வருவிசை புனலைக் கற்சிறை போல

ஒருவன் தாங்கிய பெருமையானும்

-தொல்காப்பியம், பொருள்:65.

விசையோடு வரும் நீரை ஒரு கற்சிறை(அணைக்கட்டு) தடுத்து நிறுத்துவது போல, வேகமாக முன்னேறி வரும் ஒரு படையை, உறுதியோடு முதலாவதாக முன் சென்று அதனைத் தடுத்து நிறுத்தக் காரணமாவதன் மூலம், ஒரு வீரன் பெருமையடைகிறான் என்பது இதன் பொருள். கி.மு. 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர் பாடிய பாடல் வரிகள் இவை. இவர் குறிப்பிடும் கற்சிறை என்பது ஒரு அணைக்கட்டு ஆகும். பழந்தமிழர்கள் ஆற்றில் வரும் நீரை கற்களால் ஆன கட்டுமானத்தைக் கொண்டு சிறைப்படுத்தி, கட்டுப்படுத்தி  பாசனத்துக்குப் பயன்படுத்தினர் என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது.

நமது தமிழகம் 2500 ஆண்டுகளாக ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைக் கட்டுமானங்களைக் கட்டிப் பயன்படுத்தி வருகிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் இக்கட்டுமானங்கள் குறித்துப் பல பெயர்கள் உண்டு. உரிச்சொல் நிகண்டு இவைகளுக்கு, இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கன், மடு, ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், தடாகம், நளினி, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம், கண்மாய் எனப் பல பெயர்களைக் குறிப்பிடுகிறது. இவை போக வேறு பல பெயர்களும் உண்டு.

இவ்வாறு தமிழில் நீர்நிலைகளுக்குப் பல பெயர்கள் இருப்பது என்பதே, பழந்தமிழர்கள் நீர்நிலைகளை உருவாக்குவதில் புகழ் பெற்றவர்கள் என்பதை உறுதி செய்கிறது. அதனை அவர்கள் 2000 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தி, பராமரித்து, பாதுகாத்தும் வந்துள்ளனர். ஆனால் கடந்த சில பத்து வருடங்களில் அதில் பலவற்றை நாம் இழந்து விட்டோம் என்பதோடு தொடர்ந்து இழந்தும் வருகிறோம். இருக்கும் ஏரிகளும் அதன் கொள்ளளவைத் தொடர்ந்து இழந்து வருகின்றன.

1923ல் வீராணம் ஏரியின் கொள்ளளவு 1.45 டி.எம்.சி. ஆனால் 1991ல் அதன் கொள்ளளவு 0.99 டி.எம்.சி மட்டுமே. இதுதான் பல ஏரிகளின் நிலைமை. அது போன்றே முன்பு பதிவு செய்யப்பட்ட ஏரிகளின் மொத்தப் பாசனப்பரப்பு கிட்டத்தட்ட 25 இலட்சம் ஏக்கர். ஆனால் தற்போது உள்ள பாசனம் பரப்பு என்பது சுமார் 15 இலட்சம் ஏக்கர் மட்டுமே. இந்நிலை மாற்றப்பட வேண்டும். மழை நீரைச் சேகரிப்பதும், அதனைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் எவ்வளவு அவசியம் என்பதைப் பழந்தமிழர்கள் நன்கு உணர்ந்து இருந்தனர். அதனால் தான் வள்ளுவன் வான்மழை என்ற அதிகாரத்தைக் கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக, வைத்தான். இளங்கோவடிகள் தனது காப்பியத்தை, கதிரவன், திங்களோடு வான்மழையையும் போற்றித் தொடங்கினார்.

2000 ஆண்டுகளுக்கு முந்திய சங்ககாலத்தில் இறந்தவர்களை முதுமக்கள் தாழிகளில் புதைத்து வந்தனர். அவைகளில் பல ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் மட்டும் முதுமக்கள் தாழிகLLள் புதைக்கப்பட்ட  இடங்கள் அருகில் உள்ள 50 சங்ககால ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஏரிகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. தமிழீழத்தில் கி.மு. 300ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு பசவங்குளம் என்ற ஏரி குறித்துத் தெரிவிக்கிறது. தமிழகத்திலும், தமிழீழத்திலும் மிகப்பழங் காலம் முதல் ஏரிகள் இருந்தன என்பதற்கு இந்தத் தகவல்களே சாட்சிகளாக உள்ளன.

சங்ககாலப் புலவர்கள் அன்றைய ஆட்சியாளர்களிடம் ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளைக் கட்டச் சொன்னார்கள். நீர்ப்பாசனத்தில் ஏற்படும் வளர்ச்சி தான் ஒரு நாட்டின் எல்லா வெற்றிக்கும் மூலகாரணம் என்பதை எடுத்துரைத்தார்கள். ஆட்சியாளர்களும் அதனை ஏற்று செயல்படுத்தினார்கள். கி.மு 2ம் நுற்றாண்டில் வாழ்ந்த குடபுலவியனார் என்ற புலவர் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனிடம்,

 

....................யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே:

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே:

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே: (புறம்-18)     என்கிறார்.

“உடலுக்கு உணவு கொடுத்தவர்கள் தான் உயிர் கொடுத்தவர்கள். உடல் இருக்க உணவே காரணம். உணவு என்பது நீரும் நிலமும் சேருவதால் உருவாக்கப்படுவது. ஆகவே நீரையும் நிலத்தையும் சேர்த்தவர்களே உடம்பையும் உயிரையும் படைத்தவர்கள். இதுவே இதன் பொருள். இப்பாடல் மொத்தம் 30 வரிகளைக் கொண்டது. இதன் தொடக்கத்தில், “வேந்தனே நீ மறு உலகத்தில் பெருஞ்seசெல்வத்தோடும், பெரும்பேற்றோடும் இருக்க விரும்புகிறாயா? இந்த உலகம் முழுவதையும் வென்று அதன் பேரரசன் ஆக  விரும்புகிறாயா? உலகம் உள்ளவரை உன் புகழ் நிலைத்து நிற்கவேண்டும் என்று விரும்புகிறாயா? அப்படியானால் நான் சொல்வதைக் கேள் என்றபின் மேற்குறிப்பிட்ட பாடல் வரிகளைப் பாடுகிறார். அதன்பின், “நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கியவர்கள் தான் மக்கள்வளத்தைப் பெருக்கியவர்கள் ஆவர். ஆகவே நீ நாடு முழுவதும் நீர்நிலைகளைப் பெருக்குவாயாக! இதனைச் செய்பவர்கள் தான் மூவகை இன்பத்தையும் பெற்று புகழ் பெறுவர். என்கிறார்.

