தமிழ் நாட்டில் வடமொழியை எழுதுவதற்குத் தமிழ் வரிவடிவைச் சார்த்தி உருவானதும் உருவாக்கப் பட்டதுமான ஒரு வகை வரிவடிவத்திற்குக் கிரந்தம் என்று பெயர். கிரந்தம் என்ற வடமொழிச் சொல்லுக்கு நூல் (பொத்தகம்) என்பது பொருள். நூல் எழுதப் பயன்பட்ட எழுத்தும் ஆகுபெயராய்க் கிரந்தம் என்று பெயர் பெற்றுள்ளது. பிற்கால வடமொழியாகிய சமற்கிருதம் மக்கள் பேச்சு மொழியாகப் பயன்பட்டதை விட பெரும்பாலும் வடமொழி நூல்களை எழுதப் பயன்படுத்தப்பட்ட மொழியாகவே இருந்துள்ளமை யால் அப்பெயர் பெற்றிருக்க வேண்டும்.

கிரந்த எழுத்துக்களைத் தோற்றுவித்தவர்கள் யார்? என்ற வினாவுக்கு விடையளிப்பது எளிதன்று. பொதுவாகப் பல்லவர்களே இவ்வெழுத்துக்களைத் தோற்றுவித்தவர்கள் என்ற எண்ணத்தை அவர்களது கல்வெட்டுக்கள் நம்மிடையே தோற்றுவிக்கின்றன. ஏனெனில் முதன்முதலாகப் பல்லவர்களது தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அவர்களது நேரடி ஆட்சிப் பகுதிகளிலும் மட்டுமே கிரந்த எழுத்துக் கல்வெட்டுக் கள் காணப்படுகின்றன. தலைநகரை விட்டுத் தள்ளி யுள்ள இடங்களிலும் அவர்களது ஆட்சியின் கீழடங்கிய குறுநில மன்னர்களின் ஆட்சிப் பகுதிகளிலும் வெட்டப் பட்டுள்ள கல்வெட்டுக்களில் வடமொழிச் சொற்கள் வந்தாலும் கிரந்த எழுத்துக்கள் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டுள்ளன. எனவே பல்லவர்களே இவ்வெழுத்துக்களைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர்கள் எனக் கருத இடமளித்தது.

கிரந்த எழுத்துக்கள் பல்லவர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட தென்றாலும் அது வளரவும் நிலைபெற வும் தமிழகத்தில் ஏற்பட்ட வடமொழியாளர் ஆட்சி மற்றும் வடமொழியாளர் பரவலும் அவர்களது பண்பாட்டுத் தாக்கங்களுமே அடிப்படைக் காரணங் களாகும். இக்காரணங்களை அறிந்தால்தான் கிரந்தம் தமிழகத்தில் காலூன்றி நிலைத்த வரலாற்றைத் தெளிவாக அறிய இயலும்.

இந்திய மொழிகளின் எழுத்துக்கள் அனைத்தும் தொல் தமிழ் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது போன்றே கிரந்த எழுத்துக்களும் உருவாயின. தொல்தமிழ் எழுத்துக்களில் இல்லாத வடமொழிச் சிறப்பெழுத்துக்களுக்கான வரிவடிவங் களை வடமொழிக்கு உருவாக்கிக்கொண்ட பின்னர் இந்தியாவில் வடமொழிக்கும் தென்மொழிக்கும் வெவ்வேறு எழுத்துவகைகள் பயன்படலாயின. இருமொழிக்கும் பயன்படுத்தப்பட்ட இவ் வெழுத்து வகைகள் அடிப்படையில் ஒன்றே எனினும் மொழிக்கும் இடத்துக்கும் ஏற்ப வெவ்வேறு வடிவில் வளரத் தொடங்கின. தென்னகத்தில் எழுத்துப் பயன்பாடு மிகுந்தபொழுது எழுதப்படுபொருளாகப் பனை ஓலைகளே பெரிதும் பயன்படுத்தப்பட்டன. அதனால் பனையோலையின் தன்மைக்கேற்ப நேர்க்கோடு களாலும், குறுக்குக் கோடுகளாலும் உருவாக்கப்பட்ட தொல் தமிழ் எழுத்துகள் தென்னகத்தில் வளையத் தொடங்கி வட்டெழுத்தாக வளரத் தொடங்கின. வடபுலத் தொல் எழுத்துக்கள் வளர்ச்சிப்போக்கில் அந்நாடு, மொழிக்கேற்பப் பெரிதும் நேர்க்கோட்டு முறையிலேயே வளர்ந்தன.

