“அமைச்சர் நத்தம் விசுவநாதனின் பெயரிலி ( பினாமி ) ‘ஆடு மேய்த்த’ அன்புநாதன் வீட்டில், ஐந்து கோடி ரூபாய் பணம் சிக்கியது”, “அமைச்சர் விசுவநாதனுக்குச் சொந்தமாக ஆங்காங்கில் ஒரு தீவு” என்பன போன்றவை பரபரப்பான செய்திகளாகப் பேசப்பட்டாலும், இதில் யாருக்கும் அதிர்ச்சியில்லை.
“அ.தி.மு.க. பணப் பட்டுவாடாவைப் பற்றி புகார் சொல்ல தி.மு.க.வுக்கு என்ன தகுதி இருக்கிறது? விருந்து இலைக்கு அடியில் வாக்குக்குக் கையூட்டு கொடுத்து புதிய வரலாற்றையே படைத்தது தி.மு.க. அல்லவா?” என்ற விடைகள் மூலம் இவை சமனப்படுகின்றன.
கையூட்டைத் தடுக்க முடியாது; அப்படி கொள்ளையிட்ட பணத்தில் நாமும் கொஞ்சம் பங்கு பெறலாம் என்பதுதான் எளிய கட்சித் தொண்டர்களிலிருந்து வாக்காளர்கள் வரையிலும் இருக்கிற மனநிலையாகும்.
இவ்வாறு தேர்தல் சனநாயகம் என்பது பணநாயகமாக மாறி பல காலம் ஆகிவிட்டது. இது தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டுமல்ல. உலகெங்கிலுமுள்ள தேர்தல் சனநாயக நாடுகள் பெரும்பாலானவற்றில் பணநாயகமே கோலோச்சுகிறது.
மக்கள் வாக்களித்து ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சனநாயக ஆட்சிமுறை வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் ஒரு முற்போக்கான பாய்ச்சலாக அமைந்தது உண்மைதான். இதன் மூலம் வாரிசுரிமை வழியில் வந்த அரசர்கள் - அரசிகள் கையிலிருந்த இறையாண்மை, மக்கள் கைக்கு மாறியது.
வரலாற்றின் ஒரு கட்டத்தில் முற்போக்குப் பாத்திரம் வகிக்கும் எந்தக் கட்டமைப்பும் காலப்போக்கில் பிற்போக்குத் தன்மை அடைவது இயல்பானது. அந்த வகையில் தேர்தல் சனநாயகமும் அதன் வரலாற்று முதுமையை அடைந்து வருகிறது. தன் பொருத்தப்பாட்டை இழந்து வருகிறது.
குறிப்பாக 1990களில் தலையெடுத்த உலகமயப் பொருளியல் வலுப்பெற்ற பிறகு, சனநாயகத்தின் இந்த பணநாயகத்தன்மை மிக விரைவாகத் தீவிரம் பெற்றது.
மக்களாட்சியை முன்னெடுத்துச் செல்லும் முதன்மை ஊர்தியாக இருந்தவை அரசியல் கட்சிகள்தாம். மக்களாட்சி மாண்பை கட்டிக் காக்கும் அரணாகவும் அரசியல் கட்சிகள் திகழ்ந்தன.
ஆனால், கால ஓட்டத்தில் இக்கட்சிகள் உள்சனநாயகத்தை இழந்தன. பல நாடுகளில் கட்சிகளுக்குள் வாரிசு வழித் தலைமை இடம்பெற்றது. கட்சிக்குள் பதவி பெறுவதற்கும் பணம் கைமாறியது.
மக்கள், மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சி என்பது பெயரளவுக்குச் சுருங்கியது.
1990களில் மலர்ந்த தகவல் தொழில்நுட்பப் புரட்சி இந்த பணநாயகத்திற்கு உற்ற கருவியாக உதவி புரிந்தது. தலைவர்கள் ஆண்டவனுக்கு நிகரான வல்லமை படைத்தவராக இப்புதிய கருவிகளின் உதவி கொண்டு ஊதிப் பெருக்கம் செய்யப்பட்டார்கள்.
மக்கள் பார்வையாளர்களாகவும், பயனாளிகளாகவும் மாற்றப்பட்டனர்.
மக்கள் தங்கள் தலைவிதியைத் தலைவர்களிடம் ஒப்படைத்துவிட்டு செயலற்று கைகட்டி நின்றார்கள். அது ஒரு வகையில் மக்களுக்கு வசதியாகவும் இருந்தது. உலகைச் சுரண்டிக் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை இலவசங்களுக்குச் செலவிடுவதன் மூலம் ஆட்சியாளர்களின் கைகளை எதிர்பார்த்து நிற்கும் பயனாளிகளாக மக்கள் மாற்றப்பட்டனர். அதுவும் மக்களுக்கு வசதியாக இருந்தது.
இவ்வாறு ஒட்டுமொத்தமாக தேர்தல் சனநாயகம் அதன் உயிர்ப்பை இழந்தது. குழும நிறுவனங்களின் இன்னொரு செயல்களமாக தேர்தல் மாறியது.
கட்சிகள் குழுமங்களின் மடியில் வளர்ந்தன. கட்சிகளும் குழுமங்களும் இரண்டறக் கலந்த ஒட்டுண்ணி முதலாளியம் உலக நாடுகளெங்கும் கோலோச்சுகிறது.
இந்த நிலையில், உண்மையான மக்களாட்சியை நிறுவுவதற்கு மாற்று வடிவங்கள், மாற்று அரசு முறைகள் தேவைப்படுகின்றன.
