அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தலித் இலக்கியம் அடையாளப்படுத்தப்பட்டது. பெருமளவில் விவாதிக்கப்பட்டது. நிறைய தலித் எழுத்தாளர்கள் உருவானார்கள். தற்பொழுது 22 ஆண்டுகளுக்குப்பிறகு தலித் இலக்கியம் தேக்க நிலையில் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. இது குறித்து விவாதித்திட "தலித் முரசு' சார்பில் 3.8.2013 அன்று சென்னையில் ஓர் உரையாடல் நிகழ்த்தப்பட்டது. இதில் அழகிய பெரியவன், மதிவண்ணன், இளம்பரிதி, வ.கீதா, ப.லிங்கம், புனித பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். இவ்வுரையாடலை யாழன் ஆதி ஒருங்கிணைத்து, நெறிப்படுத்தினார். இது ஒரு தொடக்கம். தலித் இலக்கியம் குறித்த இதுபோன்ற விவாத அரங்குகள் தொடர்ந்து நடைபெறும். இவ்வுரையாடல் இங்கு தொகுத்து அளிக்கப்படுகிறது.
dalitmurasu meeting 620
 
வ.கீதா: வரலாற்றை நாம் வேறு மாதிரி யோசிக்க வேண்டி இருக்கிறது. அம்பேத்கர் நூற்றாண்டு தலித் இலக்கியத்திற்கு பெரும் உந்து சக்தியாக இருந்தது. ஆனால் நவீன உரைநடை தமிழில் வந்தபோதே தலித்துகளும் எழுதத் தொடங்கி விட்டார்கள். அதை இன்றைக்கு நாம் இலக்கியமாகப் பார்க்க முடியாவிட்டாலும் தொடர்ந்து அவை எழுதப்பட்டுதான் வருகின்றன. வீ.அரசு அவர்கள் தொகுத்திருக்கிற "தத்துவவிவேசினி' என்னும் தொகுப்பில் – அது அந்தக் காலத்தில் நாத்திகர்களால் நடத்தப்பட்ட இதழ் – தலித்துகள் என்று அறிய முடியாத வண்ணம் பல பெயர்களில் தலித்துகள் எழுதி வந்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. அக்காலங்களில் எழுதிய தலித்துகள் பல பண்பாட்டு விஷயங்களை உள்வாங்கிக் கொண்டுதான் எழுதியிருக்கிறார்கள். பேசப்படாதவற்றைப் பேசி இருக்கிறார்கள். 1990க்குப் பின் என்று பார்ப்பது ஏதோ தலித்துகள் அரசியல் எழுச்சிக்குப் பிறகுதான் எழுத வந்தார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். அயோத்திதாசரின் "ஆதிவேதம்' மிகுந்த புனைவுத் தன்மையுடன் எழுதப்பட்டது. வரலாற்றில் இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்பதற்கு அதில் இடம் இருந்தாலும் அது புத்த சரிதத்தைப் பின்பற்றி பாலி மொழியில் எப்படி இருந்ததோ அதைப் போலவே எழுதப்பட்டது. இலக்கிய மொழிக்கு ஒரு கனம் உண்டு என்று அவர் நம்பினார். அம்பேத்கரின் "புத்தமும் அவர் தம்மமும்' கூட புனைவுத்தன்மை பெற்றதுதான். அரசியல் ரீதியாக நாம் யோசித்தால் தன்னுணர்வோடு எழுத வந்தது 1990க்குப் பிறகு என்று கூறலாம். பெண்ணிலக்கியத்தில் கூட இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன.
 
