Veerammal
“வெவ்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த தத்துவவாதிகள், இதுவரை உலகத்தை விளக்கும் பணியைத்தான் மேற்கொண்டு வந்தனர். நமக்குத் தேவை உலகத்தை மாற்றியமைப்பதாகும்'' என்றார் காரல் மார்க்ஸ்.

உலக வரலாற்றில், சமூக மாற்றத்திற்காகவும், ஒடுக்கு முறைக்குள்ளான உழைக்கும் மக்களுக்காகவும் போராடிய போராடுகின்ற அமைப்புகள், இயக்கங்கள், தலைவர்கள், களப் போராளிகள் எத்தனையோ பேர் இருந்தாலும் அவர்கள் எல்லோருமே சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிடுவதில்லை.

குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பதாகச் சொல்லும் சாதி இந்துக்கள் சமூக சேவைகளில் ஈடுபடுகின்ற போது மட்டும், அவர்களை இந்நாட்டு ஊடகங்கள் அனைத்தும் வந்து கட்டிக் கொண்டு, பக்கம் பக்கமாய் எழுதி, படம் பிடித்து அவர்களைப் புகழின் உச்சியில் நிறுத்துகின்றன.

ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகத் தமது வியர்வையையும் ரத்தத்தையும் பணயம் வைத்துப் போராடும் தலித்துகளை, இச்சாதிய சமூகம் அடையாளம் காட்டுவதில்லை; அங்கீகரிப்பதில்லை. வீரஞ்செறிந்த, தன்னலமற்ற அவர்களுடைய தியாகத்தை ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்யலாம். ஆனால், உண்மையை முற்றாக மறைத்துவிட முடியாது; உயிர்ப்புடன் இயங்கும் அவர்களின் செயல்பாடுகளைத் தடுத்துவிட முடியாது என நிரூபித்துக் கொண்டிருப்பவர்தான் திருச்சியைச் சேர்ந்த அன்னை வீரம்மாள்.

‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' என்பதற்கிணங்க, அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காகத் தொண்டு செய்து பழுத்த பழமாய் பணியாற்றும் அன்னை வீரம்மாளின் அயராத உழைப்பையும் அர்ப்பணிப்பையும் ஊடகங்களால் மட்டுமல்ல; யாராலும் மறைத்துவிட முடியாது. இதை அவருடைய உக்கிரமான செயல்பாடுகள் மெய்ப்பித்து வருகின்றன.

16.5.1924 அன்று திருப்பராய்த்துரையில் (திருச்சி மாவட்டம்) வேம்பு பெரியக்காள் தம்பதியினருக்கு ஒரு குடிசையில் மகளாகப் பிறந்தவர்தான் வீராயி என்கிற வீரம்மாள். அவருடைய தந்தை விவசாயத் தொழிலில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தபோதும், ரயில்வே கேங் மேஸ்திரியாகவும் பணியாற்றினார். அவருடைய தாயார், வயல் வெளிகளிலும் உற்பத்திக்கான களங்களிலும், கிராமிய பாட்டுக் கதைகள் பாடி விளைச்சலைப் பெருக்குவதில் வல்லவராக விளங்கினார். எளிமையான குடும்பத்தில் ஏழாவது மகளாகப் பிறந்த வீராயி, தினம் ஏழு மைல் தூரம் நடந்து சென்று பத்தாம் வகுப்புவரை கசடறக் கற்றுத் தேர்ந்தார்.

