இந்திய பொதுக் கருத்தில் உருவகிக்கப்படும் அம்பேத்கருக்கும், தலித் மக்கள் மனதில் உருவகிக்கப்படும் அம்பேத்கருக்கும் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றனவா? அப்படி ஒன்றும் பெரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. அம்பேத்கர் தலித் மக்களின் தலைவர். அவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர். தலித் மக்களுக்கு சலுகைகளைப் பெற்றுத் தந்தவர். இப்படித்தான் இந்திய பொதுச் சமூகம் அவரை அடையாளப்படுத்துகிறது. தலித் மக்களில் பெரும்பான்மையானவர்களும்கூட, இப்படித்தான் அவரை நினைக்கின்றனர். சிலரிடம் இன்னும்கூட பல நிலைகள் கீழிறங்கி இருக்கிறது அவருடைய பிம்பம். தலித் மக்களுக்கு சலுகைகளை வாங்கித் தந்தவர் அவர் என்று மட்டுமே அவர்கள் கருதுகிறார்கள்.

Ambedkar

உலகப் புரட்சியாளர்கள் என்று சொன்னவுடனேயே நம் மனதில் தோன்றுகிற லெனின், மாவோ, பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, பிரபாகரன் போன்றோரின் வரிசையில் அம்பேத்கரின் முகம் வருவதில்லை. புரட்சி, வீரம் என்கிற சொற்கள் – போரிடுவது, உயிர்களைக் கொல்வது, எதிர் கருத்துக்கு இடமின்றி அடக்குவது, அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற பொருளில் புரிந்து கொள்ளப்படுவதால், அறிவு நிலைப் புரட்சிக்கு அதில் இடமிருப்பதில்லை.

உலகின் மிகப் பெரிய சிந்தனையாளர்கள் எல்லாம் அவ்வாறுதான் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர். இத்தகைய ஒதுக்குதலில் சாதியம் அம்பேத்கரின் பிம்பத்தோடு ஒரு நிழல் போல பின் நிற்பதால், அவர் மேலும் ஒதுக்கப்பட்டு விடுகிறார். அவருடைய படத்தை எவ்விதக் கூச்சமும் தயக்கமும் இன்றி – வீட்டில் வைத்துக் கொள்வதற்கும், புரட்சியாளர்களின் படங்களைப் போல அவருடைய படத்தையும் உடைகளில் அச்சிட்டு அணிந்து கொள்வதற்கும் இருக்கின்ற தயக்கம் எதனால் ஏற்படுகிறது? எல்லா இடங்களிலும் அவருடைய பெயரையும் எழுத்துகளையும் தடையின்றி சொல்வதற்கு முடிகிறதா? வாழ்நாள் முழுவதும் அவர் எதிர்த்து வந்த சாதியும் தீண்டாமையும் அவரை இறந்த பின்னும் விடுவதாக இல்லை!

உயிருடன் இருந்தவரைக்கும் அவரை நெருங்குவதற்குத் துணிவில்லாத இவை, இன்று மிகத் துணிவுடன் அவரை சூழ்ந்து கொள்கின்றன. அவர் மீது திணிக்கப்படும் இந்த பின்நிலைத் தீண்டாமையை, தலித் மக்களால் ஒழிக்க முடிந்திருக்கிறதா?

வட்ட மேசை மாநாட்டிற்குச் சென்று பங்கேற்ற பிறகு 1932 ஆம் ஆண்டு சனவரி 29 அன்று, எஸ்.எஸ். முல்தான் என்ற கப்பலில் அம்பேத்கர் இந்தியாவிற்கு திரும்பினார். அன்று மாலையில் பம்பாய் பரேலில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியா முழுவதுமிருந்து வந்திருந்த மக்கள் திரள் சார்பாக, 114 அமைப்புகள் கையொப்பமிட்ட வரவேற்புப் பட்டயம் ஒன்று அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது. அன்றைய இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆழமான விருப்பங்களும் எண்ணமும் அதில் இருக்கின்றன. அன்று, மக்கள் அவரைத் தமது விடுதலையோடும் சமத்துவ வாழ்வோடும் பிணைக்கப்பட்ட தலைவராக எண்ணினர்:

""எங்கள் உரிமைகளைக் காப்பதற்கு மானிட ஆற்றலால் என்ன சாதிக்க முடியுமே, அத்துனையும் செய்துள்ளீர்கள். இவ்வெற்றியின் விளைவாக மிக நெருங்கிய வருங்காலத்தில், நாங்களெல்லாம் பிற சமூகங்களுக்கு சமமாகத் தலைநிமிர்ந்து வாழ்வோம் என்பது உறுதி...

