மாற்றம் என்ற சொல்லைத் தவிர எல்லாமே மாறும் என்கிறார்கள். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளாக ஜாதி மட்டும் அப்படியே இருக்கிறது. சாதி ஒன்றையே தங்களுக்கான கவுரவமாக நினைக்கும் மக்கள் இருக்கும் வரை, சாதியின் ஆட்டம் எப்போதுமே அடங்குவதில்லை! இந்தியாவில் வேரறுக்க முடியாத வன்மமாக சாதி இறுகிப் போனதன் காரணம், உயர்த்தப்பட்ட சாதியில் இருப்பதற்காக அவரவர் கொண்டிருக்கும் மிதப்பும் கர்வமும் மட்டுமே! எல்லோருமே அவரவர் சிந்தனையில் உயர்வாகவோ – தாழ்வாகவோ சாதியை சுமந்து கொண்டிருப்பதால், அந்த இழிவிலிருந்து இந்த சமூகம் விடுபட வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது.

நாகரிகத்தையும் நவீனத்தையும் வரித்துக் கொண்டு, தன் இருப்பையும் பரப்பையும் சாதி விரிவுபடுத்த, சாதி ஒழிப்புக் குரல்களும் எதிர்ப்பு முழக்கங்களும் சன்னமாகவே ஒலிக்கின்றன. சாதி இழிவிலிருந்து தலித் மக்களை மீட்டெடுக்க இன்று இயக்கங்கள் இல்லை. தீவிரமான சாதி மறுப்புக் கொள்கையோ, சாதி ஒழிப்புத் திட்டமிடல்களோ எவரிடமும் இல்லை! இந்த அரசுக்கோ, அமைப்புகளுக்கோ, தன்னார்வ தனி நபர்களுக்கோ வரவு – செலவு கணக்குகளோடு நிறைய வேலைகள் இருப்பதால், தங்கள் துயரங்களை தாங்களே சுமந்து கொள்ளவும் எதிர்கொள்ளவும் தலித் மக்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். மிக வேகமாக ஊடுறுவிவிட்ட இந்த மெத்தனம், தீவிரமான சாதி ஒழிப்பு நடவடிக்கைகளால் ஆதிக்க சாதியினரிடம் ஓரளவுக்கு உருவாக்கப்பட்டிருந்த அச்சத்தை அகற்றிவிட்டது!

முட்களால் அடைக்கப்பட்ட பொதுப்பாதை

வெட்ட வெட்ட தழைத்து ஓங்கும் தன்மை கொண்ட சாதிக்கு கண் விழித்து நீருற்றுபவர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்! சாதியை தங்கள் நெஞ்சில் சுமந்திருக்கும் சாதி இந்துக்கள், தலித் மக்கள் மீது நிகழ்த்தும் வன்கொடுமை நிகழ்வுகளின் தன்மை துளியும் மாறாமல் நாள்தோறும் தொடர்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த அய்ந்து மாதங்களுக்குள் நடந்தேறிய சாதிக் கொடுமைகள் சிலவற்றின்  தொகுப்புதான் இக்கட்டுரை. கவனத்திற்கு வந்தவை பற்றியே கவலைப்பட ஆளில்லாத நிலையில், கவனத்திற்கு வராமல் எத்தனை நடக்கிறதோ! சாதி இந்துக்கள் கொஞ்சமும் சத்துக் குறையாமல் அத்தனை வகையான வன்கொடுமைகளையும் தலித் மக்கள் மேல் நிகழ்த்துகிறார்கள்! தூங்கிவிட்டவர்களைப் போல சமூகமே நடித்துக் கொண்டிருக்கையில், யார் கவனத்திற்கு இவற்றை எடுத்துச் செல்ல?