தடைகளை மீறி, எப்பாடுபட்டாவது உயர்கல்வி படித்து முன்னேற வேண்டும் என்ற துடிப்போடு வீரம்மாள் படித்துக் கொண்டிருந்த போது, ‘யுத்தத்தில் பெண்களின் பங்கு' என்ற தலைப்பில் 10 நிமிடங்கள் உரையாற்ற திருச்சி வானொலி நிலையத்திலிருந்து ஓர் அழைப்பு வந்தது. தானாகத் தேடி வந்த வாய்ப்பைத் தவற விடாமல் சிறப்புரையாற்றினார். அவருடைய குரல்வளம், தமிழ் மொழி உச்சரிப்பைக் கேட்ட நேயர்கள் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அதைத் தொடர்ந்து "பெண் உலகம்' என்ற நிகழ்ச்சியில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததோடு, அவரை திருச்சி வானொலி நிலையக் கலைஞர் வேலைக்கு வரும்படி ஆணையும் வந்தது. எனவே, 1945 ஆம் ஆண்டிலிருந்து நிலையக் கலைஞராகப் பணியில் சேர்ந்தார். "ரேடியோ தாயார்' என எல்லோரும் பாராட்டும் வகையில் செயல்பட்டு புகழ் பெற்றார்.

பள்ளிப் பருவத்தில் இருந்தே வீரம்மாளுக்கு சமூக உணர்வையும், பகுத்தறிவையும் ஊட்டி வளர்த்த பெருமை, பெரியார் கொள்கையில் அதிக நாட்டள்ளவரும் ‘தொண்டு' பத்திரிகையின் ஆசிரியருமான அண்ணன் வீராச்சாமி அவர்களையே சாரும். பகுத்தறிவுக் கொள்கையால் எழுச்சி பெற்ற வீரம்மாள், மக்களில் ஒரு பிரிவினரை மட்டும் கடவுள் ஏன் தீண்டத்தகாதவர்களாக வைத்திருக்கிறான் என்ற கேள்வியை எழுப்பி, கோயில் வழிபாடு முறைகளை ஒதுக்கித் தள்ளினார். இத்தகைய பகுத்தறிவு மனமாற்றத்திற்குத் தீனி போடும் வகையில் அப்போது பெரியார் நடத்திய ‘விடுதலை', ‘குடிஅரசு' போன்ற பத்திரிகைகளை ‘தொண்டு’ வீராச்சாமி வழியாக நாள்தோறும் படித்து பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார். வானொலி நிலையத்தில் பணி செய்து கொண்டே தனக்கு கிடைக்கின்ற ஓய்வு நேரத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக கிராமம் கிராமமாகச் சென்று சமூகத் தொண்டில் ஈடுபட்டார்.

1948 மார்ச் 1 முதல் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, திராவிடர் கழகம் நடத்திய பொதுக் கூட்டங்களில் பங்கேற்றும் கழகம் வெளியிட்ட புத்தகங்களைப் படிக்கவும் தொடங்கினார். இச்சூழலில் வீரம்மாளின் சமூகச் சிந்தனைக்கும், செயல்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான ஒருவர் (அவினாசி) வாழ்க்கைத் துணைவராக தன்னுடைய உறவினர்களால் கிடைக்கப் பெற்றார். திருச்சியிலுள்ள திரையரங்கு ஒன்றில் டிக்கெட் கிழிப்பதுதான் அவருடைய வேலையாக இருந்தபோதும், தினம் குடித்துவிட்டு வீரம்மாளைத் திட்டுவதையும், அடிப்பதையுமே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

‘தினம் கணவனிடம் அடிவாங்கிக் கொண்டு வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என் எண்ணம் ஈடேறாத இந்த வாழ்க்கையைத் துறந்தால் என்ன?' என்று குடும்பத்தில் போராடிக் கொண்டிருந்த வீரம்மாள், கருவுற்று இரண்டாவது குழந்தை பிரசவத்திற்குச் சென்றிருந்தபோது, தன்னுடைய கணவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதைக் கேள்வியுற்று நிலைகுலைந்து போனார். அதனால் வீரம்மாள் தன் கணவனை ஏற்றுக் கொள்ளவில்லை. "ஒழுக்கம் தவறிய கணவனை இனிமேல் பார்க்கவே மாட்டேன்' என்று சபதமெடுத்து கணவன் சாகும் வரை அவரைப் பார்க்கச் செல்லாமல் உறுதியோடு இருந்தார். "ஒழுக்கம்', "கற்பு' என்பது பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்கு கிடையாதா? என்பதை மற்ற ஆண்கள் உணர்ந்து திருந்த வேண்டும் என்பதற்காக வீரம்மாள் இத்தகைய தீவிர நடவடிக்கையை மேற்கொண்டார்.