""எங்களது உரிமைகளின்பால் எங்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி, எங்கள் அச்சங்களை எல்லாம் குழிதோண்டிப் புதைக்க, எங்களுக்கு உந்து சக்தியாய் விளங்கினீர்கள். எமது சமூகத்திற்குப் பொறுப்புணர்வும், இன்று எய்தியிருக்கும் கண்ணோட்டமும் நாடெங்கிலும் ஒன்று திரண்டு, எமது உரிமைகளை வலியுறுத்திக் கோரும் துணிவும் – தங்கள் உழைப்பும் வழிகாட்டு நெறியும் தந்த பலனே.''

ஒட்டுமொத்த சமூக விடுதலைக்கும், வாழ்க்கை நெறிக்குமான தலைவராகப் பார்க்கப்பட்ட அம்பேத்கர், தலித் விடுதலைக்கான தலைவராக மட்டுமே சுருக்கப்பட்டுவிட்ட அவலம் பிற்காலத்தில் நேர்ந்து விட்டது.

எல்லா அடக்குமுறைகளுக்கும் எதிராக மீறி எழுவது இயல்பான மனிதப் பண்பு. வரலாறு நெடுகிலும் சாதியை எதிர்த்தவர்களும், அதற்காக தமது விலை மதிப்பில்லா உயிரை ஈந்தவர்களும் இருக்கின்றனர். ஆனால், சாதி ஒழிப்பை மானுட விடுதலைக்கான தத்துவமாக மாற்றியவராக அம்பேத்கர் திகழ்கிறார். சாதிய விடுதலை என்பது, உள்ளார்ந்த பொருளில் அனைத்து இந்திய சமூக மக்களுக்கான விடுதலைதான். அவர் வாழ்நாள்

முழுவதும் வலியுறுத்தி வந்தது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைத்தான். எனவேதான் அவர் தனது அரசியல் அமைப்பிற்குத் தேர்ந்தெடுத்த கொடியைக்கூட நீல நிறத்தில் அமைத்தார். நீலம் உலகின் ஒரே கூரையான வானத்தைக் குறிக்கிறது. உலக சகோதரத்துவத்தின் குறியீடாக இதைச் சொல்ல முடியும்.

அவருடைய வாழ்வியல் சிந்தனைகள், பொருளாதார கருத்துகள், மனித உரிமைப் பிரச்சாரங்கள், இந்து மத எதிர்ப்பு, சாதி ஒழிப்பு வழிமுறைகள், பவுத்த நெறி பரிந்துரைகள் ஆகியவை எல்லாம், இந்திய மக்களின் வாழ்வியல் நெறிகளுக்கான சாதனங்களாக உருமாற்றம் செய்யப்படாமல் விடப்பட்டு இருக்கின்றன. அதனாலேயே அவரைப் பிடித்திருக்கும் பின்நிலை தீண்டாமை ஒழியாமல் நீடிக்கிறது. அவரின் மாணவப் பருவத்திலேயே சாதிக்கு எதிரான சிந்தனைகள் அவருள் உருவாகி விட்டன எனலாம். அவருடைய இயல்பை அறிந்துதான் அவருக்கு, அவருடைய ஆசிரியரால் புத்தரைப் பற்றிய நூல் ஒன்று பரிசளிக்கப்பட்டிருக்கிறது. நூறாண்டுகள் கடந்த

அவருடைய சமூகப் புரட்சி, தலித் மக்களாலேயே இன்னமும் உள்வாங்கிக் கொள்ளப்படாததால், அம்பேத்கரியல் என்ற தத்துவம் இங்கு உருக்கொள்ளாமலேயே இருக்கிறது.

வினாக்களில் இருந்துதான் எல்லாமே தொடங்குகின்றன. சிந்தனையின் கருமுட்டை வினாக்கள். அம்பேத்கரியல் கூட்டங்களுக்கும், பவுத்த கூட்டங்களுக்கும் செல்கிறபோது ஒரு வினா, தொடர்ந்து கேட்கப்படுவதை கவனிக்க முடிகிறது. அவ்வினாவை எல்லோரும் கேட்கின்றனர். அக்கூட்டம் நடைபெறுகின்ற அரங்குகளில் வெறுமையாக இருக்கும் பெரும்பாலான நாற்காலிகளில், இவ்வினா இடம் பிடித்து உட்கார்ந்திருக்கிறது. கூட்டத்திற்கு வந்திருப்பவர்கள் சலிப்புடனும், தளர்ச்சியுடனும் அப்போது கேட்கிறார்கள்:

""இந்தக் கூட்டங்களுக்கு இளைய தலைமுறையினர் ஏன் பெருமளவிற்கு வருவதில்லை?''