வெள்ளைக்குடி நாகனார் என்கிற இன்னொரு சங்ககாலப்புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம்,

வருபடைத் தாங்கிப் பெயர்புறத்து ஆர்த்துப்

பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை

ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே  (புறம்-35)

அதாவது, “போர்க்களத்தில் உனதுபடை எதிரியை வென்று ஆர்ப்பரித்துக் கொண்டாடுவதற்கு மூலகாரணம் யாதெனில் உன் நாட்டு உழவர்கள் நிலத்தில் ஆழ உழுது விளைவித்த நெற்குவியலே ஆகும் என்கிறார். இவர் காலம் கி.மு. முதல் நுற்றாண்டு. இந்த இரண்டு பாடல்களும் அன்று உணவு உற்பத்தியே, வேளாண்மை வளர்ச்சியே நாட்டினுடைய எல்லா வெற்றிற்கும் மூலகாரணம் என்ற உண்மை நிலையையும், அதற்கு நீர்நிலைகளைப் பெருக்குவதே சிறந்த வழி என்பதையும் தெளிவுபடுத்துகிறது எனலாம். இன்றும் அது பெருமளவு பொருந்தும்.

இரண்டாம் கரிகாலன் குறித்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலையில்,

‘காடு கொன்று நாடாக்கி

குளம் தொட்டு வளம் பெருக்கி என்கிறார்.

அதாவது கரிகாலன் காட்டை அழித்து, குளம் கட்டி, விளைநிலங்களைப் பெருக்கினான் என்கிறார். இவர் காலம் கி.மு. 2ம் நூற்றாண்டு.

ஏரிகள் அன்று மிகச்சிறந்த தொழில்நுட்பத்தோடு கட்டப்பட்டன என்பதும், ஏரி போன்ற நீர்நிலைகளின் அழிவு என்பது மிகப்பெரும் துயரச் சம்பவமாகக் கருதப்பட்டது என்பதும் கீழ்கண்ட சங்கப்பாடலால் நாம் அறியலாம். இதனைப் பாடியவர் மிக அதிகப் பாடலைப் பாடிப் புகழ் பெற்ற கபிலர் ஆவார். இவரின் காலம் கி.மு. 3ம் நூற்றாண்டு. பாரியின் பறம்பு நாடு மூவேந்தர்களால் தாக்கப்பட்டு தோல்வியடைந்தபின், அந்நாட்டில் உள்ள ஒரு குளம் பராமரிப்பு இன்றி, கவனிப்பாரற்றுப் பாழ்படுவதைப் பற்றிப் பாடிய பாடல் இதுவாகும்.

அறையும் பொறையும் மணந்த தலைய

எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரைத்

தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ

கூர்வேல் குவைஇய மொய்ம்பின்

தேர்வண் பாரி தண்பறம்பு நாடே

‘கூரிய வேலையும் திரண்டதோளையும் உடைய பாரியின் பறம்பு மலையில் உள்ள எட்டாம் நாள் பிறையை ஒத்த வளைந்த கரைகளையும் தெளிந்த நீரையும் உடைய சிறுகுளம் பாதுகாப்பார் இல்லாமையால் பாழ்படுகிறதே எனத் துயரப்படுகிறார் கபிலர். எட்டாம் நாள் பிறை வடிவில் அமைந்த குளம், குறைந்த நீளம் உடைய கரையைக் கொண்டு அதிகக் கொள்ளளவு கொண்ட நீரைக் கொண்டிருக்கும். அது போன்ற சிறப்புமிக்க  இச்சிறு குளம் பாழாகிறதே என வருத்தப்படுகிறார் கபிலர். ஆனால் இன்று குளம் அழிவது கண்டு வருத்தப்படும் உயர்ந்த மனிதர்கள் இல்லை.

தமிழர்கள் நீர்நிலைகளை உருவாக்குவதில் மட்டுமின்றி அதனை நன்கு  பாதுகாத்துப் பராமரிப்பதிலும் சிறந்து விளங்கினர். நக்கண்ணையார் என்ற சங்ககாலப் புலவர்,

துய்அவிழ் பனிமலர் உதிர வீசித்

தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்

எறிதரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்

பெருங்குளம் காவலன் போல,

அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே (அகம் 252), என்கிறார்.

‘கடுமையான மழை பொழிந்து கொண்டிருக்கும் நடு இரவினிலே கூட தூங்காமல், பெரிய குளம் ஒன்று உடைபடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கும்  அதன் காவலன் போல, என்னை அன்னை பாதுகாத்து வருகிறாள் என தலைவி தனது இக்கட்டான நிலை குறித்து தோழி மூலம் தலைவனிடம் சொல்லும் அகப்பாடல் இது. கடுமையாக மழை பெய்யும்பொழுது குளம் உடைய அதிக வாய்ப்புண்டு. ஆகவே அப்பொழுது அது உடையாமல் பாதுகாப்பது மிகமிக அவசியம். உடையும் நிலை ஏற்பட்டால் அதனை தடுப்பதும், முடியாதெனில் உரியவரிடம் சொல்லி உரிய ஏற்பாடு செய்வதும் அவன் பணி. இல்லையெனில் அது மிகப்பெரிய சேதத்தை உருவாக்கும்.

ஆகவே தான் கடும்மழையில் நடுஇரவிலும் தூங்காமல் குளத்தை  பாதுகாப்பது அவசியமாகிறது. ஏரிகளின் கரைகள், கலிங்கு, மதகுகள் போன்றவற்றைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும், ஏரிநீரை பாசனத்துக்கு பிரித்து வழங்குவதும் ஆன பணிகளைச் செய்ய முறையான அமைப்பு ஒன்று இருந்துள்ளது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது எனலாம்.

