உயர்ந்த மாந்தரால் உண்டாக்கப்படுகின்ற அரசியல், பொருளியல், குமுகாய அமைப்புகள் தம்மளவில் குறையுடையன என்று கூறுவதற்கில்லை. அவை பெரும்பாலும் உண்மையும் நேர்மையும் மாந்த நேயமும் கொண்ட சான்றோர்களால் மக்கள் நலம் கருதி உருவாக்கப்பட்டவையே.

பொதுவுடைமையாயினும் சரி, முதலாளியம் ஆயினும் சரி, மன்னராட்சி ஆயினும் சரி, மக்களாட்சி ஆயினும் சரி சான்றோர்கள் வகுத்தளித்த நெறிமுறை கட்கும், ஒழுங்குகட்கும் உட்பட்டு அவை இயங்கு மானால் அவை மக்கட்கு நலம் செய்வனவாகவே இருக்கும்.

வள்ளுவர் காலத்தில் பொதுவுடைமையோ, மக்களாட்சியோ இருந்ததில்லை. ஆயினும் வள்ளுவர் வகுத்தளித்த அரசியல், பொருளியல், வாழ்வியல் நெறிகள் மாந்தரின் மேம்பாட்டை நடுவாகக் கொண்டு அமைந்தவைதாமே.

முதலாளியம் குறையுடையது என்றால் பொது வுடைமை நலம் விளைத்திருக்க வேண்டும். மன்னராட்சி குறையுடையதென்றால் மக்களாட்சி நலம் விளைத் திருக்க வேண்டும். ஆனால் என்ன நிகழ்ந்தது? முதலாளி யத்தின் சீர்கேடுகள் யாவும் பொதுவுடைமையிலும் வந்து புகுந்து கொண்டன. மன்னராட்சியின் சீர்கேடுகள் யாவும் மக்களாட்சியிலும் தலைவிரித்தாடுகின்றனவே!

இந்தச் சீர்கேடுகட்குக் காரணம் அமைப்புகள் அல்ல. அமைப்பை நடத்திச் செல்லும் மாந்தர்களே.

நடத்தும் மாந்தர் நல்லவராயிருந்தால் அமைப்புகள் நற்பயன் தரும். மாந்தர் குறையுடையவராயிருந்தால் அந்தக் குறைகளே அமைப்புகளைத் தாக்கி அவற்றையும் குறையுடையன ஆக்கிவிடும். இட்லர், முசோலினி போன்றவர்கள் கொள்கை வெறியர் மட்டுமல்லர், மனநலங்குன்றிய மனநோயாளர்கள் என்பதையும் வரலாறு நமக்குக் காட்டுகின்றது. சரியில்லாதவன் கையில் ஆட்சி கிடைத்தால் அது எப்படி நன்றாக நடக்கும்?

நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே
(புறம் - 187)

என்பதும்

கால்பார் கோத்து ஞாலத் தியக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறின் றாகி ஆறினிது படுமே
உய்த்தல் தேற்றி னாயின் நாளும்
பகைக்கூழ் அள்ளல் பட்டு
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே
(புறம் - 185)

என்பதும் இந்த உண்மையையே கூறுகின்றன.
மக்களை நடத்திச் செல்லவரும் தலைவர்கள் அதனைத் தங்கள் கடமையாகக் கொண்டு, அவ்வாறு நடத்திச் செல்வதே தங்கள் வாழ்க்கைப் பணியாகக் கொண்டிருந்தது ஒருகாலம். சட்டமும் ஒழுங்கும் அவ்வாறே அமைந்திருந்தன. ஆனால் இன்று?

உலகில் எல்லா மாந்தரும் நல்லவராக இரார். மிகச் சிலரே நல்லவராயிருப்பர்; இது உலக இயற்கை; மாந்த இயல்பு. எனவேதான் சான்றோர்கள் பொதுவாக எல்லாரிடத்தும் பொறுப்பைக் கொடுத்துவிடாமல் நல்லவர், உயர்ந்தோர் நேர்மையாளர் மட்டுமே நாட்டை நடத்திச் செல்ல வேண்டும் என்று பொது நெறி வகுத்தனர். அதோடு அமையாமல் அமைப்புகள் செம்மையாக நடப்பதற்கு உதவுமாறு கடுமையான நடைமுறைகளையும், திட்டவட்டமான ஒழுங்குமுறை களையும் வகுத்தளித்தனர். அவையும் போதா என்று, விதிகளையும் ஒழுங்கையும் மீறியவர்கட்குக் கடுந் தண்டனைகளையும் வகுத்துவைத்தனர்.

ஆட்சியாளரும் நல்லவர்களாக இருந்து முறை களும் ஒழுங்காகப் பின்பற்றப்பட்டிருக்குமாயின் தீமைகள் ஏற்பட்டிரா என்பது உறுதி.

இன்று செம்மை அற்றுச் சீரழிந்து, கேடுகெட்டுக் கெட்ட நாற்றம் அடிக்கும் மக்களாட்சி முறையும் நல்ல நோக்கத்தோடுதான் தோற்றுவிக்கப்பட்டது. தொடக்கத் தில் நல்ல பயனையே விளைவித்து வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பேராளர்கள் நேர்மையாளராக வும், பொதுநலம் மட்டுமே கருதுவோராகவும் இருத்தல் வேண்டும் என்ற விதிமுறையும் அன்றிருந்தது.

ஆனால் அவ்விதிமுறைகளெல்லாம் இன்று தளர்த்தப்பட்டுவிட்டன. யார் யார் தேர்தலில் நிற்கலாம் என்ற கட்டுப்பாடில்லை. தேர்தலில் நிற்பவர்கள் இன்னின்ன முறைகளைத்தான் பின்பற்றவேண்டும் என்று கடுபிடி ஏதும் இல்லை. நேர்மை ஒழுங்கு முதலியவற்றை யாரும் வற்புறுத்துவதில்லை. அடாவடிக் காரர்கள் உள்ளே வரச் சட்ட விதிகளே இடம்கொடுக் கின்றன.

உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி என்று பெருமை பீற்றிக் கொள்ளும் இந்த நாட்டில் ஆள்பவர்க் கென்று என்ன நெறிமுறைகள் உள்ளன? தவறு செய்தால், ஏன், குற்றம் செய்தால் கூட அரசியல் வாணர்கட்கு எந்தத் தண்டனையும் இல்லையே. சட்டங்கள் இருக்கத்தான் இருக்கின்றன. ஆனால் அரசியல் வாணர் மீது அவை ஏவப்படுவதில்லையே.

