வீறுகொண்டெழுவது ஒடுக்கப்பட்ட மக்களின் மரபுப்பண்பு. சாதிய ஒடுக்குமுறைகளையும் பொருளாதார போதாமைகளையும் ஆதிக்க அரசு நிர்வாகத்தின் முட்டுக்கட்டைகளையும் எதிர்கொண்டு உலக அரங்கில்பல்வேறு துறைகளில் அவர்கள் அழுத்தமாக தடம் பதித்து வருகின்றனர். வரலாறு நெடுகிலும் ஒடுக்கப்பட்டோரின் பல வெற்றி வரலாறுகள் உள்ளன.

yazhini 293இந்த வெற்றி வரலாற்றில் தனக்கானதொரு புதிய பக்கத்தினை உருவாக்கியிருக்கிறார் செந்தமிழ் யாழினி.இவர் வளர்ந்து வரும் ஓர் இளம் சதுரங்க விளையாட்டு வீரர். மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல பட்டங்களையும் பரிசுகளையும் பெற்றவர். அண்மையில் இவரின் சாதனைகளில் ஒரு மைல் கல்லாக இவர் பங்கு பெற்ற தமிழக அணி, பதினேழு வயதுக்குட்பட்ட மாணவியருக்கென (Senior girls) கடந்த மாதம் சேலத்தில் நடந்த அறுபதாவது தேசிய சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறது.

யாழினி இடம்பெற்ற தமிழ்நாடு அணியில் அவருடன் இருந்தவர்கள் சி.எம்.என். சம்யுக்தா, கே. வைஷாலி, கே.கிருத்திகா, ஹரிவர்த்தினி ஆகிய மாணவர்களாவர். பெயரைப்பார்த்தாலே இவர்கள் யார் எனத் தெரிந்துவிடும்! இந்த அணியில் யாழினி விளையாடிப் பெற்றவை (மூன்று போட்டிகளில்) 2.5 புள்ளிகள். இவர் பெற்ற இப்புள்ளிகளே தமிழக மாணவியரணி தங்கம் வெல்ல காரணமாக இருந்தன. இப்போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ‘முதன்முறையாக தேசிய அளவிலான சதுரங்கப்போட்டியில் தங்கம் வென்ற அரசுப்பள்ளி மாணவர்கள்' என்ற சாதனையைப் படைத்துள்ளனர்.

யாழினி, வேலூர் மாவட்டம் குடியேற்றத்திலிருக்கும் செருவங்கியைச் சேர்ந்தவர். அதே ஊரில் உள்ள நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். செருவங்கியும் அதனருகில் இருக்கும் செட்டிக் குப்பமும் ‘பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு' காலத்திலிருந்தே (1942) தலித் உணர்வுக்கும் அரசியலுக்கும் பெயர் போன பகுதிகளாகக் கருதப்படுபவையாகும். யாழினிக்குப் பயிற்சியாளர்களாக இருப்போர் அவரின் தாய் பூங்குழலியும் தந்தை செந்தமிழ்ச் சரவணனும்.

செந்தமிழ்ச் சரவணன் வருவாய்த்துறையில் பணியாற்றி வருபவர். இவரும் பூங்குழலியும் அம்பேத்கரிய, பெரியாரியப் பற்றாளர்கள். செந்தமிழ்ச் சரவணன் ‘அறிவியலின் கதை', ‘லஞ்சத்தை ஒழிப்பது எப்படி?' எனும் இரு நூல்களை எழுதியுள்ளார். இவர்களிருவரும் இணைந்து நன்மக்கள் உருவாக்கப் பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறார்கள். சூழல் காக்கும் நோக்கில் எண்ணற்ற மரக்கன்றுகளையும் நட்டு வருகின்றனர்.

யாழினியின் குடும்பத்தில் இருக்கும் பலர் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள். செந்தமிழ்ச் சரவணன் கைப்பந்து மற்றும் இறகுப்பந்துப் போட்டியில் கலந்துகொள்ளக்கூடியவர்.யாழினிக்கு இவற்றைப் பார்த்து விளையாட்டில் ஆர்வம் வந்தது. ஆனால் அந்த ஆர்வம் சதுரங்கத்தின் மீது!பெற்றோரின் உதவியோடு ஒரு நாளைக்கு சுமார் பனிரெண்டு மணி நேரம் பயிற்சி செய்யத் தொடங்கினார்.