வன்கொடுமை நிகழ்வு – 1

14.9.09 : திண்டிவனம் வட்டம், மரக்காணம் ஒன்றியம், நடுக்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த சிறிய கிராமம் வண்டிப்பாளையம். இங்கு 30 தலித் குடும்பங்களும், நாயுடு, வன்னியர் உள்ளிட்ட 400 சாதி இந்து குடும்பங்களும் உள்ளன. இன்றும் தேநீர்க் கடைகளில், இரட்டைக் குவளை முறை போன்ற தீண்டாமைக்  கொடுமைகள் இங்கு நிலவுகின்றன. செப்டம்பர் 14 அன்று தாழ்த்தப்பட்ட  சமூகத்தைச் சேர்ந்த ஜோதி (26) என்பவர் இறந்துவிட, இறுதி ஊர்வலம் நடந்தது. பிணத்தை எடுத்துச் செல்ல விடாமல் சாலையில் கற்களையும், முட்களையும் போட்டு தடுத்து நிறுத்திய சாதி இந்துக்கள், கூட்டத்தினர் மீதும் கற்களை எறிந்தனர். கொளுத்தும் வெயிலில் நடுசாலையில் பாடையுடன் பிணம் கிடத்தப்பட்டது.

எதிர் சாலையில் சாதி இந்துக்கள் கூட்டமாக நின்றிருந்தனர். இருந்த ஒரு சில போலிசுகளும் அருகில் இருந்த ஆலமர நிழலில் அமர்ந்திருந்தனர். கொஞ்ச நேரத்தில் இரண்டு காவல் வண்டியில் சில போலிசாருடன் இரண்டு ஆய்வாளர்கள் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து, கோட்டாட்சியரும், வட்டாட்சியரும் வந்தார்கள். அதன்பிறகு இரு டி.எஸ்.பி.க்கள் வந்தனர். தொடர்ந்து மேலும் இரு ஆய்வாளர்கள் சில போலி சாருடன் வந்தனர். நாற்காலிகள் மர நிழலுக்குச் சென்றன. அதிகாரிகள் உட்கார்ந்த பின்பு, ஊர் தரப்பில் வயதான மூன்று பெரியவர்களை அழைத்த போலிசார் நாற்காலியில் உட்கார வைத்தனர்.

தலித் பிணத்தை ஏன் பொதுவழியில் எடுத்துச் செல்லக் கூடாது என்று நியாயம் கேட்கும் தலித் மக்கள்“எதுக்கு இந்த வழியை தடுக்குறீங்க'' என்று நேரடியாகவே கேட்டார் வட்டாட்சியர் கல்யாணம். அதற்கு அந்தப் பெரியவர், “நாங்க ஒண்ணும் தடுக்கல. அவங்களுக்கு ஒரு வழி இருக்கு. அந்த வழியே போக வேண்டியதுதானே. இப்ப இந்த வழியா போனா, தொடர்ந்து எல்லா பொணமும் போகும்'' என்றார். அதற்கும் வட்டாட்சியர், “யாரும், எந்த வழியையும் தடுக்கக்கூடாது. எல்லாம், எல்லாருக்கும் பொதுன்னு அரசாங்கம் சொல்லுது'' என்றார். இதற்கு அந்தப் பெரியவர், “அதெல்லாம் இங்க சரிவராது'' என்றார். வட்டாட்சியர் தொடர்ந்து பேசியும் சாதி இந்துக்கள் சரியாக பதில் அளிக்காத நிலையில், “இந்த தரப்புல ரெண்டு பேரை கூப்பிடுங்க'' என்றார்.

