தொடர்புடைய படைப்புகள்

அச்சு ஊடகம், காட்சி ஊடகம் என்று வளர்ந்த ஊடகத்துறையின் பரிணாம வளர்ச்சி இணைய தளமாக விரிந்திருக்கிறது. அறிவியல் சாதனைகளை மூடநம்பிக்கைக்கும், தவறுகளுக்கும் பயன்படுத்துவோர்களுக்கு மத்தியில் நல்ல சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைக்கும் ஆர்வம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இணைய தளத்தைப் பொறுத்தவரை மற்ற ஊடகங்களுக்கு இல்லாத சவுகரியம் இதற்கு இருக்கிறது. அரசின் அடக்குமுறைகள் அதிகம் ஏவப்படாத ஊடகம் இது! இதனைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் இணைய தளங்களில் வலிமையாக பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில் மக்களின் கருத்தாக்கங்களை வெளியுலகிற்கு கொண்டு வருவதில் கீற்று இணையதளம் சிறப்பான இடத்தை வகிக்கிறது.

keetru_6th_1

கீற்று இணைய தளத்தின் ஆறாம் ஆண்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. ஆண்டு விழாக்களை வெறுமனே விழாவாகக் கொண்டாடாமல் சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தி கருத்தரங்கமாக நடத்தியது கீற்று இணைய தளம். அந்த வகையில் "இஸ்லாமியர் மீதான சமூக அரசியல் ஒடுக்குமுறைகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவிற்கு கீற்று இணைய தளத்தின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பிரியா அறிமுக உரையாற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

காவல் துறையின் வழக்குகளினால் சிறை தண்டனை அனுபவித்த முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஹாரூண் பாஷா, அப்துர் ரஹீம், ஆயிஷா சித்தீக்கா, ஜக்கரியா ஆகியோர் சிறை அனுபவங்களை பதிவு செய்தனர். தலித் முரசு பத்திரிகை ஆசிரியர் புனிதப் பாண்டின் மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர். இரண்டாவது அமர்வில் சுப வீர பாண்டியன், விடுதலை ராஜேந்திரன், ஜெயபாஸ்கரன், பாரதி கிருஷ்ண குமார், மாலதி மைத்ரி, பாஸ்கர் சக்தி ஆகியோர் கலந்து கொண்டு கீற்று இணைய தளத்தின் வருங்கால செயல்பாட்டிற்கான ஆலோசனை வழங்கினர்.      

"தாடி வைத்தவன் எப்படி நண்பனாக இருக்க முடியும்?''
- கீற்று பிரியா

“நம்முடன் இணைந்து வாழும் இஸ்லாமிய சமூகத்தினர் மீது பல்வேறு ஒடுக்குமுறைகள் திணிக்கப்படுகின்றன. அதைப் பற்றி புரிந்துணர்வு இல்லாமல் சமுதாயம் இருக்கிறது. முஸ்லிம்கள் தங்குவதற்கு வீடுகளைத் தருவது கூட பல்வேறு இடங்களில் மறுக்கப்படுகிறது.

என்னுடைய சொந்த வாழ்வில் நான் சந்தித்த இரண்டு சம்பவங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எங்கள் குடும்பத்திற்கு தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் ஒரு இஸ்லாமியர். மிகவும் நம்பிக்கையான அவர் இரவு 8 மணிக்கு மேல் ஆட்டோ வேண்டுமென்று சொன்னால் வருவதற்கு மறுத்து விடுவார். ஏன் என்று கேட்டால், "ஏற்கனவே காவல்துறை சுமத்திய பொய் வழக்கின் காரணமாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்திருக்கிறேன். இரவு நேரத்தில் வண்டி ஓட்டினால் அவர்களால் பெரிய தொந்தரவுகள் ஏற்படும்” என்று கூறி மறுத்து விடுவார். ஒருமுறை கிருஷ்ணகிரியில் இருந்து வந்த எங்கள் உறவினரை அழைத்து வருமாறு மிகவும் வற்புறுத்தி இரவு 11 மணிக்கு அவரை பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைத்தோம்.

உறவினரை அழைத்துக் கொண்டு வரும் வழியில் ஆட்டோவை நிறுத்தி காவல்துறையினர் விசாரிக்கின்றனர். எங்கள் உறவினர் ஆட் டோ டிரைவரை தன்னுடைய நண்பர்தான் என்று காவல்துறையினரிடம் தெரிவித்து ஆட்டோவை போக அனுமதிக்குமாறு சொல்கிறார். அதற்கு அந்த காவல்துறையினர் தாடி வைத்திருக்கிற இந்த ஆள் உங்களுக்கு எப்படி நண்பராக இருக்க முடியும் என்று ஆரம்பித்து தடித்த வார்த்தைகளைப் பேசியுள்ளார்.

இதனை எங்கள் உறவினர் எங்களுக்கு போன் மூலம் தெரிவித்தவுடன் நாங்களும் அந்தக் காவல்துறையினரிடம் பேசினோம். ‘அந்த ஆட்டோ ஓட்டுனர் எங்களுக்கு மிகவும் தெரிந்தவர். அதனால் தான் உறவினரை அழைத்து வர அனுப்பினோம்’ என்று சொன்ன பின்பும் சட்டை செய்யாத போலீசார், அந்த முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனரை விசாரணை என்ற பெயரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தில் உட்கார வைத்த பிறகு தான் அனுப்பினார்கள்.

அடுத்த சம்பவம், டிசம்பர்-6 அன்று காவல்துறையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை சோதனை செய்து கொண்டு இருந்தனர். மற்றவர்களை சாதாரணமாக சோதனையிட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர், முக்காடு போட்ட ஒரு முஸ்லிம் பெண்ணை மட்டும் கடுமையாக சோதனை செய்தனர். எந்த அளவிற்கு என்றால் வேலைக்குப் போகிற அப்பெண்ணின் கைப்பையில் இருந்த டிபன் பாக்ஸை பிரித்து அதில் இருந்த சாதத்தையும் கிளறிப் பார்த்தனர்.

இதில் காவல்துறையினரின் ஏளனப் பேச்சு வேறு. அந்தப் பெண் அழுது கொண்டே சாப்பாட்டை ஒரு ஓரமாக கொட்டிவிட்டு சென்றார். இந்தச் சம்பவமும் மற்றவர்களை எந்த விதத்திலும் பாதித்ததாகத் தெரிய வில்லை. அவர்கள் எதுவும் நடக்காதது போல் சாதாரணமாக இருந்தனர். அப்போது எங்களோடு வந்த ஒருவர் தன்னுடைய முஸ்லிம் நண்பரைப் பார்த்து உங்களால் தான் இந்தத் தொந்தரவு என்று சொன்னதைப் பார்த்து எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

நாங்கள் "கீற்று' இணைய தளத்தில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்துவதாக அறிவித்தவுடன் எங்களுக்கு வந்த பின்னூட்டங்கள் (ஃபீட் பேக்) பெரும் அதிர்ச்சியை அளித்தது.

