‘இந்தியாவில் நிலவும் ஒட்டுமொத்த சமூக அமைப்பைக் கருத்தில் கொண்டு, சட்ட ரீதியாக வழங்கப்படும் மரண தண்டனைகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். பாரம்பரியமாக இயங்கும் இந்திய சமூக அமைப்பின் உளவியல், சதுர்வர்ணம் (வர்ணாசிரம தர்மம்) என்ற கோட்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அதன் அடிப்படையில் ‘பசுவதை'யும், ‘பார்ப்பன வதை'யும் இந்து மதத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய நீதிமன்றங்களில் நீதிபதிகளாக செயல்படும் பெரும்பாலானோர், இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர். இதன் விளைவாக, ஆங்கிலேயர் ஆட்சியிலும் சுதந்திர இந்தியாவிலும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் – சமூக ரீதியாக அழுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவினரான பழங்குடியினர், தலித் மக்கள், முஸ்லிம்கள், சீக்கிய சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே.

‘இதற்கு மாறாக, அதே குற்றத்தைச் செய்த ஆதிக்கச் சாதியினருக்கு குறிப்பாக, பார்ப்பனர்களுக்கு மிக அரிதாகவே மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி கொலை வழக்கில் கூட, துப்பாக்கியால் சுட்ட நாதுராம் விநாயக் கோட்சேவுக்கு மட்டும்தான் மரண தண்டனை வழங்கப்பட்டது. அதே நேரத்தில், கோபால் கோட்சே உட்பட நான்கு பேர் சதி செய்திருந்தாலும், அவர்களுக்கு ஆயுள் தண்டனையே வழங்கப்பட்டது. இவர்கள் நால்வரும் மராத்தியப் பார்ப்பனர்கள். இதற்கு நேர் எதிராக, இந்திரா காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சதி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட, ஆனால் கொலை செய்யப்பட்ட இடத்தில் இல்லாத கேகார் சிங்கிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

‘அதேபோல, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சதி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. பம்பாயில் தொடர் கொலைகளை மேற்கொண்ட ராமன் ராகவன் என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இது, தண்டனை வழங்குவதில் சதுர்வர்ணக் கோட்பாடு கடைப்பிடிக்கப்படுவதை வெளிப்படுத்துகிறது. அமெரிக்காவில் ஒரேவிதமான குற்றத்திற்கு வெள்ளையர்களை விட கறுப்பர்களுக்குதான் அதிகளவில் மரண தண்டனை வழங்கப்படுகிறது. அதேபோல, இந்தியாவில் நிலவும் ஒட்டுமொத்த சமூக அமைப்பின் கீழ் மிக அதிகமான அளவுக்கு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுபவர்கள், ஒடுக்கப்பட்ட – தாழ்த்தப்பட்ட வகுப்பினரே.''

– முகுந்தன் சி. மேனன், இந்தியாவின் சீரிய மனித உரிமை ஆர்வலர்

1977 இல் 16 நாடுகள் மட்டுமே மரண தண்டனையை முற்றாக ஒழித்திருந்தன. இன்று, உலகில் மொத்தம் 96 நாடுகளில் (டிசம்பர் 2010 கணக்கின்படி) மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. மேலும், ஒன்பது நாடுகள் ராணுவக் குற்றம் தவிர பிற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதில்லை. இவைதவிர, மேலும் 34 நாடுகள் மரண தண்டனையை தமது சட்டப் புத்தகத்தில் வைத்திருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில்லை. ஆக, தற்பொழுது 139 நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை என்று – எந்தத் தவறு செய்திருந்தாலும், எவருக்கும், எக்காரணம் கொண்டும் மரண தண்டனை வழங்கப்படக்கூடாது (என) – 50 ஆண்டுகளுக்கு மேலாக பரப்புரை செய்து வரும் ‘அம்னஸ்டி இன்டர்நேஷனல்' கூறுகிறது.

