aasha coronaஆஷா எனும் எளிய மக்களின் காப்பாளர்கள்

இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னணி வீரர்களாக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர். அத்தகையவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒன்றிய அரசின் கடமை. இதனை வலியுறுத்தி கிராமங்களில் முன்கள பணியாளர்களாக சொற்ப வருமானத்திற்கு பணியாற்றும் ஆஷா தொழிலாளர்கள், நாட்டின் பல மாநிலங்களில் ஆங்காங்கே போராடி வருகின்றனர்.

இவர்களின் போராட்டங்கள் கொரோனா காலத்தில் மட்டும் அல்ல, இதற்கு முன்பிலிருந்தே நடந்து வருகிறது. ஆனால், இந்த பேரிடர் காலத்தில் கூட இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இவர்களை அலைகழிப்பது என்பது திட்டமிட்ட உழைப்பு சுரண்டலே ஆகும்.

கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது கிராமங்களில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஆஷா தொழிலாளர்கள் குறைந்த பயிற்சியுடன், எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதேபோல் தற்போதும் இவர்கள் முகக்கவசம் கூட இன்றி வெறும் கைக்குட்டையை பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரை பணயம் வைத்து மாதத்திற்கு அவர்கள் ஈட்டும் தொகை 2,000 ரூபாய் முதல் 3000 வரையாகும். இது மாநிலங்களை பொறுத்து மாறுபடுகிறது.

கேரளாவில் 1,798 ஆஷா பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய மாநிலங்களில் கொரோனா தொற்றினை ஒரளவு சிறப்பாக கையாளும் கேரளாவிலே இந்த நிலை என்றால் அடிப்படை சுகாதார வசதிகள் குறைவாக உள்ள கிராமங்களை உள்ளடக்கிய உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் நிலை என்னவாக இருக்கும்?

போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி பணி செய்ய நிர்ப்பந்திக்கப் படுவதால் இதுவரை நாடு முழுதும் 80 ஆஷா பணியாளர்கள் இறந்துள்ளதாக ஆஷா பணியாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது. இவர்களுக்கு அத்தியாவசிய பிபிஇ கருவிகள் வழங்கப்படாததால், இவர்களில் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என அகில இந்திய தொழிலாளர் கூட்டமைப்பு (SWFI) தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை தில்லியில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆஷாக்கள் தங்களுக்கு உரிய ஊதியம், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க என பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பலமுறை போராட்டம் நடத்தியும் தீர்வு கிட்டாத நிலையில், தங்களின் கோரிக்கைகளை தொடர்ந்து அலட்சியப்படுத்தும் மோடி அரசினை எதிர்த்து மீண்டும் நாடு முழுவதிலும் உள்ள ஆஷா பணியாளர்கள் 24.5.21 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நாடு தழுவிய இந்த போராட்டத்தை வலுபடுத்தும் விதமாக கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தை தொடங்கினர் மேற்கு வங்க ஆஷா பணியாளர்கள்.

ஆஷா என்பவர்கள் யார்?

ஆஷா/ASHA என்பவர்கள் (Accredited Social Health Activists) கிராமங்களில் மருத்துவ சேவை புரியும் தொழிலாளர்கள். இவர்கள் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் (National Rural Health Mission) ஒரு பகுதியாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (Ministry of Health and Family Welfare) 2005ம் ஆண்டு முதல் பணியில் அமர்த்தப்பட்டவர்கள். 2012ம் ஆண்டிற்குள் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஆஷா இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இவர்களுக்கு 23 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டியது அவசியம். ஒரு கிராமத்திற்கு அல்லது 1000 மக்கள் தொகைக்கு ஓர் ஆஷா என்பது விதிமுறை. இவர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது, இது அவர்களின் செயல்திறனைப் பொறுத்து குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம். இவர்களுக்கு பணி நேர வரையறை கிடையாது.

