மே

கொல்லும் பசியும் பங்குச் சந்தையும்

இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சம். கடந்த 2004 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்போதைய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, தனது தேர்தல் பிரச்சாரத்தை "இந்தியா ஒளிர்கிறது' என்ற வாசகத்தை முன் வைத்து செய்தது. அவர்கள் ஆட்சிக் காலத்தில் சிவப்புக் கம்பள வரவேற்புடன் தாராளமயம் தறிகெட்டு ஆடியது. பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்பாடுகளின்றி அனுமதிக்கப்பட்டன. மாநில, மத்திய அரசுகள் இவர்களின் சேவகர்களாக மாறி, அந்தச் சேவையில் தங்கள் நேரத்தையும், அரசு கையிருப்பையும் கரைத்தன. பாரதிய ஜனதா கட்சி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு மிகவும் பொருத்தமான பதிலை வாக்குச் சீட்டு அளித்தது. நரியின் சாயம் வெளுத்தது.

– அ. முத்துக்கிருஷ்ணன்

சூன்

தலித் – பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை

இடஒதுக்கீடும் நிலச் சீர்திருத்தமும் ஒன்றோடு ஒன்று இணைந்து செல்ல வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நிலமற்ற பெரும்பான்மை மக்களின் பிரச்சினையை, நிலச்சீர்திருத்தத்தின் மூலமே மய்ய நீரோட்டத்திற்குக் கொண்டுவர முடியும். வரலாற்று ரீதியாக இழைக்கப்பட்ட பல்வேறு தவறுகளை சரி செய்வதற்கு, அரசுப் பணிகளிலும் அதிகார மய்யங்களிலும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். இத்தகைய பிரதிநிதித்துவம் மக்கள் தொகைக்கேற்ப அமைந்திட வேண்டும். தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், சாதி இந்து மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்பது போன்ற பொய் வாதங்கள் ஊடகங்கள் மூலம் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. ஆனால், பெருமளவிலான தலித்துகள் ஆட்சி நிர்வாகத்தில் சாதி இந்துக்களைவிட சிறப்பாகப் பணியாற்றுகின்றனர் என்பதே உண்மை. இங்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்றுள்ளது. தலித் மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்களை ஆதரிப்பதால், சாதி இந்துக்களின் வெறுப்பை சந்திக்க வேண்டியுள்ளது. மண்டல் குழு பரிந்துரை நடைமுறைக்கு வந்தபோது, தலித் மக்கள் இயல்பாகவே இப்பரிந்துரைகளை ஆதரிப்பதில் முன்னணியில் இருந்தனர். அந்த நேரத்தில்தான் தலித் – பிற்படுத்தப்பட்ட – சிறுபான்மை மக்களின் ஒற்றுமை உருவாகத் தொடங்கியது. ஆனால், எதிர்பாராத விதமாக சில அரசியல் தலைவர்களின் குறுகிய எண்ணத்தாலும், சுய நலத்தினாலும் இந்துத்துவ சதித்திட்டத்திற்கு ஆட்பட்டு விட்டனர். இந்துத்துவ முகாம்களில் பிற்படுத்தப்பட்ட மக்கள் நுழைந்து கொண்டு தலித் மக்களை அச்சுறுத்தத் தொடங்கினர்.

– வி.பி. ரவாத்

அன்னை வீரம்மாள்

சாதி ஒழிப்புக்கும் சமூக மாற்றத்திற்கும் சாதி மறுப்புத் திருமணமே சரியான தீர்வு என்பதை அம்பேத்கர், பெரியார் வழியாகப் புரிந்து கொண்ட அன்னை வீரம்மாள் அதே ஆண்டில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் முன்னிலையில் டாக்டர் ஆர்.எஸ். சேகர் என்ற பார்ப்பனருக்கும் காந்தமணி என்ற தலித் பெண்ணுக்கும் சாதி மறுப்புத் திருமணத்தை நடத்தி வைத்தார். 10,000 ஏக்கர் நிலங்களை மீட்டெடுத்த கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தலைமை வகித்த இத்திருமணத்தில், காய்கறி மாலைகள் பயன்படுத்தப்பட்டன. இவ்விழாவில் காமராசர், கி.ஆ.பெ. விசுவநாதம், "தொண்டு' வீராச்சாமி மற்றும் பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய தோழிகளை அழைத்துக் கொண்டு கிராமங்களுக்குச் சென்று பெண்கல்வி, பெண்ணுரிமை, பெண்களின் முன்னேற்றம், குழந்தைகள் நலம், தீண்டாமை ஒழிப்பு, தூய்மை, சுகாதாரம், தேசிய ஒருமைப்பாடு, அய்க்கிய நாடு அவையின் பணிகள், உலக அமைதி, அணுகுண்டு ஒழிப்பு, சிறுசேமிப்பு, வரதட்சணை ஒழிப்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி கிராமங்களில் எழுச்சியூட்டியுள்ளார்.