‘முஸ்லிம்களுக்கு வீடு கொடுக்கப்படுவதில்லை என்பதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? இவர்களுக்கு வீடு கொடுத்தால் வீட்டு உரிமையாளர்களுக்குத்தான் கஷ்டம். போலீஸ் தொந்தரவு. அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி விட வேண்டியதுதானே’ என்பது போன்ற பேச்சுக்கள்!

இது ஏதோ பாமரனின் பேச்சு என்று ஒதுக்கி விட முடியாது. படித்த இளைய தலைமுறையின் கருத்துத் தான் இது. மேலும் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக அனுமதி வாங்குவதற்கும் பெரும் இன்னல்களை, இடைஞ்சல்களை சந்தித்தோம். இஸ்லாமியர்கள் என்று குறிப்பிட்ட காரணத்தாலேயே காவல்துறையினர் மிகவும் சிரமத்தைத் தந்தனர்.

இதற்கு முன்னால் மூன்று, நான்கு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். அப்போது எல்லாம் காவல் நிலையத்திலே அனுமதி வாங்கித்தான் நடத்தினோம். இந்த நிகழ்ச்கிக்காக அனுமதி கேட்ட போது இந்த நிகழ்ச்சிக்கெல்லாம் என்னால் அனுமதி தர முடியாது. ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று அனுமதி வாங்குங்கள் என்று சொல்லிவிட்டனர். ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றால் அங்கேயும் அவ்வளவு எளிதில் அனுமதி கிடைக்கவில்லை.

தெரிந்த நண்பர்களை வைத்து அதிகாரிகளிடம் பேசிய பின்பும் முதல் நாள் காலை 9 மணிக்கு வரச் சொன்னவர்கள் மாலை 6 மணி வரை காக்க வைத்த பிறகு தான் அனுமதி அளித்தார்கள். அதன் பிறகு இங்கே அரங்கத்திற்கு வந்தபோது இங்குள்ள ஊழியர்களிடம் நீங்கள் எப்படி இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு இடம் கொடுத்தீர்கள்? என்று காவல் துறையினர் விசாரித்துச் சென்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி சம்பந்தமான பேனரை அரங்கத்தின் முன்னால் காலையில் கட்டி வைத்திருந்தோம். கட்டி விட்டு சென்ற சில நிமிடங்களி லேயே அந்த பேனர் கிழிக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் புதிய பேனர் தயாரித்து இப்போது நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். கடைசி நிமிடம் வரை நிகழ்ச்சி நடக்குமா என்று பதட்டத்துடனே நடமாட வைத்து விட்டார்கள் காவல் துறையினர்” கவலையுடன் தெரிவித்தார் பிரியா.

“நீங்கள் ஒத்துக் கொள்ளுங்கள் - என்னால் அடி தாங்க முடியவில்லை''
ஹாரூண் பாஷா (கோவை)

keetru_6th_22006 சட்டமன்றத் தேர்தலின் போது பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்தேன். இதற்காக காவல் துறையினர் மதத்துவேஷத்தைத் தூண்டியதாக வழக்குப் போட்டார்கள். வழக்கு மன்றத்திலே காவல் துறையின் பொய் வழக்கை முறியடித்தேன். அதன் பிறகு என்னுடைய மகனின் பிறந்த நாளன்று நள்ளிரவில் என்னுடைய வீட்டிற்குள் நுழைந்த போலீசார் வீட்டை சோதனையிட்டனர். பிறகு என்னை கைது செய்து அழைத்துப் போன போலீசார் இரவு முழுவதும் ஒவ்வொரு ஸ்டேஷனாக மாற்றி கொண்டு சென்றனர்.

அதீக் ரஹ்மானுக்கு நீங்கள் வெடிகுண்டு கொடுத்ததாக அவர் சொல்லியுள்ளார். அதற்காக விசாரிக்கிறோம் என்று சொன்னார் கள். நான் எதையும் அதீக் ரஹ் மானிடம் கொடுக்கவில்லை. வேண்டுமானால் அதீக் ரஹ்மானை அழைத்து வந்து நேருக்கு நேர் வைத்துக் கேளுங்கள் என்று சொன்னேன்.

போலீசார் அதீக் ரஹ்மானை நேரில் அழைத்து வந்த போது நான் நேரடியாக அவரிடம், எப்போது நான் வெடிகுண்டுகொடுத்தேன்? ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அதீக் ரஹ்மான், “நீங்கள் ஒத்துக் கொள்ளுங்கள், என்னால் அடி தாங்க முடியவில்லை'' என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே போலீசார் இழுத்துச் சென்று விட்டனர்.

எங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த இஸ்லாமிய பிரசுரங்களுடன் மேப் ஒன்றையும் வைத்திருந்த போலீசார் அது பற்றிய விவரங்களைக் கேட்டனர். மேப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னவுடன், இது கமிஷனர் ஆபிஸ் மேப். வெடிகுண்டு வைப்பதற்காக மேப் வைத்திருந்ததாக ஒத்துக் கொள். இல்லாவிட்டால் வீட்டில் நீயும் உன் மனைவியும் மட்டும் இருக்கீறீர்கள். நீ ஒத்துக் கொள்ளாவிட்டால் உன் மனைவியை சிறைக்கு அனுப்புவோம். அதனால் ஒத்துக் கொள் என்று மிரட்டினர்.

72 நாள் சிறை வாசத்திற்குப் பின் வந்த என்னை உறவினர்கள் யாரும் சேர்ப்பதில்லை. சிறைக்குச் செல்லும்போது தீவிரவாதிகள் என்று பிரசுரித்த பிரபலப் பத்திரிகைகள் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலையாகி வெளியே வந்தபோது பிரசுரிக்கவில்லை. முஸ்லிம் சமுதாயம் பாதுகாப்போடு இருக்க வேண்டுமென்றால் பத்திரிகைகள் உண்மையை எழுத வேண்டும்.

சில பேருக்குத்தான் ஜட்டி இருக்கும் - எல்லோரையும் நிர்வாணப்படுத்தித் தான் அடிப்பார்கள்
- தடா அப்துல் ரஹீம்

keetru_6th_317 ஆண்டு கால சிறை வாழ்க்கையை பத்து நிமிடத்தில் சொல்லி விட முடியாது. சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வைத்ததாகக் கூறி என்னைக் கைது செய்தார்கள். நீதிமன்றத்தில் 60 நாள் விசாரணையை காவல் துறையினர் கேட்டு வாங்கினார்கள். ஒரே அறையில் பூட்டி வைத்திருந்தார்கள். பல நாட்கள் இரவு - பகல் எதுவென்றே தெரியவில்லை. அதிகாரிகளின் முகத்தையும், தோற்றத்தையும் வைத்து யூகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.

சிறையில் இருந்த விடுதலைப் புலிகளில் சிலர் தப்பித்த காரணத்திற்காக ஹெல்மெட் போட்ட காவல்துறையினர் எங்கள் மீது வெறித் தாக்குதல்கள் நடத்தினார்கள். சிறையில் இருந்த காலகட்டத்தில் அடிக்கடி எங்களை நிர்வாணப்படுத்தி அடிப்பார்கள். அப்போது சிலருக்கு மட்டுமே ஜட்டி போட அனுமதி அளிக்கப்படும்.