கருவுற்ற பெண்களை கண்காணிப்பது, குழந்தைப் பேறுக்கு உதவுவது, பிறந்த குழந்தைகளின் உடல்நிலையை கண்காணிப்பது, தடுப்பூசி போட அறிவுறுத்தல், கருத்தடை முறைகளை பின்பற்ற ஊக்குவித்தல் போன்றவை அவர்களின் பணிகளில் அடங்கும். அரசின் சுகாதார திட்டங்கள் குறித்தும் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆஷாக்களின் சாதனை

கடந்த 15 ஆண்டுகளில் மகளிர், குழந்தைகள், முதியவர்கள் என கிராம மக்களுக்கு சுகாதார சேவைகள் கிடைப்பதில் ஆஷா பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

இந்திய அரசு மருத்துவத்திற்காக ஒதுக்கும் தொகை, சர்வதேச அளவில் மற்ற நாடுகளை விட மிகவும் குறைவு. இந்தியாவில் 11,082 பேருக்கு ஒரு மருத்துவர்தான் இருக்கிறார். இது WHO தர நிர்ணயத்தைவிட 10 மடங்கு குறைவாகும். இந்நிலையில் பிரசவத்தின் போது இறக்கும் கர்ப்பிணிகள் மற்றும் சிசுக்கள் எண்ணிக்கை தற்போது குறைந்து விட்டது என்று மத்திய அமைச்சர் JP நட்டா நாடாளுமன்றத்தில் கூறியதோடு இதனை மோடி அரசின் சாதனை என்றும் அவர் கொண்டாடினார்.

கிராமங்களில் ஆஷாக்களும் அங்கன்வாடிப் பணியாளர்களும் மேற்கொண்ட கடினமான பணிதான் இந்த சாதனைகளுக்கு முழுக் காரணம். இந்த சாதனையை கொண்டாடும் அரசு இவர்களுக்கான அங்கிகாரத்தை தர மறுக்கிறது. மோடி அரசின் வரையறைபடி ஆஷாக்கள் தன்னார்வலர்கள் மட்டுமே! அவர்களுக்கு ‘மதிப்பூதியம்‘ மட்டுமே வழங்கப்படும் என்பது அரசின் கொள்கையாகும்.

ஆஷா பணியாளர்கள் சந்திக்கும் சவால்கள்!

தற்போது தங்கள் அன்றாட பணிகளோடு கோவிட்-19 பரவலை கண்காணிக்கும் கூடுதல் பணிகளையும் இவர்கள் செய்து வருகின்றனர். சென்ற வருடம் ஊரடங்கு அறிவித்த பிறகு, ஊர் திரும்பியவர்களை கண்காணிக்கும் பணியும் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இத்தகைய பணிகளை மேற்கொள்ளும் அவர்களுக்கு முகக்கவசங்கள், கையுறைகள் என நகர மருத்துவமனையின் முன்களப் பணியாளர்களுக்கு தரப்படுவதைப் போன்ற எந்த பாதுகாப்பு உபகரணங்களும் அளிக்கப் படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடுமையான உழைப்பு சுரண்டல்

நமது நாட்டில் 92% பெண் தொழிலாளர்களும், 82% ஆண் தொழிலாளர்களும் மாதம் 10,000 ரூபாய்க்கு குறைவாக சம்பளம் பெறுவதாக அஸிம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. அந்த அளவுக்கு அவர்களின் உழைப்பு மிகக் கடுமையாக சுரண்டப்படுகிறது.

இந்த பேரிடர் காலத்தில் தங்களைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் பணியாற்றும் இந்த ஆஷா பணியாளர்களுக்கு, பணியிட பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடு, பணியில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கான உதவி என எதுவும் இந்த அரசால் வழங்கப்படுவதில்லை. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கூட இந்த அரசு ஒன்றும் செய்யவில்லை என்பதே இவர்களின் ஆதங்கம்.

கடந்த ஆண்டு ஆஷாக்களுக்கு தீபாவளிப் பரிசை பிரதமர் மோடி அறிவித்தார். அதாவது ரூபாய் 3000 பெறுபவருக்கு 4500ம், 2200 பெறுபவர்களுக்கு 3500ம் கொடுக்கப்படும் என்றார். ஆனால் அந்த அறிவிப்பு வெறும் அறிக்கையாக மட்டுமே உள்ளது.