தற்பொழுது ராஜிவ் காந்தி வழக்கில் மூவருக்கும், நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக அப்சல்குருவுக்கும் கருணை மனு நிராகரிக்கப்பட்டது, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், சிங்கப்பூர் போன்ற அயல் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு அந்நõடுகளில் விதிக்கப்படும் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி வாதிடும் இந்திய அரசு, சொந்த நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு அதை ரத்து செய்ய மறுப்பது, மிகப்பெரிய முரணாகும். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மரண தண்டனைக்கு எதிரான தனது கருத்தை வெளிப்படையாக அறிவித்ததை – நல்லதொரு முன்னுதாரணமாக இன்றைய குடியரசுத் தலைவர் பின்பற்றாதது பெரும் வேதனைக்குரியது.

இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிராக ஒரு நாளைக்கு 27 வன்கொடுமைகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு, அதற்கு காரணமான ஜாதியை உள்நாட்டுப் பிரச்சனை என்று கூறி அய்.நா. அவையில் விவாதிக்க மறுத்தும்; ஈழத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டு, அதே நேரத்தில் இலங்கை அதிபரை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை எதிர்த்தும் வரும் இந்திய அரசு – தன்னை ‘அகிம்சை நாடு' என்று அழைத்துக் கொள்வது அய்யோக்கியத்தனமானது. ஈழத்தில் கொல்லப்பட்டவர்களும், ஜாதிப் படுகொலைக்கு ஆட்படுபவர்களும் பார்ப்பனர்கள் அல்லர் என்பதால்தான் – இந்திய ஆளும் வர்க்கம், இத்தகைய படுகொலைகளை அனுமதிக்கிறது.

மரண தண்டனை கூடாது என்பதன் நோக்கம், தண்டனையே கூடாது என்பது அல்ல. ஆனால், குறிப்பாக பேரறிவாளன் மற்றும் அப்சல் குரு விஷயத்தில் அவர்கள் செய்யாத குற்றத்திற்காக, திட்டமிட்டே இவ்வழக்கில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது, மறுக்க முடியாத உண்மை. எனவே, இவ்வழக்கை மறு விசாரணைக்கு உட்படுத்தி, இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் மனித உரிமையாளர்களின் தலையாய கோரிக்கை. மரண தண்டனை என்பது, சட்ட ரீதியான ஒரு படுகொலை. எதைக் கொண்டும் அதை நியாயப் படுத்திவிட முடியாது.

மரண தண்டனை குறித்து டாக்டர் அம்பேத்கர் 

‘...நமது அரசமைப்புச் சட்டத்திலேயே ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியாக, ‘உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும் உரிமை' நிர்ணயம் செய்யப்பட வேண்டுமா? அல்லது எத்தகைய கிரிமினல் மேல்முறையீடுகளை உச்சநீதிமன்றம் எடுத்துக் கொள்ளலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை, நாம் நமது நாடாளுமன்றத்திடமே அளித்துவிடலாமா? இந்தக் கேள்விகளை தவிர்க்க இயலாத ஒரு நியதியாக உருவாக்க நான் விரும்பவில்லை. மேலும், கேள்விகளுக்கான எனது தீர்மானமான பதில் என்று எதையும் இந்தச் சூழலில் நான் கூற விரும்பவில்லை...

‘மரண தண்டனை மேல்முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றமே விசாரிக்கலாம் என்பதற்கு மாறாக, மரண தண்டனையை முழுவதுமாக ஒழித்து விடுவதை நான் ஆதரிக்கிறேன் (கேளுங்கள், கேளுங்கள்). இந்த முடிவைப் பின்பற்றுவதே சரியானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதனால் பல முரண்பாடுகள் முடிவிற்குக் கொண்டு வரப்படும்.

‘நமது நாடு அகிம்சையில் நம்பிக்கை கொண்ட நாடு, அகிம்சை நமது நாட்டின் பழம்பெரும் பண்பாடு. மக்கள் தற்போது தங்களின் வாழ்வியல் நெறியாக இதனைப் பின்பற்றாமல் இருந்தால்கூட, அகிம்சையை ஒரு நியாயத் தீர்ப்பாக மக்கள் முடிந்தவரை பின்பற்ற வேண்டும் என விரும்புகின்றனர். இந்த உண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில், நாம் இந்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய சரியான பணி – மரண தண்டனையை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதுதான்.''

– ‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 13, பக்கம் 639

Pin It