Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமையேற்று கடும் அடக்குமுறைகளுக்கு அஞ்சாது உறுதியாகப் போராடி வரும் சுப.உதயகுமார், தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். போராட்டத்தின் வழியாக தனது தலைமைத்துவத்தை வெளிக்கொண்டு வந்துள்ள இந்தப் போராளி, தன்னை ஒரு பகுத்தறிவாளராக நாத்திகராக ஒரு நிகழ்ச்சியில் அறிவித்தார். வன்முறை பக்கம் திரும்பிவிடாமல் அமைதி வழியில் போராட்டத்தின் தொடர்ச்சியில் கவனத்தைக் குவித்து வரும் இவருக்கு எதிராக அதிகார சக்திகளும் பார்ப்பன ஏடுகளும் ஆளும் காங்கிரசும் அவதூறு எனும் ‘அஸ்திரத்தைக்’ கைகளில் எடுத்துள்ளனர். நிலைகுலையாத இந்தப் போராளியின் வாழ்க்கைக் குறிப்புகளை அவரது வாய்மொழியிலேயே பதிவு செய்கிறது, இக்கட்டுரை.

தனிப்பட்ட வாழ்க்கையில் தனக்கு விவேகானந்தர் தான் ரோல் மாடல் என்கிற சுப.உதயகுமாரன் விவேகானந்தா கேந்திரத்தில் யோகா ஆசிரியர் பயிற்சியும் பெற்றவர். தனி நபர் மிரட்டல்கள, அரசின் மிரட்டல்கள் என்று இன்று எல்லாவற்றையும் கடந்து அணுசக்தியை எதிர்த்து அவர் நடத்திவரும் போராட்டம், இந்திய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது. “எனது சொந்த ஊர் நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு. பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் அங்கேதான்.

எனது அப்பா பரமார்த்தலிங்கம். அம்மா பொன்மணி. எனது தாத்தா பெயர் சுப்ரமணியன். அவரது பெயரையும் எனது பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டேன். அப்பா முழுநேர அரசியல்வாதி. பெரியாரையும் அண்ணாவையும் தீவிரமாகப் பின்பற்றி வருபவர். நாகர்கோவிலில் தி.மு.க. நகரச் செயலாளராகவும் இருந்துள்ளார். ஆரம்பத்தில் அப்பா சென்னை ஐ.சி.எப்.பில் வேலை பார்த்தார். உடல்நிலை சரியில்லாமல் போனதால் அங்கிருந்து நாகர்கோவில் வந்துவிட்டார். அம்மா சமூக நல அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். காந்திய  கொள்கையில் தீவிர பிடிப்பு உள்ளவர். திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுபட்டி காந்திய ஆசிரமத்தில் படித்தார். ஒரு பக்கம் காந்தியின் அகிம்சை; மற்றொரு புறம் பகுத்தறிவு கொள்கைன்னு இரண்டையும் பார்த்து நான் வளர்ந்தேன்.

எனக்கு இரண்டு சகோதரிகள். நாகர்கோவில் டி.வி.டி. மேல்நிலைப் பள்ளியில் தமிழ்வழியில் கல்வி பயின்றேன். பிறகு குமாரசுவாமி கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் மூன்றாண்டுகள். அப்பாவிற்கு நான் இன்ஜினியராக வேண்டும்ன்னு ஆசை. முதல் மதிப்பெண் எடுத்தும் எனக்கு அதில் பிடிப்பில்லை. இதனால் கேரளா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன்” என்று தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

“அப்பாவின் பகுத்தறிவு கொள்கையும் அம்மாவின் காந்திய சிந்தனையும் எனக்கு நிறைய விஷயங்களை சிறு வயதிலிருந்தே கற்றுக் கொடுத்தன. மேலும்  எனக்கு மார்க்சிஸ்ட் கருத்தியல் மீது அதிக தாக்கம் இருந்தது. அவர்கள் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடுவது ரொம்பப் பிடித்திருந்தது. மூலதனம் முழுவதும் படித்திருக்கிறேன். கல்லூரி வாழ்க்கையின்போது 1980களில் எறும்புகள் என்ற அமைப்பை நண்பர்கள் அனைவரும் இணைந்து ஆரம்பித்தோம். ஏனெனில் அப்போது நாகர்கோவிலில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி காகங்கள் என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வந்தார். அந்தக் கூட்டத்திற்கு நண்பர்களுடன் செல்வேன். ஆனால் அவர்கள் பேசியதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களின் இலக்கியம் உயர்வாக கூர்மையான பார்வையுடன் இருக்கும். இதனால் நாங்களே எறும்புகள் அமைப்பை தொடங்கி இலக்கியங்கள், சமூகப் பிரச்சனைகள் உட்பட விஷயங்களைப் பற்றி விவாதித்து வந்தோம்.