இனித் தவறு செய்பவர்களைத் தட்டிக்கேட்கு மளவு அறிவும், வலிமையும் ஊக்கமும் மக்கட்கு இருந்தாலாவது அரசியல்வாணர் அஞ்சுவர். இந்த விழிப்பு நிலையும் நம் நாட்டில் இல்லை.

கல்வி கற்றவர்களாவது அஞ்சாமையும் நேர்மை யும் உடையராக இருக்கின்றார்களா என்றால் அதுவு மில்லை! கோழைகளாகவும், மிக மிகத் தன்னலவாண ராகவுமே அவர்கள் உள்ளனர். வேலை வாய்ப்பை முன்வைத்து அடிமை மனப்பான்மையை வளர்க்கும் போலிக் கல்வி வேறெந்த வகையினரை உருவாக்கும்?

இந்நாட்டின் பெரும்பான்மையான ஏழை எளிய மக்கள் வியர்வை சிந்திச் செலுத்திய வரிப்பணம் கோடி பல்லாயிரங் கோடியாய் அரசியல்வாணர் பொறுப்பில் உள்ளது. அவற்றை இப்படித்தான் செலவிட வேண்டும் என்ற கட்டுக்காப்பு இல்லை கடுமையான விதிமுறை களும் இல்லை. அப்படியே இருந்தாலும், அரசியல் வாணன் அவற்றை மீறுகிறான். ஊழலைத் தடுக்கும் சட்டங்கள் யாவும் கீழுள்ளவர்கள் மீதிலேயே ஏவப் படுகின்றன.

இன்று இந்நாட்டில் அரசியல் என்பது குறுக்கு வழியில் கோடி கோடியாய்ப் பொருள் ஈட்டுவதற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய ஊழல் வாய்ப்பு என்பதை யார் மறுக்க முடியும்?

நம் நாட்டின் கடந்த அறுபதாண்டு அரசியல் வரலாற்றை ஊன்றிக் கவனித்து வந்திருந்தோம் என்றால் அரசியல் என்பது எவ்வளவு தாழ்நிலைக்கும், கீழ் நிலைக்கும், ஏன் பாழ்நிலைக்கும் இடம் கொடுத்து வந்திருக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்ளலாமே!

“கொடுங்குற்றவாளிகள் வெளிஉலகில் இருப்பதை விட அரசியல் உலகிலேயே மிகுதியாயிருக்கின்றனர்” என்று மேலைநாட்டறிஞர் ஒருவர் கூறியிருக்கின்றார்.

“கயவர்களின் கடைசிப் புகலிடம் அரசியலே” என்பது பெர்நாட்சாவின் கூற்று.

வெளியே இருக்கும் குற்றவாளிக்குத் தண்டனை உண்டு என்பதால் அவன் அஞ்சுகிறான். தன் குற்றங் களையும் குறைத்துக் கொள்கின்றான். ஆனால் அரசியல் கோட்டைக்குள் இருக்கும் குற்றவாளிக்கு எந்தத் தண்டனையும் இல்லை. மேலும் அவன் கைகளில் எல்லா அதிகாரமும் இருக்கின்றது. அதை எவ்வளவு தவறாகப் பயன்படுத்தினாலும் தட்டிக்கேட்க ஆளில்லை. காவல் துறையும் அவனுக்கே துணை போகின்றது. மேலிடத்தாருடன் பங்கு ஒப்பந்தங்களும் நிறைவேற்றிக் கொள்ளப்படுகின்றன.

ஐம்பது நூறு திருடும் வயிற்றுக்கில்லாதவன், ஆயிரம் இரண்டாயிரம் திருடும் வழிப்பறித் திருடன், வீடுபுகுந்து திருடும் நகைத் திருடன் போன்றவர்கள் பிடிக்கப்பட்டால் ஆறுமாதம், ஓராண்டு என்று சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஆனால் ஆயிரங் கோடி, நூறாயிரங்கோடி திருடும் அரசியல் வாணர் களுக்கு எந்தத் தண்டனையும் இல்லையே! விடுதலை பெற்ற இந்திய நாட்டின் வரலாற்றில் இதுவரை ஊழல்கள் புரிந்த, ஏன் கொலைக் குற்றங்களுமே புரிந்த எந்த அரசியல்வாணனாவது தண்டிக்கப்பட்டிருக் கிறானா? இல்லையே! அதுமட்டுமா? ஓரிடத்தில் ஊழல் புரிந்தவனைத் தூக்கி வேறோர் இடத்தில் போடு கின்றனர். போன இடத்தில் அவன் மேலும் புதுப்புது ஊழல் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்கின்றான்!

எதிர்க்கட்சிகளானாலும் சரி, அவையும் இந்த ஊழல் வலைப்பின்னலின் ஒரு பகுதியே. ஊழல் பங்கு பற்றிய ஒப்பந்தங்கள் இவற்றின் நடுவிலும் உண்டு. வாய் பேசாமலிருக்கக் கூலிகொடுக்க வேண்டுமல்லவா?

இனி ஒருவரை ஒருவர் மிரட்டி ஒடுக்கித் தன்பக்கம் இழுத்துக்கொள்ளவும் இந்த ஊழல் குற்றங்கள் பயன்படுகின்றன. வாலைச் சுருட்டிக் கொண்டு என் வழி வருகிறாயா? அல்லது உன் குற்றங்களை அம்பலப்படுத்தித் தண்டனை வாங்கிக் கொடுக்கவா? என்று மேலிடம் மிரட்டக் கீழிடம் அடிபணிகின்றது!

தனிப்பட்ட கொலைக் குற்றவாளி ஒரு கொலை, இரண்டு கொலை செய்திருப்பான். ஏன் பத்துக் கொலைகள் கூடச் செய்திருப்பான் என்று வைத்துக் கொள்வோமே. ஆனால் அரசியல் அதிகாரம் படைத்தவன் கலகத்தை அடக்குகிறேன் என்று நூற்றுக் கணக்கான மக்களைச் சுட்டுக் கொலை செய்கின்றானே! நாட்டைக் காக்கிறேன், நட்பு நாட்டுக்கு உதவுகிறேன் என்று போரில் குதித்து இலக்கக் கணக்கான மக்களின் உயிரைக் குடிக்கின்றானே. ஒரு கொலை, இரண்டு கொலை செய்தால் கொடுங்குற்றம்! நூற்றுக்கணக்கில் கொலை செய்தால் நாட்டுப் பற்றா?

