நாடெங்கும் மின்தடை, இதனால் அன்றாடத் தேவைகளுக்கும், தொழில் உற்பத்தி பெருக்கத்திற்கும் இந்த மின்தடை தடை விதித்துள்ளது. மின் உற்பத்தி குறைந்து வரும் நிலையில் அதனை அதிகரிக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இந்திய தேசத்தில் ஆண்டொன்றுக்கு 1,30,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வளர்ந்துவரும் இந்திய தேசத்திற்கு இது நிச்சயம் போதாது தான். தொழில் வளர்ச்சியாலும், அதனைச்சார்ந்த விளம்பரத்தாலும் இன்றைய மனிதனின் மின் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. தேவை அதிகரிக்க, அதிகரிக்க மின் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

Manmohan singh and Bush2020ம் ஆண்டில் நமது மின்தேவை நாளொன்றுக்கு 694,444 மெகாவாட்டாகவும், மாதத்திற்கு 20,833,33 மெகாவாட்டும், ஆண்டொன்றுக்கு 2,50,000 மெகாவாட்டும் தேவைப்படும். எனவே நமது மின் உற்பத்தியை உயர்த்தினால் மட்டுமே இதனை ஈடு செய்யமுடியம். நீர் மின்நிலையங்களும், நிலக்கரியால் தயாரிக்கப்படும் அனல் மின் நிலையங்களும் எரிவாயுவின் மூலம் தயாரிக்கப்படும் மின் நிலையங்களும் நம் நாட்டின் மின் தேவையை நிவர்த்தி செய்துவருகின்றன. ஆனால் நமது ஒட்டுமொத்த தேவையில் வெறும் 3 விழுக்காடு அளவிற்கே அணு மின் நிலையங்கள் பயன்பட்டு வருகின்றன. அதவாவது 5 ஆயிரம் மெகாவாட் அளவிற்கே மின் உற்பத்தி நடைபெறுகிறது. நீர்மின் உற்பத்தி குறைந்துவரும் வேளையில் வெளிநாடுகளிடம் இருந்து நிலக்கரியை விலைக்கு வாங்கித்தான் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

அதேநேரம் அணுசக்தி தொழில்நுட்பத் துறையில் முன்னேறிய நாடாகத் திகழும் இந்தியாவிற்கு நமது அனுமின்சக்தித் திறனை பன்மடங்கு உயர்த்திக் கொள்ளும் அனைத்து திறமைகளும் நம் விஞ்ஞானிகளிடம் உண்டு. நமது 17 அணு மின் நிலையங்களும் சில மாதங்களுக்கு முன்வரையில் தனது உற்பத்தி திறனில் அதிகபட்சமாக 90 சதவீதம் வரை உற்பத்தியைத் தந்துள்ளன. ஆனால் உற்பத்திக்குத் தேவையான யுரேனியம் சரிவர கிடைக்காததால் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே தற்போதைய உற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அணு மின் உலைகளை வடிவமைத்து உருவாக்கிடும் தொழில்நுட்பம் நமது விஞ்ஞானிகளின் கையில் அபாரமாக உள்ள நிலையில் அணு உலைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் யுரேனிய கழிவை மறுசுழற்சி செய்து அதன் கழிவிலிருந்து கிடைக்கும் புளுட்டோனியத்துடன், யுரேனியத்தைச் சேர்த்து பாஸ்ட் பரீடர் ரீஆக்டர் என்றழைக்கப்படும் அதி வேக ஈனுலையைப் பயன்படுத்தி மின்சாரத்தைத் தயாரிக்கும் திறனிலும் நமது விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இதே முறையில் தான் கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஈனுலை 2010ம் ஆண்டில் தனது உற்பத்தியை நாட்டிற்குத் தரவுள்ளது.