சங்ககாலத்துக்குப் பின் வந்த பதினெண்கீழ் கணக்கு நூல்களில் ஒன்று சிறுபஞ்சமூலம். அதனை இயற்றியவர் காரியாசான். அதன் பாடல் ஒன்று வருமாறு,

குளம் தொட்டு, கோடு பதித்து, வழி சீத்து,

உளம் தொட்டு, உழு வயல் ஆக்கி, வளம்தொட்டுப்

பாகுபடும் கிண்ற்றோடு என்று இவை பாற்படுத்தான்

ஏகும் சுவர்க்கம் இனிது.  – சிறுபஞ்சமூலம், 64.

குளம் மற்றும் அதனை ஒட்டி செய்ய வேண்டிய பணிகள் குறித்து இப்பாடல் தெளிவாக எடுத்துரைக்கிறது. அவை ஐந்து பணிகள். அவை வருமாறு, 1. குளம் அமைத்தல்; 2. மிகை நீர் வழிய கலிங்கு அமைத்தல்          3. குளத்துக்கு நீர் வரும் வரத்துக்கால், பாசனம் செய்ய நீர் விடப்படும் மதகு, கலிங்கிலிருந்து நீர் வெளியேரும் பாதை முதலியன அமைத்தல்; 4. பாசனம் பெரும் நிலப்பகுதியை உழுவயலாக்குதல்; 5. நீர் பற்றாக்குறையைச் சமாளிக்க கிணறு வெட்டுதல் ஆகிய ஐந்தையும் செய்பவன்  சொர்க்கத்துக்குப் போவான் என்கிறது இப்பாடல்.

மேலே கண்ட பல சங்க இலக்கிய பாடல்களில் இருந்து சங்ககாலத்தில் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் பெருமளவு கட்டப்பட்டு மிகச்சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பது உறுதியாகிறது.

கரிகாலனின் கல்லணை:

தமிழகத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளில் மிகப் பழமையானதும், மிகப்பெரிய தொழில்நுட்பச் சாதனை எனக்கருதப்படுவதும், 2100           வருடங்களுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்து வருவதுமான கல்லனை குறித்து விரிவாகக் காண்போம்.

கல்லணையின் காலம்:

கல்லனையைக் கட்டியவன் mமுதல் கரிகாலனின் பேரனான இரண்டாம் கரிகாலன் ஆவான். முதல் கரிகாலனை மாமூலனார், பரணர் ஆகிய பெரும்புலவர்கள் பாடியுள்ளார்கள். நந்தர்கள், மௌரியர்கள் குறித்துப் பாடிய மாமூலனாரின் காலம் கி.மு. 4ம், 3ம் நூற்றாண்டுகளாகும். பரணர் பாடிய அதியமான் குறித்த ஜம்பை கல்வெட்டின் காலம் கி.மு. 3ம் நூற்றாண்டாகும். ஆகவே பரணர், மற்றும் முதல் கரிகாலனின் காலம் கி.மு. 3ம் நூற்றாண்டாகும். அவனது பேரனான இரண்டாம் கரிகாலனின் காலம் கி.மு. 2ம் நூற்றாண்டாகும். ஆகவே கல்லனை கட்டப்பட்டு 2100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

கி.பி. 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த புண்ணியகுமாரன் என்கிற இரேனாட்டு சோழனது மலேபாடு செப்பேடு கரிகாலன் காவிரிக்கு கரை அமைத்தான் என்பதைத் தெரிவிக்கிறது.(சோழர்கள்-நீலகண்ட சாஸ்திரி, புத்தகம்-1, பக்:49). இலங்கை நூல் ஒன்று இலங்கை மக்களை சோழன் ஒருவன் அணை கட்ட சிறை பிடித்துச் சென்றான் என்றும், அதற்குப் பழிவாங்க கி.பி. 2ம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட கயவாகு தமிழகத்திற்குப் படையெடுத்துச் சென்று தமிழர்களை சிறை பிடித்து வந்தான் என்றும் தெரிவிக்கிறது. இந்த இரண்டு செய்திகளும் கி.பி. 2ம், 7ம் நுற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த சோழன் கரிகாலன் காவிரிக்கு கரை அமைத்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இவன் இரண்டாம் கரிகாலனே ஆவான். இவன் குறித்துப் பத்துப்பாட்டில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையையும், முடத்தாமக்கண்ணியார் பொருநராற்றுப்படையையும் பாடியுள்ளனர். காடு அழித்து, குளம் கட்டி, விளைநிலங்களை பெருக்கினான் எனப் பட்டினப்பாலை இவன் குறித்துப் பாடுவதை முன்பே பார்த்தோம்.

கல்லணை ஒரு கற்சிறை:

கரிகாலன் காவிரிக்கு குறுக்கே அணை கட்டவிலை. அவன் காவிரிக்குக் கல்லால் ஆன கரை அமைத்தான் என்பதே உண்மையாகும். கல்லால் ஆன கட்டுமானத்தைக் கட்டி நீரைத்திருப்பி விடுவதை அணைக்கட்டு அல்லது கற்சிறை எனப் பழந்தமிழர்கள் குறிப்பிட்டனர். எனவே கரிகாலன் கட்டியது ஒரு கற்சிறை (அ) அணைக்கட்டு தான் ஆகும்.

காவிரி கொள்ளிடத்தில் இரண்டாகப் பிரிகிறது. ஒன்று காவிரி, மற்றொன்று கொள்ளிடம் ஆகும். இந்த இரண்டு ஆறுகளுக்குமிடையே திருவரங்கத்தீவு இருக்கிறது. அத்தீவின் மேல் முனையில் அதாவது கொள்ளிடம் பிரியும் இடத்தில், கொள்ளிடத்தின் நிலமட்டம் காவிரியின் நிலமட்டத்தைவிட 6 அடி உயரமாக இருக்கிறது. ஆகவே வெள்ளம் வரும்பொழுது மட்டுமே கொள்ளிடத்தில் நீர் செல்லும். பிற காலங்களில் காவிரியில் மட்டுமே நீர் போகும். ஆனால் இத்தீவின் கீழ்முனையில் கொள்ளிடத்தின் நிலமட்டம் காவிரியின் நிலமட்டத்திற்குச் சமமாக உள்ளது. அதுபோக கொள்ளிடத்தின் நிலமட்டச் சரிவு அதிகமாக உள்ளது. இவைகளின் காரணமாக திருவரங்கத்தீவின் கீழ்முனையில், வெள்ளம் வராத சாதாரண காலங்களில் கூட அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு காவிரியில் வரும் நீரும் கூட கொள்ளிடத்திற்கே திருப்பி விடப்பட்டுவந்தது.