பூசாரி ஒருவன் காளி பூசையில் ஒரு குழந்தையைக் கொன்றால் “ஐயோ, நரபலி!” என்று செய்தித் தாள்கள் அலறுகின்றன. ஆனால் அரசியல்வாணன் கொத்துக் குண்டு வீசி நூற்றுக்கணக்கான குழந்தைகளைக் கொன்றால் ஏன் இந்தச் செய்தித்தாள்கள் வாயை மூடிக் கொள்கின்றன?

பெண்ணொருத்தியை ஒருவன் கெடுத்தால் அது பாலியல் வன்முறை. அவனுக்குத் தண்டனை உண்டு. ஆனால் சிங்களப் பேரினவெறியன் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழ்ப்பெண்கள் மீது கொடிய பாலியல் துன்புறுத்தல்களை ஏவிவிட்டானே அவனுக்கு என்ன தண்டனை? இங்குள்ள அரசியல்வாணர் அவனுடன் கைகுலுக்கி, அவனுக்கு அறுசுவை விருந்தளித்து மகிழ்விக்கின்றனர்.

இவை எடுத்துக்காட்டாகக் கூறப்பட்டவையே. நான் இங்குக் கூறவந்த முதன்மைச் செய்தி, உலகிலேயே மக்களை மிகுதியாகச் சுரண்டுவதற்கான வாய்ப்பும் கொடிய பல குற்றங்கள் புரிவதற்கான வாகுகளும் தருவது அரசியல்தான் என்பதாகும்.

இவ்வாறு குற்றம் செய்து தண்டனைக்குத் தப்புபவர்கள், சுரண்டிச் சுவைகண்டவர்கள், கோடி கோடி குவித்துக் கொண்டு அதற்குப் பின்னும் பதவிகளை விட்டுச் செல்ல மனம் இல்லாதிருக்கின்றனர். தாங்கள் தொடர்ந்து பதவியில் நீடிக்க என்ன என்ன ‘தகிடு தத்தங்’களைச் செய்ய முடியுமோ அத்தனையும் செய்கின்றனர். மக்களிடம் நல்ல பெயர் வாங்க முறையான வழிகளில் முயலாமல் என்ன என்ன குறுக்குவழிகள் உள்ளனவோ, என்ன என்ன தந்திரங்கள் உள்ளனவோ அத்தனையும் பின்பற்றுகின்றனர்.

பசியால் அழும் குழந்தைக்குப் பாலைக் கொடுத்தால் அது முறை. வேலைக்காரியோ பாலைத் தான் குடித்துவிட்டு, அழுங்குழந்தை வாயில் சப்பு மிட்டாயை வைத்து அழுகையை நிறுத்துகிறாள். சிறிது நேரத்துக்குக் குழந்தையின் அழுகை நிற்கலாம். ஆனால் அவ்வாறு செய்வது குழந்தையின் பசி நீக்கும் செயல் ஆகுமா? குழந்தை மீது அன்பு கொண்ட தாய் அதனைச் செய்வாளா?

மக்களின் வறுமையை நீக்கும் கடப்பாடு உடைய நம் அரசியல்வாணர்கள் அதைச் செய்வதில்லை. ஏனெனில் வறுமை நீக்க ஒதுக்கப்படும் பணமெல்லாம் அரசியல்வாணரின் வயிற்றுக்குள் போய்விடுகின்றது. குழந்தை வாயில் சப்புமிட்டாய் வைப்பதுபோல் மக்களை ஏமாற்ற வண்ணத் தொலைக்காட்சிகள் வழங்கப்படுகின்றன. இலவச அரிசி, இலவச ஆடைகள், இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.

மக்களுக்கு உணவுப் பொருள்கள் எளிதில் கிடைக்க, அவற்றின் விலைவாசியைக் கட்டுக்குள் வைக்கவேண்டியது அரசின் செயல். எந்த அரசும் இதைச் செய்வதில்லை. முதலாளிகளின் கைக்கூலிகளாக இருந்து விலை ஏற்றத்துக்குத்தான் அவை வழிவகுக் கின்றன. ஆயினும் மக்களை நிறைவு செய்ய வேண்டுமே! அதற்கு என்ன செய்யலாம்? நடப்பு உலகிற்கு முரண் பட்ட, செயற்கையான விலை குறைப்பில் ஈடுபட்டுத் தங்கள் வண்டியைச் சிலகாலம் ஓட்டுகின்றன. உணவை நாட்டுக்கே வழங்கவேண்டிய உழவர் குடி மக்களோ தங்கள் சொந்த நிலத்தில் தாங்கள் உழைத்து உண்பதற் குரிய இயற்கைச் சூழல்களையெல்லாம் இழந்து போயினர். அவர்களின் வேளாண் நிலங்களெல்லாம் சூழ்ச்சித் திட்டங்களால் அவர்களிடமிருந்து பறிக்கப் பட்டுச் சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்குள் கொண்டு செல்லப்படுகின்றன. குறைந்த விலைக்கு உணவுப் பொருள்களைக் கொடுத்து மக்களின் கண்கள் கட்டப்படுகின்றன.

நம் அரசியல்வாணர்கள் நல்லவர்களாக இருந்தால் மக்களே அவர்களைப் பாராட்டுவார்கள். மேலும், நல்லவர்கள் கடமையைச் செய்வார்களே தவிரப் பாராட்டை விரும்பமாட்டார்கள். ஆனால் நம் அரசியல் வாணர்களோ மக்களைச் சுரண்டவும் வேண்டும் அவர்களிடம் நல்ல பெயர் வாங்கவும் வேண்டும் என்று விரும்புகின்றனர். அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதும் அவர்களின் குறியாயிருக்கின்றது.

எனவேதான் கைதேர்ந்த (?) அரசியல்வாணர் எனப்படுபவர்கள் தங்களைச் சுற்றிப் புகழ்பாடும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர்.

மாந்தன்பால் மாந்தப் பண்பை வளர்க்காமல் அவர்களின் நல்லுணர்வுகளை மழுங்கடித்துவிட்டு, வெறும் வேலைவாய்ப்பும், உலகியல் முன்னேற்றமுமே குறியாக முன்னிறுத்தும் போலி ஆங்கில வழிக் கல்வியால் முதுகெலும்பும், தன்மானமும் இழந்துபோன ஒரு கூட்டம் அதற்கு அணியமாய் உள்ளது. அதிகாரத் தில் இருப்பவர்கள் வீசும் எலும்புத் துண்டுகட்காய் அவர்களை வானளாவப் புகழ்வதே இவர்கள் வேலை! அதற்காக இவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. பொற்கிழிகள் அள்ளி வீசப்படுகின்றன. வருவாய் மிக்க அரசு அலுவல்களில் இவர்கள் நுழைக்கப்படுகின்றனர்.