அழகிய பெரியவன்: எனக்கும்கூட இதுமாதிரியான கருத்து இருக்கிறது. மராத்தியிலிருந்துதான் நமக்கு தலித் இலக்கியத்திற்கான உந்துதல் வந்தது என்றும் கருப்பர் இலக்கியத்திலிருந்துதான் வந்தது என்றும் எல்லோரும் கிளிப்பிள்ளை சொல்வதைப் போலச் சொல்கிறார்கள். ஆனால் உலக அளவில் சிறந்த மொழியாக விளங்குகின்ற தமிழ் மொழியில் நமக்கேயான வளமான இலக்கியப் பாரம்பரியம் உண்டு. சங்க காலத்திலிருந்தே தொடங்கிகூட நாம் சொல்லலாம். அதில் எத்தனை பேர் தலித்துகள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் ஆங்காங்கே சில குரல்கள் பதிவாகி இருப்பதை நாம் உணரலாம். ஆனால் அவை எதிர்க்குரல்கள் என்று நாம் சொல்ல முடியாது. அவர்களின் வாழ்க்கை குறித்த பதிவுகளாக அவற்றைச் சொல்லலாம். சங்கப் பாடல்களில் சில 15, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உத்திரகோச மங்கையின் பாடல்கள், அதற்குப் பிறகு சித்தர் பாடல்கள். அயோத்திதாசப்பண்டிதரோடு ரெட்டமலை சீனிவாசனையும் நாம் சொல்லலாம். ரெட்டமலை சீனிவாசனுடையது இலக்கியம் இல்லை என்றாலும் உரைநடையில் அது முக்கியத்துவம் வாய்ந்தது. எம்சி ராஜா, மதுரைப் பிள்ளை என்ற ஓர் இலக்கிய மரபு நமக்கு இருக்கிறது. தொண்ணூறுக்கு முன்பே எழுதப்பட்ட "பிறகு', "பழையன கழிதலும்' போன்ற நாவல்கள் நவீன இலக்கியங்களில் தங்களை வெளிக்காட்டாமல் எழுதியவர்கள் என்று தமிழ் தலித் இலக்கியத்திற்கு ஒரு மரபு தொடர்ச்சியாக இருக்கிறது. அந்த வரலாற்றோடுதான் புதிய எழுச்சியை நாம் பார்க்க வேண்டும்.
 
மதிவண்ணன் : இந்த இடத்தில் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. தலித் இலக்கியத்திற்கான வரையறை என்ன? தலித் எழுதுவது அல்லது தலித் உணர்வோடு எழுதுவது என்பதே வரையறை. தலித் உணர்வு தொண்ணூறுக்குப் பிறகுதான் வந்தது. அதற்கு முன் எழுதியவர்கள் என்ன மனப்பான்மையோடு எழுதினார்கள்? எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்று என்று சொல்லப்படும் உணர்வு நிலை இல்லாமல் இருந்தது. அயோத்திதாசருக்கே இல்லாமல் இருந்தது. தொண்ணூறுக்கு முன் என்ன எழுதினார்கள் தொண்ணூறுக்குப் பின் என்ன எழுதினார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். முற்போக்கு இலக்கியத்திற்கும் தலித் இலக்கியத்திற்கும் இடையே ஒரு கோடு இருக்கிறது. அது விழுந்தது தொண்ணூறுக்குப் பிறகுதான். பூமணியைப் போன்ற சில விதி விலக்குகள் இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் தொண்ணூறுக்குப் பிறகுதான் தலித் உணர்வோடும் பொதுமையோடும் எழுதப்பட்டது என்பது என் கருத்து.
 
கீதா: அயோத்திதாசரிடம் இரண்டுமே இருந்தன. அப்போது இருந்த சாதிய சமூக அமைப்பில் சாதியில் இருந்து கொண்டே பேச வேண்டியிருந்தது. ஆதி வேதத்தில் பொதுமைக்கான முயற்சி இருக்கிறது. வரக்கூடிய காலங்களில் அனைவரும் பவுத்தர்களாக இருப்போம் என்னும் எண்ணம் இருக்கிறது. அந்தப் பொதுமை நாம் அடைய வேண்டிய பொதுமை. அயோத்திதாசரிடம் பல முரண்பாடுகள் இருக்கின்றன. என்றாலும் தொண்ணூறுக்குப் பிறகு வந்த பொதுமை முழுமையான ஒன்று.
 