சதுரங்கத்தை விளையாடும்போது ராசா, ராணியென ஒரு கதையுலகில் போய் வருவதைப்போல் அவர் உணர்ந்தார். இந்த அனுபவம் அவரை இவ்விளையாட்டின் நுட்பங்களை மேலும் மேலும் அறிந்து கொள்ளத் தூண்டியது. தன் பெற்றோர் இணையம் வழியே தேடித்தேடி வாங்கித்தரும் நூல்களைக் கொண்டு மேலும் பயிற்சிகளை எடுத்தார். விளைவாக, பள்ளிக்கல்வித்துறை நடத்தும் குறுவட்ட, மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகளில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறார் யாழினி.

2013 இல் வேலூரில் உலகக்கோப்பைப் போட்டியில் ஆடுவதற்கான வீரர்களை தேர்வு செய்ய நடந்த போட்டியில் இவர் மூன்றாமிடம் பிடித்தார். அந்தத் தேர்வுப்போட்டியில் அவர் பெற்ற புள்ளிகள் ஒன்பதுக்கு எட்டு. மாணவியர் சதுரங்கத்தில் மாவட்ட மாநில அளவில் முதலிடம் பிடித்து பல பரிசுகளைப் பெற்றுள்ளார் யாழினி. இந்திய ஒலிம்பிக் சங்கமும் நடுவணரசின் இளையோர் நலத்துறையும் பள்ளிகள் அளவில் நடத்தும் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை தமிழக அணிக்காகத் தேர்வானவர் இவர். இதன் காரணமாக விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ‘படிவம் நான்கு' இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஆந்திராவில் நடந்த இளம் மாணவியருக்கான, 59 ஆவது ஒன்பதாவது தேசிய சதுரங்கப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். சதுரங்கத்தில் வெள்ளைக் காய்களுடன் ஆடும்போது, ‘இ4' திறப்புகளோடும் கருப்புக்காய்களோடு ஆடும்போது ‘சிசிலியன் டிபன்ஸ்', ‘க்ரூயன் பெல்ட் டிபன்ஸ்' நுணுக்கங்களோடும் ஆடுவது இவரின் சிறப்பு.

யாழினி இந்த இடத்துக்கு எளிதில் வந்துவிடவில்லை. அவர் தலித்தாகப் பிறந்துவிட்டதால் போராட வேண்டியிருந்தது; இருக்கிறது. பெரும் தொகை கொடுத்து ஒரு பயிற்சியாளரை அமர்த்திக் கொள்ள முடியவில்லை. அவர் பார்ப்பனராய் இருந்திருந்தால் பல நிறுவனங்கள் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கும். தங்கம் வென்று வந்த பிறகும் அவருக்கு ஆதரவு நல்க எந்த நிறுவனமும் இதுவரை முன்வரவில்லை. கடந்த ஆண்டு ஆந்திராவில் நடந்த போட்டிக்கு வெறும் நான்காயிரம் மட்டுமே ‘ஸ்பான்சர்' கிடைத்திருக்கிறது. ஆனால் உதவி கோரி அவர் அனுப்பிய கடிதத்துக்கு அவர் செலவு செய்த தொகையோ எட்டாயிரம் ரூபாய்!

யாழினியைப் போட்டிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோருக்கு கசப்பான அனுபவங்களே கிடைத்து வருவதாக அறியும்போது சாதிய அமைப்பின் மேல் கடும்கோபம் மேலிடுகிறது. பல லட்சம் ரூபாய்களை செலவுசெய்து நடத்துவதாக கணக்கு காட்டப்படும் மாணவர்களுக்கான சதுரங்கப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பணப்பரிசுகள் ஏதும் வழங்கப்படுவதில்லை. இதனால் ஏழைகளால் இப்போட்டிகளை நினைத்துக்கூட பார்க்க முடியாது. போட்டிகளுக்கு போகும் இடங்களில் இருப்பதோ மிகவும் மோசமான தங்கும் ஏற்பாடுகளும் வசதிகளுமே. மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் இயங்கி வரும் சதுரங்க விளையாட்டு சங்கங்களில் தலித் பொறுப்பாளர்களே கிடையாது என்ற நிலை. அப்பொறுப்பாளர்களுக்கும் சதுரங்கப்போட்டிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.இதனால் தலித் மாணவர்களும் வீரர்களும் புறக்கணிக்கப்படுகின்ற நிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

சேலத்தில் நடந்து முடிந்த போட்டியில் யாழினியை கலந்துகொள்ளும்படி செய்வதற்கு செந்தமிழ்ச் சரவணன் கடும்போராட்டத்தை நடத்த வேண்டியிருந்திருக்கிறது. யாழினி தேசிய அளவில் கடந்த ஆண்டு வெள்ளிப்பதக்கம் வாங்கியிருந்தாலும் அவர் மாநில அளவில் பத்து இடங்களில் இல்லை என்று புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

மாநில அளவில் முதல் பத்து இடங்களில் வருபவர்தான் தேசியப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற போலியான விதியை உருவாக்கி, சில கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் தலித்துகளுக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் சதுரங்கப்போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன மாணவர்களை வளரவிடுவது.

