மரத்தடி மாநாடு

[ சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு, டீசல் விலை உயர்வு, வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை ஆண்டுக்கு ஆறு மட்டுமே என மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்துள்ள, பொருளியல் சீர்திருத்தங்களை எதிர்த்து, அரசியல் கட்சிகள் நடத்திய முழு அடைப்பன்று அமுதனும் அல்லியும் கல்லூரி மரத்தடியில் சந்தித்துக் கொண்டனர்]

manmohan_singh_285அமுதன்: ‘பந்த்’ நடத்துறாங்க ஆனா பேருந்து ஓடுது, கல்லூரியும் வைக்கிறாங்க. நாமெல்லாம் என்ன செய்யுறது அல்லி ?

அல்லி: இப்போ, வகுப்பைப் புறக்கணிச்சிட்டு வந்ததே நாம காட்டுற எதிர்ப்புதான் அமுதா !

 அமுதன்: அல்லி, இனி “செயல்படாத பிரதம மந்திரி”ன்னு மன்மோகன் சிங்கைச் சொல்லமுடியாதல்ல?’

அல்லி: எப்பவும், அமெரிக்காவுக்காகச் செயல்படும் மந்திரிதான அவரு? அமுதா !

அமுதன்: மக்களைப் பார்த்து “ பணம் மரத்துலயா காய்க்குது”ன்னு மன்மோகன் சிங் கேட்கிறாரே, இது சரியா?அமுதா

அல்லி: ஆமாம் அமுதா, மன்மோகனுக்குப் பணம் மரத்துல காய்க்கல. இந்திய மக்கள சுரண்டிக் கொழுக்கிற முடிவுகளில்தானே காய்க்குது? அவருக்குள்ள பவருல காய்க்குது.

அமுதன்: நீ வேற அல்லி ! மன்மோகன் சிங்கை அமெரிக்காவின் கைக்கூலின்னுதான் சொல்றாங்க, நீ பவர் அது இதுங்கற.

அல்லி: மன்மோகன்சிங் அமெரிக்க முதலாளித்துவத்தின் ‘பவர் ஸ்டார்’ அமுதா !

அமுதன்: கொஞ்சம் வெளக்கமாத்தான் சொல்லேன்.

அல்லி : ‘மன்னுமோகன்’ தொடக்கத்தில இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர், அந்தப் பவர்தான் உலக வங்கியில அவரை அதிகாரியாக்குச்சு. அந்தப் பவரு அவரை அடுத்து இந்திய நிதியமைச்சர் ஆக்கியது. அப்பறம் அமெரிக்காவின் பரிந்துரையால் தலைமையமைச்சர் ஆனார். எட்டாண்டுக்கும் மேலாக அசைக்க முடியாத எடத்துல இருக்கராரே! எல்லாப் போட்டியாளர்களையும் வெல்லறாரே, தெரியல? அமெரிக்க முதலாளிகளின் பணம்தான் இந்தியாவின் முடிவுகளத் தீர்மானிக்குது, அமுதா !

அமுதன்: அப்படின்னா, மன்மோகன்சிங்

சோனியாவின் ‘கை’, அமெரிக்காவின் ‘கூலி’ங்கறியா ‘அல்லி !

அல்லி: அதில ஒன்னும் சந்தேகமே இல்ல அமுதா. ஏன்னா, சில்லரை வணிகத்துல அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிச்ச மன்மோகன் சிங்கை அமெரிக்கா பாராட்டு பாராட்டுன்னு பாராட்டி இருக்கே.

அமுதன்: அப்படியென்ன பாராட்டிச்சு?

அல்லி: “பல்பொருள் சில்லரை வர்த்தகம், தகவல் ஒலிபரப்பு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து, மின் உற்பத்தி ஆகிய துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இத்தகைய பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அரசின் இந்த முடிவு துணிச்சலானது” என்று அமெரிக்கா பாராட்டி இருக்குது.

அமுதன்: அப்படின்னா அமெரிக்க அரசுப் பயங்கரவாதத்துக்கு இந்திய அடி பணிஞ்சிருக்குங்கிற.

அல்லி: இந்தியா அடி பணிஞ்சு ரொம்ப நாள் ஆயிட்டு. ஆனா, இப்போ எழுந்திருக்க முடியாத படிக்கு நெலம மோசம் அமுதா !

அமுதன்: சில்லரை வர்த்தகத்தால நம்ம நாட்டுல விவசாய விளைபொருளுக்கு நல்ல விலை கெடக்கும், பொருளெல்லாம் கெட்டுப் போகதுன்னு, மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் கூறுகிறாரே உண்மையா, அல்லி ?