அழகிய பெரியவன் : மதியின் இந்தக் கருத்தோடு நான் உடன்படுகிறேன். தொண்ணூறுகளில் வந்த தலித் இலக்கியங்கள்தான் இன்றைக்கு எழுத வருகிறவர்களுக்கு உந்து சக்தியாக இருக்கிறது. ஆனாலும் ஓரிடத்தில் நான் நுட்பமாக வேறுபடுகிறேன். ஒடுக்கப்பட்ட சமூகங்களில் பொதுமைப்படுத்தி எழுதுவது என்பது ஒரு பார்வை; தனித்த உணர்வோடு எழுதுவது என்பது ஒரு பார்வை. தலித் உணர்வோடு எழுதப்படுவது என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அய்ம்பதுகளில் ஈழத்தில் டேனியல் எழுதியிருக்கிறார். முதலில் இலக்கியம் என்பதற்கு நேரடியான பொருள் கொள்வோம். அதற்குப் பிறகு அதில் இருக்கும் நேர், எதிர்மைகளைப் பேசுவோம். இங்கு வரலாறு இருக்கிறது. மராத்தியிலிருந்துதான் உந்துதல் வந்தது என்பதற்கு முன்னால் இருந்தவற்றை நாம் தேடியே போகவில்லை. இங்கு வரலாற்றுடனான ஒரு மரபின் தொகுத்தல் இல்லாமலேயே இருக்கிறது. "பறையன்', "உதயசூரியன்' போன்ற பலவற்றை தொகுக்கவே இல்லை. ஒரு எல்லையை வைத்துக்கொண்டு அதன் பின்னாலே திரும்பிப் பார்க்காமல் முன்னாடியே பார்ப்பது சரியா? நம்முடைய மரபையும் பார்த்துக்கொண்டு தலித் உணர்வோடும் எழுதுவதுதான் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
 
லிங்கம் : எனக்கு 40 ஆண்டுகால வாசிப்பு அனுபவம் இருக்கிறது. படிப்பதுதான் என் தொழில். நான் ஆய்வாளனில்லை. தமிழில் டேனியலுக்குப் பிறகு தலித் இலக்கியம் பூமணியின் "பிறகு' சிவகாமியின் "ஆனந்தாயி', "பழையன கழிதல்', அழகிய பெரியவனின் "தீட்டு' இதோடு முடிந்துவிடுகிறது. தலித் இலக்கியம் நமக்குள் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். இப்போது எழுதுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நிற்கவில்லை என்பதுதான் என் கருத்து. ஆனால் அந்தக் காலத்தில் சிவராது காரந்த், தகழி, கு.ப.ரா போன்றவர்களின் படைப்புகளில் தலித் வாழ்க்கை மிகவும் ஆழமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
 
அழகிய பெரியவன் : இலக்கிய மதிப்பீட்டை வைத்து நீங்கள் பேசுகிறீர்கள். நாம் இப்போது வரலாற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். தலித் இலக்கியத்திற்கு நமது மரபு ரீதியான வரலாறு உதவி இருக்கிறதா என்றுதான் கேள்வி.
 
மதிவண்ணன் : சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாக நாம் கவிதையில் இன்றும் பல உத்திகளைப் பயன்படுத்துகிறோம். கீதா சொன்னதுபோல சாதியிலிருந்து பேசுவதால், தன் சாதியை சார்ந்து பேசுவது இயல்பு. என்றாலும் தன்னைப் போல் ஒடுக்கப்பட்ட ஒரு சாதியை இழிவுபடுத்தியதை தலித் இலக்கியம் என்றால் எப்படி ஏற்பது?
 
அழகிய பெரியவன்: உண்மைதான். அதற்காக அதை அப்படியே ஒதுக்கிவிட முடியாது.
 