ஒருமுறை நாங்கள் நடத்திய கூட்டத்தில் ஈழப் பிரச்னை பற்றி விவாதிக்க சிறப்பு அழைப்பாளராக இலங்கையில் உள்ள சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியரை அழைத்திருந்தோம். அவர் பேசிவிட்டு அங்கே சென்றதும் அது குறித்து கட்டுரையாக சுதந்திரனில் எழுதியுள்ளார். இதனால் இலங்கை அரசு இந்திய அரசுக்கு இதனை தெரியப்படுத்தியதால் காவல்துறை மூலம் எங்களுக்குப் பிரச்னைகள் வந்தன. எல்லாவற்றையும் பேசிச் சமாளித்தோம். பிறகு நான் கேரளாவில் எம்.ஏ. படிக்கும் போது இங்கு ஜி.பி.ஐ.ஓ. என்ற அமைப்பை ஆரம்பித்தோம்.  அப்போது இந்துமகா கடலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கப்பற்படைகள் நிலை கொண்டிருந்தன. இதனால் அணு ஆயுதப் போர் வந்து விடுமோ என பயந்து இந்த அமைப்பை ஆரம்பித்து அவர்களை வெளியேற வேண்டும் என குரல் கொடுத்தோம். அணு ஆயுதப் போர், அணு ஆயுதக் குறைப்பு ஆகியவற்றில் அப்போது ஆர்வமாக இருந்தேன்” என தனது பழைய நினைவுகளைக் குறிப்பிடுகிறார்.

“பிறகு எனக்கு எத்தியோப்பியா நாட்டில் பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்தது. 1981 இல் இருந்து 87 வரை ஆங்கில ஆசிரியராக அங்கே பணி புரிந்தேன். அதுவரை எனக்குள் இருந்த கம்யூனிஸ்ட் தாக்கம் அங்கே உடைந்து போனது.  அங்குள்ள அரசு இறுக்கமாக மக்களை சுதந்தரமாகச் செயல்படவிடாதபடி இருந்தது. அங்கே நான் யுனெஸ்கோவின் கிளப் ஒன்றை ஆரம்பித்தேன். பிறகு யுனெஸ்கோ கூரியர் இதழில் சமாதானம் பற்றி விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதினேன். இதனால் எத்தியோபியா அரசுக்கு எனது நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. பிறகு 88இல் இந்தியா வந்துவிட்டேன். அப்போது நியூ இந்தியா மூவ்மெண்ட் என்ற இயக்கத்தை ஆரம்பித்தோம். அதன் வழியே கூடங்குளம் பிரச்னைகள் பற்றி அறிக்கைகள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றை கிராம மக்கள் மத்தியில் விநியோகம் செய்தோம். தொடர்ந்து கூடங்குளம் திட்டம் ரஷ்யாவின் வீழ்ச்சி, ராஜிவ் காந்தி படுகொலை போன்ற நிகழ்வுகளால் நின்று போனது. நான் எத்தியோப்பியாவில் இருக்கும்போது சர்வதேச சமாதான ஆய்வு மையம் இங்கிலாந்தில் மாநாடு நடத்தியது. அதில் எனது ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தேன். அங்கே ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த பெண்மணி எனக்கு அறிமுகமானார். பிறகு 89இல் அவர் மூலம் நோட்டர்டேம் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சமாதானம் பற்றிய படிப்புப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் 14 நாடுகளில் இருந்து வந்தவர்களில் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் நானும் ஒருவன். இதனால் உலக நாடுகளில் நடக்கும் அனைத்துப் பிரச்னைகள் சிக்கல்கள் பற்றியெல்லாம் விவாதம் செய்யும் வாய்ப்புகள் கிடைத்தன. புதிய அனுபவங்கள் அங்கே ஏற்பட்டன.

தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்தேன். எனது ஆய்வை அரசியல் அறிவியலில் செய்தேன். அதில் பா.ஜ.க., வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள் எப்படி இந்திய சரித்திரத்தை சிதைத்து அரசியல் நோக்கங்களை மாற்றி எழுதினார்கள் என்பது பற்றி ஆய்வு செய்தேன். அந்த ஆய்வு Presentig the past என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. 96 வரை இந்த ஆய்வை செய்து டாக்டர் பட்டம் பெற்றேன். பிறகு நியூஜெர்சி மாநிலத்தில் ஓர் ஆண்டு பணிபுரிந்தேன்.  பிறகு மினுசோட்டா பல்கலைக்கழகத்திலுள்ள சட்டக் கல்லூரியில் ஆய்வாளராகவும் தெற்காசிய துறையில் அரசியல் பாடம் எடுக்கும் ஆசிரியராகவும் பணி புரிந்தேன்.