இரு புறமும் வளைந்திருக்கும் வினாக் குறியின் கொக்கிகள் சீக்கை முட்களைப் போன்றவை. அந்த வினா அங்கிருக்கிற எல்லோரையும் கோர்த்திழுத்துக் கொள்கிறது. வயது வேறுபாட்டை அது பார்ப்பதில்லை. இவ்வினா எழுப்பப்பட்ட உடனே, அது அங்குள்ள எல்லோருக்கும் முதன்மையான ஒன்றாகப் படுகிறது. அம்பேத்கரியல் கூட்டங்களுக்கும், பவுத்த கூட்டங்களுக்கும் பெருமளவுக்கு இளைஞர்கள் வருவதில்லை என்பது உண்மைதான். தலித் அரசியல் கூட்டங்களில் (அதுவும் ஒன்றிரண்டு அரசியல் அமைப்புகளுக்கு மட்டும்தான்) கூடுகின்ற இளைஞர் கூட்டம், தலித் கருத்தியல் அரங்குகளில் கூடுவதில்லை. இந்த வினாவுக்கு அடிப்படையாக கோபம், சலிப்பு, தளர்ச்சி, ஏமாற்றம், ஆதங்கம் எனப் பல்வேறு கலவையான உணர்வுகளே பின் நிற்கின்றன.

கருத்தியல் அடிப்படையில் தங்களை தெளிவுபடுத்திக் கொள்வதற்கு, தலித் சமூகம் இன்னமும்கூட தயாராகாமல் இருக்கிறதே என்று நினைத்து சிலர் இவ்வினாவை எழுப்புகிறார்கள். இப்படி நினைப்பதற்கு அதிகப்படியான நியாயம் இருக்கிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, தலித் மக்களின் விடுதலைப் போராட்டங்கள் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தலித் மக்கள் இந்தியா முழுவதும் பரவி இருக்கிறார்கள். மொத்த மக்கள் திரளில் கால் பங்கினர் அவர்கள் எனில், அம்மக்கள் திரளை இந்த நீண்ட கால போராட்டம் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

இன்னொரு வகையான அடிப்படையிலும் கூட இவ்வினா எழுப்பப்படுகிறது. இடஒதுக்கீட்டின் மூலம் கல்வியையும், வேலைவாய்ப் பையும் பெற்றவர்கள் தலித் மக்கள் மத்தியிலே இருக்கிறார்களே, அவர்கள் எங்கே போனார்கள்? நன்றிக் கடனுக்காகவாவது வர வேண்டாமா? விவிலியத்தில் ஏசு கேட்டதாக குறிக்கப்படும் வினாவைப் போன்றதுதான் இதுவும் : ""மற்ற ஒன்பது பேர் எங்கே?''

ஒருமுறை ஏசு சில நோயாளிகளை குணமாக்குகிறார். ஏசுவிடம் நன்மை பெற்ற பத்து நோயாளிகளில் ஒருவன் மட்டும் நன்றி சொல்ல திரும்ப வருகிறான். அப்போது அவர் இவ்வினாவை எழுப்புகிறார். நன்றியை எதிர்பார்ப்பது மனித உணர்வின் இயல்பு. தன் செயல்களுக்கான எதிர்வினையை மனித மனம் எப்போதுமே எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறது. ஆனால் நன்றி எனும் சிறிய உணர்வு இழை, சில நேரங்களில் பேருணர்ச்சிகளின் அடியில் நசுக்கப்பட்டு விடுகிறது. கால மாற்றத்தின் விளைவாக ஏற்படும் மறதியின் புழுதி, நன்றியுணர்ச்சியின் மீது அளவுக்கதிகமாகப் படிந்து விடுகிறது. அம்பேத்கரை நன்மை அளித்த மீட்பராகக் கருதிக் கொண்டாலும், அவருக்குக் காட்ட வேண்டிய நன்றியுணர்வை உணர்வுக் குவியலில் இருந்து தேடித்தான் எடுக்க வேண்டும் என்பது உண்மை.

நூற்றாண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாதிய விடுதலைக்கான போராட்டம், தலித் மக்களின் எல்லா தரப்பினரையும் சென்றடையவில்லை. ஒரு தலை முறையினரிடம் இருந்து அதன் சாரம், பண்பு குன்றாமல் மற்றொரு தலைமுறையினருக்குக் கடத்தப்படவில்லை.

