“போதி மரத்தடியில்

பிள்ளையார் சிலை

பார்ப்பனிய வெற்றி''

tada_nallarasan_150"தடா' நல்லரசன் கவிதை இது. ஓர் அதிர்ச்சி அலை உங்களுக்குள் ஓடியிருக்கலாம். இப்படி பெயருக்கு முன்னால் "தடா' என்றும் "மிசா' என்றும் வைத்துக் கொள்வது தமிழ்நாட்டில் புதிதல்ல. "மிசா'வில் கைதானவர்கள் "மிசா' என்றும் "தடா'வில் கைதானவர்கள் "தடா' என்றும் முன்னொட்டுகளை வைத்துக் கொள்வது அரசியல் செயல்பாடு. அது, இலக்கியச் செயல்பாடாகாது. ஆனால், கைதும் சிறையும் அவரை வருத்தியபோதெல்லாம்கூட, கவிதையை விடாமல் அவர் தொடர்கிறார் என்னும்போது அங்கே இலக்கியம் வாழ்கிறது.

பத்தாண்டுகள் சிறையில் இருந்தவர். தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய சிறைகளிலும் அடைக்கப்பட்டவர். "விதைநெல்', "வாக்குமூலம்', "தழும்புகள்', "திசைகள்', "முகங்கள்' ஆகிய அய்ந்து தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். எல்லா கவிதைகளையும் சிறையில்தான் எழுதியிருக்கிறார். தூக்கம் வராத இரவுகள், கொசுக்கடிகள், எதையாவது எழுதவேண்டும் என்னும் ஆர்வம் இவையெல்லாம் அவரை எழுத வைத்திருக்கிறது.

அதனால்தான் அவருடைய நூல்களிலும் வீணான எழுத்து என்று ஒன்றுகூட இல்லை. காரணம், அவருடைய நேர்மை; சாதி, மத, பொருளாதார ஏற்றத்தாழ்வற்ற தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்னும் அவருடைய கொள்கை. அவர் கவிதைகள் வெவ்வேறு வடிவங்களில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றை தலித்தியம், பெண்ணியம், ஏழ்மையியல், தமிழ்த்தேசியம் என்னும் பகுப்புக்குள் உட்படுத்தி விடலாம். இத்தகைய கவிஞர்கள் காதலை எழுதுவதில்லை. இயற்கையை நன்றாக நேசிப்பார்கள். நல்லரசனும் அப்படிப்பட்டவர் தான். காடுகளில் நடக்கும்போது வருடும் கோடிக்கணக்கான இலைகளை சிலாகிக்கிறார். எல்லோரும் பூக்களை சிலாகிக்கலாம். இவர் ஏன் இலைகளைச் சிலாகிக்கிறார்? தாவரங்களில் இலைகள் உழைப்பாளிகள். உழைத்துவிட்டு எந்தப் பலனை யும் எதிர்நோக்காமல் ஏழைகளைப் போலவே உதிர்ந்து விடுபவை.

எழுதத் தொடங்கியது எப்படி என நாம் பேச்சைத் தொடங்க, பத்தாம் வகுப்பு படிக்கும்போதே எழுதத் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார். தான் எழுதிய முதல் கவிதையே ஏழ்மையைப் பற்றியதுதான். அப்போதே அகில இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்திருந்தேன் எனக் கூறும் நல்லரசன் பிறந்த இடம் வெறும் முப்பதே குடிசைகள் இருந்த பாலசுந்தரபுரம். இது, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திற்கு அருகில் இருக்கிறது.

சிறுவயதில் தான் கண்ட சாதி ரீதியான ஒடுக்குமுறை,அவர் சமூகக் கோபத்திற்குக் காரணமாக இருந்திருக்கிறது. குளங்களில் தண்ணீர் எடுக்க முடியாத கொடுமையை அனுபவித்த நேரடித்தன்மை அவரிடம் நிறைய இருக்கிறது. பள்ளி மாணவராக இருக்கும்போது எல்லோருக்கும் தண்ணீர் கொடுத்த ஒரு பெண்மணி, அவருக்கு மட்டும் கையில் ஊற்றிக் குடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். இப்போது கூட அவர் கிராமத்தில் தலித்துகள் பயன்படுத்தக்கூடாது என்று கூறி, ஓர் ஏரியை ஆதிக்க சாதியினர் ஆக்கிரமித்திருக்கின்றனர். இத்தகைய கொடுமைகளை எதிர்த்துதான் என் கவிதைகள் இயங்குகின்றன என்று கூறும் அவர், கவிதை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பது என் அக்கறை அல்ல; அது உரைநடையாக இருக்கிறது என வாசிக்கிறவர்கள் சொல்லலாம்; ஆனால், அது என் வலியைக் கூறுகிறதா என்பதுதான் முக்கியம் என்கிறார்.

இவ்வளவு சாதிக்கொடுமைகளை அனுபவித்த நீங்கள் எப்படி தமிழ்த்தேசிய தளத்தில் இயங்கத் தொடங்கினீர்கள் என்று வினவ, "தலித் இயக்கவாதிகள் இங்கு யாரும் அப்போது இல்லை; தோழர் தொல். திருமாவளவன் போன்றவர்கள் அப்போதில்லை. அதனால்தான் தமிழ்த் தேசியவாதிகளோடு தொடர்பு ஏற்பட்டது என்கிறார்.

தமிழ்த் தேசியவாதிகளுக்கு சாதி ஒழிப்பு குறித்த எந்தக் கவலையும் இல்லை. சிலபேர் சாதி என்னும் அமைப்பு அப்படியே இருக்கட்டும் என்றுகூட பேசுகிறார்கள். மீன்சுருட்டி என்ற இடத்தில் நடந்த "தமிழ்நாடு விடுதலைப்படை' என்ற அமைப்பின் மாநாட்டில் தமிழரசன் அவர்கள், தலித் தலைமையிலான தமிழ்த்தேசியம்தான் ஏற்புடையது என்பதை வரையறுத்துக் கூறினார். அது ஒரு நூலாகக்கூட வந்திருக்கிறது. ஆனால், இப்போதிருக்கும் தமிழ்த்தேசியவாதிகள் சாதி ஒழிப்பை முன்நிபந்தனையாக்குவதில்லை. நீங்களே பாருங்கள், எத்தனை சாதிய பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன; எந்த ஒரு தமிழ்த்தேசிய இயக்கமாவது அதற்காகப் போராடுகிறதா? என தீர்க்கமாக அவர் உடைத்துப் பேசுகிறார்.

அவருடைய "திசைகள்' என்னும் நூல், ஆத்திச்சூடி வடிவிலானது. அவை அனைத்தும் சமூக ஓர்மைக்கானப் பங்களிப்புகள். எதிர்தளத்தில் நின்று பொதுச்சமூகத்தினை நோக்கி இதுதான் வழி என்று சொல்லக்கூடியவை. ஆனால், அவற்றுள் கவிதையை தேடவேண்டாம் என்பது நல்லரசனின் விருப்பம். அது கவிதை யாகக்கூட இல்லாமல் போகட்டும். இதுதான் தமிழன் போகவேண்டிய பாதை என்று கூறுகின்ற திசைகாட்டி மரம் என்று மிகுந்த உற்சாகத்தோடு கூறுகிறார்.

"விதைநெல்' தொகுப்பில் நீள் கவிதைகள் இருக்கின்றன. தாமிரபரணி படுகொலை, சாதியத்திற்கு எதிரான கவிதைகள், பெண்விடுதலை, ஈழ விடுதலை என அவருடைய கவிதைகள் இயங்குகின்றன. 1999 இல் நடைபெற்ற சிதம்பரம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களை நேரில் சந்தித்து அவர்கள் அடைந்த துயரங்களைக் கவிதைகளாக்கி இருப்பது நல்லரசனின் சமூகம் சார்ந்த விடுதலைப் பார்வைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இங்கே பொறுமையிழந்து/புறப்பட்ட காட்டாற்றை/உங்களின் எந்த அணை தடுக்கும்/எங்களுக்குள் எழும்பிவிட்ட/கோப பூகம்பத்தைச் சிறுபுல்விதையா ஒடுக்கும்? எமக்குப் போர்க்களம் தானடா/ இனித் தீர்வினைக் கொடுக்கும்/என அவர் எழுதுவது வெறும் கவிதை அரிப்புக்காக மட்டுமல்ல; போராடுவதற்கான உத்வேகம் பெறுவதற்கு!

அப்படிப்பட்ட சில போராட்டங்களில் ஈடுபட்டதால், அவருக்கு பத்தாண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை. ஏழு ஆண்டுகள் பிணையில் கையெழுத்துப் போட்டிருக்கிறார். தினமும் நான்கு வேளை சென்னையில் கையெழுத்து போடவேண்டும். காலையில் கிளம்பி காவல் ஆணையர் அலுவலகத்தில் கையெழுத்திட்டுவிட்டு, கன்னிமரா நூலகத்திற்குச் சென்று படிப்பது, பிறகு கையெழுத்துப் போடுவது என்று அன்று இரவு கையெழுத்துப் போட்டுவிட்டு, தான் தங்கி யிருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டி இருந்திருக்கிறது.

தலித் எழுத்து என்பது தலித் விடுதலையை முன்வைத்ததாக இருக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறுகிறார். தலித் இலக்கியம் என்பது தலித்துகளின் வலியைச் சொல்லக்கூடியது. ஆகையால் அது அம்மக்களுக்குப் புரியும்படி எழுதப்படவேண்டும். புரியாத மொழியில் எழுதுவது எழுத்தாளனின் அறிவினைக் காட்டுமே ஒழிய, அதனால் பாமர மக்களுக்கு என்ன இருக்கிறது என்று கேட்கும் நல்லரசன், "தை மாசம்' என்னும் நாட்டுப்புற பாடல்கள் குறுந்தகட்டையும் வெளியிட்டிருக்கிறார். அவரால் அருமையாக இசைப்பாடல்களைப் புனைய முடிகிறது. அவருடைய கவிதைகளிலேயே ஒருவித ஓசைநயம் உள்ளோடிக் கொண்டிருக்கும். நாட்டுப்புறப் பாடல்களுக்கு அவர் தேர்ந்தெடுக்கும் சொல்லாட்சிகள் சுகம் தரக்கூடியவை.

"தழும்புகள்' என்னும் தொகுப்பு, அய்க்கூ பாணியிலான கவிதைகள். ஒரு கவிதையின் கடைசிச் சொல்லோ அசையோ அடுத்த கவிதையின் முதல் சொல்லாக வரப்பாடுவது, சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான அந்தாதி என்று சொல்லப்படுகிறது. இந்த அந்தாதி, கடவுள் சார்ந்த பாடுபொருள்களைப் பாடுவதற்காக மட்டுமே தமிழ் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தக் கவிதைத் தன்மையை அய்க்கூவில் புகுத்தி ஒரு மாற்றத்தை உருவாக்க முயன்ற அவருக்குள் ஒரு போராளி எப்போதும் இருப்பதைப் போலவே ஒரு கலைஞனும் இருக்கிறான்.

வெப்பம் ஏறித்தான்/வெளிவரும் குஞ்சுகள்/ஓடுகளை உடைத்து/ என்று ஒரு கவிதை. அடுத்த கவிதை – உடைத்தெடுக்காமல்/ஒன்றுமே கிடைக்காது/உனக்கும் எனக்கும்/அடுத்த கவிதை எனக்கும் ஆசைதான்/ சேரிகளே இல்லாத/பூமியினைப் பார்க்க – இப்படி நூல் முழுக்க கவிதைகளை அமைத்திருக்கிறார். இக்கவிதைகள் தனித்தனியே கவிதைகளாகவும்; நூல் முழுக்க ஒரே கவிதையாகவும் இயங்குகின்றன.

நல்லரசன் இரண்டு "தடா' வழக்குகள் உட்பட, அய்ந்து வழக்குகளில் சிக்கி மூன்று வழக்குகள் முடிந்திருக்கின்றன. இதில் எதுவும் அவருடைய தனிப்பட்ட வாழ்விற்கான வழக்குகள் அல்ல; எல்லாமே பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியதால் வந்தது. தடா வழக்குகள் அவர் மேல் போடப்பட்டதால், "தடா' நல்லரசன் என்று அழைக்கப்படுகிறார்.

விடுதலையான பிறகு, அவர் தமிழர் தேசிய இயக்கத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இவ்வியக்கத்தின் மாவட்டச் செயலாளராக இருந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து விட்டார். தலித் இயக்கங்கள் ஏதாவது ஒன்றில் பணியாற்றலாமே எனக் கேட்டதற்கு, தலித் இயக்கங்களில் இருக்கும் குழு அரசியல் மோசமானதாக இருக்கிறது என்கிறார்.

நல்லரசனிடம் வெளியிடுவதற்கு தற்பொழுது ஒரு நாவல் உட்பட பதினைந்து நூல்கள் இருக்கின்றன. பத்தாண்டுகள் சிறையிலிருந்த அனுபவத்தை ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். இதையெல்லாம் வெளியிட வேண்டும் என்னும் ஆர்வம் அவரிடம் இருக்கிறது. போராளிகள் கவிதைகள் எழுதினால், ஆயுதங்களே எழுத்துகளாக மாறும் என்பதற்கு "தடா' நல்லரசனே சான்று!

– யாழன்ஆதி

‘தடா' நல்லரசனை தொடர்பு கொள்ள : 97905 19966

Pin It