கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல் குறித்த செய்தி ஒன்று அண்மையில் நமது கவனத்தை உலுக்கி இருக்கிறது. ‘விசை' காலாண்டிதழில் (எண். 32, சூலை 2011) யோ. கர்ணன் எழுதிய சிறுகதை ஒன்று வெளியானது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களை இக்கதை விமர்சிப்பதாகக் கருதிய சிலர், இக்கதையை வெளியிட்ட ‘விசை' இதழின் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யாவுக்கு தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் மிரட்டல்களைத் தொடர்ந்து விடுத்து வந்திருப்பது – கருத்துரிமையை மதிக்கும் அறிவுஜீவிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

aadhavan_320யோ. கர்ணன் எழுதிய கதையில் துவாரகா என்ற பெயர் கொண்ட ஒரு ஈழத் தமிழ் இனப் பெண், ஏதிலி முகாம்களில் சந்திக்க நேரும் கொடுமைகளை வெளிப்படையாகப் பேசுகிறது. இக்கதையைப் படிக்காமல் இக்கதை குறித்து பரப்பப்பட்டு வரும் வதந்திகளை மட்டுமே நம்பி, இதை எதிர்ப்பவர்கள் செயல்பட்டு வருகின்றனர். சிலர் இக்கதையை சிறுகதை என்ற அளவில்கூட புரிந்து கொள்ள முடியாமல், கட்டுரை என்று நினைத்து தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.

யோ.கர்ணன், அகிலன், ராகவன் போன்ற பல ஈழ இளந்தலைமுறை எழுத்தாளர்கள் தமக்கு நேர்ந்த, தமது மக்களுக்கு நேர்ந்த கொடூரமான அனுபவங்களை, வலியை, வேதனையை தமது கதைகளில் அண்மைக் காலமாகப் பதிவு செய்து வருகின்றனர். இதை இலக்கிய உலகம், போர்க் கால இலக்கியம் என்று வகைமைப் படுத்துகிறது. இவ்விலக்கியம், போரின் கொடூரத்தையும் வேதனையையும் மட்டும் சொல்லாமல் போருக்கான காரணிகளையும் விமர்சனப்படுத்துகிறது. ஓர் இலக்கியப் பிரதி என்ற அளவில்தான் – விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் இக்கதையை நாம் பார்க்க வேண்டும்.

கருத்து முரண்பாடுகளை, கருத்தியல் மட்டத்திலேயே ஜனநாயக நெறிமுறைகளின்படி விமர்சனம் செய்வதும் எதிர்கொள்வதுமே நாகரிகமான ஒரு சமூகத்தின் பண்பாட்டுச் செயல்பாடாக இருக்க முடியும். இக்கதையை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் தனிமனிதத் தாக்குதல் மற்றும் தனிமனித விமர்சனம் போன்றவற்றை – எதை முன்னிறுத்தியும் ஏற்க முடியாது.

கீழே கையொப்பமிட்டுள்ள – மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், கலை இலக்கியச் செயல்பாடுகள் ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கை கொண்ட எழுத்தாளர்களாகிய நாங்கள் – ஆதவன் தீட்சண்யா மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள், விடப்படும் மிரட்டல்கள், அவரின் கருத்துச் சுதந்திரத்தையும், எழுத்துச் செயல்பாடுகளையும் முடக்க நினைக்கும் முயற்சிகள் ஆகியவற்றை கடுமையாகக் கண்டிக்கிறோம். அவருக்கு கருத்துரிமை தளத்தில் துணை நின்று தொடர்ந்து ஆதரவளிப்போம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்விஷயத்தில் அரசும், கலை இலக்கிய அமைப்புகளும் கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டு செயலாற்றும் அமைப்புகளும் உடனடியாக தலையிட்டு, இத்தகு தனிமனித தாக்குதல்கள் மேலும் தொடராத வண்ணம் கருத்துரிமையைப் பாதுகாப்பதில் தமது பங்களிப்பினை நல்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

