செ.கு.தமிழரசன் – நீண்ட அனுபவம் கொண்ட தலித் தலைவர்களுள் ஒருவர். மிக நீண்ட காலமாக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர். ‘பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பு' வலுவாக இருந்த வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர். கடந்த தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து, வெற்றி பெற்று, கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினராக தற்போது இருந்து வருவதால் – புதிய அரசால் தற்காலிகமாக சட்டப்பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்டு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்த சிறப்பினைப் பெற்றவர். தற்போதைய அரசுடன் அணுக்கமாக இருக்கும் செ.கு.தமிழரசன், தலித் மக்களுக்கு செயலாற்ற எத்தகைய செயல் திட்டத்தை வைத்திருக்கிறார் என்று ‘தலித் முரசு'டன் உரையாடுகிறார்.

சந்திப்பு : அழகிய பெரியவன், ஜோதிபாசு, சுபாகரன்

வட ஆற்காடு மாவட்டம், பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் கோட்டையாக இருந்த மாவட்டம். இம்மாவட்டம் பல தலித் தலைவர்களைப் பெற்றிருக்கிறது. அந்தத் தலைவர்களைப் பற்றி சொல்லுங்கள்.

tamilarasan_200வடஆற்காடு மாவட்ட தலித் தலைவர்களைப் பற்றி மறைந்த எழுத்தாளர் திரு. ஏபி. வள்ளிநாயகம் மற்றும் உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் அதிக அளவில் எழுதியிருக்கிறீர்கள். அதற்கு நாங்கள் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அம்பேத்கர் காலத்திலேயே ‘பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பு' இம்மாவட்டத்திலே மிகவும் வலுவாக இருந்தது. அதற்குக் காரணம், இந்த மாவட்டம் சென்னைக்கு அருகிலே இருந்ததுதான். இந்த மாவட்டத்தில் இருந்து அருகிலுள்ள கோலார் தங்கச் சுரங்கத்துக்கு வேலை செய்ய சென்ற தலித் தொழிலாளர்கள், அங்கே ஒருங்கிணைந்து செயலாற்றியது மற்றொரு காரணம். அதனால்தான் பல தலைவர்கள் இம்மாவட்டத்திலிருந்து உருவாகியுள்ளனர்.

தளபதி கிருஷ்ணசாமி, சட்டமன்ற உறுப்பினராக இருந்த அண்ணன் எஸ்.ஆர். முனிசாமி, தோல் பதனிடும் தொழிலாளர்களுக் காக முதலில் சங்கம் அமைத்த அண்ணன் ஜெ.ஜெ. தாஸ் எனப் பலரை குறிப்பிட்டுச் சொல்லலாம். அடுத்தகட்டத் தலைவர்களாக நிறைய பேரை சொல்லலாம். என். பாலகிருஷ்ணன், ஏ. மகாதேவன், எல். சுப்பிரமணி. இவர் கள் சித்தாந்தவாதிகளாக இல்லை என்றாலும் – அண்ணன் தளபதி கிருஷ்ணசாமியை அப்படிச் சொல்ல முடியாது – அம்பேத்கரின் மூர்க்கத்தனமான தொண்டர்களாக இருந்தனர். அம்பேத்கர் கொள்கைகளில் உறுதியாக இருந்தனர். உண்மையான ஒரு சுய விமர்சனத்தை மேற்கொண்டால், அதுபோன்ற தலைவர்கள் இன்று இல்லை என்றே கூட சொல்வேன். ஆனால், அந்த மூத்த தலைவர்களின் தாக்கம், இன்றைய தலைமுறையினரிடம் இன்றளவும் தொடர்கிறது.

