சனவரி

தலித்துகளின் அவலம், வறுமை, இல்லாமை, நிர்க்கதியான நிலைமை, அச்சம் ஆகியவற்றில் பங்கு கேட்டு உரிமை கொண்டாட முன் வராதவர்கள், தலித் இலக்கியத்தைப் படைக்கும் உரிமையில் மட்டும் பங்கு கேட்டுக் கொண்டிருப்பது யோசனைக்குரியது. 

– ராஜ்கவுதமன் :

‘இந்துத்துவம் – சாதி, மத சமூகத்தின் பாசிச வடிவம்'

அதிகார வெறி

தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போதெல்லாம் அரசியல் சட்டங்களும், நீதி நெறிமுறைகளும், அரசு கேந்திரங்களும், அரசியல் சக்திகளும் ஆதிக்கச் சாதி வெறியர்களுக்குத் துணை நின்று, தலித் மக்கள் மீது பல்முனைத் தாக்குதல் நடத்துகின்றன. சங்கரலிங்கபுரம் சேரியில் நடந்ததும் அதுதான். தேர்தலில் போட்டியிட்டதற்காக தங்கள் மீது நள்ளிரவில் கொலை வெறித்தாக்குதல் நடத்திய நாய்க்கர்களை கைது செய்யக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட தலித் மக்கள் மீது, நாய்க்கர் சாதியைச் சேர்ந்த தலைமைக் காவலர் முருகன், கொலை வெறியுடன் தடியடி நடத்தினார். சீருடை அணியாதிருந்ததாலும், அவர் அப்பகுதியில் பணி செய்யாததினாலும் ஆத்திரம் கொண்ட சில தலித் இளைஞர்கள் முருகனை தடுத்து நிறுத்தினர். அப்போது நடந்த மோதலில் முருகன் இறந்து விட்டார்.

இந்தவொரு காரணத்திற்காக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதந்தாங்கிய போலிஸ், கும்பல் கும்பலாகச் சென்று சங்கரலிங்கபுரம் சேரியையே சுற்றி வளைத்தது. தெருவுக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் அடித்து நொறுக்கியது. எங்கும் கண்டிராத மனிதத்தன்மையற்றத் தாக்குதலை நடத்தியது போலிஸ் கும்பல். – யாக்கன்

அதிகாரக் குவிப்பு

இந்து தேசியம் உருவாக, பார்ப்பன பனியா சக்திகள் முழுமையாய் அதிகாரத்தைப் பெற, இன்றைய நாடாளுமன்ற ஆளுங்கட்சி என்ற தகுதி மட்டுமே போதாது. அதற்கு மென்மேலும் அதிகாரக் குவிப்பு தேவைப்படுகிறது. பயங்கரவாதத்தினைக் காரணம் காட்டி ‘பொடா' வரும், போர்வரும், அணுகுண்டு வெடிக்கப்படும். இதற்குப் பின்னணியில் இருப்பதென்னவோ அதிகாரக் குவிப்பிற்கான வெறிதான்.

- மாயா

சாதியை அழியுங்கள்

மனித உரிமைக் கல்வி, மனித உரிமைப் பண்பாடு ஆகியன தொடக்கத்திலேயே மக்களிடையே பரவ வேண்டும். இதன் மூலம் சமூகத்தில் ஒத்திசைவும் அமைதியும் நிலவும். எனவே, மனசாட்சியுடைய, பொதுநலம் சார்ந்த அனைத்து மக்களையும் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒற்றுமையாக இருங்கள்; சாதியத்தை அழிக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

– நீதிபதி கே.ராமசாமி

பிப்ரவரி

தனித்த இலக்கியம்

தலித் இலக்கியம் என்பது தலித்துகளாலும், தலித் உணர்வை உள்வாங்கிக் கொண்டவர்களாலும் எழுதப்படுவது; விடுதலையை நோக்கமாகக் கொண்டது. அசிங்கம், அருவருப்பு, அவமானம் என்றும் அவற்றைப் பேசக் கூடாது என்றும் ஆதிக்க சாதி கருதும் அனைத்தையும் பகிர்ந்து கொள்வது. சாதியையும் அதன் கட்டளைகளையும் புரட்டும் வகையில் கலகக் குரல் உடையது; எள்ளல் தன்மையுடையது. வாய்மொழி மரபையும், பேச்சுமொழியையும் கையாளுவது. பிரச்சாரத் தன்மையுடையது. வடிவம், உள்ளடக்கம், அழகியல் உள்ளிட்டவைகளைப் பற்றி கவலை கொள்ளாது தனக்கேயான தனித்த வடிவம், உள்ளடக்கம் மற்றும் அழகியலை கைக்கொள்வது. – அழகிய பெரியவன்