தலித்துகள் தரப்பில் இரு பெரியவர்களை அழைத்த போலிசார், சாதி இந்துக்கள் அருகில் நிற்க வைத்தனர். மக்கள் கூட்டத்தில் நிற்க வைக்கப்பட்ட இரு தலித் பெரியவர்களும் கூச்சத்தில் கைகட்டினர். அவர்களிடம் வட்டாட்சியர், “நீங்க சொல்லுங்க, இப்ப ஏன் திடீர்னு இந்த வழியா வர்றீங்க?'' என்று கேட்டார். அதற்கு ஒருவர், “அந்த வழி குறுகி, முள்செடி வளர்ந்துடுச்சு. பெரிய பாடை, அந்த வழி பத்தாது'' என்றார். அப்போது சாதி இந்து பெரியவர் ஒருவர், “நாங்க பஞ்சாயத்துல சொல்லி முள்ள வெட்டித் தரோம்னு சொன்னோம். அதையும் வேண்டாம்னு சொல்லிட்டீங்க'' என்றார். அப்போது மற்றொரு தலித் பெரியவர், மிகுந்த சினத்துடன், “ரெண்டு பேரும் ஒரே வழியிலே போனோம். திடீர்னு நீ மட்டும் நல்ல வழியில போயிட்டு, என்ன மட்டும் எதுக்கு பழைய வழியில போகச் சொல்ற?'' என்றார். அப்போது அங்கிருந்த தலித் இளைஞர்கள் கோபத்துடன், “அவங்கள உட்கார வைச்சி பேசுறீங்க. இவங்கள மட்டும் நிக்க வச்சியே பேசுறீங்க. இது என்ன நியாயம்னு தெரியல'' என்று கூறினர். உடனடியாக மரத்தடியில் ஓரமாக கிடந்த ஒரு மரபெஞ்சை கொண்டு வந்து போட்டு, உட்காரச் சொன்னார்கள்.

சாதி இந்துக்கள் எதற்கும் விட்டுக்கொடுக் காத நிலையில் வட்டாட்சியர், “அந்த வழியை காட்டுங்க'' என்று கூறி எழுந்தார். அருகில் அழைத்துச் சென்றார்கள். ஓடை போன்று ஒத்தையடி பாதையாய் இருந்தது. இருபக்கமும் முட்செடிகள் வளர்ந்து பாதையை மேலும் குறுகலாக்கியிருந்தது. தனியாக இருவர் நடந்து சென்றாலும் குனிந்தே செல்ல முடியும். இதைக் கண்ணுற்ற வட்டாட்சியர் மீண்டும் சாதி இந்துக்களிடம், “இப்ப பாடையை தூக்கிட்டுப் போறதுக்கு அந்த வழி பத்தாது. பொது வழியில போகவிடுங்க. இந்த ஒரு தடவ மட்டும் விடுங்க. நான் தாலுக்கா ஆபிசுல கூட்டம் ஏற்பாடு பண்றேன். அங்க வந்து மத்தத பேசிக்கலாம்'' என்றார். “இல்லன்னா நான் போலீச வச்சி தூக்கிடுவேன்'' என்றார். சாதி இந்துப் பெரியவர்கள் அமைதியாக இருந்தனர்.தலித்துகளுக்கான ஒத்தையடி சுடுகாட்டுப் பாதை

அப்போது வட்டாட்சியர், “அந்த முள்ளு, மரத்த எல்லாம் நீங்களே எடுக்கிறீங்களா, இல்ல நாங்க எடுக்கவா?'' என்று கேட்டார். சாதி இந்துக்கள் எதுவும் சொல்லாமல் சென்றனர். வட்டாட்சியர், வருவாய்த் துறை ஊழியர்களைக் கொண்டு அப்புறப்படுத்தினார். ஜோதியின் இறுதி ஊர்வலம் பொதுப்பாதையை நோக்கி நகரத் தொடங்கியது. சாதி இந்துக்கள் ஒன்று கூடி மீண்டும் தடுக்க முயன்றனர். ஆனால் போலிசார் தடுத்து நிறுத்தி, சில அடி தூரமே உள்ள பொதுப்பாதையில் தலித்தின் சவ ஊர்வலத்தை நடத்த உதவினர்.