– கே.எஸ். முத்து

காடுகளைப் பற்றி யார் நன்கு அறிந்திருக்கிறார்களோ, யார் காடுகளைப் பராமரிக்கிறார்களோ, யார் காடுகள் தழைத்து வாழ உதவுகிறார்களோ, அம்மக்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள முயல்வதே இல்லை. நாம் அவர்களையோ, அவர்கள் பழக்கவழக்கங்களையோ, பண்பாட்டையோ மதிப்பதில்லை. அவர்களிடமிருந்து காடுகள் களவாடப்படுகின்றன.

– மகாஸ்வேதா தேவி : "பழங்குடியினர் இனி காடுகளில் வாழ முடியாது'

சூலை

ஜாதி ஊடகம்

சாதி இந்துக்களே ஊடகத் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவர்கள் இந்திய மக்கள் தொகையில் 8 சதவிகிதம் உள்ளனர். ஆனால், தேசிய ஊடகத்தின் முக்கிய முடிவெடுக்கும் பொறுப்புகளில் அவர்களது பங்கு 71 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கிறது.

* ஊடகத்தின் சாதிய இயல்பும் பிரதிநிதித்துவம் அற்றதாகவே உள்ளது. பார்ப்பனர்கள், காயஸ்தர்கள், ராஜபுத்திரர்கள், வைசியர்கள் மற்றும் காத்ரிக்கள் இந்திய மக்கள் தொகையில் 16 சதவிகிதமாக உள்ளனர். ஆனால், ஊடகத் துறையின் முக்கிய முடிவெடுக்கும் பொறுப்புகளில் இவர்கள் 86 சதவிகிதமாக இருக்கின்றனர். "பூமிகார்'கள், "தியாகி'கள் ஆகியோரை உள்ளடக்கிய பார்ப்பனர்கள் மட்டும் முக்கிய ஊடகப் பொறுப்புகளில் 49 சதவிகிதம் உள்ளனர்.

* தலித்துகளும் பழங்குடியினரும் முக்கியப் பொறுப்புகளில் இல்லை என்பது வெளிப்படையான ஒன்றாக இருக்கிறது. 315 முக்கியப் பொறுப்பாளர்களில், ஒருவர்கூட தலித் மற்றும் பழங்குடியினர் இல்லை.

* பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பங்களிப்பு, மிக மோசமான அளவு குறைவாக உள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவிகிதம் இருக்கும் அவர்கள் வெறும் 4 சதவிகிதம் மட்டுமே ஊடகத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்.

* இசுலாமியர்கள், தேசிய ஊடகத்துறையில் மிக மோசமாக குறைவான பிரதிநிதித்துவம் பெற்றிருக்கின்றனர். நாட்டின் மக்கள் தொகையில் 13.4 சதவிகிதமாக இருக்கும் அவர்கள், வெறும் 3 சதவிகிதம் மட்டுமே உள்ளனர்.

