சமச்சீர் கல்வி என்பது வெறும் பாடத் திட்ட வடிவமைப்புகளிலோ, பயிற்றுவிக்கும் முறைகளிலோ, பள்ளிகளின் தரத்திலோ அல்லது பள்ளிகளை நிர்வகிக்கும் அமைப்பு சீராக்கங்களிலோ மட்டும் அடைந்துவிடக்கூடிய சமூக இலக்கு அல்ல.

girl_students_360கல்வியில் சமச்சீர்மை என்பது, பாடத்திட்டங்களை ஒரே மாதிரியாக அமைப்பதுதான் என்பது ஒரு குறுகிய நோக்காக அமையும். ஒருமை என்பது ஒற்றுமை அல்ல. பன்மையில் ஒப்புரவும் சமன்பாடும் காண்பதுதான் சமத்துவம். 32 மாவட்டங்களில் இருப்பவர்களும் ஒரே புறநானூற்றுப் பாடலைத் தான் செய்யுள் பாடமாகப் படிக்க வேண்டுமா என்ன? இன்னும் சொல்லப்போனால், மாவட்டத்திற்கு ஒரு புறநானூறு, ஒரு குறளதிகாரம், ஓர் அருட்பா, ஒரு தலித் பாடல் என்று வகுத்தோமென்றால் – அது தமிழுக்கு ஊக்கமும் வளர்ச்சியுமே அன்றி யாரும் குன்றிப் போகவும் மாட்டார்; சமன்பாட்டில் இளைத்துப் போகவும் மாட்டார்.

அது போல, மாவட்டத்திற்கு ஒன்று என இல்லாவிடினும், மாநிலத்தைப் பத்து மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் எல்லா பாடங்களிலும் (தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூகவியல், கணக்கு) வெவ்வேறு வகையான பா0டத்திட்டங்களை வகுப்பது, கல்வி கேண்மைக்கு வளம் கூட்டுமே அன்றி சமச்சீர்மையைச் சிதைக்காது. ஒவ்வொரு அறிவுக் களமும் விரிந்தது. பத்து வகையான அறிவுக் கூறுகள் மாணாக்கர் தரத்தையும், நீட்சியையும் விரிவுபடுத்தும்.

மாநிலம் முழுமைக்கும் ஒரே ஒருவர் அல்லது ஒரே குழு பாடத்திட்டத்தை வகுப்பதற்குப் பதிலாக பத்து குழுமங்கள் இப்பணியில் ஈடுபடும்போது – பன்மைக் கருத்துகளும், கோட்பாடுகளும் மாணாக்கரை எட்டும். ஒருமை ஆதிக்கம் என்பது, எப்போதுமே ஆபத்தைக் கொண்டுவர வல்லது.

அதே போன்று சி.பி.எஸ்.சி., மெட்ரிக், மாநில வாரியம் எனப் பல்வகையான நிர்வாகக் கூறுகள் இருப்பதுகூட, பெருத்த கேடு தரும் எனக் கொள்ள வேண்டுவதில்லை. இருக்கும் பல்லாயிரம் பள்ளிகளையும் ஒரே துறைத் தலைவர் நிர்வகிப்பது என்பது, நிர்வாக மேற்பார்வையையும் எதிர்கால வளர்ச்சி சிந்தனைகளையும் குறுக்குமேயன்றி சாதகப்படுத்தாது. செல்வந்தர், ஏழையர், ஏலுவோர், ஏலாதோர் என்று பாராது யாவருக்கும் கல்வியை இலவசமாக்குவது என்பதும் சமச்சீர்மை ஆகாது. உள்ளவர்களுக்கு இலவசமாக்குவது, ஏழைகளின் பணத்தைச் செல்வர்க்கு விரயமாக்கும் செயலாகும்.

பின் சமச்சீர்மை எங்கு தொக்கி வரும் என்றால், எல்லா சமூகப் பிரிவினருக்கும், குறிப்பாக சமவுரிமை மறுக்கப்பட்ட சமூகங்களான பட்டியல் சாதியினர், பழங்குடியினர், கல்விக்குச் செலவிட முடியா ஏழையர் ஆகியோருக்கு – எந்த வகையான பாடத்திட்டமானாலும், எந்த வகையான பள்ளியானாலும், எந்த வகை நிர்வாகத்தின் கீழானாலும் – சமவுரிமையோடு கல்வி பயிலும் வாய்ப்பை உருவாக்கித் தருவதில்தான் வரும் என்றாகும்.

