கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கான தேசிய ஆணையத்திற்கு இந்திய ஆட்சிப்பணி அலுவலர் உமாசங்கர் எழுதியுள்ள கடிதம் - தமிழக அரசு மீது இந்திய ஆட்சிப்பணி அலுவலர் சி. உமாசங்கர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்

அனுப்புநர்

சி. உமாசங்கர் இ.ஆ.ப. (1990ஆம் ஆண்டுப் பிரிவு)
எண். 33, பாலகிருட்டினன் சாலை,
டி1, அசோக்கு சுவச்தி அடுக்ககம், மூன்றாவது தளம்,
வால்மீகி நகர், திருவான்மியூர்,
சென்னை.  தொலைப்பேசி: 044-42020423, செல்பேசி: 9444300123.  

பெறுநர்

தலைவர்,
தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம்,
உலோக்கு நாயக்கு பவன், கான் சந்தை,
புதுதில்லி 110003
தொலைவரி; 91-11-24632298, மின்மடல்; இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.           

நான் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகத் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் கீழ் நடுவண் தேர்வு ஆணையத்தால்  1990ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுத் தமிழகப் பிரிவில் இடமளிக்கப்பட்டேன்.  அதே ஆண்டு ஆகச்டு இருபதாம் நாள் அப்பணியில் இணைந்தேன்.  

            சவகர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மலைவாழ்மக்களுக்கும் சுடுகாட்டுக் கூரைகள் அமைப்பதற்கென ஒருதிட்டம் 1995ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டு வந்தது.  சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை முறைகேடாகச் செலவழிக்கும் நோக்கில் மதுரை மாவட்டத்தின் அன்றைய ஆட்சியர் பி. ஆர். சம்பத்து இ.ஆ.ப. அத்திட்டத்தை ஒரு தனியார் ஒப்பந்தக்காரருக்கு ஒதுக்கிட ஆணியிட்டார்.  அப்போது நான் மதுரை மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராகவும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்டக்குழுத் தலைவராகவும் இயங்கிக் கொண்டிருந்தேன்.  அப்பணியில் இருந்த நான், ஆட்சியரின் ஆணையைக் கடுமையாக எதிர்த்ததுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து ஒரு பொது நலவழக்குத் தொடரப்பட்டபோது வழக்கைத் தொடர்ந்தவர் கூற்றில் உண்மைகள் இருப்பதாக உறுதிமொழி ஆணை(‘affidavit’) ஒன்றையும் பதிந்தேன். 

            என்னுடைய உறுதிமொழி ஆணையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓர் அமர்வு, டபிள்யு பி எண் 15929/1995 இன் கீழ் நடுவண் புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட்டது.  ஆயினும் அந்த ஊழலில் தொடர்புடைய உண்மைக்குற்றவாளி இன்னும் தண்டிக்கப்படவில்லை.

            உயர்மட்டத்தில் நடந்த தவறுகளைக் கண்டறியும் பொருட்டு 1996ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது என்னைக் கண்காணிப்பு இணை ஆணையராகப் பணியமர்த்தியது.  அப்பணியில் இருந்த போது,

  • தென்னிந்தியக் கப்பல் வணிகக் குழுமத்தின் பங்குகளைத் திரும்பப் பெற்றதில் நடந்த இருநூறு கோடி உரூபா ஊழல்
  • கருங்கல் சுரங்கங்களை குத்தகைக்கு விட்டதில் ஆயிரம் கோடி உரூபா அளவிற்கு நட்டத்தை ஏற்படுத்திய ஊழல்
  • தமிழக வீட்டுவசதி வாரியத்தின் மனைகளையும் வீடுகளையும் இல்லாத ஆட்களுக்கு ஒதுக்கியதில் நடந்திருந்த ஊழல் (இழப்பு கணக்கிடப்படவில்லை)
  • தேவை எவ்வளவு என்றே தெரியாமலும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படாமலும் நாற்பத்தைந்தாயிரம் தொலைக்காட்சி வானலை வாங்கி(ஆண்டெனா)களும் திறன் ஏற்றிகளும் வாங்கியதில் நடந்த ஊழல்
  • கோயமுத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சொந்தமான இருபது ஏக்கர் நிலத்தை மகளிர் குழந்தைகள் ஆகியோர் வளர்ச்சி என்னும் பெயரில் நட்சத்திர உணவகத்திற்கும் கேளிக்கை விடுதிக்கும் குத்தகைக்கு விட்டதில் நடந்த ஊழல்
  • மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்த மேகமலை காட்டுச் சிற்றூருக்குச் சொந்தமான ஏழாயிரத்து நூற்று ஆறு ஏக்கர் நிலத்தை முறைகேடான வகையில் ஒரே குடும்பத்திற்கு வழங்கியதில் நடந்த ஊழல்

