தேர்தல் வந்துவிட்டது. பதினைந்தாவது நாடாளுமன்றத் தேர்தல். இந்தியாவின் அதிகாரம் மிகுந்த ஒரு மனிதரை, ஜனநாயக வழிமுறைகளின் வழியாகத் தேர்வு செய்யும் தருணம் நெருங்குகிறது. உலகின் மாபெரும் மக்களாட்சி நெறிமுறைகளை கேலிக் கூத்தாக்கிடும் செயல்களுக்கும், அதைப் பாதுகாத்திட முனைந்திடும் செயல்களுக்குமான ஒரு போர்க்களம் அருகில் வருகிறது. உயர்ந்தவர்களையும், திறமையானவர்களையும் மட்டுமே ஆட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்பது சிறந்ததொரு கருத்துதான். ஆனால், இது ஜனநாயகத்திற்குப் பொருந்தாது. நலிந்தவர்களையும், எளியவர்களையும், ஒடுக்கப் பட்டவர்களையும், பெண்களையும், சிறுபான்மையினரையும் இணைத்துப் பிரதிநிதித்துவப் படுத்துவதுதான் ஆட்சி மன்றம். அதுவே உண்மையான ஜனநாயகம் என்றார் பாபாசாகேப் அம்பேத்கர்.
"தெரு கூட்டுபவர்களுக்கும், அடிமை வேலை செய்பவர்களுக்கும், கீழ்ச் சாதிக்காரர்களுக்கும் சட்டமியற்றுகின்ற இடத்தில் என்ன வேலை?'' என்று திலகரைப் போன்ற காங்கிரஸ்காரர்கள் சொன்னபோது, அம்பேத்கர் வேறுவிதமாக அரசின் அதிகாரத்தைப் புரிந்து கொள்ளும்படி கூறினார். ஜனநாயகத்தின் அடிப்படையானதும், உயிர் மூச்சானதுமான கூறு, அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதுதான் என்பது அவருடைய எண்ணம். உண்மையில் அவருடைய கருத்துதான் ஜனநாயகத்தின் அடித்தளம்!
கருத்தியல் தளத்தோடு மட்டுமே நின்று போய்விடாமல் அதை செயலாக்குவதற்கான வழிமுறைகளை சட்டமாக்கியதன் மூலம் – இந்திய ஜனநாயகத்தின் தந்தையாக அம்பேத்கர் மிளிர்கிறார். இந்தியாவைப் பொருத்தவரை, அவரிடமிருந்துதான்ஜனநாயகத்தின் வரலாறு தொடங்குகிறது. இன்று அதிகாரப்பரவல் உருவாகியிருக்கிறது. எளிய மனிதர் தொடங்கி, சமூகத்தின் உயர் மட்டங்களிலிருந்து வருகின்ற மனிதர்கள் வரை, தேர்தல் களத்தில் போட்டிப் போடுகிறார்கள். எல்லோருமே எப்படியாகிலும் அதிகாரத்தின் கருவறைக்குள் நுழைந்து விட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இத்தேர்தலுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. 2,500 கோடி ரூபாய்களை வாக்களிப்பதற்கான கையூட்டாக வேட்பாளர்கள் மக்களிடம் அளிக்கப் போகிறார்கள் என்கிற கணிப்பு, ஜனநாயகத்தின்பால் மதிப்பு கொண்டிருப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்துவதாக இருக்கிறது. 1952 ஆம் ஆண்டில் நடை பெற்ற முதல் மக்களவைத் தேர்தலுக்கு அரசு செலவிட்ட தொகை 10 கோடியே 40 லட்சம். அது கடந்த தேர்தலில் 1,300 கோடி ரூபாயாகியுள்ளது. செலவு இம்முறை பன்மடங்கு அதிகமாகலாம்.
தமது ஞாபக மறதியையல்ல, பகுத்தறிவின்மையை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன என்கிற உண்மை மக்களுக்குத் தெரிவதில்லை. மிகச்சரியான மனிதரை தேர்வு செய்து, ஆட்சிமன்றத்திற்கு அனுப்பும் விடயத்தில் மக்கள் பல நேரங்களில் தோற்றுப் போய் விடுகின்றனர்.