கீதா: அந்த முரண்பாடு இருக்கிறது. தொண்ணூறுக்குப் பிறகுதான் தன்னுணர்வோடும் அரசியல் திண்மையோடும் தலித்துகள் எழுதுகின்றனர். மரபு இருக்கிறது. தலித்துகளெல்லாம் ஏதோ திடீரென்று ஒருநாள் எழுந்து உட்கார்ந்து கொண்டு எழுத ஆரம்பித்தார்கள் என்பது கொச்சையான ஒன்றாக இருக்கும்.
 
புனித பாண்டியன்: மராட்டியத்திலே அம்பேத்கர் மண் என்ற பாரம்பரியம் இருக்கிறது. அந்த மண்ணுக்கே உரிய வீரியமான பண்பு இருப்பதால்தான் மராட்டி இலக்கியத்தைப் பேசுகிறோம். 
 
அழகிய பெரியவன்: நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மராட்டி என்பீர்களா அல்லது தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொள்வீர்களா?
 
புனித பாண்டியன் : தலித்தாக அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.
 
அழகிய பெரியவன்: மண் சார்ந்த விஷயங்கள் என்று இருக்கிறதா இல்லையா?
 
புனித பாண்டியன்: ஆமாம். இது பெரியார் பிறந்தமண். அதில் பிறந்ததால் பெருமைப்படுகிறோம். நீங்கள் ஏன் தமிழ்மண், மராத்தி மண் என்று பிரித்துப் பார்க்கிறீர்கள்?
 
கீதா: உண்மையிலேயே அம்பேத்கர் எழுத்து என்பது 30 களிலிருந்தே தமிழ் நாட்டில் இருக்கிறது. சுயமரியாதை இயக்கம் அதை வெளியிட்டு வந்திருக்கிறது. அது எந்த அளவு இலக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதைப் பார்க்க வேண்டும்.
 
மதிவண்ணன்: இல்லை. தொண்ணூறுகளில்தான் அம்பேத்கர் எழுத்து பெரும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
 
கீதா: தலித் பேந்தர்களின் பங்களிப்பும் மிகவும் பெரியது. இலக்கியத்தைப் பற்றி யோசிக்கும்போது அவர்கள் இயக்கமாக இருந்திருக்கிறார்கள். ஓரளவு அம்பேத்கரின் பாதிப்பு அவர்களுக்கு இருந்தாலும் வன்முறை போன்றவற்றில் அம்பேத்கரின் கருத்து அவர்களிடமில்லை. அவர்கள் அம்பேத்கரியலை உருவாக்கினார்கள்; ஆனால் அம்பேத்கரிஸ்டுகள் இல்லை. ஒரு பக்கம் அவர்களிடம் எம்.எல்.தாக்கமும் அதிகமாக இருந்தது.
 
புனித பாண்டியன்: மகாராஷ்டிரா என்று சொல்லும் போது அம்பேத்கரைத் தானே குறிப்பிடுகிறோம்?
 
அழகிய பெரியவன்: இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால், சின்னச் சின்ன எதிர்போராட்டங்களைக் கூட வரலாறு பதிவாக்கி பெருமதியோடு வைத்திருக்கிறது. தமிழ் மரபையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். அம்பேத்கர் அளவுக்கு அரசியல் திரண்ட எழுத்தாக எம்.சி.ராஜா, ரெட்டமலை சீனிவாசன், அயோத்திதாசர் ஆகியோரின் எழுத்து இல்லை என்றாலும் அவற்றை எங்கே வைப்பீர்கள்? மரபார்ந்த வகையாக அவை இருக்கும். என்னை தமிழ்த்தேசியத்தின் குரலாக நீங்கள் பார்க்க நினைத்தாலும் இதுதான் உண்மை. ஆகையால்தான் மரபையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்றேன். திடுதிப்பென்று ஒரு சக்தி வந்து தலித் இலக்கியத்தை உந்தித் தள்ளியது என்று இல்லாமல் அது மரபாகவே உள்ளேயே இருந்தது; தொண்ணூறுகளில் ஊக்கம் பெற்றது என்பதுதான் உண்மை.
 