அல்லி: விவசாயப் பொருள் விலை ஏறினா, பருவமழை சரியா இல்லைன்னு சொல்வாங்க, இல்லேன்ன வெள்ளம் வந்து வீணாப் போச்சுன்னு சொல்லுவாங்க. வர்த்தகத்தாலாயா விவசாயம் நல்லா இருக்கப் போவுது? எல்லாம் அந்நிய முதலீட்டை ஆதரிக்கிறதுக்காகப் புளுகிற புளுகு அவ்வளவு தான்.

அமுதன்: “குளிரூட்டப்பட்ட கிடங்கு வசதிகள், கொள்முதல் முறைகள், விற்பனைப் பொருள்களில் ஒரே சீரான தரத்தை உறுதி செய்தல் போன்ற அம்சங்கள் முக்கியமாக நமது வேளாண்துறையைச் சேர்ந்தவர்களுக்குதான் நல்ல பலன்களைப் பெற்றுத் தரும்”னு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கமல்நாத் சொல்றாரே ?

அல்லி: அவர் மறைமுகமா வால்மார்ட் நிறுவனம் செய்து வர்ற ‘ ஊக’ வணிகத்தை மனசிலே வச்சுக்கிட்டுத்தான் அப்படிச் சொல்றாரு, அமுதா!

அமுதன்: அது என்ன ‘ ஊக’ வணிகம்னு சொல்ற அல்லி !

அல்லி: நம்ம நாட்டு விவசாயக் கூலிகள் விளைபொருள்களெ அறுவடை செய்யும் போதே விளைந்த தானியத்தைக் கூலியா எடுத்துட்டுப் போவாங்க. அது மட்டுமில்லாம ஆண்டுக்கணக்கில் துணி துவைக்கச் சம்பளம், முடிவெட்ட சம்பளம்னு தானியப் பொருளைக் கூலியா களத்து மேட்லேயே பெற்றுக்குவாங்க. இதெல்லாம் இனி நடக்காது, ஒட்டுமொத்தமா விளைபொருளை இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கிடுவாங்க. உதாரணத்துக்கு நெல்லை மொத்தமா வால்மார்ட் கம்பனி வாங்கிட்டுப் போயிடும். கொள்முதல் முடிந்த பிறகுதான் இதோட ஊக வணிகம் கொடி கட்டும். அதாவது அரிசி நிறைய கையிருப்பு இருக்கும் போதுதான் இந்த அன்னிய நிறுவனங்கள் அரிசியை இறுக்கமாக வைச்சுக்கிட்டே விலை ஏற வழிவகை செய்து கொள்ளும். அப்போ இந்த மந்திரிகளும் இருப்பாங்க. ஆனா கண்டுக்க மாட்டாங்க. எண்ணெய் விலையைக் கம்பனிக தீர்மானிக்குதில்ல, அது போல விவசாயப் பொருளுக விலையை இந்தக் கம்பனிகதான் தீர்மானிக்கும். மந்திரிமார்களுக்கெல்லா முறைப்படி கப்பம் கட்டீருவாங்க. இதுக்கத்தா இந்த மந்திரிக எல்லாம் நாக்கச் சப்புகொட்டுறாங்க. வாங்குன காசுக்கு ஊளை இடலீன்னா அமெரிக்கா கோவிச்சுக்கும்ல!

அமுதன்: அன்னிய நேரடி முதலீடு மூலமா எத்தன நிறுவனங்க நம்ம நாட்டுக்கு வரப்போவுதோ தெரியலையே, அல்லி?

அல்லி: இப்ப உடனடியா வால்மார்ட் அமெரிக்க நிறுவனம், கேர்ரேபோர் பிரான்சு நாட்டு நிறுவனம், டெஸ்கோ இங்கிலாந்து நாட்டு நிறுவனம் ஆகியன இந்தியாவுல கடை விரிக்கப் போகிற நிறுவனங்கள்.

அமுதன்: அப்புறம் ஏன் வாஸீயீமாட் நிறுவனத்தைப்பத்தி மட்டும் எதிர்த்து பேசுறாங்க.

அல்லி: அதுதான் சொந்த நாட்டுலேயே அடித்து விரட்டப்படுகிற மிகப்பெரிய இராட்சத நிறுவனம். அதுக்கு உலகெங்கிலும் 8500 கடைகள் இருக்கு. 20 லட்சம் ஊழியர்களை வேலைக்கு வச்சிருக்கு.

அமுதன்: மிகப் பெரிய வாலுன்னு சொல்லு. அதா அமெரிக்காவிலிருந்து நீளுது போலிருக்கு. ஆமா, அது இந்தியாவுக்கு வர அரசியல் கட்சிகளுக்கு நிறையப் படியளந்திருக்குமில்ல?

அல்லி: பாத்திரத்துக்கேத்த பிச்சைய வாங்கிகிட்டுத்தான் அரசியல் கட்சிகள் சிவப்புக் கம்பளம் விரிக்குது.