வடபுலத்தில் மவுரிய குப்தர்களின் ஒரு குடைக்கீழ் அமைந்த ஆட்சி வட இந்திய எழுத்துக்களில் பெரிதும் ஒற்றுமைக்குக் காரணமாய் அமைந்தது. தெற்கில், குறிப்பாகத் தமிழகத்தில் ஒரு குடை ஆட்சி இல்லாமற் போயினும் ஒரு மொழி பேசும் மக்கள் வழக்கால் ஒற்றுமையுள்ள எழுத்து வடிவங்கள் அமைந்தன. தொல்தமிழ் எழுத்துக்குப்பின் பெரிதும் கல்வெட்டுக்கள் காணப்படாவிடினும் கி.பி. 4-5ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைத்த கல்வெட்டுக்களின் வழி ஏறத்தாழ ஒரே ஒற்றுமையான எழுத்துக்கள் தன் இயல்பான (வட்டெழுத்து) வளர்ச்சிப் போக்கில் வளர்ந்துள்ளது என்பதை உணரமுடிகிறது.

இவ்விரண்டு பகுதிகளுக்கும் நடுவுப்பட்ட தக்காணப் பகுதிகளில் அத்தகைய ஒரு குடை ஆட்சியோ ஒரு மொழி வழக்கோ அமையாது போனமையால் எழுத்து மொழி, பண்பாடுகள் வடக்கு ஆரியமும் அல்லாமல் தெற்குத் தமிழும் அல்லாமல் மொழி, எழுத்து அமைதியில் ஆரியச் சாயலையும் தமிழ்ச் சாயலையும் கலந்த மொழியையும் கலந்த ஒரு வரிவடிவையும் பெற்றன. இதற்குக் காரணம் தமிழகத் திற்கு வடக்கில் தமிழகமாயிருந்து மவுரியர் சாதவாகனர் போன்ற வடபுலமன்னர்களால் கைக்கொள்ளப்பட்டு அவர்களது தாய்மொழி ஆட்சிச் செல்வாக்கால் வட்டாரத் தமிழ்மொழி வழக்குகளோடு வடமொழிக் கலப்புற்றுத் தமிழ் திரிமொழிகளான தெலுங்கு கன்னட மொழிகளாகத் திரியத் தொடங்கின. இப்பகுதிகளில் ஏறத்தாழ கி.பி. 7ஆம் நூற்றாண்டுவரை வடமொழியே ஆட்சி ஆவணமொழியாக இருந்தமையால் வடமொழி எழுத்துக்கள் இப்பகுதி எழுத்துக்களாக நிலைபெற்றன.

இவ் வெழுத்துக்கள் தமிழ்நாட்டு வட் டெழுத்தைப் போல் பெரிதும் வளையாதும் வடக்கு வடவெழுத்துக்களைப் போல் முழுதும் நிமிராதும் எழுத்துக்களின் தலை மீது இடப்பக்கம் சற்றே வளைந்த சிறு குறுங்கோட்டையும் குத்துக் கோட்டு எழுத்துக்கள் கீழ் நீண்டு இடப்புறம் வளைந்து மேல் நோக்கியும் அமைந்தவை. பின்னர் இடப்புறம் வளைந்த இக் கீழ்க்கோடுகள் இரட்டித்தன. இக்காலத்திலும் ஏனைய இந்தியப் பகுதிகளில் இருந்து தனித்து நின்றதால் இவ்வெழுத்து வடிவங்கள் தமிழ் மக்களுக்குப் பழக்க மில்லை.

கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தின் வடபகுதியிலிருந்து மெல்ல மெல்லப் பரவிக் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தங்கள் ஆட்சியை நிலைப்படுத்தித் தமிழகத் தின் வடபகுதியை ஆண்ட பல்லவர்கள் தமிழகத்திற்கு (இன்றை இந்தியத் தமிழகமன்று வடக்கில் கிருட்டிணை ஆறுவரை பரவியிருந்த அன்றைய தமிழகம்) வடக்கில் ஆட்சி மொழியாக இருந்த வட மொழியினர். அவர் களுக்கு அவ் வடக்கு மொழியும் அம்மொழியை எழுதிய தக்காணப் பகுதி (வடக்கு) வரிவடிவுமே பழக்கப் பட்டிருந்தன. தமிழகத்தில் ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டபொழுதும் தொடக்கத்தில் அவர்கள் வெளியிட்ட பாகதச் செப்பேடுகளிலும், கல்வெட்டுக் களிலும் அவ்வடவெழுத்துக்களையே பயன்படுத்தினர்.

பல்லவர்களது ஆட்சி தமிழகத்தில் மட்டுமே நிலைபெற்றபின் இந்நாட்டு மக்களின் தாய்மொழியான தமிழிலும் ஆவணங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டனர். இவர்களது தொடக்கக் காலக் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் வடமொழி களாகிய பாகதத்திலும் சமசுகிருதத்திலும் வெட்டப் பட்டதால் எழுத்துச்சிக்கல் ஏற்படவில்லை. தமிழகத்தில் ஆட்சி வலுப்பெற்றபின் காலஞ் செல்லச் செல்லத் தக்காணப் பகுதி வடிவிலிருந்து வடமொழிக்குரிய எழுத்துக்களில் இருந்து சற்றே மாறுபடத் தொடங்கின. எனவே தமிழ் மக்கள் அறியும் வகையில் இருமொழி களையும் அறியும் வகையில் எழுதவேண்டிய தேவை ஏற்பட்டது.

அதனால் தமிழுக்கும் வடமொழிக்கும் பொது வில் அமைந்த எழுத்துக்களின் வரிவடிவங்களை வட்டெழுத்துப் போக்கில் இருந்து வேறுபட்ட தமக்குப் பழக்கமான வடவெழுத்து வடிவில் எழுதத் தொடங்கி னர். அதே நேரத்தில் வடமொழியின் வருக்க வெழுத்து முதலான வடமொழிக்கே உரிய எழுத்துக்களைத் தமிழெழுத்துச் சாயலை நோக்கி வளைத்தனர். இவ் வளைவுக்கு ஏற்கெனவே தாங்கள் ஆண்ட பகுதியில் எழுதப்பட்ட தக்காண வகை எழுத்துக்கள் துணை புரிந்தன.

தக்காணப் பகுதியில் வழங்கப்பட்ட தென் வட வெழுத்தையும் (பாகதமொழியை எழுதப் பயன்பட்ட எழுத்து) தமிழகத்தில் வழங்கிய வட்டெழுத்தையும் சற்றே திரித்துத் தமிழகச் சூழலுக்கேற்ப உருவாக்கப் பட்ட இவ் வெழுத்து முதன் முதலில் பல்லவர்களா லேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வெழுத்துக்கள் தமிழ்ப் பொதுமக்களுக்கு எவ்வகையிலும் பயன்பட்ட தாகச் சான்றில்லை. இவை அக்காலத்தில் ஆட்சியாளர் களின் சிறிய அளவிலான கல்வெட்டுக்களைப் பொறிக்கவும், பேரளவிலான வடமொழியாளர் (பிராமணர்) நூல் எழுதவும் மட்டுமே பயன்பட்டுள்ளது. எனவே பெரிதும் வடமொழிக் கிரந்தங்களை (நூல்) எழுதப் பயன்பட்ட இவ்வெழுத்து ஆகுபெயராய் அக் கிரந்தத்தை எழுதப் பயன்பட்ட எழுத்துக்கும் ஆகிவந்து நிலைபெற்றதில் வியப்பொன்றும் இல்லை.

