இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் பாபாசாகேப் அம்பேத்கரின் திருவுருவச் சிலை அவமானப்படுத்தப்படுவதைக் கண்டிக்காமல், அதைக் கருத்துச் சுதந்திரம் என்று யாராவது சொன்னால் அதை ஏற்க முடியுமா? ஆனால், கடந்த மூன்று மாதங்களாக அம்பேத்கருக்கு நேர்ந்த ஓர் அவமரியாதையை "கருத்துச் சுதந்திரம்' என்ற அடிப்படையில் ஆதரிப்பதற்கு இந்நாட்டின் அறிவுஜீவிகள் கிஞ்சித்தும் வெட்கப்படவில்லை. தாங்கள் போற்றும் ஒப்பற்ற ஒரு தலைவரை உண்மைக்குப் புறம்பான வகையில் ஒரு கேலிச்சித்திரம் சித்தரிக்கிறது; நாங்கள் பெரிதும் புண்பட்டிருக்கிறோம்; எனவே அக்கேலிச் சித்திரத்தை பாடத்திட்டத்தில் இருந்து நீக்குங்கள் என்று கேட்பதற்குக் கூட தலித் மக்களுக்கு சுதந்திரமும் உரிமையும் இல்லையா?

அந்த கேலிச்சித்திரத்தை தடை செய்ய வேண்டும் என்று யாரும் கேட்கõத நிலையில், கருத்துச் சுதந்திரத்திற்கு எங்கு பங்கம் வந்தது?

கற்பித்தல் முறையில் கோளாறு நேர்ந்துவிட்டது எனக் கதறும் கல்விமான்களைக் கேட்கிறோம் : 1. டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அரசமைப்புச் சட்டக் குழுவின் தலைவர் என்ற உண்மையை ஏன் என்.சி.இ.ஆர்.டி. குழு இருட்டடிப்புச் செய்தது? அதை இன்றுவரை எவரும் கண்டிக்க மறுப்பது ஏன்? 2. அரசமைப்புச் சட்டம் எழுதப்படுவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்ற உண்மையை ஏன் மறைத்தீர்கள்? (உலகமெங்கும் அரசமைப்புச் சட்டங்கள் எழுதப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்துடன் ஒப்பிட்டு அம்பேத்கர் அளித்துள்ள விளக்கத்தைக் காண்க : "தலித் முரசு' ஏப்ரல் 2012) 3. உண்மைக்கு மாறாக கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது என்ற விமர்சனம் எப்படி கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும்? 4. சங்கரின் கேலிச்சித்திரத்தின் கீழ் எந்த விளக்கமும் இல்லாத நிலையில், பாடத்திட்டக் குழு அப்படியொரு விளக்கத்தை வலிந்து சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? 5. அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்படும்போது இக்குழு எத்தகைய சிரமங்களை சந்தித்தது என்பதோ, சமூகத் தளத்தில் அம்பேத்கரின் வரலாற்றுப் பாத்திரம் குறித்தோ ஒட்டுமொத்த பாடத்திட்டங்களில் இன்றுவரை நேர்மையாக எழுதப்படாத நிலையில், எதிர்மறையான விமர்சனங்கள் மட்டும் ஏன் முன்வைக்கப்படுகின்றன?

இத்துனை நூற்றாண்டுகளாக தீண்டத்தகாதவர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு சேரிகளில் தள்ளப்பட்டுள்ள தலித் மக்களை இன்றளவும் இழிவானவர்களாக சித்தரிக்கும் இந்துக்களின் "புனித (வேத) நூல்'களான பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம்... போன்றவற்றை எரித்துச் சாம்பலாக்காமலும்; தலித் மக்களை அண்ட மறுக்கும் இந்து கடவுளர்களையும் கோயில்களையும் இடித்துத் தரைமட்டமாக்காமலும் சகித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்! "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தத்துவத்தை அளித்த தொல்குடியினரை கீழ்ஜாதியினராக சித்தரித்து, ஜாதிக்கொரு நீதி சொல்லும் மநுஸ்மிருதி அடையாளமாக சில தருணங்களில் கொளுத்தப்பட்டுள்ளதே தவிர, இன்றுவரை அது தடை செய்யப்படவில்லை. தலித்துகளின் கருத்துச் சுதந்திரத்திற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்.

கருத்துச் சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசும் இந்து சமூகம், அம்பேத்கரின் பெயரை ஒரு பல்கலைக் கழகத்திற்கு வைத்ததற்கும், "இந்து மதத்தின் புதிர்கள்' என்ற அம்பேத்கரின் நூலை வெளியிட்டதற்கும் எத்தனை தலித் உயிர்களை பலி கொண்டது! அம்பேத்கரை ஒரு தேசியத் தலைவராக இந்து சமூகம் இன்றளவும் ஏற்கவில்லை. அம்பேத்கருக்கு ஓர் அவமரியாதை என்றால், அவரை நெஞ்சில் எந்தியிருக்கும் ஒரு சேரிக்காரன்தான் கொதித்தெழுந்து போராடுகிறான். எந்த சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டாரோ அந்தத் தலைவருக்கு எதிரான கேலிச்சித்திரத்தை கண்டிக்காமல், அம்பேத்கரின் சிலையை அவமதிக்கும் சாதி இந்துக்களின் பக்கம் நிற்கிறோம் என்பதைக்கூட உணரமுடியாத அளவுக்கு "சுதந்திர வேட்கை' அறிவாளிகளின் அறிவை மறைத்திருக்கிறது! இவர்களின் மதச்சார்பின்மை, முற்போக்கு, தலித் ஆதரவு முகமூடிகள் எல்லாம் கிழிந்து தொங்குகின்றன.

பல நூற்றாண்டுகளாக மநுதர்மத்தின் அடிப்படையில் சிக்கித் தவித்த பெரும்பான்மை சமூகங்களுக்கான உலகின் மிகப்பெரிய சமத்துவ சாசனத்தை உருவாக்குவதற்காகத்தானே இரண்டு ஆண்டுகள் அம்பேத்கர் கடுமையாகப் போராடினார். இன்று இச்சமூகம் அனுபவிக்கும் சமூக, அரசியல் ஜனநாயகம் எல்லாம் அரசமைப்புச் சட்ட அளவிலும், சமூக அளவிலும் அம்பேத்கர் போராடிப் பெற்றுத்தந்தவைதானே! அட அறிவுவாளிகளே! அம்பேத்கர் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானவரல்லர்; அந்த வகையில் கருத்துச் சுதந்திரம் குறித்து தலித் மக்களுக்கு எவரும் இங்கு பாடம் எடுக்கவும் தேவையில்லை.

Pin It