கடவுளெப் பாக்க முடியுமா

முடியுமெ

முடியுமா ! எப்படி

அதுக்கு முன்னால உங்களெ ஒண்ணு கேக்கணுமே

கேளுங்க.

காத்தைப் பாக்க முடியுமா

நேராப் பாக்க முடியாட்டியும், காத்துவந்து நம்மைத் தொடுது, தடவுது, தள்ளுது, அப்பொ தெரிஞ்சிக்கிடுதோம்.

கடவுள்ங்கிறதும் இப்படித்தாம் ; அவருடைய வரத்தும் ரொம்ப வித்தியாசமா இருக்கும்.

அதெக் கொஞ்சம் விவரமாத்தாம் சொல்லுங்களேம்.

சொல்ல ஆரம்பிச்சார் இப்படி.

பஞ்சபாண்டவர்கள் வனவாசத்துல இருந்த போது அந்த வீட்டின் ஒரு பகுதியில் தங்கி இருந்தாங்க.

ஒருநா ராத்திரி. குந்தி அம்மைக்கு ஒரு அழுகைச் சத்தம் கேட்டது. பாண்டவர்கள் அசந்து தூக்கிக்கிட்டிருக்காங்க. அது ஒரு தாயோட அழுகைச் சத்தம். பக்கத்துல யாரும் கேட்டுறப்படாதேன்னு அடக்கி அமுக்கி அழுகிற சத்தம். குந்தியம்மை மெல்ல எழுந்திருச்சி அந்தப்பக்கம் போயிப் பாத்தா, ஒரு பதினாறு வயசுப் பிராயமுள்ள பிள்ளை அசந்து தூங்கிக்கிட்டிருக்காம் ; அவனெப் பாத்துப் பாத்து அந்தத் தாயி அப்படி அழுதுக்கிட்டிருக்கா.

ஏம்மா, ஏம் அழுதுக்கிட்டிருக்கெ. பிள்ளைக்கு என்ன செய்யிதுன்னு அவளோட தலையத் தடவி ஆதரவோட கேட்டா...., அவ குந்தியோட கையெப்பிடிச்சி வெளியே கூட்டீட்டுவந்து மெலிஞ்சகுரல்ல சொல்றா.

எம்பிள்ளெ நாளைக்கு உசுரோட இருக்க மாட்டாம். அதனாலதாம் அவனை நல்லாப் பாத்துக்கிடனும்னு பாத்துப்பாத்து அழுதுக்கிட்டிருக்கேம் ன்னா. நாளைக்கு எங்கவீட்டு முறை. ஒருவண்டிச் சோறு சமைச்சி, அந்தச் சோத்தெத் திங்க வெஞ்சனமா எம்பிள்ளையவும் நா அனுப்பிவைக்கணும். அந்தத் தாய் சொல்றது முதல்ல குந்திக்குப் புரியல.

எல்லா விவரமும் சொன்ன பிறகுதாம் புரிஞ்சது. குந்தி கேட்டா. ஏம்மா பிள்ளைக் கறிதாம் அவனுக்கு வேணுமா, பெரியவங்க கறி ஆகாதாமா?

அப்பிடி இருந்தாத்தாம் இவனுக்கு பதிலாக நானே போயிறிவேனே; அவனுக்குப் பொம்பளைங்ககறி ஆகாதாமே !

சரி; ஒண்ணுத்துக்கும் நீ கவலைப்படாதெ ; எனக்கு அஞ்சி பிள்ளைக இருக்காக, அதில நா ஒரு பிள்ளைய்ய அனுப்பி வைக்கேம்ன்னா.

அதெப்படிம்மா, நீங்கள்ளாம் எம் வீட்டுக்கு அடைக்கலம்ன்னு வந்தவங்க. உங்கள அப்பிடிப் பயன்படுத்துறது தப்பில்லையான்னுகேட்டா.