ஆஷா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை அதிகரிக்க ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டும் அது குறித்து இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், ஊதியம், நிலுவையில் உள்ள தொகை போன்றவை சரிவர வழங்கப்படவில்லை என்று தொடர்ந்து எழுந்த புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கவனத்தில் கொண்டு, புகாரில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் குறித்து ஆறு வாரங்களுக்குள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் மற்றும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு பிறகும் தீர்வு கிடைக்குமா என்பது சந்தேகமே.

மோடி அரசின் ஏமாற்று வித்தை

வருடம் 2 கோடிப் பேருக்கு வேலை கொடுப்போம் என்று கூறி மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜகவினர், இருக்கும் வேலைக்கும் வேட்டு வைத்தனர். ஒன்றிய அரசின் வங்கிகளில், பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களில் 92,000 பேர் ‘விருப்ப ஓய்வு’ என்ற பெயரில் கட்டாய ஓய்வில் வெளியேற்றப் படுகிறார்கள். மோடியின் பன மதிப்பிழைப்பு நடவடிக்கையால் தொலைந்த வேலைகள் இன்று வரை மீட்கப் படவில்லை.

நிரந்தரப் பணிகளெல்லாம் தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணிகளாக மாற்றப்படுகின்றன. அவர்களுக்கு எந்தச் சலுகையும் கிடையாது. மேலும் மோடி அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட ‘குறிப்பிட்ட கால வேலை’ என்பது ஒரு வருடம், 2 வருடங்கள் மட்டும் தொழிலாளர்களைப் பணியமர்த்த வழிவகுக்கிறது. இது தொழிலாளர்களை வெளிப்படையாகச் சுரண்டுவதற்கு வழிவகுக்கிறது.

சுகாதாரப் பணியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் மலர் தூவி அவர்களின் பணியைப் போற்றுவதாக நடிக்கும் மோடி அரசு, உண்மையில் அவர்களின் வாழ்வாதார உரிமைகளை காலில் போட்டு மிதிக்கிறது. தங்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்களை கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தி வஞ்சிக்கிறது.

பல்லாண்டுகளாக நடைபெறும் இந்த உழைப்பு சுரண்டலை எதிர்த்து பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் ஆஷா தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். குறைந்தபட்ச ஊதிய உயர்வு என்பதே அனைத்து இடங்களிலும் பொதுவான கோரிக்கையாக இருந்துள்ளது. அரசின் எந்த ஒரு அமைப்பும் இவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத நிலையில், இவர்கள் விரக்தியின் விளிம்பிற்கே தள்ளப்படுகின்றனர்.

பிரதமர் மோடி கடந்த 2017-இல் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள வடோதரா நகருக்கு சென்ற போது, சந்திரா சோலங்கி என்ற பெண்மணி பிரதமர் மீது வளையல்களை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் ஆஷா தொழிலாளர்களின் நிரந்தர ஊதியத்திற்காக போராடும் ஓர் பெண்கள் அமைப்பின் தலைவர் ஆவார். இந்த ஒற்றை சம்பவம் ஆஷா தொழிலாளர்களின் நிலையை எடுத்துரைக்கும்.

அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடிய போது கண்டுகொள்ளாத மோடி அரசு, கொரோனா காலத்தில் இது பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக போராட வைத்ததுள்ளது எனது தான் வேதனைக்குரிய நிலை.

அம்பானி, அதானி போன்றவர்களின் பெருநிறுவனங்கள் கோடிகளில் இலாபம் பார்க்க அத்தனை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுக்கும் மோடி அரசு, நாட்டின் சுகாதார பாதுகாப்பிற்காக போராடும் லட்சக்கணக்கான ஆஷா தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், அவர்களின் உழைப்பை மதித்து உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்குவதும் அரசின் கடமை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அரசே தன் ஊழியர்களின் உழைப்பை சுரண்டுவது, தனியார் முதலாளிகள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதை ஊக்குவிக்கும் செயலாகவே அமையும். ஆனால் இதையெல்லாம் சட்டப்பூர்வமாக அனுமதிக்கும் வகையில் தான் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் உள்ளது.

- மே பதினேழு இயக்கம்

Pin It