அய்ம்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு ‘தமிழரசன்' என்று பெயர் வைத்தது தந்தை சிவராஜ் அவர்களும், அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களும்தான். அந்த காலத்திலேயே தமிழரசன் என்று ஒரு கிராமத்திலிருப்பவனுக்கு பெயர் வைப்பது என்பது முக்கியமான ஒன்று. என் கிராமமான செட்டிக் குப்பத்தில் அந்த காலத்தில் ‘பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பு' மாநில மாநாடு நடந்திருக்கிறது. அந்த குக்கிராமத்திற்கு தந்தை சிவராஜ் வந்திருக்கிறார், பாபாசாகேப்பின் மகன் யஷ்வந்தராவ் அம்பேத்கர் வந்திருக்கிறார்.

வேலூரில், அன்றைக்கு குடியரசுக் கட்சிக்கு தலைவராக இருந்த சிவராஜ், கோபர் கடே, ராஜ்போஜ், மானே, கெய்க்வாட், லிம்பாலே போன்ற பனிரெண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட கட்சி மாநாடு கோட்டை மைதானத்தில் நடந்திருக்கிறது. இந்த மாவட்டத்திலிருந்து பல பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. ‘சமத்துவச் சங்கு', ‘உதய சூரியன்', ஆம்பூரில் இருந்து டாக்டர் சுப்பிரமணியம் நடத்திய ‘தென்னாடு' போன்ற பத்திகைகளை சொல்லலாம்.

அந்தக் காலத்தில் பொத்தல்கோணி சுப்பிரமணியம் என்று ஒருவர் இருப்பார். அவர் ஒரு கோணிப்பையை கக்கத்தில் இறுக்கிக் கொண்டு, தாளக் கட்டையோடு கிராமம் கிராமமாகச் சென்று இயக்கப் பாடல்களைப் பாடி, இளைஞர்களை ஒருங்கிணைப்பார். ஒரு தலைவருக்கு நிகரான உழைப்பு அந்த மனிதரின் உழைப்பு. கிராமங்களின் திண்ணைகள் மீது கோணிப்பையை விரித்து, அதன்மீது அமர்ந்து கொண்டு அவர் பாடுவார். அப்போது கூட்டமைப்பின் கொடி உதய சூரியன் சின்னத் தைத் கொண்டிருந்தது. பல நேரங்களில் தளபதி ஆரிய சங்கரன் தி.மு.க.வை பார்த்து சொல்வதுண்டு. உதய சூரியன் சின்னம்கூட உங்களுக்கு சொந்தமானது அல்ல; அது நாங்கள் கொடுத்தது என்று.

‘செந்தமிழ் தோழா, செந்தமிழ் தோழா/உறக்கம்தனை களைந்திடுவாய்/செந்தமிழ் தோழா/கண்விழித்துப் பார் உனது/நட்சத்திரக் கொடியை/

வாழும் தீண்டாமை பேதத்தை/நீ ஒழிப்பது சரியே'' என்று பொத்தல்கோணி சுப்பிரமணி பாடுவார். இலக்கண அடிப்படையில் எல்லாம் அவர் பõடிய பாடல்களைப் பார்க்க முடியாதென்றாலும், அவற்றில் பொருள் இருக்கும். அவை விழிப்புணர்ச்சிப் பாடல்கள். இப்படி பல செய்திகள் வேலூர் மண் சார்ந்து இருக்கின்றன.

தொண்டர்களாலும், மக்களாலும் எளிதில் அணுகக்கூடிய வகையில் எளிமையாக இருக்கும் மிகச் சில அரசியல் தலைவர்களுள் நீங்களும் ஒருவர். இந்த இயல்புக்கு காரணம் என்ன?