நாங்கள் சிறைக்கு எதிராக ஆட்சிக்கு எதிராக அரசியல் சட்டத்திற்கு எதிராக எதுவுமே பேசவில்லை. ஆர்எஸ்எஸ் பார்ப்பன சக்திகளின் கொடுமையை எதிர்த்து மட்டும் தான் போராடினோம்.

சிறை வாழ்க்கையின்போது தாயை, தந்தையை, மனைவியை, குழந்தையை, குடும்பத்தை இழந்த நிலையில் சகோதரர்கள் இருக்கிறார்கள். எந்த ஒரு முஸ்லிம் இயக்கமும் எங்களுக்கு குரல் கொடுக்கவில்லை. புகழேந்தி சங்சரசுப்பு, ப.பா. மோகன், பெலிக்ஸ் போன்ற வழக்கறிஞர்கள் தான் எங்களுக்கு உதவி புரிந்தார்கள்.

7 ஆண்டுகள் கூட நிறைவு பெறாத ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் அரசு, 14 ஆண்டுகள் கழித்த முஸ்லிம் கைதிகளை விடுவிப்பதில்லை. எத்தனை செம்மொழி மாநாடுகள் நடைபெற்றாலும், அண்ணா பிறந்த நாள் வந்தாலும் இதே நிலைதான்.

முஸ்லிமல்லாத சகோதரர்கள் எங்கள் குரல்களை வெளியே கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாகிஸ்தானுக்கு ஓடிப்போக மாட்டேன்! வாழ்ந்து காட்டுவேன்!
- ஆயிஷா

என் பெயர் சங்கீதா என்கிற ஆயிஷா சித்தீக்கா. இப்படி அழைத்தால் யாருக்கும் தெரியாது. மனித வெடிகுண்டு ஆயிஷா என்பது தான் எனக்கு வழங்கப்பட்ட பட்டம்.

1997-ஆம் ஆண்டு 19 வயது நிறைவு பெற்ற நான், இஸ்லாத்தை - ஓரிறைக் கொள்கையை வாழ்க்கை நெறியாகத் தேர்ந்தெடுத்தேன். எனக்கு விருப்பமானவரை திருமணம் முடித்தேன்.

குடும்ப எதிர்ப்பின் காரணமாக சென்னைக்கு வந்தேன். எங்கள் உறவினர் வீட்டில் தங்கியிருந்தேன். கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணைக்காக என்னுடைய உறவினரை தேடி வந்தவர்கள் எங்களையும் விசாரிப்பதாக சேர்த்து விட்டார்கள். நான் கோவைக்கே போகவில்லை. கோவை வெடிகுண்டு வழக்கிலே தேடுவதாகச் சொன்னார்கள்.

100 கிலோ வெடிகுண்டை கட்டிக் கொண்டு அத்வானியை கொலை செய்யப் போனேனாம். என்னுடைய மொத்த எடையே 40 கிலோதான். கோவை வெடிகுண்டு வழக்கிலே தேடப்படுவதாக போலீஸ் ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு ஆகிய இடங்களிலே என் னுடைய படத்தை ஒட்டியிருந்தார்கள். ஆனால் கோவை வெடிகுண்டு வழக்கு குற்றப் பத்திரிகையிலே என்னுடைய பெயர் கிடையாது.

இவ்வளவு பிரபலப்படுத்திய காரணத்தால் வெடிகுண்டு வழக்கிலே தேடப்பட்டவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக வழக்குத் தொடர்ந்தார்கள். தனிமைச் சிறையின் கொடுமைகளை என்னுடைய குழந்தையும் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக என்னுடைய மாமியாரிடம் கொடுத்திருந்தேன். சிறையை விட்டு வெளியே வந்த போது என்னுடைய குழந்தை என்னிடம் வரவிலலை. இதை விட பெரிய கொடுமை ஒரு தாய்க்கு என்ன இருக்க முடியும்?

சிறையிலிருந்து ஒரு வாரத்திற்கு 4 கடிதங்கள் என்னுடைய கணவருக்கு எழுதுவேன். மூன்றரை வருடத்தில் அவருக்கு கிடைத்த கடிதங்கள் மொத்தம் 17தான்.

நான் பாதிக்கப்படும்போது பத்திரிகைகளுக்கு தீனியாக்கினார்கள். என்னுடைய வாழ்க்கையைத் தொலைப்பதற்கு பத்திரிகைகள் தான் முழு முதற்காரணம்.

இழந்த சுயமரியாதையை மீட்பதற்காக போராடி வருகிறேன். உண்மைக்காகப் போராடுவேன். பாகிஸ்தானுக்கு ஓடிப் போக மாட்டேன். வாழ்ந்து காட்டுவேன்.

என்னைப் போன்று பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு வாதாடுவதற்காக என் மகனை சட்ட வல்லுநராக்குவேன். அப்பாவிகளுக்கு குரல் கொடுங்கள், எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை கிடைப்பதற்கு உதவி செய்யுங்கள். சமூக ஆர்வலர்கள், மீடியாக்கள் இதனை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

புதன் கிழமை கைது செய்தார்கள்! வெள்ளிக்கிழமை கைது செய்ததாக கோர்ட்டிலே சொன்னார்கள்!
- ஜக்கரிய்யா உசேன்

நோன்பு மாதத்திலே சஹர் உணவுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தபோது என்னைக் கைது செய்து கண்ணைக் கட்டி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள். புதன்கிழமை கைது செய்தவர்கள், வெள்ளிக்கிழமை வரை அன்-ரெக்கார்டாக வைத்திருந்தார்கள். ஆந்திராவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தம் இருப்பதாகக் கூறி விசாரித்தவர்கள், எங்களுக்கும் - அதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்தவுடன் கொடுங்கையூர் பாலத்தினருகே குண்டுகளோடு சென்றபோது பிடித்ததாக வழக்குப் போட்டார்கள்.

இங்கே வரும் செய்திகள் ஒரு தலைப்பட்சமானது!
முஸ்தீன் (இலங்கை திரைப்பட இயக்குனர்)

இலங்கையில் ஆயுதங்களால் நடந்த யுத்தம் முடிவடைந்துவிட்டது. இந்த ஊடகங்கள் அதனைப் பதிவு செய்தன. ஆனால் அவை அனைத்தும் ஒரு பக்க பார்வையுடையவை; ஒரு தலைப்பட்சமானது. அதன் மற்றொரு பக்கத்தை உங்களிடத்திலே வைக்கிறேன் என்று பீடிகையோடு துவங்கியவர், காத்தாங்குடியில் பள்ளி வாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை (குழந்தைகள் உட்பட) சுட்டுக் கொன்றனர். 1998ம் ஆண்டு காத்தாங்குடியைச் சுற்றியுள்ள முஸ்லிம்கள் வசிக்கும் 28 பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன. 60 குடியிருப்புகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

1990-ம் ஆண்டு 48 மணிநேர கெடுவில் வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேறச் சொன்னார்கள். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக வெளியேறினார்கள். அன்று வெளியேறியவர்கள் போர் முடிவுற்ற பின் மறுபடியும் அந்த இடத்திற்கு மீள்குடியேற்றத்திற்குச் செல்ல முடியவில்லை என்று கூறியவர் மேலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைப் பற்றி புள்ளி விவரங்களை அடுக்கிக் கொண்டே சென்றார்.