அமுதன்: ஆமா அல்லி, ரிலையன்சு பிரஷ்னு கடை வக்கிறாங்களே. அது போலத்தானா இதுவும்?

அல்லி: இது இராட்சதக் கடையாச்சே. அதுபோல பலமடங்கு. ஒரு கடையோட மொத்தப் பரப்பளவு 35000 சதுர அடி; கடைக்கான முதலீடு 550 கோடி. அத்தனப் பெரியகடை நடத்த எத்தனப் பெரிய இடம் வேணும்னு பாரு!

அமுதன்: வால்மார்ட் நிறுவனம் வந்தால் வேலைவாய்ப்பு பெருகும்னு சொல்றாங்களே!

அல்லி: வால்மார்ட் நிறுவனம் ஒண்ணு வந்தா அதைச்சுற்றி இருக்கிற பல கடைகள் மூடப்படும். ஏன்னா மொத்த விளைபொருளையும் அது தன்னகத்தே நிறைப்பிக்கும். சில்லறை வியாபாரிகளுக்கு விளைபொருள் கெடைக்காது வால்மார்ட் கடையில வாங்கி வித்தாலும் சில்லறை வியாபாரிகளுக்குக் கட்டுப்படி ஆகாது. அதனால் வால்மார்ட்டு கம்பெனியில ரெண்டு பேருக்கு வேலை கெடைச்சா மூணு பேருக்கு வேலை பறிபோகும்னு ஒர் ஆய்வே சொல்லுது.

அமுதன்: அப்படீன்னா, ஜக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் சொல்லுறது சுத்தப் பொய்யா?

அல்லி: அமெரிக்காவுல இந்த நிறுவனத்த வெரட்டி அடிச்சாங்களே! அது பத்தி உனக்கு சொல்லறேன் கேளு அமுதன்

அமுதன்: சொல்லு அல்லி!

அல்லி:இந்த 2012 சூன் மாதம் 30ந் தேதி அமெரிக்காவிலேயே மிகப்பெரிய பொருளாதார நகரமான லாஸ்ஏஞ்சல்சுல ‘வால்ட்மார்ட்’ என்றால் ‘வறுமை’ன்னு பதாகை தாங்கிப் பேரணி நடத்தினாங்க. அது மட்டுமா? அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன்னில் அமெரிக்கா முழுவதும் வால்ட்மார்ட் வேண்டாம் என்று வால்மார்ட் விரிவாக்கத்தை எதிர்த்து முழங்கினாங்க. நியுயார்க் நகரத்தில வால்ட்மார்ட் சிறு வியாபாரிகளை நிர்மூலமாக்கிடும்னு சொல்லி மண்ணை வாரி வீசுறாங்க.

அமுதன்:       ஆமா அல்லி! நான் கூட படிச்சேன், வால்மார்ட் அருகில் உள்ள சிறு வியாபாரிகளைக் கூண்டோட ஒழிக்குதுன்னு. அதனால அதுக்கு ‘சாவுக் கதிர் வீச்சுன்னு’‘அல்டாண்டிக்சிடிஸ்’ என்ற ஊடகப்பத்திரிக்கை சிறப்புத் தலைப்புக் கொடுத்திருக்குது

அல்லி: நம்ம நாட்டுல கூட ஆனந்த விகடன் பத்திரிகை ‘கொலை வெறித்திட்டம்’னு மன்மோகன் படத்தைப் போட்டுப் பாராட்டி இருக்கு.

அமுதன்: இதெல்லாம் நம்ம மக்களுக்கு எங்கே தெரியப் போவுதுன்னுதான் மன்னுமோகனும் மெதப்பா பணம் மரத்துலயா காய்க்குதுன்னு கேட்கிறாரு. சோனியா எல்லாச் சோலியையும் மன்மோகனை வச்சே முடிச்சிட்டாங்க. இனி மகன் இராகுலுக்கு முடிசூட்டவேண்டியதுதான் மீதி.

அமுதன்:சீர்திருத்தம் என்ற பெயரில் காங்கிரஸ் கொள்ளையடிக்குதுன்னு மம்தா அம்மையார் சொல்றாங்களே, அது சரிதானே அல்லி?

அல்லி: சரிதான். இந்தக் கொள்ளைய அவுங்க கிட்ட கேட்டுக் கூட்டாச் செய்யுலேன்னு அவுங் களுக்கு வருத்தம் அமுதன் அதாவது பங்கு இல்லாம போயிடுச்சேங்கிறாங்க. அட வடை போச்சே!

அமுதன்:பாரதிய சனதாக் கட்சிக்காரங்க சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்ப்போம்னு கச்சை கட்டுறாங்களே! நாங்க ஆட்சிக்கு வந்தா அன்னிய நேரடி முதலீடு கைவிடப்படும்னு சொல்றாங்களே!