தனக்கு நேர்ந்த கொடுமை இனி வேறெந்த பெண்ணுக்கும் நடந்துவிடக் கூடாது என்றெண்ணிய வீரம்மாள், பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க அயராது பாடுபட்டுக் கொண்டிருந்த தந்தை பெரியாருக்கு 5.3.1948 இல் கடிதம் ஒன்றை விரிவாக எழுதி அனுப்பினார்:

“ஆகவே அறிவிற்சிறந்த எம் அண்ணலே! தாங்கள் இல்வாழ்க்கையைக் குறித்து தீவிரமாக சிந்தனை செய்து, இல்வாழ்க்கையில் ஆண் பெண் இருபாலரும் எந்தெந்த முறையில் வாழ்க்கை நடத்த வேண்டும், எந்தெந்த முறையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும், எம்முறையில் உற்றார் உறவினர்களுடன் பழக வேண்டும்; உபசரிக்க வேண்டும், எந்த வகையில் குடும்ப கஷ்டங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எந்தெந்த முறையில் கணவன் மனைவி நடந்து, தங்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்தால் இன்பமாய் வாழலாம் ஆகியவைகளைப் பற்றியெல்லாம் தெளிவான கருத்துகளடங்கிய ஓர் அரிய பெரிய விரிவான நூலைத் தங்கள் வாழ்நாளிலேயே சிறப்பாக வெளியிட்டு, அந்தப் புத்தகம் எல்லோருக்கும் பயன்பட வேண்டுமென சிறுமியாகிய அடியாள் தாழ்மையுடன் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்'' ("இது என் வாழ்க்கை கதை' அன்னை வீரம்மாள், பக்கம் : 95).

மேலும், "சகோதரிகளே, சிந்தியுங்கள்!' "அறியாமையும் மூடநம்பிக்கைகளும்' என்ற தலைப்புகளில் சீர்திருத்தக் கட்டுரைகள் எழுதி ‘குடிஅரசு' ஏட்டுக்கு அனுப்பினார். பெரியார் தொண்டர் அண்ணன் வீராச்சாமி நடத்தி வந்த ‘தொண்டு’ பத்திரிகையிலும் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி மூட நம்பிக்கை, பெண்ணடிமைத்தனம் போன்ற சமூக அவலங்களை ஒழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

Veerammal with her child
25.4.2006 அன்று திருச்சியில் உள்ள அவருடைய ஆசிரமத்தில் அன்னையை நேரில் சந்தித்து, பெரியாருக்கும் உங்களுக்கும் இடையே எப்படி தொடர்பு ஏற்பட்டது என்று கேட்டபோது, “எங்க வீட்டுக்காரரு என்னை விட்டுட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்தபோது, பெரியாருக்குதான் முதலில் கடிதம் எழுதினேன். அதில் ஆண்கள் பெண்களை விட்டுச் செல்வது சரியா? பெண்களும், ஆண்களை விட்டுச் சென்றால் தவறா? என்று கேள்வி கேட்டிருந்தேன்'' என்றார்.

உட்காரவும் முடியாமல் பேசவும் முடியாமல் படுத்த படுக்கையில் இருந்து கொண்டே ஒரு புதிய உத்வேகத்துடன் மீண்டும் பேசத் தொடங்கினார்! “பெரியாருக்கு நான் செல்லப்பிள்ளை. பெரியார் மாளிகைக்கு நான் எப்போது போனாலும் என்னிடம் பேசுவார். மணியம்மையும் என்னிடம் ரொம்பவும் பிரியமாக இருப்பார். பெரியார்தான் என்னை எழுதத் தூண்டினார்'' என்றார்.

பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்த வீரம்மாள், தனது கணவன் ஊரான அல்லூரில் 1943 இல் ஆதிதிராவிடர் நிலத் தொடக்கப்பள்ளியை நிறுவி சாதனை படைத்தார். இன்றும் அப்பள்ளியில் ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். திக்கற்ற குழந்தைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள் மற்றும் ஏழை எளிய பெண்கள், குழந்தைகள் யாவரும் முன்னேற்றமடைந்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, 1954 ஆம் ஆண்டு "தமிழ் நாடு செட்யூல்டு வகுப்பு பெண்கள் நிலச் சங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். 1954 மே 9 அன்று திருச்சி உறையூர் வார்னர்ஸ் பங்களாவாகிய ருக்மணி கருணாகரன் என்பவருடைய இல்லத்தில் சங்க அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் இச்சங்கம் எந்த அரசியல் கட்சியையும் சாராமல், உறுப்பினர் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 1 ரூபாய் சந்தாவாகக் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

வீரம்மாளின் பெரு முயற்சியால் இச்சங்கத் தொடக்க விழா, அப்போதைய திருச்சி ஆட்சியர் ஆர்.எஸ். மலையப்பன் தலைமையிலும், தமிழக முன்னாள் முதல்வர் காமராசர் அவர்கள் முன்னிலையிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்போதைய மத்திய அரசின் உதவி சுகாதார அமைச்சர் மரகதம் சந்திரசேகர் சங்கப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்துள்ளார். அன்று 15 ரூபாய் வாடகை வீட்டில் தொடங்கப்பட்ட சங்கம், இன்று 5 ஏக்கர் நிலப்பரப்பில் 125 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள கட்டடங்கள் மற்றும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு அசையும், அசையா சொத்துகள் உடைய நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

தமிழ் நாட்டில் ஆங்காங்கே உள்ள படித்த தலித் பெண்களை எல்லாம் ஓர் அமைப்பின் கீழ் திரட்டி அவர்களிடையே சமூக உணர்வை ஊட்டி, அவர்களை சமூகப் பணியாற்றும் செயல்வீரர்களாக உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் தொடங்கப்பட்ட "தமிழ் நாடு செட்யூல்டு வகுப்புப் பெண்கள் நிலச்சங்க'த்தை சாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்துப் பெண்களையும், ஆதரவற்ற குழந்தைகளையும் அரவணைக்கும் எண்ணத்தில் 1970 ஆம் ஆண்டு "தமிழ் நாடு பெண்கள் நிலச் சங்கம்' எனப் பெயர் மாற்றினார். சங்கம் தொடங்கிய ஆண்டில், அதாவது 1954 ஆகஸ்ட் 2 ஆம் தேதியில் பெண்களுக்கு முதியோர் கல்விக்கான முதல் இரவுப் பள்ளியை பீம நிகர் அந்தோணியார் கோயில் தெருவிலும், 20.2.1955 அன்று பீம நகர் கீழத் தெருவில் இரண்டாவது இரவுப் பள்ளியையும், 8.5.1971 அன்று மூன்றாவது இரவுப் பள்ளியை திருச்சி ஆணைக்கட்டி மைதானத்திலும் தொடங்கினார்.

வாய்மை, நேர்மை, அன்பு, அகிம்சை, ஈவிரக்கம், நல்லொழுக்கம், கடுமையான உழைப்பு, தொண்டு மனப்பான்மை போன்ற விலை மதிக்க முடியாத நற்குணங்களை சொத்துகளாகக் கொண்டுள்ள அன்னை வீரம்மாள் மத்திய, மாநில அரசு மற்றும் சமூக நல வாரியத்தின் மானிய நிதி உதவியைக் கொண்டும், பொது மக்களிடம் பெறுகின்ற நன்கொடையைக் கொண்டும் இந்த அன்னை ஆசிரமத்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித ஆடம்பரம், விளம்பரமின்றி, சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார்.