இதற்குக் காரணம் என் குடும்பம்தான். அம்பேத்கரிய சிந்தனைகளில் ஊறிய நீலக் குடும்பத்திலிருந்து வந்தவன் நான். வேறு கொள்கைகளையோ, கட்சிகளையோ, தலைவர்களையோ அறியாதவன். அம்பேத்கர் அவர்களின் கொள்கைகள், அவர் பாதை, அவரின் தொண்டர்கள், அவர் பணியைச் செய்யும் தலைவர்கள் என்று சுமார் 43 ஆண்டுகளை கழித்தவன் நான். என்னுடைய 16 வயதிலிருந்து உருவான உறவு இது. இந்தச் சூழல்தான் என்னை நீங்கள் குறிப்பிட்டது போல, மக்கள் நேய தலைவனாக உருவாக்கியது. இந்த நீண்டகால மக்கள் பணியில் நான் பெற்றவை மனநிறைவளிப்பவை. ஆனால், நான் இழந்தவைகளோ ஏராளம். இத்தனை ஆண்டுகால மக்கள் பணியில் நாங்கள் அரசு அதிகாரத்தில் இருந்திருந்தாலும், இல்லாமல் இருந்திருந்தாலும்; தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தாலும், வெற்றியடையாமல் போயிருந்தாலும்; கூட்டணியில் இருந்திருந்தாலும், தனித்துவிடப்பட்டிருந்தாலும் – எங்கள் கொள்கையிலிருந்தும் செயல்பாடுகளிலிருந்தும் மாறியதில்லை. எங்களின் மனநிறைவுக்குக் காரணம் – நான் சொன்ன கருத்துகளையோ, விமர்சனங்களையோ மாற்றிப் பேசியதில்லை; திரித்துச் சொன்னதில்லை. எப்போதும் கோட்பாடுகளிலே உறுதியோடு இருப்பவன் நான்.

கருத்தியல் தளத்தில் நின்று செயல்படும் சமூக அரசியல்; தேர்தலை குறிவைத்து செயல்படும் அதிகார அரசியல்இவை இரண்டில் எதை நீங்கள் முதன்மையானதாகக் கருதுகிறீர்கள்?

தலித் மக்கள் பெரிய அளவில் ஒன்றுபட வேண்டும்; விழிப்புணர்வு பெற வேண்டும் என்று எண்ணினார் அம்பேத்கர். போதிய கருத்து செழுமை வேண்டும் என்ற கருத்தில் இருந்தாரே தவிர, அவர்களைப் போராட்டக் களத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பதில் கொஞ்சம் தயக்கத்தோடு இருந்தார். ஏனெனில், கிராமத்தில் சொல்லும் ஒரு பழமொழி போல – இலை முள் மீது பட்டாலும், முள் இலை மீது பட்டாலும் கிழியப் போவது இலைதான் – என்பதுபோல, தலித் மக்களின் வாழ்வியல் அமைந்துவிட்டது. பாதிப்பு என்பது எல்லா வகையிலும் இவர்களுக்குதான். எந்த களத்திலும் அதிகமான பாதிப்பு தலித் மக்களுக்குதான்.

ambedkar_537

பொருளாதாரத் துறையானாலும், சமூகத் துறையானாலும், அரசியல் துறையானாலும், உழைக்கும் துறையானாலும் பாதிப்பு இந்த மக்களுக்குதான். அம்பேத்கர் சொல்வது போல் அவன் பிறக்கும் போதே சமூகத்தை எதிர்த்துப் போராடுகின்ற ஒரு பிறவியாய் பிறக்கிறான். ஏனென்றால், அவன் பிறப்பாலேயே தள்ளப்பட்டவன். பிறக்கும்போதே அந்தப் போராட்டம் அவன் மீது திணிக்கப்படுகிறது. அதனால் அவனுக்கு எல்லாமே போராட்டம்தான். வாழ்க்கை என்பதே அவனுக்கு போராட்டம்தான். எனவே, இந்த மக்களுக்கு அரசியல் போராட்டங்களைவிட அவர்களுக்கு இப்போது என்ன தேவை? தலித் மக்கள் மிகப்பெரிய பலம் வாய்ந்த ஒரு சமூகம். உழைப்பால், மக்கள் தொகையால் எல்லாவற்றிலும் பலம் வாய்ந்த ஒரு சமூகம். அவர்கள் ஒன்றுபட்டால் போதும். வேறு ஒன்றுமே அவர்களுக்குத் தேவையில்லை. ஒற்றுமையும், விழிப்புணர்ச்சி யும் கருத்தியல் போராட்டங்களின் மூலமே வரும். இப்படி வரும் ஒற்றுமை, அதிகாரத்தை எளிதாகப் பெற்றுத்தரும்.

