நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் பயன்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எட்டாக்கனியே. சமத்துவமின்மையால் மிக இழிந்த அவல நிலையில் அவர்கள் வாழ்கின்றனர். தீண்டத்தகாத மக்கள் மட்டுமின்றி, இந்நாட்டின் பல்வேறு பழங்குடி மக்களும், நாடோடிகளைப் போல் அலைந்து, காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழ்க்கையில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் பயன்களை அளிக்கும் முயற்சிகளை எவரும் மேற்கொள்ளவில்லை. ஆளும் வகுப்பினர், கடந்த காலத்தில் எந்த அளவுக்குத் தொண்டு மனப்பான்மையும் பொறுப்புணர்வும் கொண்டிருந்தனர் என்பதைப் புலப்படுத்தும் சான்றுகள் இவை. வருங்காலத்தில் இவர்களது போக்கு முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். இதை நம்புமளவுக்கு நாம் ஏமாளிகளல்லர். இன்றைய சாத்தான்கள் ஒரே நாளில் தேவதைகளாக மாறிவிடும் அற்புதங்களெல்லாம் எங்குமே நடைபெற்றுள்ளதாக நான் அறியவில்லை.

Ambedkar7. நாடு அரசியல் விடுதலை பெறும் வரை, சமூகப் பிரச்சனைக்கான தீர்வு களைத் தள்ளி வைக்கலாம் என்று நம்மிடம் சொல்லப்படுகிறது. ஆனால், இத்தகைய சிந்தனையை அறிவார்ந்த மனிதர்கள் எவரும் ஏற்க மாட்டார்கள். புதிய களம் எதிலும் காலடி எடுத்து வைக்குமுன் அங்கே புதை குழி ஏதும் உள்ளதா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். செல்வந்தர்களாக இருப்பவர்கள் வறியவர்களைவிட வலிமை மிக்கவர்களாக விளங்குவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்; அறிந்திருக்க வேண்டும். ஆற்றல் அதிகாரங்களைக் கொண்டிருப்பவர்கள் அவற்றைத் தாமாக ஒருபோதும் இல்லாதவர்களுக்காகத் துறந்து விடுவதில்லை என்பதையும் நாமறிவோம்; அறிந்திருக்க வேண்டும். சமூகப் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்பட்டால், தமது மேம்பாட்டு நலன்கள் பலவற்றை இழக்க வேண்டிய வகுப்பினரிடம் அரசியல் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டால், அதற்குப் பிறகு இப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்று நாம் நம்பியிருக்க முடியாது. அப்படித் தீர்வு கோரும் அதிகார மேடையில் ஏற யாருக்குத் துணை நின்றீர்களோ, அவர்களை அதிலிருந்து நீக்குவதற்கு பெரும் புரட்சியொன்றை நடத்த நீங்கள் தயாராக இருந்தாலொழிய அது சாத்தியமில்லை.

எனவே பெரியோர்களே! மாபெரும் அரசியல் அறிஞர் எட்மண்ட் பர்க் கூறும் அறிவுரையையே நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்: ‘‘அளவு மிக்க பாதுகாப்பு உணர்வை மேற்கொண்டு அழிந்து போவதை விட, அக்கறை மிகுந்த அய்யப்பாடுகளை எழுப்பி பிறர் பழிப்பிற்கு ஆட்படுவது மேலானது.'' இவ்வறிவுரையின்படி, சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய வழிவகைகளை முன்னதாகவே அரசியல் எந்திரத்தில் ஏற்படுத்துவதுதான் நிலையான உறுதிப்பாட்டைத் தரும் வழி என்று நான் கருதுகிறேன். மாறாக, அந்த எந்திரத்தைக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றிக் கைப்பற்ற எண்ணு பவர்களிடம் பறிகொடுத்துவிட்டு, அவர்களுடைய கருணையை எதிர் நோக்கி நிற்பது, தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் முயற்சியேயாகும்.

