தொல்லியல் துறையைப்பற்றி ஒரு பழமொழி உண்டு-” வரதட்சணை இல்லாத அழகான மணமகள் “ என்று. அதனால் பெரிதும் படித்தவர்களாலேயே கவனத்தில் கொள்ளப்படாத துறை இது. ஆனால் தொன்மையான கிரேக்க நாகரிகத்தைப் பார்த்துப் பொறாமை கொண்ட ஐரோப்பிய சமூகம் தொல்லியல் ஆய்வுகளில் நாட்டம் கொள்ளத்துவங்கியது.

இந்தியாவில் காலனி ஆட்சியாளர்களே இந்த ஆர்வத்தைப் பதிய வைத்தனர். ஹரப்பா நாகரிகம், அரிக்கமேடு கண்டுபிடிப்பு என இவையெல்லாம் காலனி ஆட்சிக்காலத்தில்தான் நடைபெற்றன.

கடந்த நான்கைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தஞ்சையை மையமாகக்கொண்டு “தொல்லியல் ஆய்வுக்கழகம்” என்ற அமைப்பு 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இது அரசு சாராத அமைப்பாகும். இதன் செயல்பாடுகளின் விளைவாக 1905இல் நிறுத்தப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வு 2005இல் மீண்டும் தொடங்கப்பட்டது. சத்தியமூர்த்தி, நம்பிராசன், அறவாழி ஆகிய அறிஞர்கள் இதில் பங்கேற்றனர். வழக்கம்போலவே மைய அரசின் இந்த அகழாய்வுப்பணி அறிக்கை தமிழில் இதுவரை வெளியிடப்படவில்லை. 150 ஏக்கர் பரப்பளவுள்ள ஆதிச்சநல்லூரில் 600 சதுர அடிப் பரப்பில் மட்டுமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் குறுகிய பரப்பிலேயே 165 தாழிகள் இப்போது கண்டெடுக்கப்பட்டன. அவைகள் ஒன்றன் கீழ் ஒன்றாக மூன்று அடுக்குளாகக் காணப்பட்டது. இப்படி இன்னும் எத்தனை ‘கால அடுக்குகள்’ தோண்டப்படா மலேயே இருக்கின்றன என்று தெரியவில்லை. (ஒரு அடுக்கு என்பது ஒரு காலத்தைக் குறிக்கும்). ஆனால் முந்தைய (1905)அகழ்வாய்வாளர்களான டாக்டர் ஜேகோர், அலெக்ஸாண்டர் ரீ ஆகியோருக்குக் கிடைத்த வெண்கலப்பொருட்களில் ஒன்று கூட இந்த ஆய்வில் கிடைக்கவில்லை(செம்பாலான ஒரு குழந்தை வளையலைத் தவிர).

இந்த 2005 அகழாய்வு விவாதப்புயல் ஒன்றையும் துவக்கி வைத்தது. கண்டுபிடிக்கப்பட்ட பானை ஒன்றின் உட்புறமாக பிராமி எழுத்துக்கள் இருந்ததாக முதலில் பத்திரிகைச்செய்தி வந்தது. அதைக்கண்டு தமிழ் ஆர்வலர்கள் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தனர். பானை ஓட்டின் உட்புறமாக எழுத்து இந்தியாவில் இதுவரை எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எலும்பும் சாம்பலும் படிந்த கீறல்களையே இவர்கள் பிராமி எழுத்துக்களாக வாசித்து விட்டனர் என்பதுதான் உண்மை. ஐந்தாண்டுகள் கழித்து ஆர்வக்கோளாறு காரணமாக ஏற்பட்ட இத்தவறினை அரைகுறையாக ஒப்புக்கொண்டனர்.

ஆனால் ஆதிச்சநல்லூர் நாகரிகத்தை -கரிம வேதியல் ஆய்வுக்கு உட்படுத்தி-கி. மு. 8 ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டு சென்றது இந்த ஆய்வின் சாதனையாகும். (முந்தைய ஆய்வுகள் ஆதிச்சநல்லூர் நாகரிகத்தை சங்ககாலத்தில் -கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் -நிறுத்தியிருந்தன).

ஆனால் ஆதிச்சநல்லூர் மக்கள் பேசிய மொழி எது என்ர கேள்விக்கான விடை இன்னும் எஞ்சியே நிற்கிறது. ஆதிச்சநல்லூர் புதைமேட்டின் குடியிருப்புப் பகுதிகளைக் கண்டறிவதற்கான முயற்சியும் முழுமையாக வெற்றி பெறவில்லை. இந்த மேட்டின் உட்புறமாக ஆற்றங்கரை ஓரமாக அமைந்திருக்கும் இரண்டு ஏக்கர் நிலப்பகுதி தொல்லியல் ஆய்வாளர்களால் இன்னமும் தீண்டப்படாத பகுதியாகவே உள்ளது.

