chhattisgarh_tribals_620

துறைமுகங்கள், பெரிய அணைகள், ரசாயன ஆலைகள், இரும்பு உருக்காலைகள்,  சுரங்கங்கள், அணுமின் நிலையங்கள், அனல்மின் நிறுவனங்கள் என "நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள்' என்ற அடைமொழியில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் தொழிற்மய சூழலின் பின்னணியில் ஆயிரக்கணக்கான சாமானிய மக்களின் விளைநிலங்கள், குடியிருப்புகள் மற்றும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள், நீர்நிலைகள், உடல்நலம் என பல்வேறு உரிமைகள் நிர்மூலமாக்கப்படுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். பறிபோகும் உரிமைகள் மற்றும்உடைமைகளைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் போராடும் மக்களின் உயிருக்கும் உத்தரவாதமில்லை.

ஆந்திர மாநிலத்தின் சிறீகாகுளம் எனுமிடத்தில் "ஈஸ்ட்கோஸ்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் அனல்மின் உற்பத்தி நிலைய கட்டுமானத்திற்கு எதிராக 2010 பிப்ரவரி 28 அன்று, போராட்டம் நிகழ்த்திய கிராமத்தினர் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டுபேர் நிகழ்விடத்திலேயே மாண்டுபோயினர். இப்படுகொலை நிகழ்வதற்கு ஏழு மாதங்களுக்கு முன்னர்தான் இதே ஆந்திராவின் சோம்பேடா எனுமிடத்தில் "நாகர்ஜுனா' என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தின் அனல்மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தின்போது இரண்டு விவசாயிகள் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருந்தனர். தற்செயலான விபத்துபோல இப்படுகொலை நிகழ்வுகள் ஊடகங்களில் பதிவு செய்யப்படுகின்றன அல்லது மூடி மறைக்கப்படுகின்றன. ஆந்திராவில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் விவசாயிகளின் தற்கொலைப் பட்டியலில் இப்படுகொலைகளும் எண்ணிக்கையளவில் கரைந்து போயின.

ஆனால், நியாம்கிரி, போஸ்கோ, ஜெய்தாபூர், பொலாவரம், சிரியா, சிங்ரவுலி, ராய்காட், லவாசா, நவிமும்பை, கலிங்கா நகர் என மூடிமறைக்கப்படவியலாத – செய்தி ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் – பெயர்ப்பட்டியலை கவனித்து வரும் அரசியல் விழிப்புணர்வு பெற்ற கணிசமான மக்கள் குழுமத்தினர் இப்போது கேட்கத் தொடங்கியுள்ளனர் – இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று? சில பத்தாண்டுகளாக பல்வேறு அடித்தள மக்கள் இயக்கங்களின் தொடர்ச்சியான, சமரசமற்ற போராட்டங்களின் ஊடேதான் இந்த அளவிற்காவது பிரச்சனைகள் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. கடந்த இரண்டு அய்ந்தாண்டுத்திட்டங்களின் வழியாக, இந்தியத் துணைக் கண்டத்தின் அமைச்சுப் பணிகளில் நிதித்துறைக்கு இணையான கவனத்தையும் அதிகாரத்தையும் மட்டுமல்ல, நெருக்கடிகளையும் சந்தித்து வரும் துறையாக இருப்பது வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகமே. மேலும், பொதுத் துறைகள், மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் தொடர்புகளும் தேவைகளும் நடுவண் நிதித்துறையை மட்டுமே கவனப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சகமோ, தனியார் பெருமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களால் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றே குறிப்பிடலாம்.

