நமது நாடு குடியரசான நாளிலிருந்து அரசமைப்புச் சட்டம் என்கிற ஒன்று நடைமுறையில் இருந்து வருகிறது. அவ்வரசமைப்புச் சட்டம் தனது குடிமக்களுக்கு மேல், கீழ் என்ற வேறுபாடு இல்லாமல் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. ஆயினும் தலித் மக்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு இவ்வுரிமைகள் என்பவை பெரும்பாலும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்து வருகின்றன. மாறாக, சாதி இந்துக்கள் என்பவர்களுக்கோ மேற்சொன்ன அடிப்படை உரிமைகளைத் தவிரவும், ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களைத் தங்களது அசையும் சொத்துகளாக ஆக்கிக் கொள்ளும் தனியுரிமையும் கிடைத்திருக்கிறது. இந்த உண்மையை விளக்குவதற்கான சிறந்த நடைமுறை எடுத்துக்காட்டாக நாம் கந்துவட்டிக்காரர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் எல்லா நிலைகளிலும் எல்லா விதங்களிலும் தங்களது சுரண்டலை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் அரசு நிர்வாகம், சிவில் நிர்வாகம், ஊடகம், நீதித்துறை போன்ற நீதியை நடைமுறைப்படுத்துகின்ற பல்வேறு உறுப்புகளும் நவக்கிரகங்களாக ஆளுக்கொரு திசையைப் பார்த்துக் கொண்டு, தம்மைச் சேவிப்போருக்கு அருளைப் பிச்சையாக வழங்கிக் கொண்டிருக்கின்றன.
 
சமூக வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிற இந்த எதார்த்தம் அச்சுப் பிசகாமல் இலக்கியத் துறையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டு வேண்டுவோர் "தூப்புக்காரி' நாவலை முன்னிட்டு கம்யூனிஸ்டுகள் என்போர் நிகழ்த்திய திருவிளையாடல்களைக் கவனிக்கலாம். நமது நாட்டில் கம்யூனிஸ்டு கட்சிகள் என்பவை துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அடிமட்டத் தொழிலாளர்களின் கண்ணீராலும் ரத்தத்தாலும் வளர்க்கப்பட்டவை. பள்ளன் கட்சி, பறையன் கட்சி, சக்கிலியன் கட்சி என அவை அழைக்கப்பட்டதாக அவ்வப்போது அக்கட்சிக்காரர்கள் தலித் மக்களிடையே வந்து சொல்வதுண்டு. தலித் மக்கள் தங்கள் உயிரையும், உழைப்பையும் ஊற்றி வளர்த்தவை அக்கட்சிகள். பதிலுக்கு அக்கட்சிகள் யாரை, என்ன மாதிரியானவர்களை ஊட்டி வளர்த்து உலவ விடுகிறார்கள் என்பதற்கு இந்நாவலைத் தூக்கிப் பிடித்து உச்சாணிக் கொம்புக்குக் கொண்டு போன பொன்னீலன், மேலாண்மை பொன்னுச்சாமி ஆகியோரே உதாரணம்.
 
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மூத்தத் தலைவரும் எழுத்தாளருமான பொன்னீலன் இந்நாவலுக்கு முன்னுரை கொடுத்து, "என்னுடைய இலக்கிய மகள்' என சுவீகாரம் செய்ததோடு நிற்காமல், "கணையாழி' பத்திரிகையில் மீண்டும் ஒரு விளம்பரக் கட்டுரை எழுதுகிறார். கம்யூனிஸ்டுக் கட்சி அமைப்பு அவருக்கு வழங்கிய தொடர்புகளைக் கொண்டு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் அந்நாவலை எழுதிய மலர்வதிக்குப் பாராட்டு விழா நடத்துவதற்குப் பரிந்து பேசி ஏற்பாடு செய்கிறார். அதன் தொடர்ச்சியாக, நாங்களெல்லாம் ஓர் அங்கமாக இருந்து நடத்திய சாதி மறுப்புத் திருமணப் பாதுகாப்பு மாநாட்டிலும் அந்நூல் மேடையில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.
 