மின்னுவதெல்லாம் பொன்னல்ல; அது தலித்துகளின் ரத்தம்

இந்தியாவின் பொருளõதாரத்தையே நிர்ணயிக்கும் தங்க வயலின் சாதனைகளின் பின்னேதான் தலித்துகளின் வேதனைகளும் அடங்கியுள்ளன. அன்றைய காலகட்டத்தில், அறிவியல் தொழில்நுட்பம் இல்லாத ஆபத்தான சுரங்க வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத நேரம். இதற்காகத் துணிந்து இறங்கியவர்கள் தலித்துகள். தமிழகத்தின் நிலப்பிரபுத்துவ சாதிப்பிடியின் கொடூரத்தைவிட, சுரங்கப் பணியில் சாவதே மேல் என் இங்கு வந்து சேர்ந்தனர்.

சுரங்க மண் சரிவு, ‘ஏர் பிளாஸ்ட்' எனப்படும் பாறை வெடிப்பு, சிலிகாசிஸ் போன்ற சுரங்க அபாயங்களால் இதுவரை ஆறாயிரம் பேர் இங்கு உயிர்பலி ஆகியிருக்கிறார்கள். கைகளை இழந்தவர்கள், கால்களை இழந்தவர்கள் எனப் பல ஆயிரங்கள் உண்டு. இந்த உயிர் சமாதிக்கு பயந்து சிலர் மீண்டும் கிராமங்களுக்கு ஓடிவிட்டால், அதைத் தடுப்பதற்காக அவர்களை மீண்டும் சுரங்கத்திற்கு இழுத்துவர, அன்றைய தொழிலாளர்களின் கால்களில் அடையாள எண் பொறித்த இரும்புக்காப்புகளை விலங்கு போல மாட்டி வைத்தனர் ஆங்கிலேயர்கள்.

– தங்கவயல் ராஜ்குமார்

உதிரக் கேள்வி

கனத்த கனத்த / புத்தகங்கள் படித்த / பிரமிக்க வைத்த / பேச்சுகள் பேசி / சாதித் தேடிப் புணரும் / உன் கருவை எதிர்த்து வெளியேறும் / என் ஒவ்வொரு மாத ‘ரத்த'ங்களும் / உன் தத்துவங்களை விட ‘மகத்தானவை'

– சு.ம. காட்டேரி

”என் தாய் தந்த விருது” ‘தலித் முரசு' விருது பெற்ற பாமா ரீட்டா மேரிக்கு நேர்ந்த கொடுமை கோ.சுகுமாரன்

எங்கிருந்து தொடங்குவது ந.கோபி கொலை வலையில் ஒரு சாட்சி கோ.சுகுமாரன் நவீன

நாடகப் போக்கின் அமைதி அரசு வி.வே.முருகேச பாகவதர் ஓர் அறிமுகம் ப.சரவணன்

மார்ச்

காதல் ஜாதி பார்க்குமா?

ஆதிக்க சாதியினர் செய்யும் அதே தவறுகளையும், அநியாயங்களையும் காப்பியடிக்கும் வேலையை தலித் மக்கள் விட்டொழித்தாலே போதும். இந்து மதவாதிகளுக்கு பேரிடியாக உட்சாதிப் பிரிவுகளை உடைத்து, காதல் திருமணங்ளை தலித் மக்கள் பெருமளவில் நடத்தி வைக்க வேண்டும். சாதியை அழிப்பதற்கு காதல் மற்றும் சாதி மறுப்புத் திருமணங்களால்தான் முடியும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வளவு பேசினாலும் சொல்ல வந்ததெல்லாம் இந்த இரண்டு வரிகளைத்தான்: காதல் ஜாதி பார்க்காது; அப்படிப் பார்த்தால் அது காதலே இல்லை. – செவ்வந்தி

44 லட்சம் பணியிடங்கள் மறுக்கப்பட்டுள்ளன

‘தாட்கோ' பங்கு முதலீட்டுத் தொகையான ரூ.1,625 லட்சத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால், தலித்துகளின் பொருளாதார வளர்ச்சிக்காக 5 ஆண்டுகளில் வெறும் 13.80 கோடி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பது தெரியாது. இப்போதும் அரசு வேலைகளுக்கான இடஒதுக்கீட்டில், 22.5 சதவிகிதம் தலித்துகளுக்கு முறையாக ஒதுக்கப்பட்டிருந்தால், 195 லட்சம் உள்ள மத்திய, மாநில அரசுப் பணிகளில் 44 லட்சம் பணியிடங்கள் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உண்மையில் 15 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்படி பணியிடங்களை ஒதுக்காமல் தலித்துகள் வஞ்சிக்கப்படுகின்றனர். – ப்ரதிபா ஜெயச்சந்திரன்