எனப் பல்வேறு முறைகேடுகளையும் ஊழல்களையும் வெளிக்கொணர்ந்தேன்.      

இவை குறித்த பல வழக்குகளில் முன்னாள் தலைமைச் செயலர் நாராயணன் இ.ஆ.ப., சி. இராமச்சந்திரன் இ.ஆ.ப., டாக்டர் எசு. நாராயண் இ.ஆ.ப., தேபேந்திரநாத சாரங்கி இ.ஆ.ப., முன்னாள் முதலமைச்சர், அமைச்சர்கள் எனப் பல்வேறு பெருந்தலைகளைக் குற்றம் சுமத்தினேன். ஆனால் இத்தனை ஊழல்களில் ஈடுபட்டிருந்த செல்வாக்கு மிகுந்த அலுவலர்கள் யார் மீதும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.  எனவே கண்காணிப்பு இணை ஆணையர் பதவியில் இருந்து என்னை மாற்றிடுமாறு அரசை வேண்டினேன். 

            1999 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியராக அமர்த்தப்பட்டபோது அம்மாவட்ட மேலாண்மையை மின் ஆளுமை முறையில் செயல்படுத்தினேன்.   ஒட்டுமொத்த இந்தியாவிலேயே மின் ஆளுகையைச் செயல்படுத்திய முதல் மாவட்டமாகத் திருவாரூர் திகழ்ந்தது.   இந்தியாவின் பிற மாவட்டங்களை விடத் திருவாரூர் மாவட்டம் இருபது ஆண்டுகள் முன்னேறியிருப்பதாக அதைக் கண்டு முன்னணி நாளிதழான  டைம்சு ஆப் இந்தியா செய்தி வெளியிட்டது.   

            பின்பு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வென்று ஆட்சிக்கு வந்தபோது என்னை ஓரங்கட்டி உப்புச்சப்பில்லாத பதவியான ஒழுக்க நடவடிக்கை ஆணையராக அமர்த்தினார்கள்.

            2006ஆம் ஆண்டு தி.மு.க. மீண்டும் அரசு அமைத்த போது, மாநில அரசு நிறுவனமான எல்காட்டின் மேலாண் இயக்குநராக அமர்த்தப்பட்டேன்.  அப்போது நான் ஒப்பந்தங்களை ஒதுக்குவதில் வெளிப்படையான தன்மையைக் கொண்டுவரும்பொருட்டு மின் ஒப்பந்தங்களை அறிமுகப்படுத்தினேன்.  இலவசமாகக் கிடைக்கும் திறந்த மூல மென்பொருட்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்திட நான் தான் வழிவகுத்துக் கொடுத்தேன்.            

அப்பொறுப்பில் இருந்த போது தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி இராசாத்தி அம்மாள் என்னை இருமுறை ஆழ்வார்ப்பேட்டையில் இருந்த அவருடைய அலுவலகத்திற்கு அழைத்தபோதும் நான் செல்ல மறுத்துவிட்டேன்.  இறுதியில் வேறு வழியின்றி ஒரு முறை அவரைச் சென்று சந்தித்தபோது மீனவர்களுக்கான நாற்பத்தைந்தாயிரம் கம்பியில்லாக் கருவிகள் வாங்கும் ஒப்பந்தத்தை அவருக்கு நெருக்கமான ஒருவருக்கு ஒதுக்க என்னை வற்புறுத்தினார்கள்; ஆனால்  இவ்வகை ஒப்பந்தங்கள் மின் ஒப்பந்தங்கள் மூலமாகத் தான் இறுதி செய்யப்படும் என்றும் என்னை இடைஞ்சல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு நான் வெளியேறிவிட்டேன்.           