8. இப்போது நாம் ஒன்றைத் தெளிவுபடுத்திட வேண்டும். இந்தியாவுக்குத் தன்னாட்சி கிடைப்பதற்கு சமூகக் காரணிகள் தடையாக இருக்காது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதே வேளை தன்னாட்சி அரசுக்கான அரசமைப்புச் சட்டம் எழுதப்படும் போது – சிறிய, நலிவுற்ற சமூகங்களின் நலன்கள் ஒரு மூலையில் புறந்தள்ளி ஒதுக்கப்படாத வகையில் தடைகளும், காப்புகளும் தேவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என வலியுறுத்துகிறோம். தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் பொருத்தமட்டில், இதை நாம் எவ்வாறு பெறப் போகிறோம் என்பது குறித்துதான் நான் அடுத்தபடியாக எடுத்துக் கொள்ள இருக்கிறேன். இப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டாக வேண்டும் எனும் தேவையை உணர்ந்து ஏற்றுக் கொண்டு, அத்தீர்வு தன்னாட்சி அரசுக்காக உருவாக்கப்படும் அரசமைப்புச்சட்டத்தில் இடம் பெற வேண்டும் என்பதையும் ஒப்புக் கொள்ளும் – இந்திய அரசியல் பிரச்சினைகளை ஆய்ந்தறிந்த மாணவர்களும் உண்டு.

இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில், நான் எனது உரையில் முன்பு குறிப்பிட்ட உலகப் போருக்குப் பிறகு உருவான நாடுகள், மேற்கொண்ட தீர்வுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் இம்மாணவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஏனெனில், இந்தியாவில் தற்பொழுது காணப்படும் நிலைகள் அந்நாடுகளில்தான் அப்பொழுது நிலவின. இந்நாடுகளில் எல்லாம் சிறுபான்மை மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அந்நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களில், சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் குறித்த சட்டப்பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் போன்றதொரு அரசமைப்புச் சட்ட முறையே தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நலன்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிப்பதற்குரிய சிறந்த முறை என்று நேரு குழுவின் அறிக்கையும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இத்தகையதொரு திட்டத்தினால் ஏமாற்றப்படாமல் இருக்க நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நான் உங்களை எச்சரிக்கிறேன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் எனும் கூறுகளைப் புகுத்தி, இந்த உரிமைகள் மூலம் தங்கள் நலன்களைப் பெரும்பான்மையோரிடமிருந்தும், ஆளும் வர்க்கத்தினரிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதில் அளவுக்கு மேல் நம்பிக்கை வைப்பது, இந்திய அரசியல்வாதிகளின் வழக்கமாகி விட்டது. நமது பாதுகாப்பிற்கு இத்தகைய திட்டம் போதுமென்று நிறைவடைந்து விட முடியாது. இத்தகைய உரிமை அறிக்கைகள் எவ்வளவுதான் விரிவாகவும் தெளிவாகவும் முழுமையாகவும் ஆர்வமூட்டும் நடையிலும் எழுதப்பட்டிருந்தாலும், இவ்வறிக்கைகள் மட்டுமே அவ்வுரிமைகள் நமக்குக் கிடைப்பதை உறுதி செய்துவிட முடியாது.

உரிமைகள் எவை என்று வரையறுப்பதால் மட்டுமே நாம் உரிமைகளைப் பெற்றுவிட முடியாது. உரிமைகள் மறுக்கப்பட்டால் குறை தீர்ப்புக்கான வழிமுறை எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தே உரிமைகள் கிடைக்கப் பெறும். நான் குறிப்பிட்ட, போருக்குப் பிறகு உருவான புதிய நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களில் சிறுபான்மையினருக்கான அடிப்படை உரிமைகள் வரையறுக்கப்பட்டிருப்பதுடன், பெரும்பான்மையோர் அவ்வுரிமைகளை மீறினால் சிறுபான்மையோர் உலக அரங்கத்தில் முறையீடு செய்யலாம் எனும் விதிமுறையும் இடம் பெற்றிருந்தது. இத்தகைய முறையீடுகளைப் பெற்று ஆவன செய்வதற்கென்றே பன்னாட்டு சங்கம் குழுவொன்றை நியமித்திருந்தது. அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக நேரு குழு அறிக்கையில் இத்தகைய பாதுகாப்பு ஏதேனும் தெரிவிக்கப்பட்டுள்ளதா? முறையீடு செய்வதற்கான வழிவகை எதையும் என்னால் அதில் காண முடியவில்லை. எனவே, நேரு குழுவின் அறிக்கையில் காணப்படும் வாக்குறுதி ஒரு மாயத் தோற்றமே.