பல ஆயிரம் ஆண்டுகாலமாக தொழில் கையில் இல்லை. தொழில் எப்போது விஞ்ஞானமயமாக்கப்பட்டதோ, சுரண்டல் வந்ததோ அப்போதே அவர்களிடம் இருந்து போய்விட்டது. வெறும் தனிமனித உழைப்பை மட்டுமே நம்பியிருந்த தொழில் எப்போது சுரண்டலுக்கான சாதனமாய் போய்விட்டதோ, அப்போதே தொழில் அவர்களை விட்டுப் போய்விட்டது. நிலம் போய் விட்டது. தொழில் இல்லை, நிலமும் இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மெல்ல மெல்ல இழந்த இந்த தொழிலையும், நிலத்தையும் அவ்வளவு எளிதாய் ஒரே நாளில் பெற்றுவிட முடியாது.

இருப்பினும், உண்மையிலேயே தலித் மக்கள் நினைத்தால் ஆட்சி அதிகாரத்தை ஒரே நாளில் பெற முடியும். ஒரே ஒரு நாள் நினைத்தால் போதும். வருகின்ற ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் பிறந்த நாளில், இந்தியா முழுவதும் இருக்கின்ற தலித் மக்கள், 11 மணிக்கு நகர வீதிகளில் கை கோத்து நிற்போம் என்று சொன்னால், அடுத்த நாள் 15 ஆம் தேதி இந்தியாவின் ‘தலையெழுத்தே' மாறிவிடும். ஆனால், அப்படிச் சொல்ல கருத்தியல் பலம் வேண்டும்.

அப்படி தலித் மக்கள் இன்னும் நினைக்காமல் இருப்பதற்கு எது தடையாக இருக்கிறது?

அந்த உணர்வு எல்லா பகுதிகளிலும் இருக்கிறது; பீறிட்டும் எழுகிறது. ஆனால், அந்த உணர்வை ஒன்றுபடுத்த நமக்கு ஓர் அரசியல் வலிமை இல்லை. அப்படிப்பட்ட ஒரு தெளிவோடு இருக்கின்ற தலைவர்கள், இயக்கங்கள் இல்லை. எது எதற்கோ நாம் மனித சங்கிலி போராட்டங்கள் என்று நிற்கிறோம். தேசிய அளவில் இருக்கின்ற தலித் முன்னணி தலைவர்கள் ஒன்றுகூடி, நாங்கள் ஒரு நாள் கரம் கோத்து இந்தியாவில் எல்லா நகரங்களிலும் நிற்போம். கட்சி, படித்தவன், படிக்காதவன் என்ற எல்லா உணர்வுகளை யும் தூக்கி எறிந்து, தலித் என்ற ஒரே உணர்வை இந்தியாவிற்கு பிரதிபலிப்போம். நாங்கள் இன்னமும் பல வகைகளில் புறக்கணிக்கப்படுகிறோம். நசுக்கப்படுகிறோம் என முழக்கமிடுவோம். இந்த உணர்வை மட்டும் வெளிப்படுத்துவதற்காக ஒருமணி நேரம் கைகோத்து நிற்போம் என்று சொன்னாலே போதும்.

நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளின் இயல்பே மாறிப் போய்விடும். இதற்கு பெரிய அளவில் எதுவும் தேவையில்லை. தீவிரவாத போராட்டம் நடத்த வேண்டும், ஆயுதம் ஏந்த வேண்டும் என்பது தேவையில்லை. நமக்கு மிகப் பெரிய மக்கள் பலம் இருக்கிறது. தேர்தல் அரசியலில் பெருமளவில் பங்÷கற்பவர்கள், வாக்களிப்பவர்கள், தேர்தலை எந்நிலையிலும் எதிர் கொள்பவர்கள், தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பவர்கள் எல்லாமே தலித் மக்கள்தான். எந்த கட்சி அரசியல் என்றாலும் அந்த மாநாடுகளில் பெருமளவு திரள்வது தலித் மக்கள்தான். லாரியில் போவது, போஸ்டர்கள் ஒட்டுவது யாராக இருக்க முடியும்? முழக்கங்களை எழுப்புவது யாராக இருக்க முடியும்? பெரும் முதலாளிகளாகவா இருக்க முடியும்? தொழிலதிபர்களாகவா இருக்க முடியும்? கட்சி அரசியல், தேர்தல் அரசியல் எதுவானாலும் இந்த ஜனநாயகத்தின் முக்கியக் கூறுகளில் அதிகமாகப் பங்களிப்பு செய்வது தலித் மக்கள்தான்.

 இந்திய அளவில் இன்றைய தலித் அமைப்புகளின் போக்கு எப்படி உள்ளது?

தலித்துகளை காட்டி தலைவர்களாவது வேறு; தலித்துகளுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு தலைவர்களாவது வேறு. இப்படித்தான் இரண்டு வகையாக இவர்களைப் பிரிக்கிறேன். எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் அந்த கட்சியைப் பயன்படுத்தி கொண்டு, தலித் மக்களுக்காக உழைத்த தலித் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். தலித்துகளுக்காகவே கட்சி தொடங்குகிறேன் என்று சொல்லி, தலித்துகளுக்கு தொடர்பே இல்லாத விசயங்களைப் பேசிக் கொண்டும், அந்த மக்களை திசை திருப்பிக் கொண்டும் இருக்கின்ற தலைவர்களும் இருக்கிறார்கள். அந்த காலத்தில் சுவாமி சகஜாநந்தர், காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக இருந்தார். சைமன் கமிஷன் இந்தியாவிற்கு வந்தபோது, ‘சைமன் கமிஷனே திரும்பிப் போ' என்று காங்கிரஸ் பேரியக்கம் சொன்னது. சைமன் கமிஷன் முன்பு எங்களுடைய பிரச்சனைகளை சொல்வோம் என்று அம்பேத்கர் கூறினார்.

சுவாமி சகஜாநந்தர், அம்பேத்கர் சொல்வதுதான் சரி என்றார். கட்சியின் கொள்கைக்கு எதிராக அவர் சொன்னார். சைமன் கமிஷன் முன்பு போய் நம்முடைய குறைகளை சொல்வதை நான் வரவேற்கிறேன் என்றார். இதுபோல் பல நிகழ்வுகளைப் பார்க்கலாம். இளைய பெருமாள் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும்கூட, அவரால் உருவாக்கப்பட்ட தேசிய ஆணையம் – இளைய பெருமாள் கமிஷன் – பரிந்துரைகளைப் பார்த்தோமானால் அத்தனையும் தலித் மக்கள் சார்பானவை. அவர் தலைவராகவும், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தாதாசாகேப் கெய்க்வாட் துணைத் தலைவராகவும் இருந்து தயாரிக்கப்பட்ட இளையபெருமாள் ஆணையத்தின் பரிந்துரைகள் – இன்றுவரைக்கும் இந்தியாவில் பேசப்படுகின்ற பரிந்துரைகள். இப் பரிந்துரைகளை நேரு அரசோ, அதற்கு பின்னால் வந்த அரசோ நிறைவேற்றி இருந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வோ, அந்த தீர்வுகளுக்கான வழிகளோ கிடைத்திருக்கும். அதுபோல் தி.மு.க. அமைச்சரவையில் இருந்த சத்தியவாணி முத்து, கருணாநிதிக்கு எதிராக விமர்சனம் செய்ததற்காகவே வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி சகஜானந்தராக இருந்தாலும் சரி, இளையபெருமாளாக இருந்தாலும் சரி, சத்தியவாணி முத்துவாக இருந்தாலும் சரி, தலித் மக்கள் தொடர்புடைய சிக்கல் என்று வந்தபோது அம்மக்கள் பக்கமாக நின்றார்கள். தாங்கள் சார்ந்திருந்த கட்சியின் கொள்கைகளுக்கு எதிரான நிலைப் பாட்டினை எடுக்கவும்கூட துணிந்தார்கள். ஆனால், இன்று அம்பேத்கரின் பெயரை சொல்லிக் கொண்டு, அவரின் பெயரால் இயக்கம் வைத்துக் கொண்டு, சங்கராச்சாரியாருக்கு விழா எடுக்கிறவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை எப்படி அம்பேத்கரிஸ்ட் என்று ஒப்புக் கொள்ள முடியும்? இந்தியா முழுமையிலும் இருக்கிற ஒடுக்கப்படுகிற, நசுக்கப்படுகிற தலித்துகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் திரள வேண்டுமென்பது அம்பேத்கரியத்தின் நோக்கம்.

