ஒரு மனிதனின் உரிமையை அரசு பறிக்கக்கூடாது என்ற விடுதலைச் சிந்தனை ஒரு புறம்; புரட்சி செய்வதற்கான உரிமை வேண்டும் என்ற சிந்தனை மறுபுறம். இது எங்கு போய் முடியும் என்றால், ஒரு தனி மனிதனை எந்த விதத்திலும் மதிக்காத ஓர் அரசை அமைப்பதில் போய் முடியும். மனித உரிமைக் கோட்பாடு என்பது, தனி மனிதனின் உரிமைகளை முழுமையாக அங்கீகரிப்பதாக இருக்கிறது. அதே சமயத்தில் ஒரு மேம்பட்ட சமூகத்தைத் தீவிரமான வழிகளில் முன்னெடுப்பதையும் அங்கீகரிக்கிறது. ஆனால், அரசு எந்திரத்திற்கு எதிராக தனி மனிதனின் உரிமைகளை நிலைநிறுத்துவது என்பது மட்டும் தனி மனிதனின் எல்லாவித உரிமைகளையும் செயல்படுத்துவது என்பதாக அமையாது. மேம்பட்ட சமூகம் என்பது, எல்லா அம்சங்களிலும் இப்போதிருக்கும் சமூகத்தைவிட உரிமைகளை மதிப்பதாக அமைய வேண்டும்.

உண்மையில், மனித உரிமைக் கோட்பாடு என்பது மேற்குறிப்பிட்ட இரு அம்சங்களை மட்டுமே சார்ந்தது அல்ல. அது மனிதர்கள் அனைவரையும் சமமாகப் பார்க்கிறது. அவர்களுக்கான தகுதிகளையும் வாய்ப்புகளையும் சமமான அளவில் பகிர்ந்தளிக்கிறது. இந்தக் கருத்துதான் இந்தியாவில் புத்தர் காலத்திலிருந்தே பார்ப்பன சமூகத்திற்கும் நாகரிகத்திற்கும் எதிராக, மனித உரிமைக் கோட்பாடு என்பதற்கான உண்மையான அர்த்தத்தையும் உயிர்ப்பையும் தந்திருக்கிறது.

ஒரு மனித உரிமை இயக்கத்திற்கு உள்ளார்ந்த மாண்புகள் இருக்கின்றன. உடலுழைப்பற்ற வர்க்கம் செய்யக்கூடிய ஒரு புரட்சியாக இதைப் பார்க்க முடியாது. ஆயுதப் போராட்டம் என்பது எப்பொழுதுமே சிக்கலுக்குரியது. ஓர் உண்மையான மனித உரிமைப் போராளி ஒருபோதும் வன்முறையை ஆதரிக்க முடியாது. வன்முறையில் ஈடுபடுகின்றவர்கள் ஒருபோதும் மனித உரிமைப் போராளிகளாக இருக்க முடியாது. வன்முறைதான் பல நேரங்களில் நீதி கிடைக்க வழி செய்கிறது என்றும், வன்முறையை ஆதரிப்பவர்கள் சொல்வது போல் உலகில் பெறப்பட்ட அனைத்து வெற்றிகளுக்கும் வன்முறைதான் காரணம் என்பதும் உண்மையல்ல. பல ஆண்டுகளாகவே இந்த சிக்கலைப் பற்றி நாங்கள் மிகத் தீவிரமாக விவாதித்து வந்திருக்கிறோம். எங்களால் ஒரு தீர்வுக்கும் வர முடிந்தது. பல பிரச்சினைகளும் சிரமங்களும் இருக்கத்தான் செய்தன. ஆனால், பல வழிகளிலும் நடைமுறையில் அனைத்து அம்சங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வாக அது இருந்தது.

சமூகத்தின் கட்டுமானத்தில் எண்ணற்ற வன்முறைகள் நிலவும்போது வறியவர்களை பலம் பொருந்தியவர்கள் தாக்குவது, பசி, வறுமை, கல்வியின்மை, திட்டமிடப்பட்ட பாகுபாடுகள், தீண்டாமை முதலியன இருப்பினும், அனைத்துவகை அரசியல் வன்முறையையும் கண்டிப்பது என்பது சரியல்ல. மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையை ஆதரிப்பவர்கள் அல்லர்; ஆனால், சமூகம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதைப் "புரிந்து கொள்ள' வலியுறுத்துவது ஒருவகையான ஆதரவை வழங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இது வன்முறையை ஆதரிப்பதைத் தடுக்கிறது (இதுதான் மரண தண்டனைக்கு எதிரான முக்கியமான வாதம்).

இருப்பினும், நாம் முழுமையற்ற ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். இந்நிலையில் நாம் வெறும் அரசியல் வழிமுறைகளை மட்டுமே கோர முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் எனில், மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையை ஆதரிப்பதில்லை. ஆனால் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் ஆகியோருக்கு ஆதரவான அரசியல் வன்முறையின் பின்னணியை இந்தச் சமூகம் புரிந்து கொள்ள வலியுறுத்கின்றனர். வன்முறையைத் தூண்டும் இந்நிலையை மாற்ற அவர்கள் முயலுகின்றனர். அதே நேரத்தில், அவர்கள் அனைத்து வகை அறியாமைகளையும், அநீதிகளையும் புரட்சியாளர்களின் வன்முறையையும் கண்டிக்கின்றனர். இந்தப் புரிதலில்கூட மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். என்னைப் பொருத்த அளவில், 25 ஆண்டுகளாக விடுதலைக்காகத் தொடர்ச்சியான, திட்டமிட்ட வன்முறையை அருகில் இருந்து பார்த்து வருகின்றவன் என்ற வகையில் வன்முறை என்பது சில நேரங்களில் ஒரு தேவையான தீமை. ஆனால், அது தேவைப்பட்டாலும் ஒரு தீமையே!

ஆக்கப்பூர்வமான முறையில் வன்முறையைப் பயன்படுத்துவது பற்றி இடதுசாரி அறிவுஜீவிகள் பேசுவதை அடிக்கடி கேட்க முடிகிறது. ஆக்கப்பூர்வமான வன்முறை என்று ஒன்று கிடையாது என்பது என்னுடைய உறுதியான கருத்து. அனைத்து வன்முறையும் அழிவைத் தருபவைதான். அழிவு என்பதற்குப் பல பயன்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். இப்படிப்பட்ட ஓர் அழிவுக்கு தற்போதைய சூழலில் ஒரு தேவை இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால், இருக்கும் மாற்று வழிகள் இதைவிட மேலும் அழிவுகளைத் தருபவைகளாக இருக்கின்றன. வன்முறையைத் தவிர்ப்பது என்பது, நம்மீது நிகழ்த்தப்படும் நியாயமற்ற வன்முறையை ஒத்துக் கொள்வதாகக்கூட முடிந்து விடலாம். இந்த நிலையில், வன்முறையைத் தவிர வேறு வழியில்லை. எப்படி இருந்தாலும், வன்முறை என்பது அடிப்படையிலேயே மனிதத் தன்மையற்றது. இந்தக் காரணத்தை மட்டும் முன்வைத்து வன்முறையை நாம் முழுமையாகத் தவிர்ப்பது, தற்கால சமூகச் சூழலில் சாத்தியமில்லை.

– டாக்டர் பாலகோபால்

Pin It