திருச்சி வானொலி நிலையத்தில் வாங்கிய சம்பளத்தில் பாதிக்கு மேல் ஒவ்வொரு மாதம் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியதோடு, 1984 இல் சுமார் 40 ஆண்டு காலம் பணி புரிந்து தனக்குக் கிடைத்த ஓய்வு ஊதியத் தொகை முழுவதையும் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்க அறக்கட்டளை நிதியாக வழங்கினார். 1968 இல் கீழ்வெண்மணியில் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதற்காக 44 தலித்துகளை உயிரோடு எரித்துக் கொன்ற இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்கியுள்ளார். வேட்டி, புடவை, போர்வை, குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை மூட்டை மூட்டையாய் எடுத்துச் சென்று வழங்கியதோடு, மருத்துவமனையில் இருந்த நோயாளிகளையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சாதி ஒழிப்புக்கும் சமூக மாற்றத்திற்கும் சாதி மறுப்புத் திருமணமே சரியான தீர்வு என்பதை அம்பேத்கர், பெரியார் வழியாகப் புரிந்து கொண்ட அன்னை, அதே ஆண்டில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் முன்னிலையில் டாக்டர் ஆர்.எஸ். சேகர் என்ற பார்ப்பனருக்கும் காந்தமணி என்ற தலித் பெண்ணுக்கும் சாதி மறுப்புத் திருமணத்தை நடத்தி வைத்தார். 10,000 ஏக்கர் நிலங்களை மீட்டெடுத்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தலைமை வகித்த இத்திருமணத்தில், காய்கறி மாலைகள் பயன்படுத்தப்பட்டன. இவ்விழாவில் காமராசர், கி.ஆ.பெ. விசுவநாதம், ‘தொண்டு’ வீராச்சாமி மற்றும் பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய தோழிகளை அழைத்துக் கொண்டு கிராமங்களுக்குச் சென்று பெண்கல்வி, பெண்ணுரிமை, பெண்களின் முன்னேற்றம், குழந்தைகள் நலம், தீண்டாமை ஒழிப்பு, தூய்மை, சுகாதாரம், தேசிய ஒருமைப்பாடு, அய்க்கிய நாடு அவையின் பணிகள், உலக அமைதி, அணுகுண்டு ஒழிப்பு, சிறுசேமிப்பு, வரதட்சணை ஒழிப்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி கிராமங்களில் எழுச்சியூட்டியுள்ளார்.

பகுத்தறிவுச் செயல்பாட்டாளராக விளங்கிய அன்னை வீரம்மாளுக்கு புரட்சியாளர் அம்பேத்கரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் ‘தொண்டு’ வீராச்சாமி மூலம் கிட்டியது. 1946 இல் மதுரை எட்வர்டு மன்றத்தில் ‘பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு' சார்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு அண்ணல் அம்பேத்கர் தொடர் வண்டியில் மதுரைக்குச் சென்ற போது, திருச்சி சந்திப்பில் அன்னை வீரம்மாள் அவரைச் சந்தித்து தன் குழந்தையை அவர் கையில் கொடுத்து வாழ்த்து பெற்றார்.

பெரியார், மணியம்மையை திருமணம் செய்து கொண்டபோது, ‘திராவிட நாடு' பத்திரிகையில் அண்ணா அவர்கள் ‘ரோமாபுரி சரிந்தது, ரோமாபுரி ராணிகளால்; பகுத்தறிவுபுரி சரிந்தது, மணியம்மையால்' என்று எழுதியதைக் கண்டித்து, அண்ணாவுக்கு ‘பழங்குடி மகள்' என்ற புனைப்பெயரில் ஒரு நீண்ட கடிதம் எழுதி, தன்னுடைய எதிர்ப்பைத் தெவித்தார்.

குடும்பப் பிரச்சனைகள் தன்னை இறுக்கிப் பிடித்து குறுக்கீடு செய்த போதிலும், அன்னை வீரம்மாள் இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து எண்ணற்ற நூல்களைப் படித்து, அவற்றின் மூலம் சமூகப் பிரச்சனைகள் மற்றும் குடும்பப் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான துணிச்சலைப் பெற்றார். சமூக அறிவை வளர்க்கும் நூல்கள், தன்னலமற்ற சமுதாயத் தலைவர்களின் தொடர்பு இவையிரண்டும்தான் அன்னையை ஒரு சமூகப் போராளியாக உருமாற்றியது.

