தமிழ்நாட்டில் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் மீண்டும் உக்கிரம் அடைந்து வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் ஈழமக்களுக்கு ஆதரவாய்க் குரல் கொடுத்து வருகின்றது. இதில் நேற்று வரை எதிர்ப்பாய் இருந்த கட்சிகளும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குக் காரணமாயிருந்த கட்சிகளும் கூட முண்டியடித்துக் கொண்டு ஈழமக்களுக்கு ஆதரவு நாடகம் போடுகின்றன.

செயாவின் புலியெதிர்ப்பு எல்லோரும் அறிந்ததே. போர் என்றால் மக்கள் மரணம் இருக்கத்தான் செய்யும் என்றவர் அவரே. இன்று சட்டமன்றத்தில் அதிரடித் தீர்மானங்கள் என்ன, மீனவர்களுக்காய்க் குரல் கொடுக்கும்பொழுது கொப்பளிக்கும் கோபம்தான் என்ன, சிங்களப் படைவீரர் பயிற்சிக்கெதிராய் பொங்கிய வீரம்தான் என்ன, சிங்கள விளையாட்டு வீரர்களை வெளியேற்றும்பொழுது மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள்தான் என்ன, அப்பப்பா மெய் சிலிர்க்கிறது.

ஈழம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் பொழுது மகளுக்கும் மகனுக்கும் மருமகனுக்கும் பதவிப் பேரம் பேசிக் கொண்டிருந்தவர் தமிழினத் தலைவர் கலைஞர் கருணாநிதி! இந்திய அரசின் கொள்கை எதுவோ அதுவே எங்கள் கொள்கை எனக் கூறி ஈழ விடுதலையை மறுத்தவர். இன்று ஈழ விடுதலையைப் பார்த்து விட்டுத்தான் சாவேன் என்கிறார். ஈழக்கனவு பற்றி மெய்சிலிர்க்கப் பேசுகிறார். அவரைப்போல் நாடகம் போடுவதில் வல்லவர் எவருமிலர். பிறவிக் கலைஞர் அவர். வசனம் எழுதியும் வசனம் பேசியுமே தமிழ் இளைஞர்களின் போர்க்குணத்தைச் சாகடித்த வரலாறு அவருக்கும் அவர் கட்சிக்குமே உண்டு.

இந்தத் தள்ளாத அகவையிலும் அவர் எழுதும் வசனமும் அரங்கேற்றும் நாடகமும் நம்மை வியக்க வைக்கின்றன. ஒன்றரை இலக்க மக்களின் சாவிற்குத் தாமும் ஒரு காரணம் என்பதை அவர் உள்ளம் அறியும். ஆனால் எந்தவொரு சலனமு மின்றி ஈழமக்களுக்காய்த் தாம் நடத்திய போராட்டங்களையும்(!) இழந்த பதவிகளையும்(!) பட்டியலிட முடிகிறதென்றால் தேர்ந்த கலைஞரான அவரால் மட்டுமே முடியும்.

தமிழ்நாட்டில் எதற்குப் பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ அரசியல் நடிப்புச் சுதேசிகளுக்குப் பஞ்சமே இல்லை. நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி கூட்டத்தில் கூடிநின்று கூவிப்பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாத நயவஞ்சகர்கள் பாரதியார் காலத்தைக் காட்டிலும் இன்றேமிகுதி. அவர்களின் எண்ணிக்கை இராமதாசு, திருமாவளவன், கிருட்டினசாமி, விசயகாந்த் எனப் பல்கிப் பெருகிய வண்ணம் இருக்கிறது. கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ள நபரைப் பாரதியாராக வ.உ.சியாக பகத்சிங்காகச் சித்தரித்துத் தெருவெல்லாம் வைத்திருக்கும் வகை வகையான வண்ணத் தட்டிகளைப் பார்த்து அழுவதா சிரிப்பதா சினங்கொண்டு எரிப்பதா? இவர்கள் ஒவ்வொருவரும் இன்று ஈழமக்களுக்காய்ப் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

நடிப்புச் சுதேசிகளின் போர் முழக்கங்களுக்கு அடிப்படை என்ன?