இதனால் காவிரியின் கீழ் உள்ள அனைத்து விளைநிலங்களிலும் அடிக்கடி நீர் இல்லாது போய் பாசனம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தடுக்கக் கருதிய கரிகாலன், திருவரங்கத்தீவின் கீழ் முனையில் அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதியில் பெரும் பாறைகளால் ஆன கட்டுமானத்தைக் கட்டி காவிரியின் கரையை பலப்படுத்தி உடைப்பை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தினான். அதன்மூலம் திருவரங்கத்தீவின் மேல்முனையில் காவிரிக்குப் பிரியும் நீர் வீணாகாது, எல்லாக் காலங்களிலும் பாசனத்துக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இது அன்றைய நோக்கில் ஒரு பெருஞ்சாதனையாகும்.  அதற்குப் பயன்படுத்திய தொழில் நுட்பமோ அதைவிட ஒரு மாபெருஞ்சாதனையாகும்.

கல்லணையும் ஆங்கிலேயர்களும்:

கி.பி. 1777ம் ஆண்டு மெக்கன்சி ஆவணக்குறிப்புகளில் அனைக்கட்டி என கல்லனை குறிப்பிடப்பட்டுள்ளது. பேயர்டு சுமித்(BAIRD SMITH) என்ற ஆங்கில பொறியியல் வல்லுனர் 1853ம் ஆண்டில் எழுதிய “தென்னிந்தியாவின் பாசனம் என்ற நூலில் கல்லனையை ஒரு மிகச் சிறந்த பொறியியல் சாதனை எனக் குறிப்பிடுகிறார். தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் பாசன வரலாற்றில் தனக்கென ஒரு அழியா இடம் பிடித்த சர் ஆர்தர் காட்டன்  இக்கல்லனைக்கு மகத்தான அணை (GRAND ANAICUT)  எனப் பெயர் வைத்தார். அதுவே நிலைத்து விட்டது.

ஆழங்கான முடியாத மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் இந்த அணை எப்படி சாத்தியம்?  என்ற கேள்வி சர் ஆர்தர் காட்டன் அவர்களிடம் இருந்து கொண்டே இருந்தது. ஒரு சமயம் மணற்போக்கிகள் அமைக்க கல்லணையை ஒட்டி 12 அடி ஆழம் தோண்டிய போதுதான் இதற்கான விடை அவருக்குக் கிடைத்தது. மிகப்பெரும் பாறைகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு கல்லணை கட்டப்பட்டிருந்தது. பாறைகளுக்கிடையே களிமண் பூச்சுகள் மட்டுமே இருந்தது.

கல்லணையின் தொழில்நுட்பம்:

ஆழங்கான முடியாத மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் மிகப்பெரிய பாறைகள் போடப்பட்டது. பாறைகளுக்கு அடியில் உள்ள மணல், ஆற்று நீரில் அரித்துச் செல்லப்பட்டதால் பாறைகள் மெதுவாக மணலுக்குள் இறங்கின. அவைகளின் மேல் களிமண் பூசப்பட்டு, அப்பாறைகளின் மேல் மீண்டும் பெரிய பாறைகள் வைக்கப்பட்டன. அதனால் கிழுள்ள பாறைகள் மேலும் ஆழத்திற்குள் புதைந்தன. பின் மீண்டும் களிமண் பூசப்பட்டு, பாறைகள் வைக்கப்பட்டன. கீழுள்ள பாறைகள் மேலும் புதைந்தன. கீழுள்ள பாறைகள் புதையப்புதைய தொடர்ந்து பாறைகள் வைக்கப்பட்டன. இறுதியில் கீழுள்ள பாறைகள் கடினத் தளத்தை அடைந்தவுடன், பாறைகள் இறங்குவது நின்று போனது. இவ்வாறு ஒன்றன்மேல் ஒன்றாக வைக்கப்பட்ட பெரும்பாறைகளும், அவைகளுக்கிடையேயான களிமண் பூச்சுகளும் இணைந்தே கல்லணை என்ற மகத்தான அணை உருவாகியது எனலாம்.

 

சர் ஆர்தர் காட்டன்:

கல்லணையின் இந்தத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சர் ஆர்தர் காட்டன் அவர்கள் 1874ம் ஆண்டு கோதாவரியின் குறுக்கே தௌலீஸ்வரம் என்ற அணைக்கட்டைக் கட்டினார். அது கோதாவரிச் சமவெளியை வளப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றது. தனக்குக் கிடைத்த பாராட்டுக்குக் காரணமான பழந்தமிழ் பொறியாளர்கள் குறித்து,

“ஆழங்கான முடியாத மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற தொழில்நுட்பத்தை இவர்களிடமிருந்து (தமிழர்களிடமிருந்து) தான் தெரிந்து கொண்டோம். எங்களால் செய்து முடிக்கப்பட்ட ஆற்றுப்பாசனத் திட்டங்கள் தான் உலகின் பொறியியல் பணிகளில் முதன்முதலான மிகப்பெரிய நிதிசம்பந்தமான வெற்றிப் பணிகளாகும். இவ்வெற்றிக்கான ஒரே காரணம் யாதெனில் நாங்கள் இம்மக்களிடம் கற்றுக்கொண்ட அடித்தளம் அமைப்பது குறித்த பாடங்களே ஆகும். இம்முறையைக் கொண்டு ஆற்றுப்பாலங்கள், அணைக்கட்டுக்கள் போன்ற பல பாசனப் பொறியியல் கட்டுமானங்களை எளிதாகக் கட்டி முடித்தோம். அதற்காக அவர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம். என 1874ல் தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

பின் 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் காலத்தில் காவிரிக்குக் குறுக்கே கல்லணையின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு நவீனக் கல்லணை கட்டப்பட்டு, கல்லணைக் கால்வாயும் வெட்டப்பட்டது. பழைய கல்லணை இன்றும் பயன்பாட்டில் உள்ளது. அதன் மேல்தான் நீர் இன்றும் வழிந்து செல்கிறது. அதன்மேல் நவீன பாலம் கட்டப்பட்டுள்ளது.