மேலாண்மை பொன்னுச்சாமியோ தான் வழங்கிய அலட்டல் அணிந்துரையில், நூலைக் குறித்தும் நாவலாசிரியர் குறித்தும் சொல்வதற்குச் செய்திகள் அற்பமாக இருக்கிற நிலையில், நூலாசிரியர் பிறந்த கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றியும் அங்கு அவதரித்த எழுத்தாளர்கள் பற்றியும் பட்டியலிட்டு விட்டு, தன்னுடைய ஒழிச்சல் இல்லாத நிகழ்ச்சி நிரல் பட்டியலைக் குறித்துப் பெருமிதத்துடன் சடைத்துவிட்டு, கடைசியாக நாவலைக் குறித்து உயர்வு நவிற்சியான செய்திகளைக் கூறி அணிந்துரையை மோசடி உரையாக வழங்கி முடிக்கிறார். அத்தோடு நிற்காமல், தான் உறுப்பினராக இருக்கும் சாகித்திய அகாடமியின் விருதுக்குழுவில் உள்ள பிறரை நச்சரித்து, இந்நாவலாசிரியருக்கு சாகித்ய அகாடமியின் இளம் எழுத்தாளர் விருதை வாங்கித் தருகிறார்.
 
பொன்னீலன், மேலாண்மை பொன்னுச்சாமி, நூலாசிரியர் மலர்வதி ஆகிய மூவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். இவர்களுடைய சாதியை சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய சாதிக்கு உரிய தொழிலை விட்டு விட்டு கீழ்ச்சாதிக்காரர்கள் என்று தாங்கள் கருதுகிறவர்களுடைய தொழிலாகிய துப்புரவுத் தொழிலில் ஈடுபட்டுத் துயரப்படும் அவலத்தை எழுதிய காரணத்துக்காகவே மேற்சொன்ன இரு மூத்த படைப்பாளிகளும் இந்த குதி குதிக்கிறார்கள். இந்தச் செய்தியில் உள்ள அவலம் என்னவெனில், தலித் மக்களின் நலன் சார்ந்த அமைப்புகள் என்று முன்வைக்கப்படுகிற இடதுசாரிக் கட்சிகளின் இலக்கிய அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளில் இருந்து கொண்டு இவ்வாறான மோசடிகளில் இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதுதான். இந்நிலையில் மேற்சொன்ன முற்போக்கு அமைப்புகள் இதற்கு உடந்தையாக இருக்கப் போகிறார்களா? அல்லது இது குறித்து அவர்களுக்கு கருத்து ஏதும் இருக்கிறதா எனத் தெரியவில்லை.
 
எந்த வகையிலும் தேறாத நாவல் இது. இதை தலித் நாவல், பெண்ணிய நாவல், எதார்த்த நாவல் எனப் பொன்னீலன் அளந்து விடுகிறார். நாவலின் முக்கியப் பாத்திரங்கள் அனைவருமே நாடார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் கனகம், கனகத்தின் மகள் பூவரசி, ரோஸ்சிலி ஆகியோர் தனியார் மருத்துவமனை ஒன்றில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணியாற்றுகின்றனர். சமயங்களில் கல்யாண வீடுகளில் எச்சில் இலை எடுக்கப் போகின்றனர். இப்பணிகளில் உள்ள கஷ்டத்தை, நகராட்சிகளில், பேரூராட்சிகளில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணியாற்றும், எடுப்பு கக்கூஸ்களில் பணியாற்றும் மலம் அள்ளும் தொழிலாளிகள் ஆகியோரின் துயரத்தோடு எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. உண்மையில் மேற்சொன்ன பாத்திரங்களின் கவலை என்பது "நாடாத்திக்க தொழிலையா அவ செய்யியா' (பக்கம் 45) என்னும் கேள்வியை முன் வைத்துதான் பொன்னீலனும், மேலாண்மையும்கூட கவலைப்படுகிறார்கள்.
 
