அர்ப்பணிப்பு

பாபாசாகேப் –

மன்னித்துவிடு என்னை!

நீ சிலைவணக்கத்தை வெறுத்தவன்.

உன் தொண்டர்கள் உன்னை வணங்குவதற்கு

அனுமதித்ததில்லை நீ.

நீ சென்றபிறகு அக்குற்றத்தைப் புரிந்தேன் நான்

உன் சாதனைகளைக் கூறும்

கவிதைகளை எழுதாமல்

என்னால் இருக்க முடியவில்லை.

பாபாசாகேப், உன் முன்னால் தலை குனிகிறேன்

நீ என்ன தண்டனை கொடுத்தாலும் சரி

வாழ்க்கை முழுவதும் அனுபவிக்கத் தயாராய் இருக்கிறேன்

பழங்கவிதைகளை வாசித்த ஒருவன்

சபிக்கப்பட்ட மனிதர்கள் மீண்டும்

தங்களின் பழைய நிலையை அடைந்திட

உதவிய சிலரை சந்தித்திருப்பான்

பாபாசாகேப், நீ அளித்திடும் தண்டனையை அனுபவிப்பதால்  என் வாழ்க்கை மீண்டும் அதன் ஆதிநிலையைப் பெறும்.

NamdiodhasalBook 350தமிழில் ஒடுக்கப்பட்டோரின் எழுத்துகள் தீவிரமாக வெளிவரத் தொடங்கிய தொண்ணூறுகளின் முற்பகுதி பரபரப்புகள் நிறைந்தது. இக்காலகட்டத்தில்தான் மராத்தி தலித் இலக்கியம் தமிழில் வெளிவரத் தொடங்கியது.

மொழிபெயர்ப்புக் கவிதைகளும் கட்டுரைகளும் அதிக அளவிலே வரத்தொடங்கின. கேசவ் மேஷ்ராம், ஜோதி லஞ்சோவர், திரியம்பக சப்காலே, அர்ஜூன் டாங்ளே என்றெல்லாம் கவிஞர்களின் பெயர்கள் இங்கே அறிமுகமாயின.

1992 இல் அர்ஜூன் டாங்ளேவால் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் வெளியான "நஞ்சான ரொட்டி' (Poised Bread) நூலும், முல்க்ராஜ் ஆனந்த் மற்றும் எலியேனார் ஜெலியட் ஆகியோரால் தொகுக்கப்பட்டு வெளிவந்த "தலித் இலக்கியத் தொகை நூலும்' (An anthology of dalit literature) மிக முக்கியமானவை.

இந்திய மொழிகளில் தலித் இலக்கிய ஆக்கங்கள் அறிமுகமாவதற்கு இவ்விரு நூல்களே தொடக்கம் என்று சொல்ல முடியும். அக்காலகட்டத்தில் தமிழில் வெளிவந்த இலக்கிய இதழ்களும் சமூக அரசியல் இதழ்களும் தலித் மொழிபெயர்ப்பு ஆக்கங்களை ஆர்வத்துடன் வெளியிட்டன.

தி.சு.சதாசிவம் மொழிபெயர்ப்பில் வந்த "தலித் இலக்கியம்', இந்திரன் மொழிபெயர்ப்பில் வந்த "பிணத்தை எரித்தே வெளிச்சம்', பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் வந்த "ஊரும் சேரியும்' போன்ற நூல்கள் அப்போது தமிழ் இலக்கியத்தின் தேங்கிய குளத்தை கலக்கிய கோல்கள்.

கெய்ல் ஓம்வெத் "நிறப்பிரிகை' இதழுக்கென தனியாக எழுதிய கட்டுரையொன்றிலும் அர்ஜூன் டாங்ளேவின் தலித் இலக்கியம் நூலிலும் முதன் முதலாக இங்கே படிக்கக் கிடைத்தன நாம்தியோ தாசலின் கவிதைகள்.நாம்தியோ தாசல் மிகவும் உக்கிரமான கவிஞன் என்று பெயர் பெற்றிருந்ததற்கு சான்றாகவே அக்கவிதைகள் இருந்தன.