வீட்டிலிருந்து கிளம்பி, நடு வழியில் நான்கு மணி வெயிலில் வாடி கவலையுற்றாலும், ஜோதியின் பிணம் பொதுப்பாதையில் போனதின் கொண்டாட்டமும், மகிழ்ச்சியும் தலித் இளைஞர்கள் முகத்தில் இறப்பின் சோகத்தையும் மீறி ஊடாடியது. பொதுப்பாதையை தாண்டியதும், வருவாய்த் துறை அதிகாரிகள் புறப்பட்டனர். சாதி இந்துக்களுக்கான சுடுகாடு முடிந்தது. மிகவும் மேடான பகுதியில், நல்ல வழிபாட்டையுடன், எரி தகன மேடை உட்பட அனைத்து வசதிகளுடனும் அவர்களுடைய சுடுகாடு இருக்கிறது. ஆனால், மழைநீர் தேங்கி நிற்கும் கழிமுகம் என்கிற இடத்தில், உரிய வழியில்லாமல் முட்களை மிதித்து நடந்து சென்று தலித்துகளுக்கான சுடுகாட்டில் இறுதிச் சடங்கை முடித்தனர்.

இந்த சாதிய வன்கொடுமை நிகழ்வைத் தெரிவித்து, பொதுப்பாதையில் தலித்தின் பிணம் செல்ல முதற்காரணமாக இருந்த விடுதலைச் சிறுத்தைகளின் ஒன்றிய அமைப்பாளர் ஆதவன் நம்மிடம், “இந்த ஊர்ல கொஞ்ச நாளாவே இந்தப் பிரச்சனை இருக்கு. அதனால போலிசுக்கு சொன்னோம். ஆனா வெறும் அஞ்சே போலிசார் வந்தாங்க. நாங்க எவ்வளவோ பேசிப்பார்த்தோம் . அந்த ஓடை வழியா எடுத்துக்கிட்டு போக சுத்தமா வழியில்லன்னு சொன்னோம். இடது பக்கம் திரும்பித்தான் சுடுகாட்டுக்குப் போகணும். அங்க நான்கு வன்னியர் வீடுகள் இருக்கு. அந்த வீடுகள் கிட்ட மோளம் அடிக்காம அமைதியா போறோம்னு சொல்லியாச்சு. கேட்கல. இந்த ஊர் வட்டமா இருக்கும். வட்டத்துக்கு வெளியில் ஒரு ஓரமா காலனி இருக்கு. காலனி வழியாதான் சாதி இந்துக்களின் பிணம் போகும். அப்போ, காலனில இருக்கிற வீட்டுக்குள்ள பொணத்துல இருக்குற மாலையை எல்லாம் தூக்கி வீசுவாங்க. ஆனா எங்களோட பொணம் ஊர்த்தெருவுல போகாது. ஊரைத்தாண்டி உள்ள சாலை வழியாத்தான் போகும்'' என்றார்.

70, 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்து அந்த ஓடை வழியாகத்தான் இரண்டு சமூகத்தினரின் பிணங்களும் போய்க் கொண்டிருந்த நிலையில், ஊராட்சிகள் வலுப்பெறத் தொடங்கிய 10 ஆண்டுகளுக்கு முன்பு, சாலை வசதிகள் உருவாக்கப்பட்டதும், சாதி இந்துக்கள் அந்த சாலை வழியாக பிணத்தை தூக்கிச் சென்றனர். தலித்துகளை மட்டும் பழைய வழியிலேயே கொண்டு செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்த, அதை மறுத்து இப்போது பொதுப்பாதையில் பிணம் சென்றதால், ஊரில் உள்ள 3 கடைகளிலும், தலித்துகளுக்கு பொருட்கள் தரக்கூடாது என்று சாதி இந்துக்கள் முடிவெடுத்தனர். பிறகு ஊராட்சி மன்றத் தலைவரையும், கிராம நிர்வாக அலுவலரையும் அழைத்து, தலித்துகள் ஏதேனும் சமூகப் புறக்கணிப்பிற்கு ஆளானால், பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று மக்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