ஆபத்துக்குப் பாவம் கிடையாதும்மா. எங்களுக்கு அடைக்கலம் தந்ததுக்கு நாங்க வேற என்ன செய்யப்போறோம் ; இப்பதாம் எனக்கும் ஒரு நிம்மதி கிடைச்சது. சரீன்னு சொல்லம்மா ; ஓம் பிள்ளையவும் காப்பாத்துன மாதிரியும் ஆச்சின்னு சொல்லி ஒப்புக் கொள்ள வச்சிட்டா. ராத்திரிச் சாமத்துல நடந்த கதைய குந்தி காலையில பீமன்ட்டெயும் மத்தப் பிள்ளெக கிட்டெயும் சொன்னா. பிள்ளைகளுக்கு ரொம்பத் திருப்தி ; முக்கியமா பீமனுக்கு.

காலையில, ஊர்ப் பொதுவில சமையல் நடக்கு. சமையல முடிச்சி. தடுக்கு கட்டின வண்டியக் கொண்டாந்து, பெரிய்ய துப்பட்டிய அதில போட்டு விரிச்சி, மண்வெட்டியால சோத்தெ வாரி வாரி கூடைகள்ளெ போட்டு வண்டிய ரொப்பி, வாளி வாளியா புளி சாம்பார், காரக் குழம்புன்னு கொட்டி, சோறு சரிஞ்சிவிழாம இருக்க வெஞ்சனங்களெ அடைகூட்டி வச்சி, தயிர்க்குடத்தெ சோத்து அம்பாரத்துமேலே கும்பம் போல பதிச்சி முடிச்சி, வண்டியப் பத்திக் கொண்டாந்து அந்த வீட்டுக்கு முன்னால நிப்பாட்டியாச்சி.

வழக்கமா இப்படி சோத்து வண்டி வந்து நிப்பாட்டவும் அந்த வீடுகள்ளெ இருந்து அழுகைச் சத்தம் பலமாக கிளம்பவும் சரியாக இருக்கும். இன்னெக்கு என்னடான்னா ஒரு சத்தத்தையும் காணோம் !

எல்லாரும் வண்டியச் சுத்திவந்து நின்று வேடிக்கெ பாக்காக. புளி சாம்பார் மணம் எச்சி ஊறுது. பீமண்ணாவைத் தம்பிமார் ரொம்பத்தாம் வேடிக்கைபண்ணிப் பேசுறாங்க.

ஊரா பிள்ளைக்குப் பதில் - என்னதாம் அஞ்சிபிள்ளெக இருந்தாலும் – அனுப்பி வைக்க எப்படி மனசு வரும். வழி அனுப்ப வந்த ஊர்க்காரர்க பாராட்டிப் பேசுறாக. ஒரு அப்புராணி போல வந்து பீமண்ணன் வண்டி பத்துற தார்க்குச்சிய வாங்கிக்கிட்டாம். அழுது வழியனுப்ப வந்த ஊர்ப் பெண்களுக்குக் கொஞ்சம் ஏமாத்தம் தான். யாரும் பெறத்தால வரவேண்டாம்னு பீமண்ணன் சொல்லீட்டு வண்டி பத்திட்டுப்போனாம்.

வண்டி போயிக்கிட்டிருக்கு வழக்கமான பாதையில் ‘கறீச் டொக்கட்டி டொக்கட்டீ‘ன்னு. தெரிச்ச குதிரைக பூட்டின தேர்ச்சவாரி பண்ணுன அந்த ராஜகுமாரனுக்கு இது ஒரு வேடிக்கையா இருந்தது. ஆத்தங்கரையில் வண்டிய நிப்பாட்டீட்டு, மாடுகளை அவுத்து தண்ணி காமிச்சி, இஷ்டத்துக்குப் போயி மேஞ்சி சந்தோசமா பிழைச்சிப் போங்கன்னு பத்தி விட்டூட்டாம்.

முகம் கால் கை கழுவிக்கிட்டாம்; நல்ல பசி. வயிறாரச் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சி. துப்பட்டிய நாலுமுக்கைப் பிடிச்சிச் தூக்கிக்கொண்டாந்து விரிச்சி வச்சிக்கிட்டு வசமா உக்காந்தாம். சோத்தைப் பினைஞ்சிம் பினையாமலும் தேங்காய்த்தண்டி உருண்டைகளா எடுத்து வாய்க்குள்ளெ போட்டு ஒருகுடம் தயிரையும் தண்ணி குடிக்கிறமாதிரி மளமளன்னு சாப்பிட்டு முடிச்சிட்டு சோத்துத்துப் பட்டியெச் சுருட்டித் தூர வீசி எறிஞ்சிட்டு ஆத்துக்குள்ள இறங்கி குனிஞ்சி கைகழுவுறதுக்கும் அந்த அரக்கன் ஓடிவந்து இவம் முதுகுல ஓங்கி ஒரு குத்து வைக்கிறதுக்கும் சரிய்யா இருந்தது.