புதிய தொழிற்கொள்கைகள், வர்த்தக இலக்குகள் மற்றும் குவிந்து கொண்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விளைவாக, சமீபத்திய சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் துறையோ, இன்னொரு தனியார் நிறுவனமாகவும் பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகத் தூதரகமாகவும் விமர்சிக்கத்தக்க அளவிலேயே செயல்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான வறிய இந்திய மக்களின்  உயிராதாரங்களும் எதிர்காலமும் இத்துறையின் அமைச்சக அலுவலகங்களில்தான் தீர்மானிக்கப்படுகின்றன.   இத்துறையில் கையொப்பமிடப்படும் ஒப்பந்த அனுமதிகள், அரசு ஆணைகள் மற்றும் கொள்கை வரையறைகள் யாவும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்நிலையின் மீது தாக்கம் செலுத்துபவை என்பதை நாம் உணர வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான பகை முரண்களை தோற்றப்படுத்தும் காட்சிக்கூடமாக இத்துறை இன்று உருவெடுத்து நிற்கிறது.

மன்மோகன்சிங், ப.சிதம்பரம், ஆ. ராசா ஆகியோருக்கு அடுத்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டவராக இருந்தவர் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ். மும்பை அய்.அய்.டி.யின் எந்திரவியல் பொறியியல் பட்டதாரியான இவர், ஹீன்ஸ் கல்லூரியில் நிர்வாக மேலாண்மையும் மசாசூசெட்ஸ் தொழிற்நுட்ப பல்கலைக் கழகத்தில் தொழிற்நுட்பக் கொள்கையில் பட்டமும் பெற்றவர். உலக வங்கியில் சிறிது காலம் பணியாற்றிய இவர், மன்மோகன்சிங் அமைச்சரவையில் இந்தியப் பொருளாதாரம் திறந்தவெளி சந்தையாக்கப்பட்ட நாள்முதல் ஓர் அங்கமாகப் பணியாற்றி வருபவர் என்பது தற்செயலானதல்ல. வர்த்தகம், தொழில், எரிசக்தி ஆகிய துறைகளில் நடுவண் இணையமைச்சராகப் பொறுப்பு வகித்து நுட்பங்களைத் தேர்ந்த பிறகு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் முக்கியமான காலகட்டத்தில் நியமனம் பெற்றவர். சோனியாகாந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழுவில், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் அரசாங்கத்தின் போதே உறுப்பினராக இருந்தவர்.

சமூகநீதி, மதச்சார்பின்மை, சுதேசி கொள்கைகள் ஆகிய கருப்பொருள்களில் காங்கிரசு கட்சி தொடர்ந்து கடைப்பிடித்து வரும் இரட்டைமுக நடவடிக்கைகளுக்குப் பொருந்தக்கூடிய முதலாளித்துவ அறிவுஜீவியாக இருப்பவர் ஜெய்ராம் ரமேஷ். தனியார்மய, திறந்தவெளி சந்தைப் பொருளாதாரத்தின் நேரடியான – இறுக்கமான – மக்களிடமிருந்து விலகி நிற்கும் அதிகாரவர்க்க வன்முகமாக மன்மோகன்சிங், ப. சிதம்பரம், பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் இருக்கின்றனர் எனில், கபில்சிபில், ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித் போன்றவர்கள் தாராளவாத – ஊடகங்களுடன் தொடர்புடைய – அதிகாரவர்க்க மென்முகமாக தோற்றம் காட்டுகின்றனர். இத்"தோற்றப் பிழை'யில்தான் காங்கிரசு கட்சியின் இரட்டை முகமும் கொள்கைத் திட்டங்களும் பிழைத்திருக்கின்றன.

"இருபது ஆண்டுகளுக்கு முன் நானொரு தீவிர உணர்ச்சிவயப்பட்ட வளர்ச்சி ஆர்வலனாகத்தான் இருந்தேன். இன்றோ, நானும் ஒரு வளர்ச்சி ஆர்வலன் அவ்வளவே. வாழ்வாதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மீதான எதிர்மறையான விளைவுகளுடன் கூடிய 9 சதவிகித வளர்ச்சியா? புவிப் பாதுகாப்புடன் கூடிய 7 சதவிகித வளர்ச்சியா? என்ற இருவித வாய்ப்புகளுக்கு இடையில்தான், ஒரு தேர்வு இருப்பதை நான் அறிந்து கொண்டேன்'' என்கிறார் ஜெய்ராம் ரமேஷ் ("தெகல்கா', 12 மார்ச் 2011) இவ்வாறு முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மீதான அக்கறையை காங்கிரசு  கட்சிக்கேயுரிய சாதுர்யத்துடன் விளக்குவதற்குத்தான் ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்களை ஊடகங்களும் முன்னிறுத்துகின்றன.