            எல்காட் நிறுவனம் தியாகராசச் செட்டியாரின் புதுவாழ்வுத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து ‘எல்நெட்’ என்னும் நிறுவனத்தை நடத்தி வந்தது.  ‘எல்நெட்’டில் எல்காட்டின் பங்கு இருபத்தாறு விழுக்காடாகவும் புதுவாழ்வின் பங்கு இருபத்து நான்கு விழுக்காடாகவும் மீதியுள்ள ஐம்பது விழுக்காடு மக்கள் பங்காகவும் இருந்தன.  இவ்வகைக் கூட்டு நிறுவனமான ‘எல்நெட்’டு,  சென்னை அருகில் உள்ள பள்ளிக்கரணையில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுடன் இணைந்த சிறப்புப் பொருளியல் மண்டிலத்தை அமைக்கும் பொருட்டு நூறு விழுக்காட்டுத் துணை நிறுவனமான இ டி எல் உள்கட்டமைப்பு நிறுவனத்தைத் தொடங்கியது.  இந்நிறுவனத்திற்குச் சொந்தமான இருபத்தாறு ஏக்கர் நிலத்திற்கு நடுவண் அரசு தகவல் தொழில்நுட்பச் சிறப்புப் பொருளியல் மண்டிலம் என்னும் நிலையை வழங்கியிருந்தது.  அந்நிலத்தில் ஓரிலக்கத்து  எண்பதாயிரம் சதுர அடி அளவில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை  இ டி எல் நிறுவனம் கட்டியது.  இவ்வளவையும் செய்த இ டி எல் நிறுவனம் ‘எல்காட்’டின் முன்னாள் தலைவராலும் வேறு சில அரசியல் பெருந்தலைகளாலும் ‘எல்நெட்’டு, ‘எல்காட்டு’ ஆகியவற்றின் கட்டுப்பாட்டை இழந்து போனது. 

எல்காட்டின் மேலாண் இயக்குநராக இருந்ததால் நானே ‘எல்நெட்’டின் தலைவராகவும் அப்போது இருந்தேன்.  ஆகவே இ டி எல் நிறுவனம் எல்காட்டின் கட்டுப்பாட்டையும் எல்நெட்டின் கட்டுப்பாட்டையும் எவ்வாறு இழந்தது என ஆராய்ந்து எல்நெட்டின் மேலாண் இயக்குநர் பொறுப்பில் இருந்து தியாகராசச் செட்டியாரின் மனைவி உண்ணாமலை தியாகராசனை நீக்க வேண்டும் என்று பங்குக்காரர்களின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீர்வு கொண்டு வந்தேன்.  அப்போதைய ‘எல்நெட்டு’ப் பங்குக்காரர்களின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம்  2008 ஆம் ஆண்டு சூலை முப்பதாம் நாள் நடக்கவிருந்தது.  