மற்றபடி துப்புரவுப் பணியாளர்களின் துயரத்தைச் சொல்கிறதாக முன்னுரையாளர்கள் சொல்கிற இந்நாவல் அத்துப்புரவுப் பணியாளர்களின் அரசியலை எப்படிப் பேசுகிறது எனப் பார்க்கலாம். சக்கிலியச் சாதியைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளனாகிய மாரியின் கருத்துகளாக நாவல் கீழ்க்கண்டவற்றை முன் வைக்கிறது:
 
“என்ன பெண்ணு நீ. அழுக்கு வாரியத்துல இருக்கிய வேதன ஒனக்கு தெரியாது. நானாவது அந்த சாதியில பொறந்து அதே தொழிலுன்னு ஆயிட்டேன்.'' (பக்கம் 49)
 
“எழுதி வச்சபடிதான் எல்லாம் நடக்கும்ண்ணா ஆளு பாத்து எழுதி வச்ச ஆண்டவன்தான் குத்தக்காரன். என்னை அளுக்கு வாரணம்ண்ணும், மத்தவங்களை அழுக்காக்கனும்ண்ணும் படச்சி விட்ட அவன்தான் பெரிய குத்தவாளி.'' (பக்கம் 53)
 
“இதுதான் தொழிலுன்னு எறங்கியிட்டா அப்புறம் எதப்பத்தியும் யோசிச்சப்பிடாது. ஏதோ அவமானத் தொழிலைச் செய்றதா நெனச்சி வெக்கப்படக்கூடாது. மனசுக்குள்ள தாழ்ந்தும் போகக் கூடாது. இந்த ஒலகத்துல சுத்தப்படுத்துற இந்த தொழிலை செய்யுறேன்னு பெருமைப்பட தெரியனும். அப்ப கக்கலும் வராது. அருவறுப்பும் வராது.'' (பக்கம் 79)
 
“இந்த அழுக்கனோட வந்து வாழ்றத விட ரொம்ப டீசண்டா எல்லாரும் உயர்வா பாக்குற அவனோட வாழ்ந்தா அவ வாழ்க்க நல்லா இருக்கும்.'' (பக்கம் 80)
 
“அழுக்குவாரி பொணம் காக்குறவன் சக்கிலியண்ணும் ஒவ்வொரு தொழிலுக்குப் பின்னால ஒரு சாதிய வச்சி மனுசங்கள அதுவச்சே தரம் பிரிச்சிட்டாங்க. பிரிச்சத இனி ஒண்ணும் செய்ய முடியாது.'' (பக்கம் 54)
 
சக்கிலியர்கள் பீயள்ளப் பிறந்தவர்கள்; உலகம் தோன்றியதிலிருந்து அதுவே அவர்கள் தொழில் என விதிக்கப்பட்டிருக்கிறது என்று மலர்வதியின் சாதியைச் சேர்ந்தவர்களும் அவர்களையொத்த மற்றும் அவர்களைவிட உசந்த சாதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுபவர்களும் கிளப்பி விடுகிற புளுகுகளை ஒரு சக்கிலியப் பாத்திரத்தின் வாயிலிருந்தே வர வைத்து விட்டார்கள் இல்லையா! அப்படியென்றால் அண்ணாச்சி அவர்களே இது தலித் நாவல்தான்.
 
அண்ணாச்சி மற்றும் மலர்வதி தவிர்த்த பிற வாசகர்களுக்கு நாம் சில உண்மைகளைச் சொல்லி விடுவோம். கி.பி.1202 ஆம் ஆண்டைச் சேர்ந்த திருவண்ணாமலைக் கோயில் கல்வெட்டு, அருந்ததியர்களைத் தோல் பணியாளர்கள் எனத் தெரிவிக்கிறது. 1909 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட எட்கர் தர்ஸ்டனின் "குலங்களும் குடிகளும்' நூலும் அதற்கு முந்தைய காலனிய வெள்ளை எழுத்தாளர்களின் நூற்களும் அருந்ததியர்களைத் தோல் பணியாளர்கள் என்றே வகைப்படுத்துகின்றன. காலனிய ஆட்சிக் காலத்தின் போது வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிட்டு வீழ்ந்த அருந்ததியர்களே துப்புரவுப் பணியாளர்களாகச் சீரழிக்கப்பட்டனர் என்பது வரலாறு. சாதி இந்துக்களின் சட்டப் புத்தகத்தில் உண்மை என்பதற்குத்தான் இடமே கிடையாதே.
 