அல்லி:அதெல்லாம் சும்மா! இவங்க 2004 தேர்தல் அறிக்கையில் 26 விழுக்காடு அன்னிய நேரடி முதலீடு கொண்டு வருவோம்னு சொன்னவங்கதான். அப்போ மன்மோகன் எதிர்த்துப் பேசினாருன்னு பாசக சொல்லுது. இப்போ பாசகாவைக் காட்டிலும் கூடுதலா 51 விழுக்காடுன்னு மன்மோகன் முந்திகிட்டாருன்னுதான் பாசகாவுக்கு வருத்தமே தவிர, அந்நிய முதலீடு உள்ள வர்றதிலே அவங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை இவங்களை எல்லாம் அமெரிக்காவிலே விலை கொடுத்து வாங்கிறதை நாம வருங்காலத்துல வேடிக்கை பார்க்கலாம் அமுதன்.

அமுதன்: ஆளும்போது அமெரிக்கா அடிமை. ஆள்வதுக்கு வாக்கு வாங்க மக்களுக்கு அடிமை மாதிரி பேசுவாங்க. மக்களே எசமானர்களுன்னும் சொல்லுவாங்க. ஆன மக்கள் போராடினா போலிச வச்சும் இராணுவத்த வச்சும் ஒடுக்குவாங்க. ஆமா அல்லி, அன்னிய நேரடி முதலீட்டை எதுக்கும் எதிர்க்கட்சிகள் தீர்மானத்தைத் திமுக ஆதரிக்குமுன்னு கருணாநிதி திருவாய் மலர்ந்திருக்காரே, எப்படி?

அல்லி:அதுவா காங்கிரசுக்கும் திமுகவுக்கும் கொள்கையில பிரச்சினை இல்லேன்னாரு. கட்சிச் செயற்குழுவில சிலர் பொங்கிட்டாங்க. அதான் மாத்தி உறு அடிக்கிறாரு. உடையுற உறியில நெய் எடுக்கறதுதான கருணாநிதியின் அரசியல் மூளை.

அமுதன்: இன்னும் மின்சாரக் கட்டணம், பேருந்துக்கட்டணம் எல்லாம் ஏறும்னு பத்திரிகையில சேதிவருதே அல்லி.

அல்லி: சமையல் எரிவாயுவத்தான் நுறு மடங்கு ஏத்திட்டாங்க. ரயில் சரக்குக் கட்டணமும் சேவை வரியால ஏறிப்போச்சு. மக்கள் மரணத்தை நேசிக்க வேண்டியதுதான் போல அமுதா.  

அமுதன்:       ஒரே நேரத்துல எல்லா மக்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்திட்டாரு மன்மோகன். வணிகர்களெல்லாம் கடைகளில கருப்புக் கொடி எல்லாம் ஏத்தித் தங்களோட எதிர்ப்பத் தெரிவிக்கிறாங்க. ஆனா பொது மக்கள் மட்டும் அமைதியா இருக்காங்களே?

அல்லி: அடிக்கிற சூறாவளிக் காத்துல மாட்டினா எங்கே கெடக்குறோம்னு தெரியாது. அதுபோலத்தான் பொது மக்கள் நெலமை. போராடிப் பழக்கப்படாத வங்க. ரேசனுக்கும் வாக்களிக்கவுமே வரிசையில நின்னு பழக்கபட்டவங்க. சகிப்புத் தன்மையோடவும் மறதியோடவும் வாழுறாங்க. அரசியல் கட்சிகள் போராடினாலும் அதையும் “பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமப் போராட முடியாதா?” ன்னு புதிய தலைமுறைப் பத்திரிக்கை கவர் ஸ்டோரி எழுதுதே! இதை என்ன சொல்ல?

அமுதா: மக்கள் அமைதியாப் புரட்சி நடத்தினாலும் நடத்துவாங்கன்னுதான் நான் நெனக்கிறேன் அல்லி!

அல்லி: காங்கிரசுக்கு எதிராகவா?

அமுதா: காங்கிரசுக்கு எதிராக மட்டுமல்ல, பாசக உள்ளடக்கிய அமெரிக்கக் கைக்கூலிக அனைவரும் ஒருநா மக்களாலே விரட்டியடிக்கப் போறது என்னமோ உறுதியா நடக்கப் போறதுதா.

அல்லி: அந்த நாளை விரைந்து எதிர்பார்ப்போம்! நம்ம தோழர்க காத்துக்கிட்டிருக்கிறாங்க. அடுத்து, போராட்டத்தை எப்படிக் கொண்டு போறதின்னு பேசி முடிவெடுக்கனும். வா போவோம்.

(கல்லூரிக்கு வெளியே திரண்டிருந்த மாணவர் கூட்டத்தை நோக்கி இருவரும் விரைந்தனர்.)

Pin It