1998 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் பா.ஜ.க. கவர்ன்மெண்ட் வாட்ச் அதாவது பா.ஜ.க. அரசு கண்காணித்தல் என்ற அமைப்பை  நிறுவி அதில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி இந்திய மற்றும் உலகளாவிய ஆய்வாளர்களுடன் விவாதித்தோம். இணையதளத்தில் கட்டுரைகள் எல்லாம் எழுதினோம். அப்போதுதான் இந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம் எனக்கு அறிமுகமாகி அவருடன் இணைந்து பல்வேறு விஷயங்களை விவாதித்தேன். எனது கட்டுரைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்தன. பிறகு 2001 ஆம் ஆண்டு இந்தியா வந்துவிட்டேன்” எனறவரிடம், இந்தியா வருவதற்கான காரணங்களைக் கேட்டோம்.

“தாய்நாடு எவ்வளவோ விஷயங்களைக் கொடுத்திருக்கிறது. நாம் அதை திருப்பித் தரவேண்டும் என நானும் எனது மனைவியும் நினைத்தோம். எனது மனைவி மீரா, எம்.ஏ., பி.எட். படித்துள்ளார். எனது அம்மாவின் தோழியின் மகள் எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.  காந்தியின் வாய்மையே கடவுள் என்பதற்கு ஏற்ப ஒரு மகனுக்கு சூர்யா என்றும் இன்னொருவனுக்கு சத்யா என்றும் பெயரிட்டுள்ளேன்” என்ற அவர் தன் திருமணமும் மறக்க முடியாத சம்பவமாக நடந்தது என்கிறார்.

“1992 டிசம்பர் 13 ஆம் தேதி எனக்கு திருமணம் நடந்தது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனால் நான் அமெரிக்காவில் இருந்து இங்கு வர நிறைய சிக்கல் ஏற்பட்டுவிட்டது. இங்குள்ள பிரச்னையால் பாங்காக்கில் விமானம் நிறுத்தப்பட்டது. பிறகு ஒரு வழியாக சென்னை வந்து திருமணத்திற்கு முன் தினம் இரவுதான் வந்து சேர்ந்தேன். எனது மனைவி மீராவும் பிறகு என்னோடு அமெரிக்காவில் இருக்கும்போது எம்.எஸ்.டபிள்யு. படித்தார். அவருக்கும் இந்தியா சென்று பள்ளி ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. இதனால் எனது இரண்டாவது மகன் பிறந்ததும் இந்தியா வந்துவிட்டோம். இங்கு சம்பாதித்த பணத்தைக் கொண்டு நம் பகுதியில் பள்ளி ஆரம்பிப்பது எங்கள் திட்டமாக இருந்தது” என்கிறார். ஆனால் ஊருக்கு 2001 இல் வந்ததும் தனது தந்தை அவரை தி.மு.க.கவில் உறுப்பினராகச் சேர்ந்து மக்கள் பணி ஆற்றுமாறு கூறினாராம். ஆனால் இவர் மறுத்துவிட்டார்.

“எனக்கு இங்குள்ள அரசியல் நிலைகள் பிடிக்கவில்லை. சரிபட்டு வராது என்று கூறிவிட்டேன். இதற்கிடையே 1998 ஆம் ஆண்டு இந்தியா வந்து போனபோது அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தை ஆரம்பித்தேன். அதன்பின் நான் வெளிநாடு சென்றதால் இயக்கத்தின் செயல்பாடு மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. நான் வந்த பிறகு மீண்டும் இயக்கத்தை வலுப்படுத்தினேன். அப்போதெல்லாம் கூடங்குளம் பகுதிக்குச் சென்றாலே மக்கள் எங்களை அடித்து விரட்டுவார்கள். அப்படி விரட்டும்போது ஓடிய அனுபவங்கள் நிறைய உள்ளன. ஏனெனில் அதிகாரிகள் இப்பகுதி பேச்சிப்பாறை அணை நீரால் வளம் பெறும், வேலைவாய்ப்பு என பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தனர். இதனால் எங்கள் பேச்சுகளை அவர்கள் யாரும் கேட்கவில்லை. கடலோரப் பகுதி மக்கள் மட்டும் கொஞ்சம் ஒத்துழைப்பவர்களாக இருந்தனர். நான் அணுஉலை குறித்தும் அணு ஆயுதம் குறித்தும் கட்டுரைகள் எழுதி வந்தேன். இதற்கிடையே சாக்கர் என்ற மெட்ரிக் பள்ளியை ஆரம்பித்தேன். இது கிறிஸ்டியன பள்ளி என இந்து அமைப்புகள் நினைத்துவிட்டனர். ஆனால் நான் சார்க் நாடுகளில் உள்ள குழந்தைகள் இங்கே வந்து படிக்க வேண்டும். இதன் மூலம் பலதரப்பட்ட கலாசாரப் புரிதல், நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைத்து இந்தப் பெயரை வைத்தேன். இருந்தும் இன்று நிறைய முதல் தலைமுறை பள்ளிச் செல்லும் குழந்தைகள் இந்தப் பள்ளியில் படிக்கின்றனர். மீனவக் குழந்தைகள், இந்து, கிறிஸ்துவ குழந்தைகள் என பலரும் படிக்கின்றனர். தரமுள்ள கல்வி தர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.”