"அம்மா! உனது மகன் குழந்தையல்ல

அவன் இந்த யுகத்தின் புரட்சியினுடைய புத்திரன்...''

– எனத் தொடங்கும் ஒரு கவிதை கடந்த நூற்றாண்டுகளில் மனித இனத்துக்கு எதிராக நடந்த கொடுமைகளைப் பட்டியலிட்டு எதிர்பாராத சொல்லாட்சியுடன் முடியும்.

""இருபதாம் நூற்றாண்டு

உனது மகனுக்குப்

பார்வையைத் தந்துள்ளது...

சுரண்டலைத் தெரியும் எனக்கு

என்னை நான்

இழந்ததும் தெரியும்

நான் ஒரு சாத்தானாகிவிட்டேன்...''

("நிறப்பிரிகை'–94)

கடவுளின் பெயரால் நிர்மாணிக்கப்பட்டதாக சொல்லப்படும் இவ்வுலகு, மனிதஇனத்திற்கு எதிரான எல்லாவித இழிமைகளோடும் ஏற்றத்தாழ்வுகளோடும் இயங்குகிறது. இதை எதிர்க்க வேண்டுமெனில் ஒருவன் சாத்தானாக வேண்டும் என்ற கலக நிலைப்பாட்டை தாசல் இங்கு எடுக்கிறார். தாசலால் சாத்தான் என்ற சொல்லாட்சி புரட்சியின் குறியீடாக இக்கவிதையில் மாற்றப்படுகிறது. "தலித் இலக்கியம்' நூலின் பின்னிணைப்பாக இருந்த கவிதைகளில் ஒரு நீண்ட கவிதை நாம்தியோ தாசலினுடையது. "பசி' என்ற அந்தக் கவிதையின் வரிகள்.

"பசியே,

எங்கள் கோரிக்கையை

கொடுத்துள்ளோம்

நாங்கள் உனக்கு வேண்டும்.

நாங்கள் வளர மாட்டோமா?

எங்களை வளர விடு

சூரியன் வேண்டுமானால் களிப்போடு

விடியலை மறந்திருக்கலாம்

ஓடும் நதியும் உவகையோடு

காலத்தை மறந்திருக்கலாம்

எங்களுக்கு வேண்டும் நிறையவே

வெறும் வாழ்க்கையைவிட வெளிச்சம்.

ஆனால், வெளிச்சமும் பொய்யாய்ப் போனது...'' 

("தலித் இலக்கியம்  போக்கும் வரலாறும்' – 1992)

– என்று போகும். தமிழில் மொழிபெயர்ப்பாளரால் சில வரிகள் தணிக்கை செய்யப்பட்டு இருந்த அக்கவிதையின் முழு வடிவை ஆங்கிலத்தில் படித்தபோது அதிர்ச்சி தந்தது. பசியை அன்றாடம் சந்திக்கும் மும்பை பெருநகரின் சேரிப்பகுதியைச் சேர்ந்த நாம்தியோ தாசல், அதை ஏழைகளின் எதிர்மையாகப் பாவித்து கடுமையாகச் சாடியிருந்தார்.

பெருங்குடல் புற்றுநோயாலும், மையாஸ்தீனியா கிராவிஸ் என்ற நோயெதிர்ப்பு குறைபாட்டு நோயாலும் பாதிக்கப்பட்டு 15.01.2014 அன்று இறந்துபோன நாம்தியோ தாசல், தன் வாழ்நாள் முழுவதுமே ஒரு களச்செயல்பாட்டாளராகவும் கலகக்காரனாகவுமே இருந்திருக்கிறார்.

Namdio-dhasal 400நாம்தியோ தாசல் 1949 ஆம் ஆண்டில் பிறந்தவர். அவரின் சொந்த ஊர் மகாராட்டிரத்தின் புனே மாவட்டத்தில் உள்ள பூர்கானேசார். தாசலின் கிராமம் இந்தியாவின் எல்லா கிராமங்களையும் போலவே சாதியால் பிணைக்கப்பட்டிருக்கும் ஒன்றுதான்.