அணி மாறுதல்கள் கூச்சமின்றியும், வெட்கமின்றியும் நடக்கின்றன. சாதி பெரும்பான்மையைப் பார்த்து தொகுதிகளும், ஆட்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். குழாயடிச் சண்டையையும் கூட சில நேரங்களில் மிஞ்சிவிடுகின்றன பிரச்சாரங்கள்! நாள், நட்சத்திரம், ஜாதகம், ராசி என்று எல்லா மூடநம்பிக்கைகளையும் துணைக்கு அழைத்துக் கொள்கின்றன (சில) கட்சிகள். அ.இ.அ.தி.மு.க. எப்போதுமே இதில் முன்னணிதான்! அக்கட்சி அறிவித்திருக்கும் வேட்பாளர்களின் ஜாதகங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று கூட இதை சொல்ல முடியாது, அதை அசிங்கப்படுத்தும் செயல் இது!
இவ்வளவு ஆரவாரங்களோடும், ஆர்ப்பாட்டங்களோடும் தேர்வு செய்யப்படும் அரசு, இந்தியாவில் எதை செய்கிறது? எவற்றை சாதிக்கிறது? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா? இத்தேர்தலில் வாக்களிக்கப் போகும் 71.4 கோடி வாக்காளர்களுக்கு மட்டுமின்றி, வாக்களிக்க முடியாமலும் இருக்கிறவர்களுக்கும் – இக்கட்சிகள் எத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளன? தேர்தல் அறிக்கை என்கிற பொய்களைத் தவிர! உண்மையில் வாக்காளர்களுக்கு அளிக்கப்படப் போவதாகக் கணித்திருக்கும் 2,500 கோடி ரூபாய் கையூட்டுப் பணத்தை விடவும் மோசமானவை, இந்தத் தேர்தல் வாக்குறுதிகளே! வாக்காளர்கள் மறைமுகமாகப் பெற்றுக் கொள்ளும் கையூட்டுப் பணம் கூட, ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு உதவியாக இருந்து விடும். ஆனால், இப்பொய் வாக்குறுதிகள் அவர்களுக்கு எவ்வகையிலும் உதவியாக இருப்பதில்லை.
தேர்தலில் பணம் ஆற்றும் பங்கைக் காட்டிலும் சொற்கள் ஆற்றும் பங்கே அதிகமானது. தேர்தல் வாக்குறுதிகளே மக்களை ஏமாற்றும் ஆபத்தான சட்டவிரோத செயலை செய்கின்றன. தேர்தல் அறிக்கைகளை செயல்படுத்துவதில் ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியும் அக்கறை செலுத்துவதில்லை. பொய்களை எப்படி செயல்படுத்த முடியும்? அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டு அவை தமது ஆட்சியை நடத்தத் தொடங்குகின்றன. குறைந்த விலையில் அரிசி, இலவச தொலைக்காட்சிப் பெட்டி, இலவச கைப்பேசி போன்ற அறிவிப்புகள் வாக்கு அறுவடைக்கானவைதான்.
மாநிலக் கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை, இந்த வகையான அறிவிப்புகளை தமது தேர்தல் அறிக்கையில் சேர்க்கத் தவறுவதில்லை. சில வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அளிக்கின்றன. மக்களும் ஏன் முன்பே நிறைவேற்றவில்லை என்று கேட்பதில்லை. காங்கிரஸ் கட்சி அண்மையில் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்குவதாக சொல்லியிருப்பதும் அப்படியான ஒரு மறுபடி பொய்தான்!
