ஆற முடியாமல் அலைகிறது
பொங்கும் மனத்தின் கோபம்

சுவாசப் பைகளை நிரப்பும் காற்று
புயலெனச் சீறி பெருமூச்சாகிறது

தொலைந்து போன வாழ்வுகளை அபகரித்து
குப்பையில் கொட்டும் கொடும் வியாதி உங்களுடையது

தளிர்களின் கைகளில் சூலத்தைத் திணிக்கும்
எண்ணக்குழிகள் படுபாதாளமானவை

படிப்பதற்குப் பயன்படுத்த வேண்டிய அக்கைகளை
இடிப்பதற்குத் தயாராக்கும் இதயமற்றவர் நீங்கள்

ஒளியின் ஊற்றான கண்களை
இருளுக்கு இடமாக்குகின்ற அழுகல் அறிவு உங்களுடையது

நிழலை எரித்து குளிர் காயும்
மடத்தனம் நிறைந்தது உங்கள் வாழ்வு

குழந்தைகளின் மெல்லிறகு மூளைகளில்
மதக்கனத்தை தூக்கிப் போடும் உங்களை
ஒப்பிட விலங்குகள் ஏதும்
உலகில் இல்லை என்பதால்
சுரக்கும் எச்சிலை துப்பிட பயன்படுத்துகிறோம்.

Pin It