அதே வேளையில் கல்பாக்கத்தில் உள்ள “காமினி” என்ற அணு உலையில் நம் நாட்டில் அதிகளவில் கிடைத்துவரும் தோரியம் எனும் அணுப் பொருளை யுரேனியமாக மாற்றி அதனை எரிபொருளாகப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான மற்றொரு சோதனையும் நமது விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நம் நாட்டில் உள்ள 90 ஆயிரம் டன் யுரேனியத்தை கொண்டு 10 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும். தற்போது நம் நாட்டின் ஒட்டுமொத்த 130 கிகாவாட் மின் உற்பத்தியை பெரும் வரும் தொழில், மற்றும் தேவைக்கேற்ப குறைந்தது அடுத்த 5 ஆண்டுகளில் 250 கிகாவாட்டாக அதிகரிக்க வேண்டும். ஓட்டுமொத்த உற்பத்தியில் வெறும் 3 சதவீதம் மட்டுமே உள்ள அணு மின்சாரம் 2020ம் ஆண்டில் 40 ஆயிரம் மெகாவாட் எனவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் துரித கதியில் நடைபெற்றுவருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான் மத்திய அரசு அமெரிக்காவுடன் பிடிவாதமாக நாட்டு மக்களுக்கு பல உண்மைகளை மறைத்து அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றும் பணியில் உள்ளது. இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தினால் ஒப்பந்தம் உடனடியாக தன்னிச்சையாக ரத்து செய்யப்படுவது, அணு மூலப் பொருட்களையோ, உலை வடிவமைப்பையோ அமெரிக்கா தராதது என்பது, ஹைட் சட்டத்தின் மூலம் இந்தியா அமெரிக்காவிற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பது, அமெரிக்காவின் சம்மதம் இல்லாமல் இந்தியா எக்காரணம் கொண்டும் என்.எஸ்.ஜி நாடுகளிடம் பேச்சு நடத்தக் கூடாது என்பது, மேலும் இந்தியாவின் ஒப்புதலை எதற்கும் பெறவேண்டியதில்லை போன்ற பல உண்மைகளை நாட்டு மக்களுக்கு பொய் பிரச்சாரத்தின் மூலம் மறைத்து நிறைவேற்றிட துடித்துக் கொண்டிருக்கிறது மன்மோகன் அரசு.

மேலும் இந்த ஒப்பந்தப்படி பன்னாட்டு அணுசக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் நமது நாட்டின் அணு உலைகளுக்கு யுரேனியம் வழங்குவதை அணுசக்தி தொழில்நுட்ப வணிகக் குழு நிறுத்தினால் சர்வதேச கண்காணிப்பில் உள்ள அணு உலைகளை திரும்பப் பெறமுடியுமா? அணுமின் உலைகளுக்கு தடையின்றி எரிபொருள் வழங்கவேண்டும் என்ற உறுதி மொழியை எரிபொருள் வழங்கிவரும் நாடுகள் மீறினால் அதனால் நமக்கு ஏற்படும் எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய என்ன உறுதிமொழியை பெற்றுள்ளோம்? அதேநேரம் கண்காணிப்பிலிருந்து நாம் விலகிக் கொள் முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு மன்மோகன் அரசிடமிருந்து இன்றுவரை பதில் இல்லை.

மாறாக பிரணாப் முகர்ஜியோ ஒப்பந்த வரைவு ரகசியம் என்று ரகசியம் காத்தார். ஓப்பந்தம் தொடர்பான ஆவணங்களைப் பார்க்க வேண்டுமானால் இடதுசாரிகள் அரசில் பங்கேற்க வேண்டுமெனவும் கூறியிருந்தார் அவர். இப்படியாக நாட்டுமக்களின் பல கேள்விகளுக்கு பதிலகளிக்க முடியாத மத்திய அரசு இடதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறியதால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. சில சித்து விளையாட்டுகளால் தற்போதைக்கு தக்கவைத்துக் கொண்டுள்ளது அரசை.