அமெரிக்கா+இஸ்ரேல் = உலக பயங்கரவாதம்

இஸ்ரேலிய தேச அரசின் கருத்து நிலையான ஜியோனிசம், இரண்டு வலுவான புனைவுகளின் அடிப்படையிலேயே தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது: 1. யூதர்களின் வரலாறு முழுவதுமே அவர்கள் மீதான இடைவிடாத ஒடுக்குமுறைகளால் நிரப்பப்பட்டிருந்தது; கி.பி. 70க்குப் பிறகு அவர்கள் உலகில் எந்தெந்த இடங்களிலெல்லாம் வாழ்ந்து வந்தார்களோ, அந்தக் காலம் முழுவதும் அவர்களுக்கு இருண்டகாலம்தான். அவர்கள் தங்களுக்கிழைக்கப்பட்ட துன்ப துயரங்களையெல்லாம் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தனர்; உலக மக்கள் அனைவருமே யூதர்கள் யூதர் அல்லாதோர் என்றே பிரிக்கப்பட்டு வந்துள்ளனர். 2. யூதர்கள், தாங்கள் வாழ்ந்து வந்த இடங்களிலுள்ள யூதர் அல்லாதோரின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களைத் தாங்கிக் கொண்டு வந்ததற்குக் காரணம், தங்கள் சமூகம், பண்பாடு, தேசிய லட்சியங்கள், மதக் கல்வி கற்கும் மரபுகள் ஆகியவற்றின் மீது அவர்களுக்கு ஒருபோதும் தணியாதிருந்த விசுவாசம்தான்.

– எஸ்.வி. ராஜதுரை

அணுவின் மடியில் உலகின் அமைதி

ஆகஸ்ட் 6, 1945 இரோஷிமா. ஆகஸ்ட் 9, 1945 நாகசாகி. இவ்விரு இடங்களில் அணுகுண்டை வெடிக்கச் செய்ததன் மூலம் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்களை நொடிப்பொழுதில் விழுங்கியது, அமெரிக்காவின் மேலாதிக்க வெறி. உலகமே வெட்கித் தலைகுனிந்த அந்தக் கொடூர நிகழ்வுக்குப் பிறகும் வெறி அடங்காத அமெரிக்கா, அணு அரசியல் மூலம் உலகையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கிறது. அணுவை ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகளும், அணுகுண்டுகள் தயாரிப்பதற்கான ஆய்வுகளும் ஒரே மரத்தின் இரு கிளைகள் போன்றவை. ஆனால், அகிம்சையை விரும்பும் இந்தியா, அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது, அணுவின் மடியில் உலகின் அமைதியை நிலைநாட்டுவதற்கு ஒப்பானது.

– அ. முத்துக்கிருஷ்ணன்

குல தெய்வ வழிபாடு கண்டிப்பாக இந்துத்துவத்தை நோக்கிய பயணமாகத்தான் இருக்கிறது. குல தெய்வ வழிபாடு மிகச் சிறிய குழு வழிபாடுதான். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு கிராமத்துக் கோவில் உள்ளது. வழிபாட்டு முறைகளும் வெவ்வேறானதாக உள்ளது. குல தெய்வ வழிபாட்டில், நாம் நம் குல தெய்வத்தைத் தவிர வேறெந்த இந்துக் கடவுளையும் வழிபடக் கூடாது' என்ற ஒருமித்த கருத்துகள் இவர்களிடம் இல்லை. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இது தலித்துகளை ஒன்றிணைப்பதாக எப்படி அமையும்?

- டாக்டர் ஜெயராமன் : "குலதெய்வ வழிபாடு தலித்தியத்தை எதிரொலிக்கவிலலை'

செப்டம்பர்

தென்திசையில் பூக்கும் புதியதோர் கியூபா

தமிழீழமெங்கும் 8 செஞ்சோலைகளும், 6 காந்தரூபன் அறிவுச்சோலைகளும் உள்ளன. இந்த இரு இல்லங்களின் குழந்தைகளை, எந்தக் காரணத்தை முன்னிட்டும் இயக்கத்தில் சேர்ப்பதில்லை. அவர்களுக்கு போர்ச்சூழலில், அவசர காலங்களில் செயல்படுவதற்குரிய பயிற்சிகளும், மருத்துவப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. அவ்வாறு அளிக்கப்படும் பயிற்சிகளில் ஒன்றான பேரிடர் மீட்புப் பயிற்சி பெறுவதற்காக, தமிழீழமெங்கும் உள்ள செஞ்சோலைகளிலிருந்து 400 க்கும் மேற்பட்ட மாணவிகள் வள்ளிப்புனம் செஞ்சோலை மய்யத்தில் திரண்டிருந்தனர். இந்தத் தகவலை அறிந்த சிங்கள ராணுவம், திட்டமிட்டே வள்ளிப்புனம் செஞ்சோலை வளாகத்தில் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

– பூங்குழலி

அதிகாரமற்ற அரசியல்

தலித்துகள் மூன்று முறை அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருப்பினும், உண்மையான அதிகாரம் என்பது நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம், நிதி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதலியவைகளிடமே இருக்கின்றன. இவை அனைத்துமே பார்ப்பனர்களின் நூறு சதவிகிதக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவேதான் டெல்லியிலும் பிற மாநிலங்களிலும் உள்ள "அரசியல் அதிகாரத் திறவுகோலை' தங்கள் கைகளில் வைத்திருப்பதாகச் சொல்லும் பார்ப்பனர் அல்லாத அரசியல் தலைவர்கள், தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு சமூக நீதியை வழங்க முடியவில்லை. ஏனெனில், அரசியல் அதிகாரம் என்பது ஓர் அதிகாரமே அல்ல.