புனிதப் பீடங்கள் இல்லை

தலித் இலக்கிய வெளியில், புனிதப் பீடங்களுக்கு இட மேயில்லை. அறிவு மமதையில் தனிநபர்களால் கட்டி எழுப்பப்படும் பீடங்கள், புற்று நோய்க் கட்டிகளென அறுத்தெறியப்படும். வளரும் தலைமுறை அதை உறுதி செய்யும். தமிழகச் சூழலில் வஞ்சிக்கப்பட்ட ஒரு மொழியைத் தனது மொழியாக்கிக் கொண்டு, வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட வாசிப்பு முறையை மொழியின் வலிமையை, அதன் உள்ளீடை உடைத்தெறிந்த பாமாவின் படைப்புகளை – ‘அழுகுனிக் கதைகள்' என்றம் ‘நியூஸ் ரீல்' என்றம் சவடால் அடிக்கும் இந்தக் கோமாளியால் மட்டுமல்ல; பீடங்களில் அமர்ந்து கொண்டிருக்கும் அறிவுப் புலிகளாலும் மறைத்துவிட முடியாது. – யாக்கன்

ஏப்ரல்

அணுகுண்டு அலுவலகம்

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்க திட்டமிடப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கான பணிகள் இப்போதுதான் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மார்ச் 31 அன்று அணுஉலை அமைய உள்ள பகுதியின் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டுவிட்டது. 1989 இல் கூடங்குளத்தில் பணிகள் தொடங்கப்பட்டபோது, அணுஉலையின் ஆபத்து குறித்த குரல்களே முக்கியமாக இருந்தன. ஆனால், இன்றோ கூடங்குளம் நிலப்பகுதி அணு உலைகள் அமைக்க ஏற்ற இடம்தானா என்ற அடிப்படையிலேயே கேள்விகள் எழுந்துள்ளன. அணுகுண்டு தயாரிப்பதற்காகத்தான் அணுமின் நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதுதான் அடிப்படையான செய்தி. அணு குண்டுகள் பல லட்சம் பேரைக் கொல்லும் ஆற்றல் படைத்தவை என்றால், அதை உருவாக்கும் கேந்திரம் எவ்வளவு ஆபத்தானதாக இருக்கும்? தமிழ்க் கூறு நல்லுலகம் சிந்திக்கட்டும். இனியாவது தமிழ்மண்ணில் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கட்டும்.

– அசுரன்

கீழ்வெண்மணியின் குரல்?

‘டாக்டர் கிருஷ்ணசாமியும், திருமாவளவனும் சாதிக் கலவரத்தைத் தூண்டுகிறார்கள்; தமிழகத்தைக் கலவர பூமியாக மாற்றுகிறார்கள்' என்று கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் உட்பட சாதி இந்து அரசியல்வாதிகள், போலிஸ் மற்றும் சாதியப் பத்திரிகைகள் தொடர்ச்சியாக செய்து வரும் பிரச்சாரம் இது. ஆனால், சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்கப் போராடும் மக்களின் பிரதிநிதிகளை கலவரக்காரர்களாக சித்தரிக்கும் ஆளும் வர்க்க கருத்தை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் பரப்புவதன் மூலம், அவர்கள் எந்த வர்க்கத்தின் பக்கம் நிற்கிறார்கள்? சாதி இந்துக்களின் பக்கம் நிற்பதால்தான் தலித் தலைவர்களைத் தடுக்க – எந்தத் தயக்கமும் இல்லாமல் போலிசின் உதவியை நாடியிருக்கிறார்கள் போலும்!

ஒருவேளை காரல்மார்க்ஸ் உயிரோடிருந்தால் இப்படிச் சொல்லியிருப்பார் : “உங்கள் எதிரி யாரென சொல்லுங்கள்,நீங்கள் யாரென தலித்துகள் தெரிந்து கொள்வார்கள்” – கவுதம சன்னா

சதாசிவம் கமிஷன் விசாரணை கோ.சுகுமாரன் குடியரசு: அலைவுற்ற அமைதியான வெற்றி கவுதம சன்னா ’ஜனசக்தி' வருத்தம் தெரிவிக்க வேண்டும் புலேந்திரன் சங்கரலிங்கபுரம் : கொலைப் பழி சுமக்கும் குழந்தைகள் ஆதவன் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு சிறப்புக் கல்விக் கூடங்கள் வேண்டும் டாக்டர் அம்பேத்கர்

