நூற்றுக்கு நூறு என்ற பிரமாண்ட விளம்பரத்தைப் பார்த்த கணத்தில் எனக்கு கிருஷ்ணாராவ் நினைவு சரேலென வந்தது. மறைந்து புதைந்து போன நினைவுகள். விளம்பரத்தினால் கிளர்ந்தெழுந்து முகிழ்த்து கிருஷ்ணாராவாக வடிவெடுத்து என் முன்னால் குதித்தது.

                கை நிறைய சிரங்குகள், விரல் நிறைய வீக்கம், அடிபட்ட எலியைப் போன்ற பார்வை, முக்காலடி தலை முடியில் ஏழங்குல சுருண்டு நிற்கும் பின்னல், இடுப்பில் ஒரு மஞ்சள் கலந்த வேட்டி அதே நிறத்தில் ஒரு சட்டை, கிருஷ்ணாராவ் என்று கூப்பிட்டால் அதிர்ச்சியுடன் வரும் ஏன் என்ற பதில் இது தான் கிருஷ்ணாராவ்.

                இவன் தான் சரித்திர பாடத்திலே நூற்றுக்கு நூறு மார்க் எடுக்கும் கிருஷ்ணாராவ். வகுப்பே ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகும்; பிரமிப்பில் உறைந்து போகும். நூற்றுக்கு நூறு வாங்குவது ஒரு பெரிய ஆச்சரியமா பெரிய பிரமிப்பா என்று நினைப்பவர்களுக்கு கிருஷ்ணாராவைப் பற்றி தெரியாது.

                சரித்திர பாடம்? ஆம் அப்பொழுது வரலாறு என்பது வழக்கில் வராத 1946 - 1947 ஆண்டுகள். இ.எஸ்.எல்.சி. என்ற சர்க்கார் இறுதி பரீட்சை எழுத தகுதி பெற்று ஜெயலெஷ்மி விலாஸ் ஹையர் எலிமெண்டரி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நான், கிருஷ்ணாராவ், லக்ஷ்மிபதி, நடராஜன், சுமதி, சாமிநாதன் நண்பர்கள். சரித்திர பாடத்தைத் தவிர வேறு பாடங்களில் கிருஷ்ணாராவ் தமிழ்-11, இங்கிலீஷ்-4, பூகோளம்-3, சயின்ஸ்-5 இந்த பாடங்களில் இப்படி மார்க் வாங்குபவன் சரித்திரத்தில் மட்டும் நூற்றுக்கு நூறு என்றால் வகுப்பும் வகுப்பாசிரியர்களும் ஆச்சரியப்படாமல் என்ன செய்வார்கள்?

                “கிருஷ்ணாராவ் எப்படிடா சரித்திரத்தில் நூற்றுக்கு நூறு வாங்கினே?”

                "இக் இக்... இக்'கென்ற அற்புத ஒலி, சிரிப்பு, அதுதான் பதில்.

                கிருஷ்ணாராவ் எப்படிடா எல்லா பாடத்திலேயும் பதினொன்று பன்னெண் டுன்னு வாங்கியிருக்கே. அதற்கும் அதே ஒலி சிரிப்பு தான்!

                அவனுக்கே பதில் தெரியாத போது நமக்கெங்கே பதில் சொல்லப் போகிறான்? இவனைத் தவிர இன்னொருவனும் இவனை மாதிரியே வார்ப்பு! அண்டு!

                “டேய் அண்டு அண்டுன்னா என்னாடா?”

                “அண்டுன்னா அண்டுதான். அண்டுன்னு பேருதான்”.

                அவன் வீட்டுப் பக்கம் காலை ஐந்து மணிக்குச் சென்றால் அண்டு படித்துக் கொண்டிருக்கும் சப்தம் கேட்கும். பள்ளி முடிந்த உடன் வீட்டுக்குச் சென்று புத்தகப் பையை திறந்து படிக்க உட்கார்ந்து விடுவான். மௌனமாக அல்ல பாதி தெருவுக்கு கேட்கும் விதமாக காலையும் மாலையும் அவன் படிக்கும் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.

                வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியரை பார்த்துக் கொண்டே இருப்பான். நன்கு படிக்கும் பையன்களையும் அதே விதமாக பார்த்துக் கொண்டே இருப்பான்.

                தேர்வு முடிவில் திருத்தப்பட்ட பேப்பர்களை புரட்டிக் கொண்டே இருப்பான். அந்த பேப்பர்களை திருத்திய ஆசிரியர்கள் வட்டம் போட கூசி பத்துக்குள் ஒரு எண்ணை பேப்பரில் போட்டு வைப்பார்கள். “என்னடா அண்டு? இப்படி மார்க் வாங்கி இருக்கே, படிக்கவே மாட்டியா?” “இல்லடா ராகவா, தினமும் காலையிலும் சாயங்காலமும் படித்துகிட்டு தாண்டா இருக்கேன். கிளாசிலேயும் கவனமா பாடம் நடத்துறதை கேட்டுக் கிட்டுதான் இருக்கேன்... ஆனால்...” “கேள்விக்கு பதில் தெரிய மாட்டேங்குதா?” “கேள்வியே புரியலை. அப்புறம் பதில் எங்கேருந்து நான் எழுதுறது”. “வீட்டிலே படிக்க மாட்டேங்குறேனு திட்றாங்களா?” “வீட்லே இருபத்து நாலு மணிநேரமும் படி.. படின்னு ஓதிகிட்டே இருப்பாங்க. திட்றதா? அப்பா அடிச்சி நொறுக்குவார் இப்பல்லாம் படிக்கறதை விட அடி வாங்கறது ஈசியா இருக்குடா”. “உன் தம்பி நல்லா படிக்கறானே?” “நீ கூடத்தான் நல்லா படிக்கறே. என்னைத் தவிர எல்லாரும் தான் நல்லா படிக்கிறா. தம்பி கெட்டிக்காரன்”.

                தம்பி நரஹரி கெட்டிக்காரன்தான். கலகலவென பேச்சும் சுறுசுறுப்பும், படிப்பும்... அண்ணன் பரபிரம்மம்! தம்பி தனஞ்ஜெயன்!

                “கிருஷ்ணாராவ் உங்க வீட்லே உன்னை படிக்கலேன்னு கண்டிக்கிறது இல்லையா? என்ன சொல்வாங்க?”

                “பள்ளிக் கூடத்துக்கு போகாதேம் பாங்க படிக்க வேண்டாம்பாங்க. பிறகு கோயிலுக்கு போயி... பூஜை பண்ண கத்துக்கம்பாங்க...”

                “என்னது பூஜை பண்ண வா...?”

                “ஆமா”

                “யாரது அப்பாவா?”

                “அப்பா இல்லே, அண்ணா. அப்பா இறந்துட்டாரு...”

                அப்பா இறந்துட்டார் என்பதற்காக கிருஷ்ணாராவ் வருத்தப்பட்டதாகத் தெரிய வில்லை.

                ஒரு நாள் மாணவர்களில் சிலர் கிருஷ்ணாராவையும் அண்டுவையும் கிண்டலடித்து பரிகசித்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணாராவின் சடையைப் பிடித்து இழுத்தும் சிரங்குன்னி சிரங்குன்னி என்று சப்தமிட்ட படியும் கெக்கலித்துக் கொண்டிருந்தார்கள். அண்டு ஆடாமல் அசையாமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். கண்களில் நீர்த் திரண்டு கொண்டிருந்தது - கிருஷ்ணாராவ் உம்மய்யோ ஆ என்று வேதனை ஒலி யெழுப்பிக் கொண்டிருந்தான். நான் அவர்களை விரட்டிக் கொண்டு நின்றேன். இதைப் பார்த்துக் கொண்டே வந்தார் எங்கள் வகுப்பு ஆசிரியர். நாங்கள் அவரை கே.கே. என்று குறிப்பிடுவோம். அவர் பெயர் கே.கே. நரசிம்ஹன். தமிழ் புலவர். எங்களுக்குத் தமிழாசிரியர். கவிஞர் எஸ்.டி.எஸ். யோகியாரின் மாணவர். தமிழ் மீதும் மாணாக்கர்கள் மீதும் பற்றுக் கொண்டவர். கருணையும் இளகிய மனதும் மிக்கவர். ஒரு கண் மாறு கண்ணாக இருக்கும். நீண்ட ஜிப்பா அணிந்திருப்பார். கோபம் அறியாதவர். எல்லோரும் அவரை விரும்புவார்கள். மரியாதை காட்டுவார்கள்.