இலக்கிய வாசகர் ஒருவரின் சகிப்புணர்வை சோதிக்கக்கூடிய வகையான எழுத்து இது. "மாலைமதி', "ராணிமுத்து' ஆகியன தாண்டி சீரியசான இலக்கியங்கள் எவற்றையும் மலர்வதி அக்கா படித்ததில்லை என்பதை இப்புத்தகத்தின் இரண்டு பக்கங்களைப் படித்தாலே புரிந்து கொள்ள முடிகிறது. "மாலைமதி', "ராணிமுத்து' நாவல்களில் வரும் பெண் பாத்திரங்களைப் போலவே இந்நாவலில் வரும் பெண் பாத்திரங்களும் எதிர்ப்புணர்வு எதுவுமின்றி உருகுகிறார்கள். தங்களுக்குள் மருகுகிறார்கள். ஆண்வாடை அடித்தாலே காய்ந்து விடுகிறார்கள். இந்த லட்சணத்தில் இதற்கு பெண்ணிய நாவல் என கள்ள சர்ட்டிபிகேட் வேறு.
 
இந்த இடத்தில் ஒரு செய்தியை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். கடந்த 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தமிழில் தலித் இலக்கியம் கிளைபரப்பி வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஏராளமான தலித் படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஓர்மை கொண்ட பெண் எழுத்துகளும் காலப்பகுதியில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்தனை எழுத்துகளில் எத்தனை பேருடைய எழுத்துகளை குறிப்பிட்ட இந்த அண்ணாச்சிமார்கள் இப்படித் தூக்கிச் சுமந்து கொண்டாடியிருக்கிறார்கள்? எவ்வளவு யோசித்தாலும் எனக்கு அப்படி ஒரு நிகழ்வு நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. ஆனால், தலித் இலக்கியம் இங்கு அரும்பத் தொடங்கியபோது, சாதிக்கொரு இலக்கியமாகாது என்று சிவப்புக் கொடி காட்டிய கூட்டத்தில் இவர்களும் இருந்ததுதான் நினைவுக்கு வருகிறது.
 
நாவலாசிரியரின் இரண்டாவது நாவல் இது என்கிறார்கள். இரண்டாவது நாவலே இப்படி என்றால் முதல் நாவல் எப்படி இருந்திருக்குமோ! நல்ல வேளை நாம் தப்பித்துக் கொண்டோம். அப்போது பொன்னீலன் அண்ணாச்சியையும், மேலாண்மை நாடாரையும் மலர்வதியக்காவுக்குத் தெரியவில்லை. அந்த வரையிலும் மயிரிழையில் நாம் உயிர் தப்பினோம். ஆனாலும் நாவலுக்குள் உள்ள கவித கவிதகள் நம்மை ரொம்பவும் சோதித்து விட்டன; கவிதைகள் கொஞ்சம் எழுதியமைக்காக என்னை உண்மையிலேயே வெட்கப்பட வைத்து விட்டன அக்கவித கவிதகள். வட்டார வழக்கு! கவித கவிதகள்! சினிமா உத்திகள்! பெரிய எழுத்தாளர் நட்புகள்! மலர்வதி அக்கா உண்மையிலேயே பிரமாதம் போங்கள்! கொஞ்ச நஞ்சம் மிச்சம் மீதி இருக்கிற வாசகர்களைத் தொலைத்துக் கட்டாமல் மலர்வதி அக்கா விடமாட்டார் போலும். எல்லாவற்றை விடவும் சிறப்பு சாகித்ய அகாடமியின் "டக்கு'தான். எவ்வளவு விரைவான "டக்கு.' இறுதியாக பொன்னீலன் அண்ணாச்சியிடம், "நாயகன்' இறுதிக் காட்சியில் வேலு நாயக்கரிடம் அவருடைய பேரன் கேட்பது போல, அண்ணாச்சி நீங்க தத்தியா? கெட்டியா? என்று கேட்டு இக்கட்டுரையை முடிக்கிறேன்.
 
தூப்புக்காரி 
மலர்வதி
பக்கம் : 136, ரூ.75
அனலகம், கருங்கல் – 629 157
Pin It