கூட்டணி ஆட்சி’ என்ற முழக்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் முன் வைத்திருப்பது பற்றி?

விடுதலைச் சிறுத்தைகள்  கட்சித் தேர்தல் அரசியலில் வெற்றி, தோல்வி என்ற தடுமாற் றத்தைச் சந்தித்து வருகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்காக ஆயத்த வேலை களில் இருக்கிறது. மதுரை மாநாடு, விருது வழங்கும் விழா, கூட்டணி ஆட்சிக் கருத் தரங்கம் என அனைத்தும் எதிர்வரும் தேர்தலை நோக்கித் தன் பலத்தை வெளிப்படுத்தவும் தன் கருத்துகளை முன்வைப் பதற்குமானக் களமாக மாற்றி யிருக்கிறது.

thirumavalan 400.jipதிருமாவே சொல்கிறபடி, “யார் தங்களைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்வார்கள், எத்தனை சீட் தருவார்கள்” என்ற குழப்பம் அக்கட்சிக்கே இருக்கிறது. தேர்தலே அரசியல் என்ற சந்தர்ப்பவாத முட்டுச்சந்தில் மாட்டியுள்ளார்கள். கூட்டணி ஆட்சி முழக்கத்தை முதன்மைக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க வை நோக்கி முன் வைப்பதாகக் கூறுகிறார். அ.தி.மு.க. அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

தி.மு.க. தன்னுடையப் பலவீனத்தை வைத்து பேரம் பேசுவதாகவும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான செயல்பாடு எனவும் கருதுகிறது. இந்நிலையில் கருத்தரங்கத்தில்  பங்கேற்ற சிறிய கட்சிகள் கூட்டணி ஆட்சிக் கோரிக்கையை ஆதரித்தாலும் உறுதியாக நிற்கப் போவதில்லை. அவர் களுக்கும்கூட இது ஒரு தேர்தல் கால ஆயத்த நடவடிக்கைதான்.

இந்திய ஆட்சிமன்ற அமைப்பு முறை ’கூட்டணி ஆட்சி’ என்ற வடிவத்தைச் சந்தித்துப் பல ஆண்டுகாலமாகிறது. இது ஒன்றும் புதிதல்ல. திருமா புதிது போல ஏதோ ஒன்றை சொல்ல வருகின்றார். அது புதிதல்ல என்றும் 2016 க்கு பேரம் பேசும் உத்தி என்றும் அவருக்கும் மற்றவர்களுக்கும் புரியும். இதில் அபத்தம் என்னவென்றால், எளிய மக்களுக்கு சனநாயகம், கடைசி மனிதனுக்கும் அதிகாரம் என்ற உயரிய கொள்கை நோக்கத்திற் கானதுதான் கூட்டணி ஆட்சி முழக்கம், இதனால் திராவிடக் கட்சிகளிடம் இருந்துவரும் தாக்குதலுக்கு தன்னைத் தியாகியாக்கிக் கொள்ளத் தயார் என அவர் நமக்கு வேடிக்கை காட்டுவதுதான்.

அம்பேத்கரின் அரசியல் அதிகாரம், லெனினின் தேர்தல் செயலுத்தி, அரசியல் பௌத்தம் எனப் பல அரசியல் சொல்லாடல்களை நடப்புக் கால அரசியல் சந்தர்ப்ப வாதத்திற்கு குழப்பியும் திரித்தும் பயன்படுத்தியுள்ளார். இப்போது இது போன்ற ஒன்றே கூட்டணி ஆட்சி முழக்கம். எளிய மக்களை ஏமாற்றும் அரசியல் பொருளற்றக் காலி வெங்காய டப்பா இது.

தலித் இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டிருப்பது  நமக்கு உணர்த்துவது என்ன?

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த மூன்றாண்டு காலமாக சாதிப் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதோடு மட்டு மல்ல சாதி மறுப்பு திருமணங்களை அச்சுறுத்துகின்ற வகையில் படுகொலைகளைப் புரிவதும் “வெட்டுவோம், கொல்வோம்” என்று மேடையில் பேசுவதும் போஸ்டர் அடித்து ஒட்டுவதும் என சாதிவெறிக் கட்சிகளும் சங்கங்களும் வெளிப்படையாக செயல்படுவது அதிகரித்து இருக்கின்றன.

படுகொலை புரிகின்ற நபர்களுக்கு சட்ட உதவி செய்வதும் அவர்கள் தங்களைப் பெருமையாக அறிவித்துக் கொள்ளச் செய்வதும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் நான்கு மண்டலங்களில் உள்ள  பெரும் பான்மை சாதிக்காரர்கள் மட்டுமல்ல இடைச்சாதிகளில் பெரும்பாலானவற்றில் ஆதிக்கசாதி வெறியைத் தூண்டுவதற்கான சங்கங்கள் புதிது புதிதாக உருவாகிவருகின்றன. தருமபுரி இளவரசன்,  கடலூர் கோபாலகிருஷ்ணன், திண்டுக்கல் முத்துக்குமார், சேலம் கோகுல்ராஜ் என தலித் இளைஞர்களும் காதலித்ததற்காக தென்மாவட்டங்களில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவை ஊடங்கங்களில் வெளிவந்தவை. வெளிவராதவை நிறைய இருக்கின்றன.

