தலித் முரசு' கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிதி நெருக்கடியிலிருந்து ‘தலித் முரசை' மீட்டெடுப்பதற்காக ‘தலித் முரசு காப்பு நிதியம்' தொடங்கப்பட்டு, நிதி திரட்டுவதற்கான பணிகள் நடைபெற்றாலும் – போதிய அளவில் நிதியை சேர்க்க முடியவில்லை. இருப்பினும் பணி தொடர்கிறது.

iniyan_ilango_340இந்நிலையில், கடந்த பத்தாண்டுகளாக லண்டனில் மருத்துவ மேற்படிப்பையும் படித்துக் கொண்டு, தலித் மக்களை வன்கொடுமைகளிலிருந்து காப்பதற்காக மனித உரிமை பட்டயப் படிப்பையும் மேற்கொண்டு, உலகளாவிய சட்டங்கள் தொடர்பான ஆய்வையும் முடித்து விட்டு – அண்மையில் நாடு திரும்பியிருக்கும் மருத்துவர் இனியன் இளங்கோ அவர்கள், ‘தலித் முரசு' நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதைக் காணச்சகியாமல், அதற்கு ‘முதல் உதவி' செய்திருக்கிறார்.

சென்னையில் ஒரு சிறு மருத்துவமனையை கட்டியெழுப்ப வேண்டும் என பத்தாண்டுகளுக்கும் மேலான தன்னுடைய கனவுத் திட்டத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, ‘தலித் முரசை' காப்பதற்கே முன்னுரிமை என்று கூறி, அதற்குரிய நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை நம் அலுவலகத்திற்கு வருகை தந்து (சூலை – 2011) நம்மிடம் அளித்து மகிழ்ந்தார். இப்பெரும் நிதியுதவியை செய்வதற்கு, அவருடைய தாயார் உற்ற துணைபுரிந்தார் என்பது கூடுதலாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய செய்தி.

‘தலித் முரசு' இதழின் 15 ஆண்டு கால வரலாற்றில், தனி நபர் ஒருவர் இப்பெரும் தொகையை அளித்தது இதுவே முதன் முறையாகும். மருத்துவருக்கும், அவருடைய தாயாருக்கும் – ‘தலித் முரசின்' ஆயிரக்கணக்கான வாசகர்கள் சார்பில், நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.

எவ்வித நெருக்கடி ஏற்படினும், ‘தலித் முரசு' இதழை இடைவிடாமல், இறுதி வரை செம்மையாகக் கொண்டு வந்து – ஒடுக்கப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வை மேற்கொள்ளும் பணியை சிறப்பாக ஆற்றுவது ஒன்றே – மருத்துவர் இனியன் இளங்கோ அவர்கள் செய்திருக்கும்பேருதவிக்கு, நாம் செலுத்தும் உண்மையான நன்றியாக இருக்கும்; அதைச் செய்வோம் என்றும் உறுதியளிக்கிறோம்.

– ஆசிரியர் குழு

Pin It