தற்போதுள்ள பள்ளி வகைகளில் (சி.பி.எஸ்.சி., மெட்ரிக், தந்நிதி) இந்த சமநிலை தற்போது இல்லை. சி.பி.எஸ்.சி. பள்ளிகளிலும், நகரங்களில் அமைந்துள்ள மெட்ரிக் பள்ளிகளிலும் இது அறவே இல்லை. மதிப்பெண் இருந்தாலும் பட்டியல் சாதியினர் இப்பள்ளிகளில் சேர்க்கப்படுவதில்லை. யு.கே.ஜி.இலும், முதல் வகுப்பிலும் சேர்ப்பதற்கு என்ன மதிப்பெண் வேண்டி உள்ளது? எட்டாம் வகுப்பு வரை தேர்வே கிடையாது என்னும்போது, 1 முதல் 9 வகுப்புகளில் சேர்ப்பதற்கு எந்த மதிப்பெண் தேடுவது?

சமூகச் சமன்பாட்டைச் சீர்குலைத்ததும், சீர்குலைத்துக் கொண்டிருப்பதும் இந்தவகைப் பள்ளிகளே. இதற்குதான் சமாதி கட்ட வேண்டும். அதற்காக இருக்கும் மெட்ரிக் பள்ளிகளை இடிக்கவும் வேண்டாம்; சமாதி கட்டவும் வேண்டாம்; அவர்கள் பாடத்திட்டத்தை மாற்றவும் வேண்டாம். ஆனால், ஒரு சாரரை மட்டுமே சேர்ப்பது ஒர சாரரைச் சேர்ப்பதில்லை என்ற நிலையை, அப்படி ஒரு சார்பு செய்வதற்கு அப்பள்ளிகளுக்கு வழிவகுக்கும் நடைமுறை எதுவாகினும், அதை மாற்றியே தீர்வதுதான் சமச்சீர்மை.

அதேபோன்று பள்ளிக் கட்டணங்களைச் சீரமைப்பது மட்டுமே சமச்சீர்மை கொண்டு வருவதற்கான உறுதிப்பாட்டைத் தராது. பள்ளியில் சேர்த்துக் கொண்டால், அவர்கள் கேட்கும் கட்டணத்தைத் தருவதற்கு ஆயத்தமாக உள்ள எல்லா பட்டியல் சாதியினரையும் எல்லா பள்ளிகளும் சேர்த்துக் கொள்வதில்லை. கட்டணம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பட்டியல் சாதியினரைச் சேர்க்க ஒப்புக் கொள்ளாத பள்ளிகளில், பட்டியல் சாதியினர் சேர முடிவதில்லை என்பதே உண்மை நிலவரம்.

மாநிலத்தில் குறைந்தது 50 அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஒரு பட்டியல் சாதி மாணவர்கூட மேல்நிலை வகுப்புகளில் சேர்க்கப்படவில்லை என்பது, தமிழ்நாட்டு சமூக சீர்திருத்தச் செம்மல்களுக்குச் சவுக்கடியான தகவலாகும். இது எதைக் காட்டுகிறது? பணம் தேவையில்லை என்றாலும் பட்டியல் சாதியினர் சில பள்ளிகளில் சேர முடியாது. இதே போன்று 150 நகர மெட்ரிக் பள்ளிகளில், ஒரு பட்டியல் சாதியினரும் இல்லை. இது எதைக் காட்டுகிறது? நகரங்களில் பணம் கொடுத்துப் பிள்ளைகளைச் சேர்க்கும் தகுதியுடைய பட்டியல் சாதியினர் ஏராளமாக இருப்பினும், இவ்வகைப் பள்ளிகளில் பட்டியல் சாதியினர் சேர முடியாது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 90 சதவிகிதத்திற்கு மேல் தேர்ச்சி காட்டிய 22 மெட்ரிக் பள்ளிகளில், ஒரு பட்டியல் சாதி மாணவர்கூட இல்லை. 304 மெட்ரிக் பள்ளிகளில் 18 சதவிகிதத்திற்குக் குறைவாகவே பட்டியல் சாதியினர் உள்ளனர்.

ஆகவே, எந்த வகையான பள்ளியாக இருந்தாலும், அதில் பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் பங்கு 20 சதவிகிதத்திற்குக் குறையாமல் இருப்பதை எந்தத் திட்டம் உறுதிப்படுத்துகிறதோ, அதுவே சமச்சீர் கல்வித் திட்டமாக இருக்கும். பள்ளிக் கட்டணத்தை முறைப்படுத்துவது என்பதைவிட, பணம் கட்ட இயலாதவருக்கு உரிய கல்வி உதவித் தொகையை – எந்தப் பள்ளியாக இருந்தாலும் முழுமையாக வழங்குவதே உண்மையான சமச்சீர் கல்விக்கு வழிவகுக்கும்.

இக்கட்டுரையாளர், தமிழக அரசின் கூடுதல்தலைமைச் செயலாளர்/வளராணையர்

Pin It