சொல்லப்போனால் இன்னும்கூட பழைமைவாதம் கொண்டது. சேரியான பூரையும் சாதி இந்துக்களின் ஊரான கானேசாரையும் ஓர் ஆறு பிரித்திருக்கும். அது அவ்வூர்களின் மேல் புரளும் பூணூல் போல இருந்து சாதி விதிகளை கட்டிக்காப்பாற்றிக்கொண்டு வந்திருக்கிறது.

நாம்தியோ தாசலின் குடும்பம் இசையும், நாட்டுப்புற நிகழ்த்துக் கலையும் நிறைந்த ஒன்று. அவருடைய மாமா தாகாது சோனாவானே ஒரு லாவணிப்பாடகர். அவரின் மாமாக்கள் அனைவருமே "தமாஷா' பாடகர்கள். தாசலின் அம்மா சல்லுபாய் கிராமியப் பாடல்களை பாடுவதில் வல்லவர். தாசலின் தந்தைவழி தாத்தாவும் சித்தப்பாக்களும் இசைக்கலைஞர்களாக இருந்தவர்கள்.

குறிப்பாக, தாசலின் தாத்தா ராவ்ஜி புவா தாசல் இந்தூர் அரசரின் அவையிலே ஷெனாய் கலைஞராக இருந்திருக்கிறார். கலைகளில் சிறந்திருந்தாலும் அவர்கள் வறுமையால் பீடிக்கப்பட்டிருந்த தலித் மக்கள். உட்கார்ந்து பாடிக்கொண்டே, உட்கார்ந்து சாப்பிட இந்திய சமூகம் தலித் கலைஞர்களை அனுமதிப்பதில்லையே!

வறுமையின் காரணமாக வேலை தேடிக்கொண்டு தாசலின் தந்தை லட்சுமணன் தாசல் 1955 வாக்கில் மும்பைக்கு இடம்பெயர்ந்தார். தொடக்கக் கல்வியை முடித்திருந்த சிறுவனான தாசலும் தன் அம்மாவுடன் அப்பாவைத் தேடிக்கொண்டு மும்பைக்கு வந்து சேர்ந்தார். அவர்களின் குடும்பம் தலித் மக்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாழும் இடமான தார்சவுல் பகுதியில் வசிக்கத்தொடங்கியது.

தார்சவுல் மாட்டிறைச்சி விற்கப்படும் இடமாகும். மின்விளக்கு வசதியில்லாத ஒரு சிறிய அறையில் அவர்கள் வாழ்ந்தனர். மும்பை மாநகராட்சியால் எப்போதுமே கண்டுகொள்ளப்படாத தார்சவுல் பகுதியைச் சுற்றி கோல்பிதா, காமாத்திபுரா போன்ற பகுதிகளும் உண்டு. இப்பகுதிகளை உலகின் கொடூரமானதும் மோசமானதுமான மனிதக்குடியிருப்பு பகுதிகள் எனச் சொல்லலாம்.

பத்துக்குப் பத்து அளவு கொண்ட, காற்றோட்டமும் வெளிச்சமும் இல்லாத அறைகளில் வாழும் மனிதர்கள் ஒரே அறையில் மூன்று நான்கு குடும்பங்கள். நோய், அசுத்தம், வறுமை, சமூகத்தின் அத்தனை கீழ்மையான வேலைகளையும் செய்யும்படி தள்ளப்பட்ட நிலை. இந்தச் சூழலில் வளர்ந்த நாம்தியோ தாசலுக்கு சமூகம் தாராளமாகவே தனது கொடும் அனுபவங்களை பரிசாகத் தந்தது. கடும் உழைப்பை கொடுத்து தமது வாழ்வைக்கழிக்கும் தலித் மக்கள், சிறுபான்மையினர், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து குடியேறியவர்கள், ரிக்ஷா ஓட்டுவோர், மூட்டைத் தூக்குவோர், நடைபாதை வியாபாரிகள் எனப்பல வகை மனிதர்கள் ஒருபுறம். வடகிழக்கு மாநிலங்கள், நேபாளம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து கடத்தியும், ஏமாற்றியும் அழைத்து வரப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள், அவர்களை அடக்கியாளும் ரவுடிகள், தரகர்கள் ஒருபுறம். நாம்தியோ தாசல் இந்த மனிதர்களுக்கு இடையிலிருந்துதான் ஒரு கவிஞனாக உருவானார்.