இக்காலக்கட்டத்தில் வேதமதத்தினரான வட மொழியாளர் (பிராமணர்) பழைய வடமொழியான பாகதத்தையும் சமண பவுத்த மதங்களையும் வீழ்த்திப் புதிய வடமொழியாகிய சமசுகிருதத்தையும் வேத மதத்தையும் முன்னிறுத்தி வீறுகொண்டெழுந்தனர். அன்றைய காலக்கட்டத்தில் இந்தியா வெங்கும் நிலவிய அனைத்து அரசுகளும் வடமொழியாளர்களாலேயே வழிநடத்தப்பட்டன என்றால் அது மிகையன்று. வடமொழியாளர்களான பல்லவர்களும் இதற்கு விலக்கல்லார். இவர்களும் பாகதமொழியையும் சமண பவுத்தமதங்களையும் கைவிட்டு முற்றிலும் ஆரியவயப் பட்டனர். வடமொழியைத் தமது ஆட்சியில் பெரிதும் போற்றி ஆட்சியின் நேரடி ஆட்சி மொழியாகக் கொண்டனர். ஆதலால் வடமொழியைத் தமிழகத்தில் பேரளவில் எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே தமிழ் மக்கள் ஏற்கும் வகையில் தாங்கள் பயன்படுத்திய வடவெழுத்துக்களைத் தமிழக வட்டெழுத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்திப் பிற்காலத் தமிழ் எழுத்துக்களாக வளர்ந்த அன்றைய தமிழ் எழுத்துச் சாயலில் வட மொழிக்குத் தேவையான வருக்க எழுத்துக்களையும் பிறவற்றையும் எழுதத் தொடங்கினர். அவ்வெழுத்துக் கள் பல்லவர் காலத்தில் தமிழ்ப் பொதுமக்களுக்கு ஆகாது ஆட்சிக்கும் சிறிதளவு வடமொழிக் கல்வெட்டுக் கும் பேரளவு ஆட்சியைச் சார்ந்த பிராமணர்களுக்கு நூலெழுதவும் மட்டுமே பயன்பட்டமையால் கிரந்தம் (நூல்) எழுதப் பயன்பட்ட அவ்வெழுத்து ஆகுபெயராய் கிரந்தம் எனப் பெயர் பெற்றுள்ளது எனலாம்.

இக் கிரந்த எழுத்துக்கள் முதன்முதலில் பல்லவர் களாலேயே பயன்படுத்தப்பட்டமையாலும், இவர்கள் இவ் வெழுத்தைத் தங்களது சிந்தனைக்கேற்பப் பல்வேறு வகைகளில் அழகுபட எழுதியமையாலும் இது பல்லவகிரந்தம் என அழைக்கப்பட்டது. பல்லவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இவ்வெழுத்துக்கள் வளர்ந்து நிலைபெறுவதற்கு மேற்கூறியவாறு தமிழகத்தின் மீது ஏற்பட்ட வடவர் ஆட்சியும் வடமொழியாளரும் வடக்குப் பண்பாட்டுத் தாக்கமுமே காரணமாகும். இவற்றைச் சற்று மேம்போக்காக வேணும் அறிந்து கொண்டால்தான் கிரந்தம் தமிழகத்தை ஆட்டிப் படைத்ததை உணரமுடியும்.

கிறித்துவின் சமகாலத்துக்கு முன்னும் பின்னும் அமைந்த சில நூற்றாண்டுகளில் வடபுலத்தில் சமண பவுத்த மதங்களுக்கு வடபுல மன்னர்களும் மக்களும் அளித்த செல்வாக்கால் வேத மதத்தின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. எனவே வடமொழியாளர்கள் வாழ்வும் வளமும் தேடி வடமா, மத்யமா, பிருகத் சாரணர் எனத் தத்தம் இடப்பெயரோடும் குழுப்பெய ரோடும் பெரும்பெருங் கூட்டத்தினராய்த் தென்னகம் நோக்கிப் பரவத் தொடங்கினர். தென்னகம் அவர் களுக்குப் பெரும் புகலிடமாய் அமைந்தது, தென்னக மன்னர்களும் அவர்களை ஏற்று அகரம் அளித்தும் வேள்வி ஓம்பியும் போற்றினர்.

