நெல்லையில் துவங்கி பல மாவட்டங்களிலும் சூறாவளியாய் சுழன்று பரவி வருகிறது டெங்கு சுரம். பிஞ்சுக் குழந்தைகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகிவிட்டனர். அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு நோயாளிகள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

        மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு. விஜய் அவர்கள் நெல்லை மாவட்டத்தில் நேரடி ஆய்வு நடத்தி, நிர்வாகத் தரப்பிலான சில நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுச் சென்றார். 17-05-12 அன்று அமைச்சரின் பேட்டியில் ‘ஒருவார காலத்திற்குள் டெங்கு முழு அளவில் கட்டுப்படுத்தப்படும்’ என்று அறிவித்தபின் ஒருவார கால இடைவெளியில் டெங்கு பலி எண்ணிக்கை மேலும் ஒரு மடங்கு அதிகரித்துவிட்டது; டெங்கு சுரம் பாதித்து மருத்துவமனைகளில் குவிவோர் எண்ணிக்கையும் கூடிவிட்டது.

       நோய்த் தொற்றுள்ளவர்களின் ரத்த மாதிரிகளை சென்னை கிங் இன்ஸ்டிடியூட், ஓசூர் ஐவிசி ஆராய்ச்சி மையம் & மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையங்களுக்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்த பின்னரே எந்த வகை சுரம் என உறுதி செய்யப்பட்டு வந்தது. சோதனை முடிவு வரும் முன் இந்நோய் பலருக்கு விரைந்து பரவும் நிலை இருந்தது. தற்போது நோய்த் தொற்றை உடன் அறிய விருதுநகர், திருநெல்வேலி, கோவை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கடலூர், சேலம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் தலா ரூ 10 லட்சம் மதிப்பிலான ELISA என்ற நவீனக் கருவி கொண்ட ஆய்வகங்களை தமிழக அரசு துவங்கி, 6 மணி நேரத்தில் பரிசோதனை முடிவு தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. கொசு ஒழிப்பில் மேலும் தீவிரம் காட்டப்பட வேண்டியுள்ளது.

       டெங்குவை அடங்கச் செய்வதற்கு இவை மட்டும் போதுமா? டெங்கு தொற்று தாக்கியவர்களில் 30% பேர்களுக்கு மரணம் நிச்சயம் என்று கூறுகிறது உலக நல நிறுவனம் (W.H.O.). இந்நோய்த் தொற்றுக்கு அதிகளவில் பலியாவது குழந்தைகளே. தாயக மருத்துவங்களைப் புறக்கணிப்பதால் தான் இத்தகைய மனித இழப்புகள்!       பல்வேறு உலக நாடுகளில் ஹோமியோ மருந்துகள் டெங்கு சுரத்தைத் தடுப்பதிலும், சிகிச்சை செய்து நலமளிப்பதிலும் வெற்றிகரமாகப் பயனளித்துள்ளன. இந்தியாவில் 1996ல் டெல்லியில் டெங்கு சுரம் புயல் போல் பரவிய நாட்களில் அப்போதைய அரசின் வேண்டுகோளுக்கணங்க டில்லி ஹோமியோபதி கவுன்சில் (Delhi Homoeopathy Anusanthan Parisat) ஹோமியோபதி மருந்துகளைப் பயன்படுத்தி டெங்கு சுரத்தை முற்றிலுமாய் கட்டுப்படுத்தியது. இது போன்ற முன்மாதிரிகளை மேலும் செழுமைப்படுத்தி டெங்குவை முடங்கச் செய்ய வேண்டும். அலோபதியை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் டெங்கு அடங்காது.

       தமிழக அரசுக்கு பொது மக்கள் சார்பிலும், மாற்று மருத்துவ பிரச்சார சங்கம் சார்பிலும், மாற்று மருத்துவ இதழ் சார்பிலும் இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

       1. டெங்கு சுரத்தை முறியடிப்பதில் ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவங்களை முழுவீச்சில், விரிவான அளவில் பயன்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

       2. டெங்கு சுரத்திற்கு இதுவரை பலியானவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும். இவ்விரு கோரிக்கைகளையும் உடனடியாக செயல்படுத்தி மக்கள் உயிரைக் காப்பதில் இதர மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக அரசு செயல்படவேண்டும்.

Pin It