இயற்கை வளங்களையும், புவிச் சூழலையும், சாமானிய மக்களின் வாழ்வாதாரங்களையும் பெரிதும் சீர்குலைக்காமல் மாற்று வழிகளிலும் வாய்ப்புகளிலும் சீரான வளர்ச்சியை எட்ட இயலும் என்பது தொழிற்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அறிவியலாளர்கள் அறிந்திருக்கும் உண்மை என்ற போதிலும், சில ஆயிரம் தன்னல மனிதர்களின் லாபவெறி நோக்கில் இவ்உண்மைகள் உறைந்து போய்விடுகின்றன. "வளர்ச்சி' என்பதன் முதலாளித்துவ உட்பொருள் இயற்கை வளங்களைச் சுரண்டி, புவிச்சூழலை மாசுபடுத்தி, சாமானிய மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து உருப்பெறும் ஆளும்வர்க்க வக்கிர நலன் மட்டுமே.

2009 ஆம் ஆண்டு மே 28 அன்று, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஜெய்ராம் ரமேஷ் பொறுப்பேற்றுக் கொண்டபோது, ""ஊழலில் மலிந்து கிடக்கும் இந்த அமைச்சகம் புனரமைக்கப்படவேண்டும். வளர்ச்சியின் பொருட்டு சுற்றுச்சூழல் பாழ்படுவதை தாம் விரும்பவில்லை. அதே வேளையில் வளர்ச்சியின் சிறந்த முன்மாதிரிகளை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்'' என தம்மிடம் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதாக ஜெய்ராம் கூறுகிறார். ஊழலற்ற – வெளிப்படையான – சனநாயக ரீதியான நிர்வாகத்தை தனது அமைச்சகத்தின் நடைமுறையாக்க ஜெய்ராம் உண்மையிலேயே முயன்றார் என்கின்றன ஊடகங்கள். பி.டி. கத்தரிக்காயைத் தடைசெய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்தபோது, முன்னுதாரணம் இல்லாத வகையில் ஏழு பெருநகரங்களில் மக்கள் கருத்துக்கேட்பு நிகழ்வை நடத்தினார். மக்களின் கருத்துகளை திரித்துக் கூறாமல் "பேசும் ஆணைகள்' என்ற தலைப்பில் தனது அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வைத்தார். அமைச்சகத்திற்கு அனுப்பப்படும் கடிதங்கள், துறை சார் முடிவுகள் என ஒவ்வொன்றும் பொது மக்களின் அறிதலுக்காக இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களிடம் இணக்கமான உறவு கொண்டிருந்தார்.

"கோவா பவுண்டேசன்' என்ற தன்னார்வ அமைப்பின் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிளாட் ஆல்வேர்ஸ், "ஜெய்ராம் ரமேஷ் சந்தேகத்திற்கிடமற்ற வகையில் வெளிப்படைத் தன்மையைப் பேணுகிறார். எதையும் மூடிமறைக்க முயல்வதில்லை' என்று சான்றிதழ் தந்தார். விரிவான சுற்றுச்சூழல் மாசுபாடு அட்டவணை ஒன்றை தயாரித்து, நாட்டின் அனைத்து தொழில் மண்டலங்களையும் அவ்வப்போது ஒப்பிட்டு மதிப்பிடும் முயற்சியிலும் இறங்கியிருந்தார். புதிய சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு ஆணையம் (NEAMA) மற்றும்  தேசிய பசுமை தீர்ப்பாயம் என்ற சுற்றுச்சூழல் விரைவு நீதிமன்றங்கள் ஆகிய ஒழுங்குமுறை அமைப்புகளையும் உருவாக்கியிருந்தார் ("தெகல்கா, 12 மார்ச் 2011).