சில சங்ககாலப் பாசனத் தொழில்நுட்பங்கள்:

நீர் சுழற்சி:

சங்ககாலம் என்பது கி.மு. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ம் நூற்றாண்டு வரையான காலகட்டமாகும். கிரேக்க நாகரிகமும் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தைச் சேர்ந்தது தான் ஆகும். கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாவீரன் அலெக்சாந்தரின் ஆசிரியர் அரிஸ்டாட்டில் மற்றும் அதற்கு முன்பு இருந்த தேல்ஸ் ஆகிய கிரேக்க அறிஞர்கள் நீரியல் சுழற்சி பற்றிய தெளிவற்ற சிந்தனைப் போக்கைக் கொண்டிருந்தனர்.

‘கடலின் அடித்தளத்தில் நீர் உற்பத்தியாகிறது. கடலில் உள்ள நீர் மண்ணால் உறிஞ்சப்பட்டு பின் அது மலைகளில் இருந்து ஆறாக வெளிப்படுகிறது. என்கிறார் தேல்ஸ். ‘குளிர்ச்சியான காலநிலைகளில் காற்று உறைந்து மழையாகப் பெய்கிறது. என்கிறார் அரிஸ்டாட்டில்.

ஆனால் அதே காலகட்டத்தைச் சேர்ந்த சங்ககால அறிஞர்கள் நீரியியல் சுழற்சி குறித்துத் தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்தனர். இரண்டாம் கரிகாலனைப் பாடிய கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடியலூர் உருத்திரங்கண்ணனார் தனது பட்டினப்பாலையில்,

“வான்முகந்த நீர் மழை பொழியவும்

மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்

மாரி பெய்யும் பருவம் போல்

நீரின்றும் நிலத்து ஏற்றவும்

நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்

அளந்து அறியாப் பல பண்டம். என்கிறார்.

-பட்டினப்பாலை, 126-131.

அதாவது ஒருபுறம் கடல்நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டு மழை பொழிகிறது. மறுபுறம் பெய்த மழை ஆறுகளில் ஓடி கடலில் கலக்கிறது. அதுபோன்று புகார்த்துறையில் ஒருபக்கம் கப்பல்களில் இருந்து பல பண்டங்கள் வரிசையாக நிலத்துக்கு இறக்கப்படுகின்றன. மறுபக்கம் நிலத்திலிருந்து பல பண்டங்கள் வரிசையாக கப்பலுக்கு ஏற்றப்படுகின்றன என்கிறது இப்பாடல். இப்பாடலில் புலவர் நீரியல் சுழற்சியை புகார்த் துறையின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு ஒப்பிடுகிறார். நீரியல் சுழற்சி பற்றிய தெளிந்த சிந்தனை பழந்தமிழர்களிடம் இருந்தது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது.

ஔவையார்:

வரப்புயர நீருயரும்; நீருயர நெல் உயரும்;

நெல்உயர குடிஉயரும்; குடிஉயர கோல்உயரும்;

கோல் உயர கோன் உயரும்.

‘உயரமான வரப்பு அதிக நீரைக் கொள்ளும். அதிக நீரால் நல்ல விளைச்சல் கிடைக்கும். அதிக விளைச்சலால் குடி மக்கள் வளம் பெறுவர். அது நாட்டில் நல்ல நீதியை நிலைநாட்டும். நீதி நிலைபெற்ற நாட்டில் அரசனின் மதிப்பு உயரும். என்பதே இப்பாட்டின் நேரடிப் பொருளாகும். இப்பாட்டைக் கொண்டு அதிக நீர்பாசனம் செய்வது அதிக விளைச்சலைத் தரும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. பழங்காலப் பாசன முறையை அறிந்து கொள்ளும் பொழுதுதான் இதன் சரியான பொருளை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

பழங்காலத்தில் வேளாண்மைக்கு வண்டல்மண் மிகமிக அவசியம். வண்டல்மண் உள்ள புதுவெள்ளம் ஆற்றில் வரும்பொழுது அதனை அதிகமாக வயலில் தேக்கி, பின் நீரை மட்டும் வடிப்பதன் மூலம் வயலுக்கு அதிக வண்டல்மண் கிடைக்கும். இந்த வண்டல்மண் விளைச்சலை அதிகப்படுத்தும். இப்பொருளில் தான் ஔவை பாடியுள்ளார். பண்டைய எகிப்தில் நைல் நதியில் புதுவெள்ளம் வரும்பொழுது  அதனை அதிக அளவில் வயலில் தேக்கி, பின் நீரை மட்டும் வடித்து வண்டல்மண்ணை வயலில் நிரப்புவர். அதே முறையைத்தான் தமிழர்களும் பழங்காலத்தில் செய்து வந்தனர் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

ஏரிப்பாசனம்:

தமிழகத்தில் 39000க்கும் மேற்பட்ட ஏரிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை சங்ககாலம் முதல் ஆங்கிலேயர் வரும் வரை கட்டப்பட்டவை. ஏரிப்பாசனத்தில் பல தொழில்நுட்பங்களை பழந்தமிழர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அவைகளில் சிலவற்றை இங்கு காண்போம்.

திண்டுக்கல்லிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ஆத்தூரில் கருங்குளம், பகடைக்குளம், புல்வெட்டிக்குளம் ஆகிய மூன்று குளங்கள் ஒரே இடத்திலேயே அமைந்துள்ளன. ஒரு பெரியகுளம் இரண்டு குறுக்குக்கரைகள் அமைக்கப்பட்டு மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்த நிலமட்டம் கொண்டதாக உள்ளது. முதல்குளம் இரண்டாவது குளத்தைவிட உயர்ந்த நிலமட்டம் கொண்டதாக உள்ளது. இரண்டாவது குளம் மூன்றாவது குளத்தைவிட உயர்ந்த நிலமட்டம் கொண்டதாக உள்ளது. முதல் குளத்தைக் கொண்டு மிகவும் மேடான நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இரண்டாவது குளத்தைக் கொண்டு அதற்கு அடுத்த நிலையில் உள்ள நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மிகவும் தாழ்வான நிலங்கள் மூன்றாவது குளத்தின் மூலம் பாசனம் பெறுகின்றன. இதன் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இந்தக்குளங்கள் 2100 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை எனத் தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இக்குளங்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. இக்குளங்கள் மிகச்சிறந்த தொழில்நுட்பங்கள் கொண்டவை என்பதில் ஐய்யமில்லை. இதுபோல் சிறந்த தொழில்நுட்பங்கள் கொண்ட பல சங்ககால ஏரி, குளங்கள் இன்றும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.(IN  SEARCH  OF  ANCIENT  WISDOM-IRRIGATION TANKS, BY  S.M. RATNAVEL  AND  P.GOMATHINAYAGAM)