சாதி இந்துக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி தலித் பிணத்தை பொதுப்பாதையில் கொண்டு செல்லும் தலித்துகள்மேலும் ஊரில் உள்ள சந்திரா டீ கடையில், தலித்துகளுக்கு கண்ணாடி தம்ளரிலும், சாதி இந்துக்களுக்கு சில்வர் தம்ளரிலும் தேநீர் கொடுத்து, தீண்டாமையை கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த வன்கொடுமையினை, தேசிய முற்போக்கு (?) திராவிட கழகத்தைச் சேர்ந்த பரந்தாமன் என்பவர் தலைமையில், குப்புசாமி, வெங்கடேசன், சுந்தர், எட்டியப்பன், ரவி,செல்வம் உள்ளிட்ட வன்னியர் சமூகத்தினர் கூட்டாக நிகழ்த்தியிருக்கிறார்கள். மறுநாள் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த அமைதிக் கூட்டத்தில், பொது வழியினை இரு சமூகத்தினரும் பயன்படுத்துவது என்ற முடிவை சாதி இந்துக்கள் ஏற்றுக் கொண்டு ஊர் திரும்பியுள்ளனர். அடுத்த முறை தலித் மக்கள் பிணம் எடுத்துச் செல்லும்போதுதான் தெரியும், சாதி இந்துக்கள் அந்த முடிவை எந்த அளவிற்கு மதிக்கிறார்கள் என்று.

இறுதி ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தும்போது, கற்கள் கொண்டு தாக்கியதில் 12 தலித்துகள் காயம் அடைந்துள்ளனர். பாதுகாப்பிற்கு வந்திருந்த மரக்காணம் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணனையும் சாதி இந்துக்கள் கற்களால் அடித்துள்ளனர். பாதுகாப்பிற்காக தலித் இளைஞர் ஒருவர் வீசிய கற்களில் சாதி இந்து ஒருவர் காயம் அடைந்துள்ளார். அமைதிக் கூட்டத்தில் இரண்டு புகார்களின் மீதும் வழக்குப் பதிவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.

வன்கொடுமை நிகழ்வு – 2

விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது வெங்கந்தூர். சுமார் 500 தலித் குடும்பங்களும், 5000–க்கும் மேற்பட்ட வன்னியர் குடும்பங்களும் வாழ்கின்ற கிராமம் இது. கடந்த மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலில், சூரப்பட்டு மக்களுக்கு வெங்கந்தூர் கிராமத்தில்தான் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. வாக்களிக்கச் செல்லும் சூரப்பட்டு மக்களிடம், அக்கிரா மத்தைச் சேர்ந்த தணிகாசலம் என்பவர், “நட்சத்திரத்த தவிர வேற எதுக்கு வேணாலும் போடு, அதுக்கு மட்டும் போட்றாத'' என்று கூறியுள்ளார். தேர்தல் முடிந்த பிறகு இதுபற்றி கேள்வியுற்ற தலித் இளைஞர்கள் நான்கு பேர் தணிகாசலத்திடம் “நீங்க எந்த கட்சியிலயும் இல்ல. சூரப்பட்டுல கடை வச்சிருக்கீங்க. எல்லா சாதிக்காரர்களும் வந்துட்டுப் போவாங்க. எதுக்கு அப்படி சொன்னீங்க. நாங்க எல்லாம் தேர்தல்ல நிக்கக்கூடாதா?'' என்று கேட்டுள்ளனர்.

அதற்கு தணிகாசலம் உடனடியாக, “அப்படி சொன்னது தப்புதான். ஏதோ ஊர்க் காரங்க சொன்னாங்கன்றதால அப்படி செஞ்சிட்டேன். வேற எந்த தேர்தல்லயும் நான் எதுவும் செய்ய மாட்டேன்'' என்று கூறி வருத்தம் தெரிவித்துள்ளார். இதைக் கேள்வியுற்ற வெங்கத்தூர் வன்னியர்கள் கொதித்தெழுந்தனர். ஊர் திரும்பிய நான்கு தலித் இளைஞர்களையும் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