"நான் ஒரு கோட்பாட்டளவிலான சுற்றுச்சூழலியலாளன் அல்ல என்பதைத்  தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். வளர்ச்சித் திட்டங்களின் சூழலியல் பாதிப்புகள் சிலவற்றை நவீன தொழிற்நுட்பங்களின் ஊடே தணிக்க முடியும் என்றே கருதுகிறேன். ஆனால், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதையும் வன நிலங்கள் முறையற்ற வகையில் ஆக்கிரமிக்கப்படுவதையுமே நான் உண்மையில் பொருட்படுத்த நினைக்கிறேன். இவை மக்களின் வாழ்வாதாரங்களாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன'' என தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறார் ஜெய்ராம். ஒரிசாவின் நியாம்கிரி மலையில் பழங்குடி மக்களின் தொடர்ச்சியான போராட்டத்திற்குப் பிறகு வேதாந்தா அலுமினிய ஆலைத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்திய சில மாதங்களில் தென்கொரிய இரும்பு உருக்காலை நிறுவனமான "போஸ்கோ'விற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினார். தொடர்ந்து நவீன் ஜிண்டாலின் இரும்பு ஆலைக்கும், ஜார்கண்டில் இந்தியாவின் சிறந்த சால் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியான சரந்தாவில் சிரியா சுரங்கப்பணிகளுக்கும், புனேவில் லவாசா திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கினார். பிரதமர் அலுவலகத்தின் நெருக்குதல்களிலிருந்து ஜெய்ராம் ரமேஷ் தப்பிக்க இயலவில்லை என்கின்றனர், அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்த ஊடகவியலாளர்கள். ""கெடுவாய்ப்பாக, பொருளாதார வளர்ச்சியானது சுதந்திர உணர்வு மற்றும் பரந்த மனப்பான்மையுடன் தொடர்புபடுத்தி புரிந்து கொள்ளப்படுகிறது. மாறாக, புதிய வடிவத்திலான சமூகப் (டார்வினிசம்) பரிணாமவாதம் என்பதாகவே நான் இதை கண்டறிகிறேன். இது உண்மையில் சமூகப் பின்னடைவே'' என்கிறார் ஜெய்ராம்.

டெல்லியிலுள்ள கொள்கை ஆராய்ச்சிக்கான நடுவத்தைச் சேர்ந்த நவ்ரோஸ் துபாஷ், "ஏழை மக்களின் கோரிக்கைகளை விழுங்கிவிட்டுத்தான் வளர்ச்சியின் கதையாடல் கட்டமைக்கப் படுகிறது என்பதை இந்திய மேட்டுக்குடியினர் உணர வேண்டிய தருணமிது. கால ஓட்டத்தில் மூல வளங்களை அழித்துவிட்டு வளர்ச்சி நடைபெற முடியாது'' என்கிறார் சர்வதேச நிதியத்தின் முன்னாள் பொருளாதார வல்லுநரும் மன்மோகன்சிங்கின் ஆலோசகருமான ரகுராம் ராஜன் என்பவர் ""திருட்டுத் தனத்தின் மூலம் உருவாக்கப்படும் வளம்'' என தேசிய மூலவளங்களைச் சுரண்டுபவர்களைச் சுட்டிக்காட்டி, "இது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி' என்று குறிப்பிடுகிறார். எரிசக்தி துறையின் முன்னாள் செயலாளர் வாசுதேவன், "நேரிய சாத்தியக்கூறுகளுடனான வளர்ச்சியே மொத்த உள்நாட்டு உற்பத்தியாக இருக்க முடியும். மாறாக, சதவிகிதக் கணக்கில் வளர்ச்சியை நாம் வேண்டிக் கொண்டிருக்க முடியாது. இவை உண்மையாகவே நம் முன்னேற்றத்திற்கு வழிகோலுமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். உலக வங்கியின் அசைவுகளுக்குச் செயலாற்றிவரும் மன்மோகன்சிங் மற்றும் மாண்டேக் சிங் அலுவாலியா என்ற இருவரின் பிரச்சனையாக இது இருக்கிறது. அவர்கள் மக்கள் சார்ந்து நேரடியாக இயங்கிய அனுபவம் இல்லாதவர்களாதலால், பிரச்சனைகளின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாதவர்களாகவே இருக்கிறார்கள்'' என சாடுகிறார்.