                அவரைப் பார்த்ததும் எல்லோரும் ஓடி விட்டார்கள்.

                சகலகலாவல்லியே என்ற வணக்கப் பாடல் முடிந்து, வகுப்புகள் ஆரம்பமாயின. வகுப்பில் பலவிதமான ஏற்ற இறக்கங் களோடு கலவையாக குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. ஆசிரியர் நுழைந்தார். எல்லோரும் வணக்கம் சொன்னார்கள். ஆசிரியர் புன்முறுவலோடு எல்லோரையும் அமர சொல்லிவிட்டு, வருகைப் பதிவேடு எடுத்து பெயர்களை ஆரம்பித்து முடித்தார்.

                “பாடம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலே, நான் ஒரு புத்தகத்திலிருந்து சில பாராக்கள் வாசிக்கிறேன் கேளுங்கள்” என்றார். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். பிறகு கவனிக்க ஆரம்பித்தோம். லஷ்மி ஏதோ ஒரு வண்ணப் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான். என் கவனம் முழுவதும் அந்த புத்தகத்தில் தான் இருந்தது. நடராசன் டெஸ்க்கில் நெருப்பு குச்சிகளை வைத்து டிசைன் செய்து கொண்டிருந்தான். அண்டு ஆசிரியரை பார்த்துக் கொண்டிருந்தான். கிருஷ்ணாராவ் கையிலுள்ள சிரங்குகளை கையை அப்படியும் இப்படியும் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தான். பிச்சை வகுப்பிலிருந்து தெரியும் வெளியிலுள்ள கிணற்றடியையும் அங்கு பூத்திருந்த செம்பருத்திப் பூவையும் நோட்டமிட்டான். ஆசிரியரின் குரல் ஒலித்தது.

                “மனிதர்களிலே ஏற்றத் தாழ்வு கிடையாது. விஞ்ஞானியாயிருப்பவன் வேறு தொழில்களில் சராசரிக்கும் குறைவாகவே இருப்பான். முதல் தர விவசாயம் செய்பவன் அறிவியலில் அடிமட்டத்தில் இருப்பான். இலக்கியவாதி நடைமுறை பழக்க வழக்கங்கள் அறியாதவனாக இருப்பான். உடல் உழைத்துத் தொழில் செய்பவன் இலக்கியம் என்றால் முகம் சுளிப்பான். மிகச் சிறந்த அரசியல்வாதியாக நாட்டை நடத்திச் செல்லும் மாபெரும் தலைவனாக இருப்பவன் தன் குடும்பத்தை வழி நடத்திச் செல்வதில் தட்டுக்கெட்டானாக இருப்பான். மனிதர் களிலே ஏற்றத் தாழ்வுகள் இல்லை. பெரிய அறிவாளிகள் என்று போற்றவும் கூடாது. சராசரிக்கு கீழ் உள்ளவர்கள் என்று எள்ளவும் கூடாது.