            எழுநூறு கோடி மதிப்புக் கொண்ட இ டி எல் உள்கட்டமைப்பு நிறுவனம் திடீரென மாயமானதைப் பற்றிக் குறிப்பிட்டும்  விவேக் அரிநாராயணன் இ.ஆ.ப., டாக்டர் சி. சந்திரமவுலி இ.ஆ.ப., ஆகியோரை இவ்வூழல் குறித்து விசாரிக்க வேண்டும் என்று வேண்டியும் அரசுக்குச் சிறப்பு அறிக்கைகள் அனுப்பினேன்.  இச்சிக்கல்களைக் களையும் பொருட்டு நானே நேரில் சென்று 2008 ஆம் ஆண்டு சூலை இருபத்தெட்டாம் நாள் எல்காட்டு அலுவலகத்தில் கோப்புகளைக் கள ஆய்வு செய்து கொண்டிருந்த போது, ‘எல்காட்டின் மேலாண் இயக்குநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழகத் தொழில் முதலீட்டுக் குழுமத்தின் (TIIC) மேலாண் இயக்குநராக அமர்த்தப்பட்டிருப்பதாகவும்’ எனக்கு மாற்றல் ஆணை வழங்கப்பட்டது.  இம்மாற்றல் ஆணை முறைகேடானது என்று நான் கருதுவதற்கு மேல் கூறிய காரணங்கள் பொருந்துவதாகவே கருத வேண்டியுள்ளது.  இம்மாற்றல் பொது நலத்திற்கு எதிரானது மட்டுமன்றித் தியாகராசச் செட்டியார் என்பவரை உதவும் நோக்கிலேயே அமைந்திருக்கிறது.  எல்காட்டில் இருந்து என்னைத் தடாலடியாக மாற்றியதன் பின்னணியில் நடுவண் அமைச்சர் மு. க. அழகிரி இருந்ததாகவும் தெரியவந்தது. 

            தமிழகத் தொழில் முதலீட்டுக் குழுமத்தின் (TIIC) மேலாண் இயக்குநராக நான் பணியாற்றிக் கொண்டிருந்த போது சன் தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வந்த மாறன் சகோதரர்களுக்கும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்திற்கும் இடையே பகை இருந்து வந்தது.  முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு. க. அழகிரிக்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையே எழுந்த பகையின் காரணமாகத் தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் எரிக்கப்பட்டதும் அங்கு எரிநெய்(பெட்ரோல்) குண்டு வீசப்பட்டதில் மூவர் இறந்து போனதும் நாடறிந்த செய்திகளாகும். 

            பின்னர் தொடங்கப்பட்ட அரசு மின்வடத் தொலைக்காட்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக நான் அமர்த்தப்பட்ட போது, இ டி எல் உள்கட்டமைப்பு நிறுவனம் திடீரென மாயமானதில் பங்குள்ளதாக என்னால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள டாக்டர். சி. சந்திரமவுலி இ. ஆ. ப. இன் கீழ் என்னால் பணியாற்ற முடியாது என்று முதல்வரிடம் வலியுறுத்திக் கூறியதுடன் இ டி எல்லைக் கொண்டு வருவதற்காக எல்நெட்டு நிறுவனத்திற்கு எண்பத்தொரு கோடிப் பணம் ஒதுக்குமாறும் வேண்டிக்கொண்டேன்.  பின் சந்திரமவுலி அரசு மின்வடத் தொலைக்காட்சி நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் பொறுப்பில் இருந்தும் தலைவர் பொறுப்பில் இருந்தும் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் முப்பதாம் நாள் விடுவிக்கப்பட்டு பி. டபிள்யு. சி. திவாகர் இ.ஆ.ப., அமர்த்தப்பட்டார். அதே நாளில் அரசு மின்வடத் தொ.கா. நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக நான் அமர்த்தப்பட்டேன்.    அப்பொறுப்பில் நான் நவம்பர் மூன்றாம் நாள் இணைந்தேன். 

            அப்பொறுப்பில் இருந்த போது மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சுமங்கலி மின்வடத் தொ. கா. நிறுவனம் அரசு நிறுவனத்தின் ஒளியிழை மின்வடங்களை அழித்து வந்ததையும் அத்தொழிலில் அவர்களுடைய வல்லாண்மையை நிலை நிறுத்துவதற்காக அவர்கள் அவ்வாறு செய்து வந்ததையும் கண்டறிந்தேன்.  இந்நிலையை உடனடியாக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றதுடன் சுமங்கலி நிறுவனத்திற்கு ஆதரவாக மாநில அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி சட்டத்திற்குப் புறம்பான வேலைகளில் ஈடுபட்டு வந்ததையும் எடுத்துரைத்தேன்.  இவை அனைத்திற்கும் மூல காரணமாக விளங்கி வந்த மாறன் சகோதரர்களை முன்காப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கவும் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கவும் வேண்டி அரசுக்குப் பல அறிக்கைகள் அனுப்பினேன். 