குத்தை வாங்கிக்கிட்ட பீமண்ணன் ‘திஏ....ப்‘ என்று ஒரு ஏப்பம் விட்டானாம்! ; விட்டுட்டு அப்பாடின்னானாம் நிம்மதியா. அரக்கனுக்குத் தாங்க முடியாத பசி, ஆங்காரம். எங்கெ ஆப்ட்ட தடிபயலோ ஒருத்தன் நம்ம சாப்பாட்டெப் பூராத்தையும் - நெமெதட்றதுக்குள்ளே தின்னு தீத்துட்டதுமில்லாமெ நிறை ஏப்பம் வேற விடுதானேன்னு நினைச்சி “யாருக்குப்பிறந்த பயடா நீ எஞ்சோத்தை வந்து திங்கிறதுக்கு?” கோவம் அண்டகிடாரம் முட்டிப் போச்சி அரக்கனுக்கு.

சிரிப்பு வந்துட்டது பீமண்ணனுக்கு.

பீமண்ணன் மேலெ பாயப்பாய அரக்கனெ ஒருகையால தள்ளித்தள்ளிவிடுதாம். இவனெ எப்பிடிக்கொல்றதுன்னு அரக்கன் கொஞ்சம் நிதானிச்சபோது பீமண்ணன் சொன்னாம் : டே பயலே வேற எங்காச்சும் ஓடிப்போயி பிழைச்சுக்கொ. இந்த ஊர்க்காரங்களுக்குத் தொந்தரவு கொடுக்காதே. நல்லதனமாச் சொல்றேம் கேட்டுக்கொ. வம்பா அழிஞ்சிபோகாதென்னாம்.

கேப்பானா அரக்கன். என்னோட தொழிலே இந்த மனுசப் பயல்களெக் கொன்னுதிங்கிறதுதாம். இப்பொ ஒன்னெயும் கொன்னு தின்னாத்தாம் என்னோட பசி அடங்கும் ன்னு ஆரம்பிச்சிட்டாம். பீமண்ணன் கொஞ்ச நேரம் அவனோட விளையாட்டுச் சண்டை போட்டாம். பிறகு ஒரு பனைமரத்தெப் பிடுங்கி அதாலெ ஒரே அறை; சோலி முடிஞ்சது.

இப்போ பீமண்ணன், அந்தப் பிள்ளெயப் பெத்த தாய்க்கி கடவுளாவும் ஊரையே காப்பாத்துன கடவுளாயும் ஊர்க்காரங்களுக்குத் தெரிவானா இல்லையா?

(துரியோதனன் கண்ணுக்குமட்டும் அவன் வெறும் சோத்துமாடனாவும் தின்னிமாடனாவும் தெரியலாம்!)

இப்படித்தாம் கடவுளோட வரத்தைப் பார்க்கிறது என்றார்.

************

பிடதியில் குதிங்கால் அடிக்க ஓடுகிறது என்று சொல்லுவார்கள், யோசித்துப் பார்த்தால் இப்படியும் ஒட முடியுமா என்று தோன்றும். எல்லாந் தெரிஞ்சவரிடம் கேட்டபோது அவர் சொன்னது ; ‘அட எதையுமே அப்படியேப் பார்க்கப்பிடாதுப்பா ; பயத்தில் தலைதெறிக்க ஓடுகிறாப்லன்னு சொல்றதில்லையா ! என்று சொல்லிவிட்டு, ஒரு நடந்த கதையைச் சொன்னார்.