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை இன்று உலகம் உணரத் தொடங்கியுள்ளது. புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வீழ்ந்து விடாத ஊக்கமிகு போராட்டங்களும் தொடர் நடவடிக்கைகளும் உலகத்தவரின் கண்களை மெல்ல மெல்ல ஈழத்தின் பக்கம் ஈர்த்து வருகின்றன. சேனல் 4இன் ஒளிபரப்புகள் உலக மக்களின் மனச் சான்றுகளைத் தட்டி எழுப்பியுள்ளன. உலக மனித உரிமை அமைப்புகளும், போராளிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். டப்பிளின் நீதிமன்றத் தீர்ப்பாய அறிக்கையும், ஐநா மூவர் குழு அறிக்கையும், ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானமும் போர்க் குற்றவாளிகளை நெருக்கி வருகின்றன. பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டி இனி ஈழத்தமிழ் மக்களை ஓரங்கட்ட முடியாது.

இந்தியாவின் மீதும் அழுத்தங்கள் கூடியுள்ளன. தமிழ்த் தேசிய ஆற்றல்களின் இடைவிடாத பரப்புரைகளாலும் போராட்டங்களாலும் தாய்த் தமிழகத்தில் ஈழ ஆதரவு பெருகி வருகிறது. தில்லி ஆளும் வர்க்கங்கள் இதை உணர்ந்து வருகின்றன. தமிழ்நாட்டுத் தேர்தல் கட்சிகளுக்கும் நெருக்கடி முற்றி வருகிறது. இதன் உச்சம்தான் இளைஞர் காங்கிரசுக் கட்சித் தலைவர் யுவராசு இராசபட்சே இந்தியா வரக்கூடாது எனக் குரல் கொடுத்திருப்பது. ஈழமக்களுக்குத் தாங்களும் ஆதரவு எனக் காட்டிக் கொள்ளாவிட்டால் தமிழ்மக்களிடையே இனி பருப்பு வேகாது என்பதைத் தேர்தல் சூதாடிகள் நன்றாகவே உணர்ந்து கொண்டுள்ளனர். தேர்தல் கட்சிகளின் போட்டாப் போட்டி சிங்கள எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு இதுவே காரணம்.

இப்பொழுதுதான் தமிழ்த்தேசிய ஆற்றல்கள் விழிப்புடனும் அறிவார்ந்தும் செயல்பட வேண்டும். தமிழ்மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி மீண்டும் திசைமாறிப் பயணித்து விடக்கூடாது. ஆளும் வர்க்கங்கள் திசைமாற்ற எல்லாத் தகிடுதத்தங்களையும் செய்யும். இரண்டகர்கள் அதற்குத் துணை போகவே செய்வர். நம்முடைய கடந்த கால வரலாறு கற்பிக்கும் பாடம் இதுவாகவே இருக்கிறது. இந்தியக் கட்சிகளையும் தமிழ்நாட்டுக் கட்சிகளையும் நன்கு எடையிட்டுத் திட்டமிட வேண்டிய நேரமிது.

காங்கிரசும் பாசகாவும் நம் பகை ஆற்றல்கள். தமிழ்நாட்டுப் பாசக அவ்வப்பொழுது போடும் வேடம் வெளுத்து விட்டது. அதன் தலைமைதான் இராசபட்சேவிற்கு அழைப்பு விடுத்திருப்பது. மன்மோகன்சிங் அரசு சிறீலங்கா நட்பு நாடு என்பதிலும் அதன் உறவை வளர்க்க எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்பதிலும் உறுதியாய் இருக்கிறது. சிபிஎம் எப்பொழுதும் தமிழின விரோதப் போக்கைத்தான் மேற்கொள்ளும். அதன் இரத்தத்திலே ஊறிப்போன கொள்கை இது. இக்கட்சிகளெல்லாம் ஈழ ஆதரவைத் திசைமாற்றவே முயற்சி செய்யும். அதற்கு எல்லா வழிகளிலும் துணை நிற்கும்.