இது குறித்து இளைஞர்களில் ஒருவரின் தந்தை இருசன், “தணிகாசலத்துக்கிட்ட பேசிட்டு, பசங்க ஊருக்குத் திரும்பி வந்து கிட்டு இருந்தாங்க. ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே வருவோம். ஊர்த்தெருவ தாண்டிதான் காலனிக்கு வரணும். ஊர்த் தொடக்கத்துல திரவுபதி அம்மன் கோயில் இருக்கு. அந்த கோயில்கிட்ட எங்க பசங்க போனதும், அங்க நின்னுகிட்டு இருந்த வன்னியர்கள் ஒரு பத்து பேர் இருக்கும். கையில கட்டை எடுத்துக்கிட்டு நான்கு பசங்களையும் அடிக்க ஆரம்பிச்சிருக்காங்க, "பறப்பசங்களுக்கு எலெக்ஷன் ஒரு கேடா. எவன் வேணாலும் எங்க வேணாலும் இருக்கட்டும். இங்க நாங்கதாண்டா. பறப்பசங்க எவனுக்கும் இங்க இடம் கிடையாது. பறயனுக்கு ஓட்டுப்போடக்கூடாதுன்னு சொன்னா என்னா புடுங்கிடுவீங்களா'ன்னு அசிங்கமா பேசியிருக்காங்க. வன்னியர்கள் கூட்டமா சேர்ந்துகிட்டு பசங்கள துரத்தி துரத்தி அடிச்சிருக்காங்க. ஒரு கட்டத்துக்கு மேல பசங்க மயங்கி விழுந்துட்டாங்க. காலனியில் இருந்த எங்களாலயும் போய் யாரையும் காப்பாத்த முடியல. போனா எங்களையும் ரவுண்டு கட்டி அடிப்பாங்கன்னு பயம்'' என்கிறார்.

அதன்பிறகு வெகு நேரம் கழித்து அடிபட்ட தலித் இளைஞர்களை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அன்று இரவே கெடார் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் போலிஸ் அதை வாங்கவில்லை. “காலையில ஆஸ்பத்திரிக்கு வந்து போலிஸ் வாக்குமூலம் வாங்குனாங்க. நாங்களும் மறுநாள் காலையில போய் புகார் கொடுத்தோம். நாங்க எழுதின புகாரை மாத்தி வேற மாதிரி எழுதி வாங்கிக்கிட்டாங்க. இதெல்லாம் நடந்துகிட்டு இருக்கும்போதே, மீண்டும் எங்க பசங்க அருண்பாலகிரி, சேகர் என்கிற ரெண்டு பேரை திரும்பவும் வன்னியர்கள் ஒன்றுகூடி அடித்த தகவல் கிடைத்தது.

“சூரப்பட்டிலேயே மடக்கி அடிச்சிருக்காங்க. காலனியில் இருந்து 15க்கும் மேற்பட்ட பெண்களை அனுப்பி, கட்டில்ல தூக்கிட்டு வர ஏற்பாடு செஞ்சோம். அருண் மட்டும்தான் மயங்கின நிலைமல அங்க கிடந்தான். சேகர் எங்கன்னு எங்களுக்குத் தெரியல. ரொம்ப நேரம் தேடி சூரப்பட்டு ரைஸ்மில் ஒன்னுல தவிடு தள்ளுற இடத்தில சேகர் பேச்சு மூச்சில்லாம கிடந்தான். கட்டில் கட்டிதான் தூக்கிட்டுப் போனோம். அருண்கிட்ட இருந்த இரண்டரை பவுன் செயினை வன்னியர்கள் பிடுங்கியிருந்தாங்க. போலிஸ்கிட்ட சொல்லி மீட்டோம்'' என்கிறார் இருசன்.