இந்நாட்டில் மட்டுமன்று எந்நாட்டிலும் அரசியல் ஒரு சுரண்டல் அமைப்பாகவே செயல்படு கின்றது. ஒரு வேறுபாடு. வேறு நாடுகளில் மக்கள் அரசியல் விழிப்போடு இருக்கிறார்கள். தப்புச் செய்பவனையே திரும்பத் திரும்ப அவர்கள் தேர்ந் தெடுப்பதில்லை. ஒருவனின் ஒரு துறைத் திறமையைக் கொண்டு வேறு எல்லாத் துறைகளிலும் அவனைத் தூக்கிவைத்துக் கொண்டாடுவதில்லை. ஆயிரந்தப்புச் செய்தாலும் அரசியல் தலைவன் கடவுளாய் வழிபடப் படுவது இந்த நாட்டில்தான்! உயர்மட்டத் தலைவனின் ஊழல்களை மூடி மறைக்கவே இந்நாட்டின் அரசு எந்திரங்களும் ஏன், ஊடகங்களும் கூட வாரிக் கட்டிக் கொண்டு செயல்படுகின்றன.

போலி வேதாந்தம் மக்களை ஊமைகளாய் - கோழைகளாய் ஆக்கி வைத்திருக்கின்றது. என்ன கொடுமைகள் நடந்தாலும் மக்கள் எழுந்து போராடுவ தில்லை. எல்லாம் அவன் செயல், அவரவர் விதிப்படி அதது நடக்கும் என்று எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கின்றனர்.

இந்த அரசியல் சுரண்டல் பேரியாற்றில் வேறு சில சுரண்டல் ஆறுகளும் வந்து கலந்துவிடக் கட்டுக் கடங்காச் சுரண்டல் வெள்ளம் கரைபுரண்டோடுவதும் இந்த நாட்டில்தான்!

அறிவியல் முன்னேற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி, தடையிலா வாணிகம், உலகளாவிய தொழில்தொடர்பு கள் என்னும் பெயர்களில் கோடி கோடிக் கொள்ளைச் சுரண்டல் நடத்தும் பன்னாட்டு வாணிக நிறுவனங் களின் பொருளியல் சுரண்டல் ஆறுகள் அரசியல் சுரண்டல் ஆறுகளில் வந்து கலக்கின்றன. பெருவாணிக முதலைகளும் அரசு அதிகாரத்தில் இருப்பவர்களும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் மறைமுக ஒப்பந்தங்களில் நாட்டின் வளங்கள் அனைத்தும் கொள்ளை போகின்றன. சொந்த நாட்டின் சொத்துக் களை - மண்ணை, மலைவளத்தை, ஏன் மக்கள் வாழிடங் களையுமே வெளிநாட்டு வாணிகக் கொள்ளையர்க்கு விற்றுத் தரகு பெற்றுக்கொள்ளும் அரசியல்வாணர் களை இந்த நாட்டில் தவிர வேறெங்கும் காண முடியாது. தொழில் முன்னேற்றம் என்ற போர்வையில் இன்று நடப்பதே இத்தகைய சுரண்டல் கொள்ளைகள் தாம்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்துப் பின் ஆளையே விழுங்க வரும் கொடும்புலிகள் போல் இன்று நகரங்களையும் பெருநகரங்களையும் விழுங்கிவிட்டு, ஏழை எளிய மக்களின் வாழிடங்களாகிய சிற்றூர்களை யும் இக்கொடியவர்கள் தங்கள் சுரண்டல் கொடுக்கு களால் வளைக்கத் தொடங்கிவிட்டனர். உழவுத் தொழிலும், எளிய மக்களின் குடிசைத் தொழில்களும் ஒன்றன்பின் ஒன்றாய் ஒழித்துக் கட்டப்பட்டு, எந்திரத் தொழில்கள் அரக்கப் பேருருவம் எடுக்கின்றன. செழுமையான பயிர் நிலங்களெல்லாம் உழவர்களிட மிருந்து பறிக்கப்பட்டு மாசு மிக்க, நச்சுக் கழிவுகள் மிக்க தொழிற்சாலைப் பகுதிகளாக்கப்படுகின்றன. வெளி மாநிலத்திலிருந்து இங்கு வரும் முதலாளிகள் கூலி வேலை செய்வதற்கும் கூடத் தங்கள் மாநிலத்திலிருந்தே ஆட்களை அழைத்து வருகின்றனர். உயிர் நிலையான தங்கள் உழவுத் தொழிலையும் அதில் ஈடுபடும் ஊக்கத்தையும் நிறைவையும் இவர்களிடத்தில் இழந்து விட்ட உள்ளூர் மக்கள் கூலி வேலைவாய்ப்புகளையும் பறிகொடுத்துத் தெருவில் நிற்கின்றனர்.

அண்மையில் வடக்கே காடுகளில் வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள் என்ன பாடுபடுத்தப்படுகின்றனர் என்பதை நாடறியும். காட்டுப் பகுதிகளில் மண்ணுள் பேரளவில் புதையுண்டு கிடக்கும் கனிமவளங்களைத் தோண்டி விற்றுக் கொள்ளை ஊதியம் ஈட்டுவதற்காக இந்தியப் பெரும் பண முதலைகளான டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற வணிகக் கொள்ளையர்கள் அரசின் துணையுடன் காடுகளை அழிக்க முனைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காடுகட்குப் பாதுகாப்பாய் அங்கு வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை அவர்களின் வாழிடங்களிலிருந்து விரட்டும் கொடுஞ் செயல் மிக விரைவாக நடந்து வருகின்றது. உரிமைக்குக் குரல்கொடுக்கும் மக்கட்கு நக்சல்பாரிகள் என்ற பெயர் சூட்டி அரசு அவர்களைச் சுட்டுக் கொல்கின்றது. இதுவரை மூன்று இலக்கம் பழங்குடிகள் இக்காட்டு வேட்டையில் காவு கொடுக்கப்பட்டுள்ளனர். இதுதான் இந்த நாட்டின் மக்களாட்சி மாண்பு!