தேர்தலில் ஏதாவது ஒரு கட்சி வெற்றி பெறுவது உண்மைதான். ஆனால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதிலோ, எல்லா கட்சிகளும் தோற்றுப் போய்விடுகின்றன என்பது அதைக் காட்டிலும் உண்மை. நாட்டின் விடுதலைக்குப் பிந்தைய ஆண்டுகளில் எல்லா துறைகளிலும் அடியோடு மாற்றங்கள் நிகழும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், எதிலும் மாறாத நிலையிலேதான் இந்தியா இன்னமும் இருக்கிறது. சாதியை ஒழிக்க இதுவரை எந்த அரசும் முன்வரவில்லை. வன்கொடுமைக் குற்றங்களை முற்றிலும் இல்லாமலாக்குவதில் மண்ணைக் கவ்வியிருக்கின்றன இந்த அரசுகள். பெண்களும், குழந்தைகளும் இன்னமும் அதே நிலையில்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
உழைப்பவர்கள் இந்தியாவில் சுரண்டப்படுவதுபோல, உலக நாடுகள் எவற்றிலும் சுரண்டப்படுவதில்லை. உழவர்களின் விளை பொருளுக்கு இன்னும் கூட அவர்களாலேயே விலையை தீர்மானிக்க முடியவில்லை. விவசாய சங்கங்களுக்குக்கூட அப்படி ஒரு உரிமை இருப்பதாகத் தெரியவில்லை. விவசாயிகளின் வீட்டுக்கே சென்று விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும், குறைந்தபட்ச ஆதார விலை அவற்றுக்கு வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் தனது அண்மைத் தேர்தல் அறிக்கையிலேயே கூட அறிவித்திருக்கிறது. ஆனால், அடுத்த 5 ஆண்டுகளிலே கூட அதை நிறைவேற்றுமா என்பது அய்யத்திற்குரியதுதான். கல்வியில் இருக்கும் ஏற்றத்தாழ்வு இன்னமும் களையப்படவில்லை. இன்னமும் கூட தேவையான அடிப்படை வாழ்வாதார வசதிகளான குடிநீர், சுகாதாரம், வீடு, மருத்துவம் போன்றவை மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஆட்சிகள் அமைகின்றன. மக்கள் ஆளப்படுகின்றனர்.
ஆட்சி மன்றத்திற்குப் போகத் துடிக்கின்ற வேட்பாளர்கள் சுமார் 5,350 கோடி ரூபாய்களை செலவு செய்யப் போவதாக சொல்லப்படுகிறது. செல்வந்த வேட்பாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு அறுபது ஆயிரத்திலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரைக்கும் வாடகைக் கட்டணமாக அளித்து, பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டர்களையே கூட அமர்த்துகிறார்கள்.
வானத்திலிருந்து இறங்கி வரும் தேவதைகளாக தம்மை நம்பிக் கொள்ளும்படி மக்களிடம் கூறுவார்கள் அவர்கள். இப்படி தேர்வு பெற்று செல்கின்ற பிரதிநிதிகளுக்கு அரசு கோடி கோடியாக செலவு செய்கிறது. ஊதியம், படிகள் என்று கோடிக்கணக்காக ஒதுக்கீடுகளை செய்கிறது. அரசு நலத்திட்டங்களோடு இப்பிரதிநிதிகளின் தொகுதி வளர்ச்சிக்கென்றும் கூட நிதியினை ஒதுக்கீடு செய்கிறது. காங்கிரஸ் அரசு 19247.25 கோடிகளை அவ்வாறு ஒதுக்கியது. இந்த நிதி சொந்த சாதி மற்றும் கட்சி நலனுக்காகவே பெரும்பாலும் செலவு செய்யப்படுகிறது என குற்றச்சாட்டுகள் வந்தாலும் ஒதுக்கீடு நிறுத்தப்படவில்லை. இத்தகைய பிரதிநிதிகள் தமது பொறுப்புகளை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்ற அழகை நாடே பார்த்து ரசிக்கிறது! நாடாளுமன்றத்தில் தனது தொகுதிக்காக வினா எழுப்புவதற்குக்கூட கையூட்டு பெற்ற உறுப்பினர்களைப் பற்றி நாம் அறிவோம். இவர்கள்தான் மீண்டும் நம்முன் மேடையேறி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அண்மைக்காலமாய் நாளேடுகளிலும், இதழ்களிலும் வெளியான செய்திகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட, இந்த அரசுகளின் செயலற்ற நிலை நமக்குப் புரிந்துவிடும். 2003 இல் இருந்து 2009 வரைக்குமான நிதிநிலை அறிக்கைகளில், குழந்தைகள் நலத்திட்டங்களுக்கான நிதி 2.30 சதவிகிதத்திலிருந்து 5.35 சதவிகிதத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ஊட்டச்சத்தற்ற குழந்தைகளின் எண்ணிக்கையோ 15லிருந்து 19 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 79 சதவிகிதம் பேர் ரத்த சோகை நோயுடன் இருக்கின்றனர். இந்தியாவில் சுமார் 47 சதவிகித குழந்தைகள் எடைக் குறைபாட்டு சிக்கலுடன் இருக்கிறார்கள். இன்னமும் கூட நம் நாட்டிலே எழுபது சதவிகித குழந் தைகள் கல்விக் கூடங்களை எட்ட முடியாமல்தான் இருக்கின்றனர் (ஆதாரம் : FORCES அறிக்கை "டைம்ஸ் ஆப் இந்தியா', 25.2.2009).