9. நேரு குழுவின் அறிக்கையில் முறையீட்டுக்கான விதிமுறை ஏதும் சேர்க்கப்பட்டாலும்கூட, அத்திட்டத்தை ஏற்க வேண்டாம் என்றே நான் அறிவுரை கூறுவேன். பன்னாட்டு சங்கத்திற்கோ, (ஃஞுச்ஞ்தஞு ணிஞூ Nச்tடிணிணண்)அரசப் பிரதிநிதிக்கோ, அரசுக்கோ முறையீடு செய்வதற்கான விதிமுறை இருப்பது – தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தில் கைகொடுக்கும் கூடுதல் ஆயுதமாக இருக்கும் என்றாலும், அது பயனுள்ள ஆயுதமாக விளங்காது. உங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த உறுதிப்பாடு, கட்டுப்படுத்தும் அதிகாரம் உங்கள் கைகளுக்கு வரப் பெறுவதுதான். அப்போது தான் வரம்பு மீறி தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் ஆற்றலைப் பெறுவதுடன் தவறு நிகழும் முன்னரே தடுத்துக் காக்கும் ஆற்றலும் கிடைக்கப் பெறும். ஆளுநரோ, அரசப் பிரதிநிதியோ, பன்னாட்டுச் சங்கம் போன்ற மூன்றாம் தரப்பினர் காப்பார்கள் என்பது நமது பாதுகாப்பை ஒருபோதும் உறுதி செய்யாது.

நமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரத்தைத் தம் வசம் கொண்டிருப்போர், அவற்றை முறையாகப் பயன்படுத்த முன்வரவில்லையெனில், அத்தகைய அதிகாரத்தால் நமக்கு என்ன பயன்? தன்னாட்சி இந்தியாவின் வருங்கால அரசாங்கத்தில் உரிய பங்கினை நாமும் பெறுவது மட்டுமே நமது நலன்களை உறுதி செய்யும் வழி முறையாகும். சட்டமன்றங்களில் போதிய பிரதிநிதித்துவம் பெறுவதே இதற்கான ஒரே வழியாகும். இந்த வழியில் மட்டும்தான் அரசின் செயல்பாடுகளை நாம் நாள்தோறும் கண்காணித்து, நமது பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் பேண முடியும். இத்துடன் கூடுதலான பாதுகாப்பும் உறுதிப்பாடுகளும் கிடைத்தால் பெற்றுக் கொள்ளுங்கள். அவை உங்கள் வில்லின் கூடுதல் நாண்களாக விளங்கலாம்.

ஆனால் சட்டமன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் எனும் பாதுகாப்பை இழந்துவிட்டு, அதற்கு மாற்றாக வேறு எந்த சலுகை கிடைக்குமென்றாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம். போதிய பிரதிநிதித்துவம் பெறுவதன் மூலம் உங்கள் நலன்களுக்கு உறுதிப்பாடு கிடைத்தாலன்றி, நாட்டின் அரசமைப்புச் சட்ட மாற்றம் எதையும் ஏற்க மறுப்பதற்கு உங்களுக்கு முழு உரிமையுண்டு.

10. ‘போதிய பிரதிநிதித்துவம்' என்று இந்தியச் சிறுபான்மையினர் அனைவராலும் பேசப்படுகிறது. ஆனால் எந்தளவுக்கு என்று அது சரியாக வரையறுக்கப்படாததால் தெளிவற்று இருக்கிறது. நமது கோரிக்கைக்குச் சரியான வடிவம் அளிக்க வேண்டுமெனில், அளவு வரையறையொன்றையும் நாம் தர வேண்டும். போதிய பிரதிநிதித்துவம் என்பது, மக்கள் தொகை விகிதத்தில் இருக்க வேண்டுமென்று காங்கிரஸ் வட்டாரங்களில் ஒரு கொள்கை நிலவி வருகிறது. இந்த விகிதக் கொள்கை, சிறுபான்மையினர் பால் பெரும்பான்மையோர் காட்டும் இரக்கமற்ற, பொருளற்ற வறட்டுக் கோட்பாடாகும். சிறுபான்மையினருக்குக் கிடைக்கும் அதிகாரம், அவர்களது உறுப்பினர்களையும் சமூகத் தகுதியையும் பொருத்ததாகும். இச்சிறுபான்மைத் தொகையினரைக் கொண்டு தம்மைக் காத்துக் கொள்வது இயலாது என்றுதான், தமது பங்கீட்டை உயர்த்துமாறு அவர்கள் கோருகின்றனர்.