தனக்காக வாழாமல் சமூகத்திற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அன்னை வீரம்மாளின் அளப்பரிய தொண்டைப் பாராட்டி, 1983 ஆம் ஆண்டு அகில இந்திய தொழில் வர்த்தக சம்மேளனம் ‘Outstanding women social worker' என்று பெருமைப்படுத்தி 11 ஆயிரம் ரூபாய் வழங்கியது. 1993 மார்ச் 3 அன்று குழந்தைகள் நில சேவைக்காக தேசிய விருதுடன் 30 ஆயிரம் ரூபாய் பணடிப்பாக மத்திய அரசு வழங்கியது. அதே ஆண்டில் டெல்லி "வாஷேஷரன் தேவி பாட்டியா' நினைவு விருதுடன் 25,000 ரூபாய் பண படிப்பும் வழங்கியது. மேற்படி பெற்ற தொகை முழுவதையும் சங்கப் பணிகளுக்காகவே அன்னை வீரம்மாள் நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்கின்ற ஒவ்வொரு மணித் துளியையும் சமூக மாற்றத்திற்காகவும் ஆதரவற்ற குழந்தைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் நல்வாழ்விற்காகவும் திறமை குன்றாமல் சமூகப் பணியாற்றிவரும் வீரம்மாள், தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒரு பாடமாகவும், முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறார் என்பதோடு, சமூக சேவை புரிபவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்து வருகிறார். காரல் மார்க்ஸ் சொன்ன வார்த்தையை (‘நமக்குத் தேவை உலகத்தை மாற்றியமைப்பதாகும்') இடதுசாரிகள் நிறைவேற்றுகிறார்களோ இல்லையோ, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த வீரம்மாள், ஒரு பெண்ணாக இருந்து துணிவுடன் செயல்படுத்திக் காட்டியுள்ளார் என்பதை தமிழக வரலாற்றில் எவராலும் மறைத்துவிட முடியாது.

தமிழ்நாடு பெண்கள் நலச் சங்கம், அன்னை ஆசிரமம் வளாகம், விமான நிலைய அஞ்சல்,
திருச்சிராப்பள்ளி - 620 007
பேசி : 0431 - 2341186, 2341753

Veerammalதொண்டுக்கு அங்கீகாரம்

தியாகம் நிறைந்த வீரம்மாளின் தொண்டை உணர்ந்த தமிழக அரசு, திருச்சி ஜுவனைல் நீதிமன்றத்தில் 1958 முதல் பத்தாண்டுகள் முதல் வகுப்பு கவுரவ மாஜிஸ்ட்ரேட்டாகவும், சில ஆண்டுகள் நீதிமன்றத் தலைவராகவும் நியமித்தது. மேலும் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, பாரத சேவக் சமாஜம், கில்டு ஆப் சர்வீஸ், செஞ்சிலுவைச் சங்கம், குழந்தைகள் நல கவுன்சில், சர்வோதய சங்கம், கள விளம்பரச் செய்தி தொடர்பு மன்றம், குடும்ப நலச் சங்கம், பிச்சைக்காரர்கள் மறு வாழ்வு மய்யம், பெண்கள் பாதுகாப்பு இல்லம், மாவட்ட சட்ட உதவி சங்கம், மாநில சமூக நல வாரியம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், அரசு சம ஊதியத் திட்டம், குழந்தை அடாப்ஷன் கமிட்டி, நுகர்வோர் கவுன்சில் பேரவை, நேரு வேலைவாய்ப்புக் கமிட்டி, விஜிலன்ஸ் கமிட்டி, திருச்சி நகர அபிவிருத்தி கமிட்டி, உடல் ஊனற்றோர் மறுவாழ்வுச் சங்கம் போன்ற அமைப்புகளில் ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் வீரம்மாளை அரசும், அரசு சாரா நிறுவனங்களும் நியமித்துள்ளன.