முஸ்லிம்களின் இந்த அவல நிலை வெளியுலகிற்கு தெரிய வராததற்கான காரணம், இலங்கைக்குள் முஸ்லிம்களுக்கான தினப்பத்திரிகை கிடையாது, வானொலி கிடையாது, தொலைக்காட்சி அலைவரிசை கிடையாது என்பதுபோன்ற விபரங்களைப் பதிவு செய்தது கருத்தரங்கத்திற்கு வந்திருந்த ஈழ விடுதலை ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. தமுமுக அன்சாரி மேடையில் ஏறிப் பேசியவுடன் அமைதி ஏற்பட்டு மீண்டும் கருத்தரங்கம் தொடர்ந்தது.

இலங்கையில் தமிழர்களிடையே ஏற்பட்ட பிரிவினையை இங்கேயும் வரவிடக் கூடாது!
- புனிதப் பாண்டியன், தலித் முரசு ஆசிரியர் 

இனப்படுகொலை, இனப் பாகுபாட்டினால் தான் நடைபெறுகிறது. இஸ்லாமியர்கள் மீதான அடக்கு முறைகளை அறிவதற்கு சிரமம் இல்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. எதற்காக ஒடுக்கப்படுகிறோம், எதற்காகப் போராடுகிறோம் என்பதை ஆய்வு செய்யுங்கள். இலங்கையில் பேரினவாதிகள் மத ரீதியான தமிழர்களைப் பிளவுபடுத்தி வெற்றி அடைந்ததைப் போல் இங்கேயும் நடைபெற விட்டு விடாதீர்கள்.

காவல்துறை சட்டத்தை தவறுதலாகப் பயன்படுத்துகிறது!  பத்திரிகை பிரச்சாரப்படுத்துகிறது!!
- வழக்கறிஞர் புகழேந்தி

keetru_6th_41996-ஆம் ஆண்டு பத்திரிகையாளர் மன்றத்திலே குணங்குடி ஹனீஃபா மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்கள். மறுநாள் தினமலர் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை. அதனால் அவர்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி கத்திகளை வழங்கினார்கள் என்று தெரிவித்திருந்தது.

காவல்துறையினர் இந்தச் செய்தி உண்மையானதுதானா என்று பத்திரிகையாளர் மன்றத்திலே விசாரிக்காமல் பிரிவு-75 சிட்டி போலீஸ் ஆக்டில் வழக்குப் பதிகிறார்கள். இந்த வழக்கை ஒத்துக் கொண்டாலே 150 ரூபாய் தான் அபராதம் விதிக்கப்படும். ஆனால் காவல்துறையினர் 12 ஆண்டு காலம் இழுத்தடித்து விடுதலை செய்தார்கள்.

தொடர் குண்டு வெடிப்பு வழக்கிலே ரஹீம் உள்பட சிலர் கைது செய்யப்பட்டார்கள். இந்த வழக்கிலே 151 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டார்கள். சாட்சிகளில் ஒருவர் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முபாரக் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

சின்னத் தம்பி தெருவில் இருந்த ஜிகாத் கமிட்டி அலுவலகத்தில் தொடர் வண்டியில் குண்டு வைப்பதற்காக சதி செய்திருந்ததாகத் தெரிவித்தார்கள். அதற்காக அந்த தெருவில் மூட்டை தூக்கும் இருவரை சாட்சிகளாக போட்டிருந்தார்கள்.

சாட்சி சொன்னவர்கள், ஆகஸ்டு கடைசி வாரம் நாங்கள் அங்கே போனபோது அவர்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள் என்று சொல்லி விட்டு மீண்டும் ஆகஸ்டு முதல் வாரம் போன போதும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். அது எப்படி கடைசி வாரம் போனதற்கு பின்னால் முதல் வாரத்திற்கு போக முடியும்?

1999-ஆம் ஆண்டு வெடிக்காத குண்டுகளை கைப்பற்றி அதை வைத்ததாக சிலரை கைது செய்தார்கள். பேனாவிற்கும் 18 வயது ஜலீல், பாவாடைவிற்கும் ஹக்கீம், சமோசா விற்கும் ஷேக் ஆகிய பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் மீது வழக்குப் போட்டு துன்புறுத்தினார்கள்.

கோவை கலவரத்தின் போது முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக இன்ஸ்பெக்டர் முரளி மீது வெடிகுண்டு வீசினார்கள் என்று வழக்குப் போடப்பட்டது. இந்த வழக்கில் 8-ஆவது குற்றவாளியாக உள்ள அமானி சம்பவம் நடக்கும் போது சிறையில் இருந்தார்.

மஹாராஷ்டிராவின் கார்க்கரே, கோவை பாலன், தென்காசி இன்ஸ்பெக்டர் போன்ற நல்ல அதிகாரிகளும் காவல்துறையில் இருக்கிறார்கள்.

ஏர்வாடி காசிம் என்பவரை நீதிமன்றம் கண்டிஷன் பெயலில் விடுவிக்கிறது. பூந்தமல்லியை விட்டு வெளியே போகக் கூடாது என்பது கோர்ட் உத்தரவு, அவருக்கு வீடு கொடுத்தவரை காவல்துறை தொல்லை கொடுப்பதாக தகவல்கள் வருகிறது.

வழக்குகளை வேகமாக நடத்த வேண்டும். வழக்குகளை தேவைக்கு அதிகமான காலம் நீட்டிப்பதே ஒரு வகையான ஒடுக்குமுறைதான். வழக்குகளை நீட்டிப்பதன் மூலம் சட்டத்தை தவறுதலாக அரசும், காவல் துறையும் பயன்படுத்துகிறது. பத்திரிகைகள் அதனை பிரச்சாரப்படுத்துகின்றன. நீதிமன்றமும் உதவுகின்றது. அநீதிக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக நின்று தட்டிக் கேட்க வேண்டும்.

