Desertஉருமீன் வரக் காத்திருக்கும்
கொக்குகளும்
பனங்கிழங்கு பிளந்தன்ன
அலகுடை செங்கால் நாரைகளும்
உள்நீச்சல் பழகும்
நீர்க்கோழிகளுமாய்
விருந்தாளிகள் நிறைந்த வீடுபோலத்
தாத்தா காலத்தில்
அது ஏரியாக இருந்தது

நுரைபொங்கக் குதித்தோடும் நீரின்
மதகுகளிருந்தன அதனுக்கு
தூரத்து மலைகளின்
மணம் சுமந்தோடிவரும்
வெள்ளத்தின் மரங்களடர்ந்த
கால்வாய்கள்
இருந்ததைப் போலவே

சிற்றலைகள் எழுப்பி
விளையாடும் மழலைக்காற்றின்
சுகத்தினூடேதான்
அப்பா அதன் கரைமீதமர்ந்தபடி
அல்ஜிப்ராக்களைப் போட்டுப் பார்த்தார்
புதர்களெங்கும் பரவிய
பூக்கள் வழித் தாவும்
வண்ணத்துப்பூச்சி பிடித்தும்

தத்தித் தத்தி நீர்மீதோடும்
தவக்களை அமுக்கியும்
தன் பள்ளிக் காலங்களை
அதன் மடியில்தான் கழித்தார்

சித்திரைக் காலத்தில்
ஒரு நண்பகலில்
சருகுகளை விலக்கியபடி
கால்வாயில்
கழிவுநீர்
ஒரு பாம்பைப்போல் ஊர்ந்து வந்தது
புதுவெள்ளம் என்றெண்ணி
எதிரோடிய மீன்களின்
செவுள்கள் ரணமாயின

மிதந்த மீன்களை
விழுங்கிய கொக்குகள்
பட்டுப்போன
மரக்கிளைகளில் இருந்து
மயங்கிச் சரிந்தன

பாலங்கடந்து
வேலைக்குப் போன அப்பா
பறவைக்கறியின்
மருத்துவக்
குணங்களை விளக்கியபடி
திரும்ப வந்தார்

நான்
காலை நேரங்களில்
கருவேல மரத்தின்
மறைவு தேடிப் போய்க் கொண்டிருந்த
விடிகாலத்தில்
உடல் பரந்த ஏரி
குட்டையென்று
பெயர் மாற்றிக் கொண்டிருந்தது

வீடுகள் முற்றுகையிட
கழிவுநீர்
ஒருநாள்
குட்டை
குப்பைகொட்டும் பள்ளமாயிற்று

ஒரு மத்தியான வேளையில்
தூசுகள் எழுப்பியபடி வந்த
லாரியொன்று
சுமந்து வந்த
கப்பிகளைக் கொட்டி
பள்ளத்தை நிரப்பிவிட்டுச் சென்றது

பின்பொருநாள்
குழிபோட்டுக்
கம்பிகள் நட்டு எழுப்பிய
அடுக்குமாடி ஒன்றில் அமர்ந்தபடி
என் மகனுக்கு
விளக்கம்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
மருதமெனில்
வயலும்
வயல்சார்ந்த நிலமும் என்று.


பச்சியப்பன்
Pin It