தலித் மக்களிடையே கல்வியாலும், இடஒதுக்கீட்டாலும் பயன் பெற்றவர்கள் மிகக் குறைந்த விகிதத்தினரே. அவர்களைத் தவிர்த்த மக்களிடம் நன்றியை எதிர்பார்க்க முடியாது. பயன் பெற்றவர்களிடையேயும்கூட எதிர்பார்க்கப்படும் நன்றியுணர்வு, கருத்தியல் தளத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அம்பேத்கர் என்ற தனி மனிதருக்கோ, இயக்கங்களுக்கோ நன்றிக் கடன் செலுத்துவது எனில் – அது சிலைக்கு மாலை போடுவது, சட்டமிட்ட படம் ஒன்றை வாங்கித் தருவது, நன்கொடை தருவது என்ற அளவிலேயே நின்று விடும். கருத்தியல் தளத்திற்கும், தத்துவார்த்தப் புரிதலுக்கும் நன்றியுணர்வு இட்டுச் செல்லப்படுமானால், அது சமூகம் தழுவிய கடப்பாடாக மாற்றமடையும்.

இந்த இரு அடிப்படைகளுக்கு இடையில் நுட்பமாகப் பார்க்கிறபோது, ஒரு பிணைப்பு இருப்பதை நம்மால் உணர முடியும். போராட்ட உணர்வும், சமூகக் கடப்பாட்டுணர்வும் இன்னும் முழுமையாக தலித் மக்களிடையே உருவாக்கப்படவில்லை. இதுவரையிலான இயக்கங்கள், செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றில் மேற்சொன்னதை நிறைவு செய்வதற்குத் தேவையான ஏதோ ஒன்று இல்லாமல் இருக்கிறது. அந்த விடுபட்ட ஒன்று இன்னமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாததினாலேயே கருத்தியல் அரங்குகள் வெறுமையாக இருக்கின்றன. முதன்மையான ஒன்றாக மாற்றம் பெறாத அந்த ஒன்று, அம்பேத்கரியல் என்ற தத்துவமே.

கருத்தியல் அரங்குகளின் வெறுமை, அக்கருத்தியல் பலரையும் சென்றடைந்து, உந்தித் தள்ளிக் கொண்டு வராததினால் ஏற்பட்ட ஒன்றாகும். அரங்குகளில் மூத்தவர்களால் எழுப்பப்படும் வினாவுக்கு எதிர் வினாவாகவும், விடையாகவும் பிறிதொரு வினாவினை எழுப்ப முடியும். ""இளம் தலைமுறையினரை அம்பேத்கரியல் சென்றடைந்ததா? அதைக் கொண்டு சேர்ப்பதற்கு எவ்வகையான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டன?''

இவ்வினா ஒரு எளிய வினாவல்ல. பொறுப்புணர்ச்சியுடனும், விருப்பு வெறுப்புகள் அற்றும் அலசிப் பார்க்கப்பட வேண்டிய வினா. ஒருவர் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், இயக்கவாதியாக இருந்தாலும், அறிவுஜீவியாக இருந்தாலும் – இந்த வினாவுக்கு விடை சொல்கிற பொறுப்பிலிருந்து விலகிச் சென்றுவிட முடியாது.

தலித் மக்களிடம் அம்பேத்கர் பற்றி நீங்கள் முதன் முதலாக எப்போது தெரிந்து கொண்டீர்கள் என்று ஒரு வினாவினைக் கேட்டால், ஏறக்குறைய ஒரே மாதிரியான விடைகள்தான் கிடைக்கும். எங்காவது அவரது படத்தைப் பார்த்தோ, அவரைப் பற்றிய பாடல்களை கேட்டோ முதன் முதலில் புரிந்து கொண்டிருப்பார்கள். பின்னர் கல்லூரிகளிலோ, பள்ளிகளிலோ, ஆசிரியர்கள் மூலமாக சில செய்திகள் தெரிய வந்திருக்கும். மிகச்சிலருக்கு தலைவர்களின் உரைகளின் வழியே சில தகவல்கள் கிடைத்திருக்கும். ஆனால், அவருடைய நூல்கள், அவருடைய எழுத்துக்களைப் படித்து விவாதிக்கும் சூழல் இருந்திருக்காது.