சங்கிலித்தொடர் ஏரிகள்/குளங்கள்:

ஏரிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடராக அமைந்திருப்பதே தொடர் ஏரிகள் எனப்படும். இதில் முதல் ஏரி வடிநிலத்திலிருந்து வரும் மழை நீரை ஏந்துவதால் ஏந்தல் எனப்பெயர் பெற்றுள்ளது. பின் உள்ள ஏரிகள் ஏந்தல் மற்றும் பிற ஏரிகளில் இருந்து வடியும் நீரையும், அந்தந்த ஏரிகளின் வடிநிலத்தில் இருந்து வரும் நீரையும் தாங்குவதால் அவை தாங்கல்கள் எனப்பட்டன. இந்தத் தொடர் ஏரிகளின் இடையே உள்ள பாசன நிலங்கள் பாசனம் பெறுவதோடு, இந்த பாசன நிலங்களில் இருந்து வடியும் நீர் அடுத்தடுத்த ஏரிகளில் போய்ச் சேருகின்றன. இதன்மூலம் பாசன நீரானது மீண்டும் மீண்டும் பலமுறை பயன்படுத்தப்பட்ட பின்னரே இறுதியாக வெளியேறுகிறது. ஆகவே தொடர் ஏரிகள் அதிகமான நீரைச் சேமிக்கவும், சேமித்த நீரை பலமுறை பயன்படுத்தவும்  ஏதுவாக அமைந்துள்ளன.

கலிங்கின் பங்கு:

தொடர் ஏரிகளில் அமைக்கப்பட்டுள்ள கலிங்குகள் மிகச்சிறந்த மேலாண்மையையும், நீர் பங்கீட்டையும் உறுதி செய்கின்றன எனலாம். பொதுவாக ஏரிகளில் கலிங்குகளின் பங்கு மிக முக்கியமானதாகும்.ஏரிகளில் நீர் நிரம்பியவுடன் அதிக நீர் கலிங்குகளின் மூலமே வெளியேறுகிறது. வெள்ளக்காலங்களில் வெள்ளநீர் வெளியேறும் அளவு கலிங்கின் வடிவமைப்பு இருக்க வேண்டும். இல்லையெனில் ஏரி உடைந்துவிடும். மேலும் தொடர் ஏரிகளில் மேல்குளம் உடைந்தால் கீழ்குளம் அனைத்திலும் உடைப்பு ஏற்படும். இதனால் பெருஞ்சேதம் ஏற்படும். ஆகவே தனி ஏரிகளை விட தொடர் ஏரிகளில் கலிங்கின் பங்கு மிக மிக முக்கியமானதாகும்.

தொடர் ஏரிகளில் உள்ள கலிங்கின் மட்டத்திற்கு மேல் 2 அடி உயர அணைக்கற்கள்  கட்டப்பட்டிருக்கும். இந்த அணைக்கற்களுக்கு இடையே பலகைகளை செருகினால், மேலும் 2அடி உயரத்திற்கு நீர் தேங்கும். பலகையின் மேல் மட்டம் வரை தேங்கும் நீர்தான் ஏரியின் மொத்தக் கொள்ளளவு ஆகும். பலகை இல்லாது கலிங்குவரை மட்டும் நீர் தேங்கினால் அப்போது பாதிக்கொள்ளளவு தான் இருக்கும்.

தொடர் ஏரிகளில் நீர் வரும் காலங்களில் எல்லா ஏரிகளிலும் உள்ள பலகைகள் எடுக்கப்பட்டுவிடும். ஒவ்வொரு குளமாக நீர் நிரம்பி கடைசிக் குளம் நிரம்பும்பொழுது அதில் பலகை போடப்படும். இறுதிக் குளத்தில் பலகையின் மேல்மட்டம் வரை நீர் நிரம்பியவுடன் அதற்கு மேலுள்ள குளத்தில் பலகை போடப்படும். இவ்வாறு ஒவ்வொரு குளமாக பலகை போடப்பட்டு வந்து இறுதியாக ஏந்தல் குளத்தில் பலகை போடப்படும். அதன்பின் அதுவும் நிரம்பிய பின்னரே அனைத்துப் பாசனப்பகுதிகளிலும் பாசனம் துவங்கும்.

 

தொடர் ஏரிகளின் நன்மை:

வெள்ளம் அதிகமாகும் பொழுது அனைத்துக் குளங்களிலும் உள்ள பலகைகள் எடுக்கப்பட்டு வெள்ளம் சீக்கிரம் வெளியேர வழி ஏற்படுத்தப்படும். அதன்மூலம் குளங்கள் உடையாது பாதுகாக்கப்படும். தண்ணீர் மிகக் குறைவாக வரும் காலங்களில் பலகைகள் எடுக்கப்பட்டு பாதிக் கொள்ளளவை வைத்தே பாசனம் செய்யப்படும். இம்முறையில் அனைத்துக் குளங்களிலும் உள்ள அனைத்து பாசனதாரர்களும் முதலில் கடைசிக் குளம் நிரம்ப வேண்டும் என விரும்புவர். கீழ்குளம் முதல் மேல்குளம் வரை நிரம்பிய பின்னரே அனைத்துப் பாசன நிலங்களிலும் பாசனம் தொடங்கும். அதனால், அனைத்துப் பாசனதாரர்களிடமும் ஒற்றுமை நிலவும் என்பதோடு குளங்களைப் பராமரிப்பதிலும் பாதுகாப்பதிலும் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாகச் செயல்படுவர். இந்தமுறை ஒரு மிகச் சிறந்த தொழில்நுட்ப முறையாகும்

இந்தத் தொடர் ஏரிகளில் நான்கைந்து ஏரி/குளங்கள் முதல் 318 வரையான ஏரி/குளங்கள் உள்ளன. பாலாறு அணைக்கட்டில் நான்கு கால்வாய்கள் மூலம் மொத்தம் 318 குளங்கள் தொடர் குளங்களாக உள்ளன. தொடர் ஏரி/குளங்களில் இதுவே அதிக எண்ணிக்கை கொண்டதாகும். பெருப்பாலான கடைசிக் குளங்களில் கோயில்கள் இருக்கும். கடைசிக் குளம் நிரம்பியவுடன் அதில் பூசை, அபிசேகம் முதலியன நடைபெறும். உதாரணமாக பழையாற்றின் கடைசிக் குளம் கன்னியாகுமரிக்குளம் ஆகும். தாமிரபரணியாற்றின் கடைசிக்குளம் என்பது திருச்செந்தூர்க்குளம் ஆகும்.