பொது சமூகம் நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு அதிர்ச்சியூட்டக் கூடியதும் அருவருப்பானதும் கொடூரமானதுமான வாழ்க்கையே மும்பையின் 6,000 நகர்ப்புற சேரிகளில் நிலவுகின்றன. அதிலும் காமாத்திபுரா போன்ற பகுதிகளில் நிலைமை இன்னமும் கொடூரம். அரசின் சட்டங்களுக்கோ, பொதுவான மனித அறங்களுக்கோ, நீதி நியாயங்களுக்கோ இங்கு இடமில்லை. மனித உணர்வுகள் கொன்றொழிக்கப்படும் இடம் இவை. இந்தச் சூழல்தான் நாம்தியோ தாசல் என்ற கவிஞனின் மொழியையும் சொல்முறையையும் உருவாக்கின.

1972 இல் வெளியான அவரது "கோல்பிதா' என்ற கவிதை நூலால் மராத்தி இலக்கிய உலகமே அதிர்ந்தது. மய்ய மும்பையில் இருக்கும் காமாத்திபுராவில் பிழைக்கின்ற பாலியல் தொழிலாளிகள், தரகர்கள், சிறுசிறு குற்றங்களைப் புரிபவர்கள், குற்றக்குழுக்கள், போதை மருந்து விற்பவர்கள், சிறு வணிகர்கள், கட்டுமானப் பணியாளர்கள் ஆகியோரின் அன்றாடப் பேச்சு மொழியும் புனே மாவட்டத்தின் கிராமப்புற மராத்தி வழக்கும் அக்கவிதைத் தொகுதியில் நிறைந்திருந்தது. விமர்சகர்களால் அத்தொகுதியை எப்படி எதிர் கொள்வதென தெரியவில்லை.

படித்தவர்கள் அதிர்ந்தனர், முகம் சுளித்தனர். சட்ட திட்டங்களையும், சமய ஒழுக்கங்களையும் முற்றிலும் ஒதுக்கித்தள்ளுகிற, அய்யுறவு மனப்பான்மையின் உச்சமான "நிகிலிசம்' (Nihilism) என்றனர். அக்கவிதைத்தொகுதி மராத்தி இலக்கிய உலகின் போக்குகளை மாற்றியவைகளில் ஒன்றாக (Trend setter) இன்றளவும் மதிக்கப்படுகிறது. அதிர்ச்சி மதிப்பீடுகளையும் வெளிப்படையான சொல்முறையையும் தீவிர எதிர்ப்புணர்வையும் கொண்டிருந்த அக்கவிதைத் தொகுதியின் கவிதைகள் உட்கிடையாக சாதியொழிப்பு, மானுட நேயம், சுரண்டலெதிர்ப்பு, இந்து மத மரபுகளை கேள்விக்குள்ளாக்கும் போக்கு போன்ற கூறுகளைக் கொண்டிருந்தன.

இத்தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திலீப் சித்ரே அது நோபல் பரிசுக்கு உகந்தது என்கிறார். மராத்தி தலித் இலக்கிய மாநாடு முதன் முதலாக 1958 இல் நடத்தப்பட்டது. நாராயண் சூர்வே, பாபுராவ் பாகுல் போன்றவர்களின் முதல் தலைமுறை தலித் இலக்கிய அணி அப்போது உருவானது. நாம்தியோ தாசல், தயாபவார், அர்ஜூன் டாங்ளே போன்றோர் 1970களில் எழுதவந்த இரண்டாம் தலைமுறையினர் ஆவர். ""காளிதாசன்,