கல்வி நிலையங்கள்கூட இன்று தனியார்களின் பெருஞ் சுரண்டல் நிறுவனங்கள் ஆகிவிட்டன. தொழில் நுட்பக் கல்லூரிகளும், பொறியியல், மருத்துவக் கல்லூரி களும், ஆங்கில வழிப் பள்ளிகளும் ஊதியமே குறியாகக் கொண்டுள்ள தனியார்களால் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் நடத்தப்படுகின்றன. இவர்கள் தண்டும் கல்விக் கட்டணங்கட்கு அளவே இல்லை. இவர்களின் கொள்ளையில் ஒருபங்கு அரசியல்வாணர் கட்குப் போய்ச் சேர்கிறது. ஆங்கில வழிக் கல்வியை நம் அரசுகள் விடாமற் பற்றிக் கொண்டிருப்பதற்கு இத்தரகு வாணிகமே காரணம்.

மக்கள் நலம், நேர்மை, உண்மை, ஒழுங்கு பற்றி யாருக்குமே கவலையில்லை. அவரவர் அடிக்கும் கொள்ளையே அவரவர்க்கு வாழ்முறையாகிவிட்டது.

அரசுகள் தங்கட்கு என்ன என்னவோ உயர் குறிக்கோள் இருப்பதாகவும், எத்தனையோ மக்கள் முன்னேற்றத் திட்டங்களை அவை மேற்கொண்டு வருவதாகவும் பறைசாற்றிக் கொள்கின்றன. ஆனால் இன்று தனியார் துறைக்கு ஊக்கமளித்தல் என்ற போர்வையில் நாடே வெளிநாட்டவர்க்கு வேட்டைக் காடாகத் திறந்துவிடப்படுகின்றது. மக்கள் முன்னேற்றத் திட்டங்கள் எல்லாம் முதலாளிகளின் முன்னேற்றத் திட்டங்களாகவே செயற்படுகின்றன. அரசியல்வாணன் முதலாளியத்தின் கைக்கூலியாக இயங்குகின்றான்.

நாட்டின் ஒருமைப்பாடு, நாடளாவிய வாணிகம், நாடளாவிய கல்விக் கொள்கை, நாடளாவிய தொழில் உரிமை, நாடளாவிய மக்கள் பரவல் என்பவை எல்லாம் பெயருக்கு நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் இவை முதலாளிகள் சிறு தடையுமில்லாமல் நாட்டுக்குள் எங்கு வேண்டுமானாலும் போய்த் தங்கள் தொழில்களை நடத்திக் கொள்வதற்கும், ஏழை மக்களின் வாழ்விடங் களையெல்லாம் பறித்துக் கொண்டு அவர்களைத் திக்கற்றவர்கள் ஆக்குவதற்கும், மக்களின் சொந்த மொழி, பண்பாட்டு வழியில் கல்வி பெற்று அவர்கள் வளர்வதைத் தடுப்பதற்கும் நடுவணரசின் அதிகாரக் குவிப்புக்கும்தானே துணை போகின்றன!

கடந்த அறுபதாண்டுகளாக அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்று பெருமை பேசுகிறார்கள். ஒழித்து விடுவதாக உறுதிமுழங்கிய படி மக்களின் அடிப்படை வறுமையைக் கூட இன்னும் ஒழிக்க முடியவில்லையே. அனைவருக்கும் அடிப்படைக் கல்வி வழங்க முடியவில்லையே. மக்கள் பசித்திருக்கையில், பட்டினி கிடக்கையில் முதலில் அதை நீக்கிவிட்டுப் பின்பு விண்வெளி ஆய்வு மேற்கொண்டால் அதுசரி. மக்களின் வறுமையை நீக்கப் பொருள் இல்லை என்று புலம்பிக்கொண்டு கோடி பல்லாயிரங் கோடிப் பொருளை விண்வெளி ஆய்வுக்கும் அணுக்குண்டு செய்வதற்கும் கொட்டிக் கொடுக்கலாமா?

தான் செத்து மீன் பிடிப்பதா? மக்களை வறுமை யில் வாடவிட்டுவிட்டு, நாடு வல்லரசாக வேண்டுமா? நல்லரசாகவே இல்லை, பின்பென்ன வல்லரசு? மண்ணாங்கட்டி!

நாம் நினைக்கின்றோம், வறுமை ஒழிப்பு, எளிய மக்கட்குக் கல்வி வழங்குதல், தாய்மொழியையே பயிற்றுமொழியாகக் கொள்ளல், தாய்மொழியையே ஆட்சிமொழியாக்கல் யாவும் சரியானவைதாமே இவற்றை ஏன் அரசு எதிர்க்கவேண்டும் என்று.

ஆனால், மக்கள் வறுமையை ஒழித்தால் முதலாளி கள் சுரண்ட முடியாது. மக்கட்கு உண்மையான கல்வி வழங்கினால் அரசியல்வாணர்கள் நெடுநாள் மக்களை ஏய்த்துக் கொண்டிருக்க முடியாது.

தமிழைப் பயிற்றுமொழியாக்கினால் ஆங்கில வழிக்கல்வி வாணிகர்களின் அடாவடிப் பிழைப்பு எப்படி நடக்கும்? அதில் இவர்களுக்குப் பங்கு எப்படிக் கிடைக்கும்?

உண்மையான கல்வி மக்கட்கு வழங்கப்படு மானால் இளைஞரிடம் அரசியல், பொருளியல் குமுகவியல் விழிப்புணர்வுகள் மேலோங்குமே. அவர்கள் அரசின் பொய்மைகளையும் போலிமைகளையும் அடையாளம் கண்டு கொள்வரே. ஆக்கவழியில் இளைஞர் எண்ணத் தொடங்குவாரானால் அஞ்சாமை யும் தீமை எதிர்க்கும் பண்பும் அவர்களிடம் தலை தூக்குமே. ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்கட்கு இது தொல்லைகளையல்லவா விளைவிக்கும்!

எனவேதான் கல்வி என்பது உண்மை அறிவுக்கும் விரிந்த பார்வைக்கும் இடமில்லாமல் வெறும் வேலை வாய்ப்பு ஒன்றையே முன்வைப்பதாக இருக்கவேண்டும் என்பதே அரசின் சூழ்ச்சித் திட்டமாக இருக்கின்றது. ஆம். இன்றைய உயர்கல்வி இளைஞர்க்கு எந்த எண்ணத் தெளிவையும் உண்மை நாட்டத்தையும் அவர்கள் நெஞ்சில் உருவாக்கவில்லை. அவர்களை வாழ்வியல் அக்கறை அற்றவர்களாகவும் தன்னல வாய்ப்புகளை மட்டுமே தேடித் திரிபவர்களாகவும் ஆக்கிவைத்திருக்கிறது.