ஜார்க்கண்டில் ஜாரியா நிலக்கரி வயல்களினால் 5 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். எஞ்சி வாழும் மக்களிடம் நுரையீரல் மற்றும் தோல்நோய்கள் குடும்ப உறவுகளைப் போல தொற்றிக் கொண்டுள்ளன. கரிய நிலக்கரித்துகள்கள் இப்பகுதியின் மக்கள் உறங்கும் இரவில் ஒரு படுக்கைத் துணிபோல படிந்து விடுகின்றன. மத்தியப்பிரதேசத்தின் சிங்ரவுலியில் இந்தியாவின் மிக அதிகளவு மின் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் அனில் அம்பானி, ஆதித்ய பிர்லா, எஸ்ஸார் ஹிண்டால்கோ, டைனிக் பாஸ்கர் குழுமம் மற்றும் என்டிபிசி நிறுவனங்களின் ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பல் 5 அடி உயரத்திற்கு நிலத்தில் படிந் துள்ளது. இப்பகுதியில் குழந்தைகள் ஊனத்துடனும், மனவளர்ச்சி குன்றியும் பிறக்கின்றன. உலகில் மனிதவள மேம்பாடு கீழ்நிலையிலிருக்கும் இடங்களில் சிங்ரவுலியும் ஒன்று என மதிப்பிடப்பட்டுள்ளது. வளர்ச்சி, வேலைவாய்ப்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு  உற்பத்தித் திறன் மற்றும் ஆற்றலுக்கும் மின் தேவைக்கும் இடையிலான பற்றாக்குறையை ஈடுசெய்தல் ஆகியவற்றிற்கு இத்திட்டங்கள் பெரிதும் உதவுகின்றன என "வளர்ச்சி ஆர்வலர்கள்' கதைக்கின்றனர்.

ஆனால், தேசியப் பாரம்பரியங்களான ஆறுகள், காடுகள், கடல்கள், காற்று, விளைநிலங்கள் மற்றும் கனிமங்கள் சுரண்டப்படுவதில் முறையற்ற விகிதாச்சாரம் பேணப்படுவதையும், சுற்றுச்சூழல் மற்றும் பருவ காலமாற்ற சமனிலை சீர்குலைவதையும், சாமானிய மக்களின் உடல்நலனுக்கு நேரும் பேராபத்துகளையும் இத்திட்டங்களின் நிறுவனங்கள் பொருட்படுத்த மறுக்கின்றன என்பதை வளர்ச்சிக்காக தவமிருக்கும் ஆர்வலர்கள் ஒருபோதும் கணக்கில் கொள்வதில்லை. "கோல் இந்தியா' (இணிச்டூ ஐணஞீடிச்) எனும் நிறுவனத்தின் தேவைக்கென வளைக்கப்பட்டிருக்கும் வனநிலங்களில் 25 சதவிகிதம் மட்டுமே, அதன் பயன்பாட்டில் இருக்கிறது. எஞ்சிய வனப்பகுதி பொதுத்துறை நிறுவனமான "கோல் இந்தியா'வின் பெயரில் குத்தகைக்கு பெறப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு தாரைவார்க்கப்படுகிறது. சட்டத்திற்கு புறம்பான வழியில் அரசாங்கத்தின் விதிகள் மீறப்பட்டு, ஒரு பொதுத்துறை நிறுவனமே இடைத்தரகு வேலையில் ஈடுபடுத்தப்படுகிறது.