சாகுந்தலம் போன்ற காவியங்களின் உன்னத அழகியலை நாங்கள் மறுக்கிறோம். எங்களுக்குரிய அழகியலை நாங்கள் படைத்துக் கொண்டோம். பாரம்பரிய மராத்தி கவிதைகளை மீறி புதிய கவிதை படைக்கிறோம். நாங்கள் எழுதும் கவிதை, மொழி எல்லாமே அவர்களுக்கு அதிர்ச்சியை தரலாம். ஆனால் நாங்கள் மராத்தி மொழிக்கு புத்துயிர் அளிக்கிறோம்'' என்று தனது கவிதை மொழியைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார் தாசல் ("சுபமங்களா' – 1992). "கோல்பிதா'வைத் தொடர்ந்து எட்டு கவிதை நூல்களையும், இரு நாவல்களையும் பல்வேறு கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார் தாசல்.

Namdiodhasal- 2 600நாம்தியோ தாசலின் இலக்கியச் செயல்பாடு அவரை தலித் அரசியலில் கொண்டு போய் நிறுத்தியது.  இலக்கியத்தையும் அரசியலையும் அவர் ஒன்றாகவே பார்த்தார். தீவிர வாசிப்பாளரான தாசலுக்கு மாவோ, பிடல், சே, ஹோசிமின், மார்க்ஸ், லெனின் ஆகியோர் மீது தனி ஈடுபாடு உண்டு. அம்பேத்கரியத்தையும் மார்க்சியத்தையும் அவர் இணைத்துப் பார்த்திருக்கிறார்.

தொடக்கத்தில் பிரஜா சமாஜ்வாதி கட்சி உறுப்பினராக இருந்த தாசல், மகாராட்டிரத்தில் தலித் மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த குடியரசுக் கட்சியின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வந்திருக்கிறார். எழுபதுகளிலேயே குடியரசுக் கட்சி தலித் சிக்கல்களை கைவிட்டுவிட்டு அதிகார அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கியது. அதில் பிளவுகளும் உருவாகின.

மராத்தாக்களின் மத்தியிலே உருவான "சாவா' என்கிற தீவிரவாத இந்து அமைப்பாலும், 1966இல் அரசியலில் நுழைந்த சிவசேனாவாலும் மகாராட்டிரத்தின் பல பகுதிகளில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. குறிப்பாக, 1972 இல் மகாராட்டிராவின் பல்வேறு இடங்களிலே தலித் பெண்கள் நிர்வாணப்படுத்தப்படுவதும், தலித் மக்கள் தாக்கப்படுவதும் நடந்தன. அப்போது இந்திய குடியரசுக்கட்சி இந்த வன்கொடுமைகளை எதிர்த்து ஒன்றும் செய்யவில்லை என்ற விமரிசனங்கள் எழுந்தன ("ஜெய்பீம் காம்ரேட்').

இந்தச் சூழலில் உருவானதே தலித் சிறுத்தைகள் இயக்கம். நாம்தியோ தாசல், ஜே.வி. பவார், ராஜா டாங்ளே ஆகியோர் இணைந்து இந்த அமைப்பை தோற்றுவித்தனர். தலித் இளைஞர்கள் பெருவாரியாக இதில் இணைந்தனர். ஏமாற்றத்தின் புழுக்கத்திலும், கோபத்தின் உச்சியிலும் இருந்த தலித் இளைஞர்களின் ஆற்றலை ஒன்றுபடுத்தி திரட்டியது தலித் சிறுத்தைகளின் சாதனையாகும்.

"சாதியைக் கடந்து, சாதிய ஒடுக்குமுறைக்கும் பொருளாதாரச் சுரண்டலுக்கும் உட்படுத்தப்பட்ட அனைவரையும் "தலித்துகள்' என்று ஒன்றிணைக்க முயன்றனர்; சமுதாயத்தை மாற்றியமைப்பது குறித்த போர்க்குணமிக்க பேச்சுக்களைப் பேசினர். சிந்தனையிலும் செயலிலும் தலித் சிறுத்தைகள் அமைப்பு உருவாக்கிய மாற்றம் நிறுவனமயமான சக்திகளை அச்சுறுத்தியது; உலகத்திற்கு திகைப்பை ஏற்படுத்தியது'' என்கிறார் ஆனந்த் டெல்டும்டே, தலித் சிறுத்தைகளைப்பற்றி கூறும்போது ("அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்' 2011).