            மாறன் சகோதரர்களுக்கும் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்திற்கும் இடையே நிலவிய பூசல் பின்னர் ஒரு முற்றுக்கு வந்த பின்னும் இந்திய ஆட்சிப் பணி அலுவலராக நேர்மையாகச் செயல்பட்டு மாறன்களுக்குச் சொந்தமான சுமங்கலி நிறுவனம் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டினேன். 

            அதன் பின் அரசு மின்வடத் தொ.கா. நிறுவனத்தின் பொறுப்பில் இருந்து அடித்து விரட்டாத குறையாகத் துரத்தப்பட்டு சிறுசேமிப்புத் துறையின் ஆணையராக அமர்த்தப்பட்டேன்;  என்னை வெளியேற்றிய பிறகு அரசு மின்வடத் தொ.கா. நிறுவனம் முழுமையாக முடங்கிப் போய்விட்டது.         தற்போது தமிழக முதல்வரும் மாறன் சகோதரர்களும் என்னைப் பழி தீர்க்கும்பொருட்டு பல்வேறு இடையூறுகள் தர விரும்புகிறார்கள். 

            தமிழகத் தொழில் முதலீட்டுக் குழுமத்தின் (TIIC) மேலாண் இயக்குநராக நான் பணியாற்றிக் கொண்டிருந்த போது என் மனைவி சூரியகலா வணி.மு., ச.இ., மனிதவளத்துறை ஊழியராகச் சென்னையில் இருந்த டெசால்வு என்னும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் என்பதை மாநில அரசுக்கு 1968ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியின் நடத்தை விதிகள்  4(2) (ஆ) பிரிவின் கீழ் தெரிவித்தேன்.  என் மனைவி 1-4-2008 முதல் 31-12-2008 வரை இருபத்தைந்தாயிரம் உரூபாவை மாதச் சம்பளமாகப் பெற்று அங்கு பணியாற்றி வந்தார்.  

            மாறன் சகோதரர்களின் தூண்டுதலால் என்னை நெருக்கடிக்கு ஆளாக்கும் நோக்கில் தமிழக அரசு, என் மனைவி டெசால்வு நிறுவனத்தில் பணியாற்றியதைப் பற்றி வினவி, நடுவண் அரசின் இணைச் செயலாளராகத் தகுதியுடையோர் பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கும் நோக்கில் குறிப்பாணை அனுப்பியது.  அக்குறிப்பாணையால் இணைச் செயலாளர் தகுதியில் இருந்து இவ்வாண்டு நான் நீக்கப்பட்டேன்.  இன்னும் சொல்லப்போனால் ஒரு மகிழுந்துக் கடன் வாங்குவதிலும் தமிழக அரசின் வீட்டு மனை ஒதுக்கீட்டைப் பெறுவதிலும் கூட மறுக்கப்பட்டேன்.

            எனக்கு 2010 ஆம் ஆண்டு சனவரி பதினாறாம் அனுப்பப்பட்ட குறிப்பாணையை எதிர்த்து சென்னையில் உள்ள நடுவண் நிருவாக ஆணையத்திடம் முறையிட்டு (2010 ஆம் ஆண்டின் ஓ ஏ எண் 79) தடை உத்தரவு பெற்றேன். 

            என்னுடைய அசையும் சொத்துகளையும் அசையாச் சொத்துகளையும் பற்றிக் கேட்டுத் தலைமைச் செயலரிடம் இருந்து கடிதம் ஒன்று எனக்கு அனுப்பப்பட்டது.  அக்கடிதத்திற்கு 28-10-2009 அன்று மறுமொழி அனுப்பினேன். 