அத்தகைய கூடுதலான பிரதிநிதித்துவம் இன்றி, அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளவிருக்கும் பெரும்பான்மையினர், வலிமையான ஆதிக்கத்தைத் தாம் சமாளிக்க முடியாதென்று கருதுகின்றனர். இந்தக் கண்ணோட்டத்தில், சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனில், மக்கள் தொகை விகிதத்தைவிட சற்றுக் கூடுதலான அளவில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். இது உண்மை எனில், சிறுபான்மையினருக்கு அவர்களது மக்கள் தொகைக்கு உரிய விகிதத்தில் மட்டுமே பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் எனில், எந்த வகையில் அது அவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கும் என்ற கேள்வி எழுவது நியாயமானது அல்லவா? சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறுவதும், அவர்களுடைய மக்கள் தொகைக்கேற்ற அளவில்தான் பிரதிநிதித்துவம் பெறுவர் என்பதும் முரண்பட்ட எண்ணங்கள் என்றே கருதுகிறேன்.

சட்டமன்றங்களில் சிறுபான்மையினருக்கு அவர்களது மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ற அளவிலேயே பிரதிநிதித்துவம் வரையறுக்கப்படும் எனில், சட்டமன்றமானது நாட்டில் நிலவும் சமூக நிலைமையை அப்படியே கொண்டுள்ள சிறு படிமமாகவே அமையும். அந்த அமைப்பில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் வலிமை ஆகியவை புறத்தே சமூகத்தில் நிலவுகின்ற நிலையில் ஒரு சிறிதும் மாற்றம் இருக்காது. சமூகப் பிரிவினரிடையேயான அதிகாரப் பகிர்வு நிலை அப்படியே நீடிக்கும். ஆனால் அந்த அதிகாரப் பகிர்வு நிலையில் சிறுபான்மையினருக்கு வலிமை சேர்க்கும் வகையில் கூடுதல் பங்கீட்டுக்கு வழிவகுக்கும் சீர்திருத்தம் செய்யப்படுவதன் மூலமே, சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு உறுதியான வழி கிடைக்கும். இக்குறிக்கோளை அடைய வேண்டும் எனில், சிறுபான்மையினருக்கு அவர்களுடைய மக்கள் தொகை விகிதத்தை விடக் கூடுதலான பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும்.

11. பிரதிநிதித்துவம் என்பது கூடுதல் மதிப்பு உயர்வுடன் இருத்தல் அவசியம் என்பதை சிறுபான்மையினர் அனைவரும் ஏற்றுக் கொண்டாலும், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில் கருத்தொற்றுமை காணப்படவில்லை. கூடுதல் பிரதிநிதித்துவம் எதற்காக கேட்கப்படுகிறது; அதனால் கிடைக்கும் பயன் என்ன என்பதைக் குறித்த சரியான புரிதல் இன்மையே காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. நான் முன்னர் அளித்த விளக்கங்களிலிருந்து, வலுவற்றவர்களின் கரங்களுக்கு வலுவூட்டவே கூடுதல் பிரதிநிதித்துவம் என்பது தெளிவு. தங்களைக் காத்துக் கொள்ளப் போதிய வலிமை இல்லாத சிறுபான்மையினருக்கே இத்தகைய வலுவூட்டல் தேவை. எனவே, கூட்டப்பட வேண்டிய வலிமை எவ்வளவு என்பது, கரம் எந்த அளவுக்கு வலுவிழந்திருக்கிறது என்பதைப் பொருத்தே அமையும் என்பது தெளிவு.