                சராசரிக்கும் கீழ் உள்ளவர்களுக்கு தன்னுடைய மூளையை பயன்படுத்த தெரியவில்லை என்பது தான் பொருள். அவர்களுக்கு எதையும் புரிந்து கொள்ள முடியாது. அதனால் எதுவும் அவர்களுக்கு சந்தேகத்தையும் அச்சத்தையும் தான் தரும். அதை உள்வாங்கிக் கொள்ள திணறுவார்கள். அந்த கட்டத்தில் தான் பிறர் அவர்களை கேலியும் கிண்டலும் செய்தும், சிலர் அவர்களை உடல் ரீதியாக துன்புறுத்தவும் செய்து மகிழ்வார்கள். குறை அறிவு இருந்தாலும் அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன.

                உங்கள் கேலி அவர்களை மேலும் மேலும் கலக்கத்தில் ஆழ்த்த பெரும் வெறுப்பில் ஆழ்வார்கள். குமுறி குமுறி உள்ளுக்குள்ளேயே அழுவார்கள். வேண்டாம் அவர்களை எள்ளி நகையாடா தீர்கள். வேதனைப்படுத்தி சிரிக்காதீர்கள். துன்புறுத்தி துயரமடையச் செய்யாதீர்கள். மாறாக அவர்களை ஊக்கப்படுத்துங்கள், உற்சாகப்படுத்துங்கள். உங்களில் ஒருவனாக அரவணையுங்கள்” படித்து முடித்தார் ஆசிரியர். வகுப்பு மௌனத்தில் ஆழ்ந் திருந்தது.

                மணியடித்தது. அந்த பீரியட் முடிந்தது.

                அடுத்த வாரம் அரையாண்டு தேர்வு எல்லோர் உள்ளிலும் சாம்பல் மூடிய பயக்கங்கு. ஆனாலும் ஒருவரும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. லஷ்மி பதியிடம் “பதி, அடுத்த வாரம் பரீட்சை” என்றேன்.

                “அதற்கென்ன?” என்றான்.

                “பாடமெல்லாம் படிக்க வேண்டாமா?”

                “அது கெடக்கட்டும் பாடம், கையெழுத்துப் பத்திரிக்கை ஆரம்பிக் கணும்னு சொன்னது என்னாச்சு?”

                “பரீட்சை முடியட்டும்டா”.

                “நானும், மணியும் படமெல்லாம் போட்டுடறோம். நீ கதையும் கவிதையும் எழுது. குரங்கு ராஜகோபாலனை அழகா எழுதச் சொல்லிவிடுவோம்”. நான் பெரு மூச்சுவிட்டேன். “பரீட்சை முடியட் டும்டா...”

                பரீட்சையும் முடிந்து விடுமுறை விட்டார்கள். நான் நூலகத்தை தஞ்சமடைந்தேன். பீரோ பீரோவாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் என்னை உள் வாங்கிக் கொண்டது.

                லஷ்மிபதி படங்களாக வரைந்து தள்ளிக் கொண்டிருந்தான்.

                மகாத்மா காந்தி வாசக சாலை நடத்திக் கொண்டிருந்த இராஜகோபால் சாரிடம் ஆனந்த விகடன் தீபாவளி மலர் இருப்பதை தெரிந்து அவரிடம் கேட்கச் சென்றேன். போகும் வழியில் அண்டு வீடு. வாசலில் நரஹரி பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தான். அண்டுவின் பாடம் படிக்கும் குரல் வீட்டினுள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்தது. சார் வீட்டிலில்லை. அப்படியே சுற்றிக் கொண்டு போகும்போது கிருஷ்ணாராவ், வீட்டு திண்ணையில் இரண்டு கைகளையும் உயர தூக்கிக் கொண்டு ஏதோ வெற்றியாளன் போல் உட்கார்ந்திருந்தான். சிரங்கு அதிகமாகி விட்டது போல் இருக்கிறது.

                நூலகம், ஊர் சுற்றல், தூக்கம் என விடுமுறையும் கழிந்தது.