திருச்சி மாவட்டத்திலுள்ள திருமலையான்பட்டியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பொது சுடுகாட்டில் தலித் மக்களால் பிணத்தைப் புதைக்க அனுமதியில்லை. வழக்குரைஞர் ரத்தினம் இதை உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவால், நீதிமன்றம் சாதிப் பாகுபாட்டை கண்டித்திருக்கிறது ("தினகரன்' 25.3.09). உலக காச நோய் நாளான மார்ச் 24 அன்று நமக்கு கிடைத்த செய்தி இதுதான் : மனிதக் கழிவகற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு காசநோய் "பணிப்பரிசாகக்' கிடைக்கிறது. முப்பதிலிருந்து எழுபது சதவிகிதப் பணியாளர்கள் இந்த உயிர்க்கொல்லி நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் ("இந்தியன் எக்ஸ்பிரஸ்', 24.3.2009).
திருநெல்வேலி சங்கரன் கோயில் அருகில் உள்ள செந்தட்டி கிராமத்தில், முப்பிடாதி அம்மன் கோயிலில் வழிபட உரிமை கேட்ட இரு தலித்துகள் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் ("தீக்கதிர்', 8.3.09). ஒரு கேலிச்சித்திரத்தில் வரையப்பட்ட விலங்கின் முகம் ஒபாமா சாயலில் இருந்ததற்காக, அமெரிக்காவில் கடந்த மாதத்தில் பெரும் சலசலப்புகள் கிளம்பின. மேற்சொன்ன செய்திகளுக்காக இங்கு எந்த சிறு சலனமும் இல்லை. எந்த ஒரு வன்கொடுமைக்கும் அரசுகளும், அரசியல்வாதிகளும் பதறுவதில்லை. காய்ப்பேறியதும், சாதி மற்றும் மதங்களின் பிற்போக்கு வைரம் பாய்ந்ததுமான இந்தியாவின் நிலையை அரசின் அறிக்கைகளே ஒப்புக் கொள்கின்றன.
மய்ய அரசின் பதினோராவது அய்ந்தாண்டுத் திட்ட (2007 – 2012) அறிக்கை அப்படியான ஒன்றுதான். அத்திட்டத்தின் கீழ் செயலாற்றும் "பட்டியல் சாதியினர் திறன் வளர்ப்புக்கான பணிக்குழு'வின் அறிக்கை, அண்மையில் தமிழில் வெளிவந்திருக்கிறது. தலித் மக்களின் திறன் வளர்ப்புக் குழுவிற்கு பேராசிரியர் தோரட் தலைவராக இருக்கிறார். கல்வி மேம்பாடு, பொருளாதார உயர்வு, சமூக அதிகாரமயமாக்கல், துப்புரவுப் பணியாளர் நலன், திட்டம் மற்றும் மய்ய அரசின் சிறப்பு நிதி ஆகியவற்றுக்கென இக்குழு மேலும் அய்ந்து துணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிருத்துதாசு காந்தி, இத்துணைக் குழுக்களில் ஒன்றான "திட்டம் மற்றும் மய்ய அரசின் சிறப்பு நிதி ஆணையக்குழு'வின் தலைவராக இருக்கிறார். பெசவாடா வில்சன், பால் திவாகர் போன்றோர் இப்பணிக்குழுவின் முக்கிய உறுப்பினர்களாகவும் இருந்து வருகின்றனர்.