சில இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அந்தந்த நாட்டு வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப சனநாயகத்தை மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
இப்போதுள்ள நடுவப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை இந்த பணநாயகம் வளர்வதற்கு ஏற்றச் சூழலை வழங்குகிறது. இதில் மாற்றம் வராமல் எந்த உருப்படியான மாற்றும் வராது.
தமிழ்த் தேசியப் பேரியக்கம், தனது கொள்கை அறிக்கையில் கூறியிருப்பது கவனங்கொள்ளத்தக்கது. அது கூறுவதாவது:
· பொதுத் தேர்தல் வழியாக அரசாங்கம் அமைத்தல், விகிதாச்சார அடிப்படையில் தேர்வு முடிவுகள் அமைதல்,தேர்ந்தெடுத்தவர்களைத் திருப்பி அழைக்கும் உரிமை வழங்கல், உறுப்பினர்களுக்கு நிர்வாகப் பொறுப்பு இருக்கச் செய்தல்.
· நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முழுநேர ஆட்சிமன்ற உறுப்பினர்கள் அல்லர். அவர்களுக்கு சம்பளம் கிடையாது. அவர்கள் சட்டம் அனுமதிக்கும் எந்தத் தொழிலையும் செய்யலாம். கூட்டத்தில் பங்கேற்கும் நாள்களில் மட்டும் படி வழங்கப்படும்.
· காலனி ஆட்சி அறிமுகப்படுத்தி தற்போது நடப்பிலுள்ள நிர்வாகக் கட்டமைப்பு முறையை முற்றாக மாற்றியமைத்தல், வருவாய்த் துறை நிர்வாகப் பிரிவுகளைக் கலைத்தல் (இப்போதுள்ள மாவட்ட ஆட்சியர் முறையைக் கலைத்தல்), அதிகாரத்தைப் பரவலாக்கும் வகையில் வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை ஆகியவற்றை இணைத்து ஒன்றிய அளவிலான புதிய நிர்வாக ஏற்பாடுகளைச் செய்தல்.
· இறையாண்மையுள்ள தமிழ்த் தேசத்திற்குள் ஆட்சிமுறை மக்களுக்கு நெருக்கமானதாகவும், அனைத்து மக்களின் பங்கேற்பு உரியவாறு அமையும் வகையில் ஒரு கூட்டாட்சி முறைமையாகவும் நிறுவப்படுதல். வரலாற்றுக் காரணங்களைக் கவனத்தில் கொண்டு தனிச்சிறப்பு மண்டலமாக புதுச்சேரியை, தமிழ்த்தேசத்திற்குள் இருக்கச் செய்தல்.
· மக்கள் கண்காணிப்புக்கு உட்பட்டதாக காவல்துறை இருக்கும் வகையில், சனநாயக ஏற்பாடுகளைச் செய்தல். அதேவேளை, அதிகாரத்தில் இருப்பவர்களின் ஏவல் துறையாக செயல்படாமல் இருக்க அத்துறைக்கென தனி அதிகார வாரியம் அமைத்தல்.
· நிர்வாகம், நீதித்துறை அனைத்தும் மக்கள் கண்காணிப்புக்கு உட்பட்டதாக மாற்றும் வகையில் - திட்டமிடுதல், செயலாக்குதல் ஆகிய அனைத்திலும் உள்ளூர் மட்டத்தில் மக்களுக்கு நேரடி வாய்ப்புகளை வழங்கிட சட்ட ஏற்பாடுகள் செய்தல்.
மேற்சொன்ன நடவடிக்கைகளில் பலவற்றை இப்போதே தொடங்குவதற்கு மக்கள் இயக்கங்கள் குரல் கொடுக்க வேண்டும். அதிகம் போனால் ஓர் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் மக்கள் ஊடாடும் அனைத்து நிர்வாக - நீதித் துறை ஏற்பாடுகளும் இருக்க வேண்டும்.
அரசின் வரவு - செலவுத் திட்டத்திலிருந்து அனைத்து திட்டங்களும் மக்கள் கருத்து கூறி, பங்கேற்பதுடன் உருவாக வேண்டும். அவற்றின் நிறைவேற்றத்திலும் மக்கள் பங்கேற்பு நெருக்கமானதாக இருக்க வேண்டும்.
அதற்கு ஏற்ப தேர்தல் தொகுதிகள் சிறியனவாக இருக்க வேண்டும். கட்சிகளின் செயல்பாடுகள் மக்கள் கண்காணிப்புக்கு ஏற்ற வகையில் திறந்த முறையில் இருக்க வேண்டும்.
இவ்வாறான பங்கேற்பு சனநாயகம்தான் உண்மையான மக்களாட்சியாகத் திகழும்.
அதுவரை தேர்தல் திருவிழாக்கள் கருப்புப் பணப் புழக்கத்தின் களங்களாக இருப்பதும், ஆட்சிமுறை சட்டப் புறம்பான வழியில் கொள்ளையடிப்பவர்களின் கைகளில் இருப்பதும் தவிர்க்க முடியாதது. ஊழல் ஒழிப்பு என்பதும் வெற்றுக் கூச்சலாகவே இருக்கும்.
அடிப்படையில் அறம் சார்ந்த விழுமியங்களோடு மக்கள் வளர்த்தெடுக்கப்படுவது அனைத்திற்கும் முதல் தேவையாகும்.