தற்போதைய நிலை:

இவ்வாறு சிறந்தமுறையில் செயல்பட்ட தொழில்நுட்பங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன. பலகோடி ரூபாய் செலவு செய்து செயல்படுத்தப்படும் ஏரிச்சீரமைப்புப் பணியில் அணைக்கற்களும், பலகைகளும் அகற்றப்பட்டு அணைக்கற்கள் உயரத்திற்கே கலிங்குகள் உயர்த்திக் கட்டப்படுகின்றன. இதனால் முதல்குளம் முழுமையாக நிரம்பியபின் தான் இரண்டாவது குளத்திற்கு நீர் செல்லும். சிலசமயம் இறுதிக்குளம் போதிய நீர் இல்லாமையால் நிரம்பாது போய்விடும். முதல்குளம் நிரம்பியவுடன் அதன் பாசனதாரர்கள் பாசனத்தைத் தொடங்கிவிடுவார்கள். கீழ்க்குளம் குறித்து முன்பு இருந்த அக்கறை இனி இல்லாது போய்விடும். இதனால் பாசனதாரர்களிடையே இதுவரை இருந்து வந்த ஒற்றுமை இனி இருக்காது. இதன்மூலம் தலைமடை கீழ்மடை ஏற்றத்தாழ்வுகள் உருவாகும் . குளங்களைப் பராமரிப்பதிலும் பாதுகாப்பதிலும் இதுவரை இருந்து வந்த ஒற்றுமை இனி இல்லாது போய்விடும்.

ஆக 2000 வருடங்களாகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்த தொழில் நுட்பங்கள் நீக்கப்படுவது நல்லதா என்பதை நடுநிலையில் இருந்து ஆய்வு செய்து முடிவெடுத்து அம்முடிவின் அடிப்படையில் செயல்படுவது எதிர்காலத்திற்கு நல்லதாகும்.

ஏரிகளின் மண்கரைகள்:

ஏரிகளில் மண்கரைகள் அமைக்கும் பொழுது, நீர்க்கசிவைத் தடுப்பதற்காக களிமண்ணால் ஆன உட்சுவர் ஒன்றை அமைத்து, பின் அதனைமூடி மண்கரைகள் அமைப்பது தான் உலகெங்கும் உள்ள நடைமுறையாகும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பழமையான ஏரிகளில் இதுபோன்ற உட்சுவர் இல்லை. நீர்க்கசிவும் இல்லை. மேலும் அந்தந்த பகுதியில் உள்ள மண்ணைக்கொண்டே ஏரிக்கரைகள் அமைக்கப் பட்டுள்ளன. இதன் தொழில்நுட்பம் என்னவென்ற கேள்விக்குத் தமிழ் இலக்கியத்தில் பதில் உள்ளது. ஏரிக்கரைகள் அரைமண் கொண்டு கட்டப்பட்டதாக சங்க இலக்கியம் தெரிவிக்கிறது. அந்தந்தப் பகுதியில் இருக்கும் மண்ணோடு, மண்ணை இருக்கும் சில பொருட்களைச் சேர்த்து அரைமண் உருவாக்கி அதன்மூலம் ஏரிக்கரைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மண்கரைகள் அமைக்க வெகுதூரத்தில் இருந்து சிறந்த மண் கொண்டுவந்து பயன்படுத்திய போதிலும், நீர்க்கசிவுகள் ஏற்படத்தான் செய்கின்றன. அதனைப்பார்க்கும் பொழுது நமது முன்னோர்களின் தொழில்நுட்பம் வியப்புக்குரியதாகும்.  இத்தொழில் நுட்பம் குறித்து சர். ஆர்தர். காட்டன் அவர்கள்,

“ஏரிக்கரைகளை ஈரமான களிமண்ணைக் கொண்டு அமைப்பது அவசியம் என்ற ஆங்கிலப் பொறியாளர்களின் கருத்துக்கு மாறாக பழந்தமிழர்கள் அந்தந்தப் பகுதி மண்ணைக் கொண்டே ஏரிக்கரைகளை நன்முறையில் அமைத்துள்ளனர். எனப் பாராட்டுகிறார்.

மதகுகளும் ஏரிகளும்:

ஏரிகளில் இருந்து பாசனத்துக்கு நீரை வெளியேற்ற அன்றே சிறந்த முறையில் மதகுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மதகுகளுக்கு பல பெயர்கள் இடப்பட்டிருந்தன. சுருங்கை, புதவு, மதகு, குமிழி, தூம்பு, புலிக்கண்மடை, மடை முதலியன அப்பெயர்கள். தற்காலத் திருகு அடைப்பான் போன்று நீர் வெளியேரும் அளவை சிறுகச் சிறுக குறைக்கவோ அதிகரிக்கவோ கூடிய மதகுகளும் அன்றே இருந்தன.

தமிழகத்தின் பல பகுதிகள் வடகிழக்குப் பருவக்காற்றால் வருடத்திற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே மழை பெறுகின்றன. அதனைக் கொண்டுதான் வருடம் முழுவதற்குமான நீர்த்தேவையைச் சமாளித்துக் கொள்ளவேண்டும். இதனை நன்கு உணர்ந்து கொண்ட பழந்தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஏரி/குளங்களை உருவாக்கி, அந்த இரண்டு மாத மழை நீரையும் முழுமையாகச் சேகரித்துப் பயன்படுத்திக் கொண்டனர்.

சிறப்புத் தொழில்நுட்பங்கள்:

பழந்தமிழகத்தில் சங்ககாலம் வரை கட்டப்பட்ட ஏரி/குளங்களில் பயன்படுத்தப்பட்ட சில சிறப்புத் தொழில்நுட்பங்களை இங்கு காண்போம்.