துணைக் குழுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே தமது அறிக்கைகளை 11ஆவது அய்ந்தாண்டுத் திட்டக்குழுவிற்கு அளித்துள்ளதோடு, பரிந்துரைகளையும் செய்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தலின் வாய்ப்பந்தல்களின் ஊடாக, ஆரவாரங்களின் வழியே, பகட்டுகள் மற்றும் பம்மாத்துகளின் இடையே இவ்வறிக்கையைப் படிக்கின்றபோது, தலித்துகளின் தற்போதைய நிலை அதிர்ச்சியளிக்கிறது. அரசு எந்திரம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டதாக அவ்வறிக்கையை நாம் எடுத்துக் கொள்ள முடியும். நேர்மறையாகப் பார்த்தாக வேண்டும் என்றாலோ, விடுதலைக்குப் பிறகு அரை நூற்றாண்டுப் பயணத்தில் சாதியத்தையும், தீண்டாமையையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் களைவதற்காக அரசுகள் மேற்கொண்டிருக்கும் முயற்சியாகவும் கருதிக் கொள்ளலாம்.
அறிக்கையிலிருந்து சில புள்ளிவிவரங்களை நாம் இங்கே பார்க்கலாம். தலித் மக்களில் 80 சதவிகிதத்தினர் இன்னமும் கிராமப் புறங்களிலேயே வசித்து வருகின்றனர். விவசாயத்தை சுய தொழிலாகக் கொண்டிருப்போர் இவர்களில் 16.8 சதவிகிதம்தான். ஆனால், பிறரோ 41.11 சதவிகிதமாக இருக்கின்றனர். கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 75 சதவிகித தலித்துகள் கூலித் தொழிலாளர்கள்தான். தலித் மக்கள் கிராமப் புறங்களில் 35 சதவிகிதமும், நகர்ப்புறங்களில் 39 சதவிகிதமும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் தலித்துகள்தான் மிக அதிக அளவில் வறுமையில் (60 சதவிகிதம்) உழல்கிறார்கள். நகர்ப்புறங்களிலும் இதே நிலைதான். அங்கு தற்காலிக வேலை செய்யும் தலித்துகளிடையே (69.45 சதவிகிதம்) வறுமை அதிகமாக உள்ளது.
தலித் பெண்களின் கல்வி நிலை இன்னமும் கூட 50 சதவிகிதத்தைக் கடக்கவில்லை (41.9 சதவிகிதம்). பிற சமூக குழந்தைகளை விடவும் தலித் குழந்தைகள் குறைவாகவே பள்ளியில் சேர்கிறார்கள். உயர் கல்வியில் தலித்துகளின் நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அவர்களின் பதிவு விகிதம் (எஉகீ) 5.0 சதவிகிதம்தான். ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் இறப்பு விகிதம், பேறுகால பெண்களின் இறப்பு ஆகியவை தலித்துகள் இடையிலேதான் கூடுதலாக உள்ளன. தீண்டாமைக் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் இவ்வறிக்கை சுட்டுகிறது. தொழில் செய்வதிலும், கூலி பெறுவதிலும் நிலவும் பாகுபாடுகளை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இவ்வறிக்கையில், நாடெங்கிலும் தலித் மக்களுக்கு எதிராக நிலவி வரும் சில வழக்கங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன : தேவதாசி மற்றும் ஜோகினி முறைகள், ஆந்திராவில் இன்றளவும் நிலவி வருகின்றன. இவ்வழக்கப்படி, தலித் பெண்கள் கிராம கடவுளர்க்கு தாசிகளாக நேர்ந்து விடப்படுகின்றனர். இப்பெண்கள் பாலுறவுத் தொழிலாளர்களாகப் பின்னர் பாவிக்கப்படுகின்றனர். தொழில்களில் கூட தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. 30 சதவிகித இந்திய கிராமங்களில் தலித்துகள் வீடு கட்டும் பணியில் அமர்த்தப்படுவதில்லை. கேரளாவில் தலித் மக்கள் வீடு கட்டும் பணிக்கு அனுமதிக்கப்பட்டாலும், இறுதியில் தீட்டுக்கழிக்கும் நோக்கத்துடன் ஒரு சடங்கு நடத்தப்படும் வழக்கம் இருக்கிறது. பீகார் போன்ற மாநிலங்களில் தண்ணீர் எடுத்து வர, சமையல் செய்ய, தானியம் புடைக்க, வீட்டு வேலை செய்யும் தலித் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஓடை மற்றும் ஏரி நீரை பயன்படுத்த அனுமதி இல்லாததால், தலித் விவசாயிகள் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் பல மாநிலங்களில் நிலவுகிறது.