தங்களுடன் பிறந்த சகோதரர்களுடனே ஒன்றிணையமாட்டோம் என்கின்ற மனப்பக்குவம் உள்ளவர்கள், எப்படி தலித் விடுதலையை வென்றெடுக்க முடியும்? இந்த மனப்பக்குவம் உள்ளவர்களைக் கடுமையான

கண்டனத்திற்கு உட்படுத்த வேண்டும். – கிருத்துதாசு காந்தி : ‘மானக்கேட்டைக் கண்டு சீற்றம் வர வேண்டும்'

மே

சாதி அறிவிப்பு (சட்ட) மன்றம்

தலித் மக்களின் வாழ்வியல் மேன்மைக்குப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்ளும் இரண்டு திராவிடக் கட்சிகளின் துரோக வரலாறு இது. உலகத் தமிழர்களின் தலைவர் என்ற பட்டத்தைப் பறிகொடுத்துவிட்டு பரிதவிக்கும் கருணாநிதி, தன் அரசை ‘சூத்திர அரசாக'ப் பிரகடனப்படுத்தினார். உலகப் புரட்சிகளை நடத்தி முடித்த ‘புரட்சித் தலைவ'ரின் வாரிசான ஜெயலலிதா, ‘நான் ஒரு பாப்பாத்திதான்' என்று சட்டமன்றத்திலேயே பகிரங்கமாகப் பிரகடனம் செய்தார். தமிழர்களின் சட்டமன்றம், சாதி அறிவிப்பு மன்றமாக மாறிய அவலத்தை உருவாக்கிய பெருமை பகுத்தறிவு திராவிட அரசுகளையே சாரும். – கவுதம சன்னா

ஜாதிக் கலவரம் அல்ல!

பட்டியல் சாதியினர் சாதிக்குள்ளேயே இல்லை என்பதுதானே நால்வர்ண நூல்நயம்! சாதியே இல்லாதவன் மீது நடத்தப்படும் வன்முறைக் கலகம் எப்படி சாதிக் கலவரமாகும்? Scheduled Castles என்று ஆங்கிலத்தில் புறத்தார் இவருக்கு நாமமிட்டதால் மட்டுமே இவர் சாதியைத் தாங்கியவராகார். இந்து மதமும் இவர்தமை சாதிக்குள் இதுகாறும் சேர்க்கவில்லை. Scheduled Castles என்பது சாதிகள் அல்ல என்பதை உச்சநீதிமன்றமும் விளம்பி விட்டது. பின் நடக்கும் கலவரம்தான் என்ன? முன்னும் சரி, இன்றும் சரி, நடந்தது, நடப்பது, நடக்கவுள்ளது யாவும் ‘வன்கொடுமை'யின்பால் சேரும். பட்டியல் சாதியினர் மீது யாதொரு பட்டியல் சாதியினரல்லாதவரால் இழைக்கப்படும் குற்றங்கள்தாம் ‘வன்கொடுமை' என்பதாகச் சட்ட நூலில் குறிக்கொள்ளப்பட்டுள்ளது. – கிருத்துதாசு காந்தி

மதமாற்ற ஆயுதம்

கூத்திரம்பாக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் கிராமம். கடந்த 22 ஆண்டுகளாக தலித் மக்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறப்போவதாக அறிவித்து வருவதுதான் இந்தப் பரபரப்புக்குக் காரணம். சாதி இந்துக்களின் கொடுமைகளிலிருந்து விடுபடுவதற்காக அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் மதமாற்றம். இவர்கள் மதம் மாறுவோம் என தேதி குறிக்கும் போதெல்லாம் அரசு அதிகாரிகள் ஓடோடி வந்து, பரிவோடு பேசுவார்கள். சமாதானக் கூட்டமெல்லாம் கூட நடக்கும். ஆனால், பிரச்சனைகள் மட்டும் தீராது. – ஆசூர் ராஜ்

சூன்

எங்களுக்கு அடிக்கமாட்டீங்களா?”