            06-05-2010 அன்று காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஒருவர் என்னைத் தொலைப்பேசியில் கூப்பிட்டு வருமானத்திற்கு அதிகமாக நான் சேர்த்திருக்கும் சொத்துகளைப் பற்றி விசாரணை நடத்த எப்போது சந்திக்கலாம் என்று கேட்டார்.  எந்த அதிகாரத்தின் அடிப்படையில் என்னிடம் கேள்விகளைக் கேட்கிறீர்கள் என்று நான் கேட்டபோது தாம் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையின் ஒப்புதலைப் பெற்றுத் தான் கேட்பதாக அவர் தெரிவித்தார்.  இதையடுத்து நான் இவ்விசாரணைக்குத் தடை வேண்டிச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைப் (2010 ஆம் ஆண்டின் டபிள்யு.பி. எண் 12274) பதிந்தேன்.    

            இவ்வழக்கு மட்டுமின்றி, இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவரை அவருடைய பதவிக்குக் கீழ்ப் பதவி வகிக்கும் காவல் அலுவலர் ஒருவர் ஊழல் தடுப்புச் சட்டம், குற்ற நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில்  விசாரிப்பதை எவ்வாறு ஊழல் கண்காணிப்பு தடுப்பு இயக்குநரகத்தின்  கையேடு ஒப்புகிறது என்பதைக் கேட்டு மற்றொரு வழக்கையும் (2010 ஆம் ஆண்டின் டபிள்யு. பி. எண் 15946) பதிந்தேன்.  என்னைப் போல் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஒருவரை இந்திய ஆட்சிப்பணிச் சட்டம், பொது ஊழியர் விசாரணைச் சட்டம், ஊழல் தடுப்புச்சட்டம், குற்ற நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநில அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர  இச்சட்டங்களின் கீழ் வழக்கே தொடராமல் விசாரணை நடத்த முடியாது.  இது குறித்த என்னுடைய வழக்கு நீதிமன்றத் தீர்ப்புக்குக் காத்திருக்கிறது.  நான் தாழ்த்தப்பட்டவன் என்பதற்கான சாதிச்சான்றிதழ் போலியானதா என்பதை விசாரிக்க வேண்டியிருப்பதாகக் கூறி அரசாணை எண். 670 இன் கீழ் கடந்த 21-7-2010 அன்று தமிழக அரசு என்னைப் பணியிடை நீக்கம் செய்தது. 

என்னுடைய பணி இடைநீக்கத்தைப் பற்றி 23-07-2010 அன்று தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டது.  சட்ட அடிப்படையில் என்னுடைய சாதிச் சான்றிதழ் செல்லும் என்றாலும் அரசின் குழு அதைப் பற்றிக் கேள்வி எழுப்பியது. 

            இந்திய ஆட்சிப் பணித் தேர்வு நடந்து முடிவுகள் வந்த போது என்னுடைய சாதிச் சான்றிதழை ஆராய வேண்டும் என்பதற்காக நடுவண் தேர்வுகள் ஆணையம் என் தேர்வு முடிவுகளைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்து பின்னர் முழுக்க ஆராய்ந்து அது உண்மையானது தான் என உறுதியான பின்னர் தான் முடிவை வெளியிட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  இவ்வாறு            ஊழல் புரிந்தோர் யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அரசு ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் செயலாற்றி வரும் என்னைக் குறி வைத்துப் பழிவாங்குகிறது. 

            ‘உமா சங்கர் போலிச் சாதிச் சான்றிதழைக் கொடுத்தார்’ என்று 25-07-2010 அன்று வெளிவந்த தி நியூ இந்தியன் எக்சுபிரசு நாளிதழ் செய்தி வெளியிடுவதற்கு மாநில அரசு காரணமாக அமைந்துவிட்டது.  இச்செய்தி அறிக்கை வெளிவருவதற்கு மாநில அரசும் மாறன் சகோதரர்களும் தமிழக ஊழல் கண்காணிப்பு தடுப்பு இயக்குநரகமும் வழிவகுத்திருக்கிறார்கள். 