சரவணன் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர், மாநில நாட்டுநலப்பணித்துறை இயக்குநர், மாநில மாணவர் விளையாட்டுத்துறை இயக்குநர், மாநில பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் என அலைந்திருக்கிறார். இந்த அலைவில் சரவணனுடன் இருந்தவர் மாநில தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் விளையாட்டு சங்கத்தலைவர் திலகர். கடைசியில் தேசியப்போட்டிக்கு அனைவரும் கலந்துகொள்ளலாம் என விதி மாற்றப்பட்டு யாழினி கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அய்ரோப்பிய நாடுகளிலும், சீனா போன்ற நாடுகளிலும் விளையாட்டு தனித்துறையாக மாணவர் முன் வைக்கப்படுகிறது. அதனால்தான் அவர்களால் ஒலிம்பிக்கிலும் கால்பந்திலும் மின்னிட முடிகிறது. நம் நாட்டிலோ, விளையாட்டு என்றால் மட்டைப்பந்து எனும் சோம்பேறி விளையாட்டு. அதிலும் உட்கார்ந்தே உண்டு கொழுக்கும் பார்ப்பனர் ஆதிக்கம்.

இவற்றையெல்லாம் கடந்துதான் ஒடுக்கப்பட்டோர் வெல்கின்றனர்.அங்கீகாரத்திற்கு காத்துக் கிடப்பதை விடவும் சாதிப்பதே அவர்தம் நோக்கம். யாழினி தேசிய அளவில் வென்று வந்தும் அவர் படிக்கும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடமிருந்தோ, வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்தோ, பொதுவுடைமைவாதிகள் நிறைந்த குடியேற்றம் சமூகத்திடமிருந்தோ ஒரு பாராட்டும் இல்லை.

ஆனாலும் யாழினி சோர்ந்துவிடவில்லை. அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்ற திருவள்ளுவரின் குறள் தெரியும். யாழினியின் பெற்றோருக்கோ ‘உங்கள் மக்களாவது இந்த அவல வாழ்விலிருந்து தப்பித்தாக வேண்டும். உங்களைக் காட்டிலும் நல்ல படிப்பும் நல்ல மகிழ்ச்சிகரமான, வசதியான, நாகரிகமான வாழ்வு அவர்களுக்கு கிடைக்கும்படி செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை' என்ற அம்பேத்கரின் கூற்றுக்கான பொருள் தெரியும்!

விளையாட்டுத் துறைகளில் நிறைந்திருக்கும் சாதிவெறிப்போக்கை களைய மத்திய, மாநில அரசும், தலித் அரசியல் அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது யாழினியின் பெற்றோர் வைத்திடும் முக்கியக் கோரிக்கை. இக்கோரிக்கை நிறைவேறுமானால் யாழினி கனவு காணும் அய்.நா. மன்றத் தலைவராய் எதிர்காலத்தில் ஆகவேண்டும் என்ற ஆசையும் எளிதில் நிறைவேறிவிடும் என்றே தோன்றுகிறது.

அரசுக்கு முக்கியக் கோரிக்கைகள்

தேசிய அளவில் வெற்றிபெறும் அனைத்து மாணவ மாணவியருக்கும் தமிழ்நாடு அரசு மடிக்கணினி மற்றும் சதுரங்க மென்பொருள் வழங்க வேண்டும்.பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சலுகை வழங்க வேண்டும்.

மாநில, மாவட்ட அளவில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுகிற மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையைப் போல தேசிய வெற்றியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

சர்வதேச கிராண்ட் மாஸ்டர்களிடம் பயிற்சி பெற உதவி செய்ய வேண்டும்.பெண் விளையாட்டு வீரர்கள் போட்டிகளுக்கும் பயிற்சிகளுக்கும் செல்லும்போது தங்குமிட வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

விளையாட்டுச் சங்கங்களில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோரைப் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் விளையாட்டுப் புரவலர்களாக இருக்கலாம். ஆனால் விளையாட்டு நிர்வாகத்திற்குள் வரக்கூடாது என்று அறிவுறுத்திய உச்ச நீதிமன்றக் கருத்தை பின்பற்ற வேண்டும்.

விளையாட்டுச் சங்கங்களில் பட்டியல் சாதியினர்,பெண்கள், கிராமப் புறத்தினருக்குப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்.

Pin It