மதிவண்ணன் : எம்.சி. ராஜாவைப் பற்றி நீங்கள் சொன்னீர்கள் அல்லவா? அவர் அயோத்திதாசப் பண்டிதரைவிட மிகவும் பொதுமை உடையவராக இருந்தார். அம்பேத்கருடன் போட்டிப் போட்ட எம்.சி. ராஜா என்பது வேறு, அதற்கு முன்னால் இருந்த எம்.சி. ராஜா நிறைய வித்தியாசமானவராக இருக்கிறார். அதனால்தான் அயோத்திதாசரை விட மேல் என்று கருதுகிறேன்.
 
அழகிய பெரியவன்: கருத்தியல் ரீதியாக, இங்கு இருக்கிற மரபை, தொன்மத்தை, கேள்வி கேட்டு கட்டுடைப்பது தலித் இலக்கியத்தின் கூறு என்று சொன்னால் ரெட்டமலை சீனிவாசன் சுயசரிதத்தில் அவர் பயணம் செய்தது, தஞ்சை கோயில்கள், நந்தன் போன்றவற்றின்மீது மாற்றுப் பார்வையை வைத்து இருந்ததெல்லாம் பதிவாகியிருக்கிறது. அயோத்திதாசருக்கும் அத்தகைய பார்வை இருந்திருக்கிறது. தொண்ணூறுக்குப் பிறகு நாம் பேசும் கட்டுடைத்தல் அன்றைக்கே அவர்களிடத்தில் இருந்திருக்கிறது.
 
மதிவண்ணன்: முற்போக்கு எழுத்து என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்? மார்க்சியப் பார்வையோடு உழைக்கும் மக்களின், பாட்டாளிகளின் துயரத்தைச் சொல்வது முற்போக்கு எழுத்து. அதேபோல் தலித் அடையாளம் என்பது அம்பேத்கர் எழுத்துகளைச் சார்ந்தது. அத்தகைய அம்பேத்கர் எழுத்துகள் அறிமுகமானது 90களில். அத்தகைய தன்மையோடு எழுதப்பட்டவைதான் தலித் எழுத்து என்று கூறுகிறோம். அதற்கு முன்பு நமக்கு மரபு இருந்தது என்பது உண்மைதான். அதனிடமிருந்து நம்மைத் துண்டித்துக்கொள்ள முடியாது. பூமணியின் "பிறகு' நாவல் தொண்ணூறுக்கு முன்பே எழுபதுகளில் வருகிறது. டேனியலின் படைப்புகள் அய்ம்பதுகளில் வருகிறது. அவர் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தாலும் இங்கிருப்பவர்கள் யாரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
 
கீதா: பூமணியை இலக்கியவாதிகள் ஏற்றுக்கொண்டதைப் போல கூட முற்போக்குவாதிகள் ஏற்றுக்கொள்வதில்லை. சரி, தொண்ணூறு என்பதை தலித் இலக்கியத்தின் ஒரு காலக்கோடாக வைத்துக் கொள்ளலாம்.
 
யாழன் ஆதி : இன்றைய தலித் இலக்கியத் தேக்கத்திற்கான சூழல் எப்படி ஏற்பட்டது?
 
கீதா: முதலில் தேக்கம் என்பதை ஏற்றுக் கொள்கிறோமா?
 
மதிவண்ணன்: இல்லை. தேக்கம் என்று ஏற்றுக் கொள்ளவில்லை.
 
கீதா: நானும் ஏற்றுக்கொள்ளவில்லை.
 
அழகிய பெரியவன்: தேக்கம் என்பதற்குப் பதில் சுணக்கம் எனச் சொல்லலாமா என்று யோசிக்கிறேன்.
 