கருத்தியல் அடிப்படைகள் உருவாகிற இருபது வயதுக்குள்ளாக, இங்கு வலுவான அடித்தளத்தோடு அம்பேத்கரியல் இளைஞர்களிடம் உருவாவதற்கு ஏற்ற புறச்சூழல் இல்லை. எந்த தலித் இயக்கமும், தோழர்களும், இயக்கவாதிகளும் அவர்களை எட்டிப் பிடிக்கவில்லை. தலித் நூல்கள் கிடைக்கவில்லை. இதழ்கள் அறிமுகமாகவில்லை. தலித் கலை இலக்கிய வடிவங்கள் பாதிப்பினை உருவாக்கவில்லை.

ஆனால் இருபது வயதுக்குள்ளாகவே மார்க்சியம், திராவிடம், தமிழ்த் தேசியம், காந்தியம், ஓட்டு அரசியல், கிறித்துவம், இஸ்லாம், இந்து மதக் கருத்தியல், சினிமா ஆகியவற்றின் வலுவான அறிமுகங்கள் கிடைத்து விடுகின்றன. மார்க்சிய நூல்களும், திராவிட இயக்க நூல்களும் பெருமளவு படிக்கக் கிடைக்கின்றன. இன்று இளைஞர்களாய் இருக்கின்ற, நடுவயதைத் தொட்டிருக்கிற பெரும்பாலான தலித் மக்களின் நிலை இதுவே. சில பேருக்கு மட்டுமே சிறுவயது முதலே அம்பேத்கரியல் அறிமுகம் கிடைத்திருக்கலாம்.

இச்சூழலில் தலித் விடுதலைக் கருத்தியலுக்கும், தலித் மக்களின் இளம் தலைமுறையினருக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதற்கு ஏன் எவரும் முயலவில்லை என்ற வினாவினை உரிமையுடனும், அக்கறையுடனும் கேட்கத் தோன்றுகிறது. இவ்வினா, இளம் தலைமுறையினரைப் பற்றியது மட்டும் அல்ல. இன்றைய அதிகார அரசியலில் இருக்கும் இயக்கங்கள் பற்றியதும்தான். கருத்தியல் அடிப்படையில் திரளும் மக்கள்தான் அரசியலின் நிலைத்த தன்மைக்கான ஆதாரம். மேலும் இவ்வினா ஒரு சமூகம் – பொருளாதாரம், கல்வி, சம உரிமை ஆகியவற்றில் தன்னிறைவு கொள்வதை குறிப்பதும்கூட. இவற்றோடு ஒரு சமூகம் சம உரிமை, சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் பிற சமூகங்களோடு ஒன்றிணைவதைச் சுட்டுவதும் ஆகும்.

1890 இல் ரெட்டமலை சீனிவாசன் அவர்களால் தொடங்கப்பட்ட "பறையர் மகா ஜன சபை' தொடங்கி, அண்மைக் காலத்தில் எழுச்சி பெற்ற அருந்ததியர் உரிமைக்கான அமைப்புகள் வரை, தலித் மக்களுக்கான சமூக அரசியல் வரலாறு நெடியதும் நீண்டதுமானது. 1848இல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து உலகளாவிய மாற்றங்கள் நிகழ்ந்தன. 1917 இல் ரஷ்யாவில் புரட்சி வென்றது. சோவியத் யூனியன் அமையப் பெற்றது. 1925 இல் இந்தியாவில் கம்யூனிசம் அரசியல் இயக்கமாக உருப்பெற்றது. திராவிட இயக்கங்களும் சற்றேறக்குறைய இதே கால கட்டங்களில் முகிழ்த்தவைதான்.

மார்க்சியத்துக்கும், பெரியாரியத்துக்குமான அடித்தளமும், பரவலாக்கமும் இங்கு விரிவாகவும் ஆழமாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. அரசியல் தளத்தில் மட்டுமின்றி, சமூகத் தளத்திலும் இவ்விரு இயக்கங்களின் வேர் ஆழமாக இறங்கியுள்ளது. இவ்விரு இயங்கள், இயக்கங்களுக்கு இணையான கருத்தியல் வன்மையும், தத்துவார்த்த தெளிவும் கொண்ட அம்பேத்கரியல் தலித் மக்களின் வாழ்வியல் மற்றும் தலித் அமைப்புகளின் அடித்தளமாக, இங்கு இன்னும்கூட முழுமையாக உருவாக்கப்படாமலேயே இருக்கிறது.

தலித் கருத்தியல் அரங்குகளில் எழுப்பப்படும் வினாவுக்கான விடையாக இருக்கும் உண்மைகளை நாம் பகுத்தாராய வேண்டிய தருணமிது.

– தொடரும்

 

Pin It