- அபு சுபஹான்

(இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் வாரப்பத்திரிக்கையான ‘சமுதாய மக்கள் ரிப்போர்ட்’ ஜூலை 30 இதழில் வெளியானது)

Comments

17 comments

17
venkatesh
மூஸ்லீமகள் , மதரீதியாக மூஸ்லீம்கள் தாக்கபடுகிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பதிலேயே அவர்கள் மேலும் மேலும் மதம் சார்ந்தவர்களாக பிளவு பட்டு இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது,

மூஸ்லீம்க்கு பிரச்சனை என்றால் தான் அவர்கள் பேசுகிறார்கள்,

ஒரு இனத்திற்காக, தன் மொழிக்காக போராட்டம் என்றால் அது நமக்கு சம்பந்தம் இல்லாதது போல் இருக்கிறார்கள். இது தவறு. மதம் எனப்து இனத்தை குறிப்பது அல்ல,

மதம் எது என்றாலும் நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வுடன் தமிழன் எங்கு தாக்கப்பட்டாலும் அவன் எந்த மதம் என்றாலும், மொழி ரீதியாக, இன ரீதியாக ஒன்று பட்டு நாம் அதை எதிர்த்து போராட வேண்டும், அத்தகைய போராட்டத்தில் மூஸ்லீகள் கவனம் செலுத்த வேண்டும், அதை விடுத்து, மத ரீதியாக பிரிந்து தன் இனத்தை சேர்ந்தவனையே அந்நியமாக, எதிரியாக பார்க்கும் பார்வை மாற வேண்டும்,
இதை மூஸ்லீமக்ள் உணர வேண்டும், இனப்பற்று தான் அறிவியல் ரீதியானது,
அதுவே நம் இனத்தை காக்கும்,
venkatesh
இந்து, இஸ்லாம் என்ற பிரிவுகள் மதமே அன்றி இனம் அல்ல,

ஆகவே ஒரு பிரச்சனையை மத ரீதியாக அனுகுவது, மதத்தை வைத்து சிறுபாண்மை ,பெரும்பாண்மை என்று பிரிப்பது அறியாமை.

பிரிவுகள் இனரீதியாகத் தான் அமைகின்றன்,இனம் என்பது மொழி சார்ந்து அமைகிறது,
ஆகவே மத ரீதியான ஒடுக்குமுறைக்கு குரல் கொடுப்பது , ஒரு இனத்தை மத ரீதியாக மேலும் பிளவு படுத்தவே உதவும்,

இந்து, இஸ்லாம், கிறிஸ்து என்று மதங்கள் எது என்றாலும் அந்த மதத்தை சேர்ந்தவர்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் தமிழர்கள்,

ஆகவே, இந்த மத்திய அரசு ஒரு இனத்தின் மீது, தமிழர்களின் மீது எத்தகைய ஒடுக்குமுறைய கையாள்கிறது. நம் உரிமைகளை எப்படி பறிக்கிறது என்பதை எதிர்த்து தான் நம் போராட்ட அனுகுமுறை இருக்க வேண்டும்,

நீண்ட காலமாக, தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்கிறது,இதை எதிர்த்து இந்திய அரசு , இலங்கை அரசிடம் பேச வில்லை.

மேலும், இலங்கையில் ஈழ தமிழர்களின் உரிமை போராட்டத்தை ஒடுக்கியதில் நம் இந்திய அரசின் பங்கும் உள்ளது. இத்தகைய பார்வையுடன் கீற்று செயல்பட்டால் அது தமிழ் இனத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும்,

அதை விடுத்து, இஸ்லாமியர்கள் ஒடுக்கப் படுகிறார்கள் என்று மத ரீதியாக செயல் பட்டால் அது சமூகத்திற்கு, தமிழ் இனத்திற்கு எந்த வகையிலும் உதவாது.

இலங்கையில் கூட தமிழ்ர்களாக இருந்தும் , இஸ்லாமியர்கள் தமிழ் ஈழப் போராட்டத்தில் ஒதுங்கியே இருந்தார்கள்,
அவர்களின் மதப் பற்று,மொழி , இனப் பற்றை விட மிகுந்து காணப்படுவதே இதற்கு காரணம்,
இந்து மதத்தை எதிர்ப்பவர்கள், இஸ்லாமியர்கள் என்று மதரீதியாக ஆதரிப்பது முரண்,
நாத்திகம் என்றால் எந்த மதமும் இல்லை என்பதே, கடவுள் இல்லை என்றால் ராமரும் இல்லை,அல்லாவும் இல்லை, யேசுவும் இல்லை என்பதே உண்மையான நாத்திக பிரச்சாரமாக இருக்க முடியும்,
ஆனால் இந்து மதத்தை எதிர்த்து குறைக்கூறும் மேடையில், ஒருவர் இஸ்லாம் மதத்தை நேசிப்பவரை,அதை பரப்ப நினைப்பவரை , அலலாவின் பெயரால் என்று பேச்சை தொடங்குபவரை பேச அனுமதிக்கிறீர்கள், இது முரண் அல்லவா?
நான் இஸ்லாமியருக்கு எதிரானவன் அல்ல,.அவர்களும் தமிழர்களே என்று கூறுபவன், அவர்களும் அவ்வாறு உணரச் செய்ய வேண்டியது நம் கடமை.
இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டதை மத ரீதியாக அனுகாமல், மனித தன்மையுடன் அனுகினால், அதற்கு மதச்சாயம் பூசப்படாமல் தவிர்க்கலாம்,
ஒரு இஸ்லாம் மதத்தை சேராதவன் கைது செய்யப்படும் போது , அதை இந்து மதத்தை சேர்ந்தவர்களை கைது செய்துவிட்டார்கள் என்று யாரும் கூறுவதில்லை,

நம் நாட்டில் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவல், அவர்களால் தற்கொலை தாக்குதல் மற்றும் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது, பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிராவாதிகள் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்,
இந்நிலையில் நாட்டில் ஒரு வெடி குண்டு தாக்குதல் நடைபெறும் போது, குற்றவாளியை பிடிக்க முயலும் போது, சந்தேகத்தின் அடிப்ப்டையில் ஒருவர் கைது செய்யப்படும் நபரும் முஸ்லீமாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம், அதற்காக இந்த நாட்டில் இஸ்லாமியருக்கு எதிரான ஒடுக்கு முறை அதிகம் என்பது போல் பேசுவது அறியாமை,
ஒரு பக்கம் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்ககான குரல் ஒலிக்கிறது, மறுபக்கம் நாத்திகம், கூட முஸ்லீம்களுக்கான குரல் இவை முரண்பாடானவை,
மூஸ்லீம்களை , நீங்கள் முஸ்லீம்கள் அதனால் ஒடுக்கப்படுகிறார்கள் என்று கூறி மேலும் அவர்களை மதரீதியாக பிரிந்த போக செய்யாதீர்கள்,

தமிழ் இணைய தளம்,த மிழ் இனத்தை சார்ந்து தான் இருக்க வேண்டும். அது தமிழரின் நலனுக்கு குரல் கொடுப்பதாக இருக்க வேண்டும்,
மொழி ரீதியான ஒடுக்குமுறைகளை எடுத்து சொல்வதாக இருக்க வேண்டும் அன்றி மதரீதியான பார்வையுடன் இருக்ககூடாது.

தமிழனின் ஒடுக்கு முறையை பற்றி பேசுவோம்,
கீற்று தெளிவு பெற்றால் நலம்.