            2010 இன் டபிள்யு பி எண் 15946ஐக் கொண்ட வழக்கில் இராம் மோகன்ராவ் இ. ஆ. ப. முறைகேடான வகைகளில் வருமானத்திற்கு அதிகமாக எண்பத்தோரு கோடி உரூபா அளவில் சொத்துச் சேர்த்திருப்பதாக நான் தெரிவித்திருந்தேன்.  அவரையும் அவரைப் போன்ற ஊழல் அலுவலர்களையும் பாதுகாத்துப் போற்றி வரும் அரசு என்னைப் போன்ற அலுவலர்கள் மக்கள் பணியில் ஈடுபடுவதை விரும்பவில்லை.  

            இவற்றையெல்லாம் சொல்லி நான் ஒன்றும் சிறப்பு உரிமைகளைக் கேட்கவில்லை.  நான் தவறிழைத்திருப்பதற்கான உறுதியான தகவல்களோ சான்றுகளோ இருந்தால் இந்திய ஆட்சிப்பணிச்சட்டம், பொது ஊழியர் விசாரணைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய எவற்றின் கீழ் வேண்டுமானாலும் குற்றங்களை உறுதிப்படுத்தட்டும்.  அதைச் செய்யாத தமிழக அரசு நான் போலிச் சாதிச் சான்றிதழைக் கொடுத்ததாக ஊழல் கண்காணிப்பு தடுப்பு இயக்ககத்தின் மூலமாக என்னைப் பற்றிக் கட்டுக்கதைகளை இட்டுக்கட்டிப் பரப்பி வருகிறது. 

மாறன் சகோதரர்களுக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுத்ததாலும் இ டி எல் உள்கட்டமைப்பு நிறுவனத்தில் நடுவண் அமைச்சர் மு. க. அழகிரியின் துணையுடன் நடந்த ஊழலை வெளிக்கொண்டு வந்ததாலும் என்னை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்று இன்றைய தமிழக முதல்வர் அலைகிறார்.  இன்னும் சொல்லப்போனால் என்மீது காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும் என்று கூட முதல்வர் வலியுறுத்திவருவதாக அறிகிறேன்.  இப்படிப் பல்வேறு வடிவங்களில் மாநில அரசின் அதிகாரங்கள் தவறாக என்மீது பயன்படுத்தப்படுகின்றன. 

            இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தமிழக முதல் அமைச்சராலும் அவருடைய குடும்பத்தாலும் அக்குடும்பத்திற்கு நெருக்கமான மாறன் சகோதரர்களாலும் நடத்தப்படும் சட்டத்திற்குப் புறம்பான வகைகளில் செய்யப்படும் கொடுமைகளில் இருந்து என்னைக் காப்பாற்றுமாறு   ஆணையத்தை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். 

            எனவே என்னுடைய சாதிச் சான்றிதழ் குறித்த விசாரணையை நடுவண் கண்காணிப்பு ஆணையத்தின் மூலமோ நடுவண் புலனாய்வு நிறுவனத்தின் மூலமோ நடுவண் அரசின் அமைப்புகள் எவற்றின் மூலமோ நடத்துமாறும் மாநில அரசின் விசாரணை வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். 

இனி வரும் காலங்களில் தமிழக அரசின் கீழ் பணிபுரியாது நடுவண் அரசிடம் நேரடியாகவோ அரசின் அமைப்புகள் எவற்றிலுமோ மட்டும் நான் பணி புரியும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் தங்களை வேண்டுகிறேன்.  அத்துடன் நடுவண் பாதுகாப்புப் படைகள் மூலம் எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்கிடவும் வேண்டுகிறேன். 

- சி. உமாசங்கர் இ. ஆ. ப. (1990ஆம் ஆண்டுப் பிரிவு)

சென்னை

044-42020423

செல்பேசி: 9444300123

மின்மடல்:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மொழிபெயர்ப்பு: முத்துக்குட்டி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

உமாசங்கர் எழுதிய கடிதத்தின் ஆங்கில மூலத்தைப் படிக்க இங்கே அழுத்தவும்