ஓப்பந்தம் தொடர்பாக மூத்த அணு விஞ்ஞானிகளும், நாட்டு மக்களின் கேள்விகளுக்கும், இடதுசாரிகளின் கேள்விகளுக்கும் பதிலளிக்காத மத்திய அரசு ஸ்ரீமான் முலாயம் சிங்கிற்கு மட்டும் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை அனுப்பி விளக்கியதாக நாடகமாடியது. இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முழு அதிகாரத்தையும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டதன் மூலம் மன்மோகன் அரசு பெற்றுள்ளது. அதே நேரம் நம்பிக்கை வாக்கெடுப்பில் சபாநாயகரைத் தவிர மொத்தமுள்ள 541 பேரில் 10 பேர் வாக்கெடுப்பைப் புறக்கணித்துள்ள நிலையில் ஆதரவாக 275 பேரும், எதிர்ப்பாக 256 பேரும் வாக்களித்துள்ளனர். இதில் பா.ஜ.க அணியில் இருந்து 10 பேரும், தெலுங்குதேசம், மற்றும் தேவகவுடா கட்சி என 13 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர்.

மொத்தமுள்ள வாக்குகளோடு எதிர்அணிகளில் இருந்த வந்த வாக்குகளையும் சேர்த்து கணக்கிட்டால் மன்மோகன் அரசுக்கு குறைந்தது 277 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைத்ததோ 275 தான். எனவே இந்தக் கூட்டணியில் இருந்தும் அரசை எதிர்த்து வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது மட்டும் உண்மை. பின்னர் பாராளுமன்றத்தில் மன்மோகன் பதிலளித்துப் பேசுகையில் பொறுப்பற்று நடந்து கொண்ட பா.ஜ.க அமளியில் ஈடுபட இதனை சாக்கிட்டு மன்மோகனும் பொத்தாம் பொதுவாக பதிலளித்துவிட்டு அமர்ந்துள்ளார்.

நமது நாட்டின் தேச நலனைக் கருத்தில் கொண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதாக மத்திய அரசு கூறிவருகிறது. மக்கள்தான் தங்களின் நலன் காக்கப்படுகிறதா? அல்லது அமெரிக்காவிடம் அடமானம் வைக்கப்படுகிறதா? என கவனிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அசுர வேகத்தில் நிறைவேற்றிடத் துடிக்கும் அரசு அதற்கு மக்களின் ஆதரவைக் கோரி அண்மையில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும் புரிந்து கொண்டால் போதும் என்ற உயர்ந்த எண்ணத்தில் சில ஆங்கில இதழ்களில் மட்டும் ஒப்பந்தத்திற்கு ஆதரவு கேட்டு வண்ண விளம்பரத்தை வெளியிட்டது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்.

நாட்டின் நாளைய நலனை கருத்தில் கொண்டு ஒப்பந்தத்தை ஆதரியுங்கள் என்ற கோஷத்தோடு வெளியிடப்பட்டுள்ளது. விளம்பரத்தின் மூலம் தங்களது எண்ணத்தை நிறைவேற்றிடத் துடிக்கும் மத்திய அரசு நமது தேசிய கொடியில் உள்ள மூவர்ணத்தோடு மூன்று பத்திகளில் 1 2 3 என விளக்க முற்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக விளம்பரத்தில் இறங்கியுள்ள மத்திய அரசு தான் அளித்துள்ள விளக்கத்தினை விட மறைத்துள்ள உண்மைகளே ஏராளம்.

விளம்பரத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள்

1) நம்நாடு எரிசக்தி பற்றாக்குறையில் தத்தளித்துவரும் நிலையில் அணுமின் உலைகளுக்கு தேவையான யுரேனியம் போதிய அளவில் அல்லாத நிலையில் எதிர்காலத்திற்குத் தேவையான சக்தியை அணுசக்தி ஒப்பந்தம் உறுதி செய்துள்ளது. இப்போது நிறைவேற்றாவிட்டால் எதிர்கால எரிசக்தி சுதந்திரம் பாதிக்கப்படும்.

2) போக்ரான் சோதனைக்குப் பிறகு சர்வதேச அளவில் தொழில்நுட்ப தேவையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நமக்கு இந்த ஒப்பந்தம் முடிவை ஏற்படுத்தி தரும். எதிரான தடைகளை நீக்குவது மட்டுமின்றி சர்வதேச சமூகத்தில் நமது விஞ்ஞானிகளுக்கு கௌரவமான இடத்தைப் பெற்றுத்தரும். அணுஆயுத பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நிலையிலும் நமது நாட்டை அணுசக்தி நாடாக நமது இறையாண்மையை அங்கீகரித்து ஏற்கிறது.

3) கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவரும் நிலையில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, ஆகியனவற்றின் சார்பைக் குறைக்கிறது. நிலக்கரி, எண்ணெய், காற்று, நீர், சூரியஒளி, உயிரி எரிபொருள் ஆகிய எரிசக்தி ஆதாரங்களுடன் 21 ம் நாற்றாண்டு வளர்ச்சிக்குத் தேவையான தூய்மையும், பாதுகாப்பானதுமான அணுமின் சக்தியை ஒப்பந்தம் உறுதி செய்கிறது. நமது நாட்டின் எதிர்கால முதலீடான ஒப்பந்தத்தை நாளைய நலனை சிந்தித்து இன்று ஒப்பந்தத்திற்கு ஆதரவு தாரங்கள் என்று சிறப்பாக முடித்துள்ளது விளம்பரத்தை.

நாட்டிற்கு பெருமைமிக்க ஒப்பந்தத்தை கொண்டுவரும் அரசு ஒப்பந்தம் தொடர்பான விபரங்களை நாட்டிற்குத் தெரிவிக்காமல் மறைப்பது ஏன்?. ஐ.ஏ.இ.ஏவுடன் செய்துகொள்ளும் ரகசிய ஒப்பந்தத்தை வெளியிட முடியாது என்று கூறியது ஏன்? நமது நாட்டு விஞ்ஞானிகளுக்கு எப்படிப்பட்ட மரியாதையை இந்த அரசு வழங்கியுள்ளது என்பதை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். நமது அணுசக்தி திட்டத்தை நிறைவேற்றுவதில் பெரும் பங்கு வகித்த அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவர் ஏ.கோபாலகிருஷ்ணன், பாபா ஆராய்ச்சி நிலைய முன்னாள் தலைவர் ஏ.என்.ஆனந்த், மற்றும் டாக்டர் பி.கே.ஐயங்கார் ஆகியோர் அவசர கதியில் அமெரிக்காவிடம் எதிலும் கையெழுத்திட வேண்டாம் என்று எச்சரித்து கூட்டாக அறிக்கைவிட்டனரே, அதற்கும் மத்திய அரசு பதிலளிக்கவில்லையே. இந்த 3 விஞ்ஞானிகள் ஒப்பந்தம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காத அரசு சர்வதேச சமுதாயத்தில் கவுரம் என்பது அனைவரையும் ஏமாற்றும் செயலாகும்.

சர்வதேச அளவில் நமது விஞ்ஞானிகளுக்கு உள்ள மதிப்பும், மரியாதையும், அவர்களின் உழைப்பாலும், நாட்டின் அணு திட்டத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள தேச பற்றின் காரணமாகவும் கிடைத்ததே. ஆறிவியல் உலகில் என்றும் இந்திய விஞ்ஞானிகள் பெருமைக்குரியவர்களாகவே இருப்பார்கள். இவர்களுக்குப் பெருமையை நீங்கள் வாங்கித் தரவேண்டியதில்லை.

நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் நாட்டின் அணுசக்தி திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கிடவே இல்லை. அன்றைக்கு உரிய நிதியினை ஒதுக்கியிருந்தால் இன்று தட்டுப்பாடு இல்லாமல் போதுமான அளவிற்கு யுரேனியம் இருப்பு இருந்திருக்கும். ஆனால் இந்தியா அணுசக்தி நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது விளம்பரம், ஆனால் அணு ஆயுத நாடாகவே ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும் கூடுதலாக எந்தவிதமான உரிமைகளோ, சலுகைகளோ வழங்கிடப்படவில்லை.