தமிழ்நாட்டிலுள்ள பிற தேர்தல் கட்சிகள் அழுத்தங்கள் ஏற்படும்பொழுது கலகலத்துப் போகும். அப்படித்தான் ஈழப்போர் உச்சத்தில் இருக்கும்பொழுது தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே எல்லாக் கட்சிகளும் அதனதன் கூட்டணி தேடி ஓடிப் போயின. தமிழ்த் தேசிய ஆற்றல்களும் காங்கிரசைத் தோற்கடிப்பது என்ற ஒற்றை வேலைத் திட்டத்தில் மட்டுமே கவனம் கொண்டன. முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை எதிர்ப்பின்றி நடந்து முடிந்தது. கருணாநிதியை மட்டுமே குற்றம் சொல்வதில் பொருளில்லை. நிகழ்ந்து முடிந்த கோர நிகழ்விற்கு நாமெல்லோரும் பொறுப்பேற்க வேண்டும். மீண்டும் இத்தகைய வரலாற்றுத் தவறுகள் நேராமலிருப்பது தமிழ்த் தேசிய ஆற்றல்களின் கைகளில்தான் அடங்கியுள்ளது.

ஈழச்சிக்கலைக் கைவிடவோ திசை திருப்பவோ இயலாநிலை இக்கட்சிகளுக்கு ஏற்பட வேண்டும். அதற்குத் தமிழ் மக்களின் ஈழ ஆதரவை ஒன்று திரட்டி உறுதிப்படுத்த வேண்டும். பெருகி வரும் இன எழுச்சியைக் கண்டு தேர்தல் நடிப்புச் சுதேசிகள் அஞ்சி நடுநடுங்க வேண்டும். தமிழ்மக்களின் உணர்வுக்கெதிராய்ச் செயல்பட வழிகள் எதுவுமின்றி அத்தனை வழிகளும் அடைபட வேண்டும்.

கட்சிகளின் பின்னால் மக்கள் அணி திரள்வது மாறி மக்களின் பின்னால் கட்சிகள் அணி திரள வேண்டும். கட்சி வண்ணங்கள் காணாமற்போகத் தமிழர்கள் தமிழராய் அணி திரள வேண்டும். தமிழரெல்லாம் உள்ளத்தால் ஒருவரே மற்றுடலினால் பலராய்க் காண்பர், கள்ளத்தால் அவரை நெருங்க இயலாது என்ற புரட்சிப் பாவலரின் கருத்து நனவாக வேண்டும்.

ஒன்றைத் தமிழ்த் தேசிய ஆற்றல்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சிங்களவனே ஈழவிடுதலையை வழங்க முன் வந்தாலும் இந்தியன்கள் அதற்கு ஒருபோதும் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். ஈழவிடுதலை இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்திய ஆளும் வர்க்கம் நன்றாகவே உணர்ந்துள்ளது. ஈழவிடுதலைக்குத் தடையாயிருப்பது இந்தியாவே. எனவே இந்தத் தடை உடைபட வேண்டும். அது நிகழ வேண்டுமெனில் மேற்சொன்ன சூழல் தமிழகத்தில் உருவாக வேண்டும். தமிழ்த் தேசிய ஆற்றல்கள் இத்திசை நோக்கிச் செயல்பட வேண்டும்.

இன்றைய சூழலில் தமிழகச் சட்டமன்றத் தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி தில்லிக்கு அழுத்தங்கள் கூட வேண்டும். பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும், முள்வேலி முகாம் ஈழத்தமிழர்கள் அனைவரும் அவரவர் இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும், சிங்கள இராணுவம் தமிழர் பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வலுவான போராட்டங்கள் நடைபெற வேண்டும். இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை சிறீலங்காவிலிருந்து யாரையும் தமிழ்நாட்டிற்குள்ளோ இந்தியாவிற்குள்ளோ அனுமதியோம் என்பது நம் முழக்கமாக அமைய வேண்டும்.

உடனடி வேலைத்திட்டமாக இந்தியா வரவிருக்கும் இராபட்சேவிற்கு எதிராக நம் அனைத்து ஆற்றல்களையும் ஒன்றுபடுத்தி கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கண்டன ஆர்ப்பாட்டங்களும் மறியல்களும் கறுப்புக்கொடி ஏற்றுவதும் உருவப் பொம்மை எரிப்புகளும் என என்னென்ன வழிகளுண்டோ அத்தனை வழிகளிலும் போராட்டங்கள் நடைபெற வேண்டும். தில்லியின் செவிட்டுக் காதுகள் கிழிபட வேண்டும். தமிழ்த் தேசிய ஆற்றல்களே திட்டமிட்டுக் களம் காணுங்கள்.

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!”