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையிலுமுள்ள தலித்துகள் ஒரு பெயரில், ஒரு வடிவில், ஒரு நோக்கில் ஒன்றிணைய வேண்டும். ஆனால், இன்றைய தலித் அமைப்புகளோ அவர்களை கூறுகூறாக உடைப்போம் என்று வேலை செய்கின்றன. நாம் பொதுவாகப் பார்க்கப் போனால், ஒரு பெரும்பான்மை சமூகம். ஆனால், இப்பிரிவினைகளின் அடிப்படையில் பார்க்கப்போனாலோ மிகச் சிறுபான்மை சமூகம். இப்படி தலித் மக்களைப் பிரிப்பது எப்படி அம்பேத்கரியமாக இருக்கும்? இப்படி நாம் சிதறடிக்கப்படுவதால் தானே இன்னமும் சிதறுண்ட சமூகமாக இருக்கிறோம். பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரைச் சொல்லிக் கொண்டே அவரின் மய்ய கருத்தியலை விட்டு வெகு தூரத்திற்கு போய்விட்ட நிலையே பல தலித் அமைப்புகளில் இருக்கிறது. மொழியின் யெராலும் இங்கு தலித் மக்களிடை÷ய திசை திருப்பல்கள் நடக்கின்றன. மொழி என்பது ஒரு கருத்தியல் சாதனம். தமிழ் நாட்டுக்குள்ளேயேகூட ஒரே மாதிரி தமிழைப் பேசும் நிலை இல்லை. எனவே, மொழியே ஓர் இயக்கத்தின் அடிப்படையாக மாறிவிட முடியாது.

மொழியின் பெயரால் நடைபெறும் ஒடுக்குமுறைகளை எப்படிப் பார்ப்பது?

மொழியின் பெயரால் நிகழ்த்தப்படும் எந்த வகையான ஒடுக்குமுறையும் கண்டனத் துக்குரியது. ஆனால், அதன் பெயராலேயே ஓர் இயக்கம் என்பது தேவையில்லை.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கிறது. நீங்கள் புதிய அரசின் கூட்டணிக் கட்சிகளில் ஒருவராக இருக்கிறீர்கள். இந்த அரசின் தொடக்கம் எப்படி உள்ளது?

நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. புதிய அரசுக்கு தலைமையேற்ற முதல்வர் அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள். எனவே, தொடக்கமே மிகுந்த நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது.

புதிய அரசு தலித் மக்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

முதல்வரின் கவனத்துக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கொண்டு செல்கிறபோது, அவர்கள் பாரபட்சமற்ற நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. தலித் மக்களின் பிரச்சினைகள் முதல்வரின் கவனத்துக்கு முறையாகக் கொண்டு செல்லப்படுகிறபோது, அவர்கள் நடவடிக்கை எடுப்பதில் எப்போதும் சமரசமே செய்து கொண்டதில்லை. இதை என் அனுபவத்திலேயே பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் ஒன்றிரண்டு பிரச்சினைகள் நிர்வாகச் சுமையின் காரணமாக, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படாமல் இருந்துவிடலாம்.

– அடுத்த இதழிலும்

Pin It