இதனால்தான் படித்தவர் கூட்டத்திலிருந்து அரசுக்கு எவ்வகை எதிர்ப்பும் எழுவதில்லை. ஆங்கிலமே பயிற்றுமொழியாகக் கொண்டு மேற்கல்வி பெற்ற அக்கூட்டம் தாய்மொழி உணர்விலிருந்து முற்றும் அயன்மைப்பட்டு வாழ்கின்றது. தங்கள் தாய்மொழியாம் தமிழ்பற்றியோ தமிழ்ப் பண்பாடு பற்றியோ தமிழ்க் கலைகள் பற்றியோ துளியளவு அக்கறையும் அவற்றுக் கில்லை. உலகியல் மேம்பாட்டில் உச்சிக்கு ஏறவேண்டும் என்பதொன்றே அவற்றின் குறியாக உள்ளது. கல்விச் சூழல் பண்பாட்டுச் சூழலாக இல்லை. படித்தவர்கட்கு இருக்கவேண்டிய குமுகாய அக்கறையையும் விழிப்புணர்வையும் இன்றைய நம் கல்விமுறை ஏற்படுத்த வில்லை.

இந்தச் சூழலில்தான் நாம் நம் முதல் நிலைக் கோரிக்கைகளாகத் தமிழைப்பயிற்றுமொழியாக நடைமுறைப்படுத்தல் வேண்டும் என்பதையும் ஆட்சி மொழியும் நூற்றுக்கு நூறு தமிழாகவே இருத்தல் வேண்டும் என்பதையும் முன்வைக்கின்றோம். இவ்விரு கோரிக்கைகளும் சரியானவை நேர்மையானவை. மக்களின் உண்மை நலம் கருதுபவை. ஆக்கத்தன்மை வாய்ந்த சொந்த அறிவு வளர்ச்சிக்கு இவையே அடிப்படை. ஆனால் அரசோ இவற்றுக்குச் செவி சாய்க்க மறுக்கின்றது. ஏன்? தமிழ் பயிற்றுமொழியாக வும் ஆட்சிமொழியாகவும் ஆகிவிடுமானால் மக்க ளிடையே தமிழ் பற்றிய விழிப்புணர்வு தோன்றிவிடும். இளைஞர்கள் சொந்தமாக எண்ணத் தொடங்கிவிடுவர். குமுகாய அக்கறையும் விழிப்புணர்வும் கொள்வர். மேலும் மாநிலத்தின் பெரும்பான்மையரான கீழ்த்தட்டு மக்கள் கல்வி வாய்ப்பும் வேலை வாய்ப்பும் பெறுவர். அதனால் எப்பொழுதும் தங்கள் தன்னல நோக்கத்தோடு அரசுக்கு ‘ஆமாம் சாமி’களாக இருக்கும் மேல்தட்டுப் படித்த கும்பலும் வாணிக முதலாளிக் கும்பலும் செல்வாக்கு இழக்க நேரும். அரசின் சுரண்டலுக்குத் துணையாக இருக்கும் இவர்களை அரசு கைகழுவி விட்டுவிட முடியுமா?

தாய்மொழியே பயிற்றுமொழியாகவும் ஆட்சி மொழியாகவும் ஆவது சரியான கல்வி, ஆட்சிக் கொள்கையாகவும் மக்கள் நலத்துக்கு உகந்ததாகவும் இருக்கலாம். ஆனால் மக்கள் வரிப்பணத்தைத் தின்று சுவைகண்ட ஆளுங் கூட்டத்தினர் நேரிய கொள்கைகட் காகவோ மக்கட்கு நன்மை செய்யவோ ஆட்சியில் அமர்ந்திருக்க வில்லையே!

மேலும், தமிழுக்கு உரிய இடம் தமிழகத்தில் தரப்படுமானால் மக்களின் எண்ணப்போக்கில் இதுவரை இருந்துவரும் ஆங்கில அடிமைத்தனம் தானாகவே மறைந்தொழியும். மொழியுணர்வும், இனவுணர்வும் மாநில உணர்வும் தலைதூக்கும். ஒருமைப்பாடு என்ற போர்வையில் மாநில நலன்கட்கு எதிராக நடுவணரசு படிப்படியாக மேற்கொண்டுவரும் சூழ்ச்சித் திட்டங்கள் தட்டிக் கேட்கப்படும். மேலும் அதே ஒருமைப்பாடு என்ற போர்வையில் மாநில அரசு நடுவணரசுக்கு நல்ல பிள்ளையாக நடந்துகொண்டு நடுவணரசுப் பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியாமற் போகும், பின் எப்படி இந்த அரசுகள் நேரிய கொள்கைகளை மதித்து நடக்கும்?

மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களின் ஆட்சிதான் இன்றைய மக்களாட்சி என்று யாராவது கூறமுடியுமா? மேல்தட்டுக்காரர்களுக்காக மேல்தட்டுக் காரர்களால் நடத்தப்படும் மேல்தட்டுக்காரரின் ஆட்சிதான் இது என்பதை யாரேனும் மறுக்க முடியுமா?

கல்விபெறுவதில் கீழ்த்தட்டு மக்கட்கு உரிய உரிமைகள் இன்னும் வழங்கப்படவில்லை. தாழ்த்தப் பட்ட மக்கள் மேல் சாதிக்காரர்களால் எத்தனையோ கொடுமைகட்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்களின் இயற்கை உரிமையும் சரி, மக்களாட்சி உரிமைகளும் சரி காலிலிட்டு மிதிக்கப்படுகின்றன. அவர்களின் பெண்கள் கொடிய பாலியல் துன்புறுத்தல்கட்கு ஆளாகின்றனர். அவர்கள் வழக்குமன்றங்கட்குச் சென்றாலும், அங்கும் மேல்தட்டுக்காரர்கட்குச் சார்பான தீர்ப்புகளே வழங்கப்படுகின்றன. சட்டத்தின் பெயரால் மறைமுக மான மனுதரும முறையே வேலை செய்கின்றது. ஏழை எளிய மக்களின் நிலங்கள் பணமுதலைகளால் அப்பட்ட மாகப் பறித்துக் கொள்ளப்படுகின்றன. பழங்குடி மக்கள் அவர்களின் வழிவழி வாழ் நிலங்களாகிய இயற்கைக் காடுகளிலிருந்து விரட்டப்படுகின்றனர். முன்னேற்றத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் என்ற போர்வையில் எளிய மக்களின் உரிமை நிலங்கள் அரசினரால் கையகப்படுத்தப்படுகின்றன. மீனவர்கள் அவர்தம் குப்பங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அப்பகுதிகள் நாகரிகப் பொழுதுபோக்கு விடுதிகள் நடத்தும் முதலாளிகட்கு வழங்கப்படுகின்றன. மேல்தட்டுக் காரரின் வாகு தோதுகட்கும் வாய்ப்புக் கொள்ளை கட்கும் உதவுவதற்காகவே ஆங்கிலத்தை அரசு இன்னும் பிடித்துவைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் உண்மையான மக்கள் நலத்திட்டங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்படும்?

