப்பு உள்ளிட்ட புலிகளின் அரசியல், இராஜதந்திர வழிமுறைகள், ஏகாதிபத்திய உலக ஆளுமையை ஏற்றுக்கொள்ளும் வழிமுறைகள், எனவே அந்த வகையிலும் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதை தவிர்க்கிறோம் என்கிறீர்களா?

4. மொத்தத்தில் 60 ஆண்டு கால விடுதலைப் போராட்டத்தின் இலக்கை மாற்றி போராட்டத்தின் தலைமையை மாற்றி புதிய சமூக இலக்கு, புதிய வர்க்க தலைமையை எதிர்பார்க்கிறீர்களா? இவற்றையெல்லாம் உங்களுக்கு நீங்களே முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் ஈழவிடுதலையையும், அதற்கான புலிகளின் போராட்டத்தையும் தெளிவாக, உறுதியாக ஆதரிப்பவர்கள்.

"விருப்பம் போல் வளைப்பதற்கு வரலாற்றுச் சக்கரம் வண்டிச்சக்கரம் இல்லை"

இறுதியாக,

நீங்கள் விமர்சித்திருக்கும் வெளியீடு நீங்கள் குறிப்பிட்டதுபோல் முத்துக்குமார் மக்கள் எழுச்சிப் பாசறை, மற்றும் புதிய போராளிகளுடையதல்ல. நாங்கள் அனைவரும் பொதுசனவாக்கெடுப்பு என்ற நிலைப்பாட்டிற்கான நட்பு இயக்கங்கள். அவர்களின் வெளியீடாக கருதியே நீங்கள் விமர்சனங்களில் கடும் சொற்களை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என கருதுகிறோம். இவ்வெளியீட்டையும் அவர்களுடையதாக எதிர்கொள்ளாமல் ஈழ விசயத்தில் உங்கள் இடது தீவிர அணுகுமுறை மீதான எங்கள் பிரதிபலிப்புகளை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்பது எமது விருப்பம். எமது வெளியீட்டை விமர்சித்து பொதுசனவாக்கெடுப்பு குறித்து விவாதக்களத்தை ஏற்படுத்தி தந்தமைக்கு, பொதுசனவாக்கெடுப்பு கோரும் அனைவரின் சார்பாகவும் நன்றி.

- பிரபாகரன்

கருத்துக்கள், ஆலோசனைகளுக்கு

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It