                சகலகலாவல்லியேயுடன் பள்ளியும் திறக்கப்பட்டது. முதல் நாள் நலம் விசாரிப்புகளும், கிண்டலும் கேலியும் விளையாட்டுகளுமாக கழிந்தது. மறுநாள் காலை முதல் பீரியடில் கே.கே.என். சார் எல்லோரிடமும் திருத்தப்பட்ட சகல பேப்பர்களையும் பெயரை அழைத்து வழங்கினார். சிலருக்கு கை லேசாக நடுங்கியது. லக்ஷ்மி ஆவலுடன் பேப்பரை வாங்கி புரட்டத் தொடங்கினான். மணி பேப்பரை வாங்கி ஒன்றின் மேல் ஒன்றாக சரியாக அடுக்கிக் கொண்டிருந்தான். பிச்சை சரசரவென ஒவ்வொரு பாட மார்க்கையும் பார்த்தான். சிலர் முகத்தை சுழித்தார்கள். சிலர் சிரித்தார்கள். கிருஷ்ணாராவ் புரட்டி புரட்டி பார்த்துக் கொண்டிருந்தான். அண்டு பேப்பர்களை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் வாங்கி மடிமேல் வைத்துக் கொண்டு ஆசிரியரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

                நான் பாடங்களிலெல்லாம் சராசரி மார்க்குகளுக்கு மேல் வாங்கி இருந்தேன். ஆங்கிலத்தில் மட்டும் முப்பத்தைந்து. இடைவேளை விட்டதும் அவசர அவசரமாக லக்ஷ்மிபதியிடம் சென்று “பதி, மார்க்கெல்லாம் எப்படி” என்று கேட்டேன். அவன் என்னைப் பார்த்து சிரித்துவிட்டு “சில மார்க்குகள் சிகப்பு கலரிலேயும் சில ஊதா கலரிலேயும் ஒன்றே ஒன்று பச்சை கலரிலேயும் இருக்கு” என்றான். நான் கடுப்புடன் “எவ்வளவு மார்க் வாங்கி இருக்கேன்னு கேட்டா...?” என்றேன்.

                “அது கே.கே.என். சாருக்குத் தான் தெரியும். அவர் தான் அதை பத்தி மகிழ்ச்சியடையவோ துக்கப்படவோ போறார்... என்னை வந்து கேக்குறே... உருப்படியா அவ்வளவு பேப்பரிலேயும் மூனே மூனு பக்கந்தான் படம் போடுறாப்லே இருக்கு... வயித்தெரிச்சல் மார்க் கேட்க வந்துட்டான்”.

                “நீ உருப்பட மாட்டே...”

                “யார் உருப்படுறாங்கன்னு பார்க் கலாம்”.

                நான் நடராசன் என்ற மணியிடம் சென்றேன்.

                “ராகவா கடேசி நேரத்திலே படிக்க முடியாம போச்சுடா... சுமதி எல்லாத் திலேயும் பாஸ் மார்க்” என்றான்.

                கிருஷ்ணாராவ் பேப்பரை வாங்கிப் பார்த்தேன். வழக்கப்படிதான். சரித்திரத்தில் நூறு வாங்கவில்லை. தொன்னூறு வாங்கி இருந்தான்.

                அச்சமும், அசடும் கலந்த பரிதாபமான பார்வை பார்த்தான். நான் ஒன்றும் கேட்க வில்லை. அண்டிடம் செல்லவில்லை.

                மாலை மணி ஒலித்தது. திறந்து விடப்பட்ட புதுப்புனல் போல் வாசலை நோக்கி விரைந்தார்கள் மாணவர்கள். நானும் என் புத்தகப் பையில் புத்தகங்களை அடுக்கிக் கொண்டு வாசலுக்குச் சென்றேன். இடையில் ஒரு கரம் என் தோளைத் தொட்டது. திரும்பினேன். நடராசன்! என்னடா? என்றேன்.

                “நான் நாலு பேரை வைத்து தாண்டி பிளையிங் டைவ் அடிப்பேன்டா...” என்றான்.

                “நாலு பேரை வைத்தா? போடா நான் ஆறு பேரை வைத்து தாண்டி பிளையிங் டைவ் அடிப்பேன்”.