மதிவண்ணன்: கடந்த பத்து ஆண்டுகளாக பெரிய மாறுதல்கள் தனி மற்றும் சமூக வாழ்வுப் போக்கில் வந்திருக்கின்றன. முன்பெல்லாம் 8 மணிநேரம் வேலை, 8 மணிநேரம் ஓய்வு என்று இருந்தது. அப்போது கலை, இலக்கியம், எழுத்து, வாசிப்பு என்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கிறது. இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில் 12 மணி நேரம் வேலை என்பதும் 8 மணிநேரம் தூக்கம் என்ற சூழ்நிலையும் நிலவுகிறது. படிப்பதற்கு நேரம் ஒதுக்குவதில்லை. பெரும் மக்கள் திரள் கலை இலக்கியத்திற்கான நேரத்தைத் தொலைத்து விட்டு நிற்கிறது. முன்பெல்லாம் கலைக்கல்லூரிகள் அதிகமாக இருந்தன; பொறியியல் கல்லூரிகள் மிகவும் குறைவாக இருந்தன. இப்போது "இன்குபேட்டர்கள்' போல பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அவை மாணவர்களை தொழில் செய்பவர்களாக வெளியேற்றும் தன்மையில் உள்ளன. இலக்கியம் என்று பேச இயலாதவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு எதைப்பற்றியும் ஒரு பார்வை இல்லை. தலித் இலக்கியம் மட்டும் தேங்கியிருக்கிறது என்றால் பொது இலக்கியம் என்ன கரைபுரண்டா ஓடிக்கொண்டிருக்கிறது?
 
கீதா: வேறு ஒரு கோணத்தில் இதைப் பார்க்கலாம். ஒரு வசதிக்காக தலித் இலக்கியம் தொண்ணூறுகளில் என்று வைத்துக் கொண்டாலும் 20 ஆண்டுகள் என்பது காலத்தில் ஒரு பெரிய அளவே இல்லை. ஆனால் இலக்கியம் பற்றிப் பேசுபவர்கள் இன்றைக்கு தலித் இலக்கியம் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு தலித் இலக்கியம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அழுத்தமான தடங்களை தலித் இலக்கியம் பதிவாக்கியிருக்கிறது. பெரிய சுதந்திரவெளியை அது உருவாக்கியிருக்கிறது. தலித் இலக்கியம் வந்த பிறகுதான் மற்ற சமூகங்களை வைத்து எழுதுகிற தன்மை வந்திருக்கிறது. சாதி இருக்கிறது என்பதை உரத்துப் பேசுகிற தன்மையை தலித் இலக்கியம் உருவாக்கி இருக்கிறது. பொன்னீலனின் "மறுபக்கம்' ஆகட்டும், டி.செல்வராஜின் "தோல்' நாவல் ஆகட்டும் சாதியையும் வர்க்கத்தையும் இணைத்து எழுதுகிற ஒரு வகையை தலித் இலக்கியம் உருவாகியிருக்கிறது. அப்படிப்பட்ட தலித் இலக்கியத்தை தேங்கிவிட்டது என்று கூற இயலாது.
 
இளைஞர்களும் இப்போது புதிதாக எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள், அது நமக்கு இன்னும் பதிவாகவில்லை. நிறைய தலித், பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் எழுத வந்திருக்கிறார்கள். அதைப் பார்க்க முடிகிறது. தலித் பெண்கள் இன்னும் பேசவே வரவில்லை, பாமா கொஞ்சம் பேசியிருக்கிறார், சுகிர்தராணியின் சில கவிதைகள் இருக்கின்றன. சொல்ல வேண்டியவை ஏராளமாகச் சொல்லப்படாமல் இருக்கின்றன. ஆனால் தலித் விமர்சன உலகம் அருமையாக இருக்கிறது. பல உடைப்புகளை அது ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றையே வேறு கோணத்தில் எப்படிப் பார்ப்பது என்பதை ராஜ்கவுதமன் செய்திருக்கிறார். அது பெரிய ஒரு சாதனை. ஆனால் அதை யாரும் அங்கீகரிக்கவில்லை. தலித்துகள் எழுத வந்துவிட்டார்கள் எதுவும் பேசக்கூடாது என்று விமர்சகர்கள் அமைதியாய் இருப்பதால் அது தேங்கிவிட்டதுபோல தோற்றம் தருகிறது.
 