‘சக்கிலியன் கலெக்டரே ஆனாலும் இங்கே தப்பு அடிக்கச் சொன்னா அடிக்கணும்; இல்ல கட்டி வெச்சு தண்ணி இல்லாம கொன்னுடுவோம் ஜாக்கிரதை” கோவை மாவட்டம் பொங்கலூர் ஒன்றிய கெருடமுத்தூர் அருந்ததியர்களை ஆதிக்க சாதி கவுண்டர்கள் இப்படி மிரட்டி வருகின்றனர். சாதி ரீதியான கொடுமைகள் பொங்கலூர் ஒன்றியத்தில் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில்,மூங்கில் தப்பைகளில்தான் தலித்துகளுக்கு குடிக்கத் தண்ணீர் ஊற்றுகின்றனர். கெருடமுத்தூரில் உள்ள கவுண்டர்களின் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு, அங்கே உள்ள அருந்ததியர்கள் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தப்பு அடிக்க வரவேண்டும் என்று கட்டாயப் படுத்தப்பட்டனர். இதைக் கேள்விப்பட்ட அருந்ததியர்கள் இலவசமாகத் தப்பு அடிக்க முடியாது என்று கூறினர்.

இதனால் ஆத்திரமடைந்த ஊர்க் கவுண்டர்கள், ‘உங்க சர்ச்சுக்கு இலவசமாக அடிக்கறீங்க... எங்க மத சாமிக்கு பணமா கேட்கிறீங்க அவ்வளவு திமிரா...” என்று கோபமடைந்து பெண்கள், குழந்தைகள் என்று பார்க்காமல் ஊர்ப் பொது இடத்தில் அவர்களை அடித்து உதைத்தனர்.

– கோவை ரவி

அகண்ட பாரதம்

கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் தீர்க்கப்படாத பிரச்சினையாக காஷ்மீர் இருந்து வந்த போதிலும், பேச்சு வார்த்தையை முற்றிலும் நிறுத்தி விட்டு படைகளைக் குவித்து’பாகிஸ்தானுடன்இறுதிப் போர்' என்று வாஜ்பாய் அறிவித்திருப்பதற்கு காரணம் என்ன? உலகின் வேறெங்கிலும் காணமுடியாத, ஒப்பீடற்ற அடக்குமுறையை காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடத்திக் கொண்டிருக்கும் இந்தியா, அதே காஷ்மீர் பிரச்சினையை காரணம் காட்டி பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதை நியாயப்படுத்தி வரும் மோசடியை இந்திய மக்கள் உணரவில்லை. காரணம், இந்து பாசிசமே இந்திய உளவியலாக மாறி வருகிறது.

காஷ்மீர் பிரச்சனையை நேர்மையோடு அணுகிய ஒரே தலைவர் அம்பேத்கர்தான். காஷ்மீர் மக்களின் எண்ணத்திற்கேற்ப அவர்களின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்து கொள்ளும்படி விட்டுவிடுவதுதான் இந்தியாவிற்கு நல்லது.

– யாக்கன்

காவல் நிலையத்தில் குறைந்தபட்சம் ஓராண்டில் 8 லட்சம் வழக்குகள் பதிவாகின்றன. மொத்த வழக்குகளில் 1 சதவிகிதம் என்றால்கூட, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் 8,000 வழக்குகள் பதிவாகி இருக்க வேண்டும். ஆனால், 13 ஆண்டுகளில் மொத்தமே 7,362 வழக்குகள்தான் பதிவாகி இருக்கின்றன.

– கல்யாணி (எ) கல்வி மணி : ‘எல்லாவற்றுக்கும் அடிப்படை மக்கள்தான்'

தலித் மூலதனம் உருவாக்கப்பட வேண்டும் நீலகண்டன் குஜராத் இனப்படுகொலை 2002

புத்தருக்கு ஒரு அம்பேத்கர்; அம்பேத்கருக்கு ஒரு வசந்த் மூன் சங்கமித்திரை செருப்பு ஜனநாயகம் யாக்கன் ஆகிவருமா இந்த ஆசைகள்? கிருத்துதாசுகாந்தி இந்து மதம் தழுவிய அரசமைப்புச் சட்டம் கவுதம சன்னா

தலித் இலக்கியத்தின் கருதுகோள் தலித் விடுதலையை மய்யப்படுத்திய மனித விடுதலை. கடைக்கோடி மனிதனின் பார்வையிலிருந்து மனித உறவுகளையும், சமூகத்தையும் விசாரிப்பிற்குள் ஆக்குவது. இப்புரிதலற்றவர்கள் தலித் இலக்கியம் என்ற வரையறைகளுக்குள் சிக்கிக் கொள்கின்றனர். தலித் இலக்கிய வளர்ச்சிக்கு துணை நிற்காது. – சிவகாமி: ‘தலித் பெண்ணியம் தவிர்க்க முடியாதது'