 — அரங்க. மல்லிகா, கம்பீரன், அழகிய பெரியவன், பழ. ராஜேந்திர பிரசாத், ஜோதிபாசு, அம்மணி, யாழினி முனுசாமி, ரா. எட்வின், விஷ்ணுபுரம் சரவணன், பாட்டாளி, தய். கந்தசாமி, கவிப்பித்தன்,தேவ.இளங்கோ – விடுதலைக் குயில்கள் கலை இலக்கிய இயக்கம்

****

       'புதுவிசை' மாத இதழில் வெளியான யோ.கர்ணன் எழுதிய ‘துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன்' என்ற சிறுகதையை வெளியிட்டதற்காக ‘புதுவிசை' இதழின் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யாவிற்கு சில சமூக விரோதிகள், கடந்த ஒரு மாத காலமாக கொலைமிரட்டல் விடுத்து வந்திருப்பதை ‘தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் பேரவை' வன்மையாகக் கண்டிக்கிறது. தங்களின் இன்னுயிரை ஈந்து ஈழ விடுதலைப் போரை நடத்திய விடுதலைப் புலிகளின் மீதும், விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் மீதும் வைக்கப்படும் முதிர்ச்சியற்ற, மேம்போக்கான விமர்சனங்களும், கேலி சித்தரிப்புகளும் கடும் கண்டனத்திற்குரியவை. அதே நேரத்தில், விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றும் வழிமுறைகள் குறித்தும் நாம் அக்கறை கொள்கிறோம். கொலை மிரட்டல்கள், விமர்சனங்களுக்கான பதில்களாக ஒருபோதும் இருக்க முடியாது.

தமிழ்த் தேசியம் பேசும் முற்போக்கு சக்திகள், தமிழ்ச் சமூகத்தில் நிலவும் கொடிய சாதிய வன்கொடுமைகள் குறித்து மறந்தும் வாய் திறப்பதில்லை என்ற விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வரும் ஆதவன் தீட்சண்யா போன்ற தலித் எழுத்தாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதன் மூலம் – தமிழ்த் தேசிய அரசியல் தலித் மக்களின் உரிமைக் குரலை நசுக்கும் தன்மை கொண்டது என்பது மீண்டும் நிரூபணமாகிறது.

படைப்பு சுதந்திரத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிரான அச்சுறுத்தல்கள் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் சிந்தனை சுதந்திரத்தை தடுக்கும் செயல்களாகும். எந்த ஓர் ஆக்கமும் எத்தகைய கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், மோசமான விமர்சனங்களை வைத்தாலும் அதை எதிர்த்து கருத்தியல் தளத்திலும், ஜனநாயக வழிகளிலும் மாற்றுக்கருத்துகளை முன்வைக்க வேண்டுமே தவிர, கொலை மிரட்டல் விடுவதும் நாகரிகமற்ற முறையில் நடந்துகொள்வதும் ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் சவால்களாகும்.

இத்தகைய செயல்கள், இந் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப் படுகொலையை செய்துள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவையும், இலங்கை ராணுவத்தினரையும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கக் கோரும் செயல்பாடுகளுக்கு – தமிழக அறிவுதளத்தில் பெருகிவரும் உணர்வை வலுவிழக்கச் செய்வதாகவே அமையும்.

தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் விடுக்கப்படும் கொலை மிரட்டல்கள் குறித்து ஆதவன் தீட்சண்யா கொடுத்துள்ள புகார் மீது ஓசூர் காவல் நிலைய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தோழர் ஆதவன் தீட்சண்யாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த சமூக விரோதிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறோம்.

— கொடிக்கால் ஷேக் அப்துல்லா, யாக்கன், தமிழேந்தி, புனித பாண்டியன், மு.பா. எழிலரசு, மீனாமயில், யாழன் ஆதி, கவுதம சன்னா, எஸ்.நடராசன் – தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர் எழுத்தாளர் பேரவை

Pin It