இவ்வறிக்கையில் தரப்பட்டிருக்கும் தீண்டாமைக் குற்றங்கள் பற்றிய தகவல்கள் கலக்க மூட்டுகின்றவையாக இருக்கின்றன. உத்திரப் பிரதேசதம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, தமிழ் நாடு, ஆகிய மாநிலங்களே தலித்துகளுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவதில் முதல் அய்ந்து இடங்களில் இருக்கின்றன. 2001இல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் குடியுரிமைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 33,501. உத்திரப்பிரதேசத்தில் மட்டும் ஆண்டுக்கு 10,732 குற்றங்கள் பதிவாகின்றன. இவற்றில் 423 கொலைக் குற்றங்கள். இந்திய அளவில் தலித் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் மாநிலங்களில்தான், அம்மக்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகமாகவே நிகழ்த்தப்படுகின்றன என்கிறது அறிக்கை.
தலித் மக்களை எல்லா நிலைகளிலும் உயர்த்துவதை இலக்காகக் கொண்டிருக்கும் இத்துணைக்குழு அறிக்கை – பொருளாதார முன்னேற்றம், தரத்துடன் கூடிய வெற்றி, சிறப்பான வெற்றித்திறன், அதிகாரம் பெற்று வலுவடைதல், தீண்டாமைக் கொடுமையொழித்தல், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றைத் தனது அளவுகோல்களாகக் கொண்டிருக்கிறது. மேலும் ஆக்கப்பூர்வமானதும், சிறப்பானதுமான பரிந்துரைகளையும் அளித்துள்ளது (பெட்டிச் செய்தி).
சிறப்பு உட்கூறுத் திட்டத்தை செயல்படுத்தவும், கண்காணிக்கவும், செய்த பணிகளை மதிப்பீடு செய்யவும் தலித் மேம்பாட்டுத் துறைக்கு எந்த விதமான அதிகாரமும் வழங்கப்படாதது போல், இத்துணைக் குழுக்களின் பரிந்துரைகளையும் கிடப்பில் போட அரசு கள் வழிகோலும் எனில், இன்னொரு அறிக்கை இதைப் போன்றே சில காலம் கழித்து வெளியாவதைத் தவிர, வேறு மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடாது.
சுமார் 10 லட்சம் கோடி ரூபாய், 11 ஆவது அய்ந்தாண்டுத் திட்டத்துக்கென ஒதுக்கப்படுகிறது. அதில் தலித்துகளுக்கு விகிதப்படி 1.6 லட்சம் கோடிகள் ஒதுக்கப்படலாம். தமிழகத்தில் இது 19,000 கோடியாக இருக்கும். இத்தொகை பல துறைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. பகுத்துப் பார்க்க இயலாதவை, பகுத்துப் பார்க்கக் கூடியவை என்ற வரையறைகளில் பல துறைகள் ஒதுக்கீட்டுத் தொகையை தலித்துகளின் மேம்பாட்டுப் பணிகளுக்கு வழங்குவதே இல்லை. மய்ய அரசில் இருபது துறைகளும், மாநில அரசில் 18 துறைகளும் அவ்வாறு தலித் மக்களுக்குரிய நிதியை மறுத்து வருகின்றன. தலித் மக்களுக்கான சிறப்பு உட்கூறுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளே முழுமையாக செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டு விடுகின்றன.
புள்ளிவிவரப்படி, 1997–98 ஆண்டில் 588 கோடி ரூபாய்; 1998–99 இல் 643 கோடி ரூபாய்; 1999–2000இல் 840 கோடி ரூபாய்; 2000–01இல் 887 கோடி ரூபாய் மற்றும் 2004–05இல் 1,363 கோடி ரூபாய் என்ற அளவில் சிறப்பு உட்கூறுத் திட்டத்திற்கு கடந்த ஆண்டுகளில் 2005 வரையிலான 8 ஆண்டுகளில், நிதி நிலை அறிக்கையில் சுமார் 20 சதவிகிதம் என்ற அளவில் 7,143 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அவ்வாறு ஒதுக்கவில்லை. தலித்துகளுக்கான அந்த நிதி பறிபோகிறது.