அன்புடன்,
இரா.வெங்கடேஷ்.
venkatesh
தமிழன் அபபடி தான் இனரீதியாக சிந்திப்பதால் தான் இங்கு கூட மூஸ்லீம்கள் அல்லாதவர்கள் குறிப்பாக இந்து மதத்தை சார்ந்தவர்கள் கூட மூஸ்லீம்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்,

ஆனால் முஸ்லீம்கள், அவ்வாறு செய்வதில்லை, அவர்கள் மூஸ்லீமக்ளுக்கு பிரச்சனை என்றால் தான் குரல் கொடுக்கிறார்கள்,

அதன் காரணம் தான் ஈழப் போராட்டத்தில் தமிழ் மூஸ்லீம்கள் விலகி இருந்தது, அதே போல் இங்கும் மூஸ்லீம்கள் தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆட்சி மொழி ஆகவேண்டும் போன்ற கோரிக்கை வைத்து போராடுவதில்லை, ஏன் அவர்கள் இன்னும் தமிழில் வழிபாடு கூட செய்வதில்லை, இந்நிலை மாறவேண்டும், மதத்திற்க்காக சொந்த் மொழி, பண்பாடு, கலாச்சாரம், தன் இனத்தை சேர்ந்த மற்ற மதத்தவரை எதிரியாக கருத் வேண்டியதில்லை,

வேறு இனம்,வேறு மொழி,வேறு கலாச்சாரம், பண்பாடு இருந்தாலும் பாலீஸ்தீன மூஸ்லீம்க்கு மதரீதியாக ஆதரவு கொடுக்கும் இங்குள்ள மூஸ்லீம் தன் கூட பிறந்து வளர்ந்த இந்த நாட்டின் தன் சொந்த இனத்தை சேர்ந்தவன், தன் சொந்த தாய் மொழியை பேசுபவனை எதிரியாக பார்க்கிறான், இது வேதனை.
maanu
venkatesh,
muslimkal tamilil vazhipadu nadathuvathillai endru solvadhu thavaru. muslimkal thozhukaiyai arabiyilthaan seiya vendum. ulakam muzhuvathum appadithaan seikiraarkal. oruvar tamililum, oruvar hindiulum seidhaal avarkalukulaye kuzhzppam vandhuvidum.
Srilankavil LTTE seidha thavarinaalthaan muslimkal avarkalai veruthadhu. mudhalil LTTE ku support seidhey vandaarkal. LTTE in vazhakkamana sandekamum, moorkamum, dhuroki endra ninaippum elloraium vilakka vaithathu pol muslimkalaium vilaka vaithathu.
RSS, BJP pondravarkalukku indraikkum unmaiyaka ethirppu seivadhu Congress alla, Communistil ulla hidukkale.
idhai ella muslimkalum arinde irukkiraarkal.
dhurookam seivadhu M.Karunanidhi groups & co. thaan.
Jaya ethiri, MK dhurooki. avvalavuthaan.
rishi
I accept Muslims underwent untold sufferings killings at the hands of LTTE. But there were many incidents where Tamils in the Eastern Province of Sri Lanka were equally underwent sufferings and killings at the hands of Muslims. Many Tamils were evacuated from their villages forcefully by Muslims with the help of Sinhala Armed Forces. Even now those Tamils are unable to return to their villages. Every one knows Muslim youths were recruited as Home Guards by the Sinhala special task forces and they jointly attacked and killed Tamil civilians in the Eastern province.

Anyone need to know more about these incidents, please read the book titled " Destroyed Tamil Villages" written by Mr Jeyanandamoorthy who was a journalist and member of Parliament from Batticaloa Eastern Province.

The Muslims and Tamils who talk about LTTE's atrocities do not talk about Muslim's jihad against Tamil villagers and their collaboration with Sinhala government and its armed forces to annihilate Tamils.
What a farce!
ramaseshan
கூட்டத்திலே இம்பூட்டி நட்ந்திருக்கு... இந்த அமார்க்ஸ் குரூப்பு இதெல்லாம் சொல்லாம, 'குருடனுக்கு ஒரே மதி'ங்கிற கீற்றுக்காரங்களை திட்டறத மட்டும் செஞ்சிருக்காங்க.. 'முஸ்லிம் நலன்'னு அமார்க்ஸ் பொடற வேஷம் அவங்க எழுதின கட்டுரையிலே ப்ல்லு இளிக்குது... சரியாகப் ப்திவு செய்த தவ்ஹீத் ஜமாத்துக்கு பாராட்டுக்கள்
Qaidemillath
அன்பு நண்பர்களே!
மனித சமுதாயம் எங்கு எல்லாம் தாக்கப்படுகிறதோ அங்கு எல்லாம் முதலில் குரல் கொடுப்பது இஸ்லாம் எனும் இயக்கம் தான்! முஸ்லிம்கள் தான்!( இது தான் பிரச்சினையே) ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அந்த செய்திகளை பத்திரிகைகள் வெளியிடுவதில்லை.. ஆயிரக்கணக்கான செய்திகளை நாம் பட்டியலிடலாம். அதற்க்கு தீர்வு என்ன ஆனது என்றே யாருக்கும் தெரியாது.. இரண்டு நாளைக்கு பரபரப்பாக செய்தி வெளியிட்டு காசுப் பார்க்கும் பத்திரிகைகள் மூன்றாவது நாள் அதை மறந்து விடுகின்றன.. அதை தான் என்ன அளவுகோள் என்று கேட்கிறோம்..
ஆடுமாடு
முஸ்லீம் பிரச்னைகளைப் பேச கீற்று இணையதளமும் இன்னும் பல முற்போக்கு புலி எதிர்ப்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஈழத்தில் தலித் பிரச்னையை மட்டும் எவருமே எடுத்து பேச மாட்டார்கள். முஸ்லீம்கள் தங்களை
தமிழர்களிடமிருந்து தனித்த அடையாளம் கொண்டால்தான் அவர்களுக்கு ஆதரவாக
நேசக்கரம் நீளுமென்றால், நாங்களும் தலித் என்பது தமிழர்கள் அல்லர். தலித் என்பது தனி அடையாளம் என்று உரத்த குரலெடுத்து சொல்லவேண்டிய நிலையை
நீங்களே உருவாக்குகிறீர்கள். நாங்கள் தனி தேசம் என்று போராடத்துவங்க வேண்டும். தலித் எங்கள் அடையாளம் தமிழ் எங்கள் அடையாளம் அல்ல. ஏனெனில் அந்த அடையாளத்துக்குள் திணிக்கப்பட்டுத்தான் நாங்கள் ஆடுமாடு போல
கவரப்பட்டு துரத்தப்பட்டு, அடைக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டு கொல்லப்பட்டோம். தமிழால் வீழ்ந்தோம். தமிழ் ஈழத்தால் வீழ்ந்தோம். ”இறந்த
லட்சக்கணக்கான தமிழர்கள்” என்று பொதுமைப்படுத்தலால் எங்களது இறப்பு
தமிழர்கள் என்ற அடையாளத்துக்குள் திணிக்கப்பட்டது. உண்மையில் வெள்ளாள கிறிஸ்துவர்களால் தலித்துகள் நாங்கள் கொல்லப்பட்டோம் என்பதே உண்மை.
வெங்கடேஷ்
சாதியோ ,மதமோ ஒரு இனமாக் கருதமுடியாது, மதத்தால் , சாதியால் நாம் சில பாதிப்புகள் அடைந்திருந்தாலும், அதை நம் அடையாளமாக கொள்வது தவறான போக்காகும்,
தமிழனின் வழித் தோன்றல்கள், பூர்வீகம், அந்த மக்கள் இனம் வந்த வராலாறு வேறு, அது போல் வேறு இனம் உதாரணமாக சிங்கள மக்களின் பூர்வீகம் , அவர்களின் வழித் தோன்றல் என்பது வேறு.
சில் சமயங்களில் கால ஓட்டத்தில் இரு இனங்களில் கலப்பு ஏற்படலாம், ஆனாலும் இனங்களை பிரிப்பது அவர்களின் பூர்வீகம், எங்கிருந்து வந்தவர்கள், அவர்கள் பேசும் மொழியை வைத்தே இனம் பிரிக்கப் படுகிறது,