கையின் நீளம் மிகக் குறைந்ததாக இருந்தால், அக்கையில் நீண்ட ஆயுதமும், நீளமிக்க கைகளில் நீளம் குறைந்த ஆயுதமும் தரப்பட்டால்தான் சமநிலை நிலவும். மற்றொரு வகையில் கூறுவதெனில், பிரதிநிதித்துவ உணர்வு எல்லா சிறுபான்மையினருக்கும் ஒரே அளவில் இருக்கலாகாது என்பதும், அவரவர்க்குத் தற்போதுள்ள சமூகத் தகுதி நிலையையும் கருத்தில் கொண்டே முடிவு செய்யப்பட வேண்டும் என்பதும் புலனாகும். சமூகத்தில் மிகத் தாழ்வான தகுதி நிலையுடைய சிறுபான்மையினருக்கு, மிகுதியான பிரதிநிதித்துவம் மிக உயர்ந்த தகுதி நிலை கொண்ட சிறுபான்மையினருக்கு, மிகக் குறைவான உயர்ச்சியே போதுமென்பதும் பெறப்படும்.

ஆனால் சமூகத்தின் தற்போதைய நிலை என்னவெனில், எந்தச் சிறுபான்மையோர் மிகுதியான வளங்கள், வசதிகளைப் பெற்று சமூகத்தில் உயர்நிலைத் தகுதியில் உள்ளனரோ, அவர்கள்தான் பிரதிநிதித்துவத்திலும் பெரும் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டு மேலாதிக்கம் செலுத்தி வருகின்றனர். முடி வெட்டப்பட்ட ஆட்டுக்குதான் குளிர் காற்றிலிருந்து மிகுந்த பாதுகாப்பு தேவை என்பதன் அடிப்படையில்தான் பிரதிநிதித்துவத்தில் அதிக பங்கு பெறுவதற் குரிய சிறுபான்மையினர் யார் என்பதையும், யாருக்கு எவ்வளவு பங்கு என்பதையும் பற்றி முடிவெடுக்க வேண்டும். இதற்கு மாறாக, இக்கோட்பாட்டைத் திரித்து முடிவெடுத்தால் பாதிக்கப்படும் சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி, இந்நாட்டுக்கும் அது தீங்காகவே முடியும்.

12. சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்திற்கு மதிப்பளிப்பதெனும் கோட்பாட்டைச் சரியாக எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து இதுவரை நான் எடுத்துக் காட்டினேன். சரியான அளவை நிர்ணயிப்பது எவ்வாறு என்ற கேள்விக்குத் தீர்வு இன்னும் எஞ்சியுள்ளது. இந்த அளவு சூழ்நிலைக்கேற்ப அவ்வப்போது மாறுதலுக்குரியது என்பதைக் குறிப்பிடுவதுடன், அதைக் கணக்கிடுவதற்கான பொது அடிப்படைக் கோட்பாட்டைத் தருவது மட்டுமே என்னால் இயலும். முதலாவதாக, மக்கள் தொகை விகிதம் எந்த வரம்புக்கு மேல் இருந்தால் கூடுதல் பிரதிநிதித்துவ தேவை என்பதைக் குறித்து இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையோர் மற்றும் சிறுபான்மையோருக்கிடையே ஒருமித்த கருத்து உருவாக வேண்டும்.

பின்னர், குறிப்பிட்டதொரு சிறுபான்மை இனத்தவர்க்கான பிரதிநிதித்துவ அளவை நிர்ணயிக்கையில் அவ்வினத்தவரின் 1. சமூக நிலை 2. பொருளாதார வலிமை 3. கல்வி நிலைமை ஆகியவற்றை மதிப்பிட்டு, அவற்றுக்கு எதிர்விகிதப் பொருத்தத்தில் கூடுதல் பங்கு இருக்குமாறு பிரதிநிதித்துவத்தின் அளவு முடிவு செய்யப்பட வேண்டும். இதனைச் சரியாக நிறைவேற்றினால் சிறுபான்மைக் குழுக்களும், சிறுபான்மையினரும் ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியும். அத்தகைய உடன்பாடு நியாயமானதாகவும், சமநீதி வழங்குவதாகவும் எந்தவொரு தரப்பினருக்கும் மனக்குறை விளைவிக்காததாகவும் இருக்கும்.