போர்க்குணம் மிக்க பேச்சு,  தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம், இடதுசாரித் தன்மை, போர்க்குணம் மிக்க அம்பேத்கரியம் எனப் பல கூறுகளை கொண்டிருந்த தலித் சிறுத்தைகளின் உருவாக்கத்தில் நாம்தியோ தாசலின் பங்கு முக்கியமானது.

அம்பேத்கரியத்தையும் மார்க்சியத்தையும் இணைத்துப் பார்த்தது அதன் தனி அடையாளமானது. நாம்தியோ தாசல் சிறந்த பேச்சாளர் என்று அவரைப் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன. ஆற்றல் மிக்கப் பேச்சால் அவர் இளைஞர்களை உசுப்பியிருக்கிறார்.

தாசலின் அரசியல் வாழ்க்கை, அவர் கவிதைகள் பெற்ற  விமர்சனங்களைப்போலவே கடுமையானது. தலித் சிறுத்தைகளின் போர்க்குணம் மிக்க செயல்பாடு தலித் தலைவர்களிடமிருந்தும், பிறகட்சித் தலைவர்கள் இடையிலிருந்தும் வெறுப்பை சம்பாதித்தது. இந்த வெறுப்பு கோபமாக மாறி தாசலின் உயிருக்கே ஆபத்தை விளைவித்தது. 1974இல் நாக்பூரில் நடந்த மாநாட்டில் நாம்தியோ தாசல் ஒரு கொலை முயற்சியிலிருந்து தப்பினார். அவரென நினைத்து அவரின் நண்பரான சுனில் திகேவை தாக்கி அவரின் ஒரு காலை வெட்டினர். நாம்தியோ கொல்லப்பட்டதாக நாடெங்கும் செய்தி பரவியது.

1975இல் நாசிக்கில் சுமார் இருநூறு காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்தார் தாசல். இந்தத் தாக்குதலின்போது அவரின் மார்பெலும்பு உடைந்து நுரையீரலைக் குத்தியது. இரண்டு மாதங்களாகப் படுக்கையில் கிடந்தார். காங்கிரஸ், குடியரசுக் கட்சி, சிவசேனா ஆகியவை கூட்டணி அமைத்ததை விமர்சித்ததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

1992 இல் ""அம்பேத்கர் நிஜாம் மன்னரின் கைக்கூலி'' என்று தாக்கரே கூறியதை எதிர்த்து மறியல் செய்ய முயன்றதால் சிவசேனைத் தொண்டர்கள் தாசலின் வீட்டைத் தாக்கினர். தாசலின் தீவிர செயல்பாடுகள் மகாராட்டிர அரசை அச்சப்பட வைத்ததால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

தலித் சிறுத்தைகள் அமைப்பை நக்சல்பாரிகள் என நினைத்ததால் 360 வழக்குகள் அவர்களின் மீது காவல் துறையால் பதியப்பட்டன. தலித் சிறுத்தைகள் மீதான தடையை உடைக்கவும், வழக்குகளிலிருந்து தப்பிக்கவும் நாம்தியோ தாசல் இந்திரா காந்தியை சந்திக்க வேண்டி வந்தது. இதன் விளைவாக தலித் சிறுத்தைகள் "அவசரகால நிலை'ப்பாட்டை  (Emergency) ஆதரித்ததோடு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டனர்.