மணல் தட்டுப்பாடும் நீங்கும்; நீர்வளமும் பெருகும்

கடந்த சூலை இதழில் நீர்வளப் பாதுகாப்புப் பற்றி (ஆற்று நீர் உரிமை மீட்பும் நீர்வளப் பாதுகாப்பும்) எழுதியிருந்தோம். தமிழ்நாட்டிலுள்ள அணைகளை ஆழ அகலப்படுத்துவது பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். நம் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் முன்னாள் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் என்.நடராசன் இந்து நாளிதழுக்கு நேர்காணல் தந்துள்ளார்.

நீண்ட காலமாய்த் தூர் வாரப்படாமல் மேட்டூர் அணையில் படிந்திருக்கும் வண்டல் மண்ணையும் மணலையும் எடுத்தால் தமிழ்நாட்டின் மணல் பஞ்சமும் தீர்ந்து போகும், ஆறுகளும் தப்பிப் பிழைக்கும் என்கிறார் அவர். ஆற்றிலிருந்து மணலை எடுத்தால் அதன் நீர் பிடிக்கும் ஆற்றல் வற்றிப் போகும்; அணையிலிருந்து மணலை அகற்றினால் அதன் நீர்ப் பிடிப்புப் பகுதி பெருகும் என்பது அவர் கருத்து. ஒரு கன அடி ஆற்று மணல் மூன்று கனஅடிகள் நீரைத் தன்னகத்தே கொண்டிருக்கும்; அதனை அகற்றினால் அத்தண்ணீர் இல்லாமற் போகும். ஆனால் ஒரு கியூபிக் அணை மண்ணை அகற்றினால் மூன்று கன அடிகளுக்கும் கூடுதலான நீர் தேங்கும் என அவர் விளக்குகிறார்

மேட்டூர் அணையில் வண்டலும் மணலும் சேர்வதால் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 0.4 தண்ணீர்க் கொள்ளளவுத் திறன் குறைந்து வருகிறது. மேட்டூர் அணை 1934இல் கட்டப்பட்டதாகும். அதன் மொத்தக் கொள்ளளவு 93.47 ஆயிரம் மில்லியன் கன அடியாகும். 2008ஆம் ஆண்டு வாக்கிலேயே 27.667ஆ.மி.கனஅடித் தண்ணீரை அது இழந்து விட்டதாகக் குறிப்பிடுகிறார் நடராசன். இன்று அதன் உண்மையான கொள்ளளவு 65ஆ.மி.கனஅடியே ஆகும். ஆக இப்பொழுது மேட்டூர் அணையில் உள்ளதாக நம் அரசு அறிவிக்கும் கணக்கு மிகமிகப் பொய்யானதாகும். கர்நாடகத்திலிருந்தும் தண்ணீர் பெறவும் நமக்கு வக்கில்லை; கனமழை பெய்து எப்பொழுதாவது பெருகி வரும் நீரைத் தேக்கி வைக்கவும் தெரியவில்லை.

நடராசன் தரும் கணக்கு நம்மை மலைக்க வைக்கிறது. அறுபத்தெட்டு ஆண்டுகளாக மண்ணும் மணலும் மேட்டூர் அணையில் படிந்து சேர்ந்து நிற்கிறது. ஒரு சுமையுந்துக்கு 200 கன அடி மணல் என ஏற்றினால் ஓராண்டிற்குப் படியும் மண்ணை அகற்றக் குறைந்தது 19 இலக்க சுமையுந்துகள் தேவைப்படுமாம். ஓர் அலகு (100 கன அடி) மண் உரு.500என விற்றாலும் அரசுக்கு மாதத்திற்குக் குறைந்தது உரு.60 கோடி கிடைக்கும் என்கிறார்.

அதேபோல் தமிழ்நாட்டிலுள்ள ஏரிகளைப் பற்றியும் நினைத்துப் பாருங்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 41262 ஏரிகள் உள்ளதாகக் கூறுகிறார் திரு.கி.சிவசுப்பிரமணியன் (தினமணி‘ஏரிகள் யாருக்குச் சொந்தம்?’ கட்டுரை, ஆகஸ்டு 18). இதில் பல ஏரிகள் காணாமல் போயிருக்கலாம். தப்பிப் பிழைத்துள்ள ஏரிகளில் மண்ணும் மணலும் இருக்கலாமே? அதையும் எடுத்துப் பயன்படுத்தலாமே? மணல் தட்டுப்பாடும் நீங்கும், நீர் வளமும் பெருகும், அரசுக்கு வருமானமும் கூடும். அரசு செய்யுமா?

Pin It