13. அடுத்து நமது கவனத்தை ஈர்க்கும் கேள்வி, வாக்குரிமை யையும், வாக்காளர் தொகுதிகளையும் குறித்ததாகும். கற்றறிந்த பெருமக்களே! இவற்றைக் குறித்த நமது கோரிக்கை எவ்வாறு அமைய வேண்டும்? வாக்காளர் தொகுதிகளின் அமைப்பில் இரண்டு மாற்று வழிகள் உள்ளன. ஒன்று, தனியான தொகுதிகளின் ஒதுக்கீடு; மற்றது கூட்டுத் தொகுதிகளில் இடஒதுக்கீடு. இதில் எதைத் தேர்வு செய்வது என்பதைக் குறித்து ஒடுக்கப்பட்ட வகுப்புகளிடையே கருத்து வேற்றுமை நிலவுகிறது என்பதை நான் நன்கறிவேன். ஒடுக்கப்பட்ட வகுப்புகளில் பெரும்பான்மையினர் தனித்த வாக்காளர் தொகுதிகளே வேண்டும் என்று கருதுகின்றனர். கூட்டுத் தொகுதிகளில் இடஒதுக்கீடு செய்யப்பட்டால், வாக்களிக்கும் பெரும்பான்மை வகுப்பினர், ஒடுக்கப்பட்ட வகுப்பு வேட்பாளர்களில், தங்கள் விருப்பு வெறுப்புகளுக்குப் பணிந்து, தங்கள் நலன்களுக்கு ஆதரவாக நடக்கக்கூடிய வேட்பாளருக்கே வாக்களிப்பார்கள் என்னும் அச்சமே காரணம். இத்தகைய அச்சத்திற்கு ஆதாரம் இல்லை என்று என்னால் கூற இயலாது.

ஆனால் இதைப் போக்குவதற்கான வழிமுறை தனித் தொகுதி கோரிக்கையன்று. மாறாக, நமது வாக்குரிமை வலிமையை முடிந்தவரை அதிகரிப்பதும், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை கோருவதும் ஆகும். இதன் வாயிலாக, நமது வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் பெரும்பான்மை இனத்தவரின் செல்வாக்கைக் கணிசமாகக் குறைக்க முடியும். வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை கோருதல் முக்கியமென்று கருதுகிறேன். அவ்வாறு வயது வந்தோர் வாக்குரிமை ஏற்கப்படுமாயின், கூட்டுத் தொகுதி முறையில், ஒடுக்கப்பட்ட வகுப்புகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்திற்கு நாம் மறுப்பு தெரிவிக்க வேண்டியதில்லை.

14. இது தொடர்பாக முக்கியமான ஒரு கருத்தை நான் கூறியாக வேண்டும். இந்த நாடு சாதி, மதங்களால் பிளவுபட்டிருப்பதால், சிறுபான்மை மக்களுக்குப் போதுமான பாதுகாப்பு அரசமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்படுவதன் வாயிலாகவன்றி, இந்நாடு தன்னாட்சி சமூக நிலைக்குத் தகுதியுடையதாகாது எனும் நிலைப்பாடு இன்றைய நிலைக்கு ஏற்புடையதாக இருப்பினும் – சாதிகளாகவும், சிறு குழுக்களாகவும் பல துண்டுகளாகப் பகுக்கப்பட்டிருக்கும் இந்தியா ஒன்றுபட்ட நாடாக வேண்டும் என்பதே நமது அறுதிக் குறிக்கோள் என்பதை சிறுபான்மையினர் மறந்து விடக் கூடாது. இக்குறிக்கோளைத் தமது முதல் நோக்கமாகக் கொள்ளாத சிறுபான்மையினர் எவரும் தமக்கு தனியுரிமைகளும் சலுகைகளும் கோருதல் முறையன்று.

எனவே, சிறுபான்மையினர் அனைவரும் தமது பாதுகாப்பு உரிமைகளைக் கோரும்போது, இந்த இறுதி இலக்குடன் அவை முரண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது புலனாக வேண்டும். உங்கள் பின்னடைவுகளால் நீங்கள் இன்னல் அடைகிறீர்கள் என்பது உண்மைதான் என்பதால் நீங்கள் பாதுகாப்புகளைக் கோரலாம். ஆனால் அந்தப் பாதுகாப்புகள் இடைவெளிகளை இணைக்கும் பாலமாக விளங்க வேண்டுமேயன்றி, இந்த ஏற்றத்தாழ்வுகள் என்றென்றும் தொடர்வதற்குரிய காரணிகளாக இருந்துவிடக் கூடாது. சிறுபான்மையினர் கோரும் பாதுகாப்புகளைத் தர இணங்குதல் என்பது, பெரும்பான்மையினரின் கடமை என்பதிலும் அய்யத்திற்கிடமில்லை. அவ்வாறே அனைத்து மக்களுக்குமிடையே ஒருமைப்பாடு உருவாவதற்குத் தடையாயிருக்கும் பாதுகாப்புகள் எவற்றையும் கோராதிருத்தல் சிறுபான்மையினரது கடமையாகும். இந்தக் கண்ணோட்டத்துடன் சிந்தித்தால் தனித்த வாக்காளர் தொகுதிகளைவிட, இடஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டுத் தொகுதிகளே உகந்தவை என்பதை உணரலாம். இம்முறைதான் இன்றைய நிலைமைகளுக்குத் தீர்வாகவும், எதிர்காலக் குறிக்கோள்களுக்குத் துணையாகவும் உதவக் கூடியதாகவும் இருக்கும்.

15. தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் பாதுகாப்பு நோக்கில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு கூறும் உண்டு. பொதுப் (அரசு) பணிகளில் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பற்றியது அது. சட்டமியற்றும் அதிகாரத்தைவிட, அதைச் செயல்படுத்தும் அதிகாரம் முக்கியத்துவத்தில் குறைந்ததல்ல. சட்டமியற்றுவோரின் உணர்வுகளை நிர்வாகிகளின் திரிபுவாதங்கள் வெற்றாக்கி விடவோ, சிதைக்கவோ இயலும். தாழ்த்தப்பட்ட மக்கள் அரசு நிர்வாகக் கட்டுப்பாட்டிலும் உரிய பங்கு பெற வேண்டும் என்பதற்கு இது மட்டுமே காரணமல்ல. வேலைப் பளு மிகுதியினாலோ, பிற சூழ்நிலைகளினாலோ எல்லாவற்றையும் தெள்ளத்தெளிவாக சட்டத்திலேயே வரையறுத்துவிட இயலாது. எனவே, நிர்வாகத் துறைகளின் தலைமையிடம் கணிசமான அளவில் சிறப்பு அதிகாரங்களை விட்டு விடுவது தவிர்க்க இயலாதது. இந்த சிறப்பு அதிகாரங்கள் எந்த அளவுக்கு விருப்பு வெறுப்பு, ஒருதலைப்பட்சம் ஆகியவற்றுக்கு ஆட்படாமல் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொருத்துதான் சமூக நலனும் மேம்படும்.

அரசுத் துறை பெரும்பாலும் ஒரேயொரு வகுப்பாரால் நடத்தப்பட்டு வரும் இந்தியா போன்ற நாட்டில், ஒரு குறிப்பிட்ட வகுப்பின் மேலாதிக்கத்தை வலுப்படுத்த இந்த ஏராளமான சிறப்பு அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து உண்டு. இதைத் தடுப்பதற்கு உறுதியான ஒரே வழி அரசுப் பணிகளில் ஒடுக்கப்பட்ட வகுப்புகள் உட்பட அனைத்து சாதி, மதத்தை சார்ந்தவர்களும் பங்கு பெறுவதே என்பதை நாம் வலியுறுத்த வேண்டும். எனவே, அரசுப் பணிகளில் குறிப்பிட்டதொரு சதவிகிதம் ஒடுக்கப்பட்ட வகுப்புகளுக்கு ஒதுக்கப்பட வேண்டுமென நாம் கோர வேண்டும். இதை நிறைவேற்றுவது ஒன்றும் கடினமல்ல. அரசமைப்புச் சட்டத்தின் மூலம் இதை உறுதி செய்யலாம். வருங்கால அமைச்சரவைகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும் இடம் பெறுவார்கள் என உறுதிப்பாடு இருப்பின் இத்தகைய பாதுகாப்பு வேண்டாமென்று கூட விட்டு விடலாம்; ஆனால் ஒடுக்கப்பட்ட வகுப்புகள் எப்போதும் சிறுபான்மையினராகவே இருப்பார்கள் என்பதால், இதற்கு வாய்ப்பில்லை. எனவே, இத்தகைய பாதுகாப்பு தேவையென்று நீங்கள் வலியுறுத்த வேண்டியது அவசியமாகிறது.

– தொடரும்

அனைத்திந்திய தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் மாநாட்டில் (நாக்பூர்) டாக்டர் அம்பேத்கர் 8.8.1930 அன்று ஆற்றிய தலைமை உரை

Pin It