மேலும் உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத செல்வச் சொகுசு வாழ்க்கை இந்த நாட்டின் மக்களாட்சித் தலைவர்களால் நடத்தப்படுகின்றது. இதை நாம் சொல்லவில்லை. இங்கு வந்து பார்க்கும் வெளிநாட்டுக்காரர்கள் சொல்கிறார்கள். மக்களின் தலைவர்கள், மக்களின் பேராளர் என்பவர்கட்கு இந்த நாட்டில் வழங்கப்படும் ஊதியங்கள், சலுகைகள் போல வேறெந்த நாட்டிலும் இல்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முறையான வழிகளிலேயே இப்படி என்றால் முறைகேடான வழிகளில் இவர்கள் அடிக்கும் கொள்ளைகட்கு அளவுதான் உண்டா? இவர்களின் திருவிளையாடல்களைத்தான் செய்தித் தாள்கள் அவ்வப்பொழுது அம்பலப்படுத்துகின்றனவே. ஊழல்களெல்லாம் இப்பொழுது ஆயிரக்கணக்கில் பத்தாயிரக்கணக்கில் என்பது போய்க் கோடி, பல கோடிக் கணக்கில் இவர்களின் பைகளை நிரப்பு கின்றனவே. வீடுகளில் புகுந்து ஆயிரம் இரண்டாயிரம் திருடும் திருடன் அகப்பட்டுக் கொண்டால், ஆறுமாதம், ஓராண்டு சிறையிடப்படுகின்றான். ஆனால் ஆயிரங் கோடி, பத்தாயிரங்கோடி திருடும் அரசியல்வாணர்கள் தண்டனையிலிருந்து தப்புவதோடு புதிய பதவிகளிலும் அமர்த்தப்படுகின்றனர். அதனால் புதுப்புது ஊழல் வாய்ப்புகளும் அவர்கள் கையில் வந்து விழுகின்றன. ஊழல் பாதையில் உறுமிக் கொண்டு செல்லும் அரசு எந்திரத்தின் பற்சக்கரங்களில் ஏழை எளியவரும், ஏதுமற்றோரும் நசுக்கப்படுகின்றனர். அவர்கட்காகப் போராடும் நேர்மையாளர் சிறைப்பிடிக்கப்படுகின்றனர்.

ஊழல்களையும் குற்றங்களையும் ஒழிக்கச் சட்டங்கள் இருக்கத்தான் இருக்கின்றன. ஆனால் அவை வலிமையற்றனவாக இருக்கின்றன. அவற்றின் ஓட்டை களுக்குள் நுழைந்து குற்றவாளிகள் தப்பிவிடுகின்றனர். சிறைப்பட்டாலும் ஆறு மாதம் ஓராண்டு, அவ்வளவு தான். இந்தச் சட்டங்கள் ஏன் இப்படி உள்ளன என்றால், ஊழல் புரிபவர்களால் அரசுக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. குற்றம் செய்பவர்களால் ஆட்சிக்கு எந்த இடர்ப்பாடும் நேர்வதில்லை. உண்மையாளர்களே ஊழல் அரசுக்கு இடைஞ்சல் விளைப்பவர்களாக உள்ளனர். அரசின் இருப்பையே வினாவுக்குள்ளாக்கு பவர் அவர்கள். அரசின் மக்கட்பகைமையை வெட்ட வெளிச்சமாக்கி, ஏன், அவர்கள் நாட்டுக்கு இரண்டகர் களாக இருப்பதையும் உண்மையாளர் அம்பலப்படுத்து கின்றனர்.

எனவேதான் குற்றஞ்செய்பவர்களைத் தண்டிப் பதைவிட எவ்வகைக் குற்றமும் செய்யாமல், அரசின் ஊழல்களையும் பம்மாத்துப் பசப்புகளையும் போலிக் கொள்கைகளையும் மக்களைச் சுரண்டும் திட்டங் களையும் அறிவளவில், கருத்தளவில் எதிர்த்து மக்கட்கு விழிப்புண்டாக்கப் பாடுபடும் நேர்மைசால் அறிஞர்கள், மக்கள் சார்புப் போராளியர்கள், அரசை இடித்துரைக்க அஞ்சாதவர்கள் ஆகியோரை ஒடுக்குவதற்கே அரசு கடுமையான சட்டங்களை இயற்றுகின்றது. நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மைக் காப்பு என்ற போலிப் பெயர்களில் மிகக் கொடியவும் கடியவுமான சட்டங்கள் உருவாக்கப் படுகின்றன. குற்றவாளிகள் சிறையிலிருந்து சில ஆண்டுகளில் வெளிவந்துவிடலாம். ஆனால் கொள்கையாளர்களுக்கோ வாழ்நாள் சிறையாம்! இன்றைய நடப்பு அரசியல், குமுகாயவியல் நிலைமை இது.

பிழை நம்முடையதுதான். ஆம்; நாம் தவறாக நினைத்துவிட்டோம். அரசு மக்களுக்குரியது என்று. ஆனால் இந்த நாட்டில் எந்தக் காலத்திலும் அரசு மக்களுக்குரியதாக இருந்ததில்லை. பொது நலம், மக்களாட்சி என்பது எல்லாம் பகட்டான பம்மாத்துப் பேச்சுகளே.