தாக்கப்பட்டது தலித் இளைஞர்களே என்றாலும் அன்று மாலை ஊர்க்கூட்டம் போட்டு, காலனி ஆட்களை ஊரைவிட்டு தள்ளி வைத்து, ஊர்க் கடையில் எந்தப் பொருளும் வாங்கக்கூடாது என்று தீர்மானம் போட்டனர் வன்னியர்கள். “அதுல இருந்து எங்களுக்கு மளிகைக் கடையில பொருளோ, டீ கடையில டீயோ தருவதில்லை. காலனிக்கு பால் ஊத்துனவரும் வர்ரதில்லை. பள்ளிக்கூடத்துக்கும், ரேஷன் கடைக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகளோடே போயிட்டு இருக்காங்க.

“8ஆவது வரையிலும் படிக்கிற நடுநிலைப் பள்ளி ஊர்ல இருக்கு. இங்க காலனியில இருந்து 50 பேர் அளவுக்கு பசங்க படிக்கிறாங்க. இந்த பசங்களுக்கு தினம் தினம் நோட்டு, பேனா, பென்சில், பேப்பர்னு தேவைப்படுது. காலனியில இருந்து விழுப் புரம் வேலைக்குப் போறவங்ககிட்ட காசு கொடுத்து, வாங்கிட்டு வரச் சொல்றோம். இப்படி படிக்கிற பசங்களுக்கு எந்தப் பொரு ளும் கிடைக்காம இருக்கிறதுதான் பெரிய பிரச்சனையா இருக்கு'' என்கிறார் இருசன்.

இரண்டு வன்கொடுமைத் தாக்குதல்கள் குறித்தும் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. தலித் மக்களை அச்சுறுத்தும் விதமாக இரவு நேரங்களில் பைக்கில் வந்து காலனிக்குள் வன்னியர்கள் ரவுண்டடிக்கிறார்கள். தங்களுக்கு நிகழும் அநீதி குறித்துப் பல முறை எஸ்.பி.க்கும், கலெக்டருக்கும் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. பல திங்கட்கிழமைகள் கலெக்டர் குறை தீர்க்கும் நாளில் மனு கொடுத்திருக்கிறார்கள். இதுவரை இவர்களின் குறை தீர்க்கப்படவில்லை. வெங்கடேசன், துரைக்கண்ணன், முருகன், மீனாட்சி சுந்தரம், ஆறுமுகம், அருணாச்சலம், பாண்டியன் என இந்த 7 வன்னியர்கள் முக்கியமா, முன்ன நின்னு எல்லா வேலையும் செய்றாங்க. இதுல தி.மு.க., பா.ம.க. கட்சிக்காரங்க எல்லாம் இருக்காங்க.

“இதுமட்டுமில்லாம, ஊர் ஏரி பெரிய ஏரி. அதோட குத்தகையில எங்களுக்கும் பங்கு உண்டு. காலங்காலமா இது நடைமுறையில இருந்திருக்கு. 50, 60 வருசத்துக்கு முன்னாடி பங்கு தர்றத நிறுத்தனதால, எங்க காலனில இருந்து ஒரு பெரியவர் வழக்கு போட்டாங்க. அதுல எங்களுக்கு சாதகமா தீர்ப்பாச்சு. ஆனா இதுவரைக்கும் எங்களுக்கு குத்தகை பங்கு தரல. அமைதிக் கூட்டம் ஏற்பாடு செஞ்சாங்க. குத்தகை பங்கு தர ஒத்துக்கிட்டா புகாரை வாபஸ் வாங்கலாம்னு நினைச்சோம். அதுக்கும் அவங்க ஒத்துக்கல. இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த ஊர்காரங்களுக்கு பயந்து கிட்டு வாழறதுன்னு தெரியல. அரசாங்கமும் எங்கள கண்டுக்க மாட்டேங்குது'' என்று ஆதங்கப்பட்டனர் ஊர்மக்கள்.

வன்னியர்களின் வன்கொடுமை வெறியாட்டம் முடிந்து விடவில்லை. அதை அடுத்த இதழில் பார்ப்போம்.

Pin It