ஆதிச்சநல்லூர் நாகரிகத்தின் வியப்புக்குரிய செய்தி அங்கு வாழ்ந்த மக்கள் உலோகவியலில் பெற்றிருந்த அறிவாகும். இரும்பு, செம்பு மற்றும் கலப்பு உலோகமான வெண்கலம் ஆகியவற்றை அந்த மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். அந்த அறிவு குறித்த எந்தக்கூடுதலான தகவலையும் இந்த 2005 ஆய்வு தரவில்லை. மாறாக புதைமேடு ஆக்கப்படுவதற்கு முன் இந்த இடம் தாதுச்சுரங்கமாக இருந்தது
என்கிற ஓர் தகவலை மட்டுமே தந்துள்ளார்கள்.

ஆதிச்சநல்லூருக்கு நேர் வடக்கே வல்லநாட்டு மலையில் கருங்காலி ஓடைக்கு இருபுரமாகவும் இருக்கிற 200 ஏக்கர் பரப்பளவுள்ள தொல்லியல் தளத்தை மைய ஆய்வுக்குழு கண்டுகொள்ளவே இல்லை என்பது வருந்தத்தக்கது.

ஆனால் தமிழகத்தில் வேறு சில இடங்களில் நடந்த ஆய்வுகள் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிப்பனவாக உள்ளன. முதலாவது ஆண்டிபட்டிக்கு அருகில் பிராமி(தமிழி) எழுத்தில் அமைந்த நடுகற்களின் கண்டுபிடிப்பாகும். தமிழ்ப்பல்கலைக்கழக மாணவர்களே இதைக் கண்டுபிடித்தனர். இந்த நடுகல் ஒன்றில் ‘ஆகோள்’ என்ற சொல் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொல்காப்பியர் பயன்படுத்திய சொல்லாகும். “ வேயே புறத்திறை ஊர்கொலை ஆகோள்” என்பது தொல்காப்பியக் கூற்றாகும். தொல்காப்பியம் வழக்கு மொழிக்கு முதன்மை தந்ததற்கு இதுவே சான்றாகும். இரண்டாவதாக தமிழ் எழுத்து மக்கள் புழங்கிய எழுத்தல்ல அது மேலோர் மரபு சார்ந்தது என்ற பேராசிரியர் கா. சிவத்தம்பி போன்றோரது கருத்தை இந்தக்கண்டுபிடிப்பு தகர்த்தெறிந்தது.

அடுத்து, மிக அண்மைக்காலத்தில் பழனிக்குத் தெற்கே 20 கி. மீ. தொலைவில் ‘பொருந்தல்’ என்ற இடத்தில் ஓர் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. பேராசிரியர் கா. இராஜன் இந்த ஆய்வை முன்னின்று நடத்தினார். ஒரே ஆய்வுக்குழுவில் 7500 மணிகள் கண்டெடுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் “ CORNELIAN BEADS” என வழங்கும் இவற்றைத் தமிழில் ‘சூது பவளம்’ என்பார்கள். இந்தக் கற்கள் தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை. குஜராத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாக இருக்கலாம். கேரளத்தின் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இந்தக் கற்கள் இங்கே மணிகளாகச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. பொருந்தல் தமிழக-கேரள வணிகப்பாதையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘பொருந்தில்’ என்ர ஊர்ப்பெயர் சங்க இலக்கியத்திலேயே காணப்படுகிறது. எனவே இது சங்க கால நாகரிகத்தைக் காட்டும் கண்டுபிடிப்பு என்பதில் ஐயமில்லை.

இந்தியாவில் ஆய்வுகுரிய தொல்லியல் தளங்களாக 3500 தளங்களை மைய அரசு பட்டியலிட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டுமே 5000 தலங்கள் வரை உள்ளன என்பது கள ஆய்வாளரின் நம்பிக்கையாகும். அண்மையில் இந்தத் தொல்லியல் தளங்களை பட்டியலிட்டு பேராசிரியர் கா. இராஜனின் மாணவர்கள் இரு தொகுதிகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேர்களைப்பற்றிய அறிவு என்பதும் விஞ்ஞானத்தில் ஒரு பகுதிதான். பண்டைக்காலத் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்வது ஐரோப்பியக் கொடும்பிடியிலிருந்து இத்தளத்தில் நம்மை விடுவிக்க உதவும் என்பது இடதுசாரி ஆய்வாளர்களின் நம்பிக்கையாகும்.

- தொ.பரமசிவன்

Pin It