– வி.டி. ராஜ்சேகர்

அது என்ன "சண்டாளத்தனம்'?

ஓர் ஆண் மற்றொரு ஆணைத் திட்டும்போது, தான் திட்ட நினைக்கிறவன் ஆணாக இருந்தாலும் அவனைத் திட்டாமல், அவனைப் பெற்ற தாயைத் திட்டும் ஒரு கொடூரம் ஆணாதிக்கச் சமூகத்தில் இன்றளவும் ஒரு குற்றமாகக் கருதப்படுவதில்லை. அதுபோலவே, இந்திய சாதிய சமூகத்தில், தாழ்த்தப்பட்ட சாதியினரின் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தும் குற்றச் செயல்களும் தண்டனையின்றி நீடிக்கின்றன. ஆதிக்க சாதியின் பெயர்களைப் பயன்படுத்தி, மறந்துபோய்கூட யாரும் பிற சாதியினரைத் திட்டுவதில்லை. ஆனால், அடிமை சாதியினரின் பெயர்களைப் பயன்படுத்தி எந்த சாதியையும், எத்தகைய பயங்கரவாதத்தையும் திட்ட முடிகிறது. இப்பட்டியலில், படிக்காத மக்களிலிருந்து, படித்த / மெத்தப்படித்த / அறிவு ஜீவிகள்/முற்போக்குவாதிகள்/பிற்போக்குவாதிகள்/முதலமைச்சர்கள் வரை அடக்கம்.

– தலையங்கம்

அக்டோபர்

பொய்யர்கள் ஆளும் பூமி

சாதி அமைப்பில் கடைநிலையிலும், வாழ்நிலையில் படுகுழியிலும் நிற்கும் துப்புரவுத் தொழிலாளர்களான அருந்ததியின மக்களின் வாழ்க்கை, நாடு விடுதலையடைந்து இந்த அறுபதாண்டுகளில் இம்மியளவும் மாறவில்லை. வல்லரசுக் கனவோடு அணு ஆயுதங்களுக்காக பல்லாயிரம் கோடிகளைக் கொட்டிக் கரியாக்கும் இந்த இந்திய தேசத்தில், லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் முன்னோர், வாரிசுகள் எனத் தலைமுறை தலைமுறையாய் தினம் தினம் மலக்குழிக்குள் இறக்கிவிடப்படுகின்றனர். சவக்குழிக்குள் இறங்குவதை விடவும் நூறு மடங்கு வேதனையான இந்த வழக்கத்தைத் தொழிலாக்கி, மலமள்ளுவதை வாழ்வாதாரமாக அனுமதித்திருக்கும் இந்நாடு எப்படி உருப்படும், முன்னேறும், வல்லரசாகும்? சாதியை உள்ளடக்கிய தொழில்களில் துப்புரவுத் தொழிலும் ஒன்று என்பதால்தான் வெட்கங்கெட்ட இந்நாட்டிலிருந்து அதை விரட்ட முடியவில்லை. "தாங்கள் இந்தத் தொழில் செய்யவே படைக்கப்பட்டவர்கள்' என அருந்ததியினரை நம்ப வைத்து, இன்று வரை காரியம் சாதித்து வருகிறது சாதியச் சமூகம். அந்த அடிமைச் சிந்தனையிலிருந்து ஒவ்வொருவரையும் வெளியேற்றி, விடுதலையுணர்வை அளிக்க வேண்டியதே முதற் கடமை. பொய் சொல்லும் நாக்குகளை அறுக்கும் துணிவை அந்த விடுதலை உணர்வே தரும்.

– மீனாமயில்

தண்டனை கிடைக்குமா?

குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலையைப் போன்று பேசப்பட்டது மீரட் கலவரம். இக்கலவரத்தையொட்டி, ஹசிம்புரா என்ற பகுதியில் 1987, மே 22 அன்று 35 பேரை சுட்டுக் கொன்றது ராணுவம். பல்வேறு இடையூறுகளுக்குப் பிறகு இருபது ஆண்டுகள் கழித்து தற்பொழுதுதான் விசாரணை நடைபெறத் தொடங்கியுள்ளது. இப்படுகொலை நிகழ்ந்த அன்று ஏறக்குறைய 300 ஆண்கள் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு, அதில் திடகாத்திரமாக உள்ள 42 பேர் மட்டும் காசியாபாத் மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஓடைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இவர்களை வரிசையாக நிறுத்தி ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இன்னும் சிலர் ராணுவ வண்டியிலேயே சுடப்பட்டனர். அதன் பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து சி.பி.சி.அய்.டி. தனது அறிக்கையை அளித்தது.

“தமிழகத்தில் மட்டுமல்ல, சாதியம் இந்தியாவின் தேசியப் பிரச்சினையாகவே எப்போதும் இருந்து வருகிறது. இந்தியர்கள் இந்தியன் / மாநில என்ற உணர்வுடனோ இருக்கிறார்களோ இல்லையோ ஆனால், கண்டிப்பாக சாதிய உணர்வுடன் இருக்கிறார்கள். அந்த உணர்வு நீருபூத்த நெருப்புத்துண்டென உறைந்து கிடக்கிறது. சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும் அந்நெருப்பை தீப்பிடிக்கச் செய்கின்றன.'' – அழகிய பெரியவன் : "ஜாதியமே இந்தியாவின் தேசியப் பிரச்சனை'

நவம்பர்

வெறியாடும் ஜாதி

கயர்லாஞ்சி கிராமத்தில் நடந்தேறிய கொடுமையையும், வழக்கம் போல் சமூக ஆர்வலர்களும் தலித் இயக்கங்களும்தான் வெளிக்கொண்டு வந்துள்ளன. ஆனாலும் அது பொது மக்கள் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படவில்லை. இடஒதுக்கீடு போன்ற பிரச்சனைகளைக் கையிலெடுக்கும் சமூக நீதி அமைப்புகள், மகளிர் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் பெண்ணிய அமைப்புகள், மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்புகள், சுயமரியாதை இயக்கங்கள், கயர்லாஞ்சி படுகொலைகள் போன்ற சாதிய வன்கொடுமைகளை எதிர்த்து உரத்துக் குரல் கொடுக்கத் தயங்குவதேன்? வன்கொடுமையில் சமூக உரிமை மீறல் இல்லையா, தலித் பெண் மீதான வன்புணர்ச்சி, பெண்ணியப் பிரச்சனை இல்லையா? வன்கொடுமைச் சாவு மரண தண்டனை இல்லையா? நிர்வாணப்படுத்துவதும், உடலுறவு கொள்ளச் சொல்லித் துன்புறுத்துவதும், சுயமரியாதைக்கு இழுக்கில்லையா?

– பூங்குழலி

கான்ஷிராம் வாழ்க!

தமிழ் நாட்டில் மட்டும் அல்ல, பல்வேறு மாநிலங்களிலும் கான்ஷிராமின் அரசியல் வெற்றி சிலாகிக்கப்படுகிறது. அவரது அரசியல் மாதிரி பின்பற்றப்பட வேண்டும் என்று பரவலாக அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், அவருடைய அரசியல் அதிகார வெற்றியைப் போற்றும் பலரும் அவருடைய அரசியல் வியூகம் குறித்துப் பேச மறுக்கின்றனர். அவருடைய "பகுஜன்' (பெரும்பான்மை மக்கள்) தத்துவம்தான் அவருடைய வெற்றிக்கான அடித்தளம். கான்ஷிராம் ஒருபோதும் தலித் அரசியலைக் குறுக்க முனைந்ததில்லை. அரசியல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட பட்டியல் சாதியின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களை ஓரணியில் திரட்டி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதே அவருடைய அரசியல் வியூகம்.

– தலையங்கம்

நீதிமன்றங்கள் பலிபீடங்களா?