சூலை

கொலைக் களம்

17 உயிர்களை காவு கொண்ட அந்த கொடூர சம்பவம், தலித் மக்களின் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தி அந்த மரண வேதனையிலிருந்து இன்னும் மீள முடியாமல் தத்தளிக்கிறபோது, மீண்டுமொரு கொலைக் களத்தை உருவாக்க தமிழக அரசும் இந்தியாவின் ஏகபோக பெருமுதலாளிகளும் துடித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகமெங்கும் உள்ள தேயிலைக் காடுகளில் போர் மேகம் சூழ்ந்துள்ள இத்தகைய நிலைக்கு தனியார்மயம், தாராளமயம், உலகமயம், புதிய பொருளாதாரக் கொள்கைகளே அடிப்படைக் காரணங்களாகும். இவையனைத்துமே நவீனம், விஞ்ஞானம், முன்னேற்றம் என்கிற பெயரில் உழைக்கும் அடித்தட்டு மக்களை உயிரோடு அழிக்க வந்த கொடுங்கரங்கள். – கே.எஸ்.முத்து

பாடத்திட்டத்தில் பாகுபாடு

சேரியில் தான் வாழும் சூழலும் மொழியும் பாடத்திட்டத்தில் இல்லாத காரணத்தினால் தாழ்வுணர்ச்சிக்கு ஆட்பட்டு தோல்வியடைகிறார்கள் சேரி மாணவர்கள். பத்து வயதில் மிகச் சிறந்த மோட்டார் மெக்கானிக்காக இருக்கும் சேரி மாணவன், மாபெரும் விஞ்ஞானியாக மாறுவதைத் தடுப்பது இப்பாடத்திட்டம்தான். சேரி மொழியின் தனித்த இலக்கணம் அச்சில் வர வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.

– சிறீரங்கன்

ஆகஸ்ட்

தலித்துகளுக்கெதிரான ஊர்க்கட்டுப்பாடு

70 தலித் குடும்பங்கள் உள்ள சங்கர கவுண்டன் பாளையத்தில், 2000 ஆம் ஆண்டு அரசு வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையை உரியவர்களுக்குத் தர வேண்டும்; ஊர்க் கவுண்டர்கள் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டதால், ‘சக்கிலிக்கு என்னடா உரிமை, சொல்ற இடத்திலே ஓட்டுப் போடுறத விட்டுட்டு சட்டம் பத்தி பேசக் கூடாது' என்று கேள்வி கேட்ட அருந்ததியர் இருவரை அடித்து உதைத்தனர். காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டதை அறிந்து ஊர்க் கவுண்டர்கள் கூடி தலித்துகளுக்கு எதிராக ஊர்க் கட்டுப்பாடு விதித்தனர். – கோவை ரவி

செப்டம்பர்

ஆண்ட பரம்பரைக் கனவு

மன்னர் பெருமை பேசுவது, தமிழ்ப் பெருமை என்பதாக ஆரம்பித்து, பிறகு அது அவர்கள் திட்டமிட்டபடியே சரியாக ஜாதிப் பெருமையில் வந்து முடிகிறது. ஆம், தமிழ் மக்களின் தொன்மப்பெருமை என்று ஆரம்பித்து, அதற்கு சரியான ஆதாரம் கிடைக்காததால், யூகித்து, யூகித்து கடைசியில் மக்களின் பெருமை எல்லாம் மதப் பெருமை, அல்லது சைவப் பெருமை என்று வந்து, ‘சிவனும், முருகனும், திருமாலும் தமிழ்க் கடவுளே' என்று உரிமை கொண்டாடி கடைசியில், ‘மன்னன் பெருமையே மக்கள் பெருமை' ‘மன்னனின் சீரும் சிறப்புமே மக்களின் சீரும் சிறப்பும். அந்த மன்னனே மக்கள்' என்று முடிவு செய்து, ‘மன்னனாக இருந்த மக்கள் எந்த மக்கள் தெரியுமா?' அது எங்கள் ஜாதி மக்கள் என்று ஆய்வு செய்தவர் என்ன ஜாதியோ, அந்த ஜாதியை சொல்லித் தீர்ப்பளிப்பது. – வே.மதிமாறன்

அடிப்படை ஜாதிதான்!

எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம், இந்த பாழாய்ப்போன சாதிதான். அந்த சனியன் ஒழியணும். கலைஞனை ஒரு கலைஞனா மட்டும்தான் பார்க்கணும். அவன் திறமையைப் பார்த்து பாராட்டணுமே தவிர, அவன் சாதியைப் பார்த்து பட்டம் கொடுக்கிறதோ, பாரபட்சம் காட்டுவதோ கூடாது. – காந்தி அண்ணாவி

சூத்திரர் யார்?