நான்காண்டுகளுக்குள்ளாகவே தலித் சிறுத்தைகள் கட்சியில் பிளவுகள் ஏற்பட்டன. அக்கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ராஜா டாங்ளேவால் தாசல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அம்பேத்கரியத்தையும் மார்க்சியத்தையும் இணைத்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், இடதுசாரி தன்மை கொண்டவராக இருப்பதாகவும் நாம்தியோவின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

தலித் சிறுத்தைகள் பிளவுற்று மெல்ல மறைந்தது. பின்னர் மீண்டும் நாம்தியோ தாசல் தலித் சிறுத்தைகளின் தலைவரானார். அருண் காம்ளே, ராம்தாஸ் அத்வாலே போன்றோர் பாரதிய தலித் சிறுத்தைகள் என்ற மற்றொரு அமைப்பை தோற்றுவித்தனர்.

"அம்பேத்கருக்கு வெற்றி உண்டாகட்டும்' (ஜெய்பீம்) என்று முழங்கி வந்த குடியரசுக் கட்சியினர் சிவசேனாவுடனும் காங்கிரசினுடனும் பாரதிய ஜனதாவுடனும் கூட்டணி வைத்து "சிவசக்தி – பீம்சக்தி' என்று முழக்கமிடும் அளவுக்கு மாறிப்போன சமரச நிலைப்பாட்டை தலித் சிறுத்தைகளும் மேற்கொண்டனர். 1996 இல் சிவசேனாவும், பாரதிய ஜனதாவும் இணைந்து அமைத்த அணியில் நாம் தியோ தாசலும் பங்கு கொண்டார்.

இதற்கு அடுத்த ஆண்டில்தான் மும்பையில் ராமாபாய் நகர் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் காவல் துறை பத்து தலித்துகளை சுட்டுக் கொன்றது. இதைக் கண்டித்து விலாஸ் கோக்ரா என்ற தலித் பாடகர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார்.தனது அரசியல் வாழ்வின் செயல்பாடுகள் எவையும் கவிதை எழுதுவதை தடை செய்யும்படி அனுமதித்ததில்லை தாசல். அவர் இறுதிவரை எழுதிவந்தார்.

2004 ஆம் ஆண்டு "சாகித்ய அகாதெமி' தனது பொன்விழாவின் போது நாம்தியோ தாசலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கிப் பெருமைப்படுத்தியது. ஜெர்மன் தொலைக்காட்சியொன்று (ZDF)தாசல் பற்றிய ஆவணப்படமொன்றை தயாரித்திருக்கிறது. அவரின் கவிதைகள் மேற்கத்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பெருத்த கவனத்தை ஈர்த்திருக்கின்றன.இன்று நாம்தியோ தாசல் மேற்குலக வாசகர்களால் பரவலாக அறியப்பட்ட தலித் கவிஞர். வி.எஸ். நைபால் போன்றவர்கள் அவரைப்பற்றி தமது நூல்களில் எழுதியுள்ளனர்.

ஒரு கவிஞனாக, தலித் அரசியல் தலைவராக, செயற்பாட்டாளராக, டாக்சி ஓட்டுநராக, எழுத்தாளராக பன்முகத்தன்மைகளோடு அறியப்படும் நாம்தியோ தாசல், காவல் துறையாலும் வன்முறைக் குழுக்களாலும் துன்புறுத்தலுக் குள்ளாக்கப்படும் பாலியல் தொழிலாளர்களுக்காக "திராஸ்குருத் நாரி சங்காதனா' என்ற அமைப்பு ஒன்றையும் உருவாக்கி நடத்தி வந்துள்ளார். எல்லாவற்றையும் கடந்து தாசல் ஒரு கலகக்காரர். மானுட விரும்பி.

முரண்பாடுகள், தடுமாற்றங்கள் கொண்ட தன் வாழ்வியக்கத்தின்மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும் தாசல், அம்பேத்கரியத்தையே தன் அடிப்படையாக எப்போதும் சொல்லி வந்திருக்கிறார். நாம்தியோ தாசல் என்ற பெரும் கவிஞனை முன்வைத்து தலித் இலக்கியத்தையும் அப்போராட்டக்காரனை முன்வைத்து தலித் தலைமையையும் ஆராய பல்வேறு கூறுகள் இன்று நம்முன்னால் இருக்கின்றன. 

நாம்தியோ தாசல்தமிழில்: அழகிய பெரியவன்

 

Pin It