அரசு மக்களுக்கு ஏதோ நலம் செய்யத்தான் செய்கிறது. உண்மைதான். மறுக்க முடியாது. ஆனால் மக்களுக்கு நலம் செய்யும் தூய நோக்கத்தோடு எந்தத் திட்டமாவது மேற்கொள்ளப்படுகின்றதா? அரசியல் வாணர்களும் பணக்கார மேல்தட்டுப் பெருச்சாளிகளும் உள்ளிருந்து சுரணடுவதற்கான வாய்ப்பாகத்தானே அரசின் திட்டங்கள் அமைகின்றன. ஓர் எடுத்துக்காடு : ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவது மக்களுக்கு நல்லதுதான். ஆனால் மொத்தச் செலவுத் திட்டத்தில் எத்தனைப் பங்குகள் எங்கெங்கே, யார் யாருக்குப் போய்ச் சேருகின்றன என்பவற்றையெல்லாம் கணக்குப் பார்த்தால் தானே இத் திட்டத்தின் மக்கள் பங்கு ஒரு கோடி, ஊழல் பங்கு ஒன்பது கோடி என்ற உண்மை புரியும். மேலும் நூறாண்டுகட்கும் மேலாக நிலைத் திருக்க வேண்டிய அந்தப் பாலம் 20 ஆண்டுகளில் ஓட்டை விழுந்து வலிமை இழக்குமானால் அது இன்னும் எவ்வளவு கொடிய மக்கட் சுரண்டல்! இப்படி மக்கள் நலம் என்பது எங்கெங்கும் எப்பொழுதும் வினாக்குறியாகவே நிற்கின்றது.

செலவழிக்கப்படுகின்ற கோடிகள் தாம் மக்க ளுக்குத் தெரியும். விழுங்கப்படுகின்ற கோடிகள் அதுபோல் எத்தனை மடங்கு என்பது அவர்களுக்குத் தெரியாது. ஒரு கொள்ளைக்காரன் வீட்டுக்காரனைப் பிடித்து வாசல் தூணில் கட்டிவைத்துவிட்டு வீட்டுக்குள் இருக்கும் பத்து இலக்கம் உருபாவைச் சுருட்டிக் கொள்கிறான். ஆனாலும் நகைச்சுவை உணர்வோடு போகிற போக்கில் கட்டப்பட்டுக் கிடக்கும் வீட்டுக் காரன் கையில் ஒரு நூறு உருபாத் தாளைக் கொடுத்து விட்டுப் போவானானால் அவன் பெரிய வள்ளல் ஆகிவிடுவானா? நம் அரசியல்வாணர்க்கும் இக் கொள்ளைக்காரனுக்கும் என்ன வேறுபாடு?

இந்திய நாட்டின் மக்களாட்சி என்பது மிகப்பெரிய, மிகக் கொடிய சுரண்டல் அமைப்பு. மக்கள் தலைவர்கள், மக்களின் பேராளர் என்பவர்கள் இயல்பாகவே கொள்ளை ஊதியங்களும் சலுகைகளும் பெற்றுக்கொண்டு பகட்டும் சொகுசுமான செல்வ வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளனர். ஊதிய நிலையி லேயே இப்படி என்றால் ஊழல் நிலையில் எப்படி இருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. நாட்டையே விற்றுத் தின்னும் பச்சையான பகற் கொள்ளைக்காரர்கள் இவர்கள். இவர்களிடமிருந்து என்ன நேர்மையை நாம் எதிர்பார்க்க முடியும்? புதுவை அரசும் தமிழக அரசும் மனம் மாறித் தமிழைப் பயிற்றுமொழியாக்கிவிடும் என்றோ தமிழை ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்தும் என்றோ எதிர்பார்ப்பதற்கில்லை. அடிப்படை வறுமையை ஒழிக்கும் என்றோ, அடிப்படைக் கல்வியைக் கீழ்த்தட்டு மக்கட்கு வழங்கும் என்றோ காத்திருப்பது வீண். இவர் களிடமிருந்து எந்த மக்கள் நலச் செயலும் எழப் போவ தில்லை. ஒப்போலை பெறுவதற்காக மக்களை ஏய்க்கும் வண்ணத் தொலைக்காட்சித் திட்டம், இலவச அரிசித் திட்டம், நலிவுற்றோர் காப்புத் திட்டம் போன்ற தந்திரத் திட்டங்களைத் தவிர, நாட்டை ஆக்க வழியிற் கொண்டு செல்லும் ஒரு செயலைக் கூட இவர்கள் செய்யப் போவதில்லை.

நாட்டைச் சுரண்டக் கிளம்பியிருக்கும் புதிய கொள்ளைக்காரர் இவர்கள்; புதிய முதலாளிகள் இவர்கள். நூற்றுக்கு நூறு மக்கள் பகைவர்கள். தில்லியில் ஆட்சியின் உச்சியில் இருப்பவனானாலும் சரி, தெற்கே குமரிமுனையில் சிலை எழுப்புபவன் ஆனாலும் சரி, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்; ஒரே பொந்தில் வாழும் நச்சுப் பாம்புகள்.

நல்லது நடக்க வேண்டுமென்றால் இரண்டே வழிகள்தாம் உள்ளன. ஒன்று நேர்மையாளர்கள், உண்மையாளர்கள், சான்றோர்கள், தூய உள்ளத்தினர் ஒன்றுகூடிப் புதியதோர் அரசியல் அணியை உருவாக்குதல் வேண்டும். இன்றைய எதிர்க்கட்சிகளைப் பற்றியும் கூட்டணி வாய்ப்பாளர்களைப் பற்றியும் நமக்கு நன்கு தெரியும். அவர்களும் அந்தக் குட்டையில் ஊறிய மட்டைகளே; அவர்களும் அந்தப் பொந்தில் வாழும் நச்சுப் பாம்புகளே. நமக்கு வேண்டுவது முற்றும் புதிய அணி. தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆட்சியைப் பிடிக்குமளவு வலிமையைத் திரட்டிக்கொண்டு களமிறங்க வேண்டும்.

இந்த வழி நம்மால் இயலாதென்றால் மற்றொரு வழி மக்களைத் திரட்டிப் போராடுவதுதான். மக்களை விழித்தெழச் செய்யும் மிகப்பெரிய இயக்கத்தை நாம் நடத்தியே தீரவேண்டும். மக்களின் நேர்மையான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஆட்சி எந்திரம் இயங்க முடியாது என்ற இக்கட்டு நிலையை அவர்கட்கு ஏற்படுத்தவேண்டும். நாட்டை உய்விக்க இந்த இரண்டைத் தவிர வேறு வழிகள் நமக்கு இல்லை. இல்லை. இல்லை.
Pin It