அவர்கள் இதை எப்படியாவது சமன் செய்ய முனைகிறார்கள். மேடைகளில் தலித் எழுத்தாளர்களுக்கு இடஒதுக்கீட்டைப் போல இடம் தர இப்போது தாராளமாக முன்வருகிறார்கள். ஒட்டுமொத்த இலக்கியப் பண்பாட்டுக்கு எதிராக தேக்கம் அடைந்திருக்கிறது என்னும் கேள்வியை நாம் திருப்பினால் நல்லது என்றே நினைக்கிறேன். அது எவ்வளவு தூரம் தலித் இலக்கியத்திற்கு உதவும் என்றும் பார்க்கலாம்.
 
அழகிய பெரியவன்: தேக்கம் என்பதை இன்னும் ஆழமாக உள்ளே சென்று பார்க்க வேண்டியிருக்கிறது. மராட்டியிலிருந்து தெலுங்கிலிருந்து வந்த தன்வரலாறுகள் போல தமிழில் வந்திருக்கிறதா? தமிழில் எப்போதும் பாவனை செய்யக் கூடிய, போலி வறட்டு கவுரவம் உள்ள ஒரு மனப்பாங்கு இருக்கிறது. எல்லாவற்றையும் வெளிப்படையாக விவாதிக்கிற தன்மை இங்கில்லை. ஒருசில பதிவுகள் வந்திருக்கின்றன. பாமாவின் "கருக்கு', "சங்கதி' ஆகியவை தன்வரலாற்று நூல்களே. ஆனால் அவை நாவல்கள் என்றே இன்றுவரை சொல்லப்படுகின்றன. கே.ஏ. குணசேகரனின் "வடு' தன்வரலாறாக வந்திருக்கிறது. நாவல்கள் என்றால் மொத்தமாகவே 10 நாவல்கள் இருக்கும். அதற்குக் காரணம் எழுத வந்தவர்கள், புதிதாக எழுத வந்திருப்பவர்கள் எழுதும் இலக்கியத்தில் அரசியல் பார்வையே அதிகமாக இருக்கிறது. அரசியல் இருக்கக்கூடாது என்பது அல்ல. அரசியல் என்பது வாழ்வின் ஒருபகுதிதான். அதைத் தாண்டி அவனின் வாழ்க்கையில் இருக்கும் அபிலாசைகளை, விருப்பு வெறுப்புகளை இழிமைகளை, போதாமைகளை எழுத வேண்டும். இலக்கியம் என்றால் எல்லாவற்றையும் பதிவு செய்வதே நியாயமாக இருக்கும். ஆனால் அப்படி இல்லாமல் அரசியலாகவே இருக்கிறது என்பது மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம். சாதியை எதிர்த்து ஒரு கவிதை எழுதலாம்; 10 கவிதைகள் எழுதலாம்; எப்பவுமே அதையே எழுதிக்கொண்டிருந்தால் மொழி மொண்ணையாகத்தான் போகும், தேங்கித்தான் போகும். அவனுடைய காதலை மற்ற விஷயங்களை எழுதலாம். அப்படி எழுதாமல் இருப்பதற்கு தலித் இலக்கியத்திற்கு இங்கே விமர்சன அடிபோட்டவர்கள்தான் காரணம்.
 
என்னுடைய ஒரு கதையை விமர்சித்த ராஜ்கவுதமன் அது அதிக இலக்கியத்தன்மை உடையதாக இருக்கிறது என்று விமர்சித்தார். அப்போது தலித் இலக்கியம் என்பது நேரடியானதாக, காத்திரமானதாக, கெட்ட வார்த்தைகள் அதிகம் உள்ளதாக இருக்க வேண்டும். அருமையான ஒரு மொழியில் அனுபவத்தை எழுதினால் அது தலித் இலக்கியம் ஆகாதோ என்னும் கருத்துக்குக் கூட நான் வந்தேன். இது ஒரு காரணம். இப்போதெல்லாம் வாசித்தல் மிகவும் குறைந்து போய்விட்டது. இப்போது எழுத வருகிற எல்லோரும் இதற்கு முன்பு எழுதப்பட்டவைகளைப் படிக்காமலேயே எழுத வருகின்றனர். தலித் இலக்கியத்தை இட ஒதுக்கீட்டுக்கான ஒன்றாகப் பார்ப்பதும், உடனே தன்னை நிறுவிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதும்தான் தேக்கத்திற்குக் காரணம். அடுத்ததாக சந்ததி மாற்றம். பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்ந்து புத்தகங்களின் பக்கமே போகாமல் இருக்கும் தன்மை வளர்ந்திருக்கிறது. இவைகூட காரணமாக இருக்கலாம்.
 