"தாட்கோ'விற்கு என 2000ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 67.98 கோடி ரூபாய் செலவிடப்படாமல் வீணடிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு சிறப்பு உட்கூறுத் திட்ட மானியத் தொகையாக அளித்து வருகிறது. அதைப் பெரும்பாலான மாநிலங்கள் பயன்படுத்துவதில்லை. கணக்குப்படி, 1991 முதல் 96 வரை சுமார் 80.96 கோடி ரூபாயை தமிழக அரசு பயன்படுத்தாமல் விட்டிருக்கிறது. துப்புரவுப் பணியாளர்கள் மேம்பாட்டிற்கென 2000 ஆம் ஆண்டில் சமூக நீதி மற்றும் அதிகார மளிக்கும் துறை தமிழக அரசுக்கு வழங்கிய 40.18 கோடியில் 18.57 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை. 2009வரை இத்தொகையை கணக்கிட்டால் இவ்வாறு செலவழிக்கப்படாத தொகை 100 கோடிகளைத் தாண்டலாம். இதோடு மட்டுமின்றி சிறப்பு உட்கூறுத் திட்டத்திற்கென மய்ய அரசு மாநிலங்களுக்கு அளிக்கும் தொகையில் செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்படும் தொகை, பல கோடிகளைத் தாண்டுகிறது. 1997 – 2000 வரை அப்படி திருப்பி அனுப்பப்பட்ட தொகை மட்டுமே சுமார் 1,272.67 கோடி ரூபாய் ஆகும். (ஆதாரம் : சமூகக் கண்காணிப்பகம்)
தலித்துகள் தன்னிறைவு அடைந்து விட்டார்கள் என்று கூறி, இனி நிதி ஒதுக்கீடு செய்யாமல் விடுவதற்கான சதியன்றி இச்செயல்கள் வேறொன்றுமில்லை. நிலவும் சூழலில் இத்துணைக் குழுவின் அறிக்கையும் சட்ட வடிவமாக்கப்படாமலோ, ஆணை களாக்கப்படாமலோ போகலாம். அப்படி நடக்குமெனில், தேர்தல் வாக்குறுதிகளைப்போல இந்த அறிக்கைகளும் நீண்டகாலப் பொய்யுரைதான்! திட்டங்களை ஒழுங்காக செயல்படுத்தாத நிலைதான் தலித்துகளின் முன் இருக்கும் சிக்கல். தலித் மக்களுக்கான பெரும்பாலான திட்டங்களும், சட்டங்களும், துரு பிடித்தும், செல்லரித்தும் கிடக்கின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகளை நம்புவதைக் காட்டிலும், இருக்கும் திட்டங்கள் செயலாக்கம் பெறுகின்றனவா என கண்காணித்து செயல்படுத்துவதில்தான் தலித் மக்களின் நிலை மாற்றம் உள்ளடங்கி இருக்கிறது.
தலித் தேசிய வங்கி ஏற்படுத்தப்பட வேண்டும்
பதினொராவது அய்ந்தாண்டுத் (2007 – 2012) திட்டக் குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியப் பரிந்துரைகள் :
1. தலித் மக்களுக்கான கல்வி, பொருளாதார முன்னேற்றம், வன்கொடு மைத் தடுப்பு / நடவடிக்கை போன்ற வற்றுக்கென தனியே ஒரு "சமூகத்திறன் வளர்ப்பு ஆணையம்' அமைக்கப்பட வேண்டும். இதற்கு ஆட்சியர் நிலையிலுள்ள அதிகாரி தலைவராக இருக்க வேண்டும். இவர் 1995 ஆம்ஆண்டு அரசு விதிப்படி, இணைப்பு அதிகாரியாக (Nணிஞீச்டூ Oஞூஞூடிஞிஞுணூ) இருந்து செயல்பட வேண்டும்.