மழை பெய்த மூணாம் நாள் காட்டை (தனது கரிசல்ப் புஞ்சையை) சுத்திப்பார்க்கப் போனார் பாறைப்பட்டி நாயக்கர். திரும்புகிற போது ஒத்தையடிப்பாதை வழிவந்தார். கம்மம்பயிர் ரெண்டுபக்கமும் தலைக்கு மேலெ வளந்திருக்கு. செங்கமங்கலான நேரம். பயம் வந்துட்டது ; காரணம். குதவளையைப் பிடிச்சி நெருக்குனா எப்பிடி சத்தங்க கொடுப்பாங்களோ அதுபோல ஒரு சத்தம்! முதல்ல எட்டி நடையைப் போட்டவரு வேகம் எடுத்து ஓட ஆரம்பிச்சாராம். கால்ல செருப்பு போட்டிருந்ததுனால வெரசா ஓடமுடியவில்லைன்னாலும் எப்படியாவது தப்பிச்சிறனுன்னும் ஓட ஆரம்பிச்ச போதுதான் பிடதியில மண்ணு உருண்டயால யாரோ வீசி அடிக்கிறாங்களாம்! வேகமா ஓட ஓட மண்கட்டிஅடி வேகமா வந்து விழுதுதாம்.

ஒத்தையில வந்தது தப்பாப் போச்சின்னு நினைச்சி குலதம்புரானெ நினைச்சிக்கிட்டே எப்படியோ சாமி புண்ணியத்துல பிழைச்சி ஊருவந்து சேர்ந்தேம்னு சொல்ரதுக்கும் எல்லாந் தெரிஞ்சவரு வாய் விட்டு பலமா சிரிக்கிறதுக்கும் கணக்குவச்சிப் பார்த்தா கட்டிட்டு எறிஞ்ச மனுசனே இவதாம் போலன்னு நாங்களல்லாம் அவரோட சேர்ந்து சிரிச்சோம். பாறைப்பட்டி நாய்க்கர் திகைக்கத் திகைக்க எங்க சிரிப்பு அதிகமாகுது.

கோவப்படவும் முடியலை அவருக்கும், “நாஞ்சொல்றது சம்மந்தகாரங்களுக்கு சிரிப்பா இருக்காக்கும்” ன்னு சொல்லி சடைச்சிக்கிட்டாரு.

ஒரு மட்டும் சிரிச்சி முடிச்சிட்டு, நீரு ஈரப்பத்துல கரிசக்காட்டுக்கு செருப்பு போட்டுட்டுப் போதுனதுதாம் தப்புன்னார். எல்லாந் தெரிஞ்சவரு. ஓடுறப்பொ அந்த செருப்புல ஓட்டுன மண்ணுக்கட்டிக சரிய்யா பொடதியில தாம் விழும். நமக்கு அது அப்பிடித்தோணுது, எவனோ நம்மெ கட்டியக் கொண்டி பிடதில குறிபார்த்து அடிக்கான்னுட்டு

கண்ணு மண்ணு தெரியாமெ ஓடியாந்தா அப்பிடித்தாம்! திரும்பவும் ஒரு பாய்ச்சல் சிரிப்பு அலை.

இதை ஒட்டி இப்ப எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது.

உங்களுக்கு சூரியமூர்த்தி என்று ஒருவரைப் பற்றி சொன்ன ஞாபகம். அவர் என்னைவிட ஒரு நாலைந்து வயது பெரியவர். எப்பப் பார்த்தாலும் கலைந்து கொண்டே திரிவார்; யாராலும் எந்த வேளையிலும் தமக்கு ஆபத்து வரலாம் என்று இருக்கும் அவர் மற்றவர்களைப் பார்க்கும் விதம். சதா எதையோ உக்காடனம் செய்து கொண்டிருப்பது போல அவருடைய உதடுகள் அசைந்து கொண்டே இருக்கும். அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொள்வார்; “யாராவது பின்னால் வருகிறார்களா நம்மை எதாவது செய்து விடுவார்களா” என்று கவனிப்பது போல இருக்கும். மகா பக்திமான். நடக்கும் வழியில் எந்தக் கோவில் வந்தாலும், நின்று காலணிகளிலிருந்து பாதங்களை முக்கால்வாசி உறுவி, தலையைக் கவிழ்ந்து ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் தான் நகர்வார். தலையில் பாரம் இருந்தால் மட்டும் பாதங்களைக் காலணியிலிருந்து மட்டும் உறுவி கொஞ்சம் நின்று வாயால் கடவுளே காப்பாத்து என்பது போல ஏதேனும் ஒன்றை உச்சரித்துவிட்டு காலணிகளை மாட்டிக் கொண்டு நகர்வார். உடங்காடு (உடைமரங்கள் சூழ்ந்த காடு) போன்ற இடங்களில் உள்ள துடியான தேவதைகள் இருக்கும் இடங்களைக் கடக்கும் போது மட்டும் குனித்து நிலக்காப்பு தரையில் மண்ணைக் கிள்ளி துளி வாயிலிட்டு நெற்றியிலும் பூசிக்கொள்வார்.