பெரியார், ஒட்டுமொத்த பார்ப்பனரல்லாத சமூகத்தையும் குறிப்பிடுவதற்குதான் ‘சூத்திரன்' என்ற சொல்லைப் பெரும்பாலும் பயன்படுத்துகிறார். பெரியாரை ஓரளவுக்காவது படித்திருப்பவர்களுக்கு இது விளங்காமல் போகாது. மநுதர்மம் பிரித்துள்ளபடி, சூத்திரன் என்ற பிரிவில் தலித்துகள் அடங்க மாட்டார்கள். ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டப்படியே பார்ப்பனரல்லாத சமூக மக்கள் அனைவரும் (தலித்துகள் உட்பட) சூத்திரர்கள்தானே! இதைத்தான்

பெரியார் சொல்கிறார். அவர், ‘பார்ப்பனரல்லாத மக்கள்' என்றும் ‘திராவிடன்' என்றும் குறிப்பிடும்போது அதில் தலித்துகளும் அடக்கம். வர்ணாசிரமப் படிநிலையை வைத்து மட்டும் அவர் தலித்துகளை அணுகியதில்லை.

– புனித பாண்டியன்

சமூக மாற்றத்தை விரும்பாதவர்களுக்கு ‘ஜாதி' என்பது நல்ல வார்த்தை. ‘பீ' என்பது கெட்ட வார்த்தை. ‘பீ' உன் வயிற்றுலேயும் இருக்கு; என் வயிற்றுலேயும் இருக்கு. ‘பீய்க்கு ஏண்டா பெயின்ட் அடிக்கிறேன்னு' கேட்டா கோபம் வருது. தலித் மக்களின் வாழ்வியல் வெளிப்பாடு எல்லாமே இயற்கையைச் சார்ந்தது. இது, இயற்கையோடு ஒட்டிய தொடர்பியல் முறை. சாதி என்பது இயற்கை இல்லையே. – பரட்டை: ‘பீய்'க்கு ஏண்டா பெயிண்ட் அடிக்கிற?

அக்டோபர்

வேர்களின் மண்ணுரிமை

தலித் மக்களுக்கு மட்டுமே சொந்தமான பஞ்சமி நிலத்தை மீட்டெடுக்கவும் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தால் இம்மக்கள் நிலங்களிலிருந்து அந்நியமாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், தொடர் போராட்டங்கள் அவசியமாகிறது. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 70% மக்கள் வாழ்க்கை நடத்துவதற்கு அடிப்படை ஆதாரமாக நிலம் பயன்படுகிறது. இதனால் நிலவுடைமை முறையில் மாற்றம் செய்வதாகவும் அதிக அளவில் உற்பத்தி செய்வதையும் அரசு தனது கொள்கையாக வைத்துள்ளது. ஆனால், நடைமுறையில் நிலத்தை சாகுபடி செய்பவர்களிடையே மிகுந்த ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன. இவற்றை நீக்குவதற்கு நில சீர்திருத்தச் சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆனாலும், இச்சட்டங்கள் மூலம் இம்மண்ணுக்குச் சொந்தக் காரர்களான தலித்துகள் பயன் பெறவில்லை என்பது தான் வேதனையான உண்மை. – எஸ். நடராசன்

நவம்பர்

கோமாதா எங்கள் கொலை மாதா!

மாட்டுச் சாணத்தின் துர்நாற்றமடிக்கிற அரியானா மாநிலத்தின் வறுமை மிகுந்த ஷாஜர் மாவட்டத்தின் துலீனா கிராமம் அருகே பாழடைந்த செங்கல் கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருந்த காவல் நிலையச் சுவர்களுக்குப் பின்னால் திட்டுத் திட்டாய் உறைந்து கிடக்கும் ரத்தம், இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அக்டோபர் 15 அன்று செத்த மாட்டுத் தோலை உரித்ததற்காக விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள், சிவசேனா போன்ற இந்து பயங்கரவாத அமைப்பினரால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தெருக்களில் குப்பைக் கூளங்களையும், கழிவுத் தாள்களையும் ஒன்றும் கிடைக்காமல் போனால் காய்ந்துபோன ‘பீ'த் துண்டுகளையும் பொறுக்கித் தின்னும் மடிவற்றிய, கிழடு தட்டிப்போன பசு மாடுகளில்தான் முப்பத்து முக்கோடி தேவர்களும் குடி கொண்டிருக்கிறார்களாம்! அது மாடு அல்லவாம், மாதாவாம் – ‘கோமாதா.' – யாக்கன்