                அவன் கண்கள் விரிய “நெஜம்மாவா” என்றான். பிறகு “போடா டூப் அடிக்கிற” என்றான்.

                “பொய்யில்லே உண்மை தான்டா”.

                “எங்கே வா, கிரவுண்டுக்குப் போவோம்”.

                “போடா நான் வீட்டுக்குப் போகணும்”.

                “பயமாடா”.

                “சரிவா, கிரவுண்டுக்குப் போ கலாம்”.

                பள்ளியின் பின் பக்கம் சென்றோம் பரந்து கிடந்தது மைதானம். ஆனால் பொதி மணல், அதனால் தான் பறந்து தாண்டி கரணம் அடிக்க முடிந்தது. மைதான வலது பக்கம் பத்து இருபது பேர் கபடி ஆட ஆரம்பம் செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் வலது பக்கம் சென்றோம். எங்களுடன் ஐந்தாறு பேர் வந்தார்கள். ஆடி, ஓடி, தாண்டி, குதித்து, புரண்டு உடம்பெல்லாம் மணல். தலை யெல்லாம் மணல். ஒரு வழியாக நான் சொன்ன ஆறு பேரை வைத்து தாண்டி, கைதட்டல் பெற்றேன்.

                மாலை மறைந்து இருள் பூக்கத் தொடங்கியது. எல்லோரும் அவசர அவசரமாக மணலை தட்டிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினோம். வீட்டிற்குச் சென்ற உடன் திட்டு வாங்க வேண்டும். பரீட்சை பேப்பர்கள் பையில் பத்திரமாக இருந்தன. என்னிடம் வீட்டில் யாரும் கேட்கப் போவதில்லை. பரீட்சை மார்க்கெல்லாம் எப்படி வாங்கி இருக்கே என்று விசாரிக்கப் போவதில்லை.

                பள்ளியின் முகப்பு வாசலை தாண்டி தெருவில் இறங்கினேன். கைகாலெல்லாம் வலித்தது. நடக்கத் தொடங்கும் பொழுது தெரு மூலையில் புழுதி பட தெருவில் உட்கார்ந்தபடியே யாரோ மதிலில் சாய்ந்து கொண்டிருந்தார்கள். அட இந்நேரத்தில் யார் உட்கார்ந்திருக்கிறது என்று அருகில் போனேன். அண்டு! நான் திடுக்கிட்டு "டேய் அண்டு' என்று கத்தியே விட்டேன். அவன் மெல்ல தலை நிமிர்ந்து, என்னைப் பார்த்தான். உலகத்துச் சோகமெல்லாம் அவன் முகத்தில் தேங்கி இருந்தது.

                “என்னடா நீ அண்டு? வீட்டுக்குப் போகலியா” என்று குரல் தழுதழுக்க கேட்டேன்.

                அவன் தலையை ஆட்டினான்.

                “டேய் என்னடா உடம்பு சரி யில்லையா”.

                “போகணும் ராகவா”.

                “பின்ன ஏன் உட்கார்ந்திருக்கே அதுவும்... இப்படி...?”

                “போக... பயமா... இருக்குடா...” குரல் தேம்பித் தேம்பி வந்தது.

                “ஏன் பரீட்சை என்னாச்சுன்னு கேட்டு எல்லாரும் திட்டுவாங்களா?”

                “வூட்லே இருக்கும் எல்லாம் திட்டும். ஆனா நரஹரி திட்டமாட்டான். திட்டுறது பெரிசில்லே ராகவா. அடி... அடிதான்...”

                “என்ன அடிப்பாங்களா...”

                “அப்பா தான் அடிப்பார்... தாங்காது...”

                சற்று நேரம் மௌனமாக இருந்தேன். பிறகு கேட்டேன். “நான் உன் கூட வீட்டுக்கு வரவா?”