1. நீர்த்தேக்கங்கள் கட்டப்படுவதற்குப் பதில் தொடர் ஏரிகள் அமைக்கப்பட்டன.

2. ஏரிகள் ஆற்றிலிருந்து நீர் பெற்றதொடு, தங்களுக்கெனச் சொந்த வடிநிலங்களையும் கொண்டிருந்தன.

3. வரத்துக்கால்வாய்களும், பாசன வாய்க்கால்களும் பாசன நீரைக் கொண்டு செல்வதொடு, வடிகால்நீரையும் கொண்டு செல்லுமாறு வடிவமைக்கப் பட்டிருந்தன.

4. ஏரிகளின் இடத்தேர்வும், வடிவமைப்பும் மட்டுமில்லாது மதகு, கலிங்கு, மண்கரை போன்றவைகளும், மிகச் சிறந்த தொழில்நுட்பத்தையும், மிக உயர்ந்த தரத்தையும் கொண்டிருந்தன.

பழந்தமிழகத்தில் சங்ககாலம் வரை பயன்படுத்திய பாசனத் தொழில்நுட்பங்களை அடிபடையாகக் கொண்டே, இடைக்காலப் பல்லவ பாண்டிய அரசுகளும், அதன்பின் வந்த பிற்கால சோழ பாண்டிய அரசுகளும் பாசனக் கட்டுமானங்களை உருவாக்கிப் பயன்படுத்தின எனலாம். இந்த பழங்காலத் தொழில்நுட்பங்களை, பழங்கால நிர்வாக முறைகளை அடிப்படையாகக் கொண்டே, ஆங்கிலேயர் காலம்வரை பல புதிய பாசன அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தன. அதில் அவ்வப்பொழுது காலத்துக்கேற்றவாறு வளர்ச்சிகர தொழில்நுட்பங்களும், புதிய நிர்வாகச் சீர்திருத்தங்களும் புகுத்தப்பட்டன.

இந்தப் பழைய முறை விளைச்சலை தொடர்ந்து நிலை நிறுத்துவதாகவும், பாசனக்கட்டுமானங்களை தொடர்ந்து பராமரித்துப் பாதுகாத்து வருவதாகவும், பல்வேறு பாசனதாரர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதாகவும், எல்லாவிதத்திலும் சூழ்நிலைகளை மாசு படுத்தாததாகவும் இருந்து வந்தது என்லாம். அதனால் தமிழகம் ஒரு வளமான செல்வச் செழிப்புமிக்க நாடாக நிலைபெற்று இருந்தது. இடைவிடாத போர்களாலும், இயற்கைப் பேரழிவுகளாலும், வேறுபல சீரழிவுகளாலும் பாதிக்கப்படாது தமிழகம் வளமோடும் செல்வச் செழிப்போடுமே இருந்து வந்தது.

பழந்தமிழகமும் ஆங்கிலேயர் ஆட்சியும்:

ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் பழைய தொழிநுட்பங்களும், நிர்வாகமுறைகளும் அடியோடு புறக்கணிக் கப்பட்டது. நமது பாரம்பரியத் தொழில்கள் அழிக்கப்பட்டு, பிரிட்டன் அரசினுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் காலனியாக இந்தியாவும், தமிழகமும் மாறிப்போனது. அதன் காரணமாக மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டு பஞ்சமும் வறட்சியும் தலைவிரித்தாடியது. வறுமையின் கோரப்பிடியில் பல இலட்சம் மக்கள் இறந்து போயினர். பல இலட்சம் மக்கள் கூலிகளாய் பஞ்சைப் பராரிகளாய் பிழைப்பு தேடி வெளிநாடுகளுக்கு செல்லவேண்டிய அவலநிலை ஏற்பட்டது. இந்திய சுதந்திரத்துக்குப்பின் இதில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டது. எனினும் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் கடுமையான பல பின் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளன.

அமெரிக்கத் தமிழர்:

சிவா அய்யதுரை என்ற தமிழர் சிறுவயதிலேயே அமெரிக்கா சென்று, 1978ல் தனது 14வயதில் இ-மெயிலைக் கண்டுபிடித்தவர். அதன்பின் 1993ல் பல பெரிய நிறுவனங்களோடு போட்டியிட்டு இ-மெயில் மேலாண்மை முறையை(ECHO-MAIL) கண்டுபிடித்து அமெரிக்க அதிபர் பில்கிளிண்டனிடம் பரிசு பெற்றவர். இந்த இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை பெற்றவர். அவர் நமது தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் உலக மருத்துவத்துக்கு நிகரான ஏன் அதைவிட மேம்பட்ட பல மருத்துவ முறைகளைக் கொண்டுள்ளது என்கிறார். அவைகளில் பல வெளி உலகுக்குத் தெரியாமல் ஓலைச் சுவடிகளில் மக்கி மறைந்து போயிற்று என வருத்தப்படுகிறார். அவர் தற்பொழுது சித்தமருத்துவம் எப்படி அறிவியல் பூர்வமாகச் செயல்படுகிறது என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பழந்தமிழர் பாசனத் தொழில்நுட்பங்களும், இந்த அமெரிக்கத் தமிழரின் தமிழ் சித்த மருத்துவம் பற்றிய கருத்தும் பழந்தமிழ் தொழில்நுட்பங்களை அலட்சியப்படுத்தாமல் அதனைக் கண்டுணர்ந்து பயன்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்துகின்றன. பாசனம், மருத்துவம் மட்டுமின்றி வேளாண்மையிலும் இன்னபிற உற்பத்தித் தொழில்களிலும் பழந்தமிழ் தொழில்நுட்பங்களை கண்டுணர்ந்து, அவைகளை அறிவியல் கண்ணோட்டத்தில் முறைப்படுத்திப் பயன்படுத்துவது இன்றைய அவசியத் தேவையாகும்.

குறிப்பு: பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளரும், பழ.நெடுமாறன் அவர்களது தம்பியும் ஆன உயர்திரு முனைவர் பழ.கோமதிநாயகம் அவர்கள் எழுதிய "தமிழக பாசன வரலாறு" என்ற நூலில் இருந்து பல தகவல்கள் இக்கட்டுரைக்காக எடுக்கப்பட்டன என்பதை நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

Pin It