ஐ.ஏ.இ.ஏ வுடன் ஒப்பந்தம் இந்தியாவிற்கென்று தனித்தது என மத்திய அரசு தான் சொல்கிறதே தவிர, எந்தவிதமான சிறப்பு சலுகைகளையும் இந்தியாவிற்கு அளித்திடவில்லை என்றே ஒப்பந்தத்தை பற்றி முழுமையாக அறிந்திட்ட பலரும் கூறிவருகின்றனர். இதனை என்.எஸ்.ஜியின் தலைவர் அப்துல் மிண்டி தெளிவுபடுத்தியுள்ளார். பன்னாட்டு அணுசக்தி முகமையைப் பொருத்தவரை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள், மற்றும் பிறநாடுகள் என்ற இரண்டே பிரிவுகள் தான். இதன்படி தான் நிபந்தனைகளும், உரிமைகளும் இறுதி செய்யப்படுகின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக ஈரானிற்கு ஒரு நியாயம் கூறுவதை எடுத்துக் கொள்ளலாம். சோற்றில் பூசணிக்காயை மறைத்து மன்மோகன் கூறிய மற்றொரு பொய் இருநாடுகளும் சம அந்தஸ்துடன் உள்ளது என்றதாகும். பிறகெதற்கு இந்தியாவிற்கென்று தனியாக ஹைட் சட்டத்தை உருவாக்கவேண்டும்.

நாட்டின் பாதுகாப்பு கருதி அணு ஆயுத சோதனை நடத்தினாலே ஒப்பந்தம் ரத்தாகிவிடும் நிலையில் எப்படி எரிசக்தி சுதந்திரத்தையும், தன்னாட்சியையும், இறையாண்மையையும் உறுதி செய்யமுடியும். இன்னொரு நாடு கொடுத்து வருவதுல்ல எரிசக்தி சுதந்திரமும், தன்னாட்சியும், எதிர்கால எரிசக்தி தேவையை ஒப்பந்தம் தன்னிறைவு செய்யும் என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் தான். நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் 3 கட்ட அணு சக்தித் திட்டம் நமது எதிர்காலத் தேவையை முழுதுமாக நிறைவேற்றக் கூடியது தான். வலிமையான அடிப்படையும், அறிவுடன் கூடிய தொழில்நுட்பத் திறனும் கொண்ட நாடு நம் நாடு. நமது விஞ்ஞானிகள் மீது மன்மோகன் கூட்டத்திற்கு வேண்டுமானால் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாட்டு மக்களோ இன்றுவரை முழு நம்பிக்கை வைத்துள்ளனர் நமது விஞ்ஞானிகள் மீது.

தொடர்ந்து அணுசக்தி ஆராய்ச்சிகளின் மூலம் எரிசக்தியில் நாட்டை தன்னிறைவு நிலைக்கு கொண்டு சென்றுகொண்டிருக்கும் விஞ்ஞானிகள் கேட்ட பல கேள்விகளுக்கு இதுவரையில் பதில் கிடைத்தபாடில்லையே?. 1974, மற்றும் 1998களில் இருமுறை அணு ஆயுத சோதனையை சிறப்பாக நடத்திக் காட்டி நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தவர்கள் நமது விஞ்ஞானிகள் தானே. ஆனால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்தது போன்ற உறுப்பினர்களின் விவாதமோ, கருத்துக்களோ இன்றுவரையில் மத்திய அரசால் கேட்கப்படவில்லையே?.

பிரதமர் கூறுவது போல இந்த ஒப்பந்தம் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கென்றால் ஒப்பந்தம் குறித்து மக்களிடம் விளக்குவதற்கு என்ன தயக்கம்? ஏன் ரகசியம் காக்கப்படவேண்டும்? அதிகப்படியாக எச்சரித்துள்ள விஞ்ஞானிகள் பலர் ஒப்பந்தத்தின் கீழ் அயல்நாடுகளில் வாங்கும் அணு உலைகள் அதிகப்படியான விலையுடையவை என்பதால் அதன்மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் விலை எகிறுமே? என்றுள்ளனர்.