                “அய்யய்யோ... சரியாப் போச்சு. என் கூட நீ வந்தால் வேற வினையே வேண்டாம். உன்கூட சேர்ந்து தான் நான் கெட்டுப் போயிட்டேன்னு, கூட ரெண்டு கிடைக்கும்”.

                “சரி அடிதானே கொஞ்சம் தாங்கிக்க, பிறகு என்ன பண்றது. அப்புறம் எல்லாம் சரியாப் போயிடும்”.

                “ராகவா நம்ப மாட்டே அடின்னா தாங்கவே முடியாது. மயக்கம் வந்துடும் விடமாட்டார். மூஞ்சிலே குத்துவார், நெஞ்சிலே குத்துவார்... தலையை பிடித்து சுவத்திலே மோதுவார்... ராகவா... ராகவா...” அவன் உடம்பே நடுங்கியது.

                நான் நிலைகுலைந்து போனேன். நெஞ்சம் பதறியது. இப்படியுமா? பரிதாபமான அவனைப் பார்த்து கண்ணீர் வந்தது.

                தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்தன. அவன் அப்படியே சாய்ந்து கொண்டிருந்தான். “சரிடா வீட்டுக்குப் போய் தானே ஆகணும் இப்படியே இருந்தா வரலேன்னு வேறே பிரச்சினையாகிடும், எழுந்து மெதுவா போயிடு...” “நான் போறேன்... ராகவா... நீ வீட்டுக்குப் போ... எப்படியும் போகணும்... போய்க்கிறேன்”.

                தூரத்தில் அண்டு தம்பி நரஹரி இவனை தேடிக் கொண்டு வந்தான்.

                “அவனோடு போறேன்... நீ போ வீட்டுக்கு”. திரும்பி... திரும்பி... பார்த்துக் கொண்டே நான் சென்றேன். வீட்டுக்குப் போனால் ஒரு ஆச்சரியம், அப்பா வீட்டிலிருந்தார். அதைவிட ஆச்சரியம் மார்க்கெல்லாம் "நல்லா வாங்கி இருக்கியா?'ன்னு கேட்டார்.

                நான் மௌனமாக இருந்தேன்.

                “நல்லா படிச்சிக்கிட்டேன்னா உனக்குத்தான் நல்லது. இல்லேன்னா என்னாட்டம் லோலு பட வேண்டியது தான்”.

                சாப்பிட்டுவிட்டு பாயை விரித்து படுத்துப் புரண்டேன். அப்பா பேசியது காதில் கேட்டுக் கொண்டே இருந்தது.

                நல்லா படிச்சிக்கிட்டா...? நல்லா படிச்சி ஜெயலெக்ஷ்மி விலாஸ் படிப்பை முடித்துக் கொண்டு ஹைஸ்கூலுக்கு போனால் சம்பளம் கட்டுவாரா?

                பதினெட்டு மணி நேரம் பயங்கர உடலுழைப்பு செய்து எட்டு பிள்ளைகள் ஒரு கிழவியும் உள்ள குடும்பத்திற்கு சாப்பாட்டிற்கே போதவில்லை. நானும் தம்பியும் படிக்க சம்பளம் கட்டுவதற்கு எங்கே போவது? நான் தூங்கிப் போனேன்.

                காலையில் எழுந்து தெப்ப குளத்திற்குச் சென்று தலையிலும் உடம்பிலும் குடி கொண்டிருந்த நேற்றைய மணலை அதில் கரைத்துவிட்டு வந்து துவைத்து காய்ந்த சட்டையும் டிராயரையும் அணிந்து கொண்டு புத்தகப் பையுடன் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றேன். நேற்றைய உடல் வலியும் அசதியும் மாயமாய் மறைந்து விட்டிருந்தன. காலை நேரம் மிகவும் அமைதியாகவும் ஒளியுடனும் இருந்தது. பள்ளியின் கிணற்றடியில் நந்தியாவட்டையும், செவ்வரளியும், செம்பருத்தி மலரும் மலர்ந்து சிரித்தன.