2. தீண்டாமையை ஒழிக்க, தேசிய அளவிலான பரப்புரையை கரும்பலகைத் திட்டம், போலியோ ஒழிப்பு திட்டம் ஆகியவற்றுக்கு இணையாக ஒலிபரப்புத் துறை மூலம் மேற்கொள்ள வேண்டும்.
3. ஒவ்வொரு அமைச்சகமும், தேசிய தலித் ஆணையத்துடன் கலந்தாலோசித்து, தலித் மக்களுக்காக தனி வரவு செலவுத்திட்ட அறிக்கையை நிதிநிலை அறிக்கையுடன் அளிக்க வேண்டும்.
4. தலித்துகளுக்கென 1000 கோடி ரூபாய் மூலதனத்துடன் ஒரு தேசிய வங்கி அமைக்கப்பட வேண்டும்.
5. மரபு சார்ந்த தொழில் பயிற்சிகளுக்குப் பதிலாக, புகைப்படம் எடுத்தல், பயண முகவர், தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் தலித்துகளுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
6. கழிவகற்றுபவர் மற்றும் உலர் கழிப்பறைகளை கட்டுதல் (தடை) சட்டம் 1993இன் பிரிவுகள் 3(1), 4, 17, 18 ஆகியவற்றை திருத்த வேண்டும் (இச்சட்டத்தின் கீழ் இந்தியாவில் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது).
7. இடஒதுக்கீட்டை (மய்ய அரசில்) 15லிருந்து 16.23 சதவிகிதம் என உயர்த்த வேண்டும்.
8. ராணுவப் பணிகளில் இடஒதுக்கீட்டுக்கு சட்டமியற்ற வேண்டும்.
9. தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும்.
10. தலித் மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க உதவி, முனைவர் பட்ட ஆய்வு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ராஜிவ் காந்தி கல்வி நிதி உதவி, அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டு சட்டம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.
***
மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் - பகுத்துப் பார்க்கக் கூடியவை, பகுக்கவியலாதவை என்கிற முரண்பாட்டை முன்னிறுத்தி – தலித் மக்களுக்குரிய திட்டத் தொகையை கீழ்க்காணும் துறைகள் தொடர்ந்து மறுத்து வருகின்றன
மாநில அரசுத் துறைகள்
வேளாண்மைத் துறை
வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை
தரைவழிப் போக்குவரத்துத் துறை
வேளாண்மை ஆய்வு – கல்வி
எரிசக்தித் துறை
கனரக மற்றும் சிறுதொழில் துறை
சுற்றுலாத் துறை சுற்றுலாத் துறை
கல்வி (குறிப்பாக உயர் கல்வி)
உணவுப்பொருள் வழங்கல் துறை
மருத்துவ நலத்துறை
கலை மற்றும் பண்பாட்டுத் துறை
சமூக நலத்துறை
தொழிலாளர் மற்றும் தொழில் துறை
செய்தித் தொடர்புத் துறை
சமூக மற்றும் மக்கள் நலத் துறை
நீர்ப்பாசனம் மற்றும் மீன்வளத் துறை
விண்வெளி ஆராய்ச்சித் துறை
நிலச் சீர்திருத்தத் துறை
மத்திய அரசுத் துறைகள்
நிலக்கரி, சுரங்கத் தொழில் துறை
எக்கு உருக்காலைத் துறை
தரைவழிப் போக்குவரத்துத் துறை
வேளாண்மை ஆய்வு – கல்வி
ரசாயன / பெட்ரோலியத் துறை
விமானப் போக்குவரத்துத் துறை
நுகர்வு வாணிபத் துறை சர்க்கரை மற்றும் உணவு எண்ணெய்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அஞ்சல்வழித் தொடர்புத் துறை
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியேõபதி
கலை மற்றும் பண்பாட்டுத் துறை
பொதுத்துறை நிறுவனங்கள்
கனரகத் தொழில்கள் துறை
செய்தித் தொடர்புத் துறை, அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு
அணுசக்தித் துறை
கடலாராய்ச்சி மற்றும் மேம்பாடு
விண்வெளி ஆராய்ச்சித் துறை
நிர்வாகச் செயல்பாட்டுத் துறை