எந்த ஒரு நாட்டிலும் குறிப்பிட்ட ஒரு பொருள் பற்றாக்குறையுடன் காணப்பட்டால் அந்தப் பொருளை மிகுதியாக கொண்ட நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது வழக்கம். அதைப்போலத் தானே இந்த ஒப்பந்தமும் செய்யவேண்டும். அப்படியானால் சம்பந்தப்பட்டதை தவிர மற்ற விசயங்களை ஒப்பந்தத்தில் ஏன் சேர்க்கவேண்டும்? இதற்கு மத்திய அரசு நிச்சயம் விளக்கமளிக்கவேண்டும். எனவே இது போன்ற நமது விஞ்ஞானிகளின் கேள்விகளுக்கு மத்திய அரசு திருவாய் மலர்ந்து பதில் அளிப்பதன் மூலமே பாமர மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயப்பாட்டையும் போக்க முடியும். அதே நேரம் மத்திய அரசு இதே ஒப்பந்தம் தொடர்பாக கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களையும் மனதிற் கொள்ளவேண்டும்.

நமது நாட்டின் அணிசேரா கொள்கைளை கைவிட்டு அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திட வேண்டுமென அமெரிக்கா அணுகியபோது அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியும், நாட்டின் நலன் கருதிய விஞ்ஞானிகளும் அமெரிக்காவிடம் ஒருபோதும் இந்தியாவை சிக்கவைக்க மாட்டோம் என எதிர்த்துள்ளனர். அதன்பிறகு அமெரிக்காவின் மகுடிக்கு யாரும் மயங்கிடவில்லை. பாவம் மன்மோகன் நாட்டை அடகு வைக்கத் தயாராகிவிட்டார். 1967-68ம் ஆண்டுகளில் அமெரிக்கத் தூதர் செஸ்டர் பவுல்ஸ், அமெரிக்க பிரதிநிதியாக கனடாவைச் சேர்ந்தவர்களும் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, இந்திய அணுசக்தி துறை தலைவர் விக்ரம் சாராபாய், மற்றும் வெளியுறவுச் செயலாளர் ராஜேஷ்வர்தயாள் உள்ளிட்டோருடன் பலமுறை மாறிமாறி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கோ தோல்வி தான் மிஞ்சியுள்ளது.

அப்போது பேச்சு நடத்தியவர்களிடம் வெளியுறவுச் செயலாளர் ராஜேஷ்வர் தயாள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் மிகப்பெரிய போராட்டம் நடத்தி பெற்ற தேச சுதந்திரத்தை அமெரிக்காவின் காலடியில் ஒரு போதும் சமர்பிக்காது. எவர் உதவியின்றியும் இந்தியா நிலையாக வாழும். நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே முக்கியம். அந்நிய ஆதிக்கத்திலிருந்து எங்களின் விடுதலையைக் காப்போம் என்று ஆணி அடித்தாற்போல கூறியுள்ளார். ஆனால் அவர்களின் வழிவந்த மன்மோகன் கூட்டத்தினர் நாட்டையே அமெரிக்காவிடம் அடகு வைக்கும் உன்னத பணியில் மட்டுமே தங்களை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரக்குழுவின் தலைவராக இருக்கும் ஹோவர்ட் பெர்மான் என்பவர், அக்குழுவின் முன்னாள் தலைவர் டாம் லாண்டோஸ் என்பவர் எழுதிய கடிதத்திற்கு எழுதியுள்ள பதிலில் இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம் குறித்து அமெரிக்கர்கள் மட்டுமின்றி இந்தியர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தில் இந்தியா எந்த காரணத்தைக் கொண்டும் அணு ஆயுத சோதனை நடத்தினால் இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். ஒத்த ஜனநாயக அமைப்பைக் கொண்டவையே இருநாடுகளும். அமெரிக்க மக்கள் ஒப்பந்தம் குறித்து தெரிந்து கொள்ளவேண்டும் என்கிறது அமெரிக்க அரசு. ஆனால் மன்மோகன் அரசு அனைத்தையும் மூடி மறைத்தே வருகிறது?

ஒருவேளை நம்மவர்கள் தொடர்ந்து கூறிவருவது போல நாம் துணிந்து அணுஆயுத சோதனை நடத்தி அமெரிக்கா எரிபொருள் வழங்குவதை நிறுத்திக் கொண்டால் நம் அப்பாவி மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இதில் போட்ட முதல் எல்லாமே வீண் தானே?

- மு.ஆனந்தகுமார்.

Pin It