இப்போது கொஞ்ச நாளாகவே அவர் ரொம்பவும் மிரண்டுகொண்டு அலைவதாகச் சொன்னார்கள்.

ஒரு நாள் யாரும் இல்லாத வேளையில் ஊர் அம்பலகாரரைத் தேடிவந்தாராம். அம்பலகாரர் இவரை விட மகாபக்திமான். எல்லாரும் நெற்றியில் திருமண் ஒன்று இட்டுக் கொண்டால் அவர் உடம்பில் ஒன்பது இடத்தில் திருமண இட்டுக் கொள்வார்.

ராமநாமமே கல்க்கண்டு
வாயில போட்டால் இனிப்புண்டு
என்று குரல்எடுத்து எச்சில் (உயர்ந்த சுருதியில்) பாடுகிறவர். எப்பப்பார்த்தாலும், பக்கத்தில் அவரைச்சுத்தி நாலுபேர்கள் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள்.

சூரியமூர்த்தி அவரைப் பார்க்கப் போனநேரத்திலும் அவரைச் சுற்றி நாலைந்துபேர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். இவர் போய் அவர் முன்னால் நின்றார். என்ன என்பதைப் போலப் பார்த்தார் சூரியமூர்த்தியை பதில் இல்லை. ஒரு கண்அசைப்பில் அபலகாரர் எல்லோரையும் போய்விடும்படி ஜாடை காட்டியதும் போய்விட்டார்கள்.

‘வா மாப்ளே இப்பிடி எம் பக்கதுல உக்காரு’ என்று பிரியமாகச் சொன்னதும் உக்காந்தார் சூரியமூர்த்தி.

அசலூர்க்காரராய் இருந்தால் மழை தண்ணி எப்படி என்று கேட்கலாம். கல்யாணம் ஆனவராய் இருந்தால் குழந்தை குட்டிகள் சவுக்கியமா என்று விசாரிக்கலாம். இவரோ ஆஞ்சிநேயரைப் போல தனியா இருக்கிறவர். சுயபாக சமையல்தான். பொம்பளைப்பிள்ளைகளில் சின்னப் பிள்ளையாக இருந்தாலும் கூடப் பார்க்கமாட்டார் ! அப்படி ஒருவகை. அதனால், பக்கத்தில் வந்து உட்கார்ந்தவரைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

அவரும் ஒன்றும் சொல்லாமல் தரையையே கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மாமா, இப்போதெல்லாம் கொஞ்சநாளா நா தனியா - ஒத்த விழியாப் போற போது, யாரோ என் பெறத்தாலெ வாரதுபோலத் தெரிஞ்சிக்கிட்டே இருக்கு. திரும்பிப் பார்த்தா கண்ணுக்கு எதுந் தெரியல. மன அருக்கான்னும் சொல்ல முடியல. ஏம் பெறத்தால யாரோதாம் வார மாதரியேத் தெரியுது. அது என்னதுன்னுட்டு நீங்கதாம் சொல்லணும் அடியேனுக்கு என்று இவர் சொல்லி முடிக்கவும் அம்பலகாரர் தன்னோட ரெண்டு கையவும் தலைக்கு மேலெ - சுண்டைக்காய் அளவு கொண்டை போட்ட அந்த வழுக்கை மண்டையில் – வச்சிக் கும்பிட்டுக் கிட்டே ஆகா ஆகா அடாடா அடாடா ; என்ன பாக்கியம் செஞ்சயோட சூரியமூர்த்தி; “அய்யோ அய்யோ” என்று வாப்பாறினாராம்.