தொடர்ந்து அவரிடம் அமெரிக்க உளவாளி என்றெல்லாம் உங்கள் மீது ஏன் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்? என்ற கேள்வியைக் கேட்டோம். “நான் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்ததினால் இந்தக் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு அமெரிக்க கொள்கையின்மீது திருப்தியில்லை. அதனை எதிர்த்து அங்கேயும் போராட்டம் நடத்தியிருக்கிறேன். ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது எங்கள் பல்கலைக்கழகத்திற்கு ஜார்ஜ் புஷ் வந்தார். அவரை எதிர்த்து அங்கே ஆர்ப்பாட்டம் நடத்தினேன். சாலை மறியல் போராட்டமும் செய்துள்ளேன். அமெரிக்க உளவுத் துறையின் பட்டியலில் என் பெயரும் கண்காணிப்பில் உள்ளது. அதனால் கூடங்குளம் போராட்டத்தை திசை திருப்பச் செய்யும் ஒரு முயற்சியாகவே என் மீது குற்றம் சுமத்துகிறார்கள்” என்றார்.

ஜெயபிரகாஷ் நாராயணன் அமெரிக்காவில் படித்தவர்தான். சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்று வந்த பிறகு தான் இந்தியாவில் தெரியலானார். அதற்காக அவர்கள் எல்லோரும் அமெரிக்காவின் உளவாளிகளா? என்று  ஆதங்கமாக கேள்வி எழுப்பியவர், “அணுஉலை எவ்வளவு ஆபத்து என்பது இங்குள்ள மக்களுக்கு நன்கு புரிந்துள்ளது. இப்போது அனைவரும் நல்ல ஒத்துழைப்பை எங்களுக்கு வழங்குகின்றனர். அதுபோல் உலகில் 90 சதவிகித பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ள அணுஉலைகள்கூட மக்களின் போராட்டத்தால் மூடப் பட்டுள்ளன. அதுபோன்ற நிலை கூடங்குளத்திலும் ஒரு நாள் வரும். அதுவரை எங்களது மென்முறை போராட்டம் தொடரும்” என்கிறார் அழுத்தமான குரலில் அமைதியாக.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Guest 2012-02-17 16:26
stop your propagation. he doesnot know about reactor.
Report to administrator
0 #2 கி.பிரபா 2012-02-20 02:37
காய்க்கின்றமரம் கல்லடிபடும்.இப் பழமொழி சுப.உதயகுமாருக் குப் பொருந்தும். தான் வாழ வேண்டுமென நினைத்தால் இயல்பே! ஊரே நலமாக இருக்கவேண்டும்; தன் நாடே வளமாக வாழவேண்டும் என்பதே உதயகுமாரின் ஆழ்ந்த எண்ணமாக உள்ளதென்பதை முழுமையாக உணர முடிகிறது. வரும் ஒரு காலம் அவரின் வெற்றிக்கு. ஓலையின் ஒலி கேட்டுப் பனங்காட்டு நரி அஞ்சாதல்லவா! அரசும் அரசுசார்ந்த நிலைக் கூப்பாடும் வெற்றுஒலியாகத்த ான் தெரிகிறது. ஆகவே உதயகுமாரின் மனம் அரசைக் கண்டு அஞ்சாது. வெற்றியின் வேகமே அவரின் அமைதிக் கொள்கையும்கோட்ப ாடும்.ஆத்திரமில ்லை அவரின் கட்டுரையிலும் உரையிலும். தம்மின் தம்மக்கள் அறிவுடைமை எனற வள்ளுவரின் வாக்கிற்குப் பொருத்தமாக்வே அவரின் பெற்றொருக்கும் இம்மண்ணிற்கும் வாழ்கிறார். அவருடைய் நோக்கம் வெற்றி பெறும் என்பது திண்ணம். கூடுவோம் அவரின் நல் எண்ணத்துடன்.போர ாடுவோம் நம் மக்களுக்கு உரிய தேவைகளைப் பெற்றுத் தரும்வரை.
Report to administrator
0 #3 Guest 2012-03-05 19:39
தோழர் உதயகுமாரின் போராட்ட குனம் பாராட்ட தக்கது. மனிதகுல நலனுக்காக தமிழ் தேச பட்ரோடு போராடும் புரட்சிகரமான போராட்டதிர்க்கு நம் ஆதரவை அளிப்போம்.
Report to administrator

Add comment


Security code
Refresh