                மாணவர்கள் எல்லோரும் மிகவும் சுறுசுறுப்புடனும், சோபையாகவும், சுத்த மாகவும் இருந்தனர்.

                சகலகலாவல்லியின் ஆசியுடன் வகுப்பறையில் போய் அமர்ந்தோம்.

                கே.கே.என். சாரும் பொடி கரைகளில்லா ஜிப்பாவுடன் வந்து அமர்ந்து சுற்றிலும் ஒரு பார்வையிட்டார். கிருஷ்ணாராவ் தான் துக்கம் நிரம்பிய முகத்துடன் சிரங்கில் வந்தமரும் ஈக்களை விரட்டிக் கொண்டிருந்தான்.

                அட்டென்டென்ஸ் எடுக்க ஆரம்பித்து "அண்ணாமலை' என்றார் "பிரசன்ட் சார்' என்ற குரல் கேட்டது. வகுப்பில் சிறுசிறு ஒலியும் சிரிப்பும் கேட்டுக் கொண்டிருந்தது.

                ஆறுமுகம் - பிரசென்ட் சார்.

                நாராயண்ராவ் - பிரசென்ட் சார்.

                லக்ஷ்மிபதி - பிரசென்ட் சார்.

                சுமதி - பிரசென்ட் சார்.

                அண்டு -

                அண்டு... என்றார் உரக்க. பதிலில்லை...

                கிருஷ்ணாராவ் மெல்ல எழுந்தான்.

                “அண்டு செத்துப் போயிட்டான் சார்...”

                வகுப்பே குலுங்கியது.

                கே.கே.என். சார் கோபத்துடன்,

                “கிருஷ்ணாராவ்?” என்றார்.

                “ஆமா... சார் அண்டு செத்துப் போயிட்டான்னு எங்க அண்ணா கிட்டே அவங்க வீட்டிலிருந்து வந்து சொன்னாங்க... சார்...”

                “நரஹரி... அவனும் வரல்லே சார்”. கதிர்வேல் சொன்னான். என் அடி வயிற்றில் தீப்பற்றியது போல் இருந்தது. என்னால் நிற்கவோ உட்காரவோ முடிய வில்லை.

                கே.கே.என். சாரின் கைகள் நடுங்கின. அப்படியே நாற்காலியின் பின்னால் சாய்ந்தார்.

                வகுப்பே மௌனமாக இருந்தது.

                கிருஷ்ணாராவ் மட்டும், "மார்க் குறைச்சல்னு செத்துப் போயிட்டான், மார்க் குறைச்சல்னு செத்துப் போயிட்டான்', என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்.

                சார் அட்டென்டென்ஸை மூடி வைத்தார். நடுங்கும் கால்களுடன் எழுந்து மெல்ல வகுப்பை விட்டு வெளியே தள்ளாடியபடியே சென்றார். வகுப்பில் எல்லோரும் என்னடா இது? என்னடா இது என்னடா இது என்று கூறிக் கொண்டிருந் தார்களே தவிர எதுவும் பேசவில்லை.

                நான் முகத்தை மூடிக் கொண்டு டெஸ்க்கில் குப்புற கவிழ்ந்திருந்தேன்.

                ஆசிரியர் வரவே இல்லை.

                கணக்காசிரியர் வெகுநேரம் கழித்து வந்தார். “சார், சார் வரலியா சார்” என்று கேட்டேன்.

                “அவருக்கு உடல் சரியில்லை. நாளைக்குத்தான் வருவார்” என்று சொல்லிக் கொண்டே நாற்காலியில் அமர்ந்தார். அவரும் கடைசி வரை எதுவும் பேசவே இல்லை.

                மறுநாள் பிரேயரில் அண்டுவுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினோம். வகுப்பே தளர்ந்து போய் கிடந்தது. கலகலப்பு இல்லை. பேச்சொலி இல்லை. உற்சாகமோ விறுவிறுப்போ இல்லை. புத்தகங்கள் எடுக்கப்படாமல் பைக்குள்ளேயே இருந்தன.

Pin It