செல்வி - 32 வயதுப் பெண்.  ஒரு வாரத்திற்கு முன் திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்து விட்டாள்.  அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.  செல்வியை பரிசோதித்து முதற்கட்டச் சிகிச்சையை அளித்தனர் டாக்டர்.

செல்வியின் குடும்பத்தினருக்கு பதட்டமும் குழப்பமும் கவலையும் ஏற்பட்டது. “செல்வி எந்தச் சூழ்நிலையிலாவது அதிகமாக கவலைப்பட்ட துண்டா?” என்று டாக்டர் விசாரித்தார்.  அவளுக்கு வந்த மயக்கம் திடீரென ஏற்பட்டது அல்ல என்று அவர் கருதினார்.  ஏதேனும் அதிர்ச்சிக்குப் பின் அவள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று யூகித்தார்.  டாக்டர் கூறிய விசயங்கள் செல்வி வீட்டாரை மேலும் பதட்டப்படுத் தியது.

இரண்டு நாட்களில் செல்வி வீடு திரும்பினாள்.  ஆயினும் அவள் முழுநலம் அடையவில்லை.  செல்வி மனதிலும் உள்ளூர ஒரு பதட்டம் உணர்ந்தார்.  அவளது குடும்ப நண்பர்களின் அறிவுரைப்படி என்னைச் சந்திக்க அழைத்து வரப்பட்டாள்.

என்முன்னே அமர்ந்திருந்த செல்வியை உற்றுப் பார்த்தபோது அவளது உடலெங்கும் ஒருவித நடுக்கம் காணப்பட்டது.  முகத்தில் பதட்டம் தெரிந்தது.  கண்கள் அலைபாய்ந்தன.  படபடப்பாக வருவதாக கூறினாள்.  என்னவென்று சொல்லமுடியாத ஏதோ ஒன்று மனதைத் தாக்கு வதாகவும், நடக்கக் கூடாத ஒன்று நடக்கப் போவது போலவும் மனதில் தோன்றுவதாகக் கூறினாள்.  அவள் பேசும்போது உதடுகளும் நடுங்கின.

“செல்வி உங்களுக்கு ஏன் இவ்வளவு பதட்டம் பயம்? எப்போதிருந்து இப்படி இருக்கிறது” என்று விசாரணையைத் துவங்கினேன்.          சிலநிமிடம் மௌனமாக இருந்துவிட்டு  செல்வி பதிலளிக்கத் துவங்கினாள். “என் பைய னுக்கு ஒரு தோசம் இருப்பதாகவும், அதனால் அவனுக்கு பெரிய ஆபத்து ஏற்பட இருப்பதாகவும், ஒரு ஜோஸியர் சொன்னார்.  அதற்குப் பரிகாரம் என்ன செய்யணும்னு கேட்டேன்.  ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சிறப்புப் பூஜை பையன் பெயரில் செய்தால் ஆபத்து நீங்கிடும்னு சொன்னார்” என்று அவள் கூறும்போது மேற் கொண்டு வார்த்தைகள் வெளிவராமல் விக்கித்து திணறுவது போலத் தோன்றியது.

மேற்கொண்டு என்ன நடந் தது என்ற சொல்ல அவள் சிலநிமிடம் சிரமப்பட்டபின் கூறினாள். “அந்தப் பரிகாரத்தைச் செய்வதற்காக ஜோசியர் சொன்னதுபோல கோவிலுக்குப் போனேன். ஆனால் எப்படியோ கொஞ்சம் லேட்டாகிவிட்டது.  சிறப்புப் பூஜை அதிகாலையிலேயே நடந்துமுடிந்து விட்டது. இனி அடுத்த மாதம் சிறப்புப்பூஜை நடை பெறும் என்று அர்ச்சகர் சொன்னார்.  அந்த நிமிடமே எனக்குப் பதட்டம், படபடப்பு, நடுக்கம் எல்லாம் வந்துவிட்டது.  கோவிலிலேயே மயக்கம்போட்டு விழுந்து விட்டேன்.  அதிலிருந்துதான் எப்போதெல்லாம் அதிகப் பதட்டம் வருகிறதோ அப்போது கண்ணைக் கட்டிக் கொண்டு வந்து விடுகிறது.”

நடந்து முடிந்த நிகழ்ச்சிகளைப் பற்றிச் செல்வி சொல்லும்போது மிகவும் பதட்டமாகவே இருந்தாள்.  அதிகம் வியர்த்தது.  “என் பையனுக்கு மட்டும் ஒன்னும் ஆகிவிடக்கூடாது” என்று என்னிடம் கோரிக்கை வைத்தாள்.

செல்விக்கு ஒரே ஒரு வேளை ஹோமியோ பதி மாத்திரை கொடுத்து உடனே வாயிலிட்டுச்  சுவைக்கச் சொன்னேன்.  மேலும் ஒருவார காலத் திற்கு தொடர் மருந்துகளும் தனியே கொடுத்த னுப்பினேன். ஒருவாரம் கடந்தது.  ஒருவார காலத்திற்குள்ளாகவே செல்வியிடம் பெரிய மாற்றம் காணப்பட்டது.  முகத்திலும், உடம்பிலும் பதட்ட மில்லை.  புத்துணர்வு தெரிந்தது.  “சார் நீங்கள் கொடுத்த மாத்திரை முழுவதையும் சாப்பிட்டு முடித்து விட்டேன்.  கைகால் நடுக்க மெல்லாம் முதல் இரண்டு நாளில் சரியாகி விட்டது.  பதட்டம் கொஞ் சம் கொஞ்சமாகக் குறைந்தது.  இப்போ நான் மட்டுமல்ல.  என் மகனும் நல்லாத்தான் இருக்கிறான்.  ஜோசியர் சொன்னபடி எதுவுமே நடக்கலை” என்று செல்வி கூறிய போது அவளிடமிருந்த மகிழ்ச்சி என் மனதிற்குள்ளும் பரவியது.

“சோதிடம் என்பது அறிவியல் இல்லை.  அறிவியல் ஆய்வுகளுக்கு உட்பட்டது இல்லை.  பழங்காலத்தில் நமது மூதாதையர்களின் அறிவியல் ஆதாரமற்ற வானவியல் சம்பந்தமான அறிவுகளின் அடிப்படையில் உருவான ஒன்றை, வெறும் நம்பிக்கையை மட்டுமே அடிப்ப டையாகக் கொண்ட ஒன்றை இன்று நாம் முழுமையாக ஏற்கவேண்டிய அவசியமில்லை.  சோதிடம் நமது முன்னேற்றத்திற்கு பெரியதடை என்பதால் தான் பாரதி சோதிடம் தனை இகழ் என்று ஓங்கிச் சொன் னான்.  இனிமேல் எந்த நிலையிலும் ஜோசியரிடம் போகாதீர்கள்!” என்று கூறி செல்வியை மனதார வாழ்த்தி அனுப்பினேன். அதே நிமிடம் இப்படியொரு உளவியல் சிக்கலின் முடிச்சை மிக எளிதாய் அவிழ்க்க உதவிய ‘ஜெல்சியம்’ போன்ற ஹோமி யோபதி மருந்துகளின் பேராற்றலை எண்ணி வியந்தேன்.

Pin It