நீதிமன்றத்தை மீறிய ஒரு நீதி இருக்கவே முடியாதா? நீதிபதிகள் பணம், பதவி, மதம், சாதிய உணர்வு என எவற்றுக்கு வேண்டுமானாலும் அடிமையாகக் கூடியவர்களே! ஊழல் புரிந்த, பெண்களோடு சிக்கிய நீதிபதிகளை வெகு அண்மையில்கூட நாம் பார்த்திருக்கிறோம். அப்படியிருக்கையில் நீதிபதிகளை உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக, "கடவுளர்களாக' கொள்வது சரியல்ல. அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே மரண தண்டனை கொடுக்கலாம் என்பதுதான் சட்டம். ஆனால், "அரிதிலும் அரிதான' என்பதற்கு எந்த வரையறையும் இல்லை. அதை முடிவு செய்வதும் நீதிபதியே! நீதிபதிகளும் சாதாரண மனிதர்கள்தான். சட்டம் படித்ததால் மட்டும் அவர்கள் நீதிமான்களாக இருப்பார்கள் என்ற கட்டாயம் இல்லை.

– மீனாமயில்

டிசம்பர்

ஜனநாயகம் புறக்கணித்த மக்கள்

மனித சமூகத்தை நாகரிகப்படுத்துவதும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதுமான கல்வித் தகுதியில், முஸ்லிம்கள் மிக மிகப் பின் தங்கியுள்ளனர். 1965 இல் 72 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற முஸ்லிம் மாணவர் சேர்க்கை 2001 இல் 80 சதவிகிதமாகியிருக்கிறது. ஆனால், நகர்ப்புற தலித் மாணவர்களின் எண்ணிக்கையோ 90 சதமாக உயர்ந்திருக்கிறது. 36 ஆண்டுகளில் கிராமப்புற, நகர்ப்புற, ஆண்பெண் என எந்தப் பிரிவை எடுத்துப் பார்த்தாலும் முஸ்லிம்களிடையே கல்விப் புரட்சி என எதுவும் ஏற்படவில்லை. கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகம், மற்ற துறைகளில் எப்படி வளர்ச்சி அடையும்? பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களுக்கெதிரான பாரபட்சங்கள் ஒருபுறமும், வறுமையில் உழலும் குடும்பச் சூழல் மறுபுறமும் சேர்ந்து பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க முடியாத அவல நிலைக்கு முஸ்லிம்களைத் தள்ளிவிட்டது.

– மீனாமயில்

வளமற்ற வளஅடுக்கு வாதம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தில், பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்று ஒன்று குறிப்பிடப்படவில்லை. "சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கு' இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், பொருளாதார அடிப்படை என்பது நிரந்தரமற்றது. இன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு குடும்பம் பல்வேறு சூழ்நிலைகளினால் முன்னேறலாம். "இந்து இந்தியா'வில் பொருளாதார முன்னேற்றம், சமூக உயர்வை ஒருபோதும் பெற்றுத் தராது. இங்கு எவ்வளவு பெரிய சமூக உயர்வும் சமத்துவத்தைத் தந்துவிடுவதில்லை. இதற்கு எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைச் சுட்ட முடியும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அரசமைப்புச் சட்டம் வரையறுக்கப்படும்போது, இடஒதுக்கீட்டிற்குப் பொருளாதாரம் ஓர் அடிப்படையாகக் கருதப்படவில்லை.

– சு. சத்தியச் சந்திரன்

பெருவிழாவும் ஜனநாயகப் படுகொலையும்

பத்தொன்பது முறை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் கொட்டக்காக்சியேந்தல் போன்ற தனி ஊராட்சிகளில் தேர்தல்களை நடத்தும் முயற்சியில் தோல்வியடைந்த அரசு, இம்முறை தேர்தலை நடத்திவிட்டது. இதற்காக தமிழக அரசின் சார்பில் சமத்துவப் பெருவிழா நடத்தப்பட்டு, தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு "சமத்துவப் பெரியார்' என்ற பட்டமும் விடுதலைச் சிறுத்தைகளால் வழங்கப்பட்டது. இக்கொண்டாட்டங்கள் நடைபெற்று 9 நாட்களே ஆன நிலையில், நக்கலமுத்தான்பட்டி பஞ்சாயத்து தலைவர் ப.ஜக்கையன் சாதிவெறியர்களால் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறார்.

– மா. பொன்னுசாமி, எம். கவுதமன்

Pin It