ஆகவே இனத்தின் அடிப்படையில் ஒரு நாட்டில் சிறுபாண்மையினர் , பெரும்ப்பாண்மையினர் பிரிக்க வேண்டும்,
இலங்கையில் ஒரு தமிழர்கள் சிறுபாண்மையினர், சிங்களவர்கள் பெரும்பாண்மையினர் என்று தான் பிரிக்கப்பட வேண்டும், ஒரு தமிழர் ,பொளத்தத்தை தழுவியதால்,(அவர் தாய் மொழி மாறிவிடாது.)அவர் பெரும்ப்பண்மை இனத்தவராக கருத முடியாது, அதே போள் ஒரு சிங்களவர் இந்து மதத்தை தழுவிய்தால் , அவர் சிறுபாண்மை இனத்தவராக மாறிவிட மாட்டார்.
ஆகவே இங்கு சிலர் மதரீதியாக,சாதி ரீதியாக தன்னை தலீத் என்பதாக கூறிக்கொண்டு தங்களை பிரித்து பார்க்க வேண்டும் என்பது அறியாமை, மேலும் அவர்கள் சாதிய ரீதியாக கொண்ட பாதிப்புகளால் இருக்கலாம், அது கலையப்பட வேண்டியது தான், ஆனால் அதற்காக அதன் அடிப்படையில் பிரிவு என்பது அறிவியலுக்கு பொருந்தாது,
உலகில் அறிவியளார் எப்படி ஒரு இனத்தை பிரிக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்,
தலீத் என்றாலும் அவரும் தமிழரே, அவரின் தனி பட்ட ஆதங்கத்தினால் இத்தகைய முரணான கருத்துக்களை கூறுகிறார். அவர் இதை புரிந்துக் கொள்ளவேண்டும்,
சாதி என்பது ஒரு குடும்பத்தில் நடக்கும் உட்பூசல், அதையும் தமிழன் என்ற இன ரீதியாக நடைபெறும் போராட்டத்தையும் ஒன்றாக்கி குழப்பிக் கொள்ளகூடாது, அது போராட்டத்தின் தீவிரத்தை சிதைத்து விடும்,
ஒரு இன விடுதலைகாக போராடும் போது நம் சாதி, மத பாகுப்பாடுகளை மறந்து ஒரே இனமாக தமிழர்களாக போராட வேண்டும்,
ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரத்திற்காக போராடிய போது இந்திய மக்கள் சாதி , மதம் மட்டும் அல்ல இனம் , மொழி கடந்து ஒன்றுபட்டு விடுதலைக்காக போராடினார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது, அப்போது மத,சாதி பிரச்சனைக்கள் இருந்தன,ஆனால் அதை கடந்து நாம் இந்தியராக் ஒன்றுபட்டோம்,
அது போல் இன்று தமிழ்நாடு என்றாலும், அது இலங்கை என்றாலும், நாம் தமிழராக ஒன்றுபட்டு இன ரீதியாக ஒன்றுபட்டு நம் உரிமைக்காக போராட வேண்டும்,
Guest
இங்குள்ள மூஸ்லீமக்ள் , கிறிஸ்துவர்கள் மதரீதியாக வேறு மதம் த்ழுவி இருந்தாலும் இனரீதியாக அவர்களும் தமிழர்களே, நாங்கள் தமிழர் என்ற இனரீதியாக முரண்பட வில்லை,

ஆனால் அவர்க்ள் தாங்கள் தழுவிய மதத்தின் காரணமாக, தமிழராக இனரீதியாக ஒன்றுபட முடியாமல் முரண்படுகிறார்கள்,
இன ரீதியான ஒற்றுமை அறிவியல் பூர்வமானது,. நம் ஜீன்கள், பாரம்பரியம், நம் முதாதையர் , நம் உடல் அமைப்பு இதன் மூலம் அறிவியல் ரீதியாக நிறுபிக்க முடியும்,

ஒரு அறிவியலார் எனில் என்னை விட விளக்கமாக் அறிவியல் பூர்வமாக இதை விளக்குவார்,
Mohammad Ansari Raja
Assalamualaikum,

Nanbar Venkatesh soliya karuthai nan mutrilum marukiren. Muslimkal ondrum inna patru elathavarkal alla. Yenagalukum enna patru irukirathu. Muslimkal nadathum iiyakankal matha patru intrithan seyal padukintrana. thayavu seithu odrumothamaga muslimgalai koorai solathirkal.

Nangal santhithu anupavitha prachanaikalaye kooripidulom.

Anbudan,
Ansari
thamilini
எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் எனது கால்கள் பயணிக்கும்
- சேகுவேரா.