நிறைவேறிய இந்துத்துவ கனவு

‘கிறித்துவ மதத்தில் இருக்கும் தலித் ஒருவர் மீண்டும் இந்து மதம் மாறினால் இடஒதுக்கீட்டு உரிமை இல்லை” என்ற (தி.மு.க., அ.தி.மு.க.) அரசுகளின் ஆணையை ‘தலித் முரசில்' விரிவாக மூன்று இதழ்களில் விவாதித்திருந்தோம். அந்த ஆணை, மதமாற்றத் தடை ஆணைதான் என்று அந்தக் கட்டுரை முடிக்கப்பட்டிருந்தது. அதை எந்த இயக்கமும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், தலித் இயக்கங்கள் செய்யாமல் விட்ட பணியை ஏப்ரல் 2002 இல் வேலூரைச் சேர்ந்த பேராசிரியர் இளங்கோவன் அவர்கள் மட்டும் இதில் முனைப்புக் காட்டி, தனி மனிதராகச் செயல்பட்டார்; நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உயர் நீதிமன்றம் இந்த ஆணைக்கான இடைக்காலத்தடையை வழங்கியது. – கவுதம சன்னா

விடுதலைப்பாதை

மதமாற்றத்தின் மூலம் சமத்துவத்தைப் பெற்றுவிட்டபிறகு, இந்துக்களுக்கும் தீண்டத்தகாத மக்களுக்குமிடையே ஒற்றுமை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனில், இந்த எளிய, மகிழ்ச்சியான பாதையை, சமத்துவத்தை அடையும் பாதையை ஏன் தீண்டத்தகாத மக்கள் கடைப்பிடிப்பதில்லை? இப்பிரச்சினையை இந்தக் கோணத்தில் பார்த்தால், மதம் மாறும் வழி ஒன்றே விடுதலைக்கான பாதை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இது, இறுதியில் சமத்துவத்தை அடைய வழிவகுக்கும். – டாக்டர் அம்பேத்கர் 

டிசம்பர்

யாருடன் கூட்டணி?

தலித் – பார்ப்பனர் கூட்டணி பற்றிப் பேசும் தலித் சிந்தனையாளர்கள் வரலாற்று ரீதியாக, அனுபவ ரீதியாக உள்ள சமூக உறவுகளைப் பற்றி கேள்வியெழுப்புவதில்லை. தலித்துகளின் பொருளாதார மேம்பாட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இவர்கள் விவாதிக்கின்றனர். தலித்துகள் பொருளாதார மேம்பாடு அடையவேண்டும் என்பதை எவருமே மறுக்க முடியாது. ஆனால், இந்தியாவின் சமூக மாற்றத்திற்கான தத்துவத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் பொருளாதாரப் பிரச்சனை என்பது தலித் பிரச்சனையின் ஒரு பகுதியே என்று சொல்லியிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உண்மையில் சூத்திரர்களுக்கும், தலித்துகளுக்கும் இடையே உள்ள பண்பாட்டுத் தளங்களில் நிலவும் ஒற்றுமையை எளிதில் பார்க்க முடியும். ஆனால், பார்ப்பனர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையிலான பண்பாட்டுத் தளங்களை நாம் காணமுடியாது. அம்பேத்கர், பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும் தாக்கும்போது அவர் தலித்துகளுக்கான சமூக மாற்றத்தையும் பிற சமூகத்தின் மாற்றத்தையும் தன்னுடைய செயல்திட்டமாகக் கொண்டிருந்தார். அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட மக்களை ஒடுக்குபவர்களாகப் பார்க்கவில்லை. இம்மக்களிடையிலான சாதி உணர்வை அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றாகவே கருதினார். – காஞ்சா அய்லையா

ஒரு தெருவில் தலித் நடக்க தடை இருக்கும்போது முதலில் தடை நீக்கப் போராடுவதா? தெரு சுத்தமாக இல்லை என வருத்தப்படுவதா? எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.– தயானந்தன் : ‘சூழலியலுக்கு தலித் அனுபவம் தேவை'

புரட்சிகர அரசியலின்றி தலித் விடுதலை சாத்தியமில்லை அன்புசெல்வம் மநுவின் இலக்கியச் சுவடு வே. மதிமாறன் வலுத்து வரும் இந்துத்துவ குரல்கள் நல்லான் இந்தியாவின் தேசத் தந்தை அம்பேத்கர் ஜெ.வி.நிவேதிதா நாங்கள் இந்துக்கள் அல்லர் ஒரு லட்சம் தலித்துகள் பிரகடனம்

Pin It