நகரங்களுக்குப் படிப்பதற்கும் பணிபுரிவதற்கும் வருகின்ற இளம் தலைமுறையினர் மத்தியில் காதல் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள் அதிகரித்தும் அன்றாட விசயமாகவும் மாறி வருவதை, பண்பாட்டு ரீதியிலான உடைவைப் பிற்போக்கு ஆதிக்க சக்திகள் சகித்துக் கொள்ள முடியாமல் வன்முறையின் மூலம் அச்சுறுத்த முயல்கின்றன. இராமதாஸ், ஈஸ்வரன் போன்ற அரசியல் பிழைப்புவாதக் கும்பல் தனது சாதி வாக்கு வங்கிகளைப் பேரம் பேச, பலப்படுத்திக் கொள்ள இந்தப் பண்பாட்டு உடைவை அரசியல் பதற்றமாக மாற்றி மாநாடுகளில் வன்முறைப் பேச்சுகளைத் தொடர் நடவடிக்கையாக்கி இருக்கின்றன.

இதில் தாழ்த்தப்பட்ட சமூகமும் இளைஞர்களும் தாக்குதல் இலக்காக மாற்றப்படுகிறார்கள். அப்பாவிப் பெண்களும் கொடூரக் கொலைகளுக்கு இரையாக்கப் படுகிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டிய அரசும் ஆளும் கட்சிகளும் சாதியச் சார்போடும் அரசியல் பலாபலன் கணக்கோடும் இதை சாதாரணக் கொலைகளாக, சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகத் திசைத் திருப்ப முயல்கின்றன. ஒரு சில தலித் இயக்கங்களோ பொது சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை எதிரிகளாகக் கட்டமைக்கும் வன்முறை அரசியல் போக்குக்கு எதிராக இயக்கங்களைக் கட்டமைப்பதற்கு மாறாக அடையாளத் தேர்தல் அரசியலில் அம்மக்களின் அடையாளத்தைப் பேர அரசியலுக்குப் பயன்படுத்தி வருகின்றன. நாட்டில் நடைபெறும் பல மாற்றங்களின் ஊடாக அகமணமுறை உடைவும் பண்பாட்டு உடைவுகளும் சனநாயகத்தை நோக்கிப் பயணப்படுகின்றன. இதன் துணை விளைவுகளாக அவை அசாதாரணமானப் பண்பாட்டுப் பதற்றங்களை உருவாக்குகின்றன. பண்பாட்டுப் பதற்றங்களை ஆதிக்க சக்திகள் வன்முறைகளாக மாற்றுவதற்கும் அரசியல் அடையாளம் பெறுவதற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த வன்முறை சக்திகளை முறியடித்து சனநாயகத்திற்கான காவலனாக நிற்க வேண்டியது நமது காலத்தின் கட்டாயமாகும்.

இந்திய அரசியல் வரலாற்றில்  எமர்ஜென்சி காலகட்டத்தை நினைவு கூர்ந்து நாம் இன்று கருத்தில் கொள்ள வேண்டிய கருத்து என்ன?

எமர்ஜென்சியின் நாற்பதாவது ஆண்டு முடிவில் அக்கால நினைவுகள் அசைபோடப் படுகின்றன. அத்வானி அடுத்து வரவிருக்கும் ‘அவசர கால நிலைக்கு’ கட்டியம் கூறியிருக்கிறார். பிற கட்சித் தலைவர்களோ அறிவிக்கப்படாத அவசரகால நிலை இருப்பதாகக் கருத்து  கூறியுள்ளனர். இந்திராவின் எமர்ஜென்சிக்கான அரசியல் பொருளியல் காரணங்கள் பெரிதாக அலசப்படவில்லை. இந்திராவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை நின்றது.

ஆர்.எஸ்.எஸ். சரணடைந்தது. ஜெ.பி. இயக்கமும், மார்க்சிஸ்ட் கட்சியும் எதிர் முகாமில் நின்றது. நக்சல்பாரி இயக்கமும், தி.மு.க.வும்  தாக்குதலுக்குள்ளாயின. இப்படி பாரதூரமான அரசியல் முகாம்களுக்கிடையிலான மோதல் வெளிப்படையான நெருக்கடி கால ஆட்சி வடிவத்தை எடுத்தது. நெருக்கடி நிலை என்பது ஒரு ஆட்சி வடிவம்.

இன்றோ வலதுசாரி பாசிசக் கட்சி வளர்ச்சி முகமூடியை அணிந்து பெரும்பான்மை இடங்களைப் பெற்று மிருகப் பலத்தோடு அதிகாரத்தில் இருக்கிறது. அவர்களின் முகாமில் இருந்தே எச்சரிக்கைக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஒரு பரந்த இடது சனநாயக குரலை ஐக்கியப்படுத்த வேண்டிய தருணம் இது. ஒரு பின்னிரவு கால அதிர்ச்சித் தாக்குதல்களை நாம் சந்திக்கலாம். நாம் கவனமாகத் தயாரிப்புக்கு இறங்க வேண்டிய தருணம் இது.

Pin It