"1991 இல் முதல் தலைமுறை பொருளாதார சீர்திருத்தமாக, மன்மோகன்சிங் வர்த்தகத்திலிருந்து அரசாங்கத்தை வெளியேற்றினார். இன்று நாமோ, அரசாங்கத்தின் பிடியிலிருந்து வர்த்தகத்தை விடுவிக்க வேண்டிய அவசியத்திலிருக்கிறோம்'' என்று கொள்கை விளக்கம் கூறும் ஜெய்ராம் ரமேஷ், தான் பதவியேற்றதிலிருந்து 20 மாதங்களுக்குள் தன் அமைச்சகப் பரிசீலனைக்கு வந்த 764 திட்டங்களில், 538 திட்டங்களுக்கு நிபந்தனையின்றி ஒப்புதல் வழங்கியுள்ளார். சில, திட்ட மறுமதிப்பீட்டிற்கு அனுப்பப்பட்டன. ஆறுதிட்டங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டன. இது எவ்வளவு தூரம் இயற்கைச் சீரழிவு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு வழி கோலும் என்பது ஜெய்ராம் ரமேஷ் அறியாத ஒன்றல்ல. ஆனாலும், அவரே விரும்புகிறபடி 9 சதவிகிதத்திற்கும் 7 சதவிகிதத்திற்கும் இடையிலான வளர்ச்சிக்கான தேர்வும் அல்ல இது என்பதை அவர் குற்ற உணர்வுடன் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மூத்த வங்கியாளரும், "பசுமைப் பொருளாதார முன்முயற்சி' எனும் அய்க்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்ட சிறப்பு ஆலோசகருமான பவன் சுக்தேவ், ""இந்தியாவில் 50 கோடி மக்கள் விவசாயம் சார்ந்தும் நீராதாரங்கள் மற்றும்வனங்கள் சார்ந்துமே வாழ்கின்றனர். இம்மரபார்ந்த இயற்கையே 90 விழுக்காடு வருமானத்தை அவர்களுக்குத் தந்து கொண்டிருக்கின்றது. இவர்களை நிலங்களிலிருந்து வெளியேற்றிவிட்டு, தொழிற் மண்டலங்களைத் தொடங்குபவர்கள், வெளியேற்றப்படும் இம்மக்களுக்கு எப்படி அவர்களுக்கான வேலையையும் வருமானத்தையும் வழங்க முடியும்? முழுமையான தொழிற்மயமாக்கலே இந்தியாவின் வறுமைக்கான ஒரே தீர்வு என அவர்கள் நினைக்கின்றனர். வாழ்வாதாரங்களையும் தற்சார்பு பொருளாதாரத்தையும் இழக்கும் 50 கோடி மக்களுக்கான மாற்று வேலைத் திட்டங்கள் என்ன? அடித்தள தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியினர் ஆகிய இயற்கையோடு இயைந்திருக்கும் மக்களின் குரல் பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டதன் மூலமாகவே, மதிப்பிடவியலாத அளவில் கடந்த காலங்களில் இயற்கை சுரண்டப்பட்டு வருகிறது'' என ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் கொள்ள வேண்டிய குற்றஉணர்வுக்கான சாமானிய மக்களின் நியாயங்களை எடுத்துரைக்கிறார்.

"பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் போதெல்லாம் உருவாக்கப்பட்ட பணியிடங்கள் எவ்வளவு? இத்தகைய திட்டங்கள் இத்தனை விரைவாக செயல்படுத்தப்பட வேண்டிய அவசியமென்ன? சில பெரிய திட்டங்கள் தாமதப்படுத்தப்படுகிறதெனில் மக்கள் அதன்பொருட்டு மிகுந்த தொந்திரவுக்குள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிகிறீர்களா? அரசியல்சட்ட விதிகள் அவ்விடங்களிலெல்லாம் செயலிழந்து போய்விடுவதேன்? வளர்ச்சியின் ஆதரவாளர்கள் அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கிறார்கள். திட்டங்கள் தாமதப்படும் போதெல்லாம் பெருமுதலாளிய நிறுவனங்களின் தலைவர்களும் அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்யும் ஊடகங்களும்தான் கோபம் கொள்கின்றனர். இந்திய அதிகார வர்க்கமும் திட்டக்குழுவும் பிரச்சனைகளின் அடிப்படைகளைக் கண்டு கொள்வதில்லை'' எனக் கடுமை காட்டுகிறார் பொருளாதார நிபுணர் நிதின் தேசாய்.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சுப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான "புதிய' பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கும் ஜெய்ராம் ரமேஷ், தன்சகாக்களான கபில்சிபல் மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோருடன் ' Economic Times Now'  என்ற தொலைக்காட்சி சேனல் கடந்த 2011 டிசம்பரில் நடத்திய பெருமுதலாளிகளுடனான சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டார். "ரிலையன்ஸ்' முகேஷ் அம்பானி, பாரதி மிட்டல், ராகுல் பஜாஜ் போன்ற பெரு முதலாளிகள் பங்கேற்ற இந்நிகழ்வில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் தனது துறையின் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டும் போது, "தம்மைப் போன்றவர்கள் கோடிக்கணக்கான நடுத்தர மற்றும் ஏழை இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதால், கவனமாகச் செயல்படவேண்டிய நெருக்கடிகளில் சிக்கிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்'' என மன்றாடிக் கொண்டிருந்தார்.

tree_620-jpg

பெருந்தொழில் நிறுவனங்களுக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் போதோ, சாமானிய மக்களை குடிபெயர்க்கும் போதோ அவ்வாழ்விட மக்களின் "கருத்துக்கேட்பு' நிகழ்வுகளில் அரசுப் பிரதிநிதிகள் அம்மக்களின் ஒப்புதலைப் பணியவைத்தே, பலவந்தமாகப் பெற்று வருகின்றனர். பெரும்பான்மை மக்களின் குரல் நசுக்கப்படுவதும் பெருமுதலாளிகள் சிலரின் விருப்பங்கள் சட்டவிரோதமாகப் பரிந்துரைக்கப்படுவதும்தான், இந்தியா எனும் "சனநாயக' நாட்டின் குடியாட்சி முறைமையாக வழக்கில் இருக்கிறது. விளைநிலம் பலவந்தமாகப் பிடுங்கப்பட்டோ அல்லது விவசாயம் பொய்த்து வாழ்வு நிர்க்கதியாக்கப்பட்டோ தற்கொலை செய்து கொள்ளும் ஒவ்வொரு விவசாயி மற்றும் பாரம்பரிய வாழ்விடத்திலிருந்து வெளியேற மறுப்பதால் கொல்லப்படும் ஒவ்வொரு பழங்குடி மனிதரின் மரணத்திலிருந்தும் விடுவித்துக் கொள்ள இயலாத வகையில் தொடர்புடையவர்களாக நாம் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உணர வேண்டும்.

தெருவில் அல்லது குளியலறையில் தண்ணீருக்காக குழாய்களைத் திறக்கும் ஒவ்வொரு பொழுதும், விளக்கு அல்லது மின் விசிறிக்காக நாம் பொத்தானைத் தொடும் ஒவ்வொரு கணமும், தேவைக்கு அதிகமாக குளிர்சாதனப் பெட்டகங்களை ஓடவிட்டு நம்மைக் குளிரூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நேரமும், தேவையற்ற சூழலுக்கெல்லாம் வாகனங்களை ஓட்டிப் பழக்கி நாம் விரயம் செய்து கொண்டிருக்கும் பெட்ரோல் அல்லது டீசல் எண்ணெய்களின் ஒவ்வொரு துளி சொட்டின் போதும் வனங்களின் பச்சை இலைகளின் மீது யாரோவொரு மனிதனின் குருதி பீறிட்டுத் தெறிக்கிறது என்பதையும், அப்பசுமையைப் பாதுகாக்கும் ஓயாத சண்டைகளின் ஊடே துப்பாக்கியின் ரவைகள் ஈரமரங்களில் துளைத்து நிற்கின்றன என்பதையும் நாம் உணர்வது எப்போது?