“என்ன சொல்றீக மாமா என்ன சொல்றீங்க” என்று இவர் பதறிப்போய் கேட்கவும், ஒன்னோட பக்திக்கு, அந்தக் கடவுளே உனக்குப் பாதுகாப்பாக நீ எங்கே போனாலும் ஒனக்கு பெறத்தாலயே வாராறப்பா ; எப்பேர்ப்பட்ட பாக்கியவான் நீ .... என்று அம்பலம் உருகவும் சூரியமூர்த்தியும் அதே போல ரெண்டு கையவும் தலையில வச்சிக்கும்புட்டுக்கிட்டே ‘ராமா ராமா’ என்று சொல்லிக் கொண்டே கிளம்பிப் போய் விட்டாராம்.

சூரியமூர்த்தி போன பிறகு அம்பலகாரரோட சேக்காளிகள் என்ன என்ன என்று விசாரிக்க சொல்லிச் சொல்லி சிரிச்சாராம் அம்லம். அதுக்குப் பிறகு சூரியமூர்த்தியிடம் ஒரு நல்ல மாறுதல். நிதானமாக நடந்தார். அந்தக் கடவுளே தன்னோடு கூடவே வரும் போது இனி என்ன பயம்?

*******

இமையமலையில் அப்போது கடவுள் ரிஷி வடிவில் இருந்தாராம். அந்தக் காலத்தில் பேசும் மொழிகளுக்கெல்லாம் எழுத்துகள் உண்டாகவில்லை. எப்படி உண்டாக்குகிறது என்றும் இந்த மொழிகளுக்குத் தெரியவில்லை. கடவுளிடம் போய் கேட்போம் என்று தீர்மானித்ததாம். வடக்கே உள்ள மொழிகளுக்கு இமையமலை கிட்டெ இருந்ததால் முதலில் அவைகள் தான் போக முடிந்தது.

கடவுளே கடவுளே எங்கள் மொழிக்கான எழுத்துக்கள் எப்படி - எந்த மாதிரியான - வடிவத்தில் இருக்கணும் என்று கேட்டதாம். எப்படிச் சொன்னால் இதுகளுக்கு விளங்கும் என்று யோசித்தாராம். தனது இடதுகையில் வைத்திருந்த தண்டத்தைக் காட்டினாராம். அப்படிக் காட்டி இதைப் போல இருக்கட்டும் என்றாராம்.

இதன்பிறகு தெற்கத்தி மொழிகளெல்லாம் போனதாம். கடவுளே கடவுளே எங்கள் மொழிக்கான எழுத்துக்களை எந்த வடிவில் அமைக்கிறது என்று கேட்டதுக்கு அவர் தனது வலது கையில் வைத்திருந்த கமண்டலத்தைத் தூக்கிக் காட்டினாராம். இதனால் தான் இந்தி போன்ற எழுத்துக்களெல்லாம் தண்ட வடிவிலான குச்சிகள் போன்ற வடித்திலும் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற எழுத்துக்களெல்லாம் கமண்டலம் போல வட்ட வடிவில் தங்களை அமைத்துக் கொண்டதாம். (- புதுவையில் நடந்த ஒரு மொழியியல் கூட்டத்தில் பேராசிரியர் நாராயணன் சொல்லக் கேட்டது.)

அஞ்ஞான்று எல்லியெழு
நானாழிப் போதின்வாழ்
ஆழி வரம் பணித்துக் காலேற்று
காலோட்டப் புக்குழி

சமஸ்கிருத சுலோகம் போல இது ஒரு தமிழ்ச் சுலோகமோ என்று வாசகர்கள் மயக்க முற வேண்டாம் ; தமிழ்தான்.
சரியான தமிழ் :

அன்றைக்குப் பொழுது எழுந்து
நாலுநாழிகை இருக்கும். கடற்கரையோரம்
காற்றுவாங்கப் போனபோது ...

என்பதைத் தான் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது. நமது பெரும் மதிப்பிற்குரிய ஆறுமுகநாவலர்ப் பெருமான் அவர்கள் தான் எழுதியிருக்கிறார்கள், உரைநடையில் இப்படி.

Pin It