மதிவண்ணன்: நீங்க சொல்ற ஒரு கருத்தை நான் மறுக்க விரும்புகிறேன். தமிழில் போதிய அளவு தன்வரலாறுகள் இல்லை என்று ஆதங்கத்தோடு சொன்னீர்கள். அதை நான் தமிழ் தலித் இலக்கியத்தின் நல்ல அம்சமாகப் பார்க்கிறேன். தன் வரலாறுகள் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்கின்றன. ஒன்று அதை எழுதுபவருக்கு, தான் கீழானவர் என்னும் உணர்வை தந்து கொண்டே இருக்கிறது. மற்றொன்று வாசிக்கும் சாதி இந்து வாசகனுக்கு அது மிகவும் சுவையானதாகவும் உகந்ததாகவும் இருக்கிறது. கருப்பர்களின் தன்வரலாற்று நூல்கள் அதிகமாக விற்பதற்கு இதுதான் காரணம். அது வெள்ளைக்காரர்களுக்கு உகந்ததாக இருக்கிறது. புனைவு இலக்கியத்தில் சாதிக் கொடுமைக்கு எதிராக ஆற்றப்படும் எதிர்வினைகளை வைக்கலாம். ஆனால் தன்வரலாற்று நூல்களில் அப்படிச் செய்ய முடியாது. தான் பெற்ற அவமானங்களை மட்டும்தான் வைக்க முடியும். அதனால்தான் அது அவர்களுக்கு உகந்ததாக இருக்கிறது. அவர்கள் பேசும்போது நீங்கள் கேட்கலாம். "உச்சாலியா மாதிரி தன் வரலாற்றை எழுதுவதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்' என்பார்கள்.
 
அழகிய பெரியவன்: நியாயம்தான். ஆனால் பொதுவான வரலாற்றில் இத்தகைய தலித் வரலாறுகளைப் பார்க்க முடியாது. தன் வரலாறுகளில்தான் ஒரு தலித் தான் அடைந்த அவமானங்களை எழுத முடியும்.
 
கீதா: அவமானங்களை மட்டுமல்ல; ஆதிக்கசாதியினரின் சாதிவெறி மனநிலையையும் அதிகம் பேசுகிறார்கள். அத்தகைய தன்வரலாறுகள் சில நேரங்களில் கண்டுகொள்ளப்படாமல் கூட இருக்கலாம். காரணம் அது வாசகனை சங்கடப்படுத்துகிறது. ஊர்மிளா பவாரின் தன் வரலாறு பொதுவுடைமை இயக்கத்தையே குற்றம் சுமத்துகிறது. அதனால் அவர்களே அந்த நூலை முன்னிறுத்துவதில்லை.
 
மதிவண்ணன்: நான் என்ன சொல்கிறேன் என்றால் சாதி இந்துக்களுக்கு அது மிகவும் சாதகமாக இருக்கிறது. அம்பேத்கரை எத்தனை பேர் வாசிக்கிறார்கள்? கருப்பர் இலக்கியம் படிப்பவர்கள் "பனான்' நூலை வாசித்தார்களா?
 
கீதா: அம்பேத்கரை யாருமே வாசிப்பதில்லை. 
 
ஒளிப்படங்கள் - யாழினி பெரியார்
 
– அடுத்த இதழிலும்
Pin It