கழகக்கால வீழ்ச்சிக்குப் பின்னர்த் தமிழகத்தின் வடபகுதியில் ஆட்சியை நிலைநிறுத்திய வடமொழி மன்னர்களாகிய பல்லவர்களும் சற்றேறத்தாழ அதே காலக்கட்டத்தில் தென்தமிழகத்தில் மீண்டெழுந்த பாண்டியர்களும் இவர்களிருவரையும் வென்று தமிழகம் முழுமையும் ஒருகுடைக்கீழ்த் தமிழகத்தைக் கட்டி யாண்ட சோழர்களும் முந்தைய செந்தமிழ் மன்னர் களின் மரபில் வந்தவர்களே யாயினும் வடமொழி சார்ந்த மன்னர்களாகவே இருந்தனர். இக்காலக் கட்டத்தில் வடமொழியாளர் பரவல் வெகுவாகப் போற்றப்பட்டது. வடமொழியாளர்களது கல்வி கேள்விகளும் வேதவேள்விகளும் மன்னர்களை ஈர்த்தன. அதனால் மன்னர்களது ஆட்சியதிகாரங்களின் உயர் பதவிகளிலும், மக்கள் வழிபாட்டிடங்களான கோயில் களில் முதன்மையான பூசைக்காணி உரிமைகளிலும் பேரிடம் பெற்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக அரசும் அரச அமைப்புக்களும் செல்வர்களும் பல்வகை வடமொழிக் கல்விக்கும், வேத வேதாந்தக் கல்விக்கும் கல்விக்கழகங்கள் பலவற்றைத் தோற்றுவித்து வட மொழிக்கல்வியை ஊக்குவித்தனர். தமிழகத்தில் அன்று நிலவிய முப்பெரும் நாட்டுக்கு வேண்டிய உயர் அலுவலர்களை உருவாக்கவென்றே ஒரு தனி வடமொழிக் கல்லூரி அமைக்கப்பட்டது என்ற செய்தி வடமொழிக்கும் வடமொழியாளர்களுக்கும் தமிழக மன்னர்கள் கொடுத்த சிறப்பைக் காட்டும்! அதேவேளை தமிழ், தமிழ்சார் கல்விக்காக ஒரு சிறு கல்விக் கூடத்தைக் கூடத் தமிழக மன்னர்களோ மக்களோ தோற்றுவித்ததற்கான ஒரு சிறு சான்றும் கிடைக்க வில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சோழமன்னர்களில் பலர் கங்கைக்கரைவரை சென்று ஆயிரக்கணக்கான வடமொழிப் பிராமணர் களை அழைத்துவந்து குடியேற்றி ஊரும் நிலமும் பொன்னும், பொருளும் கொடையளித்தும் ஆட்சி யதிகாரத் தனியூர்களான சதுர்வேதிமங்கலங்களைத் தோற்றுவித்தும் வளமான வாழ்வும் தரமான கல்வியும் அளித்துப் புரந்தனர். மக்கள் மொழியாகிய  தமிழைவிட அரசவைகளில் வடமொழிக்கே வாழ்வுரிமை மிகுந்து நின்றது.

தென்னகம் வந்த வரவழைக்கப்பட்ட வடமொழி யாளர்கள் (பிராமணர்கள்) தங்களையும் தங்கள் மொழியையும் நிலைப்படுத்திக் கொள்ள இதுகாறும் இம் மண்ணில் முகிழ்த்த அறிவுக்கருவூலங்களை யெல்லாம் தங்களது மொழியில் தொகுத்தும், அவற்றைச் சார்ந்து புது நூல்கள் பற்பல யாத்தும் வட மொழியை வளர்த்தெடுத்தனர். இதற்கு ஏந்தாகத் தென்னகம் வடபுலத்தைப்போல பல்வேறு படை யெடுப்புகளுக்கு ஆளாகாமல் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. இந்தியாவின் ஒட்டுமொத்தப் பகுதியில் கிடைக்கும் வடமொழி நூல்களைவிட மிகுதியாகத் தென்னகத்தில் கிடைக்கும் வடமொழி நூல்களே இதற்குச் சான்றாகும். தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும், தனக்கெனத் தனித்த ஒரு பெரும் மண்ணகப் பரப்பையும் கொண்ட தமிழகத்தில் கிடைத்த தமிழ் நூல் சுவடிகளைவிட இருமடங்கு வடமொழிச் சுவடிகள் கிடைத்திருப்பது ஒன்றே வடமொழிக்குத் தமிழகத்தில் கிடைத்த செல்வாக்கைக் காட்டும்.