ஒரு போராளியின் உயில்

நான் கடந்த 34 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வந்திருக்கிறேன். நான் உயிருடன் இருக்கும் போதே என்னைப் பொறுத்தும், என் உடல் பற்றியும் என்ன செய்ய வேண்டும் என்பதை எழுதி வைத்து, அதன்படி நடக்க வேண்டும் என்று நான் விரும்பி இந்த உயிலை எழுதி வைத்திருக்கிறேன். நான் இறந்த பிறகு என் மகன், மகள் மற்றும் உறவினர்கள் யாரும் எந்தவிதத் தடங்கலும் மாற்றுக் கருத்தும் கூறாமல், என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பி இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறேன்.

... நான் இறந்தவுடன் என் அருகில் இருக்கும் நண்பர்கள், உற்றார், உறவினர்கள் சிறிதும் தாமதம் செய்யாமல் உடனடியாக திருச்சி ஜோசப் கண் ஆஸ்பத்திக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்து, அவர்கள் எனது இரண்டு கண்களையும் பாதுகாப்பாக எடுத்து, பார்வை இல்லாத இரண்டு பேர்களுக்குப் பொருத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், என் ஒவ்வொரு உறுப்புகளும் மக்களுக்குப் பயன்படும் வகையில், என் உயிர் என் உடலை விட்டுப் பிரிந்த பிறகும் மக்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்றும் நான் மனதார விரும்புகிறேன்.

இதனால் எனது உடலைப் பாதுகாப்பாக தஞ்சை மருத்துவக் கல்லூரியிலுள்ள உடற்கூறு பகுதிக்கு "அனாட்டமி' பிரிவுக்கு அனுப்பி வைக்கவும். உடற்கூறு பற்றி பயிலும் மாணவர்கள் படிக்க எனது உடலின் உறுப்புகள் அனைத்தும் பயன்பட வேண்டும். பயன் அளிக்காத உறுப்புகள் யாவும் தமிழ் நாடு பெண்கள் நலச் சங்கம் அன்னை ஆசிரமத்தில் எனது உழைப்பால் வளர்க்கப்பட்டிருக்கும் கனி மரங்களுக்கு உரமாகும் வகையில் ஆழத்தில் வேர்களில் போட்டு மூடிவிட வேண்டும்.

- 1981 இல் வீரம்மாள் எழுதி வைத்துள்ள உயிலில் இருந்து

தொண்டுக்கு ஏது எல்லை!

அநீதியான சமூகத்தில் அடைக்கலம் தேடி வந்த பெண்கள், குழந்தைகள் அனைவரும் சமூக அறிவும், பொது அறிவும் பெற்று சிறந்த மனிதர்களாக வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, 1956 சனவரி 26 குடியரசு நாளில் "அவ்வை நூல் நிலையம்' என்ற பெயரில் ஒரு நூல் நிலையத்தைத் தொடங்கினார் வீரம்மாள். மேலும், வீரம்மாள் உருவாக்கிய களப்பட்டியல்:

1. ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கான அன்னை ஆசிரமம் 2. இலவச பாலர் பள்ளி 3. இலவச நூல் நிலையம் வாசக சாலை 4. இலவச தையல் பூ வேலை கைத்தொழில் நிலையம் 5. இலவச குழந்தைகள் காப்பகம் 6. தட்டெழுத்துப் பயிற்சி நிலையம் 7. பிரிண்டிங் பிரஸ், புக் பைண்டிங், ஸ்கிரீன் பிரிண்டிங் 8. அன்னை மகளிர் மேல் நிலைப்பள்ளி 9. புலவர் து. தேவராசன் தொடக்கப்பள்ளி 10. பணி புரியும் பெண்கள் விடுதி 11. இலவச முதியோர் இல்லம் 12. அகர்பத்தி, சந்தனமாலை யூனிட் 13. குழந்தைத் தொழிலாளர் பள்ளி 14. பணிபுரியும் பெண்கள் விடுதி என பதினான்கு சேவை மய்யங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவே "அன்னை ஆசிரமம்' என இயங்கி வருகிறது.
Pin It