உலகமயத்தின் கோரப்பிடியில் மட்டுமல்ல இந்தியாவின் மேலாதிக்க யுத்தத்தில் ஒட்டுமொத்த வர்க்க, தேசிய இன, மத என அனைத்து மக்களும் சிக்கித் தவிக்கின்ற இச்சூழலில் நாம் ஒருபிரிவினரின் பிரச்சனைகளை மட்டும் பேசுவதோ அல்லது வெறும் ஆதரவு தருவதோ சாத்தியமில்லை. இந்தியத் துணைக்கண்டத்தின் அனைத்து தேசிய இன மக்களும் ஒன்றிணைந்து மதவெறி பிடித்த இந்துத்துவ பாசிசத்தை வேரறுக்க ஒன்றிணைந்தால் மட்டுமே எல்லா தரப்பு மக்களின் விடுதலையும் சாத்தியம் என்பதை இக்கட்டுரை உணர்த்துகிறது. அதுமட்டுமல்ல இன்றைய கட்டத்தில் ஒவ்வொரு பிரிவு மக்களும் பாதிக்கப்படும்போது மற்றொரு பிரிவினர் அவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பது என்பது மிக அரிதாக உள்ளது. இந்த வேற்றுமையை களைய இங்குள்ள அனைத்து முஸ்லிம், தமிழ்தேசிய மற்று கம்யூனிஸ்டுகள், மீனவ அமைப்புகள், தலித் அமைப்புகள், பெண்கள் இயக்கங்களின் போராட்ட குரல்கள் ஒற்றுமையை நோக்கி தன் திட்டங்களையும் செயல்களத்தையும் நகர்த்த வேண்டிய தேவை உள்ளது. அப்பொழுது தான் அரச ஒடுக்குமுறைகளை வெற்றிகொள்ளமுடியும். மீனவரோ, முஸ்லிமோ, பழங்குடியோ, பெண்களோ, தலித்துகளோ என எவர் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அவற்றில் மற்றவர்கள் அமைதிகாக்கும் ஒரு அவலநிலையை நாம் காண்கிறோம். இந்த சூழ்நிலையை மாற்றி ஒவ்வொரு அமைப்புகளும் இயக்கங்களும் தங்களை ஒற்றுமைக்கான ஒரு பொது அரசியல் நீரோட்டத்தை உருவாக்கவேண்டிய தேவை உள்ளது என நினைக்கிறேன். அது மட்டுமே ஒவ்வொரு மக்கள் பிரிவினரின் விடுதலைக்கு வித்திடும். ஈழத்தில் நடந்ததும் காஷ்மீரில் நடந்துகொண்டிருப்பதும் அதைத்தான் நமக்க உணர்த்துகிறது.
வெங்க்டேஷ்
தமிழினியின் கருத்து குழப்பம் நிறைந்ததாக உள்ளது,

அனைத்து தேசிய இனங்களும் ஒன்றினைய சொல்கிறார். பிறகு பாசிச இந்தி வெறியை எதிர்க்க வேண்டும் என்கிறார். மீனவர்,த்லீத்கள்,பழங்குடினர் ஒன்று சேர வேண்டும் என்கிறார்,
இவர்களில் பெரும்பாண்மையானவர்க்ள் இந்து மதத்தில் உள்ளனர்., எப்படி தங்களை தாங்களே எதிர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறாரா?

பிரச்சனை இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கையிலா அல்லது இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மீதா?
80 சதவிகிதத்திற்கு மேல் உள்ள இந்துக்களை ஒழித்து விட்டு 20 சதவிகித மககளுக்காக போராட வேண்டுமா?
ஒரு பக்கம் இந்து மதத்தை எதிர்ப்பது மறுபுறம் மீனவர், பழங்குடியினர், தலீதகள், மூஸ்லீம்களுக்காக குரல் கொடுக்கிறேன் என்பது., இதன் நோக்கம் என்ன, சமூதாயத்தில் உண்மையான சமநிலையை உருவாக்குவதா அல்லது அனைவரையும் மூஸ்லீம்,கி றிஸ்துவ மதத்திற்கு மாற்றும் உள்நோக்கமா?
இந்து பாசிசம் என்று சும்மா சொல்லிக் கொண்டு இருப்பது நகைப்புக்குரியது, நாத்திகம்,பகுத்தறிவு பேச வேண்டும் என்றால் அது அனைத்து மதத்திற்கு எதிராக அல்லவா இருக்க வேண்டும், மற்ற மதங்களில் ஏற்ற தாழ்வு இல்லையா?
என்னை போன்றவர்கள் அனைவரும் தமிழர் என்ற ஒற்றுமைக்கான கருத்துக்களை பதிகிறோம்., ஆனால் தமிழினியின் கருத்து பெரும்பாண்மையாக வாழும் இந்துக்களுக்கு எதிராக உள்ளது, இந்து மதம் போலியாக இருக்கலாம், அதை பின்பற்றும் மனிதர்கள் நிஜம் அல்லவா?
நான் நாத்திகத்தை பிராமணர்களுக்கு எதிராக பயன்படுத்துவதை கூட எதிர்க்கிறேன், ஏன் ஒரு பிராமணன் நாத்திகன் ஆகக் கூடாதா?
என் கருத்து அனைவரும் இந்து, முஸ்லீம், கிறிஸ்து ,என்ற எந்த மதம் என்றாலும், அதுபோல் பிராமணன், தலீத என்று எந்த சாதி என்றாலும் அனைவரும் தமிழராக ஒன்றுபட வேண்டும் என்கிறேன், இது நல்ல சிந்தனையா?
மக்களை பிரித்து ,ஒரு குறிப்பிட்ட இனத்தை ஒழிக்க நினைத்து பிரிவினை தூண்டும் வகையில் ஒரு குறிப்பிட்ட மதத்தை வெறுத்து பிற் மதத்தை ஆதரித்து பேசுவது நல்ல சிந்தனையா? யோசியுங்கள்,

அன்சாரி கூறிப்பிட்டது போல் மூஸ்லீம்கள் இன உணர்வு கொண்டவர்களாக பெரும்பாண்மையான மூஸ்லீம்கள் இருப்பார்கள் என்றால், மதத்தை இரண்டாம் பட்சமாக கருதுவார்கள் என்றால் அதை நான் வரவேற்கிறேன்.
என் பதிவுகள் மூஸ்லீம்களை வெறுக்கும் படி, ஒதுக்கும் படி பதியவில்லை. அவர்கள் மனம் திருந்த வேண்டும், அவர்கள் மதபற்றை விட இனப்பற்றை முதன்மையாகக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அனைவரும் தமிழராக வாழவேண்டும் என்றே என் முந்தைய பதிவுகளிலும் காணலாம்,,
ajmal
matru matha sahothararhale iraivan ungal meethu santhuyum samathanathayum undakuvanaha isslam oru unnatha matgam athi kandippaha allah kapparuvan
வெங்கடேஷ்
அந்த குண்டு வெடிப்பில் இறந்த வீரர்களின் ,இஸ்லாமிய உறவினர்கள் கண்ணிர் விட்ட அழுத காட்சியை கண்ட போது மன வேதனை அடைந்தது,
bhala
முற்றிலும் சரியே வெங்கடேஷ். எந்த ஒரு சமுதாயத்திலும் ஏற்ற தாழ்வு என்பது தவிர்க்க முடியாதது. அதனால் யாரும் பாதிக்க படாமல் பார்த்து கொள்ள வேண்டுமே தவிர, ஒருவரை அழித்து மற்றவரை வாழ வைக்க கூடாது.
Jafar
இங்கு முஸ்லிம்களுக்கு தமிழ் உணர்வில்லை என்று வாதிடுபவர்களுக்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். பாராளுமன்றத்தில் இந்தியை தேசிய மொழியாக கொண்டு வர ஏற்பாடு நடந்த போது அதை எதிர்த்து "இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமென்றால் அதற்கு முழு தகுதி மொழி வளமும், இலக்கிய வளமும், பழைமையானதுமான தமிழ் மொழிக்கே அந்த தகுதி உண்டென்று அழுத்தம் திருத்தமாக வாதாடியவர்கள் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் என்றழைக்கப்பட்ட இஸ்மாயில் ஸாஹிப் அவர்கள் என்பதை மறக்க வேன்டாம்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.