தங்களுக்கு அடையாளத்தைக் கொடுக்கும் மொழியை வளர்த்தெடுப்பதே நிலைபெற விரும்பும் ஒவ்வொரு வலிமை வாய்ந்த இனத்திற்கும் கடமை யாகும். செல்லும் இடமெல்லாம் தங்கள் செல்வாக்கைப் பெருக்கித் தங்களைச் செழுமைப்படுத்திக் கொள்ளும் கூர்தலறம் (Survival of the fittest) நிரம்பிய ஆரிய இனம் எங்கெங்கியலுமோ அங்கெல்லாம் உள்ள அறிவுக் கருவூலங்களைத் தங்கள் மொழியில் உள்வாங்கித் தனதாக்கிக் கொள்ளவும், தங்களது மொழியை அங்கு இடங்கொள்ளச் செய்யவும் இயலாத இடங்களில் தங்கள் மொழிக் கருத்துக்களையும் சொற்களையும் திணித்துத் தங்கள் மொழியை மேம்படுத்தி ஆக்கம் தேடிக்கொள்ளவும் வல்லது.

அந்த வல்லமையே தமிழகத்தில் காலூன்றிச் செந்தமிழையும் தமிழினத்தையும் ஒட்டுண்ணியாகப் பற்றி அதன் சாரங்களை உள்வாங்கிக்கொண்டு தங்கள் வடமொழியை வளர்த்து வளமாக்கித் தாமும் வளம் பெற வழிவகுத்தது. அந்த வளத்தால் தம் நாடல்லா நாட்டிலும் தமது மொழியையும் தங்களையும் வலுவாகக் காலூன்றச் செய்தது. அதோடமையாது தங்களுக்கு வாழ்வும் வளமும் அளித்த மொழியையும் நாட்டையும் அதன் பண்பாட்டையும் அடையாள மிழக்கச் செய்தது. இந்தியா முழுமையும் வழங்கிய தமிழை அழித்துப் பல்வேறு மொழிகளாய் - மொழியின ராய்ப் பிரித்துத் தமது மொழியும் தாமும் இன்றி வேறொன்றில்லை என்ற நிலைமையை ஏற்படுத்தியது. தமிழகம் ஏற்காத பொழுதும் வளைந்துகொடுத்து வகையாய் நுழைந்து மதம் பண்பாட்டைப் புகுத்தி அதன்வழித் தமது மொழியைப் புகுத்தித் தமக்கென தனித்த எழுத்தை வளர்த்தது மல்லாமல் காலந்தோறும் தமிழின் எழுச்சியைத் தட்டி முடக்குவதே தனக்குரிய பெருங்கடமையாகச் செய்துவருவது அவ்வினத்தின் இயல்பாக அமைந்துள்ளது.

தமிழை எழுதவும் படிக்கவும் கிரந்தம் எள்ளளவும் தேவை இல்லை. மெல்ல மெல்ல நுழைந்து ஏறத்தாழ 1500 ஆண்டுகளாகத் தமிழை, தமிழ்ப் பண்பாட்டை அழித்த கிரந்தத்திற்குக் கணினிவழி உயிர் கொடுப்பது நம் தலையில் நாமே வைத்துக்கொள்ளும் கொள்ளி.

உலகம் இன்று கணினியின் கையில். அதன் எதிர்கால வாழ்வும் வளர்ச்சியும் கணினியின் பயன் பாட்டைப் பொறுத்திருக்கிறது. இதற்குத் தமிழும் தமிழரும் விலக்கல்ல. ஆனால் கணினி வழித் தமிழும், தமிழரும் வளர்வதை வழி வழியாகத் தமிழ் மொழி பண்பாட்டிற்கு இடையூறு செய்துவரும் வடமொழியும் வடமொழியாளரும் இன்றும் தமிழின் தனித்தன்மையைக் கெடுக்கக் காப்புக் கட்டிக்கொண்டு முன்னிற்கின்றனர்.

கணினி மொழி என்பது ஒரு பொறிமொழி. கணினிக்கு நமது மொழியும் எழுத்தும் புரியாது. ஆதலால் அதற்குரிய வகையில் நமது மொழி எழுத்துகளின் வரிவடிவங்களை - பொறி வடிவங்களாக உருவாக்க வேண்டும். தமிழ் ஆர்வலர்கள் பலர் அவரவர் களுக்கு ஏற்ற வகையில் எழுத்துருக்களை உருவாக்கி வெளியிட்டுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர். இத்தகைய உருவாக்கங்கள் கணினிப் பயன்பாட்டில் தமிழை ஆங்கிலத்திற்கு அடுத்த நிலைக்கு உயர்த்தியது. எனினும் பல்வேறு எழுத்துருப் பயன்பாட்டால் உலகத் தமிழர்கள் ஒருங்கிணைந்து தமிழாக்கத்திற்குச் செயற் பட முடியவில்லை. எனவே உலகெலாம் பரந்து வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைக்கவும் வளமான தமிழ் உலகை அமைக்கவும் ஆங்கில மொழிக்கு - மொழிக் குரிய எழுத்துகளுக்கு ஒருங்கு குறி அமைந்துள்ளது போல தமிழுக்கும் அமைக்கும் முயற்சிக்கு ஒருங்குகுறிச் சேர்ப்பியம் (Unicode Consortium) தமிழுக்கு 128 குறியீடுகளை ஒதுக்கியுள்ளது. இவை தமிழ்மொழி எழுத்துருக் களுக்குப் போதுமானதாக இல்லை எனினும் ஒருவாறு நிறைவு செய்து கொள்ள முடியும்.

ஆனால், வழக்கம்போல தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக நிற்கும் வடமொழியாளர் தமிழ் எழுத்துக்களோடு வடமொழி கிரந்த எழுத்துக் களுக்கும் சேர்த்து ஒருங்குறி வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்குக் காரணம், இந்திய மொழிகளின் எழுத்துகள் எல்லாவற்றிலும் சமசு கிருதத்தை எழுத முடிகிறது. ஆனால் தமிழ் எழுத்துக்கள் சமசுகிருதத்தை எழுதப் போதுமானதாக இல்லை. எனவே தமிழ்நாட்டில் சமசுகிருதத்தை எழுதப் பயன்படுத்திய கிரந்த எழுத்துக்களையும் தமிழ் எழுத்து ஒருங்கு குறிகளோடு சேர்த்து வழங்கவேண்டும் என வடமொழியாளர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிரந்த எழுத்துக்கள் தமிழ் மொழிக்குரிய எழுத்துக்களல்ல. தமிழ் எழுத்துக்களோடு கிரந்த எழுத்துக்களையும் சேர்க்க வேண்டும் என்பது மரபுப் பிழை. உலகில் உள்ள எந்த ஒரு மொழியிலும் மற்றொரு மொழியின் எழுத்தை ஏற்று எழுதுவது என்பது நடைபெறாத ஒன்று. கிரந்த எழுத்துக்களைத் தமிழ் எழுத்துக்களோடு அதன் நீட்சியாகச் சேர்த்துக் கொள்வது தமிழுக்குக் கேடு பயப்பதாகுமே யன்றி எவ்வகையிலும் ஆக்கம் தருவதாகாது. இது தமிழ்நாட்டு வரலாறு நமக்குத் தரும் படிப்பினை. ஆதலின் இக்கிரந்தம் தமிழுக்கும் தமிழனுக்கும் வேண்டாத ஒன்று. இக்கிரந்தம் தமிழ்நாட்டிற்குள் நுழைந்ததும், இப்பெயர் பெற்று வளர்ந்ததும் வாழ்ந்ததும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததும் பற்றிய வரலாற்றை அறிவது தமிழ்க்காப்புக்கு வழிவகுக்கும்.

Pin It