"ஷெல் இந்தியா' நிறுவனத்தின் தலைவர் விக்ரம் சிங் மேத்தா தரும் ஒரு புள்ளிவிவரத்தின்படி, "ஒரு லிட்டர் டீசல் உற்பத்தி செய்ய 9200 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது'' எனில், சுற்றுச்சூழலுக்கான போராட்டங்களோடு நமக்கு எவ்விதத் தொடர்புமில்லை என்று நாம் வாளாவிருக்க முடியுமா? மிகுதியாகப் பெய்யும் காலங்களில் தேக்கிவைக்கப்படாமல் வீணாய் கடலைச் சேரும் மழை நீர் ஆதாரம் ஒருபுறம் எனில், முறையான வடிகால் அமைப்புகளுடன் நீர்பிடிப்புப் பகுதிகளாகப் பேணப்பட வேண்டிய ஆற்றுப்படுகைகள், ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, வியாபார முதலீட்டுக்கான கட்டாந்தரை மனைகளாக – வணிக வளாகங்களாக – தொழிற் பூங்காக்களாக உருமாற்றப்படும் அவலம் மறுபுறம். ஒரு குவளைக் குடிநீருக்காக மைல்கணக்கில் ஒவ்வொரு நாளும் கால்கடுக்க நடந்து அலையும் இந்தியாவின் பல்வேறு கிராமப்புற ஏழைப் பெண்களை நாம் நினைத்துப் பார்க்கிறோமா? இந்திய வாழ்நிலையும் பணப்புழக்கமும் தவிர்க்கவியலாத வகையில் நீர்வளத்துடன் ஒப்பீடு செய்யப்படுமெனில், ஓரிடத்தில் "தண்ணீராய்' விரயம் செய்யப்படுகிறது – பிறிதோரிடத்தில் ஒரு சொட்டுக்காய் அல்லல்படுகிறது.

இத்தகைய பாரதூரமான வர்க்கப் பாகுபாடு மற்றும் சமூக சமனின்மையே வனங்களிலும், மலைகளிலும், வயல்வெளிகளிலும் பச்சைக் குருதி வழியும் போராட்டங்களாக முன்நகர்ந்து வருகின்றன. "அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நடுவம்' என்ற அமைப்பின் இயக்குநரான சுனிதா நாராயணன், ""இத்தகைய போராட்டங்களை "ஏழைகளின் சுற்றுச்சூழலியம்' என்று வர்ணித்தோ, கருத்தியல் ஒப்பனைகளால் பூசி மெழுகியோ மதிப்பிட்டுவிட முடியாது. அவர்கள் வாழ்வதற்கான தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள்'' என்கிறார். வாழ்வதற்குப் போராட வேண்டிய நெருக்கடியை உணர்ந்திருக்கும் எவரும் இதைப் புரிந்து கொள்ள முடியும். மாறாக, போராட்டத்தின் திசைவழி அகிம்சையா, ஆபத்து மிகுந்ததா என்பதை அளவிடும் நெருக்கடி அவரவர் சமூக இருப்பும் வர்க்க நலனும் சார்ந்தது. ஆனால், நெருக்கடியில் உழலும் மக்களுக்குத் தேவையானது கருத்தியல் விமர்சனங்கள் அல்ல, போராட்டக் கோட்பாடே என்பதை நகர்ப்புற "மேன்'மக்களும் படித்த "மேன்'மக்களும